subashchandrabose book 450மொழியியல் என்பது கடந்த நூற்றாண்டில் உருவான ஒரு கல்விமுறையாகும்.  இது உலகம் முழுவதும் வாழும் பல்லாயிரக் கணக்கான மொழிகளும் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில், குறிப்பிட்ட தன்மையில்தான் இயக்கமுறுகின்றன, பேசப்பட்டு வருகின்றன, எழுதப்பட்டும் வருகின்றன,  என்பதை ஆய்ந்து விளக்குவதற்கு வந்த கல்வி முறையாகும்.  மேற்கத்திய மொழியியல் அறிஞர்கள் போலவே தமிழ்ச் சூழலிலும் இவ்வாறான மொழியியல் அறிஞர்கள் பரவலாக சிந்தித்திருக்கின்றார்கள்.  அறியப்பட்டிருக்கிறார்கள். 

தெ.பொ.மீ தொடங்கி, முத்துச்சண்முகன், ச.அகத்தியலிங்கம், பொற்கோ, செ.வை.சண்முகம் என்று பலரும் ஆழங்கால் பட்ட அறிஞர் பெருமக்களாவர்.  கி. அரங்கன், அ.பிச்சை என்று அப்பட்டியல் மிக நீண்டது.  அனைத்து மொழியினரும் பயன்படுத்தும் வகையிலே உலகப் பொதுமொழி ஏன் உருவாக்க வேண்டும் என்று முனைந்தவர்களும் உண்டு.  அம்முயற்சி தோல்வி கண்டது (அது குறியீட்டு அளவை (symbolic logic) முறைப்படி அமைந்தது). 

ஆனால் இந்த மொழியியல் கல்வியின் மூலம் ஒலியனியல், உருபனியல், தொடரியல் என்ற அடிப்படையில் தான் மனிதர்களால் வழங்கப்படுகின்ற மொழிகள் அமைந்துள்ளன என்ற அறிதல் ஏற்படும்போது அது பல மொழிகளைக் கற்று அறிவதற்கான தூண்டுகோலாக அமைகின்றது.  பல மொழிகளைக் கற்க விரும்புகிற ஒருவர் நேரடியாகக் கற்க முற்படும்போது ஏற்படும் சோதனைகள், இடர்பாடுகள், புரிதலின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வந்து பன்மொழிப் புலமையை வழங்க மொழியியல் அறிவு துணைசெய்கிறது எனலாம்.  அல்லது பன்மொழியறிவு பெற்றவர்களே மொழியியல் துறையில் சிறந்து விளங்குகின்றனர்.

  ஒப்பிலக்கிய ஆய்வுக்கும் இதே பன்மொழிப் புலமை வேண்டுவதாகின்றது.  இப்படிப் பார்க்கின்றபோது இக்காலத்தில் மட்டுமல்ல; பழங்காலத்தில் இருந்தே பன்மொழியறிவு பெற்றவர்களே மரபிலக்கணங்களை கற்பித்தவர்களாக இருக்கின்றனர்.  தொல்காப்பியர் தொடங்கி நன்னூலார் வரை இதற்கு விதிவிலக்கல்ல.  அந்தந்த மொழிகளிலே தோன்றியுள்ள மரபிலக்கணங்கள் மொழியியல் கோட்பாடுகளுக்கு எவ்வாறு பொருந்திவருகின்றன என்று ஆய்கின்றபோது தொல்காப்பியரே இக்கால மொழியியலார் கொள்கைப்படிதான் இலக்கணம் வகுத்திருக்கின்றார் என்று அறிகிறபோது இன்றைய மொழியியலார் அனைவருமே வியப்பெய்துகின்றனர்.

மொழியியலார் தமிழ் மற்றும் திராவிட மொழிகளை ஆராய்ந்து இவற்றில் காலம் என்பது இறப்பு (past), இறப்பல்லாக் காலம் (non past) என்று இரண்டாகவே பகுப்பார்.  அதாவது நிகழ்வும், எதிர்வும், இறப்பல்லாக் காலத்தில் அடங்கிவிடும். நிகழ்காலத்திற்கு தனி இடைநிலை தோன்றியதும் நிகழ்காலம், எதிர்காலம் என்று பகுக்கப்பட்டன.  இதை நன்னூலார் தெளிவாக வரையறுக்கின்றார்.  ஆனாலும், இப்போதும் இவ்விரண்டு காலங்களும் ஒன்றற்கு ஒன்று மயங்கி வருவதை மொழிநூலார் எடுத்துக்காட்டுகின்றனர்.

இவ்வடிப்படையில் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்கின்றபோது பரிபாடல் தவிர மற்றைய இலக்கியங்கள் அனைத்திலுமே மூன்று காலத்திற்கும் இரண்டு வகை இடைநிலைகளே வந்து உணர்த்துகின்றன.  (அதாவது நிகழ்வு, எதிர்விற்கு ஒரே இடைநிலை) இதன் மூலம் பரிபாடல் பிற்காலத்தது என்பதற்கு மேலும் வலு சேர்கிறது.  இதனை தொல்காப்பிய உரையாசிரியர்கள் பலவாறு உணர்ந்து உரை செய்துள்ளனர்.  முனைவர் ச.சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தொல்காப்பிய எழுத்தியல் சிந்தனைகள் என்ற நூலில் இவ்வுரையாசிரியர்கள் வேறுபடுமாற்றை ஆராய்ந்துரைக்கிறார். 

மேலும் இந்நூலில் அவர் எளிமையாகவும், சுவையாகவும் கடினமான மொழியியல் சிந்தனைகளை நம்முள் புகுத்த முயற்சிக்கிறார்.  குறிப்பாக மொழியியல் பேச்சு மொழியை அடிப்படையாகக் கொண்டது.  ஒலியனியல், உருபனியல், தொடரியல் என்ற அடிப்படையில் அமைந்து விளக்குவது.  எல்லா மொழிகளுக்கும் உள்ள எழுத்துக்களின் ஒலிப்பு முறை ஒன்றுதான்.  அதன் வரிவடிவம் மாறுபடுகின்றது.  ‘அ’ என்ற ஒலிப்பிற்கு தமிழில் ‘அ’ என்றும், தெலுங்கில் --- என்றும் மலையாளத்தில் --- என்றும், ஆங்கிலத்தில் ‘a’ என்றும் எழுதுகின்றோம்.  எனவே, உலக மொழிகளின் எழுத்துகள் வரிவடிவத்தால் வேறுபட்டும் ஒலிப்பால் ஒன்றுபட்டுமிருக்கும், என்பதோடு கடவுளுக்கும் மொழிகளின் தோற்றத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றார்.

தமிழ் ஒரு பின்னொட்டு மொழி என்பதையும், சிறப்பெழுத்துக்கள், சிறப்பல்லா எழுத்துக்கள் பற்றியும் விரிவான முறையில் ஆராய்கின்றார்.

  1. தமிழ் எழுத்துக்களின் வைப்பு முறை
  2. உயிர்மெய்
  3. தன்னொற்று மிகுதல்
  4. இனவொற்று மிகுதல்
  5. எழுத்துக்களின் இழப்பு
  6. புணர்ச்சியும் உறழ்ச்சியும்
  7. புணர்ச்சி விதியில்லா புணர்ச்சிகள்
  8. எழுத்துப் பேறும் சாரியையும்
  9. அண்ணவினம் ஆதல்

ஆகிய ஒன்பது தலைப்புகளில் நுட்பமான ஆய்வுக் கட்டுரைகள் அமைந்தது இந்நூல்.  மேலும் அவரது மொழியியல், இலக்கணவியல் சார்ந்த இருபது நூல்களை நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டு தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு வளம் சேர்த்திருக்கின்றது.  தமிழ் மாணவர்களும் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் பயிலத்தக்க நூலிதுவாகும்.

தொல்காப்பிய எழுத்தியல் சிந்தனைகள்
முனைவர். ச.சுபாஷ் சந்திரபோஸ்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்
விலை: ரூ. 175/-