பூனாவுக்கு ரயிலில் வந்து சேர்ந்த சர் தேஜ் பகதூர் சப்ருவும், ஜெயகரும் புதன்கிழமை காலை 7.30க்கு சிறைச்சாலையில் காந்தியை சந்தித்து, 10 மணிவரை அவருடன் விவாதித்தனர்.அவர்கள் கிளம்பும்போது, மறுநாள் காலை மீண்டும் சந்திப்பதாக அவர்கள் கூறினர். பேட்டிக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை பின்வருமாறு கூறுகிறது :

“சர் தேஜ் பகதூர் சப்ரு, திரு. ஜெய்கர், திரு. ராஜகோபாலாச்சாரி, திரு. பாபு ராஜேந்திர பிரசாத் மற்றும் பிர்லா அடங்கிய தூதுக் குழு, திரு. காந்தியுடன் இன்று காலை ஒரு நீண்ட பேட்டியை நடத்தியது. நேற்றைய பேச்சுவார்த்தைகளில் வகுக்கப்பட்ட திட்டத்தை அவரிடம் விளக்கிக் கூறினர். பேட்டி நம்பிக்கை அளிப்பதாகவே இருந்தது. ஆனால், அவர் எதையும் முடிவாகக் கூறவில்லை. இது பற்றி டாக்டர் அம்பேத்கர், திரு. ராஜா உள்ளிட்ட நண்பர்களுடன் மேலும் விவாதித்த பின்பே தமது இறுதியான கருத்தை வெளியிடப் போவதாக திரு. காந்தி தெரிவித்தார்.''

ambedkar_408எனவே, தூதுக் குழுவினர் மேலும் ஒரு நாள் பூனாவில் தங்கினர். இந்த யோசனையின் மூலகர்த்தாவாகிய டி.பி. சப்ரு, இந்த யோசனை திரு. காந்தி ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும், இவ்வாறு பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கப்படும் என்றும் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். தூதுக் குழுவில் சென்றவர்கள் திரு. காந்தி நன்றாகவும் உற்சாகத்துடனும் இருப்பதைக் கண்டனர்.

டாக்டர் அம்பேத்கர் நள்ளிரவு ரயிலில் கிளம்பினார். அதே நாளில் ராஜாவும் மாளவியாவும்கூட, பூனாவிற்கு பம்பாயிலிருந்து கிளம்பினர். செவ்வாய்கிழமை காலை, அதாவது 1932 செப்டம்பர் 22 ஆம் தேதி, டாக்டர் ராஜேந்திரப் பிரசாத்துடனும் ராஜகோபாலாச்சாரியுடனும் காந்தி பேசினார். ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல்களில் சிலவற்றிற்கே கூட்டு வாக்காளர்களின் தேர்வுக்கு விடுவதை தாம் விரும்பவில்லை என்று கூறினர். முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல்கள் எல்லா தொகுதிகளுக்கும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். நேஷனல் ஓட்டலில் டாக்டர் அம்பேத்கருக்கு இது எடுத்துக் கூறப்பட்டது. மீண்டும் சூழ்நிலை சூடு பிடித்தது. இதற்கிடையே, ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு தனித் தேர்தல் தொகுதிகளை ரத்து செய்யும்படி கேட்டுக் கொண்டு, பிரிட்டிஷ் பிரதமருக்குத் தந்தி அனுப்ப வேண்டுமென்று சில தலைவர்கள் கூறினர்.

அதே நாளில், சர் தேஜ் பகதூர் சப்ருவும் பாரட்லா ஜெயகரும் டாக்டர் அம்பேத்கரை நேஷனல் ஓட்டலில் சந்தித்து மேற்கண்ட விவரங்களை எடுத்துக் கூறினர்.

ஆனால், தனித் தொகுதிகளுக்கு மாற்றாக அவருக்கு அளிக்கப் போகின்றவை பற்றி திட்டவட்டமான நிலையைத் தெளிவுபடுத்தினால், தாம் பிரிட்டிஷ் பிரதமர் தங்களுக்கு அளிக்க முன்வந்துள்ள தனித் தொகுதிகளை இழக்கத் தயாராக இருப்பதாக, டாக்டர் அம்பேத்கர் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் அவர்களிடம் கூறினார். மேலும், தாம் கானல் நீரைத் தேடி ஓடும் மனிதரல்ல என்றும் கூறினார். சூழ்நிலை சுவாரசியமற்ற நிலையிலிருந்து நம்பிக்கை இழக்கும் கடுமையான நிலைக்குச் சென்றது. ஜெயகர், சாப்ரு மற்றும் மாளவியா ஆகியோர் காந்தியை சிறைச் சாலையில் நண்பகல் சந்தித்தனர். அவர்களைத் தொடர்ந்து பி. பாலு மற்றும் ராஜா அவரைச் சந்தித்து, அவருக்கு நிறைவளிக்கும் உடன்பாடு ஒன்றை உருவாக்கப் போவதாக அவர்கள் சொன்னார்கள்.

பின் மாலைப் பொழுதில் ஜெயகர், சப்ரு, பிர்லா, சுனிலால் மேத்தா மற்றும் ராஜகோபாலாச்சாரி பின்தொடர, காந்தியை சிறைச்சாலையில் சந்திக்க டாக்டர் அம்பேத்கர் சென்றார். அது மிகக் கடுமையான அரசியல் நெருக்கடி நிலை. இவர்கள் சிறைச்சாலை முற்றத்திற்குள் நுழைந்தபோது, உயரம் அதிகமில்லாத ஒரு மாமரத்தின் குளிர்ச்சியான நிழலின் கீழ், மிருதுவான சிறைச்சாலை மெத்தை விரிக்கப்பட்ட ஒரு வெள்ளை நிற இரும்புக் கட்டிலில் காந்தி படுத்திருந்தார். காந்திக்கு அருகே சர்தார் பட்டேலும் சரோஜினி (நாயுடு)வும் அமர்ந்திருந்தனர். கட்டிலுக்கு பக்கத்தில் தண்ணீர், சோடா பாட்டில்கள் மற்றும் உப்பும் வைக்கப்பட்டிருந்தன.

டாக்டர் அம்பேத்கர் கட்டிலை நெருங்கியதும், ஆழ்ந்த அமைதியும் மிகுந்த எதிர்பார்ப்பும் கோலோச்சின. சிக்கல் நிறைந்த இந்த அமைதி, டாக்டர் அம்பேத்கரை நெகிழச் செய்யுமா? காந்தியைப் பார்த்ததும் டாக்டர் அம்பேத்கரின் பிடிவாதம் கரைந்துவிடும் என்று ஜெயகர் ஏற்கனவே சொல்லியிருந்தார். பலம் வாய்ந்த மனிதர்கள் மீது தமது தாக்கத்தைச் செலுத்தி, அவர்களை தமது ஆற்றல்வாய்ந்த வெள்ளத்தில் மூழ்கடித்த காந்தி என்ற மாமனிதர் முன்னால் இப்போது டாக்டர் அம்பேத்கர் அமர்ந்திருக்கிறார்.

சிறைச்சாலைக்கு வெளியில் கடுமையான புயல் காற்று வீசிக் கொண்டிருக்க, உள்ளே ஆழ்ந்த அமைதி நிலவியது. டாக்டர் அம்பேத்கர் அமைதியாகவும் தெளிவாகவும் இருந்தார். சூறாவளி போன்ற இந்த நிகழ்வுகளில் பலவீனமான ஒரு மனிதர் புதையுண்டு போயிருப்பார். ஆனால், டாக்டர் அம்பேத்கர் தமது இனத்தினரைத் தமது உயிரைவிட அதிகமாக நேசித்தார். அவரது சொந்த மகிழ்ச்சியைவிட, தம் மக்களின் மகிழ்ச்சியில் அதிக அக்கறை காட்டினார்.

காந்தி பலவீனமாக இருந்தார். அவர் படுக்கையில் படுத்திருந்தார். பேச்சுவார்த்தைகள் தொடங்கின. காந்திக்கு எல்லா விவரங்களை யும் சப்ரு எடுத்துரைத்தார். இந்துக்களின் கருத்தை மாளவியா முன்வைத்தார். அடுத்து, மிருதுவாக அமைதியாக டாக்டர் அம்பேத்கர் தொடங்கினார். மெதுவான குரலில் அவர் சொன்னார் :

“மகாத்மாஜி, எங்களிடம் நீங்கள் மிகவும் நியாயமற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள்.''

காந்தி பதிலளித்தார் : “எப்பொழுதும் நான் நியாயமற்ற முறையில் நடப்பதாகத் தோன்றுவது எனது விதி. அதைப் போக்க என்னால் இயலவில்லை.''

பேட்டி நீண்டதாக அமைந்தது. மிகப் பெரும்பாலும் டாக்டர் அம்பேத்கர்தான் பேசினார்; காந்தி பலவீனமாக இன்னமும் படுக்கையில் படுத்திருந்தார். “எனக்கு சேர வேண்டிய இழப்பீட்டை நான் பெற விரும்புகிறேன்'' என்று டாக்டர் அம்பேத்கர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். “நீங்கள் கூறும் மிகப் பெரும்பாலான விஷயங்களில் நான் உங்களுடன் இருக்கிறேன். ஆனால், என்னுடைய உயிர் மீது அக்கறை கொண் டுள்ளதாக நீங்கள் கூறுகிறீர்கள்'' என்றார் காந்தி.

டாக்டர் அம்பேத்கர் : “ஆம், மகாத்மாஜி, உங்கள் உயிர் மீது நான் அக்கறை கொண்டுள்ளேன். ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் நலனுக்காக, தாங்கள் முற்றிலுமாக தங்களை அர்ப்பணித்துக் கொண்டால், தாங்கள் எங்களின் புகழ்பெற்ற வீரராக ஆகிவிடுவீர்கள்.''

காந்தி : “நல்லது, எனது உயிர் மீது தாங்கள் அக்கறை கொண்டிருந்தால், அந்த உயிரைக் காப்பாற்ற நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதைத் தாங்கள் அறிவீர்கள். தாங்கள் கூறியதிலிருந்து தங்கள் நிலை இதுதான். அதாவது, பிரிட்டிஷ் பிரதமரின் முடிவின்படி ஏற்கனவே தாங்கள் பெற்றுக் கொண்டதை கைவிடும் முன் அதற்குப் போதுமான விலையை, இழப்பீட்டை பெறத் தாங்கள் விரும்புகிறீர்கள். தாங்கள் முன்வைத்துள்ள இரட்டை வாக்கெடுப்பு, முறையற்ற தரப்பினர் முன்னேற வாய்ப்பை அளிக்கிறது என்றும், பட்டியல் முறையில் இடங்கள் நிரப்பப்படுவது தாங்கள் கூட்டத்தினரின் விருப்பங்களை நிறைவுபடுத்துகிறது என்றும் தாங்கள் கூறுகிறீர்கள். சில தொகுதிகளுக்கு மட்டும் ஏன் பட்டியல் முறையைக் கோருகிறீர்கள்? எல்லா தொகுதிகளுக்கும் அந்த முறையை தாங்கள் ஏன் பரிந்துரை செய்யவில்லை?

“ஒரு பகுதியினருக்கு பட்டியல் முறை நல்லது என்றால், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் அனைவருக்கும் அது நல்லதாகவே இருக்க வேண்டும். விஷயத்தை இவ்வாறுதான் நான் பார்க்கிறேன். பிறப்பால் நீங்கள் தீண்டத்தகாதவர். என்னுடைய நிலையில் உள்ள ஒரு மனிதன் வியக்கத்தக்க ஒரு நிலையை எடுப்பதாகத் தோன்றும் ஒன்றைச் சொல்லப் போகிறேன். அதாவது தத்தெடுப்பின் மூலம் நான் தீண்டத்தகாதவன். எனவே, மனதில் உங்களைவிட அதிகமான ஒரு தீண்டத்தகாதவன் நான். எந்த ஒரு நல்ல திட்டமும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் நலனை மட்டும் பாதுகாப்பதாக இருக்கக் கூடாது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனைவர் நலனையும் அது பாதுகாக்க வேண்டும். இதுவே இந்தத் திட்டத்தை நான் நிர்ணயிப்பதன் அளவுகோலாகும்.

“ஒதுக்கப்பட்ட சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு இந்தப் பட்டியல் முறை நல்லதாக இருந்தால், அதை ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் அனைத்துத் தொகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். இது எனது முதல் பரிந்துரை. கோட்பாட்டு அடிப்படையிலோ, நடைமுறையிலோ உங்கள் சமூகத்தினரை என்னிடமிருந்து பிரிக்கும் எண்ணத்தையே என்னால் சகித்துக் கொள்ள முடியாது. நாம் பிரிக்க முடியாதபடி ஒன்றாக இருக்க வேண்டும். நான் நமது மற்ற நண்பர்களிடம் கூறியபடியே, சில தொகுதிகளுக்கு ஒரு பெயர்ப் பட்டியலைத் தேர்ந்தெடுக்கும் உங்கள் திட்டத்தை ஏற்றுக் கொள்வதில் எந்த சிரமத்தையும் நான் உணரவில்லை. இதை எல்லா தொகுதிகளுக்கும் செய்யலாம் என்பதை ஒரு பரிசாக உங்களுக்கு வழங்க நான் விரும்புகிறேன். இப்பொழுது உள்ள திட்டத்தை நான் விரும்பவில்லை என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன். அது, உங்கள் சமூகத்தைப் பிளவுபடுத்தும். அதைத் தடுக்க நான் எனது உயிரையே கொடுப்பேன். இந்து சமூகம் முழுவதையும் சீர்குலைப்பதைத் தடுக்க எனது உயிரையே கொடுத்துக் கொண்டிருப்பது போலவே இதைச் செய்வேன்.''

டாக்டர் அம்பேத்கர், காந்தியின் யோசனையை ஏற்றுக் கொண்டார். பேட்டி முடிவடைந்தது. பட்டியலில் எத்தனை பேர் இருக்க வேண்டும், மாகாண சட்டசபையில் இடங்களின் எண்ணிக்கை, முதல்கட்ட முறையின் காலம், ஒதுக்கப்பட்ட இடங்களின் விநியோகம், பணி இடங்கள் விநியோகம் ஆகியவை பற்றிய விவரங்களை முடிவு செய்ய தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

டாக்டர் அம்பேத்கரும் டாக்டர் சோலங்கியும் திரு. காந்தியைச் சந்தித்தபோது, பூனாவில் அப்போது இருந்த தலைவர்களில் மிகப் பெரும்பான்மையோர் அவர்களுடன் சென்றனர்.

23 செப்டம்பர் வெள்ளிக்கிழமை விடிந்தது. வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுவோர் எண்ணிக்கை பற்றி மணிக்கணக்கில் காரசாரமாக விவாதம் நடந்தது. மேலும், தொகுதிகள் பற்றிய விஷயமும் விவாதிக்கப்பட்டது. மாகாண சட்டப் பேரவைகளில் 192 இடங்களை அம்பேத்கர் கோரினார். தலைவர்கள் அதை 126 ஆகக் குறைத்தனர். பேச்சுவார்த்தைகள் இழுபறியாக இருந்தன. நேரம் வெகு வேகமாக கரைந்து கொண்டிருந்தது. 10 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, சில விஷயங்கள் காந்தியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. டாக்டர் அம்பேத்கரின் கருத்துகளை காந்தி ஏற்றுக் கொண்டார். ஆனால், இன்னமும் அதிகாரப்பூர்வ தேர்தலின் காலம், ஒதுக்கப்படும் இடங்களின் காலவரையறை குறித்த பொது வாக்கெடுப்பு முதலியவை பற்றிய விவாதம் தோல்வியில் முடியலாம் எனத் தோன்றியது. முதல்கட்டத் தேர்தல் முறை 10 ஆண்டுகள் முடிந்தவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். ஆனால், அதே நேரம், ஒதுக்கப்பட்ட இடங்கள் என்ற பிரச்சினை, மேலும் 15 ஆண்டுகள் முடிந்தவுடன் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கெடுப்பு மூலம் தீர்வு செய்யப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.  

– வளரும்

Pin It