மதுரையைப் போலக் கலை ஆர்வமும் காட்சி மோகமும் கொண்ட ஒரு நகரை எங்கும் பார்க்க முடியாது. தாய் மாமன் சீர் வரிசை கொண்டு போகும்போதும், மனிதனின் இறுதியாத்திரையின் போதும் கூட கரகாட்டமும் புலிவேஷமும் மேள தாள ஓசையும் இல்லாமல் போக மாட்டார்கள். தெருதோறும் நாடகமும், குறவன் குறத்தி ஆட்டமும் இன்றும் ஏதாவது ஒரு மூலையில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சினிமாவின் தோற்றம் வந்த போது அதை இந்த அளவிற்கு பிரம்மாண்ட வளர்ச்சியாக்கிக் காட்டியது மதுரைதான்.

மதுரையிலும் “சித்திரகலா” ஸ்டுடியோ இருந்தது. அதன் நினைவாக ஒரு ஆர்ச் (வளைவு) திருநகரில் உள்ளது. அல்லி அர்ச்சுனா, குமரகுரு, தாய்நாடு போன்ற தமிழ்ப்படங்களும் சில சிங்களப் படங்களும் இங்கே தயாரிக்கப்பட்டு நெடுநாள் ஓடின.

மதுரையில் சினிமா சம்பந்தப்பட்டவர்களுக்குப் பட்டமும் விழா எடுத்துப் பாராட்டு வழங்குவதும் இன்று வரை தொடர்கிறது. “நக்கத்” என்ற இயற் பெயர் கொண்ட நடிகை குஷ்புவிற்குக் கோவில் கட்டியதும், உணவுப் பொருளுக்கு (இட்லி) அவர் பெயரைச் சூட்டியதும் மதுரை ரசிகன் தான். எந்தப் படம் வந்தாலும் அதில் கௌரவ வேடம் தாங்கி வருபவனுக்கும் கூட கலைப்புயல் போன்ற பட்டம் கொடுத்து, கூட நின்று புகைப்படமும் எடுப்பான். கதாநாயகனை அண்ணன் என்றும், அவர் மனைவியை அண்ணி என்றும் குடும்பப் பாங்கோடு அழைக்கவும் இவனால் மட்டுமே முடியும்.

உலகிலேயே முதல் முதலாகப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன் மதுரைக்காரர் தான்.

அரசியலிலும் சரி, திரைப்படங்களிலும் சரி மதுரைக்காரனின் ரசனையை வைத்தே வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. முதல் காட்சி யன்று நடிகர்களோ, இயக்குநர்களோ ரசிகர் களோடு உட்கார்ந்து படம் பார்ப்பது இன்று வரை தொடர்கதை, படங்களுக்குப் பைனான்ஸ் செய்பவர் களில் பாதிப்பேர் மதுரைக்காரர்கள் தான்.

எம்.ஜி.ஆரின் அரசியல் கட்சித் தோற்றத் திற்கு மதுரையே முதல் காரணம். அவர் தி.மு.க. விலிருந்து நீக்கப்பட்டபோது தாமரைக்கொடியை மேங்காட்டுப் பொட்டலில் ஏற்றினார்கள். பின்னர் தான் இப்போதைய கொடியாக அடையாளம் மாறியது. தாமரைக்கொடி ஏற்றியவர்கள் பின்னால் அரசியலில் எம்.ஜி.ஆரால் உயர்வு பெற்றனர்.

எம்.ஜி. ஆரின் முதல் அரசியல் வெற்றி பழைய மதுரையைச் சேர்ந்த திண்டுக்கல்தான். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றோருக்கும் மதுரையோடு மிகுந்த சம்பந்தம் உண்டு. அடிக்கடி வந்து போவார்கள். எம்.ஜி.ஆர். வெற்றியை சிவாஜி அடைய முடியாததற்கு என்ன காரணம் என்பதை ஆய்வாளர்கள் முடிவு செய்யவேண்டும். இத்தனைக்கும் சிவாஜிக்கு ஜாதிப் பின்புலமும், ரசிகர்களும் அதிகம்.

ஒரு தெருவுக்கு ஒரு கோவிலும், இரண்டு தெருக்களுக்கு ஒரு சினிமா தியேட்டரும் உடையது மதுரை. மதுரை நகரின் நான்கு புறங்களிலும் காவல் அரண்கள் போல சினிமா அரங்குகள் நின்று வருகின்றன. கிழக்கே சிந்தாமணி, வடக்கே கல்பனா (அண்ணாமலை) மேற்கே தங்கரீகல், தெற்கே மீனாட்சி தியேட்டர் இவைகள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போகப் பாதை காட்டிக் கொண்டிருக்கின்றன.

வைகைக்குத் தென்கரையில் உள்ள வளர்ச்சியும் தியேட்டர்களும் வடகரைப் பகுதியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தமிழ் மதுரையின் முதல் திரையங்கம் இம்பீரியலா, சிடி சினிமாவா என்ற சந்தேகம் இன்றும் மதுரையில் உள்ளது. ஆனால் மின்சாரம் வருவதற்கு முன்பே ஜெனரேட்டர் வைத்துப் படம் ஓட்டியது இம்பீரியல் என்பதால் இம்பீரியலே சீனியர் என்று மதுரையின் சீனியர் குடிமக்கள் கூறுகின்றனர். மீனாட்சி அம்மன் கோவிலை ஒட்டியவாறு ஒரு நடுத்தர திருமண மண்டபம் போன்ற அமைப்புடையது இம்பீரியல்.

உள்புறமாகப் பெண்களுக்கும் வெளிப்புறம் ஆண்களுக்கும் டிக்கெட் தரப்பட்டன. முப்பது படிகள் ஏறிப்போனால் மாடியும் உண்டு. மாடி இருக்கைகளில் மூட்டைப் பூச்சிகளும் உண்டு. மூத்திரக் கவிச்சியும் உண்டு.

மதுரையின் விளிம்புநிலை மக்களின் சரணா லயம் இம்பீரியல். பின்புறமிருந்த மதுரையின் பெரிய சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள லோடு மேன்கள், ரிக்ஷா ஓட்டிகள், அதிகாலையில் காய் கறி கொள்முதல் செய்ய வரும் சிறு வணிகர்கள், மதிய நேரங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு கட் அடித்து விட்டு வரும் மாணவர்களும்தான் இதன் ரெகுலர் கஸ்டமர்களாக இருந்தனர்.

பெரும்பாலும் பழைய படங்கள், குறிப்பாக விட்டலாச்சாரியாவின் தெலுங்குப் படங்களே திரையிடப்பட்டுக் கூட்டம் திரண்டது. மாய மோதிரம், ஜெகன் மோகினி, படங்கள் பார்க்க அகவைபேதமின்றி ஆர்வம் கொண்டனர்.

ஸ்ரீசைலத்திற்கு காவடி தூக்கும் குரங்கு, சாப விமோசனத்திற்காக கண்ணீர் விடும் ஆடு, பேசும் பாம்பு, இவைகளை மக்கள் ரசித்தனர். கை தட்டினர். சாபவிமோசனம் பெறும் ஆடு, பாம்புகள் பெரும் பாலும் ஜெயமாலினி, ஜோதிலட்சுமி போன்ற நடிகைகளாகவே உருமாறின. திரையே கொள்ளாத அளவிற்கு இடுப்பை அசைக்கும் விஜயலலிதா நடனங்கள், காந்தாராவ் கத்திச் சண்டை என்ற இம்பீரியல் சினிமா கலகலப்பாகும். பாழடைந்த பேய்கள் வாழும் பாழடைந்த மண்டபங்களில் இருந்து “போடவா, போடவா” என்று பிசாசுகள் குரல் கொடுக்க தியேட்டர் நிசப்தமாக இருக்கும்.

சித்திரைத் திருவிழா நாட்களில் இம்பீரியல் முன்பு மாட்டு வண்டிகள் நிற்கும். ரசிகர்கள் அழகரைக் காணும் வரை இம்பிரீயலை மொய்ப் பார்கள். இதன் வடபுறம் இருந்த “ஜிகர்தண்டா” கடைதான் மதுரையின் முதல் ஜிகர்தண்டா ஸ்டால்” ஆகும். இரவு பகலாக இதில் ரசிகர் கூட்டமாகச் சூழ்ந்து நின்றனர்.

மதுரையின் கிராமியத்திற்கும் பழமைக்கும் சாட்சியான இம்பீரியலை இழந்தது மதுரை வரலாற்றில் ஈடு செய்ய முடியாதது. இன்று ஷாப்பிங் சென்டராகி விட்டது. ஜிகர்தண்டா கடையெல்லாம் இடம் மாறிப் போய் விட்டது.

சி(ட்)டி சினிமா மதுரையின் சௌராஷ்டிர மக்களின் கலாச்சாரத்திற்கு அடையாளம். குஜராத்தில் தான் இத்தகைய தியேட்டர் முகப்பு இருப்பதாகச் சொல்கின்றனர். செவ்வக வடிவ மான சிடி சினிமாவில் புதிய படங்களும் திரையிடப்பட்டன.

தேங்காய் சீனிவாசனின் கலியுகக் கண்ணன் போன்ற தரமான படங்கள் ஓடிய இத்தியேட்டரில் மலையாளப் படங்கள் திரை யிடப்பட்டன. பிரமிளா போன்ற கவர்ச்சி நடிகை களின் நிர்வாண பிட்டுகள் ஓடின. ஏறத்தாழ பல தியேட்டர்களில் ஒரு காலத்தில் மலையாளக் கவர்ச்சிப் படங்கள் ஓடின என்பது முக்கியமான தகவல்.

இதன் எதிரே உள்ள திருவாலவாய நாதர் கோவில் மதுரைக்கு எல்லை வகுத்த சிவன் கைக் கங்கணமான பாம்பின் வாயும் பொருந்திய இடம் என்று திருவிளையாடல் புராணம் பேசுகிறது.இன்று சிடி சினிமா வாகன நிறுத்தமாகவும் பேன்சிப் பொருட்கள் விற்பனை அங்காடியாகவும் மாறி விட்டது.

உலகப் புகழ்பெற்ற வீரபாண்டிய கட்ட பொம்மன், இருவர் உள்ளம், குடியிருந்த கோவில் என்று சிவாஜி, எம்.ஜி.ஆர். படங்களால் புகழ்பெற்ற நியூ சினிமாவும் சிடிசினிமா போன்ற அமைப் புடையதே இதன் டிக்கெட் கவுண்டர்கள் இறுக்க மாகவும் மூச்சு விடக் கூட முடியாமலும் உள்ள வகையில் இருந்தன. இதன் எதிரில் உள்ள ஜான்சி ராணி பார்க்கும், பின்புறம் மீனாட்சியம்மன் கோவிலும் கொண்ட நியூ சினிமாவின் எதிரில் மேங்காட்டுப் பொட்டல் என்னும் திடல் வைணவ புராணத்தில் பல்லாண்டு பாடிய பெரியாழ் வாருக்கு விஷ்ணு மெய்காட்டிய இடமாகும் என்று கூறுகின்றனர்.

நகைக்கடை பஜாரின் நடுநாயகமான நியூ சினிமா இன்று பாழடைந்து கிடக்கிறது. பங்காளிச் சண்டைகளால் தியேட்டர்கள் பலியானது மிகுந்த சோகமாகும்.

மதுரை நகரின் மையமான சென்ட்ரல் சினிமா வஞ்சிக்கோட்டை வாலிபன் நினைவாக வள்ளுவர் சிலையை முகப்பாகக் கொண்டது எங்க வீட்டுப் பிள்ளை, சகலகலா வல்லவன் போன்ற எம்.ஜி.ஆர்., கமலஹாசன் படங்களும் சிவாஜியின் இரும்புத் திரையும் நூறு நாட்களுக்கு மேல் ஓடிப் புகழ் பெற்றது.

இத்தியேட்டரைச் சுற்றியுள்ள தானப்ப முதலித் தெரு, கீழ், மேல அனுமந்தராயன் கோவில் தெருக் களில் ஒரு ஆள் மட்டுமே சென்று வரக்கூடிய குறுகிய நீளமான சந்துகளின் இருபக்கமும் 10 ஒ 10 அளவில் அறைகள் கொண்ட மேன்ஷன்கள் மாடி களைக் கொண்டதாக இருந்தன. இந்த அறை களில் சினிமா சம்பந்தப்பட்ட தொழில்களே நடை பெற்றன.

தெற்கே குமரி முதல் வடக்கே திருச்சி வரையும் குமுளி, மூணாறு போன்ற தமிழர் வாழும் கேரளப் பகுதிகளுக்கும் இங்கிருந்து தான் பழைய, புதிய படங்களின் பிலிம் சுருள் பெட்டிகள் சென்றன.

இப்பெட்டிகளை எடுத்துச் செல்லவும் படங் களைப் பற்றிப் பேரம் பேசவும் தியேட்டர் உரிமை யாளர்கள் நிற்பார்கள். போஸ்டர் அடிக்கவும் ஏற்கனவே வந்த போஸ்டர்களில் தியேட்டர் பெயரும் வெளியிடும் தேதிகளை பிரிண்ட் செய்யவும், டிரெடில் அச்சுமிஷின்கள் ஓயாது ஓடிக்கொண்டிருந்தன.

பழைய புதிய தமிழ் மலையாள தெலுங்குப் படங்களை ஊருக்கேற்ற வாறு கமிஷன் பேசப்பட எஜண்டுகள் வேன்களில் எடுத்துச் சென்றனர். படம் காட்டும் புரொஜக்டர் கருவிகளைப் பழுது பார்க்கவும். 16 எம்.எம். 35 எம்.எம்.மிஷின்களை விற்பனை செய்யவும். சம் பந்தப்பட்ட கம்பெனி பிரதிநிதிகள் புகைபிடித்த படி ஆட்களைத் தேடினர். ஆங்கிலப் படங்கள் மிட்லண்ட் ஓட்டலை ஒட்டிய சந்துகளில் கிடைத்தன.

படப்பெட்டிகளும் போஸ்டர்களும் வாங்கு பவர்கள் பாட்டுப் புத்தகங்களை வாங்கவும் செய்தனர். முதல் பக்கத்தில் திரைக்கதைச் சுருக்கம் சொல்லி மீதியை “வெள்ளித் திரையில் காண்க” என்று பிரிண்ட் செய்யப்பட்ட பாட்டுப் புத்தகங் களைப் பக்கத்து வீதியின் மாடிகளில் குமரன் கம்பெனி, நியூ இந்தியா, சங்கு கம்பெனிகள் கடை விரித்து ஒரு புத்தகம் ரூ. 0.0.6 பைசா (ஓரணா) என்று விற்றன.

வீணாய்க் கிடக்கும் பிலிம் சுருள்களை வாங்கிச் சிறுவர்களுக்குப் படம் காட்டும் பயாஸ்கோப்பு மனிதர்களும் முண்டியடித்து நிற்க சென்ட்ரல் சினிமாவின் சுற்றுப்புறப் பகுதிகள் கனவுத் தொழிற் சாலையில் மதுரைக் கிளைகளாக இயங்கின. இத்தொழில் செய்தவர்களுக்கு மதுரையில் ஒரு மரியாதை கிடைத்து சினிமா அதிபர் என்று அழைக்கப்பட்டனர்.

நடிகர் விஜயகாந்த் பாடகி எம்.எஸ். சுப்பு லெட்சுமி நடிகர் பாண்டியன் ஆகியோரும் அருகிலேயே வசித்தனர். சென்ட்ரல் தியேட்டர் உரிமையாளரின் லாட்ஜ் டவுன்ஹால் ரோட்டில் இருந்தது. கவிஞர் கண்ணதாசன் போன்ற திரைப் பட பிரமுகர்கள் தங்கினர்.

இலட்சக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்து மதுரையின் சினிமாத் தொழிலை மேம் படுத்திய பெருமை யாதவர், தேவர், செட்டியார், சௌராஷ்டிர இனமக்களையே சாரும். ரீகல் தங்கரீகலாக மாறும் வரை அத்தியேட்டரை சௌராஷ்டிர இனத்தவரே நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. நியூ சினிமா, சிடி, சிந்தாமணி, அலங்கார் தியேட்டர்கள் இந்த இனத்தவருக்குச் சொந்தமானவைகள்தாம்.

தழைத்தோங்கி வளர்ந்த பட விநியோகத் தொழில்கள் இன்று முகம்மாறி முதலீடுகளெல்லாம் வேறு தொழில்களில் முடங்கிவிட்டன.

இதன் எதிரில் ரத்தினசாமி என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டுக்களை விற்று வரும் முகவராக இருந்தார். தமிழ்நாட்டில் 1967க்குப் பின் லாட்டரி சீட்டு வரும் வரை இவருடைய கடையில் தான் மதுரை மக்கள் லாட்டரி சீட்டு வாங்கிப் பரிசுவிழுந்தால் சிரிக்கவும் விழாவிட்டால் வருந்தவும் செய்தார்கள். அருகில் உள்ள டெல்லி வாலா என்ற வடநாட்டு இனிப்பகமும் பண்டா பீஸ் அல்வாக்கடையும் மிகவும் புகழ்பெற்றவைகள்.

இன்றும் சென்ட்ரலில் படங்கள் மூன்று காட்சிகள் திரையிடப்படுகின்றன. ஆனால் பழைய படங்கள்; ரஷ்ய இலக்கியங்களை மதுரைக்கு அறிமுகப்படுத்திய நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என்ற நிறுவனம் இதன் அருகில் உள்ளது.

கனவுத் தொழிற்சாலையின் செல்லுலாய்டு பிம்பங்களான சினிமா வருவதற்கு முன் மூன்றாம் தமிழான நாடகங்களே மதுரையில் கோலோச்சின. சங்கரதாஸ் சுவாமிகள், டி.கே.சண்முகம், நவாப் ராஜமாணிக்கம் போன்றோரின் நாடகக் கம் பெனிகள் நடத்திய நாடகங்கள் மக்களிடையே பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் வளர்த்தன. மேலமாசி வீதியின் சந்திரா தியேட்டரில் இந்த நாடகங்கள் நடந்தன. காசு கொடுத்து நாடகம் பார்க்க மக்கள் வண்டி கட்டி வந்தனர்.

பின்னால் 1960க்குப்பின் இந்த அரங்கில் கட்சித் தலைவர் களின் அரங்கக் கூட்டங்கள் நடந்தன. பின் வரிசை ரூ. 5/- நடுவரிசை ரூ. 10/- முன் வரிசை ரூ. 50/- என மக்களும் தொண்டர்களும் காசு கொடுத்து அண்ணா, நெடுஞ்செழியன், கலைஞர், சி.பி. சிற்றரசு கூட்டங் களைக் கேட்டனர். தலைவர்களிடம் கையெழுத்து வாங்கக் கட்சி நிதியாக ரூ.10/- கொடுத்தனர். பெரியாரின் கையெழுத்து 25 பைசா முதல் ஒரு ரூபாய் வரையாகும்.

எம்.ஜி.ஆரின் படங்களும், ஜெய்சங்கரின் சபாஷ் தம்பி போன்ற படங்களும் ஓடி கலகலப் பாக இருந்த சந்திரா தியேட்டர் பின்னர் சாந்தி தியேட்டராகியது. இப்போது படங்கள் ஓடாமல் இத்தியேட்டரின் உரிமையாளர் நடிகை தேவிகா மகள் கனகாவா அல்லது அவரது தந்தை தேவ தாசா என்ற பஞ்சாயத்தில் வாகனங்கள் நிறுத்தும் அரங்கமாகி விட்டது.

சந்திரா தியேட்டரின் பின்புற வீதியில் உள்ள தங்கம் தியேட்டர் ஆயிரம் இருக்கைகள் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய தியேட்டராகும். பராசக்தி, நாடோடி மன்னன் இலந்தைப் பழம் பாடலால் புகழ்பெற்ற பணமா பாசமா? முகமது பின் துக்ளக், உண்மையே உன் விலை என்ன? போன்ற படங்களால் புகழ்பெற்ற தங்கம் தியேட்டர் எம்.ஜி.ஆர். வருகை தந்த பெருமை பெற்றது. அவருடைய தங்க வாளைப் போலவே தங்கம் தியேட்டரும் காட்சிப் பொருளாகி விட்டது.

இத்தியேட்டரின் எதிரில் இன்றும் உயிர்ப் போடு திகழும் ராஜாராம் மோகன்ராய் 1800களில் தொடங்கிய பிரம்ம ஞான சபை நூலகம் மதுரையின் அறிவு ஜீவிகளால் போற்றப்படும் நூலகமாகும். தங்கம் தியேட்டர் போலவே புகழ்பெற்றது.

70களில் கர்ணன் என்ற ஒளிப்பதிவாளரான இயக்குநர் தயாரித்த எங்க பாட்டன் சொத்து கங்கா போன்ற படங்கள் மெக்சிகோ நாட்டு கௌபாய்கள் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தின. இரு கைகளிலும் துப்பாக்கிகளை ஏந்திச் சுட்டபடியே குதிரையில் விரையும் ஜெய்சங்கர் மொட்டைத் தலையும் பெருத்த வயிறும் உடைய கொள்ளை யராக வரும் அசோகன், ராம்தாஸ் போன்றவர்கள் நடித்த இப்படங்களின் சிறப்பு அம்சமே கொழு கொழு வென்று முக்கால் நிர்வாண உடலைக் காட்டியபடி ஓகேனக்கல் அருவியில் காதல் செய்யும் ராஜ்கோகிலா, ராஜ்மல்லிகா போன்ற ராஜமுந்திரி அழகிகள் தான்.

தண்ணீருக்குள் இவர்கள் புரளும் போது தண்ணீருக்குள்ளேயே கேமராவை வைத்துப் படம் பிடிக்கும் கர்ணன் என்று பத்திரிகைகள் விமர்சனம் எழுதின.அழுகையும் சோகமுமான படங்களால் சோர்ந்து போன மதுரை ரசிகர்களுக்கு இது போன்ற படங்கள் மனதிற்கு மருந்து போட்டன.

ராஜாமில், கோட்ஸ் ஆலை, ஒர்க்ஷாப்களின் பணியாளர்கள் நிறைந்த மணிநகரம் தேவி தியேட்டர் ரோட்டிலிருந்து 500 அடி தொலைவில் உள்ளொடுங்கி இருந்தது. இதன் நுழைவு வாசலில் இருந்து இருபுறம் ஒரு ஆள் மட்டுமே நுழையும் அளவிற்கு வளைவுகளோடு இருந்த டிக்கெட் கவுண்டர் பாதையில் பல ரசிகர்கள் மூச்சுத் திணறும் நிலை இருந்தது. இத்தியேட்டரில் எம்.ஜி.ஆர் நடித்த பாசம், தெய்வத்தாய் போன்ற படங்கள் நெடுநாட்கள் ஓடின. ஒரு தியேட்டரை மையமாக வைத்து நடிகர் சு.பார்த்திபன் தயாரித்த ஹவுஸ் புல் படம் இத்தியேட்டரில்தான் தயாரிக்கப்பட்டது.

பெயரைப் போலவே இப்படமும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது.இன்று தேவி தியேட்டரில் படம் ஓடவில்லை. மதுரையின் பழமைக்குத் தேவியும் ஒரு சாட்சி.சில தியேட்டர்களில் சாமி படம் போடும் போது காட்சிகளில் ஒன்றிய பெண்கள் தங்களை அறியாமலேயே குலவையிடுவார்கள். இந்தச் சாமி படங்களில் பெரும்பாலும் கே.ஆர்.விஜயா தான் அம்மனாக இருப்பார். நடிகை ரம்யா கிருஷ்ணன் அம்மனாக வரும்போது அம்மனுக்கு இவ்வளவு கவர்ச்சியா? என்ற நெருடல் வரும். யானை, பாம்பு, குரங்குகள் அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் காட்சிகளை சிறுவர்கள் ரசித்தனர்.

எல்லாப் படங்களிலும் அம்மன்கள் விசுவரூப மெடுத்து அரக்கர்களைக் கைகளால் பிழிந்தோ, காலால் பூமியில் அழுத்தியோ தான் வதம் செய்தனர். வதம் செய்வதற்கு முன் சிலம்பம் சுற்றுவதைப் போலவே சூலாயுதத்தைச் சுழற்றியபடி நடனம் ஆடுவார்கள்.நவராத்திரிநாயகி, அருள்தரும் அன்னையர், ஆதிபராசக்தி, சமயபுரத்தாளே சாட்சி, படை வீட்டம்மன், பொட்டு அம்மன் என்றெல்லாம் பெண்களைக் குறிவைத்து எடுக்கப்படும் படங்கள் ஆடி, புரட்டாசி மாதங்களில் அரங்கம் நிறைந்து ஓடின. இத்தியேட்டகளில் இப்படங்கள் ஓடும் போது குலவைச் சத்தத்தோடு உடலை முறுக்கி “டேய்! நான் அம்மன் வந்திருக்கேன்டா, என்று சில பாமரப் பெண்கள் சாமி ஆடுவார்கள்.

அப்போது தியேட்டர் மானேஜரோ வேறு யாரோ வந்து திருநீறு பூசி மலையேற்றுவார்கள். மாப்பிள்ளை விநாயகர் சோடா, காளிமார்க் கலர் தரப்படும். மறுநாள் நாளிதழ்களில் தியேட்டரில் சாமி ஆட்டம் என்று தலைப்புச் செய்தியில் இடம் பெறுவார்கள். ஆனால் ஆண்கள் பகுதியில் இருந்து இதெல்லாம் “செட் அப்புடா” என்று சத்தம் வரும்.

ஆடி மாதங்களில் அம்மன் படங்கள், கார்த்திகை மாதங்களில் அருள்தரும் அய்யப்பன், கிறிஸ்துமஸ் நாட்களில் அன்னை வேளாங்கண்ணி, மேரி மாதா என்றெல்லாம் சீசனுக்கேற்றபடி படங்கள் ஓடும்.நடிப்பவர்களுக்கு மட்டுமல்லாது கூட நடித்த ஆடு, நாய்களுக்கும் விருது தரப்படும். அவைகளின் கழுத்தில் பதக்கங்கள் அணிவிக்கப்படும்போது ஆறறிவு மனிதர்கள் அரங்கமதிரக் கைதட்டுவார்கள்.

மதுரை ரயில் நிலையம் அருகில் உள்ள ரீகல் தியேட்டர் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் கட்டப் பட்டது. தங்கள் மன்னரான எட்வர்டு பெயரில் ஹாலும் நூலகமும் அரசியான விக்டோரியா மகாராணி பெயரில் திரையரங்கங்களும் கட்டினர். இங்கே உள்ள திரையரங்கில் வெள்ளையருக்காகவே படங்கள் திரையிடப்பட்டன. இத்தியேட்டர் எதிரில் உள்ள சாலை டவுன் ஹால் சாலை என்ற அழைக்கப் படுகிறது.

இங்கே உள்ள நூலகம் 1930களில் தொடங்கப் பட்டது. அன்று முதல் இன்று வரை மதுரையின் மிகப்பெரிய நூலகமாகப் போற்றப்படுகிறது. பல அரிய நூல்கள் இங்கே உள்ளன. விக்டோரியா என்ற பெயரில் இருந்த இந்தத் திரையரங்கம் ரீகல் தியேட்டராக மாறிய பின் ஆங்கிலப் படங்களே சமீப காலம் வரை திரையிடப்பட்டன.

டென் கமாண்ட் மெண்ட்ஸ் மெக்னாஸ்கோல்டு, கோல்டன் ஐஸ் போன்ற புகழ்பெற்ற படங்கள் திரையிடப் பட்டன. யூல் பிரின்னர், சீன் கானரி, மார்லன் பிராண்டோ போன்றவரோடு மர்லின்மன்றோ, எலிசபெத் டெய்லர் போன்ற நடிகைகளும் மதுரைக்கு ரீகல் மூலமே அறிமுகமாகினர். பின்னர் இந்த இடத்தை ஆர்னால்டு, ஜாக்கிசான், ராக், புரூஸ்லி போன்றோர் பிடித்துக் கொண்டுள்ளனர். பகல் முழுவதும் நூலகமாகச் செயல்பட்டு மாலையும் இரவும் படம் காட்டும் தியேட்டர் ரீகல்தான்.

கல்லூரிப் பேராசிரியர்கள் மாணவர்கள் மட்டுமின்றிப் பாமரர்களும்கூடப்படம் பார்க்க வருவார்கள். துப்பாக்கி சுடும் காட்சியெல்லாம் மக்களுக்கு விநோதமாக இருந்தன. ஆங்கில உச்சரிப்பு பழக ரீகலுக்குப்போ என்று பள்ளி ஆசிரியர்களே மாணவர்களை ஆற்றுப்படுத்தி அனுப்பினர். படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது எஸ்சார், ஐ நோ மேம், வெரிகுட் என்று ஆங்கிலம் பேசுவார்கள். கதா நாயகன் போலவே தொப்பி வாங்கி அணிவார்கள். நடந்த படியே சகமாணவரிடம் பேசுவார்கள்.

இன்று ரீகல் தங்கரீகலாக மாறித் தமிழ்ப் படங் களால் நிரம்பி வழிகிறது. அருகிலேயே ரயில் நிலையம் இருப்பதால் திண்டுக்கல், விருதுநகர் களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள். பின் புறம் உள்ள எட்வர்டு மன்றத்தில் நூல் வெளியீடு, மகிழ்வோர் மன்ற விழாக்கள் நடை பெறுகின்றன.

மதுரைக்கு மேற்கே வெள்ளைக்கண்ணு, மிட்லண்ட், பழங்காநத்தம் ஜெகதா (விக்னேஷ்), பொன்னகரம் பரமேஸ்வரி (பின்னர் தங்கமாக மாறியது) இவைகளெல்லாம் எளிய நடுத்தர உழைக்கும் மக்களைக் குறி வைத்துத் தொடங்கப் பட்டவைகள். இன்று தொலைக்காட்சி, குறுந் தகடுகளின் வருகை, தியேட்டர்களின் கட்டண உயர்வுகள் இவைகளின் காரணமாக இன்று செயல்படாத அரங்குகளாகிவிட்டன.

இவைகள் தான் இப்படி என்றால் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசரடி ராம் விக்டோரியா தியேட்டரும் இந்த வகையில் சேர்ந்தது தான் ஆச்சரியம். மதுரையில் பல தியேட்டர்கள் செயல்படாததற்கு உரிமை யாளர் குடும்பங்களின் பொருளாதார நிலையும் ஒரு காரணம் என்று மக்களால் பேசப்படுகிறது.

இன்றும் மதுரையில் டூரிங் டாக்கீஸ் நிலையில் இருக்கும் நிலையூர் லெட்சுமி, திருப்பரங்குன்றம் மலையின் பின்புறம் உள்ளது. இது போலப் பல தியேட்டர்கள் இன்றும் விடாப்பிடியாகச் செயல் பட்டு வருவதை எண்ணினால் மகிழ்வாக இருக்கிறது.

மதுரை மணி நகரம் தேவி தியேட்டர் வரிசையில் செயல்பட்ட தீபா, ரூபா இரட்டை அரங்கங்களில் னு.கூ.ளு. தொழில்நுட்பம் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. சிவப்புச் சூரியன் என்ற விஜயகாந்த் படம் இங்கு தான் திரையிடப்பட்டது. பின்னர் ஆங்கிலப்படங்கள் ஓடின. இதே சாலையின் எதிர்ப்புற வீதியைத் தாண்டி இருக்கும் சக்தி சிவம், இரட்டைத் தியேட்டர்களில் சிவத்தில் மெர்க்கண்டைல் பாங்க் இயங்க சக்தியில் மட்டும் படம் ஓடுகிறது. மதுரையில் முதல் ஏ.சி. தியேட்டர் இது தான்.

மதுரை புறநகரில் கிருஷ்ணபுரம் விஜய லெட்சுமி தியேட்டர் ஒரே பொழுதுபோக்காக ரிசர்வ் லயன் காவலர்களுக்கும் பீபீகுளம், விசுவநாதபுரம் மக்களுக்கும் இன்று கோடவுன் ஆக மாறிவிட்டது. பழங்காநத்தத்தில் இயங்கிய முருகன் டாக்கீஸ் இப்போது ஜெய்ஹிந்த்புரம் பகுதிக்குப் போனாலும் முன்பு இருந்த ரோட்டுக்குப் பெயர் இன்றும் “பழைய முருகன் டாக்கீஸ் ரோடு” தான்.

ஆங்கிலப் படங்களைப் பார்ப்பதில் எந்த அளவிற்கு ஆர்வம் இருந்ததோ அதே அளவு ரசனை இந்திப் படங்களைப் பார்ப்பதிலும் மதுரைக்கு இருந்தது. கலையில் அரசியல் புகும் வரை இந்த ரசனை நீடித்து வந்தது.

ஆராதனா, ஜீக்ரிதோஸ்த், ஷோலே, ஹாத்தி மேரா சாத்தி படங்களின் மீதான ஆர்வம் தலை தூக்கி இருந்தது. ஜெமினி, சிவாஜி, என்று உச்சரித்த தமிழன் வாய் ராஜ்கபூர், ஷம்மிகபூர், அமிதாப் ராஜேஷ்கண்ணா, சத்ருகன்சின்கா என்று உச்சரிப் பதில் பெருமை கண்டது. தேவ் ஆனந்துக்கு பாலிவுட் எம்.ஜி.ஆர் என்று பட்டம் சூட்டியது போல ஜீனத் அம்மன், மும்தாஜ் போன்ற நடிகைகளுக்கும் மன்றம் அமைத்தனர்.

ரூப்புதேரா மஸ்தானா, ஷோலேங்கி என்றெல்லாம் பாடல்களை முனகினர். இந்திப் படங்களைத் தழுவிப் பல படங்கள் தமிழில் வெளி வருவது இன்றும் தொடர்கிறது.ஆனால் இந்திப்பட ஆர்வம் வரவரக் குறைந்து போக ஆரம்பித்ததற்கும் இந்தி சினிமாக்கள் திரையிடப்பட முடியாமல் போனதற்கும் திராவிட இயக்கங்களின் மொழி அரசியல் காரணமாக அமைந்தது. இந்திப் படம், இந்திச் செய்தி, இந்தி இலக்கியங்களை அனுமதித்தால் தமிழின் தனித் தன்மை கெட்டுப் போய்விடும் என்று தனித்தமிழ் ஆர்வலர்கள் அபாயச் சங்கு ஊதினர். சில தமிழ்க் கலைஞர்களும் இதை ஆதரித்தது தான் விசேஷம்.

அப்பாவி ரசிகன் இதையும் நம்பியது தான் ஆச்சரியம். இதனால் இந்தி இலக்கியங்கள் புறக் கணிக்கப்பட்டன. படங்கள் தடுக்கப்பட்டன.ஆனால் இந்திப் பட இடத்தை மலையாளப் படங்களும், தெலுங்குப் படங்களும் பிடித்துக் கொண்டன. செம்மீன், துலாபாரம் போன்ற தரமான மலையாளப் பட சினேகிதம் தமிழருக்கு ஏற்பட்டது. அர்த்தமுள்ள கதைகளும் ஆழமான நடிப்புக்களும் செறிவான காட்சி அமைப்புகளும் தமிழனின் ரசனைகளை மேம்படுத்தின.

தகழி, கே.எஸ். கோபாலகிருஷ்ணன், சத்யன், மம்முட்டி, திலீப், மோகன்லால் என்று நடிகர்களும் படைப் பாளிகளும் தமிழன் மனதில் இடம் பிடித்தனர்.ஆனால் இந்தி சினிமாவைத் தான் தமிழ் ரசிகர்கள் வெறுத்த நிலை இருந்ததே தவிர மும்பை இறக்குமதி நடிகைகளைப் புறக்கணிக்க வில்லை. குண்டு உடலும் மழலைத் தமிழும் பேசும் குஷ்பு, நமீதா போன்ற நடிகைகளும், சிம்ரன், மனிஷா கொய்ராலா, வங்க நடிகை சுபலெட்சுமி போன்றவர்களையும் இரு கை நீட்டி இயக்குநர்கள் வரவேற்றனர். கதாநாயகன் தமிழனாக இருந் தாலும் கதாநாயகி மட்டும் இந்திக்காரியாக இருக்க வேண்டுமென்று தமிழ்க் கலைஞர்கள் விரும்பு கின்றனர்.

இந்தி எதிர்ப்பை வைத்து ஆட்சியைப் பிடித்த திராவிட இயக்கங்களில் குஷ்பு போன்ற இந்தி நடிகைகள் முக்கிய இடம் பெற்றது வரலாற்று விநோதம். தி.மு.க. தொலைக்காட்சியில் குஜராத்தி நமீதா போன்றோர் நடனப் போட்டி நீதிபதிகள்.தமிழகத்தில் பழைய படங்களில் இன்னும் நினைவுகூரப்படுகின்ற ஸ்ரீதரின் கல்யாணப்பரிசு, எம்.ஜி.ஆரின் ஆனந்த ஜோதி, நத்தையில் முத்து, பாமா விஜயம் போன்ற படங்களால் புகழ் பெற்ற கல்பனாவின் இன்றைய பெயர் அண்ணாமலை, முக்கால்வாசி கே.ஆர். விஜயா, ஜெமினி படங்களே ஓடிய இந்த அரங்கில் இன்றும் புதிய படங்களே திரையிடப்படுகின்றன.

இத்தியேட்டரின் வடபுறம் ஓடும் வைகைக்கு அக்கரையில் உள்ள செல்லூர் கீழத்தோப்பு, சுய ராஜ்யபுரம் பகுதி மக்களின் பொழுதுபோக்கு இதுதான். ஏனெனில் வடகரையில் உள்ள இவர்கள் பிழைக்கவும், பொருட்கள் வாங்கவும் மதுரை நகருக்குள் நுழைய இத்தியேட்டர் தாண்டித்தான் செல்ல வேண்டும்.

இன்றும் புதிய படங்களைத் தாங்கி நடக்கும் (அண்ணாமலை) மதுரையின் கம்பீரத் தோற்றங் களில் ஒன்று.கீழவெளி வீதி சிந்தாமணி தியேட்டர் ஒரு படத்தின் லாப வசூலால் கட்டப்பட்டது. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற படம் இரு நூறு நாள் வரை ஓடியது. இப்பட வசூலில் தான் கட்டப்பட்டது.

உலகம் சுற்றும் வாலிபன் என்ற எம்.ஜி.ஆர். படம் வந்த போது எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டிருந்தார். “இதைக் கருணாநிதி வாழ்வின் இமாலயத் தவறு” என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்தப் படம் திரையிடப்படவிட மாட்டோம் என்று தி.மு.க.வினரும், திரையிட்டே தீருவோம் என்று எம்.ஜி.ஆர். ரசிகர்களும் எதிரெதிராக நின்றனர். பின் தி.மு.க.பின் வாங்கி நிற்கவே படம் ஓடியது.

தமிழ்த்திரையுலகில் வசனத்திற்கு என்றே ஒரு படம் வெற்றி பெற்றது என்றால் அது “தலை கொடுத்தான் தம்பி” என்ற படம் தான். ஈ.ஆர். சகாதேவன், கே.ஆர். ராமசாமி, ஓ.ஏ.கே. தேவர் என்ற நல்ல தமிழ் பேசும் நடிகர்கள் நடித்த இப் படத்தின் வசனங்கள் தமிழுக்குச் சிறப்பு சேர்க் கின்ற இயற்றமிழ்மொழியின் சிறப்புக்களாகும்.

சிவாஜியின் அறிவாளி, இங்கே பல நாள் ஓடியது. இத்தியேட்டரின் பின்புறம், மதுரை முனிச்சாலையில் அமைந்த மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான தினமணி தியேட்டர், வாழைப்பழக் காமெடியால் புகழ்பெற்ற கரகாட்டக்காரன் ஓடிய நடனா, நாட்டினா தியேட்டர்கள் எல்லாம் மறைந்ததால் நெசவாளர்களும் கூலித்தொழிலாளர் களும் நிறைந்த இப்பகுதியில் காலை உணர்வும் மறைந்துவிட்டது எனலாம். கைக்கும் வராமல் கழுத்துக்கும் எட்டாமல் காய்ந்து கிடக்கும் மன வறுமை படம் பார்த்தாலாவது தீருமா என்ற நம்பிக்கையில் விழுகிற இடிகள் தான் இவைகள்.

1964-இல் மதுரை மீனாட்சி தியேட்டரில் தாயாருடன் நல்லதங்காள் படம் பார்த்துக் கொண்டிருந்த போது படம் போட்ட சிறிது நேரத்திலேயே (மதியம் 3 மணி) பிரதமர் நேரு காலமானார், காட்சிகள் ரத்து என்று சிலைடு போடப்பட்டது போலவே,

1984 அக்டோபரில் தேனியில் காலைக்காட்சி யாக அல்லிநகரம் லெட்சுமி தியேட்டரில் எம்.ஜி.ஆர். படம் (குலேபகாவலி) பார்த்துக்கொண்டிருந்த போது 12 மணியளவில் அன்னை இந்திரா சுடப் பட்டார். வருந்துகிறோம் என்று சிலைடு போடப் பட்டது: குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள்.

மதுரையின் தென்பகுதி உழைக்கும் மக்களும் வசதியானவர்களும் கலந்த பகுதி. சதுரமான நான்கு வீதிகளையும் சுற்றி ஏறத்தாழ 50 தியேட்டர்கள் இருந்தன. இவற்றில் இன்று பதினைந்து தியேட்டர்கள் ஓடினாலே வியப்புத்தான். இந்த தியேட்டர்கள் மதுரைக்குப் புகழையும் வருமானம் பெருக வழி களையும் கூறிக் கொண்டிருந்தன. ஒரு இடத்தில் தியேட்டர் இருந்தால் சுற்றிலும் ஒரு கி.மீ. வரை வணிகர்களால் நிரம்பியது.

வடகரையில் விளாங்குடி பாண்டியன், நெச வாளர் நிறைந்த செல்லூரின் பொழுதுபோக்கான போத்திராஜா, வெங்கடாசலபதி, வில்லாபுரம் கதிர்வேல் போன்றவைகள் மனிதனின் மறுவாசஸ்தல மாகவே விளங்கின. மக்களின் வாழ்க்கையோடு வலைப்பின்னல் உறவுகளைக் கொண்டவை. சின்ன சொக்கிகுளம் ஜெயராஜ் இன்று ஸ்டார் ஓட்டலாகி விட்டது. அண்ணாநகரின் சுகப்பிரியா, மினிப் பிரியா, சினிப்பிரியா மூன்றும் ஒரே இடத்தில் உள்ளவைகள்.

தியேட்டரில் படம் பார்க்கச் செல்வதைக் கூட ஏதோ திருவிழாவிற்குச் செல்வதைப் போல எண்ணிப் பூ வைத்து, புதுச்சேலை கட்டிப் புறப்பட்டுப் போன அடித்தட்டு மக்களின் இதய நாளங்களோடு இணைந் தவைகள். நாயகியோடு அழுது நாயகனோடு சிரித்து ஒலிக்கும் பாட்டில் உருகி, பேசும் வசனங்களைத் தனக்குக் கூறும் அறிவுரைகளாகக் குடும்பக் கவலை மறக்க எண்ணிப்பொழுது போக்கினரே! அந்த அந்தரங்கமான சுகங்கள் தான் இன்று தரைமட்ட மாகிக்கிடக்கின்றன.

இடிந்து கிடப்பவை தியேட்டர்கள் மட்டு மல்ல, மனித வாழ்வின் மகத்துவம் கூறிய ஞான பீடங்கள். கலாச்சாரத்தோடும் வாழ்வு முறை களோடும் பின்னிப் பிணைந்த தியேட்டர்கள் மட்டும் காணாமல் போகவில்லை.முகம் தெரியாமல் உட்கார்ந்து, இடைவேளை வெளிச்சத்தில் பார்த்துப் பழகிப் புன்னகைத்துப் பேசிப் பழகிய தியேட்டர் சினேகிதங்கள், காதல்கள், மெல்லிய இருட்டில் சிணுங்கலோடு உரசி கிசு கிசுத்த காதல் மொழிகள், எங்கோ நடந்ததைப் படமாக்கி நமக்கு பன்னாட்டு வாழ்வையும் படம் போட்டுக் காட்டிய சினிமாக்கள். முதல் முதலாகச் சேர்ந்து படம் பார்த்து, பின் அதை வாழ்வெல்லாம் அசை போட்ட புதிய மணமக்களின் முதல் சந்தோஷங்கள்.

கல்யாணமென்றாலும் திருவிழா என்றாலும் கூட்டமாகச் சென்று ஒன்றாக அமர்ந்து தின்பண்டங் களைத் தின்றபடி படம் பார்த்த கூட்டு மகிழ்வுகள், தியேட்டர்களில் விற்கப்படும் முட்டை போண்டாக் களுக்காகவும் சிலர் வருவதுண்டு.

இவைகள் மட்டுமல்ல படம் ஓட்டும் ஆபரேட்டர், கூம்பு வண்டியைத் தள்ளி வீதி வீதி யாக பெட்ரோமாக்ஸ் விளக்குகளோடு மக்களுக்கு விளம்பரம் செய்பவர், தின்பண்டக்கடை வைத் திருப்பவர், தோரணம் கட்டுகிறவர், டிக்கெட் கொடுப்பவர், கிழிப்பவர், கூட்டுபவர், வாசலில் பூக்கடை வைத்து விற்றவர்கள், ஐந்து ரூபாய் டிக்கெட், பத்து ரூபாய், இருபது ரூபாய் டிக்கெட், ஐம்பது ரூபாய் என்று கள்ள டிக்கெட்டுகளை காதருகே வந்து ராகத்தோடு விற்றவர், இரவு ஆட்டம் பார்த்து விட்டு வருபவரை டிக்கெட் இல்லாவிட்டால் சந்தேகக் கேஸ் போடும் போலீஸ் காரர்கள், தனியாக வரும் ரசிகர்களை மோகினி போலச் சிரித்து அழைக்கும் அந்த மாதிரி பெண்கள், அரசுக்கு வரியாகப் போன கோடிக்கணக்கான கேளிக்கை வரி வருமானம்.

இந்தச் சந்தோஷங்கள், வருமானங்கள் இவர் களின் பிழைப்புகளெல்லாம் இன்று காணாமல் போன அவலத்திற்கு எது காரணமாக இருக்க முடியும்? இவர்களெல்லாம் இன்று என்ன செய் கிறார்கள்?

திரையுலகில் தியேட்டர்கள் இடிக்கப்படு வதற்கும் சமூகத்தின் கலை மையங்கள் அழிக்கப் படுவதற்கும் திரைப்பட உலகின் மாறுதலும் உலகமயமாக்கலின் விளைவும் தான் என்றும் சமூகவியலாளர் கூறுகின்றனர். ஆனால் அது மட்டும் காரணமில்லையே என்பாரும் உள்ளனர்.

நடிப்பவர்களுக்குக் கோடிக்கணக்கில் சம்பளம், உள்ளூர் வயல்வெளியில் வசதி இருந்தும் வெளி நாட்டு வயல்களில் படம் பிடிக்கும் பிரம்மாண்ட தயாரிப்பாளர்கள், இந்தத் தயாரிப்புச் செலவை தியேட்டார்கள் திரையிடும் படத்தின் மேல் சுமத்த டிக்கெட் விலை உயர்வு, இதனால் நூறு ரூபாய் கொடுத்துப் படம் பார்க்க வசதியில்லாமல் பத்து ரூபாய் சி.டி.யில் வீட்டில் வைத்துப் பத்துப் பேர் பார்க்கின்றனர்.

அர்த்தமில்லாத தலைப்புகள், கதையில் வறட்சி, காட்சிகளில் அரைத்த மாவையே அரைக்கின்ற கற்பனை வறட்சி, மதிக்க வேண்டிய பெண்ணை விரட்டி விரட்டிக் காதலிக்க மிரட்டும் வக்கிரமான நாயகர்கள், மார்புகள், இடுப்புகள், தொடைகளில் பம்பரம் விடும் விரசக்காட்சிகள், மரபுகளைக் கேலி செய்கிற விவேகமற்ற நகைச்சுவைகள்.கூடி அமர்ந்து குடும்பத்தோடு சேர்ந்து படம் பார்க்க மனம் கூசுகிற, ஓடிப்போகத் தூண்டும் காட்சிகள். இவைகளை எல்லாம் பார்க்க மனம் இல்லாமல் புறக்கணிக்கும் நல்ல ரசிகர்கள், தமிழ்ப்படங்களில் தான் இந்த நிலை.

டப்பிங் பேசும் கதாநாயகிகள், புரியாத வசனங்கள், பொதுவிலும் அறைக்குள்ளும் கூட கேட்கக்காது கூசும் நாயகன் நாயகியரின் காம முனகல்கள், பாட்டு வரிகள், வார்த்தைகளில் தெளிவின்றி வாத்தியங்களின் இரைச்சல்களை வெளிப்படுத்தும் பாடல்கள், ஒரு காலத்தில் ஆரோக்கியமாகப் பேசப்பட்ட திரையுலகம் இன்று எங்கே போகிறது? என்று சினிமா உலகிற்கே புரியவில்லை என்பது சரியில்லை. இது புரிந்தே சூட்டிக்கொள்ளும் ஒப்பனை முகமூடிகள்.

ஆழமான காரணங்கள் நிறைய இருந்தாலும் அதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு சின்னத் திரையும் திருட்டு வி.சி.டி.யும் தான் காரணம் என்பதெல்லாம் ஊரை ஏய்க்கும் பம்மாத்து வேஷங்கள்.

சினிமா தியேட்டர்கள் இடிக்கப்படுவது என்பது இன்று சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அது ஒரு காலத்தில் மனித வாழ்வையே மாற்றிப்போடும். அப்போது அதன் விளைவு சமூகத்தில் புதிய தாக்கத்தையும் ஏற்படுத்தும்

Pin It