‘கண்டதையும் கற்றவன் பண்டிதனாவான்...’ என்பது வாசிப்பு குறித்து இதுவரை சொல்லப்பட்டதிலேயே மிகச்சிறந்த சொல். எனது வாசிப்பும் மிக இளம் வயதிலிருந்தே அப்படித் தான். இருந்தது. காமிக்ஸ், செய்தித்தாள், குடும்பக் கதைகள், வரலாற்றுப் புதினங்கள், துப்பறியும் கதைகள், மாயாஜாலப் பேய்க் கதைகள், கவிதைகள், சமய நூல்கள், பொது அறிவு - அறிவியல் புத்தகங்கள், பாலியல் கதைகள் என எனது எட்டு வயதில் தொடங்கி 16 வயது வரைக்கும் கையில் கிடைத்ததை யெல்லாம் வாசித்துக் கொண்டிருந்தேன். புரிந்தும், புரியா மலும் அறிந்தும் அறியாமலும் பல்வேறு விதமான குழப்ப மான, துண்டு துண்டான எண்ணங்கள் என்னை ஆட் கொண்டிருந்தன. யார் எதைத் திறமையாகச் சொன்னாலும் அது முழு உண்மை போன்று தோன்றும் கருத்து மயக்கம் மிகுந்திருந்த காலம் அது. அப்போதுதான் என் சிந்தனை களை ஒழுங்குபடுத்தி அவற்றிற்கு ஒரு அடித்தளத்தையும், குவி மையத்தையும் அளிக்கக்கூடிய ஒரு ஆசிரியர் வந்தார். அவர்தான் தந்தை பெரியார்.

வே.ஆனைமுத்து அவர்கள் தந்தை பெரியாரின் எழுத் தையும் பேச்சையும் பொருள்வாரியாக கால வரிசைப்படுத்தித் தொகுத்த ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ என்ற தலைப்பி லான தொகுதிகளை நான் முதன்முதலாகக் கையிலெடுத்துப் பார்த்தபோது எனக்கு வயது 17. எங்கள் ஊர் அரசுப் பொது நூலகத்தில் இருந்து நண்பர் ஒருவர் அந்தத் தொகை நூல்களில் ஒரு தொகுதியைக் கொண்டுவந்து படிக்கக் கொடுத்தார். பெரியார் என்ற பெயரை மட்டுமே கேள்விப் பட்டிருந்த நான், அந்தத் தொகுதியின் பக்கங்களைப் புரட்டத் தொடங்கிய சில மணிநேரத்தில் பெரும் பதட்டமும், குழப் பமும் என்னை ஆட்கொண்டது. பெரியார் அதுவரைக்கும் எனக்கு விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடையளித்துக் கொண்டிருந்தார். கடவுள்களைப் பற்றி, மனிதர்களைப் பற்றி, சாதி-மத அமைப்புகளைப் பற்றி, மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் சக்திகளைப் பற்றி, மூடத்தனங்களைப் பற்றி, அறிவியலைப் பற்றி, சுயமரியாதையைப் பற்றி, மரபுகளைப் பற்றி, பெண் விடுதலையைப் பற்றி, சிந்திப்பதின் பயன் பற்றி, அச்சமின்மையைப் பற்றி, எல்லாவற்றையும் பற்றி, அவர் பேசிக்கொண்டே இருந்தார். அந்தத் தொகுதி யை திரும்பத் திரும்பப் படித்தேன். அதற்குப் பிறகு அந்தத் தொகை நூல்களில் மற்ற தொகைகளையும் ஒரு ஆறு மாதக் காலத்தில் தொடர்ச்சியாக வாசித்து முடித்தேன். பெரியார் எனக்குள் ஒரு சிந்தனா முறையை உருவாக்கினார். அவர் என்னுடைய நம்பிக்கையின் வேர்களை அசைத்தார். மனிதனுக்கு நேரும் அவமானங்கள் இழிவுகள் எல்லாமே மனிதனால் உண்டாக்கப்பட்டவையே. மனிதர்கள் உரு வாக்கிய அமைப்பை மாற்றியமைப்பதன் மூலமாக மனித குலத்தை விடுதலை அடையச் செய்ய முடியும் என்றஒரு மகத்தான செய்தியை என்னுடைய இளம் வயதில் பெரியார் எனக்கு ஊட்டினார். அந்தப் பொறி பெரும் நெருப்பாக என் இளம் வயதில் பற்றி எரிந்தது.

மனிதன் என்பவன் சிந்திப்பவன் என்ற பெரி யாரின் குரல் தூங்க விடாமல் செய்தது. அந்தத் தொகுதியைத் திரும்பத் திரும்பப் படித்தேன். அதி லிருந்து குறிப்புகளை என்னுடைய நோட்டுப் புத்தகத்தில் எழுதினேன். சில சமயம் பெரியாருடன் இரகசியமாகச் சண்டை யிட்டேன். ‘நான் சொல்வ தற்காக எதையும் ஏற்றுக் கொள்ளாதே...’ என்ற பெரியாரின் குரல் தான் அப்படி சண்டையிடுவதற்கான உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னபோது எனக்குள் கடும் கோபம் ஏற்பட்டது. ஆனால் பெரியார் எதையும் போகிற போக்கில் சொல்பவர் அல்ல. அவர் எதைச் சொன்னாலும் அதற்குப் பின்னால் ஒரு தர்க்கம் இருக்கும். ‘நீ உன்னுடைய மொழியின் மூலமாகப் புராணங்களையும், பக்தியையும் வளர்த்தாயே தவிர, வேறு என்ன செய்தாய்...’ என்பதுதான் பெரியாருடைய கேள்வியின் அர்த்தம். ‘ஏன் நீ உன்னுடைய மொழியில் அறிவிய லையும் தத்துவத்தையும் வளர்க்க வில்லை?’ என்பதுதான் பெரியாருடைய கேள்வி. மொழி சார்ந்த நம்முடைய உள் ளார்ந்த விருப்புகளைத் தாண்டி பெரியாரின் கருத்தை யோசித்த போது, அவர் தமிழை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வதற்குத்தான் இந்த முரட்டுக் கேள்வியைக் கேட்டார் என்பது தெளிவாகிறது.

இயற்கை மருத்துவம், பாரம்பரியம் சார்ந்த விஷயங்களை உயர்த்திப் பிடிக்கிற ஒரு போக்குக்கு மாறாக பெரியார் ஒரு கேள்வியை ஒரு இடத்தில் எழுப்புகிறார். ‘சரி, உன்னுடைய இயற்கை உணவும், பாரம்பரிய மருத்துவமும்தான் உன்னத மானது என்றால் ஆங்கில வைத்தியமுறை வருவதற்கு முன்பு ஏன் மனிதனின் சராசரி ஆயுள் வெறும் 35 ஆக இருந்தது. ஆங்கில மருத்துவமுறை வந்த பிறகு அது எப்படி 60, 70 ஆகிறது?’ என்ற கேள்வியை எழுப்புகிறார்.

இதெல்லாம் சில உதாரணங்கள். பெரியார் ஒரு நவீன தத்துவ ஆசான். ஒரு நவீன சமூகப் புரட்சியாளர். ஒரு நவீன அரசியல்வாதி. 20ஆம் நூற்றாண்டின் அனைத்து முற்போக்குக் கோட்பாடுகளினுடைய மையப் புள்ளியாக பெரியார் இருந்தார். அவரே என் இளமைக் கால முதல் ஆசிரியராக இருந்தார் என்பதை என் வாழ்நாளெல்லாம் நன்றாக நினைப்பேன். அந்த வகையில் என்னை வார்த்த புத்தகம் பெரியார் சிந்தனைகளுடைய தொகுதிகள் எனலாம்.

பெரியார் புனிதங்கள் அனைத்தையும் உடைத்த நம் காலத்தின் மகத்தான புனிதர்.

நன்றி : ‘அந்திமழை’ சூலை 2018

Pin It