தந்தை பெரியாருக்கு ஒரு தத்துவம் இருந்தது; ஒரு இலட்சியம் இருந்தது; ஒரு சித்தாந்தத் தேடல் இருந்தது. பெரியாரின் சுயமரியாதை என்னும் தன்னுணர்வு, விடுதலை இயக்கங்களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கிறது. இதையே மற்றொரு கோணத்தில் சொல்ல வேண்டுமானால், மார்க்சியத் தத்துவம் அதைத் தான் சொல்கிறது.

‘இந்து’ என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். கொடுத்த விளக்கம், பெரியார் கூறியதுபோல், “பிராமணியம்” என்பதுதான். எனவே இந்துத்துவா என்பது - வர்ணாசிரம தர்மத்தைக் கட்டிக் காப்பாற்றுகிற ஒரு கோட்பாடாகும்.

இன்றைக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது இந்துத்துவா கொள்கைதான்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக் களுக்கும் இடையே நாம் எதிர்பார்க்கிற - ஒற்றுமை ஏன் இன்னும் உருவாக்க முடியவில்லை?

இந்த இரண்டு மக்களையும் சரியாக வழி நடத்தும் தலைவர்கள் இல்லை என்பதே உண்மை.

கடவுள் மறுப்பு ஒப்புக்கொள்ள வேண்டிய கொள்கை தான். மதமறுப்பு ஒப்புக்கொள்ள வேண்டிய கொள்கை தான்.

ஆனால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க என்ன வழி, மார்க்சு, பெரியார், அம்பேத்கர் இயக்கச் சிந்தனை களை மக்களிடையே கொண்டுசெல்ல இந்த மூன்று இயக்கங்களில் உள்ளவர்களும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். அத்தகைய வரலாற்றுத் தேவை இன்று உருவாகியுள்ளது.

பெரியார் இயக்கத்துக்கும், பொதுவுடைமை இயக் கத்துக்கும் உள்ள ஒற்றுமை - ஒன்றுபட்ட போராட்டம். இவற்றை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இதை இந்திய அளவில் விரிவாக்கிப் பார்க்கும் போது, மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் என்ற இந்த மூன்று சிந்தனையாளர்கள் இந்தியாவுக்கு மாபெரும் வழிகாட்டிகள். இவர்களைப் பின்பற்றுவோரிடையே ஒரு ஒற்றுமையை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு ஒரு புகழ்மிக்க நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. இந்தப் புகழ்மிக்க பாரம்பரியத்தை அடுத் தக்கட்டத்துக்கு நாம் எப்படி எடுத்துச்செல்லப் போகிறோம்? இதற்கு விடை தேட வேண்டுமானால், மார்க்சு, பெரியார், அம்பேத்கர் இம்மூவருக்கு இடையேயான தத்துவத்தை - அரசியல் உறவுகள் பற்றிய கருத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இவர்களைப் பின்பற்றுகிறவர்கள்யாராக இருந்தாலும், ஒன்றுபட்ட இயக்கமாகக் செயல்பட வேண்டும்.

அந்த ஒற்றுமை-அந்த ஒன்றுபட்ட இயக்கம் தான் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக் கும் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான ஆதாரமாக அமையப் போகிறது.

இந்த மூன்று இயக்கங்களைக் கொண்ட தோழர் கள் மனம்விட்டுத் தங்கள் கருத்துகளைப் பற்றிப் பேசி, அன்றாட அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கமாகச் செயல்பட முன்வர வேண்டும்.

இவர்கள் சிதறுண்டு கிடப்பதால்-மற்றவர்கள்  மக்களை எளிதாகக் கையாள்கிறார்கள். இந்தியத் துணைக்கண்டத்தின் விடுதலைப் போராட்டத்தின் போது, நாட்டு விடுதலைக்கு முன்னுரிமை கொடுக்காமல், தலித் மக்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத் தார், அண்ணல் அம்பேத்கர்.

அதுபோலவே, தந்தை பெரியார் அவர்கள் காங்கிர சிலிருந்து விலகி, சுயமரியாதை இயக்கம் கண்டார். ஏன்? நாட்டுக்கு விடுதலை கூடாது என்பதல்ல, அது. வருணா சிரம வாதிகளுக்கான விடுதலையாக இருக்கக் கூடாது என்பதற் காகவேயாகும்.

பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொது வுடைமை என்பது சமபங்கு என்பதாகும்; பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்பதாகும். பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை, மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டேயிருக்கும் என்பது பொதுவுடைமைத் தத்து வத்திற்குப் பாலபாடம் என்றார், பெரியார்.

கடந்த காலத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி யைச் சேர்ந்த தா. பாண்டியன், ஒரு கட்டுரையில் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

“இந்தியாவில் உழைக்கும் பகுதியினர்தாம் - உற்பத்தியாளர்கள், தாழ்த்தப்பட்டோராய்ச் சாதிகளின் கீழ்நிலையோர மாய் தள்ளிவைக்கப்பட்டுள்ளனர். வர்க்கப் போராட்டம் விரிவான சமுதாயப் பிரச்சனைக்கும் தீர்வு காணத்தக்க பரிமாணத்தை இங்கு எடுத்தாக வேண்டும்!”

இந்தியாவின் சாதி மத சாபத்தீட்டைப் போக்க, ஆழமாகச் சிந்தித்து, புரட்சிகர இயக்கங்கள் வழிகாட்ட வேண்டும். நாம் அதிலிருந்து விடுபட்டிருக்கிறோம் என்ற மன நிறைவில் திருப்தி கொள்ளாமல், நம்மைச் சுற்றியுள்ள பகுதியை மண்டிக் கவிழ்ந்திருக்கும் முட்செடிகளை அகற்ற வழிகண்டு தீர்மா னமாகப் போராட வேண்டும். இதற்காகச் சிந்தியுங்கள்; விடுதலையை நோக்கி முன்னேறலாம். (“சனசக்தி சுதந்தர தினமலர்”, 1980 - பக்கம் 12).

தமிழகத்தைப் பொறுத்தவரையில், தி.க.; தி.வி.க. மா.பெ.பொ.க.; த.பெ.தி.க. ஆகிய பெரியார் இயக்கங்கள் பொது உரிமை பரப்பும் பெரியாரின்-படைகளாகச் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் ஒன்றுபட்டுப் போராட வழிகாணு வோம்! ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களை உயர்த்துவோம்! இன இழிவைத் துடைத்தெறிவோம்! பொதுவுடைமை சமுதாயம் அமைப்போம்!

Pin It