1893இல் பம்பாய் துறைமுகத்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு வழக்குரைஞர் தொழில் நடத்த ஒரு தனியார் வணிக நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஓராண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் புறப்பட்டார் 24 வயது இளம் பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

gandhi 452தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களுக்கு அங்கிருந்த ஆங்கிலேயர்களும் ஆட்சியாளர்களும் ஏற்படுத்திய பிரச்சினைகளை கவனிக்கவும் அவற்றுக்குத் தீர்வுகாண முயற்சிக்கவும் அங்குள்ள இந்தியர்கள் சிலரை இணைத்து ‘நேட்டால் இந்திய காங்கிரஸ்’ என்ற ஓர் பொதுநல அமைப்பை ஏற்படுத்தியிருந்தார் வழக்குரைஞர் காந்தி. இச்செய்தி ஓரளவிற்கு தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இந்தியர்களையும் அங்கிருந்த இந்தியக் குமாஸ்தாக்களையும் எட்டியிருந்ததே ஒழிய சாதாரண ஒப்பந்தக் கூலிகளாக விளங்கிய இந்தியத் தொழிலாளர்களை எட்டவில்லை.

அத்தகைய சூழலில் தான் ‘பாலசுந்தரம்’ என்ற இந்திய ஒப்பந்தக் கூலி காந்தியின் வழக்குரைஞர் அலுவலகத்திற்கு ஒரு பிரச்சினையோடு வந்தார். அவர் ஒரு தமிழர். தனது ஆங்கிலேய எஜமானரால் தாக்கப்பட்டு முன்பகுதியில் இரண்டு பற்கள் உடைந்த நிலையிலும் சில ரத்தம்படிந்த காயங்களோடும் அங்கு வந்திருந்தார்.

வழக்குரைஞர் காந்தியின் வக்கீல் குமாஸ்தா ஒரு தமிழர். அவர் மூலம் தமிழர் பாலசுந்தரத்தின் பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொண்ட காந்தி அவ்வழக்கை எடுத்து நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றுக் கொடுத்து தன்னை நம்பி வந்த கூலித்தொழிலாளிக்கு நியாயம் பெற்றுக் கொடுத்தார்.

இச்சிறு நிகழ்வு ஒரு வரலாற்றுத் திருப்புமுனைக்கு அடித்தளமிட்டது. கூலிகளாகக் கேவலப்படுத்தப்படுகிற தென்னாப்பிரிக்க அடிமை இந்தியர்களுக்கு உரிமைக்குரல் கொடுக்கும் உத்தமத் தலைவர் ஒருவர் உதித்துவிட்டார் என்ற நம்பிக்கை விதையை அங்குள்ள இந்தியர்களின் இதயத்தில் விதைத்தது

இதுபோன்ற அடுத்தடுத்த போராட்ட நிகழ்வுகளால் ஓராண்டு ஒப்பந்தத்தில் வழக்குரைஞராகச் சென்ற காந்தியடிகள் தொடர்ந்து இருபது ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவிலேயே இருந்து அங்குள்ள அடக்கப்பட்டுக் கிடந்த அடிமை இந்தியர்களுக்கான ஆகப்பெரும் தலைவராகத் திகழ்ந்து களமிறங்கிக் காரியமாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தென்னாப்பிரிக்கா சென்று மூன்றாவது ஆண்டில் 1896இல் இந்தியா வந்திருந்தபோது சென்னைக்கு வந்திருந்தார் காந்தி. 27வயது இளம் தலைவரை சென்னை வரவேற்ற வரலாற்றுச் சுவடுகளை இப்போது படித்தாலும் சிலிர்ப்பு ஏற்படும். இனம் கண்டு வரவேற்றுள்ளது தமிழகம். களம் அறிந்து பேசியுள்ளார் காந்தி.

தென்னாப்பிரிக்க இந்தியர்கள் பட்ட துயர்களை, அவர்களுள் ‘பாலசுந்தரம்’ உள்ளிட்ட தமிழர்கள் செய்த தியாகச் செயல்களைப் பட்டியலிட்டு தான் எழுதிய ஒரு சிறு நூலை சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் தான் உரையாற்றிய பொதுக் கூட்டமொன்றில் வெளியிட்டு உணர்ச்சிமிக்க சூழலை ஏற்படுத்தினார்.

வயது இருபத்தேழு என்றாலும் வந்திருந்தோர் அனைவரும் பக்குவமும் போராட்டக்குணமும் மிக்க இளம் தலைவரைப் பார்த்த பரவசத்தில் மகிழ்ந்தனர்.

அவர் வெளியிட்ட சிறு நூலின் அட்டை பச்சை வண்ணத்தில் இருந்ததால் அது ‘பச்சைப் பிரசுரம்’ என்றே அழைக்கப்பட்டது. காந்தி எடுத்து வந்த ஆயிரக்கணக்கான பச்சைப் பிரசுரம் தீர்ந்து விட்ட நிலையில் பற்றாக் குறையை ஈடுகட்ட சென்னையில் பத்தாயிரம் பிரதிகள் புதிதாக அச்சடிக்கப்பட்டன.

அப்போது தொடங்கிய காந்தியடிகளின் தமிழகப் பயணம் 1946 வரை இடைப்பட்ட ஐம்பது ஆண்டுகளில் இருபது முறை மீண்டும் மீண்டும் தமிழகத்திற்கு வந்ததோடு தமிழ் மண்ணின் குக்கிராமங்களுக்குக் கூட வந்து சென்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுத் திகழ்ந்தன.

பாலசுந்தரம், தில்லையாடி வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி, செல்வம் என்று தென்னாப்பிரிக்கப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்தோர் பலர். காயம்பட்ட, சிறைகளில் சித்ரவதைப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களும் இளம் பெண்களும் காந்தியடிகளின் அடியொற்றி அவருடன் இணைந்து நின்று துணிவுடன் எவ்வித எதிர்பார்ப்புமின்றிப் போராடினார்கள், ஊக்குவித்தார்கள், உத்வேகமூட்டினார்கள் என்று இறுதி மூச்சு வரை சொல்லியும் எழுதியும் தனது நன்றியைக் காணிக்கையாக்கியுள்ளார் காந்தியடிகள்.

பேச்சும், எழுத்தும், செயலும் போராட்டமும் காந்தியடிகளின் ஆயுதங்களாயின!

அத்தகைய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியை அவர் பிறந்த அக்டோபர் மாதத்தில் எண்ணிப் போற்றுவோம்! அவர் பெயரில்... அவரின் உயிர்மூச்சாக விளங்கிய மத நல்லிணக்கக் கொள்கையை நிலைநாட்ட உறுதியேற்போம்!

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.