புதுக்கோட்டைக்குப் புதுக்கோட்டை என்று யார் பெயர் சூட்டியிருப்பார்? மன்னரா மக்களா?, இல்லை அதுவாகவே அந்தப் பெயரை சூட்டிக்கொண்டதா? புதிய கோட்டை எனப் பொருள்படும் இக்கோட்டையில் இதற்கும் முன்பு பழைய கோட்டைகள் இருந்தனவா? இருந்திருந்தால் எத்தனை கோட்டைகள் இருந்தன போன்ற கேள்விகளிலிருந்துதான் புதுக்கோட்டைக்கான பெயர்க் காரணத்தை நாம் கண்டடைய முடியும்.

கோட்டை என்றால் கோட்டைகள்தானா? இல்லை. கோட்டை என்பதற்குப் பல பொருள்கள் நம்மிடம் உண்டு. வானத்தில் ஒரு திசையில் திரளும் மேகத்திற்குக் கோட்டை என்றே பெயர். "வானம் கோட்ட கட்டுது. மழை வெளுத்து வாங்கப்போவுது" என்பதான சொல்லாடல் இன்றைக்கும் உண்டு. சிலம்பாட்டத்தில் ஒருவர் பல சிலம்புகளின் தாக்குதலை எதிர்கொண்டு மறித்துக்கட்டுவதற்கு கோட்டை என்றே பெயர். பெரிய மரங்களைக் கொண்ட காட்டிற்குக் கோட்டை என்று பெயர். வீட்டின் உட்கூடு கோட்டை. இருபத்தொரு மரக்கால்கள் கொண்ட அளவையின் அலகு கோட்டை. நில அளவையாகவும் கோட்டை இருக்கிறது. அரண்மனை எழுப்பி, அத்துடன் தேர், யானை, படைபலங்களை நிறுத்தத் தேவையான நிலத்திற்குக் கோட்டை என்று பெயர்.

pudhukottai 600வைக்கோல் போர், கோட்டை. இலை தழைகளைப் பறித்து மொத்தமாகக் கட்டுவதற்குக் கோட்டை என்று பெயர். கொட்டை நீக்கப்பட்ட புளியை ஒரு கூடையில், சாக்கில் குத்தி அடைப்பதற்குக் கோட்டை என்றே பெயர். இத்தனை கோட்டைகளிருக்க கோட்டை என்றால் பெரும்பாலும் மாடம், மாளிகையோடு மட்டுமே ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.

மன்னன் தங்குமிடமும் மன்னனுக்குரிய பரிவாரங்கள் நிறுத்தப்படும் இடம் கோட்டையே. அதாவது பாதுகாப்பு அரணுடன் கூடிய கட்டடம். பிரம்மாண்டத்தின் குறியீடாக கோட்டை இருந்து வருகிறது. இதுதவிர மனக்கோட்டை என்கிற சொல் உண்டு. வெளியில் சொல்லாமல் மனதிற்குள் ஒன்றைப் பெரிதாகத் திட்டமிடுதல்.

பூசலார் என்கிற நாயன்மார் ஏழை. இவர் சிவனுக்கு ஓர் ஆலயம் எழுப்ப ஆசை கொள்கிறார். ஒவ்வொரு நாளும் மனதிற்குள் பெரிய கோட்டை எழுப்பி, ஆலயம் கட்டுகிறார். ஒரு மன்னன் சிவனுக்கு உண்மையாகவே ஓர் ஆலயம் எழுப்பி, குடமுழுக்கு நடத்த நாள் கேட்க, சிவன் பூசலார் எழுப்பிய மனக்கோட்டை கோவிலின் குடமுழுக்கு இருப்பதால் வேறொரு நாளில் குடமுழுக்கை நடத்தும்படி கேட்டுக்கொள்கிறார். இங்கு கோட்டை என்பது பெரிய தூண்.

நாம் பொருள் கொள்ளும் கோட்டை என்பது பெரிய தூண்களுடன் தொடர்பு கொண்டது. இச்சொல் தானியங்கள் சேமிக்கும் இடம், கிடங்கு, கலன், தளம் இவற்றிலிருந்து மருவி வந்தது. நெல் மற்றும் தானியங்களை மலையைப் போல சேகரித்து மழைக்கும் வெயிலுக்கும் ஒரு சேதாரமில்லாமல் பாதுகாக்க சுற்றிலும் நெல் வைக்கோலைப் போர்த்தி அதன்பிறகு வரகு வைக்கோலைக் கிடத்தி அதன்மீது புற்றுமண்ணைக் கொண்டு மெழுகுவதற்குக் கோட்டை என்று பெயர். இந்தக் கோட்டையிலிருந்தே கட்டடத்தின் பிரமாண்டக்கூடு கோட்டையானது.

பண்டைய தமிழர்கள் சோளக்குழி, பத்தாயம், குதிர், பூரி, குதம்பை, கோட்டை முறைகளில் நெல் தானியங்களைச் சேமித்தும் பாதுகாத்தும் வந்தார்கள். இதில் கோட்டை என்பது பெரிய அளவிலான உணவுப்பொருட்களைப் பாதுகாக்கும் இடம். உணவுப் பொருட்களின் காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டவன் கோட்டைக் காவலன். இன்றைய உயர்அதிகாரிகளில் ஒருவரான கோட்டாட்சியர் இதிலிருந்து வந்ததுதான். கோட்டை - கோட்டம்.

தானியக் கோட்டைகளை விளைநிலங்களில் அமைக்கமுடியாது. அப்படியாக அமைத்தால் மறுபோகம் வேளாண்மை செய்ய இயலாது. கோட்டையை நீர்ப்பிடிப்பு பகுதி, பள்ளமான பகுதிகளில் அமைக்கமாட்டார்கள். மேடான, வறட்சியான, மழைப் பொழிவு குறைவான பகுதிகளில் இந்தக் கோட்டைகளை அமைத்தார்கள். இப்படியான மேடான பகுதி நிலப்பகுதிகளைக் கொண்ட நிலம் கலசமங்கலம். கலசமங்கலம் என்பது கலசம், மங்கலம் எனப் பிரித்தறிந்து பொருள் காணவேண்டும். கலசம் என்றால் மேடு அல்லது உயரம். மங்கலம் என்றால் வரி இல்லாத நிலம் அல்லது தலைமை ஊர். இன்றைய புதுகோட்டையின் பழைய பெயர் கலசமங்கலம். இந்தக் கலசமங்கலம் தானியங்களைச் சேமிக்கும் இடமாக இருந்திருக்க வேண்டும். மேலும் கலசம் என்கிற சொல் தானியங்களுடன் தொடர்புகொண்டது. விதைப் பொருட்களைச் சேமிக்கும், பாதுகாக்கும் கலனுக்குக் கலசம் என்று பெயர். கோவில் கும்பத்தில் வைக்கப்படும் வெங்கலம் அல்லது தங்கக் கும்பத்திற்குக் கலசம் என்றே பெயர். குடமுழுக்கு நடத்துபவர்கள் அதற்குள் விதைத் தானியங்களை வைத்து அதன்மீது தண்ணீர் தெளிக்கின்றனர். ஒருவேளை இந்த உலகம் இயற்கைச் சீற்றத்தால் அழிய நேரிட்டால், இந்தக் கலசத்திலுள்ள தானியங்களால் உலகம் உயிர்பெறும், என்பதற்காகவே குடமுழுக்கு எனும் விழா நடத்தப்படுகிறது.

கலசமங்கலம் மழை குறைவான, வறட்சியான நிலப்பகுதியாக இருந்திருப்பதால் சுற்றிலும் விளையும் தானியங்களை மன்னருக்கு இறைக்கு கொடுக்க வேண்டிய நெல்கள் சேமிக்கும் இடமாக இருந்திருக்கிறது. இன்றைக்கு விளையும் நெல்கள் அரசு கொள்முதல் செய்துகொள்ள ஆங்காங்கே கோட்டையைப் போல கொட்டி வைத்திருப்பதைப் போல அன்றைக்குப் பாதுகாப்பான இடங்களில் சேமித்து வைத்திருக்கிறார்கள். இயற்கைச் சீற்றம், கள்ளன், இன்னும் பிற காரணங்களால் அந்த இடத்தில் பெரிய கட்டடம் எழுப்பி, ஒரு பகுதிக்குள் மன்னன், ஜமீன், அம்பலம், குறுநில மன்னன் வசிக்கும் இடமாகவும் இன்னொரு பகுதியில் தானியங்களைச் சேமிக்கும் கிடங்காகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதுவே கோட்டை என அழைக்கப்பட்டிருக்கிறது. பிற்பகுதியில் கலசமங்கலத்தில் பொற்பனைக்கோட்டை என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை எழுப்பப்பட்டிருக்கிறது. இந்தக் கோட்டை மீது வல்லம் குறுநில மன்னர்கள் படையெடுப்பு நடத்தியதாக பதிவுகள் உண்டு. இந்தப் பொற்பனைக் கோட்டையைச் சுற்றிலும் பல கோட்டைகள் உண்டு. ஆதனாக்கோட்டை, கண்டராக்கோட்டை, வல்லத்திராக்கோட்டை... இப்படியாக.

தொண்டைமான்கள் கலசமங்கலப் பகுதியை ஆட்சி செய்யத் தொடங்குகையில் திருவேள்பூர்க்கும் கிழக்கில் அதாவது இன்றைய புதுக்கோட்டை நகரப்பகுதியில் ஒரு பரந்த நிலத்தைத் தேர்வு செய்து, செப்பனிட்டு நகரம் அமைத்திருக்கிறார்கள். அதற்குத் தேவையான நிலம் ஒரு கோட்டை அளவாக இருந்திருக்கிறது.

ஒரு கலப்பை நிலம், ஒரு கோட்டை நிலம், ஒரு பட்டி நிலம் என்பது பண்டைய தமிழர்களின் நில அளவை முறைகள். ஒரு கலப்பையால் ஒரு நாள் முழுவதும் உழுது முடிக்கும் நிலம் ஒரு கலப்பை நிலம். ஓர் ஆடு ஒரு நாள் முழுக்கவும் மேய்ந்து பசியாறும் நிலம் ஒரு பட்டி. மன்னன், அவனது பரிவாரங்களான யானை, குதிரை, தேர்கள் உலாவி, மேய்ந்து சுற்றிவரும் அளவிலான நிலம் ஒரு கோட்டை. குடியிருப்பு நிலத்தின் மிகச்சிறிய அலகு பட்டி. பெரிய அலகு கோட்டை. புதுக்கோட்டையில் ஆயிரத்து நூற்றி எழுபத்து ஆறு பட்டி கிராமங்களும் அறுபத்து ஐந்து கோட்டை கிராமங்களும் உள்ளன.

புதுக்கோட்டை சமணர்கள், பௌத்தர்கள், சோழர்கள், பாண்டியர்கள், முத்தரையர்கள், நாயக்கர்கள், கிழவன் சேதுபதி, தொண்டைமான்கள் எனப் பலரும் ஆளப்பட்ட நிலப்பகுதி. தொண்டைமான்களால் இப்பகுதி ஆளப்படுகையில், இந்நிலம் நிலையான ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. அப்போது அவர்கள் ஆண்ட பகுதியைத் தொண்டைமான் சீமை என்றே அழைக்க விரும்பியிருக்கிறார்கள். அப்படியாகவும் ஆவணங்களில் குறிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சேரர், சோழர், பாண்டியர்கள் அவரவர் ஆண்ட நிலப் பகுதியைச் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என அழைத்துக் கொண்டதைப் போல. அப்படியாக மன்னன் அழைக்கத் தொடங்கிய அல்லது விரும்பியதற்கும் முன்பே அந்நிலம் சுற்றுவட்ட மக்களால் புதுக்கோட்டை என அழைக்கப்படலாயிற்று. அதாவது புதுக்கோட்டை என்பது புதிய பெரிய நிலப்பரப்பு.

புதுக்கோட்டை சமஸ்தானம் பற்றிய ஆங்கிலேயர் பதிவில் புதுக்கோட்டையில் கோட்டை இல்லாத காலத்தில் புதுக்கோட்டை என மக்களால் அழைக்கப்பட்ட குறிப்பு இருக்கிறது. மேலும் ஆங்கிலேயர்கள் இந்நிலத்தைத் தொண்டைமான் சீமை என்று பதிவுசெய்துள்ளார்கள். ஆக, இந்நிலப்பரப்பு மன்னர்களால் தொண்டைமான் சீமை என்று அழைக்க விரும்ப, ஆனால் மக்கள் புதுக்கோட்டை என்றே அழைத்திருக்கிறார்கள். மன்னர் மக்களது விருப்பத்தின் மீது கெடுபிடி காட்டாமல் மக்கள் வழங்கும் பெயருக்கு இசைவு தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டப் பெயர்களில் இளமையான பெயர் புதுக்கோட்டை. திரிபு, மருவலுக்கு உட்படாத பெயர். ஜுன் 8, 2022 புதுக்கோட்டைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், இவ்வாறு தன் உரையைத் தொடங்கினார். “ எந்தக் கோட்டையாக இருந்தாலும் அதுவொரு நாள் பழைய கோட்டையாக ஆகிவிடும். ஆனால், எப்போதும் புதிய கோட்டையாக இருப்பது இந்தப் புதுக்கோட்டைதான்” என்று. கோட்டை கட்டடங்களாகக் கொண்டால் பழைமையாகக் கூடும். இங்கு கோட்டை என்பது நிலம், நிலஅளவை பழைமை ஆவதில்லை.

திருச்சி மாவட்டத்தின் ஒரு வருவாய் கோட்டமாக இருந்த புதுக்கோட்டை தனி மாவட்டமாக ஆனதற்குப் பின்னே ஒரு சுவாரசியமான ஒரு கதை உண்டு. இப்போது புதுக்கோட்டை தனி மாவட்டம், ஆனால் நாடாளுமன்றத் தொகுதியாக அல்ல. 1974 ஆம் ஆண்டிற்கு முன்பு புதுக்கோட்டை தனி மாவட்டம் அல்ல, ஆனால் தனி நாடாளுமன்றத் தொகுதி. 1962 ஆம் ஆண்டு புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக புதுடெல்லிக்குச் சென்றவர் உமாநாத். கம்யூனிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் பஞ்சாலை முதலாளியை முப்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைய வைத்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் பிரபல தோல் ஆலை முதலாளி நாகப்ப செட்டியாரை விட பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்று கேள்விக்கும் மேல் கேள்வி அடுக்கிப் பேசுவதில் பிரபலமடைந்தவராக இருந்தார் உமாநாத். அப்போது பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், நாடு முழுவதும் மிகவும் பின்தங்கிய பகுதிகளைக் கண்டறிந்து, அப்பகுதிகளை முன்னேற்ற சிறப்புத் திட்டங்களை அமல்படுத்த தனி கமிட்டியை அமைத்தார். இந்தக் கமிட்டி உத்திரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிகள் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பகுதியென்று அறிக்கை கொடுத்தது. அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதப் பொருளாக மாறுகையில், உமாநாத் புதுக்கோட்டையை மிகவும் பின்தங்கிய பகுதியாக அறிவிக்க வேண்டி வேண்டுகோள் வைத்தார். பிரதமர் நேரு அவர்கள் இதற்கு மவுனம் சாதித்தார். “புதுக்கோட்டை விசயத்தில் நேரு ஏன் மவுனம் சாதிக்கிறார். நேரு பிறந்த மாநிலத்தில் புதுக்கோட்டை மக்கள் பிறக்கவில்லை என்றா? புதுக்கோட்டை மக்கள் என்ன பாவம் செய்தார்கள், அவர்கள் செய்த குற்றம்தான் என்ன", என்று கேள்விகளாகத் துளைத்து புதுக்கோட்டையை விவாதப் பொருளாக்கினார்.

இதற்கு பதில் சொல்ல முன் வந்த பிரதமர் அவர்கள், “புதுக்கோட்டை நன்கு வளர்ச்சியடைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ளடங்கிய ஒரு கோட்டம். ஒரு பகுதி ஒரு மாவட்டத்தின் கோட்டமாக இருந்தால் மாவட்டத்தின் ஒரு பகுதியைப் பின்தங்கிய பகுதியாக அறிவிக்க முடியாது” எனப் பதில் அளித்தார். “அப்படியானால் புதுக்கோட்டையைத் திருச்சிராப்பள்ளியிலிருந்து பிரித்து தனி மாவட்டமாக ஆக்குங்கள்” எனக் கேட்டுக் கொண்டார்.

உமாநாத் அவர்கள் 1921, டிசம்பர் 21 ஆம் தேதி ராம்நாத் ஸெனாய் - நேத்ராவதி தம்பதியருக்கு காசர்கோடு நகரத்தில் கடைசி மகனாகப் பிறந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எ ஆனர்ஸ் படிப்பில் பொருளாதாரத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்தவர். கட்சியின் கட்டளையை ஏற்று படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரானவர்.

புதுக்கோட்டை தனி மாவட்டம் பேசும் பொருளானது. இதற்கு ஆதரவும் இருந்தது. எதிர்ப்பும் இருந்தது. அப்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்தது திராவிட முன்னேற்றக் கழகம். இந்தியாவை ஆள்வது காங்கிரஸ். காங்கிரஸ் நிர்வாகத்தைக் குடையும் கேள்வியாக உமாநாத்தின் கேள்வியிருந்ததால், மறைமுகமாக அவரது கேள்விக்குத் தமிழ்நாடு அரசின் ஆதரவு இருந்தது. அதே நேரம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுவிட்டார், என்பதற்காக ஒரு மாவட்டத்தின் ஒரு கோட்டமாக இருக்கும் ஒரு பகுதியைப் பிரித்து தனி மாவட்டமாக அறிவித்துவிட முடியாது, என்கிற நிலையும் இருந்தது.

புதுக்கோட்டை கோட்டத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டி விவசாயிகளின் மத்தியில் போராட்டம் எழுந்தது. இந்தப் போராட்டத்தைக் கம்யூனிஸ்ட்களே நடத்தினார்கள். புதுக்கோட்டை அஞ்சலகத்திற்கும் முன்பு சுமார் இருநூறு விவசாயிகள் ஒன்று திரண்டு மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்பொழுது மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்பது அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பே நடத்தப்படுவதாக இருந்தது. தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு ஒரு கிளை அஞ்சலகத்திலிருந்து குறித்த நேரத்திற்கு அஞ்சல் வந்து சேரவில்லையென்றால் அப்பகுதியில் என்னவோ ஒரு பிரச்சனை என்று தலைமை அஞ்சலகம் பிரச்சனையைக் கேட்டுப்பெற்று மத்திய தலைமையிடத்திற்குச் செய்தி அனுப்பும் துறையாகவும் அஞ்சலகத் துறையாகவும் இருந்தது. அப்படியாக ஆர்ப்பாட்டம் செய்த இருநூறு விவசாயிகளைக் கைது செய்து திருச்சிராப்பள்ளி சிறையில் அடைத்தது மாநில அரசு. நாடாளுமன்ற உறுப்பினர் உமாநாத்தும் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு சிறை கண்காணிப்பாளர் உமாநாத்தைத் தனியே அழைத்து உங்களை மட்டுமே விடுதலை செய்ய உத்தரவு வந்திருக்கிறது என்கிற செய்தியை அவருக்குத் தெரிவிக்க, இருநூறு விவசாயிகளையும் சிறையில் சந்தித்து, விரைவில் அனைவரையும் விடுதலை செய்யும் முயற்சியில் இறங்குகிறேன், என உத்தரவாதத்துடன் வெளியே வந்த உமாநாத்தை அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியுடன் தொடர்புகொண்டு அனைவரையும் விடுதலை செய்யும் முயற்சியில் இறங்கினார்.

அதன் பிறகும் புதுக்கோட்டை தனி மாவட்டத்திற்கு ஆதரவாக ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது. தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக 1974 ஆம் ஆண்டு, ஜனவரி 14 அதாவது தை 1 அன்று புதுக்கோட்டை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் மிகவும் பின்தங்கியிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை முன்னேற்றுகின்ற வகையில் 1974 ஆம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவித்தார். மேலும் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைத்திட ராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்கள், தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொகைக்கு மகிழ்ச்சியுடன் அரசிற்கு வழங்கினார்.

அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மாமன்னர் அவர்களின் திருவுருவச் சிலையினை 14.03.2000 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திறந்து வைத்து, அந்த அலுவலகத்திற்கு மன்னர் ராஜகோபால தொண்டைமான் மாளிகை என்றும் பெயர் சூட்டினார். "மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்நன்னாளில் மன்னரின் எளிமையையும் மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளை நினைவு கூரும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் புதுக்கோட்டை நகரில் மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும்” என்றார்.

மக்களாட்சி நாட்டில் மன்னர்களைக் கொண்டாடுவதும், விழா எடுப்பதும் சரியாகுமா என்கிற கேள்வி பரவலாக எழுந்தது. இந்தக் கேள்வியையொட்டிதான் மாவட்ட நிர்வாகம் அரசு விழாவுக்கு மறுப்புத் தெரிவித்தது. அதேநேரம் மன்னரின் மீது அன்பும் மரியாதையும் அபிமானம் கொண்டவர்கள் முன்னெடுத்த விழாவில் அரசுசார் துறைகளை கலந்துகொள்ள அனுமதித்தது. புதுக்கோட்டை சார் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு மன்னரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் புதுக்கோட்டை தனியரசு மீது நெருக்கடி கொடுப்பதற்கு முன்னதாகவே புதுக்கோட்டையை இந்திய ஒன்றியத்துடன் இணைத்துவிட்டவர், அவர். புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்துடன் ஒருங்கிணைந்த மாவட்டமாக இணைக்கப்பட்டது. முறையாக புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்துடனே இணைத்திருக்க வேண்டும். புதுக்கோட்டையை தொண்டைமான்கள் ஆட்சி செய்துகொள்ள, ராமநாதபுரத்தை தனியரசாக ஆண்ட கிழவன் சேதுபதி அவர்கள் திருமய்யம், ஆலங்குடி, புதுக்கோட்டை பகுதிகளை அவர் கொடுத்திருந்தார். அப்போது புதுக்கோட்டை, இந்தப் பெயரில் அழைக்கப்பட்டிருக்கவில்லை. கலகமங்கலம் என்றும் கலசக்காடு என்றும் அழைக்கப்பட்டது.

புதுக்கோட்டை பூகோள ரீதியில் தஞ்சாவூருக்கும் அருகாமை மாவட்டம். அம்மாவட்டத்துடன் இணைக்கவே முதலில் ஆலோசிக்கப்பட்டது.

தஞ்சாவூர், பரப்பளவால் பெரிய மாவட்டமாக இருந்தது. மேலும், மன்னர் காலத்தில் தொண்டைமானுக்கும் மராட்டிய அரசுக்கும் இடையில் பகையும் முரணும் இருந்திருக்கிறது. புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நடந்தேறிய ராஜரீதியான ரகசியங்களை ஆங்கிலேய அரசுக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவித்தவர்கள் தஞ்சையை ஆண்ட நாயக்கர்கள், மராட்டியர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களால் புதுக்கோட்டையை கண்காணிக்க கந்தர்வகோட்டையில் குடிவைத்த மராட்டிய குடும்பங்கள் உண்டு. தஞ்சாவூர், புதுக்கோட்டை அருகாமை நகரமாக இருந்த போதிலும் கலாச்சார ரீதியாக புதுக்கோட்டை

தஞ்சாவூருடன் நட்புறவாக இருந்ததில்லை. தஞ்சாவூர் சோழப் பேரரசுக்குக் கீழும் அன்றைய கலசமங்கலம் எனச் சொல்லப்படுகிற புதுக்கோட்டை பாண்டிய அரசின் கீழும் இருந்த ஆட்சிப் பகுதிகள்.

சுதந்திர இந்தியாவின் போது தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மராட்டியத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் அதிகார பிடியில் இருந்தது. புதுக்கோட்டையை ஆதிக்கம் செலுத்தியவர்கள் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். மராட்டியர்கள், தெலுங்கர்கள் இருவருக்குமிடையில் தொடக்கத்திலிருந்தே வணிகம், வியாபாரம், கலாச்சார கூறுகளில் நல்ல உறவு இருந்ததில்லை. மேலும், தஞ்சாவூர் நிர்வாகத்தின் கீழிருந்த அறந்தாங்கி ஆங்கிலேய அரசுடன் தொண்டைமான் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் ராஜரீதியான ரகசிய உதவிக்குக் கொடுக்கப்பட்ட பரிசாக அவ்வூர் புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டிருந்தது. இது அன்றைய மராட்டிய அரசுக்கு வீழ்ச்சியாகவும் தொண்டைமானுக்கு வெற்றியாகவும் பார்க்கப்பட்டது. மேலும், புதுக்கோட்டை கடலை எல்லையாகக் கொண்டிராத தனியரசாக இருந்துவந்தது. கடல் உப்பு, மீன் வளம், கடற்போக்குவரத்து, இயற்கையான பாதுகாப்பு எல்லைக்கு கடற்கரை எல்லை புதுக்கோட்டைக்குப் பெரிதும் தேவைப்பட்டது. ஆகவே பிரிட்டிஷார்கள் அறந்தாங்கி, மீமிசல், மணமேல்குடி பகுதிகளைப் புதுக்கோட்டை தனியரசுடன் இணைத்தார்கள். அதே பகுதி சுதந்திர இந்தியாவிற்குப் பிறகு தஞ்சாவூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, புதுக்கோட்டை புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதன் பிறகு மீண்டும் புதுக்கோட்டை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.

புதுக்கோட்டை, சிவகங்கைக்கு மிக அருகாமைப் பகுதியாக இருந்தபோதிலும் அத்தோடு இணைய வாய்ப்பு இருந்திருக்கவில்லை. காரணம் பிரிட்டிஷார் தென்னிந்தியாவிற்குள் நுழைந்த காலம் தொட்டே பிரிட்டிஷார்களை எதிர்த்துப் போராடிய மண். மேலும், வீரபாண்டிய கட்டபொம்மன் பிடித்துக் கொடுக்கப்பட்ட காளியாப்பூர் அந்தப் பகுதியிலேயே உள்ளது. புதுக்கோட்டை தொண்டைமான்கள் ஆட்சி செய்கையில் அவர்கள் பாதுகாப்பு அரணாக இருந்தது திருச்சிராப்பள்ளிதான். திருச்சி, பிரிட்டிஷ் பகுதி என்றும் புதுக்கோட்டை ஸ்டேட் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. மன்னர் குடும்பத்தார்கள் இரண்டிலும் குடியிருக்கும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். மேலும், அவர்கள் திருச்சியில் புதுக்கோட்டை அரண்மனை என்கிற பெயரில் அரண்மனை எழுப்பி, வாழ்ந்துவந்தார்கள். அப்படியான உரிமையை அன்றைய பிரிட்டிஷ் அரசு மன்னர் குடும்பத்திற்குக் கொடுத்திருந்தது. இதன் அடிப்படையில்தான் புதுக்கோட்டை தனியரசு திருச்சிராப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது.

மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு புதுக்கோட்டையைத் தனி மாவட்டமாகப் பிரிக்கையில், முந்தைய புதுக்கோட்டையுடன் இணைந்திருந்த அறந்தாங்கியை தஞ்சாவூரிலிருந்து பிரித்து புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது. மேலும் அறந்தாங்கி, குளத்தூர் இரண்டும் முந்தைய தொண்டைமான்களால் ஆளப்பட்ட பகுதிகள். இவர்கள் வேறு பிந்தைய தொண்டைமான்கள் வேறு.

புதுக்கோட்டை தனி மாவட்டமாக அறிவிக்கப் பட்டதன் பிறகு, மாவட்டத்தின் தலைமை அலுவலகமாக செயல்பட மேற்கு புதிய அரண்மனையை விலைக்குக் கேட்டது மாநில அரசு. தொண்ணூற்று ஒன்பது ஏக்கர் உள்ளடங்கிய அந்த அரண்மனையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்காகக் கொடுத்தார் ராஜகோபால தொண்டைமான். இந்த அரண்மனைக்கு எதிரில் சற்றுத் தள்ளி தெற்கில் ஒரு மாளிகை இருந்திருக்கிறது.

மன்னர் ராஜகோபால தொண்டைமான் திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணம் நிகழ்ந்து ஆண் குழந்தை பிறந்தால் அக்குழந்தை மன்னராக முடியாது, என்பதால் அவர் திருமணத்தை மறுத்திருந்தார். மேலும், புதுக்கோட்டைக்கு அவர் வந்துசெல்வதையும் தவிர்த்திருக்கிறார். முனிவரைப் போல வாழ்ந்த மன்னரை மக்கள் 'ராஜரிஷி' என அழைத்திருக்கிறார்கள்.

இது குறித்து, ‘இந்தப் பூமியில் நான் கழித்த பொழுதுகள்’ எனும் நூலில் ப.உமாபதி பதிவு செய்திருக்கிறார். எழுதியிருக்கிறார். இவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிய காங்கிரஸ் ஒரு காரணம். அதேபோன்று புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளியுடன் இணைய அவர்களே காரணம். சுதந்திரப் போராட்டம் உச்சத்திலிருக்கையில் புதுக்கோட்டை தனியரசாக இயங்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் காங்கிரஸ்காரர்களே.

புதுக்கோட்டையின் கடைசி மன்னர் ஸ்ரீபிரகதாம்பாதாஸ் ராஜகோபால் தொண்டைமானின் பிறந்தநாள், ஜூன் 23. அதே மாவட்டம் பெருங்களூரில் பிறந்து தமிழில் முதல் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலனின் பிறந்தநாள், ஜூன் 27. இருவரும் 1922 ஆம் ஆண்டு பிறந்தவர்கள். 2022 ஆம் ஆண்டு இருவருக்கும் நூற்றாண்டு. மன்னரின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட எல்லா வகை முயற்சிகளும் எடுக்கப்பட்டன. மாவட்ட நிர்வாகம் அதற்கு இணங்கவில்லை. அதேநேரம் மன்னருக்கு மணி மண்டபம் கட்டப்படுமென மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிக்கை செய்தார். அது குறித்த அவரது அறிக்கையில், “தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்கள், தனது பதவிக் காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனிற்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்த பெருமைக்குரியவர்.

புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட 1974 ஜனவரி மாதம் 14 ஆம் நாள் தாரை தப்பட்டையுடன் முதல் ஆட்சித் தலைவர் ராமதாஸ் இ.ஆ.ப அவர்கள் பணியேற்றிருக்கிறார். இன்றைய இந்தியாவில் அதிக நிலப்பரப்புடன் கூடிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதுக்கோட்டை. புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சுதந்திர இந்தியாவுடன் இணைத்த மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா நான்கு நாள் விழாவாகக் கொண்டாடி முடிக்கப்பட்டது. மக்களாட்சி நாட்டில் முந்நாள், இந்நாள் மந்திரிகள் பலர் குறுநில மன்னர்களாக வலம் வருகிற இக்காலத்தில் ஒரு தனியரசின் மன்னராக இருந்து, இதற்கு மேலும் இந்த அரசு தனியரசாக நீடிப்பது சரியில்லையென்று அவராகவே பல இலட்சம் ரூபாய் கஜானாவுடன் புதுக்கோட்டையை இந்திய ஒன்றியத்துடன் இணைத்து, மேலும் நூறு ஏக்கர் அளவிலான நிலங்களைக் கொண்ட புதிய அரண்மனையை கேட்டுக்கொண்டதற்கிணங்க வழங்கியவர். இவருக்கு விழா எடுப்பது தவறில்லை", என்கிற ஆதரவு குரலும் உண்டு.

- அண்டனூர் சுரா