வெள்ளையரிடமிருந்து விடுதலையாகி 71 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் நம் நாட்டுக் கொள்ளையர்களிட மிருந்து விடுதலை பெற முடியவில்லை. வெள்ளையர்கள் கட்டிய கட்டடங்களைப் போல் உறுதியான கட்டடங்கள் கட்ட முடியவில்லை.

பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிற அரசு இன்னும் நமக்கு அமையவில்லை. ஒரு மாணவன் மேல் படிப்புக்குப் படிக்க பல விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து தேர்வு எழுதி தகுதி பெறவேண்டும் என்பது தெரிந்ததே.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களின் தேர்வுக்கு இந்த உடை, இந்த பேனா, இந்த மிதியடி, இந்த கூந்தல் பின்னல், இந்த நகைகள், இந்த பொட்டு கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்தியவர்கள்.

படிக்காதவர்கள், பொறுக்கிகள், திருடர்கள், குற்றவாளிகள், கொள்ளையர்கள் போன்ற பல மக்கள் விரோதிகளைத் தேர்தல் ஆணையம் தகுதி பார்க்காமல் தேர்வு செய்கின்றது. உயர் பதவிகளை அடைய ஒருவர் பல தேர்வுகளையும் சோதனை களையும் செயல்படுத்தி தேர்வாகி பதவிக்கு வருகின்றனர்.

அண்மையில் தமிழகத்தில் நடந்த அனைத்துக் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் தேர்தல் மிக மிகக் கேவலமாக தமிழக அரசால் நடத்தப்பட்டது. கூட்டுறவு சங்கங்களில் போட்டி போட்டுக்கொண்டு குறுக்கு வழியில் தலைவர் பதவிக்கு ஏன் வருகின்றனர் என்றால், கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிடைக்கும் அனைத்து மானியங்களைச் சுரண்டவும்  எந்தக் குற்றம், கொள்ளை நடந்தாலும் வேறு ஒருவர் மீது சுலபமாக பழி சுமத்தவும் முடியும்; கூட்டுக் கொள்ளையும் செய்யலாம் என்ற எண்ணத்தில் போட்டி போடுகின்றனர்.

இன்றைய அரசு ஊழியர்கள், நல்லவர்கள் கையூட்டு வாங்காதவர்கள், ஊதியத்திற்கு மட்டும் உழைப்பவர்கள் என்றால் பத்து விழுக்காடு கூட இருக்கமாட்டார்கள். ஒருவன் தகுதியானவன் என்று வாக்கு இயந்திரம் கூறக் கூடாது. வாக்குச்சீட்டு கூற வேண்டும். கணினி வாக்கு முறையில் ஓட்டு போட்ட பின்பு பல மாற்றங்களைச் செயல்படுத்த மென்பொருள் முறையில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினால் ஒட்டுமொத்த மாக தேர்வு முறையே மாறிவிடும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

மின்னணு வாக்கு முறையை எதிர்க்காத அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழலுக்கு உடைந்தையான கட்சிகளே. மற்றும் நம்மை ஆட்சி செய்ய தகுதியிழந்த கட்சிகளே ஆகும்.

Pin It