பார்ப்பான் வட இந்தியாவில் அரசனாக வந்தது கி.மு.187இல். அவன் புஷ்யமித்ரசுங்கன். அவன் அசோகனின் கொள்ளுப் பேரனான பிருகத்ரத னுக்குத் தன் அழகான மகளைக் கூட்டிக் கொடுத் தான்; அதன்வழி அவ்வரசனின் நம்பிக்கைக்கு ஆளானான். பட்டப்பகலில் படை அணி நடந்த போது, வாளை எடுத்து பிருகத்ரதனின் தலையை வெட்டி வீழ்த்தினான். தன்னையே அரசனாக அறிவித்துக் கொண்டான்.

அவன் அரியணை ஏறியவுடன் பீகார் முழுவதிலுமிருந்த புத்தபிக்குகளின் தலைகளை வெட்டிவரச் சொன்னான். புத்தத்தை நிலைகுலையச் செய்தான். அன்று வரையில் செவிவழியாகப் பேசப்பட்ட இராமாயணக் கதையைத் தொகுத்தான்; வேதத்தையும் ஸ்மிருதியையும் தொகுக்கச் செய்தான். சுங்கர்கள் ஆட்சி 110 ஆண்டுகள் நடைபெற்றது.

இன்று இந்தியாவிலுள்ள படித்தவர் -படிக்காதவர் எல்லோருக்கும் இராமாய ணக் கதை தெரியும். படித்தவர்களில் கூடப் பலருக்கும் தெரியாத வேதங்களும், ஸ்மிருதிகளும் 2014இலும் இந்திய ஆட்சியின் கொள்கைகளாக -குறிக்கோ ளாக இருந்திட அவனே வழிகண்டவன்.

பிறவி நால்வருணத்தையும், வேள்வியையும் எதிர்த்த முதலாவது மனிதர் புத்தரே.

தமிழ்நாட்டிலும் மராட்டியத்திலும் அவற்றை எதிர்த்தவர்கள் திருவள்ளுவர், சித்தர்கள், மகாத்மா புலே, சாகு சத்திரபதி, வள்ளலார், அயோத்திதாசர், டாக்டர் நாயர், பி. தியாகராயர், பெரியார் ஈ.வெ.ரா., டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், பாரதி தாசன் ஆகியோர் ஆவர். புத்தர் கொள்கைகளை வென்றெடுப்பதற்கு இவர்கள் நேற்று வரை பெரிய பங்களிப்பைச் செய்தார்கள்; குறிக்கோளில் உறுதியாக நின்றார்கள்.

இவர்களை விடவும் உறுதியாக நின்றவர்கள் பார்ப்பனர்கள்.

வடக்கே குப்தர் காலந்தொட்டு வெள்ளையர் காலம் வரையில், பார்ப்பனர் களே அரசர்களுக்கு மதகுருமார்களாகவும், படைத்தலைவர்களாகவும் இருந் தார்கள்.

தமிழ்நாட்டில் கி.பி.840-க்குப் பிறகு, சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்கர் ஆட்சிக்காலம் வரையில், அரசர்களுக்கு மதகுருமார்களாகவும், புராணப்படி புரோகிதம் செய்பவர்களாகவும், வேதபாடசாலைகளில் வேதங்களைக் கற்றுத் தருகிறவர்களாகவும், இராமாயணம், பாரதம் கதைகளைப் பரப்புகிறவர்களா கவும் பார்ப்பனர்கள் செல்வாக்குப் பெற்றார்கள்.

1916இல் தென்னாட்டில் தொடங்கப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் கட்சி, சட்டமன்றப் பதவிகள், அரசாங்கப் பதவிகள் இவற்றைக் கைப்பற்றுவது, சூத்திரருக்கும் ஆதிசூத்திரருக்கும் கல்வி தருவது இவற்றைத் திறம் படச் செய்து வருணத்தைக் கொள்கை அளவில் எதிர்த்தது.

அந்தக் கட்சியின்பால் பற்றுக்கொண்ட ஈ.வெ.ரா., அவர்களை வைத்தே, 26-12-1926-இல் “பார்ப்பனர் அல்லாதார் சுயமரியாதை இயக்கம்” என்பதை நிறுவி னார்; 1929இல் தெளிவான வேலைத் திட்டங்களை உருவாக்கினார். அதற்கு முன்னர், 1928-இல் நீதிக் கட்சியின் பெருந்தலைவர்களால் நடத்தப்பட்ட “தென் னிந்திய சமூகச் சீர்திருத்த மாநாட்டில்” முதன்முதலாக, “நாம் அனைத்திந்திய இயக்கமாக உருவாக வேண்டு ம். பிராமண மத நூல்களையெல்லாம் சட்டம் மூலம் தடைசெய்ய வேண்டும்; சமதர்மச் சமுதாயத்தை அமைக்க வேண்டும்; பழையனவற்றை அடியோடு புரட்டிப் போட வேண்டும்” என, அடித்துச் சொன்னார்.

அதன்பின்னர், 1937-இல் நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சி அடியோடு தோற்றது. “அற்றகுளத்து அறுநீர்ப் பறவைகளைப் போல”, நீதிக்கட்சியின் தலைவர்கள் பலரும் திசை தவறிப் போனார்கள்.

தோற்றுப்போன நீதிக்கட்சியின் தலைவராக இருந்த ஈ.வெ.ரா., 11-9-1938-இல் “தமிழ்நாடு தமிழருக்கே!” என முழங்கினார். மற்ற திராவிட மொழித் தலைவர்கள் கேள்வி கேட்ட பின்னர், “திராவிட நாடு திராவிடருக்கே!” எனக் குரல் கொடுத்தார். இவை தெளிவாக வரையறுக்கப்படாதவை.

இது, “வெள்ளையர் உள்ளிட்ட அந்நியர் ஆட்சி ஒழிந்த தனிச் சுதந்தர நாடுதான்” எனத் துல்லியமாக அவர் அறிவித்தது, திருச்சியில், 1945 செப்டம்பர் 30 அன்று தான்.

01-11-1956-இல், நான்கு திராவிட மொழி மாநிலங் களும் பிரிக்கப்பட்டன. அன்றுமுதல், “இனி திராவிட நாடு என்பது கிடைத்தாலும் வேண்டாம். தனிச் சுதந் தரத் தமிழ்நாடு வேண்டும்” என்று உறுதிபடக் கூறி னார். இதில், 19-12-1973 வரையில், அவருக்குத் தடு மாற்றமே இல்லை.

இடையில், 1937-இல் சென்னை மாகாணப் பிரதமராக (Premier) வந்த சி.இராசகோபாலாச்சாரியார், 1939இல் பதவியை விட்டு விலகினார்.

பின்னர் 1952-இல் இரண்டாவது தடவையாகப் பிரதமராக வந்த அவர், 1954 மார்ச்சில் பதவியை விட்டு விலகினார்.

பதவியை விட்டு விலகிய பிறகு, இரண்டு தடவை களிலும் ஆச்சாரியார், தன் குறிக்கோளைப் பரப்புவதில் குறிதவறாமல் இருந்தார்.

அவரே 1955-இல் பின்வருமாறு எழுதினார் :

“நான் இரண்டாவது உலகப் போர் காரணமாக, 1939இல் பதவியிலிருந்து விலகினேன். உடனே என் ஆத்ம திருப்திக்காக, எல்லாரும் படிக்கத்தக்க வகையில் “சக்கரவர்த்தித் திருமகன்” என்ற தலைப்பில், இராமா யணம் பற்றி எழுதினேன்.

1954-இல் விரும்பத்தகாத சூழலில் பதவியிலிருந்து விலகினேன். அப்போது “வியாசர் விருந்து” என்ற தலைப் பில் மகாபாரதம் பற்றிக் கதையாக எழுதினேன்”

என்பதே ஆச்சாரியார் எழுதியவை. பார்ப்பன ஆச் சாரியார், பவன் பல்கலைக்கழகத்தில் பம்பாயில், 1955-க்குப் பிறகு ஒரு சொற் பொழிவு ஆற்றினார். அதில், “சாதியைக் காப்பாற்ற வேண்டும். தன்தன் சாதி முன்னேற அவரவரும் உழைப்பதே, இந்தியப் பண்பாடு முதன்மை” என்றே பேசினார்.

ஆச்சாரியாரை 1910 முதல் அறிந்தவர் ஈ.வெ.ரா. ஈ.வெ.ரா.வை காங்கிரசில் சேரச் செய்தவர்கள் ஆச்சாரி யாரும், டாக்டர் பி. வரதராசலு நாயுடு அவர்களுமே.

ஈ.வெ.ரா. காங்கிரசிலிருந்த போது, 1922 திசம்பரில், திருப்பூரில் நடந்த மாநாட்டில், “தீண்டாமையை ஒழிக்க காங்கிரசு திட்டமிட வேண்டும்” என்று ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆச்சாரியார் உட்பட எல்லாப் பார்ப்பனரும் அதை எதிர்த்தனர். அன்று இரவு அங்கே நடந்த பொதுக்கூட்டத்தில்தான், முதன்முதலாக, “வருணாசிரமத்தையும், தீண்டாமையையும் காப்பாற்று கிற இராமாயணத்தையும், மனுநீதியையும் எரிக்க வேண்டும்” என்று ஓங்கி உரைத்தார்.

ஆச்சாரியார் இவற்றைக் காப்பாற்றுவதில் உறுதி யாக இருந்தார். அவரைப் போலவே எல்லாப் பார்ப்ப னரும் அன்றும் இன்றும் இதில் குறிதவறாமல் இருக் கிறார்கள்.

ஆனால், பெரியார் எடுத்த சரியான அந்த நிலைப் பாட்டை-எல்லாச் சூத்திரரும், ஆதிசூத்திரரும் குறிக்கோ ளாகக் கொள்ளவில்லை.

இதே குறிக்கோளை 1936-இல் முன்வைத்தார், மேதை டாக்டர் அம்பேத்கர்.

அவர் இந்திய அரசு அமைச்சராக இருந்தபோதே, சென்னையில், “பகவத்கீதை ஒரு பைத்தியக்காரனின் உளறல்” என ஓங்கி உரைத்தார். அவரை, அதற்காகத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் கடுமையாகக் கண்டித் தார்கள்; பெரியார் முழு மூச்சுடன் ஆதரித்தார்.

இராமாயணம், பாரதம், கீதை, தீபாவளிப் பண்டிகை எல்லாவற்றையும் பெரியார் கண்டனம் செய்தார்.

இதற்கு நேர் எதிராக -காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி, “பண்டிகைகளில் உயர்ந்தது தீபாவளி; தத்துவ சாஸ்திரங்களில் உயர்ந்தது கீதை; கீதை, தீபாவளி இரண்டையும் கிருஷ்ணரேதான் கொடுத்திருக்கிறார்” என்பதாக உரைத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த இந்தியாவையும், இந்து மதத் தையும் அப்படியே காப்பாற்றிட வழிகோலியவை இவைதான். ஒட்டுமொத்த இந்தியாவிலும் இவை ஒழிக்கப்பட வேண்டும்-தமிழகத்தில் மட்டும் இன்றோ, நாளையோ இவற்றை ஒழிக்க முடியாது. ஏன்?

இன்றைய அரசமைப்புச் சட்டமும், இன்றைய இந்திய அரசும், இன்றைய உச்சநீதிமன்றமும், இந்திய அரசுப் படைகளும், முதலாளித்துவமும், 140 ஆண்டுகளுக்கு மேலாக வெளியிடப்படுகிற இந்தி, ஆங்கில, தமிழ், வங்காள, மலையாள மொழி நாளேடுகளும் -வெகு மக்களாக உள்ள சூத்திரர், ஆதிசூத்திரர், சிறுபான்மை மதத்தினருக்கு எதிரானவை. இவை உண்மையில் மிகப் பெரிய வலிமை பெற்றவை.

இந்நிலையில் ஒரே வரியில், ஒவ்வொரு கட்சியின் ஒவ்வோர் அமைப்பின் குறிக்கோளையும் கருதிப் பாருங்கள்!

காங்கிரசு : இந்தியர்களுக்காக - இந்தியாவுக்கு வந்த சுதந்தரத்தைக் கட்டிக்காப்பது.

பொதுவுடைமைக் கட்சி : இந்தியாவில் சுரண்டல் அற்ற சமதர்ம அரசை அமைப்பது.

அம்பேத்கர் குடிஅரசுக் கட்சி : சூத்திரருள் பிற்படுத்தப் பட்டோரும் (47ரூ), ஆதிசூத்திரரும் (18ரூ), மதச்சிறுபான் மையினரும் (20ரூ) ஆகிய 85ரூ பேராக உள்ள உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து, உண்மையான அதிகாரம் தேங்கிக் கிடக்கிற இந்திய அரசைக் கைப் பற்றுவது.

பாரதிய சனதாக் கட்சி : அகண்ட பாரதம் அமைத்து, அதில் இராமராஜ்ய அரசை நிறுவுவது.

இவை நான்கும் அனைத்திந்தியக் கட்சிகள்.

இந்நான்கு கட்சிகளுள் காங்கிரசும், பாரதி சனதாவும் மட்டுமே முறையே 51 ஆண்டுகளும், 6 ஆண்டு களும் இந்தியாவை ஆண்டன.

நேற்று ஆண்ட காங்கிரசு 51 ஆண்டுகளிலும், மறை முகமாக இராமராஜ்யத்தையும், நேரிடையாக முதலாளித் துவத்தையும் காப்பாற்றிட, எந்த நடுக்கமும் இல்லாமல் செயல்பட்டது.

ஏற்கெனவே 6 ஆண்டுகள் ஆண்ட பாரதிய சனதாக் கட்சி இந்துத்துவத்தைக் கல்வியிலும் ஊடகங்களிலும் புகுத்த அப்போதே எல்லாம் செய்தது.

இங்குள்ள திராவிடக் கட்சிகளும், முற்போக்கு அமைப்பு களும் கண்டனக் கூக்குரல்களை எழுப்புவதோடு நிறுத்திக் கொண்டன. இது கையாலாகாதவன் ஒப்பாரி வைத்து அழுவதற்கே ஒப்பானது. ஏன்?

தந்தை பெரியார் அவர்கள் எந்தப் பதவியையும் ஏற்கவில்லை. என்றாலும், “ஆட்சியைப் பிடிப்பவர்கள், நாளைக்குச் செய்யலாம் -மறுநாள் செய்யலாம் என்று நினைக்காமல் மடமடவென்று, உடனே இன்றியமை யாத திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் ­ஏனென்றால் அரசப் பதவி -ஆட்சிப் பதவி நிலைக் காதது” என்பதை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சொன்னார்.

1917-இல், இரஷ்யாவில் ஆட்சியைப் பிடித்த புரட்சி யாளர் வி.இ. லெனின், சரியாகவே, சர்வாதிகார முறை யில் -கல்வியை மதம் அற்றதாக ஆக்குவது -மதநிறு வனங்களைக் கலைப்பது, அவற்றின் சொத்துக்களைக் கைப்பற்றுவது -சோவியத்துகளை அமைப்பது என, உடனடியாக, எல்லாம் செய்தார். எதிர்ப்புரட்சியாளர் களின் செல்வாக்கை ஒழித்தார்.

இங்கே நேரு, இந்திரா, இராஜீவ், நரசிம்மராவ், சோனியா-மன்மோகன் சிங் காங்கிரசு ஆட்சிகள் இந்து மத ஆதிக்கத்தையும், முதலாளித்துவத்தையும் காப்பாற்றி யதுடன்-கல்வியைத் தன் ஆதிக்கத்தில் கொண்டு சேர்த்தது.

‘இந்தி’ ஆட்சிமொழி என்பதைச் சந்தடி செய்யாமல் நிறைவேற்றியது.

பாரதிய சனதாவின் வாஜ்பேயி ஆட்சி-சிறுபான்மை மதத்தினரைக் கொன்று குவித்தது. இஸ்லாமியரும், கிறித்துவரும், நடுங்கும்படிச் செய்தது.

பல்கலைக்கழகக் கல்வியில் சோதிடம், கலியாணம், -கருமாதிப் புரோகிதம் இவற்றைப் பாடங்களாக வைத் தது. தமிழகத்தில் அவை இன்று கற்பிக்கப்படுகின்றன.

2014இல் இந்தியப் பிரதமராக வந்துள்ள நரேந்திர மோடி, நல்ல இராஷ்டிரிய சுயம் சேவக் தொண்டர்; அதன் காப்பாளர். இதை நானும், கவிஞர் காவிரி நாட னும் 2012 ஏப்பிரல் 27, 28, 29 மூன்று நாள்களிலும் குசராத்தில், அகமதாபாத்தில், அன்றைய முதலமைச் சரான மோடியின் அலுவலகத்தில் நேரில் பார்த்தோம்.

இன்றைய பாரதிய சனதாக் கட்சி போதிய ­சொந்த வலிமையுடன் இந்திய ஆட்சியைப் பிடித் துள்ளது. மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்புச் சூத்திர இந்துதான்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க., பஜ்ரங் தள், விசுவஇந்து பரிஷத், அகில இந்திய வித்யார்த்தி பாரிஷத் எல்லாமே பார்ப்பன ஆதிக்க அமைப்புகள்.

தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. பெரிய கட்சிக ளாக உள்ளன.

தி.மு.க.வுக்கு என, அவர்கள் கொண்ட குறிக்கோள் : “மாநிலத்தில் சுயஆட்சி! மத்தியில் கூட்டாட்சி!” என்பது மட்டுமே.

1957 முதல் 2014 வரை, நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற இவர்கள் :

1. மாநிலத்தின் முழு அதிகாரத்துக்குட்பட்டிருந்த “கல்வி”த் துறை, 1976 இறுதியில், பொது அதிகாரப் பட்டிய லுக்கு மாற்றப்பட்டதை, மீட்டெடுக்க எதுவும் செய்ய வில்லை;

2. “இந்திதான்          இந்தியாவின் ஆட்சிமொழி; இடைக் காலமாக ஆங்கிலம் இணை ஆட்சி மொழி என்கிற இரண்டு கேடுகளையும் நீக்கிட எதுவும் செய்ய வில்லை. எல்லா -22 இந்திய மொழிகளையும் இந்திய ஆட்சி மொழிகளாக ஆக்கிட உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. அப்புறம் ஏது இவர்களுக்கு வக்கு?”

3. தமிழ்நாட்டில்       பாலர் வகுப்பு முதல் பல்கலைப் படிப்பு வரையில், தமிழ் வழியில் கல்வி கற்பிக்க ஏற்ற சட்டங்களைச் செய்யவில்லை. ஆங்கிலமே இன்று கல்வி மொழி. தமிழர்க்கு இது பெருத்த அவமானம்; அவலம்; தீங்கு.

4. தலைமைச் செயலகம் முதல் சிற்றூர் அலுவலகங் கள் வரை தமிழ் ஆட்சிமொழி ஆக்கப்பட ஏதும் செய்யவில்லை.

5. குறைந்த அளவில், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை யில் பள்ளிப் படிப்பில், திருவள்ளுவர், வள்ளலார், மகாத்மா புலே, அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், டாக்டர் நாயர், பிட்டி தியாகராயர், சி. நடேசன், பனகல் அரசர், மறைமலை அடிகள், பெரியார் ஈ.வெ.ரா., டாக்டர் அம்பேத்கர், பாரதியார், பாரதிதாசன், இராசாசி, காமராசர், அண்ணாதுரை ஆகியோரின் சுருக்கமான வரலாறுகளைத் துணைப் பாட நூல்களாக வைத்துக் கற்பித்து, இளைய தலைமுறையினருக்குத் தமிழ்ப் பற்றும், திராவிட இன உணர்வும், சுயமரியாதைக் கொள்கைகளும் சென்றுசேர இவர்கள் வழிகாணவில்லை. இது அடாதது.

நம் கொள்கை எதிரியான பாரதிய சனதாவின் ஆட்சி, இப்படிப்பட்ட எல்லாவற்றையும் எடுத்த எடுப்பில் செய்யத் தொடங்கிவிட்டது. இதை நாம் நேரில் பார்க்கிறோம்.

அ.இ.அ.தி.மு.க. அரசு நாம் மேலே சொன்னவற் றைச் செய்யாது. அது, அரைவாசி ஆர்.எஸ்.எஸ். கொள்கை கொண்டது; அதை இன்னும் செயலில் காட்டி வருவது.  

பதவியை ஏற்றிராத மற்ற கட்சிகளும் அமைப்பு களும்-மதம், உள்சாதி, வெறும் மொழி, சொந்தக் கருத்து வேற்றுமை என்கிற அடிப்படைகளில் இயங்குபவை.

இவ்வளவையும் ஒவ்வொரு தமிழரும் கணக்கில் கொண்டு, நடுநிலையில் இருந்து, ஆர அமரச் சிந்தி யுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புக்குரிய மா.பெ.பொ.க. தோழர்கள், தத்தம் மாவட்டக் கிளை சார்பில், இக்கட்டுரையை 1000 படிகள் அச்சிட்டுத், தமிழ்நாடு முழுவதும் பரப்பிட வேண்டு கிறேன்.

அருள்கூர்ந்து,

1. 07-01-2015-க்குள் இந்த அறிக்கையை அச்சிட்டுப் பரப்புங்கள்.

2. 11-01-2015 சென்னை மாநாட்டுக்கு மகிழுந்திலும், சிற்றுந்திலும், பேருந்திலும் மாவட்டந்தோறும் ­குடும்பம் குடும்பமாக சென்னைக்கு வந்து குவிந் திடுங்கள்!

3. “சிந்தனையாளன் பொங்கல் மலர்-2015” வெளி யீட்டு விழாவும்; “இந்தி ஆட்சி மொழி எதிர்ப்பு (தேசிய இன உரிமை மீட்பு) எனக்கூறி மாநாடும்;

4. ‘அரசமைப்புச் சட்ட அட்டவணை 8இல் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்கு’ 12-01-2015 காலை 10 முதல் 12 மணிவரையிலும் சென்னையில் சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத் திலும் பங்கேற்க ஆயத்தமாக வாருங்கள்!

இவற்றை மாபெரும் நிகழ்ச்சிகளாக நடத்திட எல்லாத் தமிழ்ப் பெருமக்களும், எல்லா வகை உதவிகளையும் செய்யுங்கள் எனப் பணிவன்புடன் வேண்டுகிறேன்.

- வே.ஆனைமுத்து

Pin It