penn deivangal 350மதுரையின் கோவில்கள் அனைத்தும் தல வரலாறு திருப்பணி மாலை, புராணக் கதைகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் எனக் காலத்தால் அழியாத புகழ்பெற்றவை. வைதீக மதம் தோற்றுவித்த நிறுவன சமயக் கடவுளர்களும், நாட்டார் கோவில் தெய்வங்களும் மதுரையில்தான் மிக அதிகம். மதுரையில் மக்களை விடக் கோயில் கடவுளர்கள் நிறைய உள்ளனர்.

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதி காரத்தில் “உச்சக்கட்ட கிளைமாக்ஸ்” நிகழ்ச்சிகள் மதுரையில்தான் நடைபெற்றன. மக்களில் புதிய வாழ்வு முறைகளை ஏற்படுத்தின என்பது வரலாற்று உண்மை.

ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங் குடியில் பிறந்து ஏற்றம் பெற்ற கண்ணகி “நாண் இழந்ததும்” நாடு புகழும் சிறப்பைப் பெற்றதும் மதுரையில் தான். ஏதிலியாக வந்த ஒரு பெண்ணால் செங்கோலையும் வீழ்த்த முடியும். நீதியையும் நிலை நாட்ட முடியும் என்பதைக் காட்டுவது கண்ணகி வாழ்வுதான். செல்லத்தம்மன் கோயிலென்றும் செப்பப் படுகிற செல்லியம்மன் கோயிலே கண்ணகி கோயிலென வழங்கப்படுவதை பலபேர் அறிய மாட்டார்கள்.

ஆற்றுக்கால், கொடுங்கல்லூர், பாலக்காடு, மண்டைக்காடு பகவதிகளாக கேரளத்திலும், கண்ணகை அம்மனெனத் தமிழ் ஈழத்திலும் பத்தினித் தெய்யோ எனச் சிங்களவராலும், மாஸதி எனக் கர்நாடகத்திலும் அழைக்கப்படுகிற கண்ணகிதான், தமிழகத்தில் வெற்றிவேலம்மன், வட்டப் பாறையம்மன், செல்லத்தம்மன், மதுர காளியம்மன், வஞ்சியம்மன், கண்ணாத்தாள், கொப்புடையம்மன், மங்கலதேவி, வீரமாத்தி என்று பலபட அழைக்கப்படுகிறாள்.

தெருவுக்குத் தெரு கோவில் கொண்டு மக்களைக் காப்பவளாகவும், நோய் நொடிகளைப் போக்குகிற மக்கள் டாக்டர்களாகவும் அழைக்கப் படுகிற மாரியம்மன்தான் கண்ணகியின் மறு பெயரிலான வடிவம் என்பதைச் சான்றோர்கள் ஆய்வு நூல்களிலும் மேடைக் கருத்தரங்குகளிலும் மேன்மைப்படுத்தியுள்ளனர். ஆடி மாதம் வெள்ளிக்கிழமையன்றுதான் கண்ணகி ஆவேசமுடன் வஞ்சினம் கூறி மதுரையைச் சாம்பலாக்கினாள் எனச் சாத்திரம் பேசுகிறது. ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் தாய்த் தெய்வ ஆலயங்களில் இன்றளவும், கூழ் வார்த்தல், இளநீர் சொரிதல், பானகம் படைத்தல், பச்சரிசி மாவினால் விளக்கு ஏற்றுதல் எனும் மாவிளக்கு ஏற்றுதல் ஆகியவைகளால் குளிர்ச்சிப்படுத்தப் படுகின்றன.

கி.பி.5-ஆம் நூற்றாண்டில் ஆடிமாதம் வெள்ளிக்கிழமையில் பாண்டியன் இழைத்த தீங்கினால் மதுரையில் மழைவளம் குன்றி மாரி பொய்த்தது. அம்மை முதலிய வெப்பு நோய்கள் பல்கிப் பெருகின. அரசன் நெடுஞ்செழியன் இழைத்த அநீதியே இதற்குக் காரணம் என மக்கள் நம்பினர்.

மதுரையில் இச்செயல் நடந்து பாண்டிய நெடுஞ்செழியன் மரணமடைந்தபோது அவன் தம்பியும் அடுத்த இளவரசனுமான வெற்றிவேற் செழியன் கொற்கையில் முகாமிட்டிருந்தான். அவன் மதுரைக்கு விரைந்து வந்து ஆட்சிப் பொறுப் பேற்று நடந்ததை விசாரணை செய்து காரணமான பொற்கொல்லனையும் அவனது பரிவாரங்களான ஆயிரம் பேர்களையும் தூக்கிலிட்டான். கண்ணகிக்கு நடுகல் எடுத்து வழிபாடு செய்தான் என்றும் கூறுகின்றனர்.

ஈழத்து மன்னன் கயவாகு கண்ணகி வழிபாடு செய்தவன். இலங்கையில் கண்ணகி கண்ணகை யம்மனாகக் காட்டப்படுகிறாள். பாண்டியன் அவைக்கு கண்ணகி சென்றபோது வேப்பந் தழையும், சிலம்பும் ஏந்திச் சென்றாள் என ஈழக் கதை கூறுகிறது. வேப்பிலை மாரியம்மன் பொருட்களில் ஒன்றெனக் கூறுகின்றனர். பின்னர் வந்த வைதீகச் சமயத்தினர் ஜமதக்னீ எனும் முனிவரின் பத்தினியான ரேணுகாதேவி என்பவள் நீராடச் செல்கையில் வானத்தில் சென்ற கந்தர்வனின் அழகில் மயங்கி மனதால் கற்பிழந்தாள். இதனால் அவளை அவள் கணவரின் ஆணையால் அவள் மகன் பரசுராமன் தலையை வெட்டிக் கொன்றதாக புராணம் கூறுகிறது.

இவளே பிழைத்தெழும்போது தலைமாறிய தால் மாரியம்மன் ஆக மாறினாள் என்பர். கணவன் இறந்ததும் ‘ஒட்டேன் அரசோடு மதுரையை எரிப்பேன்’ என்று கற்புக்கடம் பூண்ட கண்ணகியை ரேணுகாதேவியுடன் ஒப்பிடுவது புராணப் புளுகே தவிர வேறில்லை.

சிலப்பதிகாரம் உரை பெறுகாதையில் கண்ணகியை மாரியும் இவளோ? காளியும் ஆவாளோ? என மக்கள் வியந்ததாகக் கூறப் படுகிறது. சிலப்பதிகார நிகழ்விற்குப் பின் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இலங்கை, கேரளப் பகுதிகளிலும் கண்ணகிக்கு என வழிபாட்டுக் கோயில்கள் எழுப்பப் பட்டன. ஆதியில் கண்ணகிக்கு நடுகல் வழிபாடே (நடுகல்காதை) செய்யப்பட்டதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. நடுகல் வழிபாடே அன்று தெய்வ வழிபாடாக இருந்தது.

பின்னர் மண்ணாலும் கற்களாலும் கோவில்கள் எழுப்பப்பட்டன. மனித நிலையி லிருந்து தெய்வ நிலைக்கு ஏற்றம் பெற்றதால் சிலை வடிவம் செய்யப்பட்டது. இதனால் கண்ணகி கோயிலும் படிமமும் ஏற்பட்டு நடுகல் மரபு  ஆகம மரபுப்படி சிலைமரபுக் கோயிலானதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஒரு முலை எறிந்த திருமா பத்தினி என்பதற் கேற்ப கண்ணகியை ஒற்றை முலைச்சியம்மன் என்று கூறினர். “முத்தார மார்பின் முலைமுகம் திருகினாள்” என்பது சிலப்பதிகாரம். இதனால் திருநெல்வேலிப் பகுதியில் வழங்கப்படும் முத்தாரம்மன், ஒற்றை முலைச்சியம்மன் என்று கண்ணகி வழிபடப்படுகின்றாள்.

பெண் தெய்வங்களைக் கொற்றவை, பிடாரி என்பர். பூவாடைக்காரி என்ற பெயரும் கண்ணகிக்கு உண்டு. மண்ணுலக வாழ்வில் அமங்கலமாக இருந் தாலும் இறுதியில் மங்கலதேவி மலையில் இவளை மாலையிட்டு கோவலன் விண்ணுலகுக்குக் கூட்டிப் போனான் என்பதால் இப்பெயர் வந்தது என்பர்.
சிலப்பதிகாரத்தில் கண்ணகி தன் தாலியைக் கழற்றினாள் என்ற செய்தி எங்கும் இல்லை. மாறாக மாதவியே மங்கலநாண் களைந்தாள் என்றும் கூறுவர்.
பின்னால் கோயில் வழிபாடுகளில் தமிழ் மரபுப்படியான பண்டாரங்களும், பூhசரிகளும் நடத்தி வந்த வழிபாடுகளில் மெல்ல மெல்ல நுழைந்த பார்ப்பனரால் ஆரிய நாகரீகம் நுழைந்து நிலைமை மாறியது.

தமிழனின் மாரி, காளி, பிடாரி, கண்ணகி கோயில்களை துர்க்கை கோயில்களாக மாற்றம் பெறச் செய்தனர். வேறுபாடுகளைக் காட்டு வதற்காக காலடியில் மகிஷாசூரன், எருமைத்தலை, சிம்மவாகினி என்று இடைச்செருகல் செய்தனர். சிலம்புக்குப் பதிலாக சூலாயுதம் வந்தது. இன்றுள்ள துர்க்கை, திரௌபதி கோவில் களெல்லாம் ஒரு காலத்தில் தமிழ்த் தெய்வ மரபுப் படி கண்ணகி வழிபாடாக இருந்தது என்பது தொன்ம வரலாறு. பேச்சி, ராக்காயி, மகமாயி போல இவர்களும் வழங்கப்பட்டனர்.

மதுரைக்குள் நுழைந்தபோது கவுந்திஅடிகள் மாதரி என்னும் இடைக்குல மங்கையிடம்தான் கண்ணகியை ஒப்படைத்துச் சென்றார் என்கிறது சிலப்பதிகாரம். கண்ணகி தன் ஒரு மார்பை பிய்த்து எறிந்து மதுரையை எரித்தபின் ஆங்காரத்தோடு அமர்ந்த இடமே இன்றைய வடக்கு மாசி வீதி. இடது மார்பில் ரத்தத்தோடும் கண்களில் சினத்தோடும் உடல் நடுங்க அமர்ந்திருந்த கண்ணகியை இடைக்குல மங்கையர் ஆறுதல் படுத்தினர்.

ஒரு பெண் கண்ணகி மார்பில் வெண்ணெயை எடுத்துப் பூசினாள் . வெண்ணெய் உருகி எரிச்சல் குறைந்த கண்ணகியின் மார்பின் மீது பறையர் குலப் பெண் ஒருத்தி தனது முந்தானையால் விசிறி பின் கிழித்துக் கட்டினாள். இதன் பிறகு இளநீர், பானகம், மாவுப் பொருள்களை பருகவும், உண்ணவும் கொடுத்தனர்.

இதனால் மனமும் உடலும் குளிர்ந்த கண்ணகி இடையர்குலப் பெண்களைப் பார்த்து “எனது நெருப்பால் எந்தத் தெரு வெந்தாலும் இடைச் சேரி வேகாது” என்றும் பறையர் குலப் பெண்ணிடம் ‘பார் மதுரை எரிந்தாலும் பறையர் தெரு எரியாது’ என்றும் கூறி வாழ்த்தியதாக செவிவழிக் கதைகள் கூறுகின்றன.
கண்ணகியின் வாழ்க்கை அக்காலத்தில் பல இடங்களிலும் பரவிப் பேசப்பட்டும் வியந்து போற்றப்பட்டும் வந்ததாகக் கூறுகின்றனர்.

பாண்டியன் அரசவையில் கண்ணகி சூரியனைச் சாட்சியாக வைத்து வஞ்சினம் கூறியதுபோல் இன்றும் பாமர மக்கள் கோபத்திலும் மனச் சங்கடத்திலும் எதிர்பாலரைப் பேசும்போது ‘சூரியபகவானே; நீ தான் கேக்கணும்’ என்று கூறி வானை நோக்கிப் பேசுவதை நாம் பார்க்கிறோம் கண்ணகி தலைவிரி கோலமாக வலம் வந்ததால் பெண்கள் தலையை விரித்துப் போடுவதை அமங்கலமாகக் கருதினர்.

பல இடங்களில் கண்ணகிக்கு எழுப்பிய கோயில்களில் கண்ணகியின் படிமம் ஒரு முலை இல்லாத நிலையிலேயே அமைக்கப்பட்டு ஒற்றை முலைச்சியம்மன் என்று அழைக்கப்பட்டு வணங்கப் பட்டது.

ஆனால் பின்னர் வந்தவர்கள் ஒரு சிலை என்பது எல்லா உறுப்புக்களோடும் அமைய வேண்டும். இவ்வாறு இடது மார்பு இல்லாமல் அங்கஹீனமாக இருப்பதால் இதனை வைக்கக் கூடாது. “அங்க சிதைவு ஆகம மரபு ஆகாது” என்று கூறியதால் இச்சிலைகள் அகற்றப்பட்டு வேறு சிலைகள் இடம்பெற்றன.

பின்னர் அங்குசம், பாசம், சூலாயுதம், தாமரை மலர்களை உருவாக்கி நிறுவன சமயப் பெண் கடவுளர்களாக்கி விட்டனர். அதற்கேற்ப கதை களும் எழுதினர்.

கண்ணகி சிலைகளெல்லாம் காணாமல் போனது இப்படித்தான். அலுவலகம் போகும் வழியில் கண்ணகி சிலை இருப்பதால் ஆபத்து. அபசகுனம் என்று கடற்கரை கண்ணகி சிலையும் இப்படித்தான் அகற்றப்பட்டது. பாண்டியன் முதல் இன்று வரை அதிகாரவர்க்கத்திற்கு கண்ணகி என்றாலே அச்சம் தரும் பெண்தான் போலும்.

சிலப்பதிகாரத்தில் மதுரையின் வாழ்வு முறைகள் சிறப்பாகக் காட்டப்படுகின்றன. மதுரையின் முதல் கண்ணகி சிலை கோவிலில் இடம் பெற்று உள்ளது என்பது பெருமைக்குரிய செய்தி. தெய்வ மாகவும் புசனைகள் தினமும் செய்யப்படுகின்றன.

மதுரையின் வடக்கு மாசி வீதிக்கும் வடக்கு வெளி வீதிக்கும் இடைப்பட்ட செல்லத்தம்மன் கோவில் பகுதி மக்கள் நடமாட்ட மிக்கது. இங்கு உள்ள செக்குகளில் ஆட்டப்படும் நல்லெண் ணெயை வாங்க காலை முதலே செக்கடிகளில் நின்று எண்ணெயும், எள்ளுப் பிண்ணாக்கும் வாங்கிச் செல்ல இன்றும் வரிசை உண்டு. எள் பிண்ணாக்கு தின்னுவதற்கு ருசியானதாகும்.

பழ மரபு இப்பகுதியை இடைச்சேரி என்கிறது. இன்றும் மதுரையின் யாதவர்கள் இங்குதான் வசிக்கின்றனர். இப்பகுதியில் தான் மதுரையை முன்பின் அறியாத கவுந்தி அடிகள் கண்ணகியை நம்பிக்கையோடு ஒப்படைத்தார் என்பதிலிருந்தே இம்மக்களின் வாழ்வு நலம் புரியும்.

கண்ணகியை இங்குள்ள முதிய இடைக்குல மக்கள் செல்லமாகப் பாதுகாத்தனர். எங்கள் செல்லத்தம்மனே என்றனர். சிறிய பெண்ணாக இருந்ததால் செல்லம் கொஞ்சிப் பாராட்டினர்.

இப்பகுதியில் வடக்கு நோக்கிய ஒரு கோவில் மரங்களின் நிழலோடு அமைந்துள்ளது.

இக்கோவில் நான்கு புறமும் உயரமான மதில்களோடு அமைந்துள்ளது.

சாலையிலிருந்து கோவிலை நோக்கி உள்ளே செல்லுகையில் பரந்த வெளி உள்ளது. இதன் நடுவே கோவில் உள்ளது. வடபுறம் கோவிலில் இருந்து 100 அடி துரத்தில் சிம்மச் சிலை உள்ளது. இதனால் இப்பகுதிக்கு சிம்மக்கல் எனப் பெயர் உள்ளது. செல்லத்தம்மனை திருவிளையாடற் புராணம் வடக்கு வாச்செல்வி என்று கூறுகிறது.

கோவிலின் உள்ளே கொடி மரம், பலி பீடத்தோடு சிம்மம் ஒன்றும் கருவறையை நோக்கி உள்ளது. இதன் முன் பேச்சியம்மன் உருவம் உள்ளது. முன் மண்டபம் தாண்டி மகாமண்டபம் அமைந்துள்ளது. அர்த்த மண்டபமாக ஒரு சிறிய நீளப்பாதை தாண்டி செல்லத்தம்மன் சிலை அமர்ந்த கோலத்தில் உள்ளது. சிற்பத்திறன் மிக்கது இக்கருவறை.

கருவறை வெளியே மகாமண்டபத்தில் மேற்குப்புறம் இக்கோவில் மூலத் தெய்வமான செல்லத்தம்மன் உற்சவச் சிற்பம் அலங்கரிக்கப் பட்டு வைக்கப்பட்டுள்ளது. கண்ணகி சிலையும் இதே தோற்றத்தில் காணப்படுவது குறிப்பிடத் தக்கது.

உற்சவரின் இடதுபுறம் தனியான ஒரு மேடையில் தரையிலிருந்து இரண்டடி உயரத்தில் சிலப்பதிகார நாயகி கண்ணகியின் சிலை அமர்ந்த கோலத்தில் உள்ளது. செவ்வாடைபூண்டு வெள்ளிக் கவசம் வெள்ளிக்கிழமைகளில் காட்சி தருகிறது.

அறியப்படாத ஆவணங்களாலும் புகழப் படும் இக்கண்ணகியின் திருவுருவம் பிற்காலப் பாண்டியர் வளர்த்த சிற்பக் கலையாகும். உயரிய நுணுக்கமான நுட்பங்களுடன் மானிட வடிவில் இரண்டு கைகளோடு உள்ளது.

கருணை பொழியும் முகம். அடர்ந்த கரிய கூந்தலை வாரி இடதுபுறம் கொண்டையிட்ட நேர்த்தி. அக்காலப் பெண்களைப் போல தோளளவு தொங்கும் அணிகள் இல்லாத தொள்ளைக் காதுகள், கூர்ந்த நாசி, சிறிய நெற்றி மங்கல அணியுடன் விளங்கும் மார்பு. வலதுகை தாமரை மலரை ஏந்தி நிற்க இடதுகையில் கால் சிலம்பை லாவகமாக ஏந்திக் காட்டப்படுகிறது.

வலதுகாலைக் குத்திட்டு இடதுகாலை மடக்கி அமர்ந்த தோற்றம். அருகே பிற தெய்வங்கள் அமர்ந்துள்ளனர்.

வணிகர் குலத்தில் பிறந்து வரலாற்றுப் பெண்ணாக மாறிய கண்ணகிக்கு ஆண்டுதோறும் இப்பகுதியில் பெரிய விழா எடுத்துப் பெருமைப் படுத்துகின்றனர். ஆதியில் கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது மூலவர் ஆகவே வழிபடப்பட்டாள். ஆனால் இச்சிலை வைக்கப்பட்ட போது இப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு மக்கள் வருந்தினர். கண்ணகி சினிமாவாக வந்தபோது தியேட்டர் தீப்பிடித்தது முக்கிய நிகழ்வு.  பின்னர்தான் கண்ணகி சிலை கருவறையின் வெளியே இடப்புறம் உயரமான கல்மேடையில் நிறுவி, கிழக்குநோக்கிய பார்வையுடன் உரு வாக்கினர். தற்போதுள்ள சிலை இதுதான்.

மதுரையை எரித்த பின் கண்ணகி மதுரையின் பல பகுதிகளுக்கும் சென்று அரற்றி வெதும் பினாள். அவ்வாறான ஒரு இடமே இன்றைய மதுரையின் தெப்பக்குளம் மாரியம்மன் எனும் வண்டியூர் மாரியம்மன் கோவிலாக மாறி உள்ளது. இங்கும் கண்ணகி சிலை போலவே மாரி சிலையும் வடிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி யம்மன் கோவிலின் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள நின்ற கோல காளி சிலையும் கண்ணகி யாகவே கருதப்படுகிறது.

மதுரையின் வைசியச் செட்டியார்கள் ஆண்டு தோறும் இக்காளிக்கு விழா எடுத்து மகிழ் கின்றனர். மதுரையின் பல பகுதிகளிலும் உள்ள மாரி, காளி கோவில்கள் கண்ணகி வழிபாட்டின் வெளிப்பாடே எனில் வியப்பில்லை.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதியில் உள்ள அழகிய நாச்சியம்மன் கண்ணகி யாக உருவகப்படுத்தப்படுகிறாள். இதே போல திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் உள்ள கண்ணகி கோயிலில் விழா நாளன்று பொற்கொல்லர் ஒருவரின் தலைமுடியை ஒட்ட வைத்து பின் சிலையை மண்ணில் கரைக்கின்றனர்.

மதுரை விராட்டிபத்து கிராமத்தின் வழியே கண்ணகி சென்றபோது எரியும் மதுரையைத் திரும்பிப் பார்த்ததால் இங்கே திரும்பிப் பார்த்த அம்மன் கோவில் உருவாகி சமீப காலத்தில் மறைந்து போனதாகக் கூறுகின்றனர்.

திருச்சி அருகே திருவாச்சூரில் உள்ள மதுர காளியம்மன் கண்ணகியாக இன்றளவும் வணங்கப் பட்டு வருகின்றாள்.

தஞ்சையில் உள்ள சிங்களநாச்சியார் கோவில் கண்ணகி கோவிலே என்றும் இலங்கை அரசி இக்கோவிலுக்கு வழிபட வந்ததால் இப்பெயர் என்கின்றனர். ஆனால் இக்கோவிலில் உள்ள சிலை கண்ணகியா? அல்லது சிங்கள அரசியா? என்ற ஐயமும் கிளப்பப்பட்டுள்ளது.

திருச்சி தொட்டியத்தில் உள்ள காளியம்மன் கோவிலே கண்ணகி கோயிலாகும். இப்பகுதியில் வைசிய மரபுச் செட்டியார்கள் அதிகம் வசிக் கின்றனர். கண்ணகியும் செட்டி குலப்பெண் என்பதால் இப்பகுதி வாணியச் செட்டியார்கள் இக்கோவிலை செட்டியம்மன் கோயில் என்று அழைப்பதோடு ஆண்டுதோறும் மாசி சிவராத்திரி, ஆடி மாதங்களில் குலதெய்வ வழிபாடும் செய் கின்றனர்.

யாதவர்கள், மலைவாழ் பழங்குடி மக்கள் குறிப்பாக தேனி மாவட்டத்தின் தென் எல்லை யான வண்ணாத்திப்பாறை எனும் மங்கலதேவி மலையைச் சுற்றி வாழும் பளிஞர் இன மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிலம்பாயி, கண்ணகி. மங்கலமாரி, மங்கலதேவி எனப் பெயர் சூட்டு கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தார அம்மன் என்னும் கண்ணகி தென் தமிழ்நாட்டில் குறிப்பாக ஆயிர வைசிய மஞ்சப் புத்தூரார் அதிகமாக வாழும் இடங்களில் முத்தாலம்மன் என்ற பெயரில் வழிபடப் பெறுகிறாள்.

மதுரை செல்லத்தம்மன் கோயிலின் உள்ளே கிழக்கு நோக்கிய மூலவராகக் காணப்படும் கண்ணகி சிலை தான் தமிழ்நாட்டுக் கோயில்களில் இடம்பெற்ற முதல் சிலையாகும். சேரன் செங்குட்டுவனால் கட்டி முடிக்கப் பட்ட மங்கல தேவிக் கோட்டம் இன்று சிதில மாகிக் கிடக்கிறது. தேனி மாவட்டம் கம்பம் தாண்டி லோயர்கேம்ப் முன்பாக முல்லை ஆறு (வைகை) ஓடும் கிழக்குக் கரையில் பகவதி கோயில் உள்ளது.

மங்கலதேவி மலைக்குப் போகுமுன் இந்த இடத்தில்தான் கண்ணகி அமர்ந்திருந்தாள் என் பதால் கேரள முறைப்படி பகவதி என்ற பெயரால் அழைக்கின்றனர். இதன் எதிரே கிழக்கே மலையடிவாரத்தை ஒட்டிச் செல்லும் பளிஞர் குடியிருப்பிலிருந்து 6 கி.மீ. தொலைவில் மலை உச்சியில்தான் செங்குட்டுவச்சேரன் நிர்மாணித்த கற்கோயில் உள்ளது.

தமிழர்களால் புகழ்பெறும் கோவில்களைத் தனது கோயில்கள் என்று உரிமை கொண்டாடி வருவது கேரள அரசாகும். தமிழரின் சாத்தன் கோயிலை அய்யப்பன் கோவிலென்று உரிமை கொண்டாடுவதுபோல இக்கோயிலையும் கேரள அரசு தனது துர்க்கை கோவிலென்று உரிமை கொண்டாடுகிறது.

தொன்மமும், காப்பியச் சிறப்பும் கொண்ட இக்கண்ணகிக் கோவிலின் கண்ணகி சிலை இமய மலைக் கல்லாக நிகர்த்து பேசப்படுகிறது.

ஆண்டிற்கு ஒருமுறை இம்மங்கலதேவிக் கோயிலுக்கு சித்திரை முழு நிலவு நாளில் தமிழக மக்கள் மாவட்ட நிர்வாகத் துணையோடு வரிசையில் நிற்க கேரள மக்கள் இங்கு சொந்த இடம்போல, சுற்றி வருவதை ஒவ்வொரு சித்திரை பௌர்ணமி யிலும் காணப்படுகிற காட்சியாக உள்ளன.

கொல்லப்பட்ட கணவன் கோவலன் இறந்து கிடந்த இடம் கோவலன் பொட்டலாக மாறிக் கிடக்க, “கொன்று அச்சிலம்பைக் கொணர்க” என்ற ஆணை மூலம் கோவலன் மரணம் நிகழக் காரணமான பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரை ரிங்ரோட்டில் பாண்டி முனியாகப் பெருங்கோயில் கொண்டு திகழ, சேரன் எழுப்பிய நினைவாலயம் சிதிலமடைந்து அங்கு வைக்கப்பட்ட கண்ணகி சிலை எங்கு உள்ளது என்பதே தெளிவாகத் தெரியாமல் இருக்க, மதுரையில் சிலப்பதிகார நிகழ்வுகள் நடந்தது என்பதற்கு உள்ள ஒரே சாட்சியம் செல்லத்தம்மன் கோயிலில் சிறப்பாகத் திகழும் கண்ணகி சிலை மட்டுமே.

ஏனென்றால் இவைகளைக் கடந்து சிலப்பதி காரம் மதுரையில் நிகழ்ந்தது என்பதற்கான தொல்லியல் அடையாளங்களோ, கல்வெட்டுக் களோ எதுவும் இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்; மதுரை மாவட்ட தொல்லியல் கையேட்டிலும் விவரம் இல்லை.

காப்பியம் கூறும் நிகழ்வுகள் காப்பியத்தின் அளவிலேயே காணப்படுவதை ஆய்வு செய்ய வேண்டும்.

ஆதார நூல்கள்

1. திராவிடத் தெய்வம் கண்ணகி. பேரா. காவ்யா சண்முகசுந்தரம்.

2. ஆயிரவைசியர் மாநாட்டு உரைகளும் மலர்களும்

3. கட்டுரையாளர் சொந்தத் தேடல்கள்

 

Pin It