“தொலைதூர ஆட்டம் - அமெரிக்க ஆதிக்கத்தை அகற்றுவதற்கு சீனாவின் மாபெரும் தொலைநோக்கு உத்தி”, ரஷ் தோஷி

கடந்த ஓர் ஆண்டாக அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய இராணுவக் கூட்டமைப்பும் பொருளாதாரக் கட்டமைப்பும் கடுமையான குழப்பங்களை எதிர்கொண்டு வருகின்றன. அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தைத் தகர்க்கும் விதத்திலான நிகழ்வுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரங்கேறி வருகிறார்.

Rush Doshi bookஅமெரிக்காவின் வீழ்ச்சிக்கு எது காரணம்? முன்போல பிற நாடுகள் மீது சுமையை ஏற்றி, உள்நாட்டுப் பொருளாதார, அரசியல் முரண்பாடுகளை, அமெரிக்கா தீர்த்துக் கொள்ள முடியாமல் போவது ஏன்?

இதற்கு விடை, சீனாவின் எழுச்சி என்பதாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1989 தொடங்கி அமெரிக்காவின் மேலாதிக்கத்தை வீழ்த்துவதற்கான செயலுத்திகளைப் பின்பற்றி வருகிறது என்று வாதிடுகிறார், ரஷ் தோஷி என்ற ஆய்வாளர். அமெரிக்கப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அவர் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் பார்வையில் இருந்து, சீனா அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கை மாற்ற முயல்கிறது என்று எழுதுகிறார்.

சீனாவின் எழுச்சியைத் தொடர்ந்து அமெரிக்க அரசு வட்டாரங்களில் சீனாவைப் பற்றி எதிரும் புதிருமான நிலைப்பாடுகள் நிலவின. ஒன்று, சீனா காலப் போக்கில் படிப்படியாக முதலாளித்துவ தாராளவாத சனநாயக நாடாக மாறிவிடும், அதை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்பது. இன்னொன்று, சீனாவில் இருப்பது கம்யூனிஸ்ட் அரசு, அது அமெரிக்க மேலாதிக்கத்துக்கு சவாலாக உள்ளது என்பது. இரண்டு தரப்புகளுமே போதுமான தரவுகள் இல்லாமல் வாதிடுவதாக உணர்ந்தார், ரஷ் தோஷி.

சீனா அமெரிக்க மேலாதிக்கத்தை அகற்றுவதற்கான நீண்ட கால திட்டத்தைப் பின்பற்றுகிறது என்பதற்கான ஆதாரங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டார், ரஷ் தோஷி. அதற்காக, சீன மொழியைக் கற்றுக் கொண்டார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட கட்டுரைகள், நூல்கள், சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாத ஹாங்காங், தைவான் போன்ற இடங்களில் கிடைக்கும் தகவல்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் உரைகள் முதலிய ஆதாரங்களைத் திரட்டி ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். இது அவரது முனைவர் பட்ட ஆய்வேடாக அமைந்தது. அந்த ஆய்வேடு, 2018 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. அதனை மேலும் திருத்தி ஒரு புத்தகமாக 2021 இல் வெளியிட்டார், ரஷ் தோஷி.

ரஷ் தோஷி தனது புத்தகத்தில், அமெரிக்க மேலாதிக்கத்தை அகற்றுவதற்கு சீனா ஒரு 'மாபெரும் தொலைநோக்கு உத்தியைப்' பின்பற்றுவதாக வாதிடுகிறார். 1989 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், சீனா முதலில் அமெரிக்காவின் மேலாதிக்க நிறுவனங்களை மழுங்கடித்து (Blunt), பின்னர் தனது சொந்த செல்வாக்கைக் கட்டியெழுப்பி (Build), இறுதியில் உலகளவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை அகற்ற (Displace) முயல்கிறது என இந்தப் புத்தகம் வாதிடுகிறது.

இந்நூலின் கடைசி இயலில், வளர்ந்து வரும் சீனாவை அமெரிக்கா எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும். அதன் செல்வாக்கை எவ்வாறு மழுங்கடிக்க வேண்டும் என்று பரிந்துரைகளை வழங்குகிறார், ரஷ் தோஷி. சீனா பின்பற்றிய அதே போன்ற செயலுத்திகளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச்செயல் என்ற முறையில் இல்லாமல் சீனாவின் அரசியல் பொருளாதார விரிவாக்கத்துக்கு முட்டுக்கட்டை போடும் உத்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று முன்மொழிகிறார்.

இந்த நூல் வழங்கும் ஆதாரங்களை மார்க்சியப் பார்வையில் இருந்து அணுகிப் பார்க்கலாம்.

அமெரிக்க மேலாதிக்கம் என்பது ஏகாதிபத்திய மேலாதிக்கமாகும். நவீன உலகம், சுரண்டும் நாடுகளாகவும் சுரண்டப்படும் நாடுகளாகவும் பிளவுபட்டுள்ளது என்று 1916 ஆம் ஆண்டில் வரையறுத்தார், லெனின். சுரண்டும் நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் என்றும் சுரண்டப்படும் நாடுகளை, காலனிய, அரைக்காலனிய, சார்பு நாடுகள் என்றும் அழைத்தார்.

லெனின் ஆய்வு செய்ததற்குப் பிந்தைய 100 ஆண்டுகளில் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டாலும், சுரண்டும் நாடுகளின் குழுமம் கிட்டத்தட்ட மாறாமல் அப்படியே தொடர்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏகாதிபத்திய நாடுகளாக இருந்த அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் ஆகியவை அதே நிலையில் தொடர்கின்றன. சுரண்டப்பட்ட ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் அரசியல் சுதந்திரம் அடைந்து விட்டாலும் ஏகாதிபத்திய நாடுகளின் சார்பு நாடுகளாகத் தொடர்ந்து சுரண்டலுக்கு உள்ளாகின்றன.

1917 ஆம் ஆண்டு, ஏகாதிபத்திய நாடுகளில் ஒன்றான ரசியாவில் ஏற்பட்ட புரட்சிக்குப் பின் சோவியத் ஒன்றியம் என்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு சோசலிச நாடு உருவானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சீனாவும் பின்னர் வியட்நாம், கியூபா முதலிய நாடுகளும் என ஒரு சோசலிச முகாம் உருவானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு முகாமின் தலைமை சக்தியாக சோவியத் ஒன்றியம் இருந்தது. சோவியத் ஒன்றியத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக 1970களில் சீனா அமெரிக்காவுடன் அரசுறவையும் பொருளாதாரப் பிணைப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டது.

1989 தொடக்கத்தில், சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியன்அன்மென் சதுக்கத்தில் மாணவர்களின் பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது. ஊழல் ஒழிப்பு, பல கட்சி சனநாயகம், விலைவாசிக் குறைப்பு போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. போராட்டங்களைத் தூண்டி வன்முறையை நோக்கித் திசை திருப்பியதில் அமெரிக்க அரசின் உளவு நிறுவனங்களின் பங்கு இருந்ததாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டறிந்தது. இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்த போராட்டங்கள் இராணுவ நடவடிக்கை மூலம் போராட்டம் கலைக்கப்பட்டன .

அதே ஆண்டில், போலந்து, ஹங்கேரி, கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவாக்கியா, ரொமேனியா முதலிய நாடுகளில் கம்யூனிஸ்டு அரசுகள் சரிந்து முதலாளித்துவ அரசுகள் பதவிக்கு வந்தன. யூகோஸ்லேவியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி உடைந்து தனித்தனிக் குடியரசுகள் உருவாயின. 1990-91 ஆண்டுகளில் சோவியத் சோசலிசக் குடியரசுகள் தனித்தனி நாடுகளாகப் பிரிந்து சென்றன. அவை நீண்ட பொருளாதாரத் தேக்கத்திலும் அரசியல் ஒழுங்கின்மையிலும் வீழ்ந்தன. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய முதலாளித்துவ சக்திகளின் வேட்டைக் காடுகள் ஆயின.

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியக் கட்டமைப்பின் ஒற்றைத் துருவ ஒழுங்கு யாராலும் எதிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்திருந்தது.

1991 ஆம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் அமெரிக்கா தலைமையிலான 30 நாடுகள் கூட்டணி ஈராக் மீது தாக்குதல் நடத்தி, ஈராக் ஆக்கிரமித்திருந்த குவைத் நாட்டை விடுவித்தது. தீவிரமான, பரவலான வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து ஈராக்கின் இராணுவ வலிமை உடைக்கப்பட்டது. பிப்ரவரி 24 1991 அன்று தொடங்கிய தரைப் போர் 100 மணி நேரம் மட்டுமே நீடித்தது. ஈராக் படைகள் குவைத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டன. அமெரிக்கா தலைமையிலான படைகள் வெற்றி வாகை சூடின.

இந்நிலையில், சீனா, வட கொரியா, வியட்நாம், லாவோஸ், கியூபா, யூகோஸ்லேவியா ஆகிய நாடுகளில் இருந்த எஞ்சியிருந்த கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கங்கள் என்ன செய்ய வேண்டும்?

வெல்லற்கரியதாகத் தோன்றிய, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய உலக ஒழுங்கை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?

ஏகாதிபத்திய எதிர்ப்பில் பிறந்து ஏகாதிபத்தியங்களின் ஆதரவுப் படைகளை முறியடித்து நாட்டை விடுவித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1990களுக்குப் பிறகு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய எதிர்ப்பை எவ்வாறு முன்னெடுக்கிறது?

ரஷ் தோஷியின் “தொலைதூர ஆட்டம்: அமெரிக்க மேலாதிக்கத்தை அகற்றுவதற்கான சீனாவின் மாபெரும் தொலைநோக்கு உத்தி” (The Long Game: China’s Grand Strategy to Displace American Order) இந்தக் கேள்விகளுக்கான விடைகளை வழங்குகிறது.

ரஷ் தோஷி, சீனாவின் 'மாபெரும் தொலைநோக்கு உத்தியை' வெறும் அரசியல் நகர்வாக மட்டும் பார்க்காமல், அதை சீனாவின் வரலாற்று, பண்பாட்டுப் பின்னணியுடன் இணைக்கிறார்.

  • நூற்றாண்டு கால அவமானம்: 19-ஆம் நூற்றாண்டில் அபினிப் போரில் தொடங்கி 1949 சீனப் புரட்சி வரை சீனா எதிர்கொண்ட வீழ்ச்சியையும், மேற்கத்திய நாடுகள் அதைச் சுரண்டியதையும் தோஷி தனது வாதத்தின் தொடக்கமாகக் கொள்கிறார்.
  • தேசிய மீட்டுருவாக்கம் : 2049-ஆம் ஆண்டிற்குள் சீனாவை உலகின் முதன்மைச் சக்தியாக மாற்றி, அதன் இழந்த பெருமையை மீட்டெடுப்பதே "சீனக் கனவு" என்று அவர் விளக்குகிறார்.

ரஷ் தோஷி மூன்று முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் தனது வாதத்தை நிறுவுகிறார். சீன மொழியைக் கற்றுள்ள அவர் சீன மொழி ஆவணங்களையும் பத்திரிகைகளையும் தரவுகளையும் விரிவாக ஆய்வுக்குட்படுத்தியுள்ளார்.

1.      சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை விளக்கக் குறிப்புகளையும் உயர்மட்டத் தலைவர்களின் உரைகளையும் ஓய்வுபெற்ற அலுவலர்களின் நினைவுக் குறிப்புகளையும் ஆய்வு செய்தல்.

2. லெனினிய முறையிலான கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் கீழ் பல்துறைகளையும் ஒருங்கிணைத்து 'மாபெரும் தொலைநோக்கு உத்தியை செயல்படுத்தும் திறனை' பகுப்பாய்வு செய்தல்

3.      இராணுவ, பொருளாதார, அரசியல் துறைகளில் சீன அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதன் தொலைநோக்கு உத்தியுடன் எவ்வாறு ஒத்துப்போகின்றன என்பதை ஆராய்தல்.

சீனாவின் மூன்று கட்டப் பயணம் (1989 - 2021)

1. மழுங்கடித்தல் (1989 - 2008)

1989-ல் தியான்அன்மென் சதுக்கப் போராட்டங்கள், ஈராக் மீது அமெரிக்கா தொடுத்த வளைகுடாப் போர், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி ஆகிய மூன்று நிகழ்வுகள் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கும் சோசலிசத்தை நோக்கிய பயணத்துக்கும் அமெரிக்கா ஒரு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது என்ற முடிவை நோக்கி சீனக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியைத் தள்ளியது.

எனவே, பன்னாட்டு அரங்கில் "திறன்களை மறைத்துக் கொண்டு, சரியான நேரத்திற்குக் காத்திருத்தல்" (Tao Guang Yang Hui - Hiding Capabilities and Biding Time) என்ற செயலுத்தி பின்பற்றப்பட்டது.

  • இராணுவத் துறை: சீனாவைச் சுற்றி வளைத்துத் தாக்கும் வகையிலான அமெரிக்க இராணுவத்தின் தலையீட்டைத் தடுக்க 'கடல் மறுப்பு' உத்திகளைப் பயன்படுத்தி நீர்மூழ்கிக் கப்பல்களையும் நீரடிக் கண்ணி வெடிகளையும் ஏவுகணைகளையும் உருவாக்கியது.
  • அரசியல்: ஆசியா பசிபிக் பொருளாதாரக் கூட்டு, தென்கிழக்காசிய நாடுகளின் பிராந்திய மன்றம் போன்ற ஆசிய அமைப்புகளில் இணைந்து, அவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் விழுந்து விடாமல் தடுத்தது.
  • பொருளாதாரம்: அமெரிக்கச் சந்தையைப் பயன்படுத்திக் கொள்வது, மேற்கத்தியத் தொழில்நுட்பங்களைப் பெறுவது, பொருளாதாரத் தடைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வது முதலிய நோக்கங்களுக்காக உலக வர்த்தகக் கழகம் போன்ற அமைப்புகளுக்குள் இணைந்தது.

2. கட்டியமைத்தல் (2009 - 2016)

2008-ஆம் ஆண்டு உலகளாவிய நிதித்துறை நெருக்கடி மேற்கத்திய பொருளாதார அமைப்பின் நொறுங்கும் தன்மையை வெளிப்படுத்தியது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது செயலுத்தியை பன்னாட்டு அரங்கில் "ஆக்கபூர்வமாக எதையேனும் சாதித்தல்" (Actively Accomplish Something) என மாற்றிக் கொண்டது.

  • இராணுவம்: சீனாவை அடுத்த கடல் பகுதியில் 'கடல் கட்டுப்பாடு' என்ற இலக்கை வகுத்துக் கொண்டது. விமானம் தாங்கிக் கப்பல்களைக் கட்டத் தொடங்கியது.
  • அரசியல்: அமெரிக்கா இல்லாத ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) போன்ற புதிய அமைப்புகளை உருவாக்கியது, பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் மூலம் பிரேசில், ரசியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா முதலிய நாடுகளுடன் பொதுப் பன்னாட்டு மேடையை வலுப்படுத்தியது.
  • பொருளாதாரம்: பெல்ட் ரோடு முன்னெடுப்பு (BRI) மூலம் ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளை சீனப் பொருளாதாரத்துடன் பிணைத்தது.

3. உலகளாவிய விரிவாக்கம் (2017 - 2021+)

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது, பிற்பாடு கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் அமெரிக்கா, இத்தாலி போன்ற மேற்கத்திய நாடுகளின் தோல்வி ஆகிய மூன்று நிகழ்வுகள் மேற்கத்திய அரசியல் பொருளாதார கட்டமைப்பு சரிந்து வருவதை உறுதிப்படுத்தின.

  • சீனக் கம்யூனிஸ்ட் கட்சி "ஒரு நூற்றாண்டில் கண்டிராத பெரும் மாற்றங்கள்" (Great Changes Unseen in a Century) என்ற முழக்கத்தை முன்வைத்தது.
  • பொருளாதாரத் துறையில் நான்காவது தொழில் புரட்சியில் (AI, 5G, மின்சார வாகனங்கள்) தற்சார்பு பெறுவது, அமெரிக்க டாலருக்கும் மேற்கத்திய நிதிக் கட்டமைப்புக்கும் மாற்றாக மின்னணு நாணயக் கட்டமைப்பை உருவாக்குவது முதலிய செயல்களை முனைப்பாக முன்னெடுத்தது.
  • அரசியல் துறையில் பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவாக்குவது, மனித குலத்துக்குப் பொதுவான எதிர்காலம் முதலிய கொள்கைகளை முன்வைத்து நாடுகளுக்கு இடையிலான சமத்துவ உறவின் அடிப்படையில் செயல்படுவது.

இது தொடர்பான பல ஆர்வத்துக்குரிய தகவல்களையும் நிகழ்வுகளையும் இணைத்து விவரிக்கிறார் ரஷ் தோஷி. ஓரிடத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சீனாவின் செயலுத்திகள், சீனப் புரட்சியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றிய "கிராமங்களைக் கைப்பற்றி, நகரங்களைச் சூழ்ந்துகொள்வது" என்ற உத்தியுடன் ஒப்பிடத்தக்கவை என்று குறிப்பிடுகிறார், ரஷ் தோஷி.

இந்த ஒப்பீட்டை நமது பார்வையில் சற்றே விரித்துப் பார்க்கலாம்.

  • கிராமப்புறங்கள்: ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவிலுள்ள வளரும் நாடுகள்
  • நகரங்கள்: அமெரிக்கா, ஐரோப்பாவின் தொழில்மயமான வளர்ந்த நாடுகளும் அவற்றின் பொருளாதார மையங்களும்

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் வலுவாக இருக்கும் 'நகரங்களுடன்' (மேற்கத்திய நாடுகளுடன்) நேரடியாக மோதுவதற்குப் பதிலாக, சீனா முதலில் 'கிராமப்புறங்களில்' (வளரும் நாடுகளில்) தனது செல்வாக்கை நிலைநாட்ட முயல்கிறது.

  • வளரும் நாடுகளில் அமெரிக்க மேலாதிக்கத்தைப் பலவீனப்படுத்துவதன் மூலம் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை பலவீனப்படுத்துகிறது.
  • இந்த உத்தியின் மூலம், வளர்ந்த நாடுகளின் மையப்பகுதிகளை நோக்கித் தனது செல்வாக்கைப் படிப்படியாக விரிவுபடுத்துவது சீனாவின் திட்டமாகும்.

இந்த வழிகாட்டுதலைச் செயல்படுத்துவதில் பெல்ட் அண்ட் ரோடு முன்னெடுப்பு (BRI) முக்கியக் கருவியாக உள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பு ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான அரசியல் மேடையாக உருவாக்கப்படுகிறது.

இந்த 'சூழ்ந்து கொள்ளும்' உத்தியின் இறுதி நோக்கம், 2049-க்குள் அமெரிக்காவின் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை அகற்றுவதாகும்.

சுருக்கமாகச் சொன்னால், சீனா நேரடியாக அமெரிக்காவுடன் மோதாமல், உலகெங்கிலும் உள்ள வளரும் நாடுகளின் ஆதரவையும் பிணைப்பையும் கொண்டு அமெரிக்காவின் மேலாதிக்கக் கருவிகளை மழுங்கடித்து, உலக அரசியல் பொருளாதாரத்தை மாற்றி அமைத்து வருகிறது.

சீனா தனது அடிப்படைக் கொள்கையான ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கைவிடவில்லை; மாறாக, அதை வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப மீள் வரையறை செய்து, சூழ்நிலைசார், பல்துறைசார் நீண்டகால உத்தியாக மாற்றியுள்ளது.

*       அரசியல்/கருத்தியல்: முன்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு பெரும்பாலும் அறிவுறுத்தல், புறக்கணிப்பு மூலம் செயல்பட்டது. இன்று, சீனா மாற்று மாதிரிகளையும் நிறுவனங்களையும் முன்வைப்பதில் தீவிரமாக உள்ளது. மனிதகுலத்தின் பொது எதிர்காலம் என்ற முன்மொழிவை, மேற்கத்திய தனிமனித சுதந்திரம்-முதலாளித்துவ சனநாயக மாதிரிக்கு எதிரானதாக நிறுவ முயல்கிறது.

* பொருளாதாரம் : வரலாற்றில், ஏகாதிபத்திய எதிர்ப்பு பெரும்பாலும் புறக்கணிப்பு அல்லது தன்னிறைவு உத்திகளில் கவனம் செலுத்தியது. இன்றைய சீனப் பொருளாதார உத்தி முன்னேறிய நாடுகளின் பொருளாதாரங்களுடன் ஆழ்ந்த இணைப்பு மூலம் தன்னை வலுப்படுத்திக் கொண்டு ஏகாதிபத்திய ஆதிக்கத்தைப் பலவீனப்படுத்துவதாகும்.

மேலும், "பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பு" ஏகாதிபத்திய எதிர்ப்பின் ஒரு சாதனமாகச் செயல்படுகிறது. இது டாலர் மற்றும் அமெரிக்கத் தலைமையிலான நிதி நிறுவனங்களின் மீதான சார்பைக் குறைக்கும் நோக்கமுடையது.

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) போன்ற புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படுவது, உலக வங்கி மற்றும் IMF போன்ற மரபார்ந்த "மேற்கத்திய ஏகாதிபத்திய" நிறுவனங்களின் செல்வாக்கை மட்டுப்படுத்துகிறது.

*       இராணுவம்/பாதுகாப்பு: முற்கால ஏகாதிபத்திய எதிர்ப்பு பெரும்பாலும் தன்னைக் காத்துக் கொள்வதில் கவனம் செலுத்தியது. தற்கால சீன இராணுவ மேம்பாடும் தென் சீனக் கடல் போன்ற பிராந்தியங்களில் செயல்பாடுகளும் சீனாவைச் சுற்றியுள்ள பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்கும், அமெரிக்கக் கூட்டணி வலைப்பின்னல்களுக்கு (ஜப்பான், ஃபிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா போன்றவை) இணையான செல்வாக்குப் பகுதிகளை உருவாக்குவதற்கும் உதவுகின்றன.

*       புறக்கணிப்பிலிருந்து ஈடுபாட்டிற்கு: பழைய மாதிரி புறக்கணிப்பு அல்லது அணிசேராக் கொள்கையை வலியுறுத்தியது. புதிய மாதிரி முழுமையான உலகளாவிய ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது, ஆனால் ஏகாதிபத்திய ஒழுங்கின் கீழ் அல்லாமல் சோசலிச ஒழுங்கின் கீழான ஈடுபாட்டை முன்வைக்கிறது.

*       தேசியப் பாதுகாப்பிலிருந்து உலகளாவிய அமைப்புக்கு: இலக்கு சீனாவை தற்காத்துக் கொள்வது மட்டுமல்ல, "பன்னாட்டு ஒழுங்குமுறையை" மீள்வடிவமைப்பது, இதில் சீனா மையப் புள்ளியாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் மேலாண்மை மாதிரி மதிக்கப்படும் வகையிலும் இருக்கும்.

2021 இல் ரஷ் தோஷியின் நூல் வெளியானது. ரஷ் தோஷி அந்த ஆண்டு அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ஜோ பைடன் அரசில் பாதுகாப்புத் துறை ஆலோசகராகப் பொறுப்பேற்றார். இந்த நூலில் பேசப்படும் அரசியல் கடந்த ஐந்து ஆண்டுகளில் நம் கண் முன் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ரஷ் தோஷி தனது ஆய்வு நூலில் பரிந்துரைத்த வழிமுறைகளான, சீனாவுக்கு உயர் தொழில்நுட்பங்களை மறுப்பது, சீனாவுக்கு எதிரான கூட்டணிகளை உருவாக்குவது, சீனாவின் ஏற்றுமதிகளுக்குத் தடை விதிப்பது முதலியவை ஜோ பைடன் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன.

சென்ற ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவர் அமெரிக்காவின் உலகளாவிய அரசியல், இராணுவக் கூட்டுகளும் தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளும் அமெரிக்க நலனுக்கு எதிரானவை என்று வாதிடுகிறார். அமெரிக்காவின் கூட்டணி நாடுகள் உள்ளிட்டு அனைத்து நாடுகளின் மீதும் இறக்குமதி வரி விதிப்பு, நேட்டோ இராணுவக் கூட்டமைப்புப் பொறுப்புகளில் இருந்து பின்வாங்குவது என அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வது, வெனிசுலா, கிரீன்லாந்து, கனடா போன்ற நாடுகளுக்குச் சொந்தம் கொண்டாடுவது என்று அடாவடி செய்து வருகிறார். இவை அனைத்தும் அமெரிக்காவின் சரிந்துவிட்ட உற்பத்தித் துறை வலிமையை மீட்டெடுக்கும் என்று வாதிடுகிறார்.

இது அமெரிக்காவின் நம்பகத் தன்மையையும் உலகச் செல்வாக்கையும் மேலும் பலவீனப்படுத்துகிறது. சீனா, உலகளாவிய குழப்பங்களை எதிர்கொண்டு தனது பொருளாதாரத்தையும், மூன்றாம் உலக நாடுகளுடன் தனது உறவுகளையும் வலுப்படுத்தி வருகிறது.

சீனாவும் மூன்றாம் உலக நாடுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதில் வெற்றி பெறுமா அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியம் மீண்டும் ஒரு முறை தன்னை புதுப்பித்துக் கொண்டு தாக்குப் பிடித்து விடுமா என்பதைத் தீர்மானிக்கும் போராட்டம் இன்று உலக அரங்கில் நடைபெற்று வருகிறது.

ரஷ் தோஷி (Rush Doshi)

அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக் கழகத்தில் அயலுறவுப் பணிப் பள்ளியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். 2021 முதல் மார்ச் 2024 வரை, ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க ஒன்றிய அரசில் அமெரிக்க அதிபர் மாளிகையின் தேசிய பாதுகாப்பு அவையில் சீனா - தைவான் இயக்குநராகப் பணியாற்றினார். முன்னதாக, அமெரிக்கப் பாதுகாப்புத் துறை சிந்தனைக் குழாம் ஆன புரூக்கிங்ஸ் இன்ஸ்டிட்யூஷனில் “சீனத் தொலைநோக்கு உத்தி முன்னெடுப்பு” என்ற துறையை உருவாக்கி அதன் இயக்குநராகப் பணியாற்றினார். 2021 ஆம் ஆண்டில் The Long Game புத்தகத்தை வெளியிட்டார்.

மா.சிவகுமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.