Handloomweavers book 450அண்மையில் மிகமிக அபூர்வமான ஓர் ஆய்வாளரை, புதுவை இலக்கிய மேடையில் சந்தித்தேன். தொடர்ந்து நடந்த நட்பு வட்டப் பேச்சுகள் அவரை நம் ஆரோவில் நிகழ்வுகளுக்கும் அழைத்து வந்தன.

அவரது பெயர் எஸ்.ஜெயசீல ஸ்டீபன்.  புதுச்சேரியைச் சேர்ந்தவர்.  இந்திய ஐரோப்பியவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தற்போதைய இயக்குநர்.  இவர் தூரக்கிழக்கு நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் மேனாள் ஆராய்ச்சியாளர் (1994 - 1999) டாட்டா நடுவண் ஆவணக் காப்பகத்தின் மூத்த ஆலோசகர் (1999 - 2000) விசுவபாரதி (சாந்திநிகேதன்) பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் (2001 - 2013) அமெரிக்காவில் உள்ள நெபுராஸ்கா மற்றும் கனெக்டிக்ட் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியுள்ளார்.

இவர் பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துக்கீசு, டச்சு, வங்காள மொழிகளில் எழுதியுள்ளார்.  அவை சீனமொழியிலும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவ்வுயரிய பெருமைமிகு பன்முகத் திறமை கொண்ட முனைவர் ஜெயசீல ஸ்டீபன் நமது ஆரோவில் நட்புவட்டத்தினருடன் இணைந்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.

பேராசிரியரின் அண்மைப் படைப்பு நான் பெரிதும் பாராட்டும் கைத்தறி நெசவுத் தொழில் வரலாற்று ஆவணமாக விளங்கும் நூலாகும். “தமிழக மக்கள் வரலாறு” தொகுப்பில் “நெசவாளர்களும் துணிவணிகர்களும்” (கி.பி 1502 - 1793) எனும் இவரது ஆங்கில நூலின் தமிழாக்கத்தைச் செய்துள்ளவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அமரர் ந.அதியமான்.  இவ்வாய்வு நூலினைச் செம்மையாக அளித்துள்ள நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீட்டாளர்கள் நமது நன்றிக்குரியவர்கள். 

இந்நூலில் குறிப்பாக கி.பி. 1502 - 1641 ஆண்டுகளில் தமிழகக் கடற்கரைப் பகுதிகளிலிருந்து மலேயக் குடா, இந்தோனேசிய தீவுக்கூட்டப் பகுதிகளுக்குப் போர்த்துக்கீசியர் நிகழ்த்திய துணிவணிகம் சொல்லப்பட்டுள்ளது. 

மேலும் 16-18 ஆம் நூற்றாண்டுகளில் செட்டியார், முதலியார், பிள்ளை, மரக்காயர் குல வணிகர்கள் ஆசியாவில் மேற்கொண்ட துணிவணிகம், பொருள் நிலவியல் போன்ற வரலாற்றுக் குறிப்புகள் சான்றுகளுடன் வழங்கப்பட்டுள்ளன.

வாசிப்புக்கு அருமையாக சுகமளிக்கும் “நெசவாளர்களும் துணிவணிகர்களும்” நூல் நடப்பாண்டு 2019 பிப்ரவரியில் வெளியிடப் பட்டுள்ளது. 220 பக்கங்கள், தேவையான பக்கங்களில் வண்ணப் படங்கள், வரை படங்கள், ஓவியங்கள் தலைகாட்டுகின்றன. விலை ரூ.210/- மட்டுமே.

இவ்வாய்வு நூலினை உருவாக்க ஆசிரியர் மேற் கொண்டிருந்த ஆய்வுகள் பற்றி அறியவரும்போது நமக்குப் பெருவியப்பு உண்டாகிறது.  பல ஐரோப்பிய மொழிகளைக் கற்று அந்தந்த நாடுகளுக்கே சென்று செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளார். கிழக்கிலும் மேற்கிலும் உள்ள பல்வேறு அருங்காப்பகங்கள், நூலகங்களில் அமர்ந்து பொறுமையாகவும், கடுமையான உழைப்புத் திறனாலும் நமக்குப் பயன்படும் தரவுகளைத் திரட்டியுள்ளார் என தெரிந்து கொள்கிறோம்.  இதற்குமுன் இத்துறையில் ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ள வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுகளை நமது தோழர் அப்படியே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். தமது கடுமையான முயற்சிகளால் திரட்டிச் சேர்த்த உண்மைகளை, தகுந்த ஆவணங்களுடன் நிறுவுகிறார் என்பதே இவ்வாய்வு நூல் நமக்குத் தரும் நலச்செய்தி ஆகும்.

handloomweavers 600தமிழகத்தில் மேம்பட்டிருந்த கைத்தறி பற்றி இந்நூலிலிருந்து ஒரு குறிப்பு;

“விஜயநகர ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட நூலான ‘பசவ புராணத்தில்’ 57 வகையான துணிகள் குறிப்பிடப்படுகின்றன. அவை பெரும்பாலும் சேலை வகைகளாகும்.  (எனக்கு ஆவல் மீதூறுகிறது! ஆசிரியர்)

சேலையின் விளிம்புப் பகுதிகள் மயில், அன்னம், கிளி, புறா, மான், குதிரை, யானை, சிங்கம் போன்ற பறவை விலங்கின வடிவங்களால் அழகுபடுத்தப்பட்டிருக்கும். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் தென்னிந்தியப் பகுதிகளிலிருந்து உள்ளூர்ச் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டது மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டதை அறியமுடிகிறது.  அரசு, கோயில் நிர்வாகங்களின் ஊக்கத்தினால் நெசவுத்தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடைந்தது.  துணி வணிகக்குழுக்கள் வலிமைபெற்று உள்நாட்டிலும், கடல் கடந்து வெளிநாடுகளிலும் துணிகள் சென்றடைய வழிவகுத்தன”

தமிழக நெசவுக்கலையின் மாண்பினைப் பார்த்தீர்களா நண்பர்களே! வரலாற்றுப் பெட்டகத்தின் திறவுகோல் எனும்படியான மற்றொரு ஆவணக் குறிப்பு எனது கவனத்தை ஈர்த்தது.

இடைக்காலத் தமிழ்ச் சமூகத்தில் கைகோள முதலியார் நெசவுத் தொழிலை மேற்கொண்ட இடங்கைப் பிரிவைச் சார்ந்தவர்களாக விளங்கினர். பின்னர் துணிவணிகத்தையும் இவர்கள் மேற்கொண்டமையால் முதலியார் எனும் பின்னொட்டையும் பெற்றனர்.  இவர்கள் கடல்கடந்தும் துணிவணிகத்தை மேற்கொண்டனர்.  சிலர் மலாக்காவில் குடியேறினர். 

இவர்கள் 1527ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் நாள் போர்த்துக்கீசிய அரசருக்கு எழுதிய கடிதத்தில் தமிழில் கையப்பமிட்டிருப்பதால் இவர்கள் தமிழ் வணிகர்கள் என்பதை அறிய முடிகிறது.  அவ்வாறு மலாக்காவில் குடியேறிய தமிழ் கைகோள முதலியார் வணிகர்கள் ஆங்கிலேயக் குழுமத்தின் பாதுகாப்பில் துணிவணிகத்தில் தமது மூலதனத்தைப் பயன்படுத்திப் புதிய வருவாயைத் தேடினர்.  தமது மூலதனத்தின் மூலமும் திறமையின் மூலமும் தமிழகக் கடற்கரையில் துணி உற்பத்தியிலும் வணிகத்திலும் ஆதிக்கம் செலுத்தினர். சில கைகோள முதலியார்கள் டச்சுக் குழுமத்திற்கும் ஆங்கிலேயே குழுமத்திற்கும் துணிகளை வாங்கி அளித்தனர் என்றும் அறிகிறோம்.

இவ்வாய்வு நூலின் பின் இணைப்பாக, சொல்லடைவுகளும் விளக்கங்களும் என மூன்று பிரிவுகளில் தரப்பட்டுள்ள சொற்களின் விவரங்கள் நமக்கு வரலாற்றின் போக்கைப் புரிந்துகொள்ள உதவும் கையேடாக விளங்குகிறது.

ஆய்வுநூல் பட்டியலில் அச்சிலுள்ளவை அல்லாமல் கையெழுத்துச் சுவடிகளும் ஆராய்ச்சிக்குப் பயன்பட்டுள்ளன.  வரைபடங்களும் மதிப்பைக் கூட்டுவன.  நம் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்நூலை உயர்ந்த பொக்கிஷமாகக் கருதுகிறேன்.  கைத்தறி நெசவாளர்களுக்கு கைதொழும் வணக்கங்கள்.  மே தினம் கொண்டாடிய தொழிலாளர் ஓங்கு சக்தி வாழ்க என வாழ்த்துகிறேன்.

நெசவாளர்களும் துணிவணிகர்களும்

எஸ்.ஜெயசீல ஸ்டீபன் | தமிழில்: ந.அதியமான்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்

விலை: ரூ. 210/-

நன்றி: ஆரோவில் செய்தி மடல்

Pin It