lakshmiamma 360வரலாறு என்பதே வெற்றி பெற்றவர்களின் வரலாறாக ஆகிப் போகியிருக்கிறது. அதிகாரம் சார்ந்த மைய நீரோட்ட அணுகுமுறைதான் வரலாற்று எழுதியலுக்குப் பயன்பட்டுள்ளது. வர்க்கப் போராட்டம் தான் வரலாறு என்ற பார்வை கீழிலிருந்தும், சமூக இயங்குதளத்திலிருந்தும் வரலாற்றை வரைவதற்கான முயற்சிகளைத் தந்தது. அறியப்பட்ட வரலாறு தனி மனிதப் பிம்பங்களை ஊதிப் பெருக்கி சிலரை வரலாற்று நாயகர்களாக, வாழ்ந்த கடவுளர்களாகச் சித்திரித்தது, இவற்றின் கூட்டுமொத்தமாக Ôவாழ்க்கை வரலாறுகள்Õ சில நாயகபாவங்களை உருவாக்கின.

உலகில் எழுந்த விடுதலைப் போர்களங்கள் அரசியல் விடுதலையோடு, பண்பாட்டு விடுதலையை நோக்கிய நகர்வுகளையும் கொண்டு வந்தன. நாடுபிடி கெடுபிடிகளும், காலனித்துவ ஆதிக்கங்களும் விரட்டி, விலக்கப்பட்டன. விடுதலை அடைந்த தேசங்கள், இனங்கள், மக்கள் தங்கள் நாயகர்களை மட்டுமல்ல தங்கள் அடையாளங்களையும் காணத் தலைப்பட்டனர்.

பின் காலனித்துவச் சிந்தனை முகிழ்த்தது. காலனியக் கருத்தியல்கள் கேள்விக்குள்ளாயின. விளிம்பு மற்றும் அடித்தளத்தில் இயங்கிய பழங்குடிகள், தலித்துகள், கறுப்பர்கள், மூன்றாம் பாலினத்தவர், பெண்கள், குற்றம் சாட்டப்பட்டோர், பொது வெளி மறுக்கப்பட்டோர் போன்றோர் தங்களின் தன்னிலைகளைத் தேடத் தொடங்கினர். தன்வரலாறு என்னும் ஒரு எழுத்து வகை புதிய வீச்சோடு கவனம் பெறத்தொடங்கிற்று. இவை வழக்கமான வாழ்க்கை வரலாறுகள்,  தன் வரலாறுகளில் இருந்து மாறுபட்டன.

எளிய பின்புலத்திலிருந்து, ஒடுக்கப்பட்ட தன்மை யிலிருந்து விடுதலையை நோக்கியப் பயணத்தில் ஈடு பட்டவர்கள் இந்த வரலாறுகளில் அடையாளப் பட்டனர். மட்டுமல்ல, இவை தனி மனித ஆளுமை உயர்வைச் சித்தரிக்கவில்லை. மாறாக, தனிமனிதப் பங்களிப்பின் வழியே ஒரு குழுவின் -  கூட்டத்தின் - சமூகத்தின் வலிகளை, உணர்வுகளை, உறவுகளை நுட்பமாகக் காட்சிப்படுத்தின.

அதுவரை கண்டு கொள்ளப்படாத சமூகங்களைப் பொதுவெளிக்குப் புழக்கப்படுத்தின. இப்பின்னணியில் தமிழிலும் பல தன் வரலாறுகள் கழிந்த சில ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. அண்மையில் வெளிவந்த Òலட்சுமி என்னும் பயணிÓ இவற்றில் வித்தியாசமானது.

எளிய, நெருக்கடிமிக்க குடும்பச்சூழலில் பிறந்து, வளர்வதற்கே போராடி, தனக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டவர் லட்சுமி. மட்டுமல்ல, அவர் ஒரு தீராத உழைப்பாளி; வர்க்க அரசியலில் முழுநேர ஊழியரின் வாழ்க்கைத் துணைவி. நாட்டின் விடுதலைப் போரில் ஈடுபட்ட தேசியத் தலைவர்களைக் காட்டிலும் இன்னல்களைச் சுமந்தவர்கள் பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள்.

பேராயக் கட்சியினருக்காவது ஆட்சி யதிகாரம், அங்கீகாரம் போன்றவை வாய்த்தன. மாறாக, இடதுசாரிகள் எல்லாவற்றையும் இழந்து வரலாற்றிலும் கண்டு கொள்ளப்படாத Ôவரலாற்றைக்Õ கொண்டவர்கள் என்பது கசப்பான உண்மை.

தலைமறைவு இயக்கங்களில் ஈடுபட்டவர்கள், முழுநேரக் கட்சி ஊழியர்கள் ஆகியோரின் வாழ்க்கை, குடும்பம் குறித்தப் பதிவுகள் மிகக் குறைவு. இன்னும் சொல்லப் போனால் Ôதனிநபர் ஆளுமைப் பங்களிப்புகள்Õ நீண்ட காலம் பெயரளவில் கூட இயக்கங்களால் ஏற்கப் பட்டதில்லை. தனிமனித ஒழுக்கப் பின்னணியில் சிதைக்கப்பட்டவர்கள் பலர். பிரம்மச்சரியம், காதல், திருமணம், மறுமணம் போன்றவை மிகத் தீவிரமான விசயங்களாக இருந்ததை (கட்சிக் கட்டுப்பாடு) பல மூத்த தோழர்கள் சொல்வார்கள்.

லட்சுமியின் கதை ஒரு வகையில் முழுநேர அரசியல் பணியாளர்களின் கதை. ஒட்டுமொத்த சமூக மாற்றத்துக்காகப் போராடுகிறவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை இரத்தமும் சதையுமாக இந்நூல் பதிவு செய்கிறது. போராட்டங்களில் நேரடிப் பங்கேற்பு மட்டுமல்ல. போராட்டக்காரர்களின் குடும்ப உறுப்பினர் களாக இருப்பதும்கூட அர்ப்பணிப்புதான் என்பதை இந்நூல் உணர்த்தி நிற்கிறது. லட்சுமி இரண்டு தளங் களிலும் பங்காளியாக உள்ளார்.

Òஎன் கதை - முட்டையை விட்டு வெளியேறி உலகத்தைப் பார்க்கக் கற்றுக்கொண்ட ஒரு சிறு பறவையின் அனுபவம். அப்படி நான் என் வாழ்க்கையில் சந்தித்தப் பெண்களிடம் பல வகையான அனுபவங் களைப் பெற்றேன்.

உழைப்பையே தன் இலட்சியமாகக் கொண்ட பெண்களே என் வளர்ச்சிக்குக் காரணம். அவர்களைப் பட்டியலிட்டுச் சொல்லிவிடலாம் என்று நினைக் கிறேன். இன்றிருக்கும் லட்சுமி இவர்களின் தாக்கமேÓ என முன்னுரையில் லட்சுமி குறிப்பிடுவார்.

அவரின் இளமைக் காலம் மிக சோகமானது. வறுமை என்பது ஒரு புறம். அப்பா, அம்மா, உடன் பிறந்தார், சுற்றம்... என்ற அன்பும் உறவும் கைவிடப் படுதல் கொடுமையானது.

பொறுப்பற்றத் தந்தை. அவருக்கு இரண்டு மனைவிகள். பல பெண்களுடன் தொடர்பு. பெத்த அம்மாவுக்கு இவர் Ôராசியில்லா பிள்ளை.Õ ஓரிடத்தில் இவர் கூறுவது அதிர்ச்சி தருகிறது. Òஅம்மா என்று நான் அம்மாவை அழைத்தது இல்லை.Ó ஆடுமாடு மேய்ப்பது, கிராமத்துக்காடு, கோயில், சிறுவர் - சிறுமியர் உறவு, புளியம்பழம், அரசம்பழம் பொறுக்கித் தின்பது... என்பதாகக் கழிகிறது பால்யம். சக வயது சிறுமிகளுடன் சேர்ந்து படிப்பில் ஆசை வருகிறது. சவேரியர் பள்ளிக்குச் செல்கிறார். சேர்த்துக் கொள்ள மறுக்கிறார்கள். ஆரோக்கியமேரி என்ற டீச்சர் உதவுகிறார். அனாதைப் பிள்ளைகளுக்குரிய விடுதியில் தங்கிப் படிக்கிறார். சீருடைகூட போடமுடியாத சூழல். எட்டாம் வகுப்பு வரை மடத்திலே தங்கிப் படிக்கிறார். ஒன்பதாம் வகுப்புக்கு அங்கிருந்தபடியே அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்கிறார்.

Òஉயர்நிலைப் பள்ளியில் எனக்குச் சீருடை அவசியம் உடுத்த வேண்டும் என்று கூறிவிட்டார்கள். மடத்தில் எனக்கு சீருடை தைத்துக் கொடுத்தார்கள். வெளிநாட்டில் இருந்து மடத்திற்கு வரும் கோதுமை துணிப்பை வண்ணம் நனைக்கப்பட்டு சீருடையாகத் தைக்கப்பட்டது. சக மாணவர்கள் சிலர் கேலி செய்தார்கள். அவர்களின் கேலி என்னை வருத்தப்பட வைக்கவே இல்லை.Ó (ப.30)

எஸ்.எஸ்.எல்.சி.யில் ஆர்வம் குறைகிறது. தோற்றுப் போகிறார். ஆங்கிலம், கணிதத்தில் தேர்ச்சி இல்லை. கணிதத் தேர்வே எழுத முடியாத மனக் குழப்பம், பூஜ்ஜியம் மதிப்பெண். மடத்திலிருந்து வெளியேற வேண்டியக் கட்டாயம். உடன் பயன்றவர் களைக் குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்துச் செல் கிறார்கள். லட்சுமி Òதிக்கற்றுÓ நிற்கிறார். உறவினரான அருள் அண்ணன் வீட்டில் வேண்டா விருந்தாளியாக அடைக்கலமாகிறார். இதுதான் லட்சுமியின் பள்ளி வாழ்க்கை. வழக்கமான எவ்விதப் பாதுகாப்புமின்றி ஒரு காட்டுச் செடி போல ÔதானேÕ வேருக்கு நீர்தேடிய வறண்ட வாழ்க்கை.

படிப்பு நின்று போனது, பிறரைச் சார்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம். டான்டெக்ஸ் பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் சேர்கிறார். ஒரு நாள் சம்பளம் இரண்டு ரூபாய். அதுவும் வாரச் சம்பளம் தான்.

7கி.மீ நடந்து செல்கிறார். அங்கே தொழிற்சங்கத் தொடர்பு கிடைக்கிறது. சி.ஐ.டி.யு தோழர்கள் அறிமுக மாகிறார்கள். குடும்ப உறவு அறுபட்ட நிலையில் தோழமை உறவு அமைகிறது. வேலைக்குச் செல்வது, தொழிற்சங்கத்தில் இருப்பது, அரசியல் சார்பு தந்தைக்குப் பிடிக்காமல் போகிறது. சச்சரவு.  மீண்டும் வெளியே வர வேண்டியச் சூழல்.

Òஎன்றுமில்லாமல் பெரியம்மாவை Ôஅம்மாÕ என்று அழைத்தேன். திரும்பிப் பார்த்தாள். அம்மாவுக்கு ஆச்சரியம், அவர் என்னைப் பார்த்து Ôதூங்கவில்லையா?Õ என்று கேட்டார். நான் இல்லை என்றேன்.

Ôஇந்த வீட்டைவிட்டு நான் போயிடறேன் பெரியம்மாÕ என்றேன். ஒரு நிமிடம் அவள் முகத்தைப் பார்த்தேன். சட்டென்று பதில் வந்தது.

Ôநீ போ, நீ போயிடு. நீ போனாத்தான் என்னைப் பிடித்த சனியன் தொலையும்Õ என்றார்.Ó (ப.44)

பெத்த அம்மாவே வீட்டைவிட்டுத் துரத்துகிற மனநிலையில் பேசுவதை எப்படிச் சகிக்க முடியும்?

கன்னியாஸ்திரி ஆகிவிட முயற்சிக்கிறார். பெற்றோர் அனுமதியுடன் மதம் மாறினால் தான் அது சாத்தியம் என்றவுடன் கைவிடுகிறார். உறவினர், நண்பர் வீடுகளில் காலம் கழிகிறது. தோழமை உறவுகள் கை கொடுக்கின்றன. தோழர்கள் திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள்.

Òநானும் சத்தியவதி டீச்சரும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஜெயபால் தோழர் வந்தார். Ôஉனக்காக ஒரு மாப்பிள்ளை பார்த்

தோம். அவர் வெடிகுண்டு வழக்கில் கைதாகிவிட்டார்Õ என்றார். எனக்கும் டீச்சருக்கும் சிரிப்புதான் வந்தது. முதல் மாப்பிள்ளையே ஓடிவிட்டாரா, ரொம்ப சந்தோசஷம் என்றேன்.Ó என மாப்பிள்ளை பார்த்த கதையை எழுதுவார்.

தோழர் ஜெயபால் மூலம் த.மு.எ.ச நண்பர்கள் டேவிட், மன்னர் மன்னன், அரங்கநாதன் ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இதில் டேவிட் லட்சுமியைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். சில சந்திப்புகள் நடக்கின்றன. டேவிட் தலைமறைவாக உள்ளார் (நெருக்கடி நிலை). அவர்தான் பெ.மணியரசன். Òடேவிட் என்ற மணியரசன் எங்களின் பொக்கிஷம். அவரைக் காத்து இயக்கத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் தோழர் லெட்சுமி வாழ்ந்து காட்ட வேண்டும்Ó என தோழர் ஜி.வீரையன் வாழ்த்தித் திருமணம் செய்து வைக்கிறார்.

மணியரசனை ஊரில் மணிராசு என அழைக் கிறார்கள். அதுதான் அவர் இயற்பெயர். மணியரசன் என மாற்றிக்கொண்டார். அவரின் ஊரான ஆச்சாம் பட்டிக்கு முதல்முறையாகச் செல்கிறார் லட்சுமி. இருட்டு நேரம் இயற்கை அழகு நிரம்பிய ஊர். அப்பா முன்னரே இறந்துவிடுகிறார். அம்மா, தம்பி, தங்கை ஏழ்மையான வாழ்வு. மணியரசனின் பொறுப்பு யாவும் லட்சுமிக்கு வந்து சேர்கிறது. ஊரில் லட்சுமியின் ஒடிந்த தேகத்தைப் பார்த்து பலரும் ஏளனம் பேசுகிறார்கள். தாத்தா முறை கொண்ட பெரியவர் லட்சுமி காது படவே பேசுகிறார்-

Òஅட, எழவே! மணிராசு காத்தாடி மாறி பொண்ணைக் கொண்டுவந்திருக்கான். எப்படிப்பட்ட பொண்ணுங்க நான் நீன்னு கீவுல நிக்குது. அடங்காம அவன் தாத்தா சப்பாணிமுத்து அலைஞ்சான். அவன் தலையை பள்ளனுங்க வெட்டிட்டு போனானுங்க. இப்ப இவன் பொழைக்க வழி தெரியல. இதுல வப்பு வேறÓ என்றார்.

இவர்கள் திருமணத்தை யாரும் அங்கீகரித்ததாகத் தெரியவில்லை. தோழர்களிலும் கூட சிலர் பெ.ம வுக்கு பொருத்தமானவராக லட்சுமி இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த ஏச்சு - பேச்சு, தன் வீட்டின் புறந்தள்ளல் எல்லாவற்றுக்குமாகத் தன்னை நிலைநிறுத்தி வாழ்ந்து காட்ட வேண்டிய நிர்பந்தம் லட்சுமிக்கு வந்து சேர்கிறது.

லட்சுமி திருமணத்துக்கு முன் பஞ்சுமில்லிலும், திருமணத்திற்குப் பின் தோழர்கள், குடியிருப்பில் உள்ளோர் வழியேயும் நிறைய நண்பர்களைப் பெற்றார். அவரின் அனைத்திலும் சாதி, சமயம் கடந்த இந்த நட்புச் சூழல்தான் அவருக்கு உணர்வுப்பூர்வமாக உறவாவதை நூல் நெடுகிலும் பதிவு செய்கிறார்.

பெ.ம மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்தபோது திருமணம் தொடங்கி (1977), அவர் கட்சியிலிருந்து வெளியேறும் (1985) வரை லட்சுமியின் பகிர்வுகள் இதில் இடம் பெறுகின்றன.

நெருக்கடி நிலை நெருக்கடிகள், தலைமறைவு, சி.ஐ.டி,யு, விவசாய சங்க மாநாடுகள், வட்டாரக் குழு, மாவட்டக்குழு கட்சி செயல்பாடுகள்... த.மு.எ.ச நிகழ்வுகள் எனப் பலவற்றையும் அரசியல் பங்கேற் பாளராகவும், பார்வையாளராகவும் எழுதிச் செல்கிறார். இராயமுண்டான்பட்டி தோழர் என்.வி அவர்களின் படுகொலை, அத்தருணத்தில் நிறைமாதக் கர்ப்பிணியாக அவர் படும் துயரம் சொல்லி மாளாது. பெ.ம மீதான கொலை வெறித் தாக்குதலும் நடக்கிறது. செந்தமிழன் கைக் குழந்தையாக இருந்த பொழுது நோய் வாய்ப் பட்டு, கொட்டும் மழையில் தோழர் மன்னர்

மன்னன், அனார்கலியோடு பட்டபாடு... மூனுவயது செந்தமிழனோடு அடுத்த குழந்தை பிரசவத்திற்கு மருத்துவ மனைக்குச் செல்வது, பெண் மங்களம் பிறப்பது, பின்னர் தீராத நோய்க்கு அவளைப் பலி கொடுப்பது... எல்லாம் இக்காலத்தேதான் நடந் தேறுகிறது.

கட்சி, தொழிற்சங்கத் தலைவர்கள், தோழர்களின் அரவணைப்பும், அன்பும் லட்சுமியை பரவசப்படுத்து கின்றன. உரிமை கலந்த உணர்வும், உறவுமாக ஒரு வித கம்யூன் வாழ்க்கை அரங்கேறுகிறது. தோழர்களின் குடும்ப உறவுகள் ஒரு காலத்தில் அப்படித்தான் அமைந்தன. இயக்கம் என்பதே உணர்வுப்பூர்வமாக அன்று இருந்தது.

1979 சி.ஐ.டி.யூ.வின் மூன்றாவது அகில இந்திய மாநாட்டுப் பணிக்காக பெ.ம சென்றுவிட்டார். ஊரில் இல்லை. சாப்பாட்டுக்கு அல்லது செந்தமிழனுக்கு உடல் நலமில்லை என்றால் எல்.ஐ.சி தோழர் என் சீனிவாசனிடம் சென்று பணம் பெற்றுக் கொள்வேன், குழந்தையோடு சென்று அவருக்காக் காத்திருந்த காலங்கள் அதிகம். எனக்கு வேலையில்லை, கைக் குழந்தையோடு வேலைக்குப் போக முடியவில்லை.

வயிற்றுப் பசியை விட, உடைக்கும் பஞ்சம் வந்தது, எப்பொழுதாவது யாராவது வாங்கிக் கொடுக்கும் புடவை, ஜாக்கெட், சிலர் புடவை மட்டும் வாங்கித் தருவார்கள், ஜாக்கெட் இருக்காது. வாங்கிக் கொள்ள பணம் கிடையாது. தோழர் நாகன் மனைவி கூட சில சமயம் ஜாக்கெட் மட்டும் கொடுத்தார். அதுவும் கிழிந்து கொண்டே வந்தது. ஒரே ஜாக்கெட், மூன்று மாதம் துவைத்து துவைத்து ஈரமாகப் போட்டது, ஒருகையில், அதுவும் வெளிப்பக்கம் நைந்து போயிற்று. குளிர் சுரம் வந்தது போல், மானத்தைக் காப்பாற்ற புடவையைப் போட்டுப் போர்த்திக் கொண்டு வெளியில் செல்ல வேண்டியிருந்தது.

நான் எப்படியிருக்கிறேன் என்று பெ.ம விற்கு கவலையில்லை.

சென்னைத் தொழிற்சங்க மாநாட்டிற்குத் தஞ்சையிலிருந்து இந்தப் போர்த்திய நிலையிலேயே சென்றேன். மைதிலி சிவராமன் என்னைப் பார்த்திருக் கிறார்கள். சென்னை தோழர் ஜெயராமன் மனைவி விஜயலட்சுமி என்னைத் தேடிக்கொண்டு வந்தார். எனக்கு வியப்பாக இருந்தது. இவ்வளவு பெரிய கூட்டத்தில் என்னை மட்டும் தேடி வருகிறாரே என்று சந்தோஷம். விஜயலட்சுமிக்கு நான் யார் என்று தெரிந்திருக்கிறது.

என்னை அழைத்துக் கொண்டு அவர் காரில் சென்றார். நானும் அவரைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டேன். சென்னை மூர் மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்றார்.

மூர் மார்க்கெட் எல்லா வகையான பொருட்களும் கிடைக்கும் அற்புத உலகமாய் இருந்தது. பழைய புத்தகங்கள் மலை போல் கிடந்தன. விதவிதமான உடைகள், ஆடம்பரப் பொருட்கள், எதைப் பார்ப்பது என்றே தெரியவில்லை. என்னை விட்டு நழுவும் போர்த்திய புடவையை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டே விஜயலட்சுமி பின்னால் சென்றேன். அவர் என்னைப் பார்த்துச் சொன்னார், இங்கே தாய் தகப்பனை மட்டும் வாங்க முடியாது, பணம் இருந்தால் வேறு அனைத்தையும் வாங்கலாம்!

ஒரு ஆயத்த ஆடை கடைக்கு என்னை அழைத்துச் சென்றார். என் அளவிற்கு அரை டஜன் ஜாக்கெட்டுகள் எடுத்தார். நான் மறைத்து வைத்திருந்த கண்ணீர் உடைத்துக்கொண்டு வந்தது. விஜி என்னை அணைத்து மறைவான ஒரு அறையில் மாற்று ஜாக்கெட் போட்டுச் சரிபார்த்து சந்தேஷப்பட்டார்.

Ôதுரோபதை மானம் காப்பாற்ற கிருஷ்ணன் வந்தாரோ என்னவோ, இன்று விஜி என் மானம் காப்பாற்றினீர்கள்Õ என்று கூறினேன்.

Ôநீ மணியரசன் மனைவி என்று இந்த சோகத்திலும் காண்பித்துவிட்டாய்Õ என்றார்.

விதவிதமான நான்கு புடவைகள். செந்தமிழனுக்கு சில உடைகள். அன்றிரவு விஜி வீட்டிலேயே தங்கினேன்.Ó (பக் 91-92)

இந்த அனுபவம் லட்சுமிக்கு மட்டுல்ல. பல முழு நேர ஊழியர்களின் குடும்ப நிலை இதைவிடவும் கீழாகவே இருந்ததைக் காணமுடியும் அடிப்படைத் தேவைகளைக் கூட குடும்பத்தில் நிறைவேற்ற முடியாத நிலையே பலருக்கும் நேர்ந்தது.

கருத்துநிலை மாறுபட்டால் மார்க்சிஸ்ட் கட்சியி லிருந்து விலகி,  இந்திய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியை (1985) உருவாக்குகிறார்கள். இதன் செயல் பாடுகளில் லட்சுமி அதிகம் ஆர்வம் காட்டவில்லை. காரணம் பழைய கட்சி, தோழர்கள், உறவுகள் ஆகியவற்றிலிருந்து விலக்கிக்கொண்டு வர மனரீதியாக காலம் தேவைப்பட்டது மற்றும் கட்சியிலிருந்து

பிரிதல் என்ற முடிவு பற்றிய அபிப்ராயம். பெ.ம வும் தோழர்களும் தொடர் உள் போராட்டத்தின் விளை வாகவே அதிலிருந்து மாறுபட நேர்ந்ததை அவர் கட்சிப் பொறுப்பாளர்களுக்கு எழுதிய கடிதங்கள் வழி அறிந்த பின்னர் புரிதல் வருகிறது.

1990 வாக்கில் மீண்டும் ஒரு மாற்றம். எம்.சி.பி.ஐ தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆகிறது. இதை யட்டிப் பல போராட்டங்கள், ஈழ ஆதரவு இயக்கங்கள், தமிழ்வழிக்கல்வி, தமிழகப் பெருவிழா, மாணவர், இளைஞர் போராட்டங்கள், காவிரி, அந்நியர் ஆதிக்க எதிர்ப்பு இயக்கம்... எனப் பலவற்றிலும் லட்சுமி உடன் பயணிக்கிறார். போராட்டங்களுக்குத் துணை நிற்கிறார், சில போராட்டங்களில் பங்கேற்கிறார், 2014 வரை நடைபெறும் தமிழ்த் தேசிய நிகழ்வுகளை நூலில் பதிவு செய்கிறார்.

தொழிற்சங்க உறுப்பினர், மாதர் சங்க உறுப்பினர், கட்சி உறுப்பினர் எனத் தன் அரசியல், வர்க்க நிலையை உறுதிப்படுத்திக் கொள்கிறார். வீட்டுத்தலைவியாக பெ.ம. என்னும் அரசியல் தலைமைக்கு எல்லா வகை யிலும் துணை நிற்கிறார். நேரடியான அரசியல் பணியை விட இது சிக்கலானது. அதுவும் இடதுசாரி இயக்கங் களின் தோழர்களின் குடும்பங்களில், நிரந்தர வருவாய் அற்றவர்களின், மனைவி, குழந்தைகள் நிலை என்பது இன்றைய நாளிலும் கேள்விக்குறிதான்.

லட்சுமியின் தனிச்சிறப்பாக பல தன்னியல்பான ஆளுமைக் குணங்கள் இப்பயணத்தில் அவரிடமிருந்து வெளிப்படுகின்றன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இளவயதில் அதிக தொழில்கள் செய்ததாகக் கூறு வார்கள். லட்சுமி அம்மாவும் தொடர்ந்து தன்னை ஓர் உழைப்பாளியாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார். வாழ்க்கைப் போரட்டத்தில் இது ஒரு பகுதிதான் என்றாலும் இதை விரும்பிச் செய்வது இவரின் இயல் பாகவே அமைவதைக் காணலாம்.

பனியன் கம்பெனி வேலை தொடங்கி, ரெடிமேட் கடைக்கு பாவாடை தைத்தல், கோட்டக்கல் ஆயுர் வேதக்கடை மருந்து விற்பனை, மாவு அரைத்துக் கொடுத்தல், வத்தல், வடகம் தாயாரித்து விற்றல், புடவை வியாபாரம், சாக்கு தைக்கும் வேலை, பால் வியாபாரம், பாக்கு மட்டைத் தட்டு விற்றல்... எனத் தொடர்ந்து பல உடலுழைப்புப் பணிகளை அவர் செய்கிறார். எல்லாமே எளிய மக்களோடு தொடர் புடைய வேலைகள். குறிப்பாக பல ஏழைப் பெண் களோடு பழகும் வாய்ப்பு அவருக்கு இவற்றினால் கிடைக்கிறது.

அதே போல லட்சுமி வசிப்பதற்கு வாடகை

வீடு மாறியது. தஞ்சை நகரில் எத்தனை முறை

வீடு மாறுகிறார். எல்லாமே சாதாரண மக்கள்

வாழும் பகுதிகள். குறைந்த வசதிகளுடன், குறைந்த வாடகைக்கான வீடுகள். அதற்குள்ளும் தோழமை விருந்தாளிகள், தோழர்களின் குடும்பங்கள், பிள்ளைகள், பராமரிப்பு....சீனிவாசபுரம் கடைசிப் பகுதி தொடங்கி, பூக்காரத் தெரு, வண்டிக்காரத் தெரு, தாசில்தார் குடியிருப்பு, சிவாஜி நகர், பாத்திமா நகர், நடராஜபுரம் காலனி, புதுலாயம், அன்புநகர், மாரிக்குளம்.... எனப் பல இடங்களுக்கு வீடு மாறுகிறார்கள். இறுதியாக லட்சுமி அம்மா மற்றும் மகன் செந்தமிழன் உழைப்பில் ÔவீடுபேறுÕ கிடைக்கிறது. கட்சி இயக்கத் தோழர்கள் வந்து போகிறார்கள். குடும்பம் நடத்த லட்சுமி தன் முயற்சி மற்றும் உழைப்பையே பெரிதும் நம்பி இருப்பது இந்நூலில் பதிவாகின்றது.

லட்சுமி அம்மா வேலை செய்யுமிடம், குடியிருக்கு மிடம் சார்ந்து எழும் சிக்கல்களைத் தீர்க்கும் முயற்சி களில் ஈடுபடுகின்றார். வெற்றியும் பெறுகின்றார். குடி தண்ணீர், ரேஷன் விநியோகம், சாலை வசதி போன்ற பலவற்றை தான் வாழும் பகுதிகளில் கிடைக்கச் செய் கின்றார். போராட்டக் குணம், மக்களை இயக்க மாக்குதல், எதையும் துணிவுடன் எதிர்கொள்ளுதல் ஆகியன இயல்பிலேயே அமைந்துள்ளதை உணரலாம். திருமணமான புதிதில், லட்சுமி வேலை பார்த்த மில்லில் தொழிற்சங்கப் பகை காரணமாக சிலர் அவரை கேலி செய்கின்றனர். இது தொடர்கிறது. ஒரு நிகழ்வு:

Òஅன்று வழக்கத்தை விட அதிகமாக கேலி செய்தார்கள். இரண்டு பேர் வறம்புமீறிப் பேசினார்கள். ஒருவரையாவது ஏதாவது வகையில் தண்டிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். மணி ஒலித்தது. எல்லாத் தொழிலாளர்களையும் முந்திக்கொண்டு கம்பெனி வாசலில் என் எதிராளிகளுக்காகக் காத்திருந்தேன். பேருந்து செல்லும் சாலை மேட்டிலும் கம்பெனி பள்ளத்திலும் இருந்தது.

எனவே சைக்கிளில் செல்பவர்கள் சைக்கிளைத் தள்ளிக்கொண்டுதான் மேலே ஏறி வரவேண்டும். நான் எதிர்ப்பார்த்த எதிராளிகளில் ஒருவன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்தான். அவன் பள்ளத்திலிருந்து சைக்கிளைத் தள்ளும் போது அவன் சைக்கிளை மறித்து எதிரே போய் நின்றேன். அவன் பெயர் லூர்து.

Ôடேய்Õ என்று அதட்டினேன். Ôஇப்ப சொல்லுடா ஏதோ ஜாடை பேசுறியே இப்ப சொல்லு, எனக்கு நேராகச் சொல்லுÕ என்றேன்.

Ôஆமாண்டீ, அப்படித்தான் பேசுவேன்Õ என்றான்.

அப்படியே சைக்கிளோடு பள்ளத்தில் உருட்டி காலால் மிதித்தேன். ஒருவரும் என்னைத் தடுக்க வரவில்லை. சாலையில் கம்பெனி விடும் நேரத்திற்கு வரும் பேருந்து டிரைவர் ஒலி எழுப்பி அழைத்தார். Ôஅம்மா ஓடி வா. பஸ்ஸில் ஏறுÕ என்று. அப்பொழுது தான் எனக்கு நான் என்ன செய்தேன் என்று சற்று நிதானம் வந்தது. பேருந்தில் ஓடி ஏறிவிட்டேன்Ó (பக் 80-81).

இப்படித் துணிவான செயல்களைச் செய்யக் கூடியவராக அவர் உருவாகிறார்.

சமகால அரசியலும், வரலாறும் சிறு பொறிகளாக நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. லட்சுமி அம்மா செல்லும் முறை தேர்ந்த எழுத்துக் கலைஞரைப் போல உள்ளது.

ஓரிடத்தில் தன் நிலையை இப்படிக் கூறுகிறார் -

Òநான் நேசிப்பவை என்னிடம் நிலைப்பதில்லைÓ

இராயமுண்டான்பட்டி தோழர் என்.வி மறைவை -

Òஎன்வியை நாங்கள் தொலைத்து விட்டோம். கண்ணாமூச்சி ஆடுவதைப் போல எப்படியோ எங்கள் கண்முன்னே என்.வி. கரைந்து போனார்.Ó என்கிறார்.

மேலும் நெருக்கடி நிலையின் போது தோழர்கள் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் முறையைக் Òகிசுகிசுப் போராட்டம்Ó எனப் பதிவு செய்கிறார். நூலில் ஆங்காங்கே பல மாந்தர்கள் குறிப்பாகப் பெண்கள் வித்தியாசமானவர்களாக காட்சி தருவது கவனமாகப் பதிவாகியுள்ளது.

ரெஜினா என்கிற பெண் சோற்றுக்கு வழியின்றி தன் தாய்க்காக தன் நீண்ட கூந்தலை வெட்டி விற்று சோறு போடுகிறாள் (ப. 75).

lakshmibook 360வளர்மதி என்கிற பெண்ணை லட்சுமி அம்மா சித்திரிப்பதைப் பாருங்கள்:

'வளர்மதி வேடிக்கையான பெண். ராஜீவ்காந்தியை காதலிக்கிறேன் என்பாள். பொதிகையில் செய்தி வாசிக்கும் நிஜந்தனைப் போல மாப்பிள்ளை வேண்டும் என்பாள். கமல்ஹாசனின் தீவிர ரசிகை. எங்கள் இரவு கூத்துகளைக் கண்டு கொள்ளாமல் உறங்கும் வீடுகளைப் பார்த்து அவர்கள் அடக்கமாகி விட்டார்கள் என்பாள். வளர்மதி என்னோடுதான் இருப்பாள், செந்தமிழனோடு தான் தூங்குவாள்Ó (ப.130)

மிக அருமையான நிகழ்வுகளைக் கோர்வையாகத் தருகிறார். தன்னுணர்வு அற்ற நிலையில் ஒரு கேமரா படம்பிடிப்பது போல கடந்த காலம் நம் முன் விரிகிறது.

1955ல் பிறந்த லட்சுமி 2015 வரை. ஏறக்குறைய அறுபதாண்டுகள். இதில் இவருக்கு கருத்து தெரிந்த ஐம்பதாண்டுகள், குடும்ப, பொது வாழ்வில் நாற்ப தாண்டுகள்... இந்நூலில் பதிவாகியுள்ளது.

சாதி, சமயம் கடந்துப் பழகி வாழ்வது, ஒரு வித கூட்டுவாழ்க்கைமுறை. பலருக்கு திருமணம் செய்து வைப்பது (கி.வெங்கட்ராமன் - சுகந்தா உட்பட) சாதியின் மூல வேர் அகமணத் திருமண முறையில்தானே உள்ளது. இதை மீறுவது காதல், சாதிமறுப்புத் திருமணங்களால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை இத்திருமணங்கள் மெய்ப்பிக்கின்றன.

குடும்ப நெருக்கடிகள், உடல்மெலிவு - ஒரு கட்டத்தில் தப்பித்தால் போதும் என வீட்டை விட்டுக் கூட வெளியேற நினைத்தல். கால் பிசகி நடக்க முடியாத நிலை. தோழர் பெ.ம வுக்கு வந்த அபூர்வ Ôகண் இரத்த அழுத்த நோய்Õ அதற்கான மருத்துவம்... இப்படி இவரின் பயணம் கடக்க முடியா நெருக்கடி மிக்கதாக உள்ளது.

லட்சுமியின் பயணம் வித்தியாசமானது. பெண் விடுதலை என்பது ஒட்டுமொத்த மானுட விடுதலையின் ஓர் அங்கம்தான் என்ற அரசியலை உள்ளடக்கியது. மார்க்சியம், தமிழியம் (தமிழ்த்தேசியம்) சார்ந்த ஒரு தலைவரின் (பெ.ம) அரசியல் களப்பணிகளில் சக பயணியின் அனுபவ விளைவு. முழுநேர அரசியல் கடமையாற்றுபவர்களின் தனி வாழ்க்கையும் ஒருவகை அரசியல் சார்ந்ததுதான் என்பதை தமிழ்ச்சூழலில் பதிவு செய்யும் முதல் முயற்சி.

இப்பதிவுத் தேர்வுகளில் லட்சுமி அம்மாவின் விருப்பு வெறுப்புகளுக்கு இடமிருக்கலாம். சிலநபர்கள், நிகழ்வுகள் கூட, குறைவாகப் பதிவாகியிருக்கலாம். விடு படல்களும் சாத்தியமே.

(லட்சுமியின் மகன் செந் தமிழனின் பொது வெளிச் செயல்கள் சிலாகிக்கப்படும் நூலில், அவரது திருமணம் குறித்தப் பதிவு இடம் பெறவில்லை) என்றாலும் ஓர் எளிய மனுஷி தனி முயற்சியால், உழைப்பால், தோழமைப் பண்பால், மன உறுதியால் மிக இயல்பாக தன்னை, தன் வாழ்வை நிலை நிறுத்திக் கொள்வது என்பது அசாதாரணமானது.

உழைப்பு, உழைக்கும் பெண்கள், உழைக்கும் மக்கள், இயக்கமாதல், போராடுதல், போராட்டத்திற்குத் துணை நிற்றல் ஆகிய உலகமயச்சூழலில் காயடிக்கப்பட்ட  மானுடத்தின் விழுமிய குணங்களை உயர்த்திப்பிடிக்க வேண்டியிருக்கிறது.

இயக்கமற்றத் தன்மைக்கு எதிராக தொடர்ந்து தன் வெளியை லட்சுமி விசாலப்படுத்துகிறார். பெண்ணே ஓர் இயக்கம் என்பது மறுபடியும் லட்சுமி அம்மா மூலம் நிரூபணமாகிறது.

கழிந்த ஐம்பதாண்டுகளின் தமிழ்ச் சமூக அரசியல், பண்பாட்டு, சமூக வரலாற்றின் ஒரு சிறு பகுதியாக Òலட்சுமி என்னும் பயணிÓ என்னும் இத் தன்வரலாறு திகழும்.

நூலை மிக அழகாக, பிழையின்றி வெளியிட்டுள்ள மைத்ரி பதிப்பகம் பாராட்டுக்குரியது. ஆய்வறிஞர் வ.கீதாவின் முன்னுரையும், லட்சுமி அம்மா உடனான ப்ரேமா ரேவதியின் உரையாடலும் Ôபெண் அரசியல்Õ முன்னெடுப்புகளாகக் கவனிக்கத்தக்கன.

லட்சுமி என்னும் பயணி
லட்சுமி அம்மா
வெளியீடு: மைத்ரி
49 பி, ஒமேகா ப்ளாட்ஸ், 4வது லிங்க் சாலை,
சதாசிவ நகர், மடிப்பாக்கம்,
சென்னை - 91
விலை: ரூ. 240

 

Pin It