மத்திய அரசும், மாநில அரசும் மக்கள் மீது சுமத்தி வசூலிக்கும் வரிகள் பல. முக்கியமான வரிகள் (1) வருமான வரி, (2) மாநில அரசு சரக்கு மற்றும் சேவை வரி, (3) மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி, (4) கலால் வரி, (5) சுங்க வரி, (6) நகர் சுங்கவரி (Octroi, (7) சொத்துவரி, (8) தொழில் வரி, (9) தொழிலாளர் வரி, (10) தண்ணீர் மற்றும் கழிவு நீர் வரி, (11) வீட்டுவரி, (12) நிலவரி, (13) கேளிக்கை வரி (Entertainment), (14) வாகன இருக்கை வரி, (15) கல்வி வரி, (16) உயர்கல்வி வரி, (17) உற்பத்தி வரி, (18) முனைய வரி (Terminal Tax), (19) மாநகராட்சி வரி, (20) நகராட்சி வரி, (21) சாலை வரி போன்ற பல வரிகள் பொதுமக்கள் மீதும் நுகர்வோர் மீதும் சுமத்தப்படுகின்றன. ஆனால் அப்படி வசூல் செய்த வரி மக்களுக்குக்காகச் செலவிடப்படுவதில்லை.
காட்டாக சாலை வரி, இருக்கை வரி, வாகன உரிமம் கட்டணம், ஓட்டுநர் உரிமக் கட்டணம், போக்குவரத்து தொழில்வரி, தொழிலாளர் வரி, சுங்கச்சாவடி கட்டணம் போன்ற கட்டணத்தையும், வரியையும் விதித்துவிட்டு போதுமான சாலைகள் அமைக்கவில்லை, பராமரிக்கபடவும் இல்லை. பெரும் சுமையாக நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் அமைத்து கட்டணம் கோடி கோடியாக தனியார் வசூல் செய்ய ஒப்பந்தம் செய்து அரசு கொள்ளையடிக்கிறது.
இதேபோல் கல்விக்காக வசூலிக்கும் கட்டணம் வரிகளும் கட்டணங்களும் செவ்வனே பயன்படுத்திச் சமச்சீர்க் கல்வியையும் தரமான கல்வியையும் கொடுக்க மறுத்துத் தனியார் கல்விக் கூடங்களைக் கொள்ளையடிக்க அனுமதித்துவிட்டு அரசு தன் பொறுப்பைக் கைகழுவி விட்டது.
கட்டணம் என்ற பெயரில் (1) தொழிலாளர் காப்பீட்டுக் கட்டணம், (2) முத்திரைத்தாள் கட்டணம், (3) சுங்கக் சாவடிக் கட்டணம், (4) மருத்துவமனை நுழைவுக் கட்டணம், (5) விமான நடைமேடை கட்டணம், (6) ரயில் நடைமேடை கட்டணம், (7) கண்காட்சி மற்றும் பொருள்காட்சி நுழைவுக் கட்டணம், (8) பூங்கா கட்டணம், (9) சுடுகாட்டு-தகனக் கட்டணம், (10) கல்வி தேர்வுக் கட்டணம், (11) கல்விக்கூட நுழைவுத் தேர்வுக் கட்டணம், (12) வேலை வாய்ப்புத் தேர்வுக் கட்டணம், (13) பயிற்சிக் கட்டணம், (14) கழிவறைக் கட்டணம், (15) குளியலறைக் கட்டணம் போன்ற பல கட்டணங்களை வசூல் செய்கின்றது.
மக்கள் மீது சுமத்தப்படும் மறைமுக வரிகளும் கட்டணங்களும் ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே விதியாக அமைத்து வசூல் செய்யப்படுகின்றன. அதேவேளை வருமான வரி, பெரு நிறுவன வரி என வெறும் 30 விழுக்காடு மட்டுமே வசதி படைத்தோரிடமிருந்து பெறப்படுகிறது. ஆனால் மொத்த வருவாயில் மிகப்பெரும் பகுதி வளமான பிரிவினரின் நலன்களுக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. ஆனால் 80 விழுக்காடு மக்களான விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் நலன்களுக்கு குறைந்த அளவே செலவிடப்படுகிறது.