தமிழ்நாடு பிரிட்டிஷ் மன்னர் ஆளுகையில் இருக்க வேண்டும் - 30.4.1942

முற்றுரிமை பெற்ற திராவிட நாடு வேண்டும் - 29.08.1945

தந்தை பெரியார் அவர்கள் “தமிழ்நாடு தமிழ ருக்கே!” என முதன்முதல் 11.9.1938இல் குரல் எழுப்பினார். அது இந்தி கட்டாயப் பாடம் ஆக்கப்பட்ட தால் எழுந்தது.

அப்போது அவர் தமிழர், தெலுங்கர், கன்னடர், கேரளர், ஒரியர் உள்ளிட்ட “தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்” (S.I.L.F.) (அ) நீதிக்கட்சி என்ற தேர்தல் கட்சியின் தலைவராக இருந்தார்.

எனவே, உடன்காலில், சென்னை செட்டிநாடு அரண்மனையில் 15-10-1939இல் நடந்த மேற்படி நீதிக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தெலுங்கர்கள், “நீங்கள் எம்கட்சியின் தலைவர். நீங்களே தமிழ்நாடு தமிழருக்கே என்று கோரினால் - மற்ற நாங்கள் எங்கே போவது?” என்று, ஈ.வெ.ரா.விடம் கேட்டார்கள்.

உடனே, 17.12.1939இல் “திராவிட நாடு திராவிட ருக்கே!” என முழங்கினார்.

திருவாரூர் மாநாடு 24, 25.8.1940இல் நடந்தது. அதற்குமுன் “திராவிட நாட்டின் எல்லை எது?”  என்று ஈ.வெ.ராவிடம் கேட்டார்கள். அப்போதைய சென்னை மாகாணத்தின் படத்தை வரைந்து, திருவாரூர் மாநாட்டில் அதைத் திறந்து வைக்க, ஈ.வெ.ரா. ஏற்பாடு செய்தார். திருவாரூர் மாநாட்டில், ஈ.வெ.ரா. - அரை மணிநேரம் தெலுங்கிலும் உரையாற்றினார்.

இவை உறுதியானவை.

ஆனால், 30.4.1942இல் சர். ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் குழுவிடம் (Sir. Stafford Cripps Mission) என்ன கோரினர் பெரியார் குழுவினர்?

“தமிழ்பேசும் மாவட்டங்களை மட்டும் (Tamil Speaking Districts) தில்லி ஆதிக்கத்திலிருந்து தனியே பிரித்து, பிரிட்டானியச் சக்கரவர்த்தி ஆளுகையின்கீழ் இருக்கப் பரிந்துரை செய்ய வேண்டும்” என்று மட்டுமே - ஈ.வெ.ரா., என்.ஆர். சாமியப்பா, எம்.ஏ. முத்தய்ய செட்டியார், ஊ.பு. சௌந்திரபாண்டியன் குழுவினர் கேட்டனர்.

அதாவது, “பார்ப்பனர்-பனியா ஆதிக்கத்திலிருந்து தமிழ்நாட்டைப் பிரித்து, அயல்நாட்டு வெள்ளையர் ஆதிக்கத்தில் வைக்கப் பரிந்துரை செய்யுங்கள்” என்றே, கிரிப்ஸ் குழுவிடம் நால்வரும் கோரினர்.

“அது எங்கள் அதிகார வரம்பில் -  terms of reference இல்லாதது. அப்படி நாங்கள் செய்ய முடியாது” என்று, 30.4.1942லேயே நேரில் கூறிவிட்டனர், கிரிப்ஸ் குழுவினர்.

இது, “முற்றதிகாரம் பெற்ற திராவிட நாடு” ஆகாது. மாறாக, உச்சகட்டக் குழப்பமான கோரிக்கையே இது.

கிரிப்ஸ் பரிந்துரைத்த முடிவை, வெள்ளையர் அரசு, திட்டவட்டமாக 1945 சூலையில் அறிவித்தது. அப்போது தான், தனிச்சுதந்தர நாட்டு உணர்வு, உண்மையில் ஈ.வெ.ராவுக்கு உதித்தது.

அம்முடிவு, வெள்ளையரால் வெளியிடப்பட்ட போது, ஏற்கெனவே, 26, 27.8.1944 சேலம் மாநாட்டின் முடிவுப்படி, “தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் (அ) நீதிக்கட்சி” என்கிற பெயரை “திராவிடர் கழகம்” என்று மாற்றப்பட்டுவிட்டதன் நீட்சியாக, 29, 30.9.1945இல் “திராவிடர் கழக - (நீதிக்கட்சி) 17ஆவது மாகாண மாநாடு” திருச்சிராப்பள்ளி புத்தூர் மைதானத்தில் (இப்போது மாவட்டத் தலைமை மருத்துவமனை உள்ள இடம்) மாபெரும் பந்தரில் நடைபெற்றது.

அம்மாநாட்டில், ஈ.வெ.கிருஷ்ணசாமி மகள் ஈ.வெ.கி. மிராண்டா, பி.ஏ., திராவிடர் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

அம்மாநாட்டில், இரண்டு நாள்களும் நான் பிரதி நிதியாகப் பங்கேற்றேன். தந்தை பெரியார் மற்றும் ஏனைய தலைவர்கள் உரையை அங்கு கேட்டேன்.

அந்த மாநாட்டில் தான் - பிசிறு இல்லாத - ஈரட்டு இல்லாத - வழவழாத்தனம் இல்லாத - தன்மையில் “அந்நிய நாட்டு வெள்ளை ஏகாதிபத்தியமும், பார்ப்பன-பனியா சுரண்டலும் ஒழிந்த தனிச் சுதந்தர திராவிட நாடு அடைவதே, திராவிடர் கழக இலட்சியம்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பிறகு, எப்போதும் பெரியாரின் தனிநாட்டுப் பிரிவினைக் கோரிக்கையில் கொஞ்சமும் தடுமாற்றம் இல்லை.

நாட்டுப் பிரிவினை என்பது பலரைக் காவு கொடுப்பது என்பதிலும் பெரியார் தெளிவாகவே இருந்தார். 9.12.1973 கடைசி மாநாட்டிலும் அதைச் சுட்டிப் பேசினார். நிற்க.

அவருடைய வாழ்நாளில், பலரைச் சாகக் கொடுக்க ஏற்ற விடுதலைப் படையை அவர் உருவாக்கவில்லை. அவருடைய பிறங்கடைகளும், அத்தகு படை பற்றிச் சிந்திக்கவில்லை.

அதன் அடையாளமாக “தமிழ்நாடு” நீக்கப்பட்ட, இந்திய தேச வரைபடத்தை அச்சிட்டு அதை 1960இல் எரித்தார்.

ஆனால் அவர் சாகும் தறுவாயிலும், 1.11.1956இல் திடமாக அவர் அறிவித்தபடி, தம் 19.12.1973 இறுதிச் சொற்பொழிவில், “தனிச் சுதந்தரத் தமிழ்நாடு வேண்டும்” என்பதில் உறுதியாக இருந்தார்; அதனை அடையச் சூளுரைத்தார்.

இன்று தந்தை பெரியார் இல்லை.

தமிழ்நாட்டுப் பிரிவினை என்று சொன்னாலே - ஒரு கோடி தமிழர் சாக நேரிடும் என்பது முற்றுறுதி யாகும்.

அவர் விடுதலைப் படையை அமைக்க முடியாமல் போனதற்கான முதலாவது காரணம், இந்திய மக்களில் இந்துக்களில் 97 பேர் உரிமை உணர்வு அற்ற கீழ்ச் சாதிக்காரர்களாக ஆக்கப்பட்டவர்கள்.

“..... அவ்வளவு எண்ணற்ற பிரிவு. இங்கே ஒருவனுடைய கவலையை மற்றவன் எடுத்துக் கொள்வதில்லை. அப்படி எடுத்துக் கொண்டாலும் அதுவும் பார்ப்பனர்களுக்குத் தான் அனுகூலம். ஒரு பிள்ளையை அடித்தால் மற்றொரு முதலி பார்த்துக் கொண்டு சந்தோஷப்படுவது மட்டும் அல்லாமல், ‘வெள்ளாளப் பயலுக்கு நல்லா வேணும்’ என்று காலாட்டிக் கொண் டிருக்கிறான்” என, திருவாரூரில் 18.12.1939இல் தம் சொற்பொழிவில் குறிப்பிட்டுள்ளார். (“குடிஅரசு”, 31.12.1939, “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” - இயக்கங்கள் - தலைப்பு - தொகுதி 2-2, பக்கம் 759).

மேலும், “வாலிபர்களே சிந்தித்துப் பாருங்கள்!” என்ற தலைப்பில், 31.12.1939இல் “குடிஅரசு” இதழில் எழுதிய தலையங்கத்தில் பின்வருமாறு ஈ.வெ.ரா. குறிப்பிட்டுள்ளார்.

“இராணுவத்தில் இந்நாடு பயிற்சி பெறவில்லை. இந்நிலைக்கு யார் காரணம்? வீரம் நிறைந்திருந்த மக்களைத் தர்ப்பைப் புல்லைக் காட்டி, வஞ்சனை யால் மிரட்டிக் கோழைகளாக்கியது யார் என்பதை நாம் விளக்க வேண்டியதில்லையென்றே கருதுகிறோம்.

ஆகவே, இந்த நிலையில் அரசியல் நிர்வாகத்தில் படிப்படியாக அனுபவம் பெற்று சுதந்தரத்தைப் பெறுவது தான் இந்நாட்டுக்கு இருக்கு ஒரே வழி” எனவும் 31.12.1939இல் குறிப்பிட்டுள்ளார். (மேற்படி தொகுதி - பக்கம் 766).

இன்னொன்றையும் நாம் கருதவேண்டும்.

தந்தை பெரியார், பார்ப்பனருக்கு எதிராகத் தத்துவப் பரப்புரை செய்தாரே அன்றி, அவர் வாழ்நாள் வரை யில் அவர்கள் பேரில் வன்முறை யை ஒரு சமயத் திலும் ஏவிவிடவில்லை. அமைதி வழியை - அகிம்சை வழியை இறுதி வரையில் கடைபிடிப்பவராகவே அவர் வாழ்ந்தார் என்பதை நாம் அறிகிறோம்.

இந்தப் புரிதலுடன், மா.பெ.பொ.க. பின்கண்ட முடிவை மேற்கொண்டது.

மா.பெ.பொ.க. நாட்டுப் பிரிவினைக்கு அணியமாக இல்லை. எனவே மக்கள் நாயக முறையில், தன்னு ரிமை (அ) தன்னாட்சி (Autonomy) பெற்ற மொழிவாரி மாநிலங்கள் ஒன்றிணைந்த - மதச்சார்பற்ற, சமதர்ம கூட்டாட்சியாக இந்தியாவை மாற்றியமைப்பதை அரசியல் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, மார்க்சியம் - பெரியாரியம் - அம்பேத்கரியம் - இணைக் கப்படாத எந்த வேலைத் திட்டமும் - ஒருசேர சமூக - அரசியல் - பொருளாதார - பண்பாட்டு விடுதலையை ஒருபோதும் தமிழர்க்குக் கொணர மாட்டா எனத் திடமாக நம்புகிறது.

Pin It