மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில், சென்னை, மேற்கு மாம்பலம் ஆ,சந்திரசேகர் திருமண மண்டபத்தில், 6.1.2019 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை

1997ஆம் ஆண்டு முதல் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி தமிழ்ப் பெருமக்களின் ஆதரவுடன், பல்துறை அறிஞர்களின் சீரிய கட்டுரைகளைத் தாங்கி வரும் சிந்தனையாளன் பொங்கல் மலரை வெளியிட்டு வருகிறது. அத்தன்மையில் 22ஆவது ஆண்டாக, சிந்தனையாளன் பொங்கல் மலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி, மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் 06-01-2019 ஞாயிறு அன்று முற்பகல் 10.30 மணிக்குத் தொடங்கியது. தொடக்க நிகழ்வாகக் காஞ்சிபுரம் தோழர் உலக ஒளி புரட்சிகரப் பாடல் களைப் பாடினார்.

காஞ்சி மாவட்டத் துணைச் செயலாளர் தாம்பரம் மா. சுப்பிரமணி வரவேற்புரை ஆற்றினார். மா.பெ.பொ.க. மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தி. துரை சித்தார்த்தன் தலைமை ஏற்று உரையாற்றினார். புலவர் செந்தலை ந. கவுதமன் பொங்கல் மலரை வெளியிட்டார். மலரின் முதல் படியைத் திருமண மண்டபத்தை இலவயமாக வழங்கி உதவிய இலக்கியச் செல்வர் மாம்பலம் ஆ. சந்திரசேகர் பெற்றுக் கொண்டார். மேலும் பொங்கல் மலர் படியைப் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வரகூர் மா. நாராயண சாமி, திருச்சி மாவட்டச் செயலாளர் இரா. கலியபெருமாள், நாகை மாவட்டச் செயலாளர் முத்து. அன்பழகன், சேலம் மாவட்டச் செயலாளர் செ. ஆனையப்பன், சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் பா.வை. அருண்மொழி, ஓசூர் கு. தொல்காப்பியன் ஆகியோர் பெற்றனர்.

பொங்கல் மலரின் சிறப்புகள் குறித்து புலவர் செந்தலை ந. கவுதமன் உரையாற்றினார். உருபா பத்தாயிரம் அளித்து முதல் படியைப் பெற்ற மண்டப உரிமையாளர் மாம்பலம் ஆ. சந்திரசேகர், காஞ்சி மாவட்டச் செயலாளர் சி. நடராசன், திரு வண்ணாமலை மாவட்டச் செயலாளர் பொ. சுப்பிரமணியன், வாணியம்பாடி நா. மதனகவி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இதையடுத்து மத ஆதிக்க எதிர்ப்பு மாநாடு பகல் 12 மணிக்குத் தொடங்கியது. இம்மாநாட்டிற்கு மா.பெ.பொ.க. தலைமைக்குழு உறுப்பினர் க. முகிலன் தலைமை வகித்தார். வேலூர் மாவட்டச் செயலாளர் மோ.சி. சங்கர் வரவேற்புரை யாற்றினார். மத ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டை திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்கி வைத்து எழுச்சிமிகு உரையாற்றி னார். திருச்சி மாவட்ட புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றச் செயலாளர் ந. கருணாகரன், தொழிலாளரணிச் செயலாளர் சா. குப்பன், பெரியார் ஈ.வெ.ரா. - நாகம்மை அறக்கட்டளையின் செயலாளர் துரை. கலையரசு புதுவை மாநிலச் செயலாளர் இரா. திருநாவுக்கரசு, காஞ்சி மாவட்ட புரட்சிக்கவிஞர் கலை இலக்கிய மன்றச் செயலாளர் குறள மிழ்தன், வேலூர் மாவட்ட புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றச் செயலாளர் மு. சாமிநாதன், திருக்கழுக்குன்றம் தி.ச. குணசேகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

பாவலர் வையவன் சிந்தனையாளன் இதழில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூலான ‘தமிழ்க்காடு’ நூலை வே. ஆனைமுத்து அவர்கள் அறிமுகம் செய்து வெளியிட, க. முகிலன் பெற்றுக்கொண்டார். முற்பகல் நிகழ்வின் இறுதியில் வேலூர் நகரச் செயலாளர் மீ. டில்லிபாபு நன்றி கூறினார்.

பகல் உணவுக்குப் பின் 3.00 மணிக்கு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சி. பெரியசாமி தலைமையில் தமிழ்வழிக் கல்வி மாநாடு நடைபெற்றது. வேளாண் அணிச் செயலாளர் கோ. கோதண்டராமன் வரவேற்புரை நிகழ்த்தினார். பேரா சிரியர் சோம. இராசேந்திரன் தமிழ்வழி கல்வி மாநாட்டைத் தொடக்கி வைத்து அரியதோர் உரையாற்றினார். அதன்பின் சி. பெரியசாமி தலைமை உரையாற்றினார்.

கடலூர் மாவட்டச் செயலாளர் பா. மோகன், இரா. பச்சமலை, முனைவர் சி.இரா. இளங்கோவன், வழக்குரைஞர் கீதாம்பாள், அய்தராபாத் கணித்தமிழ்ச் சங்கத்தின் மு. சிவலிங்கம், மகளிரணிச் செயலாளர் கோவி இராமலிங்கம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கலசம்-கோவிராமலிங்கம் மகன் கோ.ரா.வெற்றி ஆங்கி லத்தில் மொழிபெயர்த்த “இந்திய ஒரு தேசமா?” என்கிற பெரியாரின் சொற்பொழிவு நூலை வே.ஆனைமுத்து வெளியிட ஆனை.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

மத்தியப் பிரதேசம் முனைவர் சுனிலம், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், புதுதில்லி சமூக நல்லிணக்க ஒருங்கிணைப்பாளர் இனாமுல் அசன், தன்னாட்சித் தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆழி. செந்தில்நாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மா.பொ.பொ.க. பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து மாநாட்டு நிறைவுரை நிகழ்த்தினார். ப. வடிவேலு நன்றி நவின்றார்.

இம்மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1 :

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி, தமிழ் காப்புப் போராளி அறிஞர் கி.த. பச்சையப்பன், தமிழிலும் ஆங்கிலத்திலும் திறமை சான்ற அறிஞரான புதுவை இலெனின் தங்கப்பா, காட்டுமன்னார்கோவில் தில்லைவனம் அவர்களின் துணைவியார் தி. தில்லைநாயகி ஆகியோரின் மறைவுக்கு இம்மாநாடு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 2 :

இந்து மத ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கத் துடன் இந்தியாவை ஆளும் பாரதிய சனதாக் கட்சி அரசு, இந்த 2019ஆம் ஆண்டு தொடக்கத்தில், அயோத்தியில் இராமன் கோயிலைக் கட்ட வேண்டும் என, இராஷ்ட்ரிய சேவக் சங்கமும் (RSS), விசுவ இந்து பரிசத்தும், மற்ற சங் பரிவாங்களும், பாரதிய சனதா அமைச்சர்களும் இடைவிடாது பரப்புரை செய்வதை மத ஆதிக்க எதிர்ப்பு மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 2(அ) :

தீர்மானம் 2-இல் கண்ட, இந்து ஏகாதிபத்திய வாதிகளின் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் - தமிழகம் முழுவதிலும் உள்ள பெரியாரிய உணர்வாளர்களும், அம்பேத்கரிய உணர்வாளர் களும், பகுத்தறிவு இயக்கங்களும், தமிழ் காப்பு இயக்கங்களும் வேற்றுமை மறந்து ஒரு குடை அமைப்பின்கீழ் ஒன்றிணைந்து, மண்டல வாரியாகப் பேரணிகள், மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டங்கள் எனத் தொடர்ச்சியாக நடத்தி மத ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும் என எல்லாப் பெரியாரிய - அம்பேத்கரிய - தமிழ் அமைப்புகளையும் இம் மாநாடு வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் 3 :

“கீழ்க் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு அகில இந்திய அளவில் ஒன்றியக் குடிமைப் பணித் தேர் வாணையம் (UPSC) மூலம் தேர்வு நடத்த நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது” என்கிற செய்தி, 21-12-2018 அன்று, எல்லா ஏடுகளிலும் வெளிவந்தது. அப்படி உள்ள பதவிகள் இந்தியா முழுவதிலும் உள்ள ஏறக்குறைய 650 மாவட்ட நீதிபதிகள், மற்றும் மத்திய - மாநில அரசு வழக்குரைஞர்கள், சட்ட ஆலோசகர்கள், சட்ட வரைவாளர்கள் ஆகிய பல ஆயிரம் பதவிகளுக்குத் தேர்வு செய்வது ஆகும். அப்போது, எல்லா மதங்களையும் சார்ந்த பிற்படுத் தப்பட்டவர்கள், பட்டியல் வகுப்பினர், பழங்குடி யினர் ஆகிய 27+15+7 = 49 விழுக்காடு இடங்களுக்கு இடஒதுக்கீடு தருவது ஒழிக்கப்பட்டுவிடும். இதுவே இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு - பாரதிய சனதா அரசு எடுத்துள்ள முடிவு ஆகும். ஒடுக்கப் பட்ட வகுப்பு மக்களுக்கு எதிரான இந்த முடிவை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 4 :

தமிழ் மாநிலம் 1.11.1956-இல் தனி மாநிலமாக அமைந்தது. அன்று முதல் 5.3.1967 வரை காங்கிரசுக் கட்சி ஆண்டது. 6.3.1967 முதல் 31.12.2018 வரை - 51 ஆண்டுகளாகத் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மாறி மாறி ஆட்சி புரிந்தன.

திராவிடக் கட்சிகள் இந்த அரை நூற்றாண்டுக் கால ஆட்சியில் பள்ளிக் கல்வி முதல் உயர்நிலைப் பல்கலைப் படிப்புகள் எல்லாவற்றையும் தமிழ் வழியில் கற்பிக்க ஏற்பாடு செய்யவில்லை. ஆங்கில வழியில் கற்பிக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளையும், கல்லூரிகளையும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களையும் கைக்கூலிகளாக நிரம்பத் தொடங்க ஒப்புதல் அளித்ன. இது வருத்ததிற்குரியது.

மேலும், 1956-இல் நிறைவேற்றப்பட்டபடி - தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 5.1.2019 வரையில், தலைமைச் செயலகம் முதல் ஊராட்சி வரையில் எல்லா அரசு அலுவலகங்களிலும் அன்றாட நடவடிக்கைகளில் தமிழ் ஆட்சிமொழியாக நடவடிக்கைக்கு வரவில்லை. இது கடும் கண்டனத் துக்கு உரியதாகும் எனத் தமிழ்வழிக் கல்வி மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 5 :

1939 முதல் சென்னை மாகாணத்தில் தமிழ்நாட் டில் அரசு தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் எல்லாப் பாடங்களும் தமிழ்மொழி வழியில் கற்பிக்கப்பட்டன; ஆங்கிலம் தேர்வுக்குரிய ஒரு பாடமாக மட்டும் கற்பிக்கப் பட்டது. கல்லூரிகளில் எல்லாப் பாடங்களும் ஆங்கில வழியில் கற்பிக்கப்பட்டன.

1965-க்குப் பிறகு அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல், வேண்டுமானால், ஒரு பிரிவு (Section) ஆங்கில வழியில் கற்பிக்கப்பட்டது. 6.3.1967-இல் திமுக ஆட்சிக்கு வந்தது. திமுக ஆட்சியில் 1971 முதல் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மளமளவெனத் தொடங்கப்பட்டன; எல்லா மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டது; மற்ற எல்லாப் பாடங்களும் ஆங்கில வழியில் கற்பிக்கப்பட்டன. கல்லூரிகளிலும் அறிவியல், கணக்குப் பாடங்கள் ஆங்கில வழியில் மட்டுமே கற்பிக்கப்பட்டன. பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம் முதலான தொழில் படிப்புகள் ஆங்கில வழியிலேயே கற்பிக்கப்படுகின்றன.

எந்த மேலை நாட்டிலும் தாய்மொழியில் தவிர வேறு எந்தப் பிறமொழியிலும் எந்த வகுப்புக்கும் எந்தப் பாடமும் கற்பிக்கப்படவில்லை. அதனால் தான் மேலை நாட்டார் எல்லாத் துறைகளிலும் முன்னேறி இருக்கிறார்கள்; நாம் பல துறைகளில் பின்தங்கி மானிட வளர்ச்சி வரிசையில் 137ஆவது இடட்தில் இருக்கிறோம். இது ஈன நிலை ஆகும்.

இந்த ஈன நிலையில், 2016-17ஆம் கல்வி ஆண்டு முதல், அதிமுக அரசு தொடக்கப் பள்ளியிலேயே ஆங்கில வழிக் கல்வியைப் புகுத்திவிட்டது. மேலும், 2019-20ஆம் கல்வியாண்டில் மழலையர் 55,000 பேருக்கு ஆங்கிலவழிக் கல்வி தர முயற்சிக்கிறது. இது, கடும் கண்டனத்துக்கு உரியது. எனவே, தமிழ்வழிக் கல்வியே வேண்டும் என்போர் எல்லோரும் ஒன்று திரண்டு, தமிழக அரசின் தமிழ் அழிப்புக் கொள்கையை அடியோடு தகர்க்க முன்வரவேண்டும் என தமிழ்  இத் தமிழ்வழிக் கல்வி மாநாடு அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் 6 :

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் முழுத் தன்னாட்சி (Full Autonomy) உள்ள மாநிலம் என்ற தகுதியுடன், 1955-இல் ஜம்மு - காஷ்மீர் அரசமைப்பை இந்திய அரசு ஏற்றது. ஆனால், பிரதமர் பண்டித நேரு 1954-இல் இயற்றப்பட்ட காஷ்மீர் அரசமைப்பு விதி 35-A, இந்திய அமைப்பின் விதி 370-இல் சொல்லப்பட்ட காஷ்மீர் அரசமைப்பு 238ஆம் விதி இவற்றைத் தவிர மற்றெல்லாத் தன்னுரிமை விதிகளையும் ஜம்மு - காஷ்மீர் அரசமைப்பிலிருந்து 1962-க்குள் திருட்திவிட்டார்.

இப்போது, பாரதிய சனதா அரசின் பிரதமர் நரேந்திர மோடி, விதி 35-A, விதி 238 ஆகிய இரண்டையும் நீக்கிவிடத் திட்டமிடுகிறார். இதை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிது.

அத்துடன் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் மீது, இராணுவ ஆட்சியை ஏவுவதைக் கைவிட்டு, அம் மாநிலத்துக்கும் மற்ற மாநிலங்களுக்கும் முழுத் தன்னாட்சி உரிமையை அளிக்க முன்வர வேண்டும் என, இம்மாநாடு இந்திய அரசைக் கோருகிறது.       

Pin It