pandian 400பொருளியல், வரலாற்றியல் அறிஞர் எம்.எஸ்.எஸ். பாண்டியனை அவருடைய இறப்பில் வைத்து அறிமுகம் செய்யும் கெடுவாய்ப்பு நமக்கு நேர்ந்துள்ளது. ‘நக்கீரன்’ போன்ற வெகுமக்கள் இதழ்களில் அவ்வப்போது அவருடைய எழுத்துகளைப் பார்க்கலாம். என்றாலும் EPW - என்னும் பொருளியல் அரசியல் கிழமை ஏட்டில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

ஐம்பத்தாறாண்டு வாழ்க்கையில் அவர் மூன்றே நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். எம்.ஜி.ஆரைக் குறித்த நூல் உலக அளவில் அறிமுகமான நூல். தமிழ்நாட்டிலும் அது ஓரளவு கவனம் பெற்றது. இரண்டாவது நூல் ‘பார்ப்பனர்-பார்ப்பன ரல்லாதர்’ குறித்த ஆய்வு நூல்; அதுவும் இந்தியப் பதிப்பில் சந்தையில் கிடைக்கும் நூலாக உள்ளது. அதிகம் தெரியப்படாத - பொருளியல் வட்டங்களில் மட்டுமே மேற்கோள் காட்டப்படும் நூலாக மூன்றாவது நூல் உள்ளது.

The Political Economy of Agrarian Change Nanchilnadu1880 - 1939 என்ற நூலே அது. SAGE-புத்தக வெளியீட்டாளர்கள் அதனை வெளியிட்டு உள்ளனர். பொருளியல் அரசியல் நூல் ஆதலால் அதற்கே உரிய கலைச் சொற்களைக் கொண்ட நூல் இது. சி.டி. குரியன் என்ற பெயர் பெற்ற பொருளியலாளரின் நெறியாள்கையின் கீழ் முனைவர் பட்டத்திற்காக இந்நூலை பாண்டியன் எழுதியிருந்தார். அந்நூலைப் பற்றிய சுருக்கமே இக்கட்டுரை.

வெளிவந்த புதிதில், இந்நூலைக் குறித்து ஆ.இரா.வெங்கடாசலபதி ‘காலச்சுவடு’ இதழில் சிறு குறிப்பு ஒன்றை எழுதியிருந்தார். ‘கெயில் ஓம்வெத்’ 1990-இல் நூலைக் குறித்து திறனாய்வு செய்திருந்ததாக கே. சந்துரு (காலச்சுவடு, டிசம்பர் 2014) குறிப்பிட்டுள்ளார்.

‘இந்திய வேளாண் மையில் மாற்றங்களைப் பற்றிய படிப்புகள் (ஆய்வுகள்) வேளாண்-பாட்டாளிகளின் கண் ணோட்டத்திலிருந்து மேலும் அதிக அளவில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். பாண்டி யனின் ஆராய்ச்சி அத்திசையில் எடுத்துச் செல்லப் பட்ட நன் முயற்சியாகும்.’

தமிழகத்தின் தென்கோடியிலுள்ள கன்னியா குமரி மாவட்டத்தின் அகத்தீஸ்வரம் (அகஸ்தீஸ் வரம்), தோவாளை வட்டங்களை உள்ளடக்கிய ஒரு பகுதியே நாஞ்சில்நாடு.

விடுதலைக்கு முந்தைய காலத்தில் திருவாங்கூர் அரசரின் ஆளுகையின் ஒரு பகுதியாக நாஞ்சில் நாடு இருந்தது. 1956-இல் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கன்னியாகுமரி சென்னை (மதராஸ்) மாகாணம் என்று முன்பு அழைக்கப் பட்ட இன்றைய தமிழ் நாட்டோடு இணைந்தது. நாஞ்சில்நாடு, தமிழ்நாட்டில் மிகவும் குறைவாக ஆராயப்பட்ட பகுதியாக இருப்பதும் நாம் இப் பகுதியை ஆய்வு செய்ய ஒரு காரணமாகும் என் கிறார் பாண்டியன். தமிழ்நாட்டின் வேளாண் மையை ஆயும் பெரும்பாலான ஆய்வுகள் தஞ்சா வூரிலும், செங்கற்பட்டிலும் கவனங்கொண்டன என்று ஹாரிஸ் சுட்டுவதை பாண்டியன் எடுத்துக் காட்டுகிறார்.

‘குட்ட நாட்டின் மொத்த நெல்லும் நாஞ்சிலின் விதை நெல்லுக்குக் காணும்’ என்ற பழமொழியை ஆராயும்போது திருவனந்தபுரத்தின் (பழைய திருவாங்கூர்) கோவில் பண்டாரங்களில் நிரம்பி வழியும் தங்கம் எதனுடைய உபரி (மிகை) என்பது நமக்குப் புரியும்.

பாண்டியனின் ஆய்வு 19-ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில் தொடங்கி 20-நூற்றாண்டின் முப்பது களில் முடிகிறது. (1880-1939). பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பத்துகளில், தங்களுக்குத் திறை செலுத்திக்கொண்டிருந்த திருவாங்கூர் அரசின் மூலம் பிரித்தானியர் தங்கள் செல்வாக்கைச் செலுத்த, 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தச் செல்வாக்கு எங்கும் பரவும் நிலையைப் பெற்றது.

19-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பரந்து விரிந்துகொண்டிருந்த தோட்டங் களில் பிரித்தானியர் தங்கள் முதலீட்டைப் பாய்ச்சிய தோடன்றி, திருவாங்கூர் அரசின் வாணிப நட வடிக்கைகளின் மீதும் தடை விதித்தனர். (காட்-உடன்படிக்கையை நினைத்துக் கொள்க). இதனால் ஏற்பட்ட மாறுதல்களை இந்நூல் விரிவாகப் பேசு கிறது. திருவாங்கூர் அரசைக் கட்டாயப்படுத்தி (எ-கா-திப்புவின் படைகள் எப்போதும் வரலாம். என்னுடைய சிப்பாய்கள் (‘சோற்றுப் பட்டாளங்கள்.’ இவ்வளவு பேரை வைத்துக்கொள்).

 பிரித்தானியரைச் சார்ந்தே அவ்வரசை இருக்கச் செய்தனர். இதனால் வேளாண்மை நேரடியாகவும், மறைமுக மாகவும் பாதிக்கப்பட்டது. அதை இந்நூல் விளக்க மாகப் பேசுகிறது. பிரித்தானியரின் சில கொள் கைகள், உற்பத்திமுறை, அதைச் செலுத்தக் கெடு, நிலவரி செலுத்தத்தின் காலவரம்பு ஆகியவற்றை மாற்றியது.

காடுகளுக்கு எல்லை கோலியது (‘ரிசர்வ் பாரஸ்ட்’ என்று காடுகளை ஒதுக்கீடு செய்தல்; பொதுக் காடுகளுள் மக்கள் நுழையத் தடை போன்றவை). பாசனப் பணிகளும் பாசன அமைப்புகளும் கலைக்கப்பட்டன. (குடிமராமத்து விடைபெற, பொ.ப.து. (PWD) மெள்ள நுழைந்தது). கிராமப்புறச் சமுதாயங்களின் வழமை, சட்ட விதி முறைகளால் தடுக்கப்பட்டது. வேளாண்மையைப் பதித்தது. இவற்றை எல்லாம் நூல் விரிவாக அலசுகிறது.

......நாஞ்சில் நாட்டின் நிலவுடைமை (வேளாண்மை) நடப்பின் மாறுதல்களை இற்றை நாள் வரை ஆராய வேண்டும் என்பது நம்முடைய முந்தைய திட்டம்; ஆனால், ஆய்வு மூலங்களும், காலமும் இல்லாத காரணத்தால் நாம் 1939-ஆம் ஆண்டு வரைதான் பின்சென்று பார்க்க இயலுகிறது.

agararian 4001939-இல் உலக அளவில் பொருளியல் சரிவு ஒன்று ஏற்பட்டது. அது மாறுதலின் முதன்மைக் காரணியாகவும் இருந்தது. ஆகவே, நாம் நம் முடைய ஆய்வின் இறுதிநோக்கின் எல்லையாக அவ்வாண்டைக் குறித்தோம் என்று எழுதுகிறார் ஆசிரியர்.

நாஞ்சிலின் வேளாண் மாறுதல்களை அரசியல் பொருளியல் ஆய்வின் வழியே பார்ப்பதற்காக மாவோவைப் பின்பற்றி மாறுதலின் இயக்கத்தை மூன்று பகுப்பாய்வு வகையினங்களாய்ப் பிரித்துக் கொள்கிறார் பாண்டியன்.

அ. அகநிலைமைகள் அல்லது மாற்றத்திற் கான அடிப்படை

ஆ. புறநிலைமைகள் அல்லது மாறுதலுக் கான நிலைமைகள்

இ.அகநிலைமையினூடே, புறநிலைமைகள் இயங்குவதற்கான திட்டவட்டமான வரையறைகள்.

- மேற்கண்ட ‘முறையியலின்படி’ வேளாண் அமைப்பின் அடிப்படையான உற்பத்தி சக்தி களையும், அவை உற்பத்தி உறவுகளுடன் கொண்டுள்ள தொடர்பையும் வைத்து நாஞ்சில் நாட்டின் அகநிலைமைகளின் பங்கைக் கட்டுரைக் கிறார். உற்பத்தி சக்திகளும், உற்பத்தி உறவுகளும் சேர்த்து, சமூக-பொருளியல் கட்டமைப்பின் அடிப் படையை - உற்பத்தி முறையை - அமைப்பதை நிறுவுகிறார்.

அதற்கு இசைய, கட்டமைப்பு தானே தன்னை மறுஉற்பத்தி செய்யும் திறனையும் அதனுள் விளங்கும் முரண்பாட்டு அடிப்படைக் கூறுகளையும் ஆராயத் தொடங்குகிறார்.

இவ்வகையில் திட்ட வட்டமான கட்டமைப்பில் உற்பத்தி சக்திகளையும், உறவுகளையும் இணைத்துக் காட்டி - வேறு வகையில் சொன்னால் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலுள்ள தொடர் புறுத்த அடிப்படையை நிறுவுகிறார்.

அகநிலைமை களை அல்லது தற்சார்பு உருவாக்கத்தைத் ‘தளப் பார்வையில்’ வைத்துப் பகுத்தாராய்கிறார். (அதாவது, அன்றைய வேளாண் அமைப்பு அமைப்புற்றிருந்த பருமையான அதே ‘நிலை இயக்கமுறை’ச் சித்திரத்தை அப்படியே அளிக்க முயல்கிறார். (அதற்காக ஈ.பி. தாம்சன் என்னும் பிரித்தன் வரலாற்றாளரின் ‘வரலாற்றுக்கணம்’ என்ற கருத்தினத்தைப் பயன்படுத்துகிறார்).

உள்கட்டுமான அடிப்படைகளை வந்தடை வதன் வழி வரலாற்று வழியை அறிந்துகொள்ள முடியும் என்று விளக்கும் பாண்டியன், இதற்குத் ‘தளப்பார்வை அணுகுமுறை’ இன்றியாமையாதது என்று வலியுறுத்தி, ‘வரலாற்றுக் கணத்தின்’ இயல் பான சூழ்நிலையில் அமைப்பின் தனதேயான உற்பத்தித்திறனைத் தெளிவான மொழியில் வெளியிட அது மிகவும் உதவும் என முடிக்கிறார்.

அடுத்து, புறநிலைமைகள் தொடர்பில், பிரித் தானிய அரசியல் - பொருளியல் மேலாதிக்கத்தின் கீழிருந்த முகாமை மேலாண்மைச் சக்தியான திருவாங்கூர் அரசு அறிமுகப்படுத்திய தொடர்ச்சி யான மாற்றங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அம்மாற்றங்கள் கட்டுமானத்தில் நிலவிய ஒன்று படாக் கூறுகள் அல்லது முரண்பாடுகளைத் தீவிர மாக்கியதை - அதாவது கட்டுமானத்தின் திறனைக் குன்றச் செய்த புதிய நிலைமைகளை அறிமுகப் படுத்துகிறார்.

காலத்தில் நடந்த மாறுதல்களைப் பகுத்தா ராயும் போது, புறக்கூறுகள் எவ்வாறு அகநிலை மைகளின் மீது மோதி முரண்பாட்டை முற்றச் செய்தன என்பதையும், பின்னர் அவை கட்டு மானத்தில் பண்பு மாற்றத்தை எவ்வாறு விளை வித்தன என்பதையும் அலசுகிறார்.

எட்டு இயல்களைக் கொண்ட நூலின் முதலிய லான அறிமுகவியலில் மேற்குறித்த ‘சுருக்கமான’ முறையியல் மாதிரியைக் கட்டமைத்த ஆசிரியர் இரண்டாம், மூன்றாம் இயல்களில் நாஞ்சில் நாட்டின் வேளாண் உற்பத்திச் சக்திகளையும், பல்வேறு வர்க்கங்களுக்கிடையே சமூக உற்பத்தியின் வழங்கல் பகிரப்பட்டதையும் எடுத்துரைத்து, தளப்பார்வையைக் கொண்டு, பொறியமைவுகளால் உற்பத்தி சக்திகள் உற்பத்தியை எவ்வாறு விரிவு படுத்தினவோ அவ்வாறே அகமுரண்பாடுகளையும் அமைப்பில் உறைய வைத்தன என்று முடிக்கிறார். இவ்விரண்டு இயல்களின் மூலம் 19-ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில், நாஞ்சில்நாட்டு தற்சார்பு உருவாக்கத்தைக் குறித்த (நிலையான) காலப்படத்தை அவர் அளிக்கிறார்.

நான்காம் இயலில் திருவாங்கூர்ப் பொருளியல் பங்கை ஆராயும் ஆசிரியர், இரு நிலைமைகளின் காரணமாக இவ்வியல் இன்றியமையாததாகிறது என்ற அந்நிலைமைகளைச் சுட்டுகிறார்

(அ) குடி யேற்றவியமே (காலனியமே) எண்ணற்ற மாறுதல் களுக்கு அடிப்படைக் காரணம்.

அது திருவாங்கூர் அரசின் வழியே அறிமுகப்படுத்தப்பட்டது; அம் மாறுதல்களின் விளைவாய் நாஞ்சில்நாட்டு வேளாண்மை கெட்டது.

(ஆ) பகுதியை அதற்குப் பொருத்தமான முழுமைக்குத் திருப்பித் தருவது என்பது அரசியல் - பொருளாதார ஆய்வில் - முறையியலில் - இன்றியமையாததாகும் என்று உணர்த்துகிறார். (இங்குப் பகுதியாவது நாஞ்சில் நாட்டு உற்பத்தி நிலைமைகள்; முழுமையாவது திருவாங்கூரில் இயங்கும் பொதுச் செயல்முறை என்று சுட்டுகிறார்.)

ஐந்தாம் இயலில் புதிதாக வந்த அரசுக் கொள்கை வேளாண் பகுதியின் உற்பத்தி சக்தி களைத் தாக்கியது குறித்து உற்றறிந்து உரைக்கிறார். அரசின் பாசனக் கொள்கைகள் அவற்றை நிறை வேற்றுவதற்கு வேண்டிய பசுந்தாளுரங்கள், தீவனங்கள், மரத்துண்டுகள், தடிகள், கட்டைகள் போன்றவற்றைக் குறித்து விரிவாக எழுதுகிறார்.

ஆறாம் இயலில் வேளாண் ஆட்சிப் பரப்பில் திருவாங்கூர் அரசு அறிமுகப்படுத்திய சமூக (உற்பத்தி) பொருள் வழங்கல் மாற்றங்களைப் பட்டியலிடுகிறார். நான்காம் இயல் தொடங்கி ஏழாம் இயல் வரை ஒரு தொடர்ச்சியையும்,

அக-புற நிலைமைகளுக்கிடையில் அவற்றை ஒன்றிணைக்கும் வடிவங்களையும், அவற்றுக்கான காரணங்களையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

ஏழாம் இயல் நாஞ்சில் நாட்டு வேளாண் களத்தின் மாற்றங்கள் குறித்த பகுப்பாய்வை, அதன் அக-புறநிலைமைகளைத் தனித்திற அலகாகக் கொண்டு ஆய்ந்து, கடனளிக்கும் வகுப்பு (லேவா தேவி), வாரா நிலப்பிரபுகள், உற்பத்தி ஆற்றல் களின் தோற்றம் போன்றவற்றின் தோற்றங்களுடன் முடிக்கிறார். இங்கு மேற்சொன்ன மாற்றங்களுக்கு முகங்கொடுத்த உழவரின் உலகப் பார்வையையும் பொருத்தமான சூழல்களில் வைத்து அலசுகிறார்.

எட்டாம் இயலில், ஆய்வின் பொதுவான முறையியல் வெளிப்பாடுகள் சிலவற்றை ஒருங்கு சேர்த்து முடிவாகச் சிலவற்றை அறிவிக்கிறார்.

“நாட்டுப்புறத்தின் மிகப்பெரும் பிரிவாக அமைந்து, நம்முடைய ஆய்வு உள்ளடக்கிய காலம் முழுதும் இங்கு இயங்கிச் செயல்பட்ட - மிக மோசமான விளைவுகளுக்கு முகங்கொடுத்தவர்கள் என்ற வகையில், நூல் முழுக்க நாம் நாஞ்சில்நாட்டு உழவர்களைச் சூழ்ந்தே நம் கருத்தாடலை நடத்தி யுள்ளோம்” என்று ஆய்வின் திசைவழியைச் சுட்டும் பாண்டியன் ஆய்வின் இடரார்ந்த பகுதியையும் சுருக்கமாகக் கூறுகிறார்.

‘முதலில், நாம் அளவுக்குட்பட்ட புள்ளி விளக்கங்களை அல்லது மதிப்பார்ந்த தரவுகளைப் பயன்படுத்தியுள்ளோம். பல காரணங்களை இதற்குச் சொல்லலாம். பிரித்தானியரின் நேரடி ஆட்சிப் பகுதிகளில் கிடைக்கும் புள்ளிவிவரங்களைப் போலன்றி, திருவாங்கூர் அரசாட்சிப் பகுதிகளில் புள்ளிவிவரங்கள் முறையாக முயன்று சேகரிக்கப் படவில்லை. நமக்குக் கிடைத்த சில தரவுகள்

1920-க்குப் பின், திருவாங்கூர் சமூகத்தின் பல்வேறு நோக்கங்களுக்காக வெளியிடப்பட்டவை. ஆயினும், அவ்வாறு கிடைத்த தரவுகளுங்கூட நம்பகத் தன்மை குறைந்த தரவுகளாக இருந்தன. மேலும், போதிய அளவுக்குத் தனித்தனித் தொகுதிகளாகத் தரவுகள் கிடைப்பதில்லை. இரு வட்டங்கள் தொடர்பாகத் தரவுகள் தேவை எனும்போது மாவட்ட அளவிலான தரவுகள் கிடைக்கின்றன. இடக்கிடப்பியல், வேளாண்மை நடைமுறைகள் தொடர்பான மாவட்ட அளவிலான தரவுகளும் ஒருபடித்தாயில்லை.

ஆகவே, அவை நம்முடைய செயலை முடக்கத் துணைபோவவையாகவே உள்ளன. நாஞ்சில் நாட்டின் இரு வட்டங்கள் நன்செய் (நஞ்சை) நிலமாயிருக்க, மற்ற இரு வட்டங்கள் நெற்பயிரிடத் தோதற்ற மலைப்பாங் கானவையாய் உள்ளன. இதன் காரணமாக, நாஞ்சில் நாடு தொடர்பான புள்ளிவிளக்கங் களுக்கு, மாவட்ட வரைபடங்களையோ, மாவட்ட வேளாண் புள்ளிவிளக்கங்களையோ நாம் பயன் படுத்தவில்லை. (கூட்டுத் தொகுதிப்படங்களைத் தவிர்த்து, தொகுதிப்படங்கள், புள்ளி விளக்கங்கள் ஆகியவற்றையே நம்முடைய ஆய்வில் பயன் படுத்தியுள்ளோம்.

1930-கள் தொடர்பான, அரசின் ஆவணங் களைப் பெற நாம் பெரும் இடரைச் சந்திக்க வேண்டி வந்தது. அது கேரள ஆவணக் காப்பகம் தொடர்பிலானது. அக்காலப் புலனாய்வுத் துறையின் கமுக்க வெளியீடுகள் ‘கூருணர்வு கொண்டவை.’ குறிப்பிட்டுச் சொல்ல முடியாத காரணங்களால் அவற்றைத் தரமுடியாது என்று நம்மிடம் அறிவித்ததாகும். இருப்பினும், நாம் தொகுத்த வாய்மொழி வரலாறுகள் (1930களின்) மேற்கூறிய இழப்பை ஈடுகட்டும் வண்ணம் நிறை வான செய்திகளைக் கொண்டுள்ளன. வளம்மிக்க விளக்கங்களாலான அந்நேர்காணல் பதிவுகளை இறுதி இயலில் பயன்படுத்தியுள்ளோம்.

இறுதியாக சமூக உசாவலில் முறையியல் பிழைகளை வெல்ல வேண்டுமென்றால், எந்த வோர் பகுப்பாய்வும் மக்களை மையமாக வைத்துச் செய்யப்பட வேண்டும்.

 இது தொடர்பில் குறிப் பிடப் பொருத்தமான இடம் என்பதால், இங்கு பெர்ட்டோல்ட் பிரக்ட் என்னும் செர்மானியக் கவிஞரின் போர் அரிச்சுவடியிலிருந்து ஒரு கவிதையின் இரு பத்திகளைத் தருகிறோம். போர்ச் சாதனங்களைப் பற்றிப் பேசும் போது, மக்களின் பங்கைக் கவிதை முன் நிறுத்துகிறது.

...தளபதி உனது தகறி* சக்திமிக்க ஊர்தி

ஆயிரம் பேரை அரைக்கிறது.

அதன் காலடியில் அரணங்கள்**

ஆனால் அதற்கோர் ஒச்சம்!

அதற்கோர் ஓட்டுநர் தேவை;

தளபதி உனது வெடிகுண்டு விமானம் சக்திமிக்கது.

புயலைவிட விரைவு; யானையை விடப் பெரிய

    குண்டையும் தூக்கிச் சுமக்கும்-

ஆனால் அதற்கோர் ஒச்சம்:

அதற்கொரு பொறியாள் தேவை.

-பிரக்ட் 1989-289

* தகறி - டாங்கி

** அரணம் – அடர்ந்தகாடு

Pin It