kavya ramayanam 350“வால்மீகி முனிவர் ராமாயணம் இயற்றியது முதல் இன்றுவரை ராமன் கதையைப் பலர் சொல்லி யிருக்கின்றனர்; பல நூல்களும் வெளிவந்துள்ளன. பலமுறை கேட்டுக் கேட்டு நம் எல்லோருக்கும் கதை தெரியும்.

“நாளடைவில் ராமாயணம் ஒரு புனித நூல் ஆகிவிட்டது. எனினும் மக்கள் மனதில் ராமாயணம் வேரூன்றி நிற்பதற்குக் காரணம் அது தரும் இலக்கிய இன்பமே. கதையும் மனித இயல்பை ஒட்டியே அமைந்திருக்கிறது. ராமன் கதை ‘அம்ருத ஸாகரம்’ எனத் திகழ்வதும் இதனாலேதான்.

“சொல் நயம், ஆழ்ந்த கருத்து, அழகிய நடை எல்லாம் சேர்ந்து பழங்கதையை அழியா இலக்கியமாக ஆக்கிவிட்டன. அந்தக் காவியத்தை ரசிப்பதே இப்புத்தகத்தின் நோக்கம் என்பது காவ்ய ராமாயணம் என்ற தலைப்பில் தெரியும்.”

காவ்ய ராமாயணத்தின் ஆசிரியர் கே.எஸ். ஸ்ரீனிவாசன் நூலின் முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்.

கம்பர்கூட தமக்கு முன் இராமாயணம் இயற்றிய பல கவிஞர்களது மேன்மையான கவிதையின் மாட்சியை விளக்கவே தாமும் ராமாயணம் இயற்றியதாகக் கூறுகிறார்.

பொய்மையில் கேள்விப் புலமையினோர் புகல்

தெய்வமாக்கவி மாட்சி தெரிக்கவே

பக்தியும், வைணவப் பற்றையும், விட ராமனது வீரம் பற்றிய கதையின் மீது கொண்ட ஆசையாலேயே கம்பன் தமது காவியத்தை இயற்றியதாகச் சொன்னாலும் சமயக்காழ்ப்புடையவர்களும், தமிழ்நாட்டு அரை வேக்காட்டு நாத்திகர்களும், உலகக் காவியங்களின் பண்புகளை அறியாதவர்களும், கம்பனைக் கவிதைக்குச் சம்பந்தமில்லாத அளவுகோல்களால் அளந்து கம்பனைத் தூற்றுகிறார்கள். இராமாயணத்தை வரலாறு என்று எண்ணிக்கொண்டு அதை வக்கிரமாகக் கண்டு கதையின் தலைவனை ஆரிய வஞ்சகனாகவும், அக்கதையின் ஓர் கதாபாத்திரமான இராவணனை, தமிழ் வீரனாகவும் அல்லது திராவிட வீரனாகவும் கண்டு, இன்றைய அரசியல் காழ்ப்புகளுக்குப் பயன்படுத்தவும், இந்த ஆரிய வஞ்சகனைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய கம்பனை ஆரிய அடிவருடியெனவும், காமரசத்தைக் காவ்ய ரசமாக்கியவன் எனவும், அண்டப்புளுகன் எனவும், பார்ப்பனீயத்தின் ஐந்தாம் படையெனவும் திட்டித்தீர்த்து ஓய்ந்துபோய்விட்டார்கள்.

ஆயினும் காலகாலமாக வளர்ச்சிபெற்று வரும் இராம காவ்யத்தைத் தன் காலத்தில் தமிழ் மக்களுக்கு முன்பிருந்த காவ்யங்களைப் பார்க்கிலும் மேன்மை யுடையதாகவும், தமிழிலேயே சிறந்த மேன்மை யுடையதாகவும், தமிழிலேயே சிறந்த காவ்யமாகவும் படைத்தளிக்க எண்ணினார் கம்பர். அதனாலேயே கம்பர்.

ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக்காசில்

கொற்றத்தி ராமன் கதையரோ

தமக்கு முன்பு ராமகாதை செய்த மாபெரும் கவிஞர்களைப் பின்பற்றித் தாமும் தமிழில் காவியம் இயற்றியதாகக் கம்பன் அவையடக்கத்தில் கூறுகிறார்.

தேவபாடையில் இக்கதை செய்தவர்

மூவரானவர் தம்முளும் முந்திய

நாவினார் உரையின் படி நான் இது

தமிழ்பா வினால் செய்தது பண்பரோ

தமது மூலங்களுக்கு ஓர் குறிப்பை வெளிப் படையாக நமது கால மரபுக்கு விரோதமாகக் கம்பர் வெளியிட்டிருக்கிறார். எங்கும் கதை, கதை என்றுதான் கம்பர் கூறுகிறார். எனவே கம்பரின் நோக்கு காவ்ய நோக்காகும். ஆனால் தன் காலத் தத்துவ, சமய, சமுதாயத் தாக்கங்களுக்கு அப்பாற்பட்டவரல்லர் கம்பர். எனவே அவர் காலத்துப் பண்பாட்டு வீச்சை, மூலங் களில் காணப்படாத பல கருத்துக்கள், சிந்தனைகள், உணர்ச்சிகளைக் கம்பனில் காணலாம். கம்பர் சமஸ்கிருதத்தில் இக்கதை செய்தவர்களுக்குத் தாம் வழித்தோன்றல் என்பதைப் பெருமையோடு ஒப்புக் கொள்ளுகிறார். அதாவது இந்திய காவிய உலகிற்கு தாம் ஓர் தமிழ் மலர் மாலையைப் பணிவோடு அளிப்பதாகத் தான் கம்பர் நினைக்கிறார்.

‘தேவபாஷை’ என்று ‘வடமொழி’யைச் சொல்லு கிறாரே இவருக்குத் தமிழன்பும், தமிழ்ப் பற்றும் கிடையாதென்று கூச்சலிட்டவர்கள் பலர். இவர்கள் கம்பனையே படிக்காதவர்கள். கம்பனில் ‘கம்பரசம்’ என்று ஒன்றைக் கண்டுபிடித்துவிடப் படித்தவர்களும், ராமனை ஆரிய வஞ்சகனாகப் பார்க்கப் படித்தவர்களும், இராவணனை “தமிழ்ப் பெருங்குடி மகனாக” வருணிக்கப் படித்தவர்களும், கம்பனை ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையில் ஆரியக் கட்சியின் வழக்கறிஞனாகக் காணப் படித்தவர்களும், “மனிதன் கதையையே படிக்கக்கூடாது, இறையருள் கூறும் நூல்களையே படிக்க வேண்டும்” என்று கருதிய மனிதகுல விரோதிகளும் காவ்ய ரசனைக்கு அடிப்படையான அழகியல் உணர்விற்குத் தடைகள் விதித்தனர்.

ஆயினும் இராமாயணத்தைக் கதையாகவும் காவ்ய மாகவும் கண்டு சிற்சில காவ்ய இயல்புகளை முனைப் பாக்கி ரசித்தவர்களும் இலக்கிய உணர்வுகளைத் தோற்று வித்தவர்களும் தமிழ் நாட்டில் இந்நூற்றாண்டில் இலக்கிய ரசனையை வளர்க்க முயன்றுள்ளார்கள். அவர்களுள் முதன்மையானவர்கள் வ.வே.சு.ஐயர், பி.ஸ்ரீ.டி.கே.சி., ஏ.வி.எஸ். ஐயர் முதலியவர்கள்.

வ.வே.சு.ஐயரவர்கள் தமது பாலகாண்டப் பதிப்பின் முன்னுரை, கம்பனின் சிற்பவியல், ( Architectonics of Kamban) கம்பனது கதா பாத்திரங்கள் பற்றிய கட்டுரைகள் முதலிய ஆய்வுக் கட்டுரைகளில், கதையமைப்பு, வருணனை உத்திகள், நிகழ்ச்சிப் படைப்பு, பாத்திரப் படைப்பு (characterisation) கதைக் கூறுகளை இணைத்து முழுமையான காவ்யத்தை உருவாக்கிய முறைகள், இவையனைத்திலும் கம்பனையும், வால்மீகியையும் ஒப்பிட்டுள்ளார். உலக காவ்யங்களோடு இராமாயணக் கதையையும், இராமாயணக் கதைகளோடு கம்பனது ராமகாதையையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்.

வரலாற்றுக்கால வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு, கதையில் ஒற்றுமையிருப்பினும், வருணனை, பாத்திரப் படைப்பு, நிகழ்ச்சியமைப்பு, கதைக்கூறுகள் என்றும் சிற்பங்களை, காவ்யமென்னும் மாளிகையைக் கட்டப் பயன்படுத்தும் முறைகள் முதலியனவற்றில் வேறுபாடுகள் நிகழ்வதைச் சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார். காலத்திற்குக் காலம் இலட்சியங்கள், இலட்சிய மனித இயல்புகள், தரும நியதிகள், சிந்தனைகள் மாறுபடுவதால், பிற்காலத்தில் எழுந்த காவியங்கள் இவ்வேறுபாடுகளை முற்கால மூலக்கதையோடு பொருத்திக்காட்டுகின்ற காவ்ய உத்திகளை விளக்கிக் காட்டியுள்ளார். உதாரணமாக வால்மீகியையும், கம்பனையும் இயற்கை வருணனையில் ஒப்பிட்டுக் கம்பர், வால்மீகியை இத்துறையில் கம்பன் மிஞ்ச முடியவில்லை என்ற உண்மையை உதாரணங்களோடு விளக்கி இதற்குக் காரணம் என்னவென்று கேள்வி கேட்டுப் பதிலும் தருகிறார். வால்மீகி காட்டில் பர்ணசாலையில் வாழ்ந்த மனிதர். கம்பர் நகரத்தில் அரசியல் சூழ்ச்சிகளின் சூழலில் வாழ்ந்தவர். இயற்கையின் அரவணைப்பில் தமது கவிதையாற்றலை வளர்த்துக் கொண்ட ஆதிகவி. சோழப் பேரரசின் காலத்தில் நகர வாழ்க்கையில் தமது கவித்திறனை உருவாக்கிக் கொண்ட கம்பனை இயற்கை வருணனையில் வென்றுவிடுவதில் வியப்பில்லை.

ஆனால் அரசியல் மரபுகளை நேரில் காணாத வால்மீகியை, சோழர்-பேரரசு நிறுவும் முயற்சியில் சோழப் பேரரசர்களது அரசியல் நடைமுறையைக் கண்ட கம்பர் அரசியல் மரபுகளையும், சூழ்ச்சிகளையும் கதையில் கையாளுவதில், தமது மூலநூலாசிரியனை மிஞ்சி விடுகிறார்.

போரும், வெற்றியும், பேரரசு விஸ்தரிப்பும் தேசீய லட்சியங்களாக இருந்த காலத்தில், மக்களுக்கு வீரர்களை அறிமுகப்படுத்தும் காவியத்தைப் படைத்தளிக்க வேண்டிய கம்பர், ராமனையும், அவனைச்சார்ந்த பெருவீரர்களையும்; இராவணனையும், அவனைச்சார்ந்த பெருவீரர்களையும் படைத்து அவர்களது வீரத்தின் வெளிப்பாடாகவும், அதனோடு கிளர்ந்தெழுந்த பல்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவும் யுத்த காண்டத்தைப் படைத்து, அதனை உலக வீரகாவ்யங் களில் (heroic epic)) ஒன்றாக சமைத்து விட்டார். யுத்த காண்டமே எல்லாக் காண்டங்களிலும் பெரிது. இங்கேதான் ராமாயணத்தின் கருப்பொருள் பொதிந்து கிடக்கிறது. இங்கே தான் பகைமையும், நேசமும், விசுவாசமும், விசுவாசமின்மையும், அறம் பற்றிய கருத்து முரண்பாடுகளும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு, போர்க்களத்திலும் இரு கட்சிகளாகப் பிரிந்து ஒன்றை யன்று அழித்துவிடப் போராடுகின்றன. போரிலும், அரசியலிலும், வாழ்க்கையிலும் மனிதர்களைக் கண்ட கம்பர் எத்தனை விதமான மனிதர்களை, ஒரே மனிதனில் எத்தனை சிந்தனை-உணர்ச்சி வேறுபாடுகளைச் சந்திக்கிறார்? வேறுபட்ட இயல்புடைய மனிதர்கள் ஒரு கருத்தில் ஒன்றுபட்டு நிற்பதையும்கூட கம்பர் சித்தரிக் கிறார். இங்கெல்லாம் காவ்யப் பந்தய ஓட்டத்தில் கம்பன் வால்மீகியை நெடுந்தூரம் பிந்திநிற்கச் செய்து விடுகிறார் என்று வ.வே.சு.ஐயர் கூறுகிறார்.

மனிதனைப் பற்றிய கருத்துக்கள், தர்மம் பற்றிய சிந்தனைகள், கற்பு பற்றிய கொள்கைகள் ஆகிய பல நீதிக்கருத்துக்கள் (ethicalconcepts) சமுதாய வளர்ச்சி காரணமாக மாறுகின்றன. ஒரே கதையை இரு வேறு சகாப்தங்களில் வாழ்ந்த கவிஞர்கள் எழுதினால் பிற்காலக் கவிஞர் தம்காலத்துக் கருத்துக்களால், முற்காலத்தில் வாழ்ந்த தமது முன்னோடிக் கவிஞனது கருத்துக்களை மதிப்பிட்டு ஏற்க வேண்டியதைத் தனது காலத்திற்கேற்ப, தனது கண்ணோட்டத்திற்கேற்ப ஏற்பதும், ஒதுக்க வேண்டியதை ஒதுக்குவதும், காலத்தின் தேவையாகும். உலகில் எல்லாக் கவிஞர்களுமே இதனைச் செய் துள்ளார்கள். இலியாதிலிருந்து நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டு எத்தனை பிற்காலக் கவிஞர்கள் காவியம் செய்துள்ளார்கள்? அவற்றில் காணப்படும் மாறுதல் களுக்கு, ஒரு காலப் பண்பாட்டு மதிப்புகள் மாறியதே காரணமாகும். பழைய பைபிள் கதையிலிருந்து “பாரடைஸ் லாஸ்டு” எழுதிய மில்டன் கதையிலும், பாத்திரப் படைப்பிலும் எத்துணை மாறுதல்கள் செய்துள்ளான். பைபிள் சாத்தானுக்குச் சரியாகவே பேசத் தெரியவில்லை. மில்டனது சாத்தான் எவ்வளவு

விவாதத் திறமையுடையவனாக இருக்கிறான்? பைபிள் சாத்தானை உருவாக்கிய எழுத்தாளர்கள் காலத்தில் பார்லிமெண்டு இல்லை. மில்டனது சாத்தான் உருவான காலத்தில் தேர்தலே இல்லாமல் 20 ஆண்டுகள் ஓயாத விவாதங்கள் நடந்த நீண்டகாலப் பார்லிமெண்டு இருந்தது. எனவே கால மாற்றத்தால் பைபிள் சாத்தான் சரித்திரம் மில்டனது கவியுள்ளத்தில் பேச்சுத் திறமை யுடைய பாத்திரமாக மாறிவிட்டது.

இதுபோலவே தான் வால்மீகி, கம்பனது ராமாயணங்களின் பாத்திரப் படைப்புகளும் சமுதாய வளர்ச்சியால் மாறுபட்ட பண்பாட்டுக் கருத்துச் சூழலால் தாக்கமடைந்து வேறுபட்டுக் காணப் படுகின்றன. இக்கருத்துச் சூழல்களின் வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால் பாத்திரப் படைப்பிலுள்ள வேறுபாடு புலப்படும். இதைக்கவனியாமல் வால்மீகியின் பாத்திரங்களில் ராமன் ஒழுக்கமற்றவன் என்றும், ஒழுக்க மற்ற ஓர் வரலாற்று மனிதனைக் கம்பன் தெய்வப் பூச்சு கொடுத்துள்ளான் என்று கருதுகிறவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் இலக்கியத்திற்கு வரலாறு உண்டு என்ற உண்மையை மறந்துவிட்டவர்கள்.

வால்மீகி காலத்தில் அக்காலப்பண்பாட்டுச் சூழலில் உருவான இலட்சிய வீர கதாபாத்திரம் இராமன். கம்பன் காலத்து இந்திய-தமிழ்நாட்டு பண்பாட்டுச் சூழலின் பாதிப்புக்குள்ளாகி மாற்றமடைந்த கதாபாத்திரம் கம்பனின் இராமன். முக்கியமாக வைணவ சமயத் தத்துவக் கருத்துக்களின் தாக்கம் கம்பனது இராம பாத்திரத்தில் உள்ளது. வால்மீகியில் இல்லை. ஆயினும், வால்மீகியின் இலட்சிய பாத்திரமான இராமன் கம்பனில் வக்கிரச்சித்திரமாக மாறிக் காணப்படவில்லை. இராமன் மக்களுக்கு நல்வாழ்வைப் படைக்க வந்த வருங்காலப் பேரரசனாகவும், பெரு வீரனாகவுமே இரு கவிகளும் இராமனைச் சித்தரித்துள்ளார்கள். வான்மீகிக்குப் பின்னர் பல கவிஞர்கள் இராமனைப் படைத்துள்ளார்கள். அவையனைத்தையும் கூர்ந்து கண்டு, தன் காலத் தேவைக்கேற்ப இலட்சிய பாத்திரத்தை தமது மாபெரும் கவித்துவ சக்தியால் கம்பர் படைத்தார். எல்லோரும் ஒத்துக்கொள்ளுகிற ஒரு இலட்சிய மனிதனை, எல்லாக் காலத்துக்கும் பொதுவாக எந்தக் கவிஞனால் படைக்க முடியும்? கவிஞன் கால, சமுதாய வளர்ச்சி எல்லை களுக்கு அப்பாற்பட்டவனா? இலக்கிய மனிதப் படிமம் ஹோமர் காலத்திலும், வான்மீகி காலத்திலும், கம்பன் காலத்திலும், மில்டன் காலத்திலும் ஒன்றாகவே இருக்க முடியுமா? தமிழ்நாட்டில் வ.வே.சு. ஐயருடைய எழுத்துக்களைப் படித்தவர்கள் மிகச் சிலரே. எனவே அவருடைய காவ்ய விமர்சன நோக்கு இங்கு பரவவில்லை.

பி.ஸ்ரீ. கம்பன் கவிதைகள் சிலவற்றை அறிமுகப் படுத்தினார். இவருக்குத் தெளிவான இலக்கிய நோக்கும், அளவுகோல்களும் இல்லை. உலக காவியங்களின் மரபுகளையும், கவித்தரத்தையும் இவர் அறியார். எனவே இனிய கவிதைகள் சிலவற்றை தமிழர் அறியச் செய்த பணியையே இவர் செய்தார்.

டி.கே.சி., கம்பனை அழகியல் நோக்கில் கண்டார். முக்கியமாக அழகு, சொற் கோப்பு, சொற்பிரயோகம், துள்ளல் (cadence) சொற்சேர்க்கையின் மொத்தப் பாதிப்பு (ability is evolve an emotion)) இவற்றையே இவர் பெரிதும் மதித்தார். இவருடைய காலத்தில் கவிதையை ரசிக்கும் உணர்வே வறண்டுபோய், உவமை, உருவகம், சிலேடை, சொற்சிலம்பங்களில் இலக்கியப் பண்டிதர்கள் செக்கிழுக்கும் காளைகள் போல் சுற்றிச் சுற்றி வந்த காலத்தில் கவிதையின் இதயம் உணர்ச்சியையும், கருத்தையும், சொற் சேர்க்கைகளால் மனப்படிமங்களாக வெளியிடுவதுதான் என்ற கருத்தை, ராமாயணத்தைப் பொருள் கூறுவதிலும், ரசிக்கத் துணை செய்வதிலும் இவர் மறைமுகமாக வற்புறுத்தினார். அழகியல் நோக்கே இவரது கவிதா ரசனை முறையின் அடிப்படை அளவு கோலாகும்.

ஏ.வி.சுப்பிரமணிய ஐயரவர்கள் அழகியலுக்கே, கல்வி (intellectuation) தான் அடிப்படை என்று விவாதித்து ‘கல்வியிற் பெரியவர் கம்பர்’ என்ற நூல் எழுதினார். இந்நூலில் கம்பனுக்கு முந்திய கவிகள் அவருக்கு விடுத்துச் சென்ற கல்விச் செல்வத்தின் அளவையும், அதனைப் பயன்படுத்திய விதத்தையும் ஆராய்கிறார். மேலும் மூல நூல்களின் மீது கம்பர் கொண்டிருந்த மதிப்பையும், மூலநூலின் பாத்திரங் களையும், நிகழ்ச்சிகளை அவர் தம் காலத்தில் மாற்று வதற்குரிய காரணங்களையும் அவர் ‘intellectualism’ என்ற அளவுகோல் கொண்டே ஆராய்ந்துள்ளார். ஆனால் கவிதையை ஆராய இவர் சில மாறாத அளவீடுகளைப் (absolute standards) பயன்படுத்துகிறார். அவை என்ன என்பதை அவர் வரையறுத்துக் கூற முடியவில்லை.

intellectualism என்பதை அளவீடாகக் கொண்டால் ஒவ்வொரு அறிவுத் துறையின் வளர்ச்சிக் காலத்திலும், ஒரு துள்ளல் வளர்ச்சியேற்படும் பொழுது (leap) நமது பழைய அளவீடுகள் மாறுபடுவதைக் காணலாம். மாறுபடும் கருத்துக்களோடு, பழைய கருத்துக்கள் முரண்பட்டும், இயைந்தும் புதிய அளவீடுகள் உருவாகின்றன. இது விஞ்ஞானத்திற்கு மட்டுமின்றி பண்பாட்டிற்கும், இலக்கியத்திற்கும் பொருந்தும். வரலாற்றுப்போக்கு, சமுதாய வளர்ச்சி இரண்டிற்கும் ஏற்ப இலக்கியப் படைப்புகளுக்குரிய  விமர்சன மதிப்பீடுகள் மாறிக் கொண்டே செல்லுகின்றன. ஒரே காலத்தில் அக்காலகட்டத்தின் பண்பாட்டுச் சூழலை மதிப்பிடப் பல மதிப்பீடுகள் தோன்றக் கூடும். இவற்றையல்லாம் ஒதுக்கிவிட்டு வால்மீகி காலம் முதல் பாரதிதாசன் காலம் வரை ஒரே மதிப்பீடுகள் கடவுள் கருத்தைப்போல மாறாமல் இருக்கின்றன வென்று ஏ.வி.எஸ். அவர்கள் கருதுகிறார்கள். படைப்பில் புதுமையிருக்கும் பொழுது, அளவீடு மட்டும் பழைமையாக இருந்தால், படைப்பின் புதுமையை அதனால் அறிந்து கொள்ள முடியாது. மதிப்பீடுகளுக்கு, அதாவது, இலக்கிய அலகுகளுக்கு, இலக்கியப் படைப்புகளுக்கு இருப்பதுபோலவே ஓர் வரலாறு இருக்கிறது. ஏன் மாறாமல் இருக்கிறதென்று ஆத்திகர்கள் கூறும் கடவுள் என்னும் மனப் படிமத்துக்கே ஒரு வரலாறு இருக்கிறது.

காவ்ய ராமாயணம் ஆய்வு நூலன்று. முன்னுரையில் கூறியபடி, இலக்கிய நோக்கில் இராமன் கதையைக் கூறுவதே அதன் நோக்கம். முக்கியமாக ஆதிகாவ்யத்தை அறிமுகப்படுத்துவதையே ஆசிரியர் தமது பணியன்று கொண்டிருக்கிறார். ஆனால் கதையைச் சொல்லும் பொழுதே நமது கவிகள் இருவரும் கதை நிகழ்ச்சி களையும், சந்தர்ப்ப நிலைகளையும் (Situations), பாத்திர அமைப்பையும், பாத்திரங்களின் சிந்தனைகள், கதை மாந்தரின் உணர்ச்சிப் போக்குகள், கதைமாந்தரின் சிந்தனைகள், உணர்ச்சிகளால் அவர்களிடையே விளையும் முரண்பாடுகள், அரசியல் சிந்தனைகள், அரசியல் நிகழ்ச்சிகள், போர்கள், போரினால் கதைமாந்தர் உணர்ச்சியும் சிந்தனையும் தீவிரமாவது, தம் காலத்து இலட்சியங்கள், (ideals of the epoch) தம் காலத்து இலட்சிய நீதிக் கோட்பாடுகள் ஆகிய அனைத்தையும் எப்படி எப்படி சித்திரித்துள்ளார்கள் என்பதை ஆய்வுரையாக அல்லாமல், இரு கவிகளும் கதை சொல்லுகிற போக்கிலேயே நுணுக்கமாகவும் எளிமையாகவும் ஸ்ரீநிவாஸன் எழுதிச் செல்லுகிறார்.

பழைய இலக்கியப் பண்டிதர்கள் கவிதையை நகங்களால் கிழித்து, சாற்றைத் துப்பிவிட்டு, சக்கையை மென்று சுவைப்பதை நான் கண்டிருக்கிறேன். இதற்குக் காரணம் அவர்களுடைய ரசனைக்கு அடிப்படைச் சொல்லும், சொல் இலக்கணமுமே, கவிதைக்குச் சொல் செங்கலே அன்றி கவிதைக் கோயிலை ரசிக்க, சொல்பற்றி மட்டுந்தெரிந்தால் போதாது. கட்டிட அமைப்பு, நிறம், சிற்பம், புராணம், அழகியல், மனோதத்துவம் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு என்ன தெரியும்? இங்கே கவிதையை இயல்பாக ரசிக்க ஸ்ரீநிவாஸன், கற்றுக் கொடுப்பது தெரியாமல், நளினமாக கற்பிக்கிறார். சிறு சிறு சிற்பங்களைப் பார்த்து ரசித்துவிட்டு, கோயிலின் மொத்த அழகை ரசிக்கத் தெரியாதவனைப் போல அல்லாமல் ராமாயண காவியத்தின் பேரழகை நாம் உணரும்படி, சிறுசிறு பகுதிகளின் அழகை, காவ்ய மாளிகையின் பேரெழிலோடு பொருத்தி, அப்பேரழகில், சிறுசிறு சிற்பங்கள் எப்படி ஒளி பெறுகின்றன என்று இணைத்துச் சுட்டிக் காட்டுகிறார்.

இரண்டு கவிகளும் ஒரே சிந்தனையோடு பாடும் இடங்களாயினும் சரி, மாறுபட்டுக் கூறும் இடங்களா யினும் சரி, இருவரையும் மோதவிடாமல், ‘வால்மீகி இப்படிச் சொல்லுகிறார், கம்பன் ஒரு புதிய கற்பனையை உருவாக்கி இப்படிச் சொல்லுகிறார்’ என்ற கருத்துப்பட எழுதுகிறார்.

எத்தனையோ விமர்சகர்கள், 2000 வருஷங்களுக்கு முன்னும், 800 வருஷங்களுக்கு முன்னும் மாய்ந்துவிட்ட இரண்டு இந்தியப் பெருங்கவிஞர்களை சேவல் சண்டை போடச் செய்து ரத்தம் சிந்த வைத்து, ஒரு சேவலின் வெற்றிக் கொக்கரிப்பைப் புகழ்ந்து எழுதியுள்ளார்கள். சேவல் சண்டையே அநாகரிகம் என்று கருதுகிற காலம் இது. கவிஞர்களைச் சண்டைபோடச் செய்து பார்க்கிற வேடிக்கை மட்டும் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

முதலிலிருந்து கடைசி வரை சுவை குன்றாமல் காவ்ய ரசனை நோக்கில் வால்மீகியின் மாபெரும் காப்பியத்தை கம்பனுடைய உதவியோடு தமிழ் மக்களிடையே மிகவும் அழகாக ஸ்ரீநிவாஸன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்நூல் ஆய்வுரையாக இல்லாததால், நானும் கூறப்பட்டிருக்கும் விமர்சனக் குறிப்புகளின் மீது விவாதம் எழுப்ப விரும்பவில்லை.

ஒரே ஒரு குறை. கம்பன் பாடல்களில் பல அச்சுப் பிழைகள் உள்ளன. இந்நூலில் உள்ள எல்லா பாடல்களும் அநேகமாக எனக்கு மனப்பாடம் ஆதலால் நான் பாட்டின் முதல் வரியைப் படித்ததுமே, அடுத்த மூன்று வரிகளை கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடுவேன். ஆனால் நண்பர் ஒருவரை வாசிக்கச் சொல்லிக் கேட்ட பொழுதுதான் பல பாடல்களில் பிழைகள் இருப்பதை உணர்ந்தேன். பின்னர் எல்லாப் பாடல்களையும் படித்துப் பார்த்தேன். நிறுத்தல் குறித்தவறுகளும், அச்சுப் பிழைகளும், சொற்பிழைகளும் உள்ளன. அடுத்த பதிப்பில் அவை அகற்றப்பட வேண்டும்.

பிழைகளுக்குச் சில உதாரணங்கள்

14. நச்சுடை வடித்தவள் மலர் நங்கை இவனென்றால் இச்சிலை கிடைக்க மலை ஏழையும் இறானோ (கிடக்க) பூமகளும் பொருளும் என நீ என் மாமகள் தன்னொடு மன்னுகி (மன்னுதி)

18. விலங்கல் அல்ல தின் தோளையும் மெய்த் திருவிருக்கும் (திண்)

19. தார் ஒழுங்கல் செய்யாது, அது தக்க பின் (புக்க)

42. விதியின் பிழை () இதற்கொன்னை வெகுண்டது (நீ)

90. மன்ன? போந்து மகுடம் ஆடுடனா (?எடுக்கவும்)

120. யாரைக் கருதிச் சொன்னாய்? இராவணற்கரிது என் என்றாள் (? எடுக்கவும்)

220. நம்மிணைக் கொல்லா நெஞ்சம் அஞ்சலை நுவறியென்றான் (கொல்லாம்)

228. வண்டிறலோதியும் வலியன் மற்றிவன் (வலியள்)

246. ஆயவன் வளர்த்த தன் தாதையாகத்மை (தாதையாகத்தை)

257. கருணையங்கடல் கிடந்தது கருங்கடனோக்கி வருணமந்திர மெண்ணிணன் விதிமுறை வணங்கி (எண்ணினன்)

இவ்வாறு நூல் முழுவதும் அச்சுப்பிழைகள் காணப் படுகின்றன. நமது நாடு முழுவதற்கும் சொந்தமான இக்காப்பியத்தை, ஆதிகவியும், தமிழ்க்கவிஞனும் சொல்லுகிற மாதிரியில், அவர்கள் சொல்லுகிற போக்கிலேயே சொல்லி, இரு மாபெருங் கவிஞர்களும் தம் தம் காலத்திற்குரிய பண்பாட்டுச் சூழலுக்கேற்ப ஆஜானுபாகுவான சொல் ஓவியங்களைப் படைத்து இந்திய இலக்கியத்திற்கும், உலக இலக்கியத்திற்கும் இரு மகா காவியங்களை அளித்துள்ளனர்.

ஆராய்ச்சி இதழ் 10-ல் வெளியான கட்டுரை.

Pin It