இந்தியத் தலைநகர் தில்லியில், காற்றில் மாசும் தூசும் கலந்து இருப்பதால், மக்கள் தெருவுக்கு வர முடியாமல் தவிக்கின்றனர். இது அவசர நிலைமை யைப் போல இருக்கிறது என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தைச் (Centre for Science and Environment) சேர்ந்த சந்திரபூஷண் என்பவர் 5.11.2016 அன்று கூறியிருக்கிறார். மாசும் தூசும் காற்றில் அளவுக்குமீறி இருப்பதால் மக்கள் வெளியே வரமுடியாத நிலையில், பள்ளிகளுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிப்பதாக தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் 6.11.2016 அன்று அறிவித்தார்.

காற்றில் உள்ள மாசும் தூசும் குறைய வேண்டும் என்றால் 15 ஆண்டுகளுக்கும் பழைமையான டீசல் வாகனங்கள் தடைசெய்யப்பட வேண்டும் என ஆளுநர் நஜீப் ஜங்க் (Najeeb Jung) 7.11.2016 அன்று கருத்து தெரிவித்தார்.

delhi traffic

இதைப் பற்றிய வழக்கு 8.11.2016 அன்றும் 9.11.2016 அன்றும் உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்பொழுது “காற்றில் மாசையும் தூசையும் குறைப்பதற்கான செயல் திட்டம் அரசாங்கத்திடம் உள்ளதா? அல்லது மக்களின் வாழ்வு அழிவின் விளிம்பிற்குச் செல்லும் வரை காத்திருக்கப் போகிறார்களா?” என்று தலைமை நீதிபதி கோபாவேசமாகக் கேட்டார். மேலும் 11.11.2016 அன்று இவ்வழக்கு விசாரணையின் போது தில்லியில் பட்டாசுகளைத் தடைசெய்யும் யோசனையை ஆதரிப் பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தில்லியில் மாசும் தூசும் உள்ள நிலை படுமோசம் அடைந்த நிலையில் வெளிவந்த செய்திகள் இவை. ஆனால் நிலைமை பல ஆண்டுகளாகவே மோசமாகத் தான் உள்ளது. இதைப்பற்றி ஆய்வு செய்த தொண்டு நிறுவனம் ஒன்று, காற்று மாசின் காரணமாக, தில்லி மக்களின் மருத்துவச் செலவு ஓராண்டில் ரூ.2,450 கோடி அதிகரித்து இருப்பதாக 24.1.2011 அன்றே கூறியது. அப்பொழுதே அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம் பெல்ஜியம் நாட்டில் உள்ள ஹாசெல்ட் ((Hasselt) நகரில் செயல்படுத்தப்பட்ட ஒரு திட்டத்தைச் சுட்டிக்காட்டி ஒரு யோசனையை கூறியது.

ஹாசெல்ட் நகரில் 1996இல் வாகனப் புகை காரணமாகக் காற்று மாசடைந்த போது, அந்நகரில் வாழ விரும்பாமல் மக்கள் வேறு நகரங்களுக்கு இடம் பெயரத் தொடங்கினர். இதனால் வேலை செய்வதற் குத் தேவையான எண்ணிக்கையில் மக்கள் கிடைக் காத நிலை ஏற்பட்டது. இதைப்பற்றித் தீவிரமாக யோசித்த பெல்ஜிய அரசாங்கம் ஹாசெல்ட் நகரில் பேருந்து, தொடர்வண்டி முதலிய பொது போக்குவரத்து (Public Transportation) முறையை 1997ஆம் ஆண்டு முதல் முற்றிலும் இலவசமாக்கியது. அதுமட்டும் அல்ல; பேருந்துகளில் சென்றால், செல்ல வேண்டிய இடங் களுக்கு விரைவில் செல்ல முடியும்படியாகவும், மகிழுந்து போன்ற தனியார் வாகனங்களில் பிரயாணம் செய்தால் தாமதம் நேரும் படியாகவும் போக்குவரத்து விதிகளை (Traffic Rules) வகுத்தது. அத்திட்டம் செயல்படுத்தப் பட்டது. முதல் காற்றில் மாசின் அளவு குறையத் தொடங்கி நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது.

இந்நிகழ்வை எடுத்துக்காட்டி, இதேபோல் செயல் பட்டால் காற்றில் மாசு குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பலாம் என 24.1.2011 அன்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தினர் கூறினர். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடிந்தது.

ஏன்? ஹாசெல்ட் நகரின் காற்று மாசுப் பிரச்சினை யின் விளைவுக்கும், தில்லி நகரின் காற்று மாசுப் பிரச்சினையின் விளைவுக்கும் அடிப்படையில் வேறு பாடு உள்ளது. ஹாசெல்ட் நகர மக்கள் காற்று மாசைப் (அது நிச்சயமாக தில்லியின் காற்று மாசை விட மிகக் குறைவே) பொறுத்துக் கொள்ள முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்து, வேறு நகரங்களுக்குக் குடிபெயரத் தொடங்கிவிட்டார்கள். அதனால் அந்நகரில் உள்ள தொழில் நிறுவனங்களில் வேலை செய்வதற்கு மக்கள் கிடைப்பது அருகிவிட்டது. இந்நிலையில் அத்தொழில் நிறுவன முதலாளிகள் தங்கள் முதலீட்டை வேறு இடங் களுக்கு மாற்றுவது பற்றி ஆராய்ந்தனர். ஆனால் அவ்வாறு செய்வது எளிதாக இருக்கவில்லை. நிலம் மற்றும் கட்டடங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் பெரு மளவில் இருந்தது. அதுமட்டும் அல்லாமல், முதலீட்டை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்ல முடியாத கார ணங்கள் பல இருந்தன. உடனே தீவிரமாக யோசித்த முதலாளித்துவ அறிஞர்கள் பொது போக்குவரத்து (Public Transportation System) முறையை இலவச மாக்கும் திட்டத்தையும், தனியார் வாகனங்களில் சென்றால் பிரயாண நேரம் அதிகமாகும் படியான போக்குவரத்து விதிகளையும் (Traffic Rules) உருவாக் கிக் கொடுத்தனர். அது வெற்றிகரமாகச் செயல்பட்டு, மக்கள் அந்நகரில் தொடர்ந்து வாழ ஊக்குவிக்கப்பட் டார்கள். முதலாளிகளின் முதலீடு முதலாளித்துவப் பொருளாதாரப் பாதையில் உராய்வின்றி நடைபோட முடிந்தது. இதுபோன்ற நிலைமை தில்லியில் இல்லை. தில்லிவாழ் மக்கள் தில்லியில் காற்று மாசடைந்து இருக்கிறது என்பதால், வேறு நகரங்களுக்குக் குடி பெயரப் போவது இல்லை. முதலாளிகளின் மூலதனப் பயணத்திற்கு ஒரு உராய்வும் ஏற்படப் போவதும் இல்லை. ஆகவே ஹாசெல்ட் நகரத் திட்டம் இங்கு பரிசீலனைக்கும் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

ஒருவேளை காற்றில் மாசும் தூசும் அதிகரித்து, மக்கள் வேலைக்குச் செல்ல முடியாத அளவிற்கு நோய்வாய்ப்பாட்டால், அதனால் மூலதனப் பயணத் திற்கு உராய்வு ஏற்பட்டால், அப்பொழுது இப்பிரச்சி னையைத் தீர்க்க வேண்டும் என்று அரசாங்கம் அக்கறை கொள்ளும். அந்த அளவிற்கு அழிவின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் வரையிலும் இந்நாட்டு மக்கள் பொறுமையாக இருப்பதால், முதலாளிகளின் பாடு கொண்டாட்டடமாகவே இருக்கிறது.

அப்படி அழிவின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட பின் எடுக்கப்படும் நடவடிக்கைகளினால், காற்றில் மாசும் தூசும் குறைந்துவிட்டால், உடனே உழைக்கும் மக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வார்கள்.

எப்படி என்று கேட்கிறீர்களா? பெல்ஜியம் நாட்டில் ஹாசெல்ட் நகரில் 1997ஆம் ஆண்டில் பொது போக்கு வரத்து முறையில் இலவசப் பயணமும், தனியார் வாகனப் பயணத்தினால் தாமதம் ஏற்படுத்தும் போக்கு வரத்து விதிகளும் செயல்படுத்தப்பட்டபின் சுற்றுச்சூழல் மேம்பாடு அடையத் தொடங்கியது. 16 ஆண்டுகளில் முழுவதுமாகச் சீரடைந்தது. உடனே முதலாளித்துவ அறிஞர்கள் இலவசப் பயணம் அரசாங்கத்திற்கு வீண் செலவு ஏற்படுத்துவதாகக் கூக்குரலிடத் தொடங்கி னார்கள். உழைக்கும் மக்களின் கருத்து என்றால் உதாசீனம் செய்துவிடலாம். முதலாளித்துவ அறிஞர் களின் கருத்தை ஒரு முதலாளித்துவ அரசினால் கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா? 2014ஆம் ஆண்டில் இலவசப் பயணமுறை பெருமளவில் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. இப்பொழுது 18 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே இலவசப் பயணம் பொருந் தும் என்றும், மற்றவர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்ட இலவசப் பயணம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படு வதாகவும் பெல்ஜியம் அரசு அறிவித்துவிட்டது. (கூடிய விரைவில் 18 வயது வரை உள்ளவர்களின் இலவசப் பயணமும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படலாம்).

முதலாளிகளின் மூலதனப் பயணம் உராய் வின்றித் தொடர வேண்டும் என்பதற்காக மட்டுமே செயல்படும் முதலாளித்துவ அரசுகள் இருக்கும் வரையில், வெகுமக்களை வேதனைக்கு உள்ளாக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது. உழைக்கும் மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைப்பது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், அதன் உண்மை யான காரணம் மூலதனப் பயணத்திற்கு உராய்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இருக்கும்.

தில்லியின் மாசும் தூசும் பிரச்சினையும் இப் படியே. இப்பிரச்சினை மட்டும் அல்ல, எந்தப் பிரச்சினை என்றாலும், முதலாளித்துவ அரசின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும்.

அப்படி என்றால் உழைக்கும் மக்களின் நலன் களை, மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு தீர்க்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? மக்களே சிந்தியுங்கள்!

Pin It