“சீ தூமயக்குடி மூதேவி கொல்லு அவள” என்று வயதான பெண் பார்வையாளர்கள் காறித்துப்புவார்கள். அவர்களின் எச்சில் தரையில் அமர்ந்திருக்கும் சிறுவர்கள் மேல்படும். அவர்கள் என்ன பாட்டி இது என்பார்கள். பாட்டிகள் முந்தானையால் அவர்களின் உடலைத் துடைத்து விடுவார்கள். இது போன்ற நிகழ்ச்சிகளை நல்லதங்காள் தோல்பாவைக் கூத்தில் ஆறு ஏழு தடவை பார்த்திருக்கிறேன்.

nalla thangaalதோல்பாவைக் கூத்து நிகழ்ச்சிகளில் அதிக வசூல் வருவது நல்லதங்காள் கதைக்கு மட்டும்தான். ஒரு ஊரில் இக்கதை இரண்டு அல்லது மூன்று தடவைகள் நடத்துவதுமுண்டு. 80க்கும் மேல் பார்வையாளர்கள் வருவார்கள். சிறுவர்கள் குறைவு; பெரும்பாலும் பெண்கள்; அசோகவன சீதையின் துக்கத்தைப் பார்த்துக் கண்ணீர் விட்டவர்கள் நல்ல தங்காளின் ரசிகர்கள்.

நல்லதங்காள் பஞ்சம் பிழைக்க தன் அண்ணன் நல்லதம்பி வீட்டிற்கு வருகிறாள். அண்ணன் வீட்டில் இல்லை. அண்ணனின் மனைவி அலங்காரி நல்ல தங்காளை உபசரிக்கவில்லை. உளுத்துப்போன அரிசியைக் கொடுத்து கஞ்சி வைத்து ஏழு குழந்தைகளுக்கும் கொடு என்கிறாள். பச்சை வாழைத்தடையைக் கொடுத்து அடுப்பில் வைக்கச் சொல்லுகிறாள்.

இந்தக் காட்சியில்தான் பார்வையாளர்கள் பழித்துப் பேசினார்கள். இதன் உச்சம் கடைசிக் காட்சியில் வெளிப்படும். நல்லதங்காள் ஏழு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளுகிறாள். அண்ணன் நல்லதம்பி தங்கையின் இறப்பிற்குக் காரணமான அலங்காரியைப் பழிவாங்குகிறான்.

 உளுவத்தலையனும் உச்சிக்கொப்புளானும் அலங்காரியை சுண்ணாம்புக் காளவாயில் தள்ளுவதற்கு இழுத்துச் செல்லுவார்கள். உச்சிக்குடும்பன் பாடுவான்,

என்னடி அலங்காரி உன்

கண்ணுல மையி இது

யாரு வச்ச மையி இந்த

மொட்டயன் வச்ச மையி - நீ

முன்னாலே போனா நாங்க

பின்னாலே வாறோம்

கட்டபுள்ள நெட்டபுள்ள

கழுதமேல போற புள்ள

என்று பாடும்போது உளுவத்தலையன் “ஏலே இப்படியா பாடுவா; கும்மியடிச்சு ஒப்பாரி பாடுலே” என்பான். அவனும் பாடுவான்.

மூளி அலங்காரி மூதேவி சண்டாளி

தாயாரம்மா தாயாரே

நல்லதம்பி பெண்டாட்டி

மூளி அலங்காரி மூதேவி சண்டாளி

தாயாரம்மா தாயாரே

தவிச்ச தண்ணி கொடுக்கமாட்டா

மூளியலங்காரி மூதேவி சண்டாளி

கலித்த பாக்கு கொடுக்க மாட்டா.

இப்படியே அவள் பாடும்போது உளுவத் தலையன் ‘ஒய் கொல்லு விடாத படி' என்று சப்தமிடுவான்.

இந்த நேரத்தில் பெண் பார்வையாளர்கள் ஆவேசப்பட்டு கத்துவார்கள். கூ... கூ... என்னும் குரல்; கொல்லு கொல்லு என்னும் சப்தம் ஒருமித்ததாய் கேட்கும். இங்கு பார்வையாளர்கள் அலங்காரியைத் தங்கள் மருமகள்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால் ஆவேசம் கட்டுக்கடங்காமல் ஆகும். மருமகள் மாமியார் சண்டை நிரந்தரமானது, அதனால்தான் நல்லதங்காள் கூத்துக்கு இன்னும் கூட்டம் கூடுகிறது.

இந்த மாதிரி ரசிகர்களில் தாரதம்மியம் கிடையாது; வேறுபாடும் கிடையாது. இசை பற்றி ஞானம் இல்லாத அரசன், ரசனை இல்லாமல் கவிதை இயற்றும் புலவன், ருசி பார்க்கத் தெரியாத கணவன் என இப்படிப்பட்டவர்களைப் பற்றி வாய்மொழிக் கதைகள் உண்டு.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வாரைப் பற்றி ஒரு வாய்மொழிக் கதை உண்டு, இது மலையாளத்திலும் வழங்குகிறது, குலசேகரர் கதாகாலட்சேபக்காரர் ஒருவரிடம் இராமாயணக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் இராமன் கரனை வதைத்தது பற்றிய கதையைச் சொன்னார்.

கரன் தன் வீரர்கள் புடை சூழ சிங்கம் பூட்டிய தேரில் ஏறி இராமனை எதிர்க்க வந்தான். இராமன் தனிமையில் வில்லை வளைத்து போர் தொடுக்க நின்றான். தனியே அவன் நின்று செய்த போரைப் பின்னர் பார்க்கலாம் என்று சொல்லி நிறுத்தினார் கதை சொன்னவர். இதைக் கேட்டுக் கொண்டிருந்த குலசேகர ஆழ்வார் “அய்யோ ராமன் தனியாக மாட்டிக் கொண்டானே” என்று சொல்லிக் கொண்டே வாளை உருவினார். தன் படைத் தலைவனிடம் நம் வீரர்களைத் திரட்டு என்றார். தலைவர் “அரசே! இது கதை நிகழ்வு; கதை முடிந்ததும் போகலாம்" என்றார். கதை முடிந்தது; ஆழ்வார் தெளிந்தார்.

எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் சினிமா வந்த புதிது, தூத்துக்குடி டூரிங் டாக்கீஸ் ஒன்றில் அந்தப்படம் ஓடியது. எம்.ஜி.ஆர். வில்லன் நடிகரின் முன்னே ஆயுதம் இல்லாமல் தவித்தபடி நிற்பார். தரைப்பகுதி பார்வையாளர்களின் நடுவில் இருந்த ரசிகர் ஒருவர் தன் மடியிலிருந்த கத்தியை திரைச்சீலையின் மேலே எறிந்துவிட்டு "வாத்தியாரே பிடித்துக்கொள்" என்று ஆவேசமாகக் கூவினாராம். திரை கிழிந்தது. இந்த நிகழ்ச்சி அன்று பிரபல பத்திரிகையிலும் வந்தது.

கீசகவதம் யட்சகான நிகழ்ச்சி ஒன்றில் பீமன் உண்மையிலேயே தன்னை மறந்து கீசகனைக் கொன்றுவிட்டான் என்ற செய்தியை யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். நாட்டார் நிகழ்த்துக் கலைஞர்கள், கலை நிகழ்த்தும் போது தன்னை இழந்து விடுவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். இது சடங்கு சார்ந்த கலைகளுக்கு மிகவும் பொருந்தும். பார்வையாளர்களிடம் தன்னை இழக்கும் நிகழ்ச்சி இயல்பாகவே நடக்கிறது.

கலைஞன் கலைநிகழ்த்தலில் தன்னை இழப்பது போல பார்வையாளனும் தன்னை இழந்திருக்கிறான். இந்த ரசனை ஒற்றை நேர்கோட்டு சிந்தனை உடையதல்ல. செம்பருத்தி சீரியல் பார்ப்பவர்களுக்கும் புதுமைப்பித்தனைப் படிப்பவருக்கும் வித்தியாசம் உண்டு. தெருக்கூத்து ரசிகரும் தோல்பாவைக்கூத்து ரசிகரும் ஒருவரல்லர். சுந்தர ராமசாமியின் வாசகனுக்கும் சாண்டில்யன் வாசகனுக்கும் உள்ள இடைவெளி கலை, இசை ரசிகர்களுக்கும் உண்டு.

தோல்பாவைக் கூத்துப் பார்வையாளர்களின் ரசனை 40களில் இருந்தது போலவே 70களில் இருக்கவில்லை. நான் 1974ல் கோபாலராவையும் 80களில் பரமசிவராவ், சுப்பையாராவ் போன்றோரையும் சந்தித்த போதெல்லாம் தோல்பாவைக்கூத்து பார்வையாளர்களின் ரசனை பற்றித் தொடர்ந்து பேசியிருக்கிறேன்.

கோபாலராவை (1882 - 1976) கோவில் திருவிழாக்காலத்தில், ஊரின் ஒரு புறத்தில் ஊர் மக்களின் வேண்டுகோளுக்காக கூத்து நடத்தியதைக் குறிப்பிட்டார். திருவிழா சமயத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினர் ஊரில் நடமாட அனுமதி இல்லாத காலத்தில் தோல்பாவைக்கூத்து நடத்திய கணிகர் சாதியினர் தெருவில் நடமாடத் தடை- யில்லை. 90களில் விடுதலைப் போராட்டத் தியாகி நாகலிங்கம் அவர்களும் இதை உறுதி செய்தார்.

இன்று ஒடுக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இச்சாதியினர் நடத்திய கூத்தின் ரசனை - 30களில் வேறாக - இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வில் கதாபாத்திரங்களின் உரையாடல் மாற ஆரம்பித்திருக்கிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோபாலராவ் நடத்திய கூத்தில் வந்த ஜாம்பவானுக்கும், அவரது மகன் பரமசிவராவ் 80களில் நடத்திய கூத்தில் வந்த ஜாம்பவானுக்கும் உள்ள இடைவெளியே கூத்தின் ரசனை மாற்றத்தைக் காட்டும்.

கோபால்ராவின் கூத்தில் வந்த ஜாம்பவான் பாற்கடலைக் கடைய தேவர்களுக்கு உதவியவன். வாமன அவதாரத்தில் வாழ்ந்தவன்; பாகவதத்தில் வருபவன். இவனுக்கு ஜாம்பவி என்ற மகள் இருந்தாள். இவனை கிருஷ்ணன் மணம் செய்தான். சியாமாந்தக மணியைப் பெற கிருஷ்ணன் ஜாம்பவானுடன் சண்டை இட்டான் என இப்படியான பல கதைகளை இவனை அறிமுகப்படுத்திய கோபாலராவ் சொன்னதாக சுப்பையா ராவ் சொன்னார்.

ramayanamபரமசிவராவ் முழுமூச்சாய் கதை நடத்த ஆரம்பித்த போது ஜாம்பவானின் நிலை மோசமாகிவிட்டது. அவன் மதிப்பிழந்த கதாபாத்திரமாகி விட்டான், உளுவத்தலையன் என்னும் தமாஷ் பாத்திரம் ஜாம்பவானை “ஏ சம்பா அரிசி” என்று அழைப்பான். சிலசமயம் “கிழட்டுப்பிணமே” என்பான். ஜாம்பவான் மட்டுமல்ல, விபீஷணனின் மகள் திரிசடையைக்கூட உளுவத்தலையன் “கோணவாயி குண்டி பருத்தா" என்று ஏசுவான்.

சுக்கீரிவனின் படைகளின் நிலையை அறிந்து கொள்ள சுகன், சுகசாரணன் என்னும் இரண்டு உளவாளிகள் வருவார்கள். அனுமன் இவர்களை அடையாளம் கண்டு இராமனிடம் அழைத்து வருவான். இராமன் இராவணனிடம் அனுப்பி வைப்பான், இவர்களில் சுகன் இராவணனுக்கு அறிவுரை சொன்னதால் வெளியேற்றப்படுகிறான்.

இந்த சுகன் முந்தைய பிறவியில் பிராமண சந்நியாசியாக இருந்தவன். இராவணன் என்ற அரக்கனின் சூழ்ச்சியால் அகத்தியருக்கு மாட்டு மாமிசத்தைப் படைத்து அரக்கனாகும்படி சாபம் பெற்றவன்; இராமனை சந்திக்கும் போது முக்தி பெற சாப விமோசனம் பெற்றவன். இவனைப் பற்றிய இந்தக் கதை கோபாலராவுடன் முடிந்தது, சுப்பையாராவ் (1908 - 98) இந்தக் கதையை அறிவார். ஆனால் சுகனைப் பற்றிப் பேசவில்லை.

பரமசிவராவின் கூத்தில் சுகன், சுகராவணன் தமாஷ் பாத்திரங்களாகி விட்டனர். இருவரும் உடம்பெல்லாம் களிமண்ணைப் பூசிக்கொண்டு விசித்திர ஐந்து போல் வருகின்றனர். சுக, சுகசாரணன் வேவு பார்க்கும் காட்சி முழுதும் தமாஷ் நிகழ்ச்சியாகவே காட்டப்பட்டது.

இப்படியாக உள்ள வேறு காட்சிகளையும் சொல்ல முடியும். தோல்பாவைக்கூத்தில் நல்ல கதாபாத்திரங்கள் இப்படியாக இழிவாக - தமாஷ் பாத்திரங்களாக மாற்றப்பட வேண்டியதன் காரணம் என்ன? சுப்பையாராவிடம் இது பற்றிக் கேட்டபோது கூத்து பார்க்கிறவர்களின் ரசனைதான் காரணம் என்றார்.

ரசனை மட்டுமல்ல; பார்வையாளர்களை அனுசரித்து கூத்து நடக்க வேண்டிய நிலை உருவானதும் ஒரு காரணம். கோபாலராவ் காலத்தில் ஊர் மக்களே கலைக்குழுவை கூத்து நடத்த அழைப்பர். உணவு, தங்குமிடம், விளக்கெரிக்க எண்ணெய் என எல்லாம் இலவசம். மின்சாரம் இல்லாத காலம். ஒருநாள் விட்டு அடுத்தநாள் கூத்து நடக்கும். கூத்து முடிவில் பண மும் கிடைக்கும். ராமாயணக்கதையைச் சுருக்கக்கூடாது, பாடல்களை விஸ்தாரமாகப் பாட வேண்டும் என்னும் நிபந்தனைகளையும் ஊர்க்காரர்கள் கூறுவார்கள். இந்தக் காலகட்டத்தில் ஜாம்பவானுக்கு மதிப்பிருந்தது; சுகன் சுகசாரணன் தமாஷ் பாத்திரங்கள் ஆகவில்லை.

எல்லாம் இலவசம் என்னும் நிலை மாறி கூத்துக்கு டிக்கட் வசூலித்தபோது கதைப் போக்கு மாறியது. கூத்து நடத்தும் நேரமும் வரையறைக்கு வந்தது. பார்வையாளர்கள் சிறுவர்கள் ஆயினர். இராமாயணக்கூத்து தமாஷ் பாத்திரங்களின் பின்னணிக்குத் தள்ளப்பட்டது, சுப்பையாராவ் ஒருமுறை “கூத்துல  வைகாசி கதை என்னும் கதையைச் சொல்லுவோம்" என்று சொன்னார், நான் அந்தக் கதையைக் கேட்டேன், சொன்னார்.

ஒரு ஊரில் வைகாசி என்பவன் இருந்தான். அவன் மந்தப்புத்தி உள்ளவன். எந்த ரசனையும் இல்லாதவன். அவன் மனைவியோ அவனுக்கு நேர் மாறானவள்; அவள் ஊர்க்கோவில்களில் நடக்கும் கதாகாலட்சேப நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் போய் வருவாள் - கணவன் வீட்டில் இருப்பான்.

அவள் ஏன் விழுந்தடித்துக் கொண்டு கதை கேட்கப் போகிறாள் என்பது வைகாசிக்குப் புரியவில்லை. ஒருநாள் மனைவியிடம் "அந்தக் கதையில் அப்படி என்ன இருக்கிறது; சலிப்பில்லாமல் போகிறாயே; என்ன ரசத்தை அங்கே கண்டாய்” என்று கேட்டான்.

வைகாசிக்கு, மிளகு ரசம் ரெம்பவும் பிடிக்கும். அதனால் எதற்கெடுத்தாலும் ரசம் என்று சொல்லில் பேசுவான், அவளுக்கும் ரசமில்லாமல் சாப்பாடு இறங்காது. அதனால் அவளது பேச்சிலும் ரசம் அடிக்கடி வரும்.

இப்போது கணவனின் கேள்விக்கு அவள் “நீ அந்த காவியத்தின் ரசத்தைக் குடித்துப் பார்த்தால் தானே தெரியும்” என்றாள்.

"அப்படியானால் இன்று நான் கதை கேட்கக் போகிறேன்; கதை ரசத்தை வாங்கி வருகிறேன்” என்றான்.

அவள் விளையாட்டாக "ரசத்தை முழுவதும் குடித்துவிடாதே; எனக்கும் கொஞ்சம் கொண்டுவா” என்றாள்.

வைகாசி பெரிய செம்புப் பாத்திரத்தை எடுத்து வைத்துக் கொண்டான். கதை சொல்லும் இடத்தில் ரசம் வாங்கிக் குடித்துவிட்டு மிச்சமானதை வீட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்பது அவளது திட்டம். அவன் பாத்திரத்தைக் கொண்டு போனது மனைவிக்குத் தெரியாது. அவள் கதாகாலட்சேபம் நடந்த இடத்துக்குப் போனான். அங்கே சுமாராகத்தான் கூட்டம் இருந்தது. சாய்ந்து உட்காரும்படியான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

கதை சொன்னவர் சுவராஸ்யமாகவே கதை சொன்னார். தமாஷ் துணுக்குகளை இடையிடையே சொல்லி கதையை வளர்த்தினார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. உறக்கமும் வந்தது. அயர்ந்து உறங்கி விட்டான் அவனருகே ஒரு செம்பு பாத்திரமும் இருந்தது.

வைகாசியின் அருகே ஒருவன் ஆர்வமாய் கதை கேட்டுக் கொண்டிருந்தான். அவன் நல்ல ரசிகன். ஆர்வத்தோடு இருந்தான். அவனுக்கு மூத்திரம் மூட்டியது. கதை கேட்கும் போது பாதியில் எழுந்து போக விருப்பம் இல்லை. பாதியில் போனால் கதைத் தொடர்ச்சி விட்டுவிடும் என்று அவனுக்குத் தெரியும்.

அந்தப் பார்வையாளன் தன் பக்கத்தில் ஒருவன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவன் அருகே ஒரு செம்புப் பாத்திரம் காலியாக இருப்பதையும் பார்த்தான். மெதுவாக அதை எடுத்தான். அதில் மூத்திரம் பெய்துவிட்டு வைகாசியின் பக்கத்தில் வைத்துவிட்டான்.

இன்னொருவனும் இதைப் பார்த்தான். அந்தச் செம்பில் மூத்திரம் பெய்துவிட்டு வைகாசியின் பக்கத்தில் வைத்து விட்டான். செம்பு நிறைந்து வழிந்தது. வைகாசி இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான். கதாகாலட்சேபம் முடிந்தது. எல்லோரும் போய்விட்டார்கள்.

யாரோ வைகாசியைத் தட்டி எழுப்பினார்கள் எழுந்தான்; செம்பைப் பார்த்தான். ரசம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது; அவனுக்கு சந்தோஷம், ரசத்தைக் கொஞ்சம் குடித்துப் பார்த்தான். உப்பு கரித்தது.

வைகாசி வீட்டிற்குப் போனான். செம்புப் பாத்திரத்தை மனைவியிடம் கொடுத்தான். “நான் கதை கேட்கும் போது உறங்கி விட்டேன். ஆனால் ரசம் செம்பில் நிறைந்து விட்டது, கொஞ்சம் பிடித்தேன்” என்றான்.

மனைவி நடந்ததைப் புரிந்து கொண்டாள். கணவனின் மடத்தனத்தை எண்ணித் தலையில் அடித்துக் கொண்டான்.

"இந்தமாதிரி ரசனையாளர்கள் பெருகிய பின்னர்தான் தோல்பாவைக் கூத்தில் ஜாம்பவான் சீரழிய ஆரம்பித்தார்" என்றார் சுப்பையாராவ்.

- அ.கா.பெருமாள்

Pin It