தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்னும் மன்னன் உலகத்து இன்ப மாகிய இல்லறத்தோடு இருத்தலை மறந்து போர் ஒன்றையே இன்பப் பொருளாகக் கருதி வாழ்ந்தான் என்னும் பொருள்பட நக்கீரரால் நெடுநல்வாடை என்னும் நூல் இயற்றப்பட்டது.

காதலும் வீரமும் சங்க காலத் தமிழர் வாழ்க்கையின் இரண்டு கூறு களாக இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் வழி அறிகிறோம். இந்த இரண்டுள் போர் ஒன்றையே தொழிலாகக் கருதிப் பெருவீரனாக விளங்கிய பாண்டிய மன்னனை நோக்கிக் காதல் இன்பத் தையும் கண்டு வாழுமாறு நெடுநல்வாடையில் நக்கீரர் அறிவுறுத்தியுள்ளார். காதல் இன்பத்தைக் காணுமாறு கூறும் இந்நூற்பொருளின் தொடர்ச்சி யாகவே மதுரைக்காஞ்சி நூல் பாடப்பட்டுள்ளது.

காதலை மறந்து, போர்த் தொழில் ஒன்றையே வாழ்க்கையாகக் கருதி வாழ்ந்த அந்த பாண்டிய மன்னன் வீடு பேற்றைப் பற்றி உணரும் வகையில் மாங்குடி மருதனார் என்னும் சங்கப் புலவர் மதுரைக் காஞ்சியைப் பாடியிருக்கிறார். இப்பாடல் வழி, உலகம் நிலையாமை முதலிய மெய்ப்பொருளுணர்ந்து, வீட்டின்பம் எய்தும்படி அவனை அறிவுறுத்துகிறார். மதுரையிடத்து வைத்து அரசனுக்குக் கூறிய காஞ்சி யாதலின் இது மதுரைக்காஞ்சி எனப்பட்டது (பத்துப்பாட்டுச்சொற்பொழிவுகள், ப. 155, 1952).

மதுரைக்காஞ்சி பத்துப்பாட்டுத் தொகுப்பில் உள்ள ஆறாவது பாட்டாகும். பாட்டுக்களின் சிறப்பாலும் அடியளவாலும் புகழ்பெற்றது மதுரைக் காஞ்சி. இப்பாடலைப் பாடிய மருதனாரின் பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு முதலிய சங்க நூல்களிலும் காணப் படுகின்றன.

எழுநூற்றெண்பது அடிகள் கொண்ட இந்தப் பாடலில் பாண்டிய மன்னனின் படைச்சிறப்புக்களோடு மதுரை நகரின் சிறப்புகள் வெகுவாகப் பேசப்படுகின்றன.சங்கப் புலவர்களுள் மதுரை மாநகரின் சிறப்புக்களை மருதனார் அளவு வேறெந்தப் புலவரும் பாடியதாகத் தெரியவில்லை. மதுரை மாநகரின் மதில், அங்காடித் தெரு, வணிகச் சிறப்பு, ஓங்கி உயர்ந்த மாடங்கள் அமைந்த வீடுகள் இவற்றை யெல்லாம் புலவர் அழகிய வருணனையோடு கூறுகிறார்.

இவரின் வரிகள் வழிச் சங்க கால மதுரையின் சிறப்புக்களையும் பெருமைகளையும் நம்மால் உணரமுடிகிறது. பாண்டிய மன்னர்களின் பெரு வணிகத் தலமாக விளங்கிய மதுரையில் கொண்டி மகளிரும் (பரத்தையர்) இருந்துள்ளனர் என்ற குறிப்பையும் அறியமுடிகிறது.

அந்நகரில் வாழ்ந்த கொண்டி மகளிர் பற்றிய செய்திகளையும் அவர்கள் இயல்புகளையும் அழகாகப் புலவர் குறிப்பிடு கிறார். ‘பழந்தேர் வாழ்க்கைப் பறவை போன்றவர்’ ‘நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்’ எனக் கொண்டி மகளிரை அவர்களின் இயல்புகளோடு சுட்டுகிறார். அவ்வகைக் கொண்டி மகளிர் தமது ஒப்பனைகளால் இளைஞர்களை எவ்வாறு கவரு கிறார்கள் என்பது பற்றிய வரிகளில் ‘மேதகு’ என்னும் சொல் பயின்றுவந்துள்ளது. அப்பாடலடிகள் இவ்வாறு அமைந்து காணப்படுகின்றன.

நீர்திரண் டன்ன கோதை பிறக்கிட்டு

ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப்

போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ

மேதகு தகைய மிகுநல மெய்தி

பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்

திறந்துமோந் தன்ன சிறந்துகமழ் நாற்றத்துக்

கொண்டல் மலர்ப்புதல் மானப்பூ வேய்ந்து

நுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கி

மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்து

(மதுரைக்காஞ்சி, 562- 570)

இவற்றுள் வரும் ‘மேதகு தகைய மிகுநல மெய்தி’ என்னும் பாடலடிக்கு ‘முற்படப் பலருடன் புணர்ந்த புணர்ச்சியாற் குலைந்த ஒப்பனைகளைப் பின்னும் பெருமைதருகின்ற அழகினையுடைய மிகுகின்ற நன்மையுண்டாக வொப்பித்து’ என்று நச்சினார்க்கினியர் உரைப்பொருள் எழுதியுள்ளார். அதாவது இங்கு ‘மேதகு’ என்பது ‘பெருமை தருகின்ற’ என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. இதே பொருளில் இன்றைய தமிழில் அடையாக இச்சொல் வழங்கிவருகிறது.

இன்றைய தமிழில் ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகிய இருவரையும் ‘மேதகு’ என்னும் உயர் அடை யோடு வழங்கும் மரபு காணப்படுகிறது. பொது வாக மேதகு என்னும் சொல்லை ‘மேன்மை தங்கிய’ என்ற பொருளில் கையாளுகின்றனர். ‘மேன்மையான’ என்று ‘தமிழ் மொழி அகராதி’ விளக்கம் தருகிறது.

இன்றைய வழக்கில் பயின்று வருவதைக் கொண்டு ‘க்ரியா’வின் ‘தற்காலத் தமிழ் அகராதி’ ‘மேதகு’ என்னும் சொல்லை இலக்கண வகையில் பெயரடையாக வகைப்படுத்தியுள்ளது.இன்றைய தமிழில் அடையாகச் சுட்டப்படும் இந்தச் சொல் மிக நெடுங்காலமாக வழக்கில் இருந்துவருகிறது. பழந்தமிழில் இந்தச் சொல் பெயர்ச் சொல்லாக மட்டுமே வழங்கிவந்துள்ளது. தமிழில் பெயர்ச்சொல் பெயரடையாக வழங்குவது இயல்பான நிகழ்வாகும். சங்கப் பாடல்களுள் மேற்கண்ட ஒரு இடத்தில் மட்டுமே இந்தச் சொல் இடம்பெற்றுள்ளது.

‘மேதகு’ என்னும் சொல் சங்க இலக்கியங் களுக்குப் பிந்தைய திருமந்திரம், திருவாசகம். நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகிய பக்தி இலக்கியங்களிலும் பயின்று வந்துள்ளதையும் இங்கு நினைவுகொள்ளலாம்.

விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்

தொட்டுத் தொடர்வன் தொலையாய் பெருமையை

எட்டும் என் ஆயிரு ராய்நின்ற ஈசனை

மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே. 

(திருமந்திரம், 289)

மதியில் தண்மை வைத்தோன், திண்திறல்

தீயில் வெம்மை செய்தோன், பொய்தீர்

வானில் கலப்பு வைத்தோன், மேதகு

காலின் ஊக்கம் கண்டோன், நிழல் திகழ்

நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட       

(திருவாசகம், 3, 25)

பீதக ஆடை முடிபூண் முதலா

மேதகு பல்கலன் அணிந்து

(நாலாயிர திவ்யப்பிரபந்தம், 2578: 6,7)

நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை,

மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே

(நாலாயிர திவ்யப்பிரபந்தம், 2672: 29, 30)

யாப்பருங்கல விருத்தி உரையில் மேதகு என்னும் சொல்லமைந்த கீழ்வரும் மேற்கோள் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கண்ண் கருவிளை; கார்முல்லை கூரெயிறு;

பொன்ன் பொறிசுணங்கு; போழ்வாய் இலவம்பூ;

மின்ன் நுழைமருங்குல்; மேதகு சாயலாள்

என்ன் பிறமகளா மாறு

(நூ. 3 உரை, மே.வி.கோ. பதிப்பு, 1998, . 38)

தமிழில் ‘மேதகு’ என்னும் சொல் சங்க காலம் முதற்கொண்டு வழக்கில் இருந்து வந்துள்ளதை மேற்கண்ட தரவுகள் வழி அறியமுடிகிறது. சங்க காலத்தில் கையாளப்பட்ட முறையிலேயே பிற்கால இலக்கியங்களிலும் கையாளப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இவைகள் அனைத்திலும் ‘மேதகு’ பெயர்ச் சொல்லாகவே பயின்றுவந்துள்ளது மனதிற்கொள்ளத்தக்கதாகும். ஆனால் இன்றைய தமிழில் பெயரடையாக அச்சொல் சுட்டப்படுகிறது.

பெயர்ச்சொல் பெயரடையாகப் பயின்றுவருதல் நமது மொழியில் இயல்பான நிகழ்வாகும். அந்த வகையில் இன்றைக்கு ‘மேதகு ஆளுநர்’, மேதகு குடியரசுத் தலைவர்’ என்று அடையாகச் சுட்டு வதைக் காண்கிறோம். இலக்கண நிலையில் சிறிதளவு மாற்றம்பெற்றிருப்பினும் சங்க காலம் முதல் சமகாலம் வரை உயர்ச்சிப் பொருளில் மட்டுமே ‘மேதகு’ என்னும் சொல் கையாளப் பட்டுள்ளது நினைவு கொள்ளத்தக்கதாகும்.

Pin It