தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு போன்ற தென்னிந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஜெர்மன், டேனிஷ், போர்ச்சுகீஸ் போன்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலும், மலாய், பர்மியன், தாய், சிங்களம் போன்ற தென்-கிழக்காசிய மொழிகளிலும் மேற்கண்ட தலைப்பின் ஆய்விற்குத் தேவையான சான்றுகள் கிடைக்கின்றன.  இவ்வத்தனை மொழிகளிலுமான சான்றுகளையும் ஒட்டுமொத்தமாக ஒரு ஆய்வாளர் பயன்படுத்தியிருப்பாரா? தெரியவில்லை.

  இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் வாழ்ந்துவரும் நரிக்குறவர்களின் வாக்ரி போளி மொழி யிலும் தமிழர் வரலாறு வாய்மொழிச் செய்திகளாகப் பதியப்பட்டிருக்கலாம்.  சவ்ராஸ்ட்ரா மொழி பேசு வோரும் கூட  தம் மொழியில் தமிழர் வரலாறு பற்றிப் பதிவு செய்திருக்கலாம். 

அச்சான்றுகளும் ஆய்விற்கு சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.  காலனி காலத்திய ஐரோப்பிய அலுவலர்கள் தொகுத்து வைத்திருந்த நிலப் பரிவர்த்தனை ஆவணங்கள், நிலப்படங்கள், ரசீதுகள், தொல்லியல் சான்றுகள், அலுவல் குறிப்புகள், குற்றப் பத்திரிகைகள், ரகசியகுறிப்புகள், வரைபடங்கள் போன்றவற்றையும், மருத்துவமனைக் குறிப்புகள் போன்றவற்றையும் இவற்றுடன் சேர்க்கலாம். 

மேனாட்டாரின் குறிப்புகள், இந்தியரின், தமிழரின் அன்றாட நடைமுறைப் பழக்கவழக்கங்கள், சமய நடவடிக்கைகள், வழிபாடுகள் போன்றவற்றைக் கண்டறிய உதவும்.  நிலத்தீர்வைகள், வரிகள் போன்ற வற்றை அறிந்துகொள்ள பட்டாதார்கள், ஜமீன்தார்கள், மிட்டாதார்களின் நிலத்தீர்வை ஆவணங்களைத் தரவு களாகப் பயன்படுத்தலாம்.  இவற்றுடன் revenue board, district board போன்றவற்றில் கிடைக்கும் ஆவணங் களும் பெரிதும் உதவும்.  இவற்றுடன் அக்காலத்திய மக்களின் வாழிடங்களை அறிந்துகொள்ள அக்காலத்திய அரசு கட்டடங்கள், தபால், தந்தி அலுவலகங்கள், புகை வண்டி நிலையங்கள், காவல் நிலையங்கள், கல்விக் கூடங்கள், அங்குக் கட்டப்பட்ட கழிவறைக் கட்டடங்கள், நீர்த்தொட்டிகள், அரசு அலுவலர்களின்  inspection bungalow கட்டடங்கள் போன்றவற்றையும் சான்று களாகக் கொள்ளலாம்.  இவற்றுடன் ஆங்கிலேயரின் குடியிருப்புகள், குதிரைலாயங்கள், தேவாலயங்கள் மற்றும் கல்லறைத்தோட்டங்கள் போன்றவற்றையும், பாலங்கள், சிறைச்சாலைகள், தூக்குமேடைகள் மற்றும்  slaughter houses களையும் கருத்திற் கொள்ளவேண்டும். 

மின்வசதியற்ற அக்காலத்தில் காற்றினையும், வெளிச்சத் தினையும் கட்டடத்திற்குள் கொண்டுவர என்ன உத்தி யுடன் இக்கட்டடங்கள் கட்டப்பட்டன என்பதனை அறியவேண்டும்.  1866-இல் பாரிஸ் நகரில் இந்தியக் கட்டடங்கள் மற்றும் தொல்லியல் பற்றிய புகைப் படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டன. அப்படங்களையும் சான்றுகளாகக் கொள்ளவேண்டும். 

William Taylor வெளியிட்ட Oriental Manuscripts என்ற நூலினையும்  Sir Walter Elliot அவர்களின் சேகரிப் பினையும் இவற்றுடன் சேர்க்க வேண்டும்.   மனிதரூபச் சிலைகளையும் கணக்கில் கொள்ளவேண்டும்.  மேற் சொன்னவை யாவும், தமிழர் வரலாற்றினையும், ஆங்கிலேயர் வரலாற்றினையும் கலந்து பேசுகின்றன.  தமிழர் வரலாற்றினை அறியும் சான்றுகளைச் சேகரிக் கையில் அவர்களின் உளவியலும் வெளிப்பட்டுள்ளது.  இவற்றுள் மெக்கன்சியின் தொகுதிகள் முதன்மை பெறுகின்றன.  அவரின் தொகுப்பில் 1568 சுவடிகள் அடங்கும்.

 அவை 13 மொழிகளில் 19 வகையான வரி வடிவங்களில் எழுதப்பட்டன.   இவை 77 தொகுதிகளில் அமைந்துள்ளன.  அவற்றுள் கல்வெட்டுகள், காசுகள், தாமிரப்பட்டயங்கள் போன்றவையும் அடங்கும்.  இவற்றுள் 75 தொகுதிகள் வட்டார மொழிகளில்  இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.   இவற்றுடன் 77 நிலப்படங்கள், 2630 வரைபடங்கள்/ஓவியங்கள், பொன், வெள்ளி, தாமிரம், வெண்கலம் போன்ற உலோகங்களில் உருவான காசுகள், 106 சிலையுருவங்கள் போன்றவற்றுடன் 40 பழம் பொருட் களும் உண்டு.

Benjamin என்பவர் தாவர, விலங்கு வகைகளின் உருவங்களை வரைந்து வைத்ததுடன் அவற்றின் மாதிரிகளையும் சேகரித்தார்; மண்ணியல் தாதுப் பொருள்களின் மாதிரிகளையும் சேகரித்தார்.   இப்படி ஐரோப்பியர் அறிவியல், கலை என்று பிரித்துப் பார்க்காமல் சான்றுகளைச் சேகரித்தனர்; நம்மவர்களோ சிலைகளையும், காசுகளையும் மண்ணில் புதைத்தனர். 

நிலமும் மக்களும்

தென்னிந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தில் தோல்வியுற்று அழிந்தபின் கம்பெனி யார் தங்களின் வரிவசூல் நிர்வாகத்தினைத் திடமாக்கும் பொருட்டு நில அளவைக்கான முயற்சியில் ஈடு பட்டனர். இதனை  William Bentinck தொடங்கி வைத்தார். 1802 ஏப்ரல் 10-இல் இந்நில அளவை தொடங்கப்பட்டது.  1808-இல் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் டெல்டா பகுதி அளக்கப்பட்டது.  மெக்கன்சி நெல்லூர், குண்டூர் மற்றும் கொடை மாவட்டங்களில் நில அளவை செய்தார். இதன் பிறகே தமிழகத்தில் பட்டாதார் முறையும், ஜமீன்தார் முறையும்  அறிமுகப் படுத்தப்பட்டன.  

Revenue board, District board போன்ற வரிவசூல் நிர்வாக அமைப்புகள் உருவாக்கப்பட்டன.   ஆனால், இதில் நிலச்சுவான்தார்களே உறுப்பினர்களாக இருந்தனர்.   இவை பெரும்பாலும் வளமையான பகுதிகளில் செயற்பட்டன.  இவற்றுள் அடங்காத கள்ளர்நாடு என்றொரு நிலப்பிரதேசத்தில் இருந்த கள்ளர் இனக்குழுக் கூட்டத்தினர்  எவ்வித வரியினையும் கட்டாமல் இருந்தனர்.  இக்கள்ளர் நாடு என்ற அமைப்பு மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நத்தம், பகுதிகளுக்கு இடைப்பட்ட நிலமாக அமைந்தது. 

இங்கு 40,000 கள்ளர்கள் ஆயுதங்களுடன் இந்நிலப்பிரதேசத்தினை ஆண்டு வந்தனர்.  இவர்கள் தம்மைத் தன்னரசு என்ற சுதந்திர நாடுகள் என்று அழைத்துக் கொண்டனர்  (இதே போன்று கொங்கின் சில பகுதிகளிலும் தன்னிச்சையாக ஆட்சியாளர்கள் ஆண்டனர்).  இவ்வினத்தினரின் உளவியல் கூறுகள் சிறப்பாக ஆயப்பட வேண்டியன.     இவ்வினத்தினர் நிலவியல் ரீதியாக புறமலைக்கள்ளர், வருஷநாட்டுக்கள்ளர், ஈசநாட்டுக்கள்ளர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.   நத்தம், மேலூர் கள்ளர்கள் தன்னரசுநாடு  தனிக்காட்டுக் கள்ளர்கள் எனப்பட்டனர்.  

இப்பகுதி நீர்வளமற்றதாகும்.  இவ்வட்டாரத்தில்தான்  வைதீகத் தெய்வங்களைவிட ஊர்த்தெய்வங்கள் புகழுடன் விளங்குகின்றன. கொன்னையூர் மாரியம்மன்,  குழுமாயி அம்மன், புதுக்கோட்டை முத்துமாரி அம்மன், பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர், நார்த்தாமலை மகமாயி போன்ற மக்கள் கடவுளர்கள் இவ்வட்டாரத்து மக்களுடன் இயைந்துள்ளனர். 

நில வரன்முறை அமைப்பில் (permanent settlement)  சேலம், செங்கற்பட்டு, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் மிட்டாதார்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.   மிட்டா தார்கள் புதிய நிலவுடைமையாளர் ஆவர்.  இம் முறையில் புறம்போக்கு நிலங்கள் காலனிய ஆட்சியரால் ஏலம் விடப்பட்டன.   இதனால் ஒரு புதிய நிலவுடைமைச் சமூகம் எழுந்தது.  சில சந்தர்ப்பங்களில் முழுக்கிராமமே  குத்தகைக்கு விடப்பட்டது.  இதனை  village lease என்றும் கிராம குத்தகை என்றும் வருணித்தனர்.  இதற்கு முன்பு (1792) அறிமுகப்படுத்தப்பட்ட ரயத்வாரிமுறை சேலம், பரமகால், கர்நூல், அனந்த்பூர், பெல்லாரி, கடப்பை மாவட்டங்களில் வழக்கத்திற்கு வந்தன.  இம்முறை இனாம்தார் முறையினால் தோல்வியுற்றது. 

 6000 முதல் 7000 ஏக்கர் வரை நிலமுடையவர் வாராம் தார் எனப்பட்டனர். இதனால் 19-ஆம் நூற்றாண்டில் தனியார் நிலவுடைமையாளர் எண்ணிக்கையில் அதிகரித்தனர்.  இவ்வகை நிலவுடைமையாளர்களின் கீழ்ப் புறகுடி, உள்குடி என்ற உழைக்கும் மக்கள் இயங்கினர்.   இவர்களுக்குக் கீழ் பண்ணையாட்கள், படியாட்கள் உழைத்தனர்.  1819-இல் ஓர் அடிமையின் விலை வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபட்டது. 

கல்வி

கம்பெனியாட்சி, கல்வியில் சில புதினங்களைச் செய்தன.  மரபுரீதியான குருகுலக் கல்வியிலிருந்து விலகி முறையான பாடத்திட்டத்துடன் கல்வி அறிமுகப் படுத்தப்பட்டது.  1797-இல் கம்பெனியாட்சி  கல்விக் கான திட்டத்தினை வரையறுத்தது.  பாடத்திட்டத்தில் அரிச்சுவடி, கொன்றை வேந்தன், நெல் இலக்கம், வெற்றி வேட்கை (ஆண்களுக்கான போதனை) எண் சுவடி (நாள், மதம், ஆண்டு, கோள்கள் பற்றியது) பெருக்கல் வாய்ப்பாடு, வகுத்தல் வாய்ப்பாடு, திவாகரம் (கடவுள், விலங்கு, தாவரம் பற்றியது).  திருக்குறள், நாலடியார், நீதிநூல்களும் சேர்க்கப்பட்டன. 

பொன்னிலக்கம் என்ற நூல் நாணயங்கள் பற்றியது.  கணக்கு அதிகாரம் என்ற நூலும் சேர்க்கப்பட்டன.  அறிவியல் கல்விக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது.   Madras School உருவாக்கப்பட்டது.   Book society உருவாக்கப்பட்டு பாடநூல்கள் எழுதப்பட்டன.   An  Introduction to English Grammar என்ற நூல் வெளியிடப் பட்டது.  இந்திய வரலாற்றினைப் படித்தறிய முக்கியத் துவம் தரப்பட்டது.  கல்வி  western education, homely education, private education  என்று வகைப் படுத்தப் பட்டது. ஆங்கிலம், மருத்துவம், சட்டம், பொறியியல் பாடங்களுக்கு முதன்மையிடம் தரப்பட்டது.   இந்தி யாவின் முறைப்படுத்தப்பட்ட மருத்துவக் கல்வியின் வாயிலாக வந்த முதல் அறுவை சிகிச்சை நிபுணர்  Wilson என்பவராவார். சமஸ்கிருதம், இந்துஸ்தானி மொழிகளைக் கற்றுத் தேர்ந்த இவர் காளிதாசரின் நாடகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  

இங்கு ஒரு கருத்தினைக் கவனிக்க வேண்டும்: ஓரியண்டலிஸ்ட் என்று அறியப்பட்ட அறிஞர்கள் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் தந்தனர்; மிஷினரிகள் என்ற சமய வாதிகள் வட்டார மொழிகளுக்கு முக்கியத்துவம் தந்தனர்.  இவ்விரு குழுவினருக்கும் சில உரசல்களும் வந்தன.  இந்துச்சட்டங்களையும், இஸ்லாமியச் சட்டங் களையும் படிக்க வேண்டிய தேவை எழுந்தது.  

மிஷினரிகள் இலக்கண நூல்களை எழுதினர், அகராதி களை இயற்றினர். வெவ்வேறு இனக்குழுக்கள் பற்றிய வரலாற்றினை எழுதினர். அன்றாடப் பழக்க வழக்கங் களை வழிபாடுகளைத் தொகுத்து எழுதினர். இச்சூழலில் தான்  Ellis Whyte சென்னையில் கோட்டைக் கல்லூரி யினை உருவாக்கினார்.  A D Campbell தெலுகு-ஆங்கில அகராதியினை வெளியிட்டார். 

John Mackerel கன்னட இலக்கண நூலினை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.   தொடர்ந்து 1856-இல் தென் இந்திய மொழிகளின் ஒப்பிலக்கண நூல் வெளியிடப்பட்டது. விவிலியம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதும் இக்காலத்தில்தான்.

தமிழகத்தில் இக்காலகட்டத்தில் தென் திராவிட மொழி பேசும் மக்கள் மட்டுமின்றி ஐரோப்பிய மொழி பேசும் ஆர்மீனியர், பார்சி மற்றும் சீனர் போன்றோரும் வசித்தனர்.   எனவே, தமிழ்ப்பண்பாட்டுச் சூழலியலை அவர்களுக்கு ஆங்கிலம் வழியே சொல்ல வேண்டிய தேவை இருந்தது. அத்தேவையினை, ஆங்கிலேய அலுவலர்களும், பாதிரிமார்களும் பூர்த்தியாக்கினர்.  எனவே, இந்தியா முழுமைக்கும் கல்வியின் தேவை உணரப்பட்டது.  19-ஆம் நூற்றாண்டின் தமிழ் நிலப்பரப்பில் கல்வியில் ஒரு மறுமலர்ச்சி நிகழ்ந்தது போன்று  இந்தியாவின் பிற பிரதேசங்களிலும் நிகழ்ந்தது.   அதனை இங்கு ஒப்புதல் நலம். 

தமிழகத்தில் 1816-இல் திருக்குறள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. தொடர்ந்து தொல்காப்பியம் (1868;1885), வீரசோழியம் (1881), இறையனார் களவியல் (1883) போன்ற இலக்கண நூல்களும் பதிப்பிக்கப்பட்டன.  ஓலைச்சுவடிச் சூத்திரங்கள் கருப்பு வெள்ளையில் தாள்களுக்கு மாறின.  1812-இல் ஆங்கில அலுவலர்களுக்கான பயிற்சிப்பள்ளியாக சென்னையில் கோட்டைக் கல்லூரி உருவாக்கப்பட்டது. இவ்வலு வலர்கள் ஒவ்வொரு மொழியினைக் கற்பதற்கும் அந்தந்த மொழியில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இக் கல்லூரி Hailerburyயில் அமைந்த East Indian Company Training College  மாதிரியில் அமைக்கப்பட்டது. 

இதனை 1804-இல்  Court of Directors எனும் கம்பெனி அலுவலர்கள் நிர்வகித்தனர்.  Hailerbury பாடத் திட்டம் : உன்னத காலத்திய கல்வி (classical education)  ஐரோப்பிய இலக்கியம், அறிவியல், அரசியல்-பொருளாதாரம், கீழை-மொழிகளைக் கற்றல், ஆங்கிலத்தில் புலமை பெறுதல் போன்றன.  இவற்றுடன் 1805-இல் இயற்கைத் தத்துவம், இயற்பியல், இந்திய வரலாறு, வேதியியல், கீழை-மொழிகள் போன்றவையும் சேர்க்கப்பட்டன.  இதனை ஓரளவு 1856-இல் வெளிவந்த தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் இட்டு நிரப்பியிருக்கும்.

 1859-இல்  Casie Simon Chetty, Tamilian Plutarch என்ற நூலினை வெளியிட்டார். இதில் தமிழ்ப் புலவர்கள் காலவரிசைப்படி சொல்லப்பட்டனர் (1829-இல் Biographical Sketches of the Dekkan Poets என்ற தலைப்பில் வெளிவந்த நூல் இவருக்கு உந்துசக்தியாக அமைந்திருக்கும்). இவ்விரு நூல்களும் தமிழ் மொழி யினையும், தமிழ்ப்புலவர்களையும் ஆங்கில உலகிற்கு ஓரளவு அறிமுகப்படுத்தியது.  Indian Antiquary யினை மாதிரியாகக் கொண்டு வெளிவந்த  Tamilian Antiquary என்ற இதழில் தமிழ் இலக்கியத்தின் சில பகுதிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன.   இவ்வமைப்பு தமிழகத்தில் ஒரு தமிழ் அறிஞர் குழாம் உருவாகிவிட்டதனை வெளிப்படுத்தியது.  தொடர்ந்து திருக்குறளும், திருவாசகமும் G.U.Pope பினால்  மொழிபெயர்க்கப்பட்டமை தமிழ் இலக்கியம் உலக அந்தஸ்திற்கு உகந்தது என்று காட்டியது.  

தமிழகத்தில் ஒரு படித்த இடைத்தட்டு வர்க்கம் மெல்லமெல்ல எழத் தொடங்கியது.  இந்தியப் பனுவல்களை மொழிபெயர்ப்பதில் வடக்கில் orientlists களுக்கு பிராமண அறிஞர்கள் பெரிதும் உதவியுள்ளனர்; தெற்கில் பிராமணர் அல்லா தோர் மிஷினரிமார்களுக்கும் ஆங்கில அதிகாரிகளுக்கும் பெரிதும் உதவியுள்ளனர். Winslow போன்றவர்கள் தமிழ்ச் சொற்களைச் சேகரித்து அகராதி ஒன்றினை உருவாக்கினார். 

Comparative Tamil and English Dictionary என்ற தலைப்பில் 1862-இல் முன்விலை வெளியீட்டுத் திட்டமாக American Mission House இந்நூலினை வெளியிட்டது.   இவ்வகராதி, வானியியல், சோதிடவியல், தொன்ம வியல், தாவரவியல் மற்றும் அறிவியல், அலுவல் சொற் களுக்கு விளக்கம் தரும் நூலாக அமைந்துள்ளது.  இந் நூலுருவாக்கத்திற்கு அய்ந்து தமிழர்கள் உதவியுள்ளனர்.  இவருள் ஒருவர் கிறித்தவர்.

பிராமணர் எவரும் இல்லை.  முன்பணம் கட்டிய 99 பேரில் அய்வர் மட்டுமே தமிழர்.  ஒருவர் லண்டனிலிருந்து 10 பிரதிகளுக்கு பணம் அனுப்பியுள்ளார்.  இந்த 99 பேரில் ஜமின்தாரோ, பட்டாதாரோ, மிட்டாதாரோ இல்லை.  சமயவாதி களும் இல்லை.  சமஸ்தான அரசர்களும் இல்லை.  ராட்லர், பெஸி, சீகன்பால்கு போன்றோர் பின்பற்றிய தத்துவம் மற்றும் அகரவரிசை அடிப்படையில் இந்நூல் உருவாக்கப்பட்டதனை Winslow பின்பற்றியதாக குறிப்பிடுகிறார்.  இவ்வகராதி தமிழர் சமயம், பண்பாடு, நம்பிக்கைகள், வழிபாடு போன்றவை பற்றியும் அறிய மிகப் பயனுள்ளது.  இதுபோன்ற நூல்கள் உருவாவதற் கான சூழல் என்ன?

வடக்கு

முன் பத்தியில் சொல்லப்பட்டது போன்ற சமூகப் போக்குகள் இந்தியாவின் வடக்கு நிலப்பிரதேசங்களிலும் நிகழ்ந்தன. 1851-இல் Gujarath Publication of Essays என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் முதன்முதலில் ஆங்கிலம் அறிந்தோர்க்கு குஜராத் மக்களின் சில உளவியல் கூறுகளை வெளிப்படுத்தியது.  1866-இல் முதல் குஜராத் மொழி நாவலை நந்தசங்கர் மெஹ்தா என்பவர் எழுதி வெளியிட்டார்.  அம் மொழியில் 1840களிலேயே தனிநபரின் நாட்குறிப்புகள் வெளியிடப்பட்டன.  1850-இல் நவல்ராம் பாண்டியா என்ற விமர்சகர் பயண நூலினை எழுதி வெளியிட்டார்.   அங்கு 19-ஆம் நூற்றாண்டின் முதல் கூற்றில் 17 அச்சகங்களும், 1831 முதல் 1884 வரை 94 இதழ்களும் தொடங்கப்பட்டன.

 1820-இல் Bombay Education    Society நிறுவப்பட்டது. 1825-இல் Native Education Society நிறுவப்பட்டது. 1835-இல் பயிற்று மொழி ஆங்கிலம் என்று ஆனது. குஜராத்தில்தான்  இந்திய சுதந்திரம் Hindu Swaraj என்ற கருத்தாக மலர்ந்தது. 

இதே போன்று வங்காளத்திலும் 1830களில் வங்காளமொழி இலக்கியம் பற்றிய முதல் கட்டுரை காசி பிரசாத் கோஷ் என்பவரால் எழுதி வெளியிடப்பட்டது.   பிறகு 1855-இல் சிறு சிறு கட்டுரைகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன.  அதேயாண்டில் வங்கமொழிச் செய்யுள்கள் அச்சேறினHarichandra Mitra, Harimohan

Mukherjee, Bakimchandra Chatterjee  போன்றோர் வங்க இலக்கியத்தினை உலக அரங்கிற்கு முன்னெடுத்துச் சென்றனர்.  1872 ல் வங்க இலக்கியம் முழுமையாக படிக்கப்பட்டது. பண்டைக்காலம், இடைக்காலம், தற் காலம் என்று காலவாரியாக இலக்கியங்கள் வகைப் படுத்தப்பட்டன.

1877ல் Literature of Bengal என்ற நூலினை Ramachandra Datta என்பவர் வெளியிட்டார்.   இந்த உந்துதலே, பெ.சுந்தரம்பிள்ளை  Some Milestones in the History of Tamil Literature (1891;1895) என்ற நூலினை எழுதத் தூண்டியிருக்கும். இதே கால கட்டத்தில் கேரளத்தில் மலையாளமொழி மறுமலர்ச்சி பெறத்தொடங்கியது எனலாம். இவையெல்லாம் 19-ஆம் நூற்றாண்டில் இந்திய மக்கள் கல்வியின்பால் காட்டிய அக்கறையின் வெளிப்பாடு எனலாம்.  இப்படி இந்தியாவின் மூன்று முனைகளில் கல்வியின் அக்கறை காலனிய ஆதிக்கத்தில் வெளிப்பட்டது.   இந்தியாவில் ஒருமொழி மட்டும் தனித்துத் தொழிற்படவில்லை.   பல நகரங்கள், சிறுநகரங்கள் கூட பலமொழிப் பண்புக் கூறுகளைக் கொண்டிருந்தன.  தஞ்சாவூர் மராட்டியர் அரசவையில் அன்றாட நடைமுறைகள் பலமொழிகளில் நிகழ்த்தப்பட்டன (a multilingual vernacular court).  இதற்கு முன்பு தில்லியில் முகலாயர்கள் அரசின் அன்றாட நடவடிக்கைகளை பாரசீகம், அரபிக் மற்றும் இந்துஸ்தானி மொழிகளில் ஆவணப்படுத்தினர். 

சென்னை

இந்தியாவின் பிற வட்டாரங்களில் நிகழ்ந்தது போன்றே மாற்றங்கள் தமிழகத்திலும் நிகழ்ந்தன.    1800-இல் இரண்டு லட்சம் மக்கள்தொகையினைக் கொண்ட சென்னை 1891-இல் எட்டு லட்சம் மக்களைக் கொண்டிருந்தது. இது ஒரு பண்பாட்டு, அறிவுசார், வணிகத் தளமாகவும் உருவெடுத்தது. தொழிற்சாலை நகரமாகவும் உருப்பெற்றது. பம்பாய், கல்கத்தா போன்று ஒரு கல்வி நகராகவும் உருப்பெற்றது. அரசு இயங்கும் நிர்வாக இயக்கமும் அதிகரித்தது. வழக்குரைஞர்களும், தொழில் முகவர்களும் எண்ணிக்கையில் அதிகரித்தனர்.  படித்த வர்க்கத்தினரும், வணிகர்களும், வங்கிகள் நடத்து வோரும் சென்னையினை நோக்கி நகர்ந்தனர்.   இந்நகர் போக்குவரத்தினாலும், வணிக நிறுவனங்களினாலும், தொழிற்பேட்டைகளாலும் புத்துருவம் பெற்றது. 

மேலைமுறைக் கல்வியினாலும், உலகின் நவயுக மாற்றத்தினாலும், தமிழ்மக்களின் வாழ்க்கை முறைகள் மாறின.  சமூக உறவுகளின் நிறம் மாறியது.  சமூக விழுமி யங்கள் மாறின.  சென்னை, பல அடுக்குகள் கொண்ட சமூகத்தளமாக மாறியது. சென்னையில் ஆங்கிலே யருக்கும், தமிழருக்கும் என்று தனித்தனியே George Town, Black Town என்று குடியிருப்புகள் உருவாக்கப் பட்டன. விடுதிகளும், கிளப்புகளும் வந்தன.  ஆட்டக் காரிகளும் வந்தனர்,  மைனர்களும் வந்தனர்; மாமாக்களும் வந்தனர். 

சென்னை வாசிகளுக்கு மேற்கத்திய கல்விமுறை வாசிக்கும் பழக்கத்தினை உருவாக்கியது.  அச்சுத்தொழில் சமயம், வழிபாடு, பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள் தொடர்பான பனுவல்களை நூல் வடிவத்திற்குக் கொண்டு வந்தது.  1812 ல்  Madras Literary Society நிறுவப் பட்டது.  Madras School of Orientalism நிறுவப்பட்டது.  அங்கு மொழி, சமயம், சட்டம், வரலாறு போன்றவை போதிக்கப்பட்டன. வீடு, வாசல், கோயில் என்று இருந்த சென்னைவாசிகள் பள்ளி, கல்லூரி, திடல், பஸ் ஸ்டாண்ட், பொதுப்பணித்துறை, கலெக்டர் பங்களா, தபால்-தந்தி ஆபீஸ், ரயில்வே, கண்டோன்மெண்ட், போர்ட், கார்னர், கிளப், ரேஸ், பார்க் போன்ற புதுப்புது  சொற்களுடன் புழங்கினர்.

தமிழர்வாழ் நிலப்பரப்பு

தாய்த்தமிழ் நிலமான தமிழகம் தவிர இலங்கை, மலேசியா, பர்மா, மொரிசியஸ், தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள், சமஸ்தானங்களான புதுக்கோட்டை, திருவாங்கூர், மைசூர், அய்தராபாத் போன்ற இடங்களிலும் தமிழர் வாழ்ந்தனர்.  இவற்றுள் இலங்கை, மலேசியா, பர்மா, மொரிசியஸ், தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இந்தோசீனா, பிரிட்டிஷ் கயானா போன்ற இடங்களுக்குத் தமிழர்கள் கூலிகளாகச் சென்றனர். 1880-இல் மட்டும் 40,000 பேர் இலங்கைகுக் கூலிகளாகச் சென்றனர்.

இவ்விடங்களுக்கு தமிழ்ப் பிராமணர்கள் செல்லவில்லை.  இருபதாம் நூற்றாண்டிலேயே இவர்கள் கடல் தாண்டிப் பயணித் திருக்க வேண்டும்.   தமிழ்ப் பிராமணர்களின் உறவினர்கள்  மேற்சொன்ன சமஸ்தானங்களில் வசித்துள்ளனர்.  எனவேதான், பாலர் திருமணமுறை பிரிட்டிஷாரின் ஆட்சிப்பகுதியில் தடையில் இருந்தபோது  புதுக் கோட்டை சமஸ்தானத்திற்கு வந்து அதனை நிறை வேற்றிக் கொண்டனர்.   தேசியகவி பாரதியின் உறவினர் காசியில் வசித்து வந்ததனை இங்கு நினைவிற் கொள்ள வேண்டும். 

தாய்த் தமிழகத்துப் பிராமணர்களுக்கும், இலங்கைத் தமிழ்ப் பிராமணர்களுக்கும் மணவுறவு  நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. ஆனால், இந்தியாவின் பெரும்பாலான சமஸ்தானங்களுக்கு இவர்களே திவான்களாக இருந்துள்ளனர்.   இப்பதவியினை  மேலை நாட்டுக் கல்விமுறையே அவர்களுக்குப் பெற்றுத் தந்தது.  

ஆனால், சென்னைக் கோட்டைக் கல்லூரியில் தமிழ்ப் பிராமணர்கள் பயிற்றுநர்களாக இல்லை.   அப்பு பிள்ளை என்பவர் கல்கத்தாவின் புனித வில்லியம் கோட்டைக் கல்லூரிக்குப் பயிற்றுநராக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.   மேலைநாட்டுக் கல்விமுறையும், தொழில்நுட்பமும் இணைந்து தமிழ்ச்சமூகத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தின. 

வணிகமும் தொழிலும்

இக்காலகட்டத்தில் சென்னை, புதுச்சேரி,  கடலூர், பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி, நாகப் பட்டினம், தேவனாம் பட்டினம், காயல் பட்டினம், தூத்துக்குடி போன்ற துறைமுகங்கள் மிகவும் சுறு சுறுப்பாக இயங்கின. இத்துறைமுகங்கள் தெற் கிழக்காசிய வணிகக் குழுக்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தன. இங்கு யானைகள் கூட இறக்குமதி செய்யப்பட்டன. சதுப்புநிலம் சார்ந்த நெய்தல் நிலப்பகுதியான காவிரி பாயும் டெல்டா வட்டாரத்திற்கு யானைகள் ஏன் இறக்குமதி செய்யப் படவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. 

ஆங்கிலேயர் மேற்குமலைத் தொடரில் யானைகளைக் காட்டினை அழிப்பதற்கும், சாலையிடுதல், கட்டடவேலை போன்றவற்றிற்கும் பயன்படுத்திக் கொண்டிருந்ததால் தென்கிழக்காசிய யானைகளுக்கு டெல்டா பகுதியில் ஒரு மவுசு இருந்திருக்கலாம்.  வனங்களில் வளமாக வாழ்ந்து கொண்டிருந்த யானைகள் டெல்டா பகுதிகளின் கோயில்களில் சோத்துருண்டைக்காக கைவீசி வணக்கம் போட வேண்டியிருந்தது. மேற்சொன்ன துறைமுகங்களில் காலம் செல்லச் செல்ல மரபுரீதியான படகுத் தொழில் நுட்பம் மெல்ல மெல்ல சரியத் தொடங்கி இயந்திரப் படகுகள் இவ்விடத்தினைப் பிடித்தன. மீனவர் சமூகத்தில் ஏற்பட்ட இம்மாற்றத்தினை ஒரு வரலாறாகவே எழுதலாம்.

இத்துறைமுகங்கள் தாதுச் சுரங்கங் களுடனோ, பருத்தி, நெசவு ஆலைகளுடனோ ரயில் பாதைகளுடன் இணைக்கப்பட்டன. தொடக்கத்தில் ஆலைகளுக்கான மூலப்பொருள்களையும், செய் பொருள்களையும் ஏற்றுமதி செய்யவும், படை நகர்விற் காகவும் ரயில்பாதைகள் இந்தியாவில் இடப்பட்டன.   இதனால், ரயில்வேயும், பொருளியலும் ஒன்றுடன் ஒன்று இயைந்து வளர்ந்தன. இந்தியாவின் பிற பகுதிகளில் எப்படி உழவர்கள் தாம் விளைவித்த கோதுமை, பருத்தி, தேயிலை, காப்பிக்கொட்டை, சணல் போன்றவற்றைச் சந்தைக்குக் கொண்டுசெல்ல ரயில் போக்குவரத்தினை நம்பியிருந்தனரோ அதே போன்று தமிழரும் தாம் விளைவித்தவற்றைச் சந்தைப் படுத்த ரயில்போக்குவரத்தினையே நம்பியிருந்தனர்.

 உப்பு வணிகத்திற்கும் இப்பாதைகள் பெரிதும் உதவின. கடலூர், பரங்கிப்பேட்டை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் போன்ற துறைமுகங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டுகள். இத்துறைமுகங்கள் வரலாற்று ரீதியாக சமயம் சார்ந்த நிறுவனங்களையும் கொண்டிருந்தன.  இவற்றில் சில வரலாற்று திருப்புமுனைகளை உண்டாக்கின.  ஆங்கிலேயர் தமிழகத்தில் நிலைபெற கடலூர்த் துறைமுகம் முக்கிய பங்காற்றியுள்ளது. 

சென்னைத் துறைமுகத்தினின்று விலங்குகளின் தோல், எண்ணெய் விதைகள், நிலக்கடலை, பஞ்சு போன்ற பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கிரீக், ஸ்விஸ்சர்லாந்த்,  பிரான்சு போன்ற நாடுகளில் இருந்து விலைமதிப்புள்ள பொருள்கள்  சென்னையில் இறக்குமதி செய்யப்பட்டன.   மேலும் உலோகப்பொருள்களும், துணிகள், சர்க்கரை, தானியங்கள் போன்றவையும் இறக்குமதி செய்யப் பட்டன. மதறாஸ் கைக்குட்டைகளும், லுங்கிகளும் உலகப்புகழ் பெற்றன.  

காலனிய ஆட்சியும் சாலைப்போக்குவரத்திற்குச் சில முயற்சிகள் எடுத்தன. காலனியமயமாதலின் கூறுகள்: புதிதான போக்குவரத்து, செய்தித்தொடர்பு, நில அளவை, போலீஸ் பாதுகாப்பு போன்றவை.  காலனிய மயமாதல் ஒருவகையான உலகமயமாதல் எனலாம்.  1803-இல் கம்பெனி ஆட்சி ஒரு சாலை போட்டது.  சாலைகள் முன்பு சொன்னது போன்று வணிகத்திற்கும், படைநகர்விற்கும் இடப்பட்டன.  1823-இல் முதன்மைச் சாலைகள் இடப்பட்டன. 1837-1844 காலகட்டத்தில் பல தேசியசாலைகள் பழுதுபார்க்கப்பட்டன. 

1845-இல் சாலைத்துறை விரிவாக்கப்பட்டது.  2010 மைல் தொலைவிற்கு தேசியசாலைகள் இடப்பட்டன.  3750 மைல்கள் தொலைவிற்கு வட்டாரச் சாலைகள் மற்றும் உள்ளூர்ச்சாலைகள் இடப்பட்டன.  உள்ளூர்ச்சாலைகள் இடுதற்கென உள்ளூர் நிதியம் திரட்டப்பட்டது.   1866-இல்  district road cess act நடைமுறைக்கு வந்தது.  1808-இல் தபால்துறை உருவாக்கப்பட்டது. 

இக்காலகட்டத்தில் புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாகவே நெசவு ஆலைகளும், கரும்பு ஆலை களும், தானிய ஆலைகளும் பெருகின.  தொடக்கத்தில் இதுபோன்ற ஆலைகளை ஆங்கிலேய அதிகாரிகளே உருவாக்கினர்.  அவர்களே வணிகராகவும் இருந்தனர்.  அவர்களுள் குறிப்பிட்த்தக்கவர் : William Hawkins, Sir Edward Winter, Sir John Child, Justinian Offley, Gregory Clement.   தமிழகத்தில் பஞ்சாலைகள் கோவில்பட்டி (1892), தூத்துக்குடி (1898), திருநெல்வேலி-பாபநாசம் (1885), மதுரை (1892) போன்ற இடங்களில் நிறுவப் பட்டன.  1890-ல் கோயம்புத்தூரில் நூற்பாலையும், நெசவு ஆலையும் தொடங்கப்பட்டன.  1878-இல்  Carnatic Mill தொடங்கப்பட்டது. அதேயாண்டில்  Buckingham Mill  தொடங்கப்பட்டது Binny Mill ம்  தொடங்கப் பட்டது. 

1876-இல் சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், தூத்துக்குடி போன்ற இடங்களிலும் ஆலைகள் நிறுவப் பட்டன. இவ்வணிகமும் தொழிலும் தமிழ்ச்சமூக கட்டமைப்பினை மாற்றியது.  புதுவகை இயந்திரங் களுடன் தமிழர்கள் பழகவேண்டியிருந்தது. சங்கு ஊதும் சத்தம் கேட்டு அன்றாட வேலைகளைச் செய்யும் பழக்கத்திற்கு வந்தனர். மாத ஊதியம் பெறும் முறை யினை அறிந்தனர். தொழிலும், படிப்பும் தமிழரின் உளவியலை வெகுவாக மாற்றியது. கோயில் மணி யடிப்பதைக் கேட்டு நேரத்தினைக் கணக்கிட்டவர்  கடிகாரத்தில் மணிபார்க்கத் துவங்கினர். 

நாடார் சமூகத்தினர் பருத்திச் சந்தையினைத் தம் கட்டுக்குள் வைத்தனர். Caligo cloth, long cloth, Mettur Mull cloth  போன்ற துணிகளுக்கு ஐரோப்பா, அமெரிக்க, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஏக கிராக்கி இருந்தது. பட்டுத்துணிக்கு காசியும், சிவப்புக் கம்பளத்திற்கு காஷ்மீரும் போன்று மதுரை கருப்பு-சிவப்பு புட வைக்கும், சீர்காழியும் கடலூரும்  Caligo துணிக்கும் பெயர் பெற்றிருந்தன. பிராமணப் பெண்களுக்கான மடிசாரிப் புடவைகள் தஞ்சாவூர், குத்தாலம், கூறைநாடு போன்ற இடங்களில் நெய்யப்பட்டன.  மக்கள் பெருக்கத்தினால் மொழி, இனரீதியான சமூகத்தின் உள்கட்டமைப்புகள் மாறின.  பொருளியல் தாக்கங்கள் எழுந்தன.  மேலைநாட்டு அரசியல் கருத்துகள் அறிமுக மாயின.  பொருளியல் கட்டமைப்புடன் சாதியமும் சேர்ந்தது. 

பண்பாடு

19 ம் நூற்றாண்டின் தமிழ்ச்சமூகத்தில் நடை, உடை, பாவனைகளில் மாற்றம் வந்தன.   ஆங்கிலேயரை எதிர்த்த சண்டைகளில் மூர்க்கம் காட்டிய பாளையக் காரர்களின் வாரிசுகள் ஆங்கிலேயரின் பண்பாட்டுக் கூறுகளைப் பின்பற்றினர்.  ஜமீன்தாரின் பிள்ளை களுக்கும், சமஸ்தான அரசர்களின் பிள்ளைகளுக்கும் ஆங்கிலேய ஆசிரியர்களே பயிற்றுநராக இருந்தனர்.   இவர்கள் நூல் வேட்டியினை விடுத்து கோட்டு, சூட்டு, பூட்டு, ஹேட்டு என்ற உடையலங்காரத்திற்கு மாறிக் கொண்டனர்.   சிலர் ஆங்கிலேய அதிகாரிகள் போல் கொல்லப்பட்ட யானைகள், புலிகளுடன் போட்டோ விற்கு போஸ் கொடுத்தனர். லண்டனுக்குப் படிக்கச் சென்ற சமஸ்தானத்து இளவரசர்கள் வெண்ணிறச் சீமாட்டி களை மணந்தனர். 

இதனால், புதுக்கோட்டை சமஸ் தானத்தின் ராஜா மார்த்தாண்ட பைரவத் தொண்டை மான் (1875-1928)அரியணையிழந்து ஐரோப்பாவில் குடியேறவேண்டியிருந்தது.  கையுறையும், கவுனும், தொப்பியும், மினுக்கும் தோல்வனப்பும்  தமிழர்களை வீழ்த்தின.  அக்காலத்தில் ஓர் ஐரோப்பியப் பெண்ணின் ஒரு செட் உடை என்பது 21 உருப்படிகளைக் கொண்டது. 

அவை:Chemise, Night cap, Flannel petticoats, Middle ditto without bodies, Slips, Cotton Stockings, Black silk ditto, White dresses, Coloured ditto, Evening Ditto, Pocket Handkerchief, Dressing gowns, Silk delisse, Bonnets, morning Caps, Long gloves, Short Gloves, Corsets, Pillow cases, Towels riding Habit.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசதியுள்ள ஓர் இந்தியரின் ஒரு செட் ஆடை என்பது: ஒரு வேட்டி, துண்டு, தலைப் பாகை / முண்டாசு. 1854-இல் கவர்னர் ஜெனரல் ஆணையிட்ட பிறகே இந்தியர்கள் ஐரோப்பியர் பாணியில் ஆடையணிவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.  Edward Balfour எனும் அறிஞர் அக்காலத்தில் இந்தியப் பெண்கள் உள்ளாடை அணிவதில்லை என்று பதிவு செய்கிறார்.  1850 க்குப் பிறகே இந்தியப்பெண்கள்  blouse  அணியத்தொடங்கினர் என்ற கருத்தும் உண்டு.  இக்கருத்தினை இந்திய ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் அனைத்தையும் அறிந்த பிறகே ஏற்கவியலும்.   மேற் சொன்ன ஆண்டுக்குப் பிறகே பெண்களுக்கான frock வழக்கிற்கு வந்தது. 

தென்மேற்கு கிழக்குக் கடற்கரைப் பகுதி பண்பாடு, சமூகவியல் ரீதியாக பன்முகத்தன்மை கொண்டது.  நாயர் சமூகப்பெண்கள் தோளினை மறைக்கும் தோள்துணி அணிவதற்கு அனுமதிக்கப் பட்டனர்; நாடார், ஈழவச் சமூகத்துப் பெண்கள் திறந்த தோளோடு இருக்கவே அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தேவகோட்டைப் பகுதியின் நாடார் சமூகத்தினர், மறவர் இனத்துக் கூட்டணியுடன் தலித் மக்களைத் தோளாடை அணிவதற்கு அனுமதிக்கவில்லை.   சிரியன் கத்தோலிக்கப் பெண்களும், மாப்பிளா இனத்துப் பெண்களும் குப்பாயம் என்ற மேலாடை அணிதற்கு அனுமதிக்கப் பட்டனர்.  திருவாங்கூர் அரசில் 1813-இல் John Munroe என்ற திவான் மதம் மாறிய நாடார் பெண்கள் மட்டுமே மார்பினை மறைக்கலாம் என்று ஆணையிட்டார்.    திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆடை தொடர்பான சர்ச்சையில் பிராடஸ்டண்ட் மிஷினரிகள் பெரிதும் ஈடுபட்டனர். 

19-ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான ஐரோப்பியர் இந்தியா பற்றி மனச்சாய்வுடனேயே எழுதினர்.   Ferguson   இந்தியர்கள் சரியான காலக்கணிப்பு கொண்ட வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டிருக்க வில்லை என்றார்.   William Taylor என்பவர் இந்தியப் பண்பாடு எகிப்தியப் பண்பாட்டினின்றும் பெறப்பட்டது என்றார்.   இந்துவின் மூளை மண்டையோடு கெல்டிச் இனத்தின் மூளை மண்டையோட்டினை விட புத்தி குறைவானது என்றும், சாக்ஸன் இனத்து மண்டை யோட்டினைவிட தரம் குறைவானது என்றும் எழுதினார். 

ஆனால், இவர்கள் 19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் அடிக்கடி உருவான பஞ்சம் பற்றிப் பேசவில்லை.   இப்பஞ்சங்களுக்குக் காரணமான பிரிட்டிஷ் ஆட்சியரின் தவறான நிலவுரிமைக் கொள்கைகளும், வரிவசூலிப்பில் கடைப்பிடிக்கப்பட்ட குளறுபடிகளுமே இவற்றுக்குக் காரணம் என்று இவர்கள் கூறுதற்கு முன்வரவில்லை.   கிராமத்து மக்கள் கூட்டாகச் செய்து கொண்டிருந்த குடி மராமத்து முறையினையும், நீர்ப்பாசனமுறையினையும் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் சிதைத்துக் கெடுத்தனர். இதனால் விளைச்சல் பாதித்தது.  

இதனால் துயருற்றோர் பண்ணையார் அன்று; பண்ணை யாட்களே.  இந்நூற்றாண்டில் பிரிட்டிஷாரின் கொடுங் கோல் ஆட்சியே இந்தியமக்களை ஒருங்கிணைத்து  தேசிய உணர்விற்குத் திருப்பியது. இந்தியாவின் மரபுரீதியான நிலத்தினையும், நதிகளையும் தாய் என்றும், மொழியினைத் தாய் என்றும் வருணிக்கும் தேசிய உணர்வு அரசியல் வயப்பட்ட தேசியஉணர்வாக  மாறியது.

ஆங்கிலேயருக்கு எதிரான தென்னிந்திய பாளையக்காரர்களின் போராட்டத்தினை வடவர் அறியாதது போன்றே வடக்கில் 1857-இல் நடந்த கலகத்தினை தென்னவர் அறியவில்லை.   வடவரையும் தென்னவரையும் ஒருங்கிணைக்க 1885-இல் காங்கிரஸ் வரவேண்டியிருந்தது.

* * *

15/11/2010 அன்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் வரலாற்று வரைவியல் என்ற தலைப்பில் தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு நடத்திய புத்தொளிப் பயிற்சியில் ஆற்றிய முதல் சொற்பொழிவின் கட்டுரை வடிவம்.  சொற்பொழிவாற்ற அழைத்த பேரா.வீ.அரசு அவர்களுக்கு நன்றி.

Pin It