மலேசிய இலக்கிய வானில், துடிப்புமிக்க, அதே சமயம், தங்கள் மனதில் பட்டதைத் துணிவுடன் வெளிப்படுத்தும் நெஞ்சுரமும்,நேர்மையும் கொண்ட இளைஞர்களின் முயற்சியினால் கடந்த சில வருடங்களாக வெளியாகிக் கொண்டிருக்கும் ‘கலை இலக்கிய இதழ்’ வல்லினம் ஆகும். இதன் 24வது இதழ் இம்மாதம் (டிசம்பர் 2010) வலையேற்றப்பட்டிருக்கிறது.

இதில் வரும் தை மாதம்(2011) 6,7 மற்றும் 8ந் தேதிகளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இடம்பெறத் திட்டமிடப்பட்டிருக்கும் ‘அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு’ புகழ் திரு லெ.முருகபூபதி அவர்களது பேட்டி ஒன்றும் வெளியாகி உள்ளது.

அனைத்துலக அளவில் அல்லது குறிப்பிட்ட ஒரு நாட்டில், துறையில் பிரகாசிப்பவர்களைப் பேட்டி கண்டு வெளியிடுவது குற்றமான செயலல்ல. என்றாலும், பேட்டி அளிப்பவரது கருத்துகளை ஆதரிப்பது போன்று அதற்கு ஓர் முன்னுரையினை ‘வல்லினம்’ போன்ற ‘முதுகெலும்புள்ள’ இலக்கியவாதிகளிடமிருந்து அவர்களை நன்கு அறிந்தவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

லெ.முருகபூபதி தம் பேட்டியில் என்னவெல்லாம் கூறினார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக, பேட்டி கண்டவரது கருத்தாக வெளியிடப்பட்டிருக்கும் ’முன் ஒட்டு’ இவ்வாறு அமைந்திருக்கிறது……..

கொழும்பில் இடம்பெறவுள்ள இந்த மாநாடு குறித்து ஏராளமான சர்ச்சைகள் இணையத்தில் இடம்பெற்று வருகின்றன. தமிழகப் பத்திரிகைகளுக்கும் உலக இணைய எழுத்தாளர்களுக்கும் வெறும் வாய்க்குக் கிடைத்த அவலாக இந்த மாநாடு அமைந்து விட்டது. இலங்கையின் தமிழ் வரலாறு என்ன, படைப்பிலக்கியப் பின்னணி என்ன, இன்று அங்கு வாழும் மக்களின் மனநிலை என்ன, இந்த மாநாட்டில் என்ன நடக்கப்போகிறது,அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும், போன்றவை பற்றி எதையுமே ஆழமாகத் தெரிந்துகொள்ளாமல், சில விஷயங்களை நுனிப்புல் மேய்ந்துவிட்டு, தனிப்பட்ட மனிதர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதாகவும் அடிமுடி தெரியாது ஆர்ப்பாட்டம் செய்வதாகவுமே பெரும்பாலான எழுத்துகள் இடம்பெற்றுவருகின்றன.”

என்னும் அறிமுக உரையுடன் ஆரம்பிக்கும் இந்தப் பேட்டியில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு திரு முருகபூபதி அளித்த விளக்கங்களிடையே…….

இன்றைய சூழலில் - அதாவது ஓர் உரிமைப் போராட்டம், பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழுயிர்கள் எவரது அதிகாரத்தின் கீழ்ப் பறிக்கப்பட்டதோ – எவர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் மனித உரிமை மீறலுக்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமையாளர்களும், மனிதாபிமானிகளும் போராடிக்கொண்டிருக்கிறார்களோ - அவரது ஆட்சியில் இத்தகைய மாநாடு ஏன் தேவை என நினைக்கிறீர்கள்? என்னும் பேட்டியாளரின் இரண்டாவது கேள்விக்கு, முருகபூபதி அளித்த பதில்தான் விசித்திரமானது!

“இப்போது நடத்தாமல், இனி எப்போது நடத்துவது? போரின் அவலத்தில் உழன்ற இலங்கை மக்களின் அன்றாட வாழ்வு தொடராமலா இருக்கிறது? யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கந்தசுவாமி கோயில் வருடாந்த உற்சவம் நடக்காமலா இருக்கிறது? கொழும்பில் பிரபலமான ஆடிவேல் விழா நடக்காமல் இருக்கிறதா ? இவ்வாறு அடுக்கிக்கொண்டே சென்றவர்…. “இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந், விஜய் போன்றோரின் மசாலாப் படங்கள் காண்பிக்கப்படாமலா இருக்கிறது? துக்கம் நடந்த வீட்டில் நல்ல காரியங்களே நடபதில்லையா? எழுத்தாளர் விழா எடுப்பதில் மட்டும் என்ன குற்றமுள்ளது ?” எனப் 'பொங்கிப் பொரிந்'திருக்கிறார், ‘அனைத்துலகத் தமிழ் மாநாட்டின்' செயலாளர்.

'மாநாட்டைத் தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கிலோ, கிழக்கிலோ ஏன் நடத்தவில்லை?' என்னும் கேள்விக்கு,

”யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பில் நடத்தத்தான் எங்களுக்கு மிக விருப்பம், இடப்பிரச்சினைதான் மிகப்பெரிய பிரச்சினை. பல நூறுபேர் வந்து தங்க வசதிகள் இல்லை. அத்துடன் அரசாங்கம் நாளுக்குநாள் சட்டத்தை மாற்றுகிறது” என்றிருக்கிறார்.

அதாவது, நாளுக்குநாள் சட்டங்களை மாற்றும் ஓர் அரச நிர்வாகம் நடைபெற்றுகொண்டிருக்கும் ஒரு நாட்டில், ரஜனி-விஜய் மசாலாப் படங்களுக்கு ஒப்பான ஓர் ‘அனைத்துலகத் தமிழ் மாநாட்டினை' நாம் நடத்துவதில் இவர்களுக்கு என்னதான் பொறாமையோ என்கிறாரா லெ.முருகபூபதி?

ஐயா, மக்கள் அன்றாடக் கடமைகளில் ஈடுபட்டே ஆகவேண்டும். காலை எழுந்ததும் காலைக்கடன்களை ஆற்றியே தீரவேண்டும், உணவு உண்ண வேண்டும், உடுத்தவேண்டும்…….. இவையின்றேல் ராஜபக்ஷேவிடமிருந்து தப்பிப் பிழைத்திருக்கும் தமிழர்களின் உயிர் தானாகவே போய்விடும்!

தெய்வ நம்பிக்கை உடையவர்கள் கோவில்களுக்குச் செல்வதோ அல்லது அலகு குத்திக் காவடி எடுப்பதோ வெறும் ஆடம்பரத்துக்காகவல்ல. தங்களை, தங்கள் சந்ததிகளை இனியாதல் எவ்வித துன்பங்களும் அண்டாமல் அந்தத் தெய்வங்கள் காப்பாற்றும் என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கைதான் எத்தகைய துன்பங்களுக்கிடையேயும் அவர்களைக் கோவில்களை நோக்கித் துரத்துகிறது. இசைவிழாக்களும், மசாலாப் படங்களின் பிரசன்னமும் அனைத்துலகத் தமிழ் இசைவிழா என்னும் பெயரில் - ஏதோவொரு உள்நோக்குடன் நடைபெறுவதில்லை. இசைப்பித்து கொண்டவர்கள் இசை விழாக்களில் பங்கு கொள்வது போல், சினிமாப்பித்து தலைக்கேறியவர்களால் ‘கட் அவுட்’களுக்குப் பாலாபிசேகங்களும் நடைபெறலாம்.

பக்தி, கேளிக்கை இவற்றுள் வகைப்படுத்தப்படும் மேற்குறிப்பிட்ட செயல்களும், எழுத்தாளர்கள் கூடும் இலக்கிய மாநாடும் ஒன்றா ?

சமூக முன்னேற்றம், தன்மானம், இன உணர்வு இவையாவும் பின்னிப்பிணைந்து அநீதிக்கு எதிராய்த் தன் எழுதுகோலை ஆயுதமாக்குபவனே எழுத்தாளன். உலக அரங்கில் தன்னினத்துக்கு நேர்ந்துவிட்ட அவலம் எவரால் நிகழ்த்தப்பட்டதோ அவரது ஆட்சியில், இங்கு நாமெல்லாம் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறோம் என்று வேடமிடுவதில் எந்தச் சுயபிரக்ஞை உடைய எழுத்தாளனும் ஈடுபடமாட்டான்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற தமிழ்ப் பகுதிகளில் ஒரு மாநாட்டினை நடாத்துவதற்குரிய வசதிகளும், அரசின் ஆதரவும் கிடையாது என்பதை ஒப்புக்கொள்ளும் இவர், அந்த வசதிகளையும், உரிமையையும் இந்த அரசு வழங்கும்வரை காத்திருப்பதில் இவருக்கு என்ன அவசரம் என்றுதான் தெரியவில்லை. இத்தனைக்கும் மேல், 1974ல் உலகத்தமிழ் மாநாட்டினையே நடாத்திப் பெருமை கொண்டது யாழ்-ஈழ மண் என்பதை இவர் மறந்துவிட்டாரா ? அரசியல் அனாதைகளாய், இருக்கும் உரிமைகளைக்கூடக் கொஞ்சங்கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழனுக்கு [தமிழில் தேசிய கீதம் பாடத்தேவையில்லை என்னும் செய்தி உட்பட] உணர்வு மிக்க இனமான ‘எழுத்தாளர்’கள் ஆடம்பரமாக விழா எடுக்கத் துணியமாட்டார்கள்.

எண்ணும் எழுத்தும் நமது இரு கண்கள் என்பது, தமிழ் மூதுரை! இதில் எழுத்தை ஆள்பவர்கள் எழுத்தாளர்கள். எனவே எழுத்தாளர்களும் நமது கண்போன்றவர்களே. அதில் ‘காமாலை’ ஏற்பட்டுவிட்டால் காண்பது அனைத்தும் கோளாறாக அமைந்துவிடும்.

முள்ளிவாய்க்காலின் சாம்பல் மணம் மறையும் முன்பாகவே, செம்மொழி மாநாடு என்னும் பெயரில் - அதுவும் அண்டை நாடொன்றில் - கலைஞர் நடாத்திய விழாவையே புறக்கணிக்க வேண்டும் எனக்குரல் எழுப்பிய தமிழுணர்வாளர்கள்; தமிழர்களின் உயிர்களை மாத்திரமல்ல எஞ்சியிருப்பவர்களின் தன்மானத்தையும் சீண்டிப்பார்க்கும் ஓர் ஆட்சியின் கீழ்- மனித உரிமை மீறல்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என உலகெங்கும் ‘மனிதர்கள்’ பிரார்த்தனை செய்யும் பேற்றினைப்(?) பெற்ற ஓர் அதிபரின் ஆட்சியின் கீழ்- தமிழ் மாநாட்டை நடாத்தியே தீருவோம் என்று ‘கங்கணம் கட்டும்’ முருகபூபதியின் செயலைக் கண்டனம் செய்யாதிருப்பின், அதுதான் குற்றமேயன்றி அதனைக் கண்டித்துக் கருத்துரைப்பது அல்ல.

வாள் முனைக்கில்லாத ஆற்றல், எழுதுகோலை ஆயுதமாகப் பெற்றிருப்பவர்களுக்கு உண்டு என்பார்கள். இவர்களில் சிலர் ‘வால்பிடி’க் கூட்டமாவதை எந்த உணர்வாளர்களும் ஏற்றுக்கொள்வதில்லை.

Pin It