நமக்கென்று ஒரு தனி இயக்கத்தை நம் தோழர் களில் முன்னோடிகளாக இருந்தவர்களை வைத்து, 8.8.1976இல் தொடங்கினோம். சீர்காழியில்தான், தோழர் மா. முத்துச்சாமி இல்லத்தில், என்னை விட மூத்தவர்களும், இளையவர்களும் இருந்து, ஒருநாள் முழுவதும் கலந்து பேசி நம் இயக்கத்தை உருவாக் கினோம். 8.8.2016இல், 40ஆம் ஆண்டை நம் இயக் கம் நிறைவு செய்யும்.

1.            பெரியார் இயக்கம் ஓர் அரசியல் இயக்கம் என்பதை அன்றே நாம் உறுதியுடன் புரிந்திருந்தோம்.

2.            பெரியார் விரும்பிய சுயமரியாதை - சமதர்ம அரசை நிறுவுவதே நம் இறுதி இலக்கு என்பதையும் நாம் உறுதி செய்தோம்.

3.            இடைக்காலமாக - உடனடி வேலைத் திட்டமாக இன்றைய அரசமைப்புச் சட்டத்திலுள்ள வகுப்பு வாரி உரிமையையாவது வென்றெடுப்போம் என முடிவெடுத்து, அதற்கான இணக்கமான திட்டங் களை வகுத்து, 1978 முதல் 2015 வரையில், 37 ஆண்டுக்காலம் அதிலேயே பெரிதும் தோய்ந்து விட்டோம்.

அந்த ஒரு வேலைத் திட்டத்தைப் பற்றிய ஒரு தெளிவை நாம் பெற்றோம்; தமிழக மக்களுக்கு எடுத் துச் சொன்னோம். வடஇந்திய மக்களுக்கு எடுத்துச் சொன்னோம்.

இதில் நாம் மலைக்கத்தக்க அளவு சாதனை களைக் குவித்தோம் என்பது மாபெரும் உண்மை.

அப்படி என்னதான் சாதித்தோம்?

1.            இந்திய அரசமைப்பின்படி, இந்தியா முழுவதிலு முள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு மய்ய அரசு வேலையிலும், கல்வியிலும் இடஒதுக்கீடு ஏன் தரப்படவில்லை என, இந்தியக் குடிஅரசுத் தலைவரிடம் 8.5.1978இல் முதன்முதலாகக் கோரிக்கை வைத்தோம்.

2.            இந்தியா ஒரே நாடு என்று இருக்கிறது. தென் னிந்தியாவில், மாநில அரசுகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு இருக்கிற இடஒதுக்கீடு, வடஇந்தியாவில் மாநில அரசுகளில் ஏன் தரப்படவில்லை என்பதை பீகாரில் தோழர் ராம் அவதேஷ் சிங்குடன் இணைந்து, பீகார் அரசிடம் கேட்டோம். அதற்காக பீகார் முழுவதும் 17-9-1978 முதல் 17-10-1978 முடிய தொடர்ந்து பரப்புரை செய்தோம்; 19-10-1978 முதல் 31-10-1978 வரை பீகார் தலை நகரான பாட்னாவில் “சிறை நிரப்பும் போராட் டம்” நடத்தினோம்; 10,000 பேர் சிறைப்பட்டனர்.

அந்தப் பெரிய உழைப்பு மூலம், உடனடியாக, இரண்டு வெற்றிகளைக் குவித்தோம்.

முதலாவது வெற்றியாக பீகார் மாநில அரசு 10.11.1978இல் பீகார் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து ஆணை வெளி யிட்டது. அதைத்தொடர்ந்து எல்லா வடஇந்திய மாநி லங்களும் முதன்முதலாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளித்தன.

இரண்டாவது வெற்றியாக, இந்திய அரசு, 1.1.1979 இல் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவை அமைத்தது.

மூன்றாவதாக, தமிழ்நாட்டில் நாம் குவித்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது.

தந்தை பெரியார் 1971இல், பிற்படுத்தப்பட்டோ ருக்கு இருந்த 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை 33 விழுக்காடாக உயர்த்தித்தர, அன்றைய தி.மு.க. அரசிடம் கோரினார்.

அதற்கென தி.மு.க. அரசு சட்டநாதன் குழுவை அமைத்தது. அக்குழுவின் பரிந்துரையை ஆய்வு செய்து, தி.மு.க. அரசு 31 விழுக்காடு ஒதுக்கீட்டைப் பிற்படுத்தப் பட்டோருக்கு 1972இல் வழங்கியது.

இதற்கிடையே, 1977இல் அமைந்த அ.தி.மு.க. அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து, “ரூ.9000 ஆண்டு வருமானம் பெறுகிற பிற்படுத்தப்பட்டோரின் பிள்ளைகள் இடஒதுக் கீட்டை அனுபவிக்க முடியாது” என அநியாயமான ஓர் ஆணையைப் பிறப்பித்தது.

தமிழகத்திலுள்ள தி.க., தி.மு.க., காங்கிரசு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகளும் மற்றவர்களும் அ.தி.மு.க. அரசின் ஆணையை இரத்துச் செய்யக் கோரிப் பெரிய அளவில் போராடினர்.

ஆனால், நாம் என்ன செய்தோம்?

நாம் இரண்டு கோரிக்கைகளை அ.தி.மு.க. அரசிடம் முன்வைத்தோம்.

1.            பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் வசதி யுள்ள சாதியினர்களில் பலர், கல்வி அறிவே பெற்றிருக்கவில்லை. அவர்களில் முதல் தடவை யாகக் கல்வி பெற்றவர்கள் வேலைக்குப் போக வோ, மேல் படிப்புக்குப் போகவோ தடை போடு வது அநியாயம். எனவே அநியாயமான அரசு ஆணையை இரத்து செய்க என்று கோரினோம்.

2.            தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு அரசுக் கணக்குப்படி, பிற்படுத்தப்பட்டோர் 67 விழுக்காடு உள்ளனர். அவர்களுக்குத் தரப்படும் 31 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 60 விழுக்காடாக உயர்த்தி ஆணை யிடுங்கள் எனக் கோரினோம்.

நாம், அ.தி.மு.க. முதலமைச்சரிடம் 19.8.1979இல் இக்கோரிக்கைகளை முன்வைத்தோம். அன்றே அவர் எதிராகப் பேசினார். அவருக்குப் புரிய வைத்திட 3 மாதம் முயன்றோம்; வெற்றி பெற்றோம். தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடாக இருந்த இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தி, 24.12.1979 இல் அ.தி.மு.க. அரசு ஆணையிட்டது.

இந்தியா முழுவதிலும், தமிழகத்தில் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் 50 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றிட, நாம் மட்டுமே காரணம் ஆவோம்.

மய்ய அரசில், 27 விழுக்காடு இடஒதுக்கீடு தர வேண்டும் என்கிற மண்டல் குழு பரிந்துரையை, காங்கிரசு அரசின் உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங், 1982 ஏப்பிரலில் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். இதற்கும் நாமே காரணம்.

1982 முதல் 1989 வரை ஆட்சி செய்த இந்திரா காந்தியோ, இராஜீவ் காந்தியோ அந்தப் பரிந்துரையை அமல்படுத்தவில்லை.

நானும், ராம் அவதேஷ் சிங்கும் இந்திராவிடமும், இராஜீவிடமும் இதுபற்றிக் கோரிக்கையை வைத்தோம்.

1961இல் பிரதமர் நேரு அவர்கள் புறக்கணித்தது போலவே, அவருடைய மகளும் புறக்கணித்தார்; பெயரனும் புறக்கணித்தார்.

இடையில், நம் ஒடுக்கப்பட்டோர் பேரவைத் தலைவர் ராம் அவதேஷ் சிங் 1986 முதல் 1992 வரை தில்லி மாநிலங்கள் அவையில் உறுப்பினராக இருந்தார். அவரும் நானும் இராஜீவ் காந்தியிடம் 1987 இல் அளித்த கோரிக்கை விண்ணப்பத்தின் பேரில், ஒருநாள் இரவு 12 மணி வரை மக்கள் அவையில் மண்டல் பரிந்துரை பற்றி விவாதம் மட்டுமே இராஜிவ் காந்தி நடத்தினார்; நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

1990இல் பிரதமராக வந்த வி.பி. சிங் காலத்தில் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் நாள்தோறும் ராம் அவதேஷ் சிங் மண்டல் பரிந்துரை பற்றி வினாத் தொடுத்தார்.

அப்போது நடந்த நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அன்றையக் குடி அரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், மண்டல் பரிந்துரை அமலாக்கம் பற்றி எதுவுமே குறிப் பிடாததால், குடிஅரசுத் தலைவர் தொடர்ந்து உரையாற்ற முடியாதபடித் தடுத்து நிறுத்திவிட் டார், ராம் அவதேஷ் சிங். அவருடைய கோரிக் கையை உன்னிப்பாகக் கவனித்த ஒரே காரணத் தால்தான், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக் காடு இடஒதுக்கீடு தர வேண்டியதன் முதன்மை யை பிரதமர் வி.பி. சிங் புரிந்துகொண்டார். அத்துடன் அவர் காலத்தில் துணைப் பிரதமராக இருந்த தேவி லால் என்கிற ஜாட் வகுப்புத் தலை வரின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய நெருக் கடியும்-வி.பி. சிங், இதுபற்றி உடனே முடிவெடுக் கக் காரணமாக அமைந்தது.

6.8.1990 அன்று, பிற்படுத்தப்பட்டோருக்கு மய்ய அரசு வேலையிலும் பொதுத்துறை வேலை யிலும் மட்டும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வி.பி. சிங் அளித்தார். கல்வியில் இடஒதுக்கீடு அளிக்க வில்லை.

இந்திய அரசு வரலாற்றில், 1961 மே மாதத் தில், இந்திய அரசு அமைச்சரவையைக் கூட்டி, “காகா கலேல்கர் பரிந்துரைப்படி பிற்படுத்தப் பட்டோருக்கு இந்திய அரசு மய்ய அரசு வேலை யில் இடஒதுக்கீடு தரமுடியாது என்று முடியு செய்தும்; 1961 ஆகத்தில், “மாநில அரசுகளும் பிற்படுத்தப்பட்டோருக்கு”, சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தரக்கூடாது என்று மாநில முதல்வர் களுக்கு மடல்கள் எழுதியும் பண்டித நேரு செய்த துரோகம்” தோற்கடிக்கப்பட்ட நாள் தான், 6.8.1990.

இந்த மாபெரும் சாதனைக்குக் கால்கோளிட்ட தும், இதைச் சாதித்ததும் மா.பெ.பொ.கட்சியும், நம் ஒடுக்கப்பட்டோர் பேரவையுமே.

இதுவே உண்மை வரலாறு.

நமக்கு, இவை மட்டுமே போதுமா?

போதாது! போதாது! போதாது!

இவ்வளவு சாதனைகளுக்கும் தொடர்ந்து பங்களிப் புச் செய்த நம் செயல் மறவர்களான முன்னோடிகளில் 35 பேர்களுக்கு மேற்பட்டோர் மறைந்துவிட்டனர்.

இந்நிலையில், நம் அடுத்தகட்ட முழுவீச்சுப் பணி கள் நம் இயக்கத்தையும், நம் “சிந்தனையாளன்” இதழையும் உயிரை விட்டேனும் வலிமைப்படுத் துவது முதன்மையாகும்.

நம் சாதனைகளில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது எல்லாம் இடஒதுக்கீடு பற்றியவையே.

இவற்றைப் பற்றித் தமிழக மக்களிடம் சொல்ல நாம் தவறிவிட்டோம் என்கிற குற்ற உணர்வு நம் தோழர் ஒவ்வொருவருக்கும் வந்தாக வேண்டும். இது மட்டுமா?

இந்தியாவில் ஒரு மாநில அரசாக மட்டுமே இருக்கிற தமிழ்நாடு-ஓர் அடிமைகள் நாடு என்பதை நாம் தமிழ்ப் பெருமக்களுக்கும்-குறிப்பாக இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் உணர்த்தித் தீரவேண்டும்.

இந்திய அரசுக்கு அடிமையாக இருப்பதை நம் மக்களுக்கு உணர்த்தாமல், தமிழ்நாட்டுத் தமிழர்களை அடிமைகளாக வைத்திருக்கிற இந்திய அரசு - தமிழீழத் தமிழரின் விடுதலைக்கு இதுகாறும் உதவ வில்லை என்பதுடன், இனியும் உதவாது என்பதை நம் இளைஞர்களுக்கு நாம் புரிய வைக்க வேண்டும்.

“ஈழ விடுதலை” என்பதை விதந்து பேசுவதை மட்டும் செய்கிற தமிழ்நாட்டுத் தலைவர்களும், தேசிய இன விடுதலையில் நாட்டம் உள்ளோரும், தமிழக மக்கள் இந்திய அரசுக்குப் பச்சை அடிமைகளாக இருக்கிற போது, நம் சொல்லுக்கு ஆதிக்கவாத இந்திய அரசு எப்போதும் இணங்காது - செவி சாய்க்காது என்பதை உணர வேண்டும்; இதை எல்லோரும் உணரச் செய்வோம்.

இந்திய வல்லரசை எதிர்க்கிற தமிழர்கள் - தமிழ் நாட்டிலிருக்கிற தமிழ் மக்கள் ஏழு கோடிப் பேர் எனக் கொண்டாலும், இந்திய அரசுக்கு எதிராகப் போர் தொடுத்து, இவர்களில் ஒரு கோடிப் பேருக்கு மேல் சாகத் துணிய வேண்டுமே! இந்திய அரசுப் படை யினரால் நசுக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவது என்றால், அது சாவுதானே! சாவை முத்தங்கொடுப்பது தானே! ஆனால், தமிழர் - மறத் தமிழர் - மண் ணெண்ணெயை ஊற்றித் தீவைத்துக் கொண்டு சாகிற மறவர்களை அல்லவா நாம் உருவாக்கியிருக்கிறோம்! இது முறையா? இது சரியா? என, ஏன் தமிழர் தலைவர்கள் சிந்திக்கக் கூடாது?

தமிழருக்கு இன்று உயிரான உரிமை, தமிழ் நாட்டில் கல்வியில் பாலர் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரையில் தமிழ் வழியிலேயே கல்வி தரப் பட வேண்டும் என்பதே. இதற்கு இந்திய அரசு தடையாக இல்லை.

இந்த அடிமைத் தமிழ்நாட்டில் இதைச் சாதித்திட, சில நூறு பேர் துமுக்கிக்கு இரையானால், வெற்றி பெற்றுவிடுவோமே!

அதைவிடுத்து நாள் கணக்கில் விளக்க உரைகள் ஆற்றுவதும், நூற்றுக்கணக்கில் மாநாடுகள் நடத்துவ தும் மட்டுமா தமிழைப் பயிற்று மொழியாக்கும்? ஆக்காது.

நாம்-மா.பெ.பொ.க. தோழர்கள் தமிழ்நாட் டில் இந்த ஒற்றைக் கோரிக்கையை உடனே தூக்கிப் பிடிப்போம்!

இக்கோரிக்கைக்கு வலிமை சேர்த்திட, நம் ஒரே ஊடகமான “சிந்தனையாளன்” மாத இதழை - 4,000 படிகளிலிருந்து, 40,000 படிகளாக உயர்த்திட ஒரு நூறு நாள்கள், 2016 சூன் - சூலை - ஆகத்து வரை, உரிய பணிகளை மேற்கொள்வோம்.

தமிழகத்தைச் சுற்றிச் சுற்றி வருவோம்! எல்லா மாவட்டங்களிலும் “சிந்தனையாளன்” - ஆண்டுக் கட்டண உறுப்பினர்கள், பத்தாண்டுக் கட்டண உறுப் பினர்கள், வாழ்நாள் புரவலர்கள் என, 40,000 தமிழ்ப் பெருமக்களிடம் அணுகிப் பணம் திரட்டுவோம்.

நம் இதழ், 40,000 படிகள் தமிழ்ப் பெருமக்களி டம் பரவினால், 400 ஊர்களில் கட்சிக் கிளைகள் தோன்றிவிட்டது என்று பொருள்!

நம் இறுதி இலக்கு 40,000 படிகள்! நம் உடனடிச் சாதனையாக 20,000 படிகள்!

நம்மை நாம் ஆய்வு செய்வோம்!

நம்மை நாம் வளர்த்தெடுப்போம்!

- வே.ஆனைமுத்து

Pin It