tamil art 450பண்டைக் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையானது, முழுக்க இயற்கையுடன் சார்ந் திருந்தது. இயற்கையின் பேராற்றலுடன் போராடி வாழ வேண்டிய நெருக்கடிக்குள்ளான சூழலில், மர்மம் நிறைந்த எதையும் நம்பிக்கைகள் மூலம் அறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஏதோவொரு நம்பிக்கையின் அடிப்படையில் மனித மனம் காரணங்களுக்கு அப்பாற் பட்ட நிலையில் புனைந்திட்ட கற்பிதங்கள், காலப் போக்கில் வலுவடைந்தன.

இயற்கையின் பேரழிவுகள், காட்டு விலங்குகளின் தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில், அவற்றுக்கான காரணங்களைத் தேடிய நிலையில், கண்டறியப்பட்ட முடிவுகள் நம்பிக்கையை ஏற்படுத்தின. எல்லா நம்பிக்கைகளும், காலப்போக்கில் பழக்கவழக்கம் என நிலைபெற்று, பின்னர் மரபாகி நிலைபெறுகின்றன. அவை, பின்னர் சடங்குகளாக வடிவெடுத்துச் சமூக அமைப்பில் முக்கிய இடம் பெறுகின்றன.

நம்பிக்கைகள் ஒருவகையில் கருத்து வடிவமாகவும், சடங்குகள் ஒருவகையில் செயல் வடிவ மாகவும் விளங்குகின்றன. மனிதனின் நம்பிக்கையானது செயல் வடிவம் பெறுகையில், அது நிகழ்த்தப்படும் சடங்காக மாறுகின்றது. தலைமுறைகள் தோறும் செய்யப்படும் சடங்குகள் ஒருவிதமான அமானுட ஆற்றலை அடைகின்றன. அதியற்புத ஆற்றல் பற்றிய புரிதலுடன் விரியும் சடங்குகள் மந்திரத்தன்மை மிக்கன வாகக் கருதப்படுகின்றன.

இந்நிலையில் சடங்கினை நிகழ்த்துவோர் நிகழ்த்தும் செயல்பாடுகள், சொல்லும் சொற்கள் வேறு ஒன்றாக உருமாறி மந்திரமாக வடிவெடுக்கின்றன. நம்பிக்கை, பழக்கவழக்கம், மரபு, மந்திரம் என அடுத்தடுத்த நிலைகளில் சடங்குகள் ஒரு நிலையில் சமயமாக மாறுகின்றன. பெரும்பாலான சடங்குகள், பெரிதும் இயற்கையிறந்த பேராற்றலின்

மீது வினையாற்றுவதான நம்பிக்கையை மனிதனுக்கு ஏற்படுத்துகின்றன. பூமியில் மனித இருப்பு என்பது பிறப்பு முதல் இறப்பு வரை சடங்குகளின் பின்புலத்தில் நிகழ்கின்றது. சடங்குகளின் வழியே மனிதர்கள் தன்னை அறிவதுடன் இயற்கையையும் விளங்கிக்கொள்ள முயலுகின்றனர். முன்னோர்கள் பின்பற்றிய சடங்குகளை அப்படியே பின்பற்றப்படுவது நடைமுறையில் பொது வழக்காக உள்ளது. இயற்கையை தன்வயப்படுத்தி நிலத்தில் விளைச்சலைப் பெருக்கிடவும், வேட்டையில் விலங்குகள் கிடைத்திடவும் மனிதர்கள் சடங்குகளைச் செய்தது, ஒருவகையில் சூழலைப் புரிந்துகொள்ள முயன்றதன் விளைவுதான். இந்நிலையில் போலச் செய்தல் சடங்கு உருவானது எனச் சமூகவியலாளர் ஜார்ஜ் தாம்சன் குறிப்பிடுவது ஒப்புநோக்கத்தக்கது. மனிதர்கள் சடங்குகளின் மூலம் சூழலை ஆதிக்கம் செய்து, அதனைத் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயலுவது காலந்தோறும் தொடர் கின்றது.

சங்ககாலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை ஏற்றத் தாழ்வானது. இனக்குழுக்களாக வாழ்ந்து வந்தவர்கள் ஒருபுறம் எனில், வேந்தர்களின் அரசியல் அதிகாரம் இன்னொருபுறம் வலுவாக இருந்தது. புறத்தில் நிலத்தை வெல்வது வீரம் எனப் போற்றப்பட்ட சூழலில், தமிழ் மொழி அடையாளத்துடன் தமிழக நிலப்பரப்பு விரிந்தது. தகவல் தொடர்பு, போக்குவரத்து பெரிதும் அற்ற சூழலில் சங்கப் புலவர்கள் பாடல்களின்

வழியே பரந்துபட்ட தமிழ் நிலத்தினைத் தமிழர் நினைவினுக்குள் தகவமைக்க முயன்றனர். இதனால் பல்வேறுபட்ட குழுக்களாக வாழ்ந்து வந்த தமிழர் களிடையே தொடர்பு ஏற்பட்டதுடன், பண்பாட்டுப் பரிமாற்றங்களும் நிகழ்ந்தன. தொன்றுதொட்டுப் பின்பற்றி வந்த பழக்கவழக்கங்கள், சடங்குகள் போன்றன புலவர்களால் கவனம் பெற்றன. அவை சங்கப் பாடல் களிலும் இடம் பெற்றுள்ளன.

கிரேக்க, சம்ஸ்கிருத, ரோமானிய பழங்காப்பியங்கள் முழுக்கப் புராணங்களுக்கு முக்கியத்துவம் தந்து, தெய்வம் பற்றிய அதீதக் கற்பனைகளுக்கு முக்கியத்துவம் தந்த நிலையில், சங்க இலக்கியம், சமயம் சாராமல் தனித்து விளங்குகின்றது. இனக்குழுவினருக்கெனத் தனித்த அடையாளத்துடன் பின்பற்றப்பட்ட நாட்டார் சமயம் வழக்கினில் இருப்பினும், வைதிக, அவைதிக சமயங்களின் தாக்கம் ஓரளவிற்குத் தமிழ் நிலப்பரப்பினில் நிலவியது. சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவான சடங்குகள், மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தன.

சங்கப் பாடல்களில் பழந்தமிழரின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. அவை ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்நிலையை அறிந்துகொள்ள உதவுகின்றன. கருத்து நிலையில் தனித்த போக்கினைக் கொண்ட பத்து நெடுங்கவிதைகளின் தொகுப்பான பத்துப்பாட்டில் பதிவாகியுள்ள சடங்குகள், ஒப்பீட்டளவில் தனித்துவமானவை.

புராதன சமூகங்களில் பெண்கள் பெரிதும் மந்திர ஆற்றலுடையவர்களாகக் கருதப்பட்டனர். இன வளர்ச்சிக்கு ஆதாரமான மறு உற்பத்தியில் ஈடுபடும் வல்லமையுடைய பெண், தனித்துச் சுயமாக இயங்கு வதுடன், தான் சார்ந்திருக்கும் சமூகத்தினை வழி நடத்தும் திறன் பெற்றிருந்தாள். தாய் வழிச் சமூகம் சிதை வடைந்து, ஆணின் அதிகாரம் வலுவடைந்த சங்க காலத்திலும், பெண் சமயரீதியில் முக்கியமானவளாகக் கருதப்பட்டாள். குறவர் இனத்தைச் சார்ந்த பெண், குறிஞ்சி நிலக் கடவுளான முருகனை ஆற்றுப்படுத்தும் வகையில் வெறியாடலை நிகழ்த்துகின்றாள்.

மாண்தலைக் கொடியடு மண்ணி அமைவர

நெய்யோடு ஐயவி அப்பி அது உரைத்து

குடந்தம் பட்டு, கொழுமலர்ச் சிதறி

முரண்கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ

செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி

மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்

குருதியடு விரைஇய தூவெள் அரிசி

சிபலிச் செய்து பல்பிரப்பு இரீஇ

சிறுபசு மஞ்சளடு நறுவிரை தெளித்து

பெருந்தண் கண்வீர நறுந்தண் மாலை

துணைஅற அறுத்துத் தூங்க நாற்றி

நளிமலைச் சிலம்பில் நல்நகர் வாழ்த்தி

நறும்புகை எடுத்து குறிஞ்சி பாடி

இமிழிசை அருவியடு இன் இயம் கறங்க

உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்

குருதிச் செந்தினப் பரப்பி குறமகள்

முருகுஇயம் நிறுத்து முரணினர் உட்க

முருகுஆற்றுப் படுத்த உருகெழு வியல்நகர்

(திருமுருகாற்றுப்படை: 233-250)

தெய்வமுற்ற குறவர் இனப்பெண், கோழிக் கொடியோடு பொருந்துமாறு அமைத்து, நெய்யையும் வெண் சிறு கடுகையும் அப்பி, வழிபாட்டு மந்திரத்தை மறைவாக ஓதி, மலர்களைத் தூவி, குனிந்து கைகூப்பி வணங்கினாள். அவள் இரு வேறுபட்ட வண்ணங் களுடைய ஆடைகளை அணிந்து, சிவப்பு நூலினைக் கையில் காப்பாகக் கட்டி, வெண் பொரியைத் தூவி, வலிமையான கொழுத்த கிடாயின் குருதியுடன்

பிசைந்த வெண்மையான அரிசியைச் சிறு பலியாகப் பலிபீடத்தில் இட்டு, மஞ்சளுடன் சந்தனத்தைத் தெளித்து, செவ்வலரி மலர் மாலையைப் பந்தலில் தொங்கவிட்டு, ‘பசியும் பிணியும் பகையும் நீங்குக’ என்று வாழ்த்தினாள். குறிஞ்சிப் பண்ணைப் பாடி, இசைக் கருவிகள் முழங்க சிவந்த மலர்களைத் தூவி, காண்பவர் அஞ்சுமாறு, குருதி கலந்த சிவப்பு திணை அரிசியைப் பரப்பி வைத்து இறைவன் இவன் என வழிப்படுத்திய குறப்பெண்ணின் வெறியாடல் நுணுக்கமாக விவரிக்கப் பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படையில் இடம் பெற்றுள்ள இறை வழிபாட்டுச் சடங்கில் பெண்ணின் நிலை பற்றிய நக்கீரரின் விவரிப்பு சமயரீதியில் முக்கியமானதாகும். செவ்வேள் எனப்படும் முருகனுக்கு வெறியாடல் நிகழ்த்தும் மகளிர் (பட்டினப் பாலை:154-155), வல்லோன் தைஇய வெறிக்களம் (மதுரைக் காஞ்சி: 284) மகளிர் ஒருவருடன் ஒருவர் தழுவிக் கைகோத்து, மன்றுகள் தோறும் குரவைக்கூத்து ஆடினர் (மதுரைக் காஞ்சி:613-615) முருகனை வழிபடுதலில் குரவைக்கூத்து முக்கியமான சடங்காக குறிஞ்சி நிலத்து மக்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. மகளிர் இறை வழிபாட்டின் பகுதியாகக் குரவைக்கூத்து, வெறியாட்டுச் சடங்குகளை நிகழ்த்தியுள்ளனர் என அறிய முடிகின்றது. பெண்ணை விலக்காகக் கருதி ஒதுக்கும் போக்கு இல்லாத சூழலை முருகனின் வழிபாட்டு மூலம் அறிய முடிகின்றது.

மாலைவேளையான அந்திப்பொழுதில் தெய் வத்தை வணங்கும் பெண்கள் பற்றி நெடுநல்வாடை சித்திரித்துள்ளது.

மடவரல் மகளிர் பிடகைப் பெய்த

செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து

அவ் இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து

இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ

நெல்லும் மலரும் தூஉய் கை தொழுது

மல்லல் ஆவணம் மாலை அயர

(நெடுநல் வாடை:39-44)

பெண்கள் பசுமையான காம்புகளைக் கொண்ட செம்முல்லையின் அரும்புகளை, அழகிய பூந்தட்டுகளில் வைத்திருப்பர்; அவை மலர்ந்து மணம் வீசுவதனால், மாலை வேளை வந்துவிட்டது என அறிந்த பெண்கள் இரும்பு விளக்கில், நெய் தோய்ந்த திரியைக் கொளுத்துவர். நெல்லையும் மலரையும் தூவிக் கை

கூப்பி இல்லுறை தெய்வத்தை வழிபட்டனர். அந்திப் பொழுதில் விளக்கினை ஏற்றி, இறைவனை வழிபடும் சடங்கு இன்றளவும் தமிழகத்தில் நிலவி வருகின்றது. இரவு வேளையில் அணங்குகளும் காட்டு விலங்குகளும் உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தின் காரணமாக, விளக்கேற்றுவதனைச் சடங்காக மாற்றி யுள்ளனர். அந்தி வேளையில் ஒளியை வணங்குவதன் மூலம் இரவு குறித்த பயத்தினைக் கடக்க முயன்று உள்ளனர்.

பட்டினப்பாலை நூலில் பட்டினத்திலுள்ள அங்காடித் தெரு பற்றிய சித்திரிப்பு இறை நம்பிக்கை யுடன் தொடர்புடையதாக உள்ளது.

மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய

மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும்

வருபுனல் தந்த வெண் மணற் கான்யாற்று

உருகெழு கௌம்பின் ஒண்பூப் போல

கூழுடைக் கொழு மஞ்சிகை

தாழுடைத் தண் பணியத்து

வால் அரிசிப் பலி சிதறி

(பட்டினப் பாலை:159-165)

குற்றமற்ற இல்லுறை தெய்வத்தை மகிழச் செய்திட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வீட்டு வாயிலில் பலரும் வணங்கும் கொடிகள் கட்டப்பட்டன. நெல், அரிசி போன்றவையும் குளிர்ந்த பொருட்களும் வைக்கப்பட்டுள்ள கலங்கள் உள்ள இடத்தில், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைத்து, சந்தனக் குழம்பைப் பூசி மெழுகிய இடத்தில், வெண்மையான அரிசி பலியாகத் தூவப் பெற்றுள்ளது. தெய்வத்தினை வழிபட வெள்ளிய அரிசியைப் பலியாகத் தூவும் சடங்கு பற்றிய விவரணை, அன்றைய காலகட்டத்தில் நிலவிய நம்பிக்கையைப் பதிவாக்கியுள்ளது.

மலையில் எழும் பல்வகை ஒலிகளைப் பற்றிய குறிப்புகள் மலைபடுகடாம் நூலில் இடம் பெற்றுள்ளன. சங்க காலத்தில் குறிஞ்சி நில மக்களால் விருப்பத்துடன் ஆடப்பெற்ற குரவைக்கூத்து ஆடும் போது உண்டாகும் ஒலி பற்றிய விவரிப்பு பின்வருமாறு:

நறவு நாட் செய்த குறவர் தம் பெண்டிரொடு

மான் தோற் சிறுபறை கறங்க

வான் தோய் மீமிசை அயரும் குரவை

(மலைபடு கடாம்:320-322)

மான் தோலினால் செய்யப்பட்ட சிறிய பறையைக் கல் என ஓசை உண்டாகுமாறு ஒலித்துக்கொண்டு கள் குடித்த குறவர், தம் இனத்துப் பெண்களுடன் ஆடுகின்ற குரவைக்கூத்தின்போது ஆரவாரம் எழுகின்றது. இறை நம்பிக்கையுடன் தொடர்புடைய குரவைக்கூத்து ஒரு வகையில் சடங்காக நடத்தப் பெற்றிருக்க வேண்டும்.

மருத நில மக்களின் இயல்பினை விவரிக்கும் பொருநராற்றுப்படை நூலில் பலி சோறிடும் சடங்கு இடம் பெற்றுள்ளது.

கூடு கெழீஇய குடிவயினான்

செஞ்சோற்ற பலி மாந்திய

கருங்காக்கை கவவு முனையின்

மனைநொச்சி நிழல் ஆங்கண்

ஈற்றுய்மைதன் பார்ப்பு ஓம்பும்

(பொருநராற்றுப்படை:182-186)

மருத நிலத்தில் வாழ்கின்றவர்கள் குருதி கலந்த சோற்றினைக் காக்கைகளுக்குப் பலியாகத் தின்னு வதற்குத் தருகின்றனர் என்ற தகவல் மானிடவியல் நோக்கில் முக்கியமானது. மனிதன் தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துயரங்களை எதிர்கொள்ள சமயம் சார்ந்த சடங்குகளை மேற்கொள்வது உலகமெங்கும் வழக்கினில் உள்ளது. இத்தகைய சடங்குகள் இயற்கை யிறந்த ஆற்றலுடன் மனிதர்களுக்குப் பிணைப்பினை ஏற்படுத்துகின்றன. காக்கைகளுக்குப் பலிச்சோறு தருவதில் தொன்மையான நம்பிக்கை அடங்கியுள்ளது. இறந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வருவர் என்ற நம்பிக்கை இன்றளவும் தமிழரிடம் நிலவுகின்றது, இறந்த முன்னோர்கள் ஆவியாக மாறிய பின்னரும், அவர்களது வாரிசுகளுக்கு வழி காட்டுவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவான முன்னோர் வழிபாட்டின் விளைவாகக் காக்கைக்குப் பலிச்சோறு சடங்கு உருவாகியுள்ளது.

நெய்தல் நிலத்தில் வாழும் பரதவர்கள் பற்றிய காட்சியினைப் பட்டினப்பாலை நுட்பமாக விவரிக் கின்றது.

சினைச் சுறாவின் கோடு நட்டு

மனைச் சேர்த்திய வல் அணங்கினான்

மடல் தாழை மலர் மலைந்தும்

புன்தலை இரும் பரதவர்

(பட்டினப் பாலை:87-90)

பரதவர், சினைகளையுடைய சுறா மீன் கொம்பை நட்டு, அதில் வல்லமையான தெய்வத்தை நிறுத்தி வழிபடுகின்றனர். வருணன் என்ற கடல் தெய்வத்தை சுறா மீனின் கொம்பில் ஏற்றி வழிபடுதல் சடங்காக நிகழ்கின்றது. கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது, எவ்விதமான இடையூறும் சுறா மீன்களால் ஏற்படாமல் அத்தெய்வம் காக்கும் என்ற நம்பிக்கை பரதவர்களிடம் உள்ளது. கடலில் வலிமையான சுறா மீனின் கொம்பினை வழிபடுவதன்மூலம், அந்தச் சுறா மீனின் வலிமை தங்களுக்குக் கிடைக்கும் எனவும் மீனவர்கள் கருதியிருக்க இடமுண்டு.

நீராடுதல் என்பது புனிதம் சார்ந்த நிலையில் சடங்காகப் பத்துப்பாட்டில் இடம் பெற்றுள்ளது.

மழைகொளக் குறையாது புனல் புக மிகாது

கரைபொருது இரங்கும் முந்நீர் போல

கொளக் கொளக் குறையாது தரத்தர மிகாது

கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி

(மதுரைக்காஞ்சி: 424-427)

ஏழாம் நாள் அந்தியில், தீவினையைக் கழுவுதற்குக் காரணமான புனித நீர் என்ற விவரிப்பானது, தண்ணீரில் குறிப்பிட்ட நாளில் நீராடினால் பாவம் தொலையும் என்பதைக் குறிப்பிடுகின்றது. சங்க காலத்திலே நீர் நிலையானது புனிதமானது என்ற நம்பிக்கை உருவாகி யுள்ளது. மேலும் அந்த நீரில் நீராடினால் தீ வினைகள் அகலும் என்ற நிலையில் அது சடங்காக மாற்றம் பெற்றுள்ளது.

பட்டினப் பாலையில் கடல் நீராடுதல் பற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது.

தேறுநீர்ப் புணரியோடு யாறுதலை மணக்கும்

மலி ஓதத்து ஒலி கூடல்

தீது நீங்க கடல் ஆடியும்

(பட்டினப் பாலை:97-99)

காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் நீராடினால், தீவினைகள் நீங்கும் என்பது ஒருவகையில் சடங்காக நிகழ்த்தப்பட்டுள்ளது. இயற்கையை வழிபட்ட சங்கத் தமிழர்களின் வாழ்க்கையில் நீர் நிலைகள் புனிதமானவையாகக் கருதப்பட்டுள்ளன. இயற்கையிறந்த பேராற்றல் எல்லா இயற்கைப் பொருட் களிலும் உறைந்துள்ளது என்ற புராதன சமய நம்பிக் கையின் தொடர்ச்சியானது இன்று வரை தொடர் கின்றது.

தெய்வம் என்பது இயற்கையில் உறைந்துள்ளது என்ற நம்பிக்கை கொண்ட சங்கத் தமிழர் காட்டினையே வழிபட்டனர். மரங்கள் அடர்ந்த காட்டு வழியில் செல்ல நேரிடும்போது, இன்னல் ஏற்படாதவாறு வழிபாட்டுச் சடங்கினைச் செய்துள்ளனர். காடுறை தெய்வத்திற்குச் செய்த சடங்கு பற்றி பொருநராற்றுப் படை விளக்கியுள்ளது.

பாடின பாணிக்கு ஏற்ப நாள்தோறும்

களிறு வழங்கு அதர்க்கானத்து அல்கி

இலைஇல் மராஅத்த எவ்வம் தாங்கி

வலைவலந் தன்ன மென்நிழல் மருங்கின்

காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றை

(பொருநராற்றுப்படை:48-52)

காட்டு வழியாகச் செல்கின்றவர்கள், காட்டினில் உறைந்துள்ள கடவுளுக்குப் பலி தந்து, அவை மனம் மகிழ்கின்றவாறு பாடிச் சடங்குகள் செய்கின்றனர். அச்சம் தரும் வகையில் பரந்து விரிந்துள்ள அத்துவானக் காட்டினில், திடீரென எதுவும் நிகழச் சாத்தியமுண்டு என்ற எண்ணம் சடங்கு தோன்றுவதற்கான பின்புல மாகும்.

இனக்குழுவினர் நலனுக்காகப் போராடிய போது, தனது உயிரைத் தந்த வீரனின் நினைவாக நடப்படும் நடுகல்லை வழிபடுதல் முன்னோர் வழிபாட்டுடன் தொடர்புடையதாகும். புரவலரை நாடிச் செல்லும் வழியில் எதிர்ப்படும் நடுகல் பற்றிய குறிப்பு மலைபடு கடாமில் இடம் பெற்றுள்ளது.

ஒன்னார்த் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென

நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்

செல்லா இல் இசைப் பெயரொடு நட்ட

கல் ஏக கவலை எண்ணு மிகப்பலவே

இன்புறு முரற்கை நும்பாட்டு விருப்பாக

தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துணைமின்

(மலை படு கடாம்:386-391)

பகைவருடன் போரிட்டுத் தனது உயிரைப் போக்கிக் கொண்ட வீர மறவனின் பெயரை எழுதி நடப்பட்ட நடுகல்லைக் கடந்து செல்லும்போது, அந்த நடுகல்லில் தெய்வமாக உறைந்துள்ளவனுக்கு விருப்பமாகும் வகையில், உனது யாழினை இசைத்தவாறு விரைந்து செல்வீராக எனப் பொருநன் ஆற்றுப்படுத்தப்படுகின்றான். நடுகல் என்பது வீரத்தின் அடையாளம் என்ற நிலையில், அதனை மதித்து நடந்து செல்வது ஒரு வகையில் சடங்காக மாறியுள்ளது.

திணை சார்ந்த இயற்கையோடு இயைந்திருந்த சங்க காலத் தமிழர்கள் தங்களுடைய நம்பிக்கைகள், பழக்க வழக்கம் சார்ந்த நிலையில், மரபான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அவர்கள் இயற்கையை விளங்கிட முயன்ற நிலையில், அதியற்புத புனைவுகளுக்கோ, கடவுளர் சார்ந்த புராணக் கட்டுக்கதைகளுக்கோ பெரிய அளவில் முக்கியத்துவம் தரவில்லை. எனினும் மரபு வழிப்பட்ட சடங்குகளைச் செய்தனர். இறை நம்பிக்கை சார்ந்த நிலையில் நிகழ்த்தப்பட்ட சடங்குகள், நீண்ட கவிதை ஆக்கமான பத்துப்பாட்டில் குறைந்த அளவில் இடம் பெற்றுள்ளன. அவற்றைத் தொகுத்து ஆராய்ந்தால், அவை பெரிதும் இயற்கை சார்ந்தவையாக இருப்பதனை அவதானிக்க முடியும்.

உதவிய நூல்கள்

1. மோகன்.இரா.,(உ-ஆ). பத்துப்பாட்டு: முதல் பகுதி. சென்னை: என்.சி.பி.எச், 2011.

2. நாகராசன்,வி.,(உ-ஆ). பத்துப்பாட்டு:இரண்டாம் பகுதி. சென்னை: என்.சி.பி.எச், 2011.

Pin It