பேராசிரியர் எரிக் ஹாப்ஸ்பாம் அய்ரோப்பாவின் 300 ஆண்டு காலத்திய வரலாற்றினை ஆய்ந்த வரலாற்றாசிரியர். அவராய்வுகள் காலவர்த்தமானங்களைக் கடந்து இன்றைக்கும் ஏற்கும்படியாகவும் பொருத்தமாகவும் அமைகின்றன. அவை, ஒரு குறிப்பிட்ட பாடத்தோடு ஒரு குறுகிய பார்வையோடு நிற்கவில்லை. பலவித மக்களின் ஆய்வுகளையும் கருத்துகளையும் கண்டறிவதற்கு இந்த ஆய்வின் எல்லைகள் விரியும். அவரது அபரிமிதமான அறிவுப் பார்வை, தொலைநோக்கு, வாதத்தன்மை போன்றவை மார்க்சியப் பகுப்பாய்வின் விளைவுகளாகும். இதுவே, அவருக்கு கேள்வி கேட்கும் தொடக்கப் புள்ளியாகும்; கடந்த காலத்தினை முறிக்கமுடியாத அறிவுத்திறனால் அறிய முடிந்தது. இதுவே, வரலாற்றின் பொதுப் பார்வையாகவும் அணுக வைத்தது. வரலாற்றாய்வு அவருக்கு அறிவுத் திரட்சியாகவும் மனித நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ளவும் உதவியது.

1950களில் SOAS (School of Oriental and African Studies) இல் இளங்கலைப் படிப்பினை மேற்கொண்டிருந்தபோது இலண்டன் பல்கலைக்கழகத்தின் Birkback College இவரின் political theory பற்றியும் Eric Hobsbawm அவர்களின் உரைகளையும் கேட்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டேன். தொடக்கத்தில் சில உரைகள் utopian பற்றியும் அறிவியல் பூர்வமான socialism பற்றியும் இருந்தன. அவை அமைதியாக மனத்தினை அதிரவைத்தன. பல தொடர் சிந்தனைகளைப் பற்றவைத்தன. அவ்வுரைகள் கற்பதனை ஒரு பாடத்தில் எல்லையின் விளிம்பு வரை விரிந்து படர வைத்தது. அவரிடம் உரையாடுவதற்கு ஆர்வமானேன். மெல்ல மெல்ல நாங்கள் சில மாணவர்கள் Birkback காபி நிலையத்தில் அவரை சூழ்ந்து கொண்டு பேசினோம்.EricHobsbawmவிரியும் பார்வை

1939 இல் வியன்னாவிலிருந்து புலம்பெயர்ந்து இலண்டன் வந்த மாணவர்கள் சிலரை அறிந்தேன். அவர்கள் அவரை நன்கு அறிந்திருந்தனர். அம்மாணவர்கள் மூலமாக எரிக்ஹாப்ஸ்பாமை சந்தித்தபின் அய்ரோப்பாவை புதிய கோணத்தில் அறிய முடிந்தது. வியன்னா, அய்ரோப்பாவின் சிந்தனை மையம் என்றும் உணர முடிந்தது. அது பிரஞ்ச், ஜெர்மன் சிந்தனைகளோடு தொடர்புடையது. அதில், பிரிட்டிஷாரின் அறிவு மட்டும் கலந்திருக்கவில்லை. நான் இந்தியாவில் படைத்துறைப் பண்பாடு கொண்ட குடும்பப் பின்னணியில் (Cantonment Culture) வளர்ந்தேன். இந்திய மரபினை அறிந்திராத மாணவர் கூட்டத்தில் அய்ரோப்பிய மரபினை நன்கறிந்தவள். ஹாப்ஸ்பாம் தீர்க்கமாக மத்திய அய்ரோப்பிய அறிவுப்பின்புலத்தில் இருந்து வந்தவர். இது, அவருக்கு விசாலமான அறிவுப் பார்வையினைத் தந்தது. அவர், ஒருமுறை பிரிட்டிஷாரின் மார்க்சிய சிந்தனை, சமூக-அறிவியல்களை (social sciences) மையமிட்டிருந்தது என்றும், அய்ரோப்பிய மார்க்சிய சிந்தனை ஒப்பீட்டளவில் பண்பாட்டினையும், தத்துவத்தினையும் கேள்வி கேட்பதற்கு வாய்ப்பளித்தது என்றும் கூறினார்.

அவருடைய இளமைக்காலம் நாடுவிட்டு நாடு புலம்பெயர்வதாக இருந்தது. அவரின் தந்தை ஒரு பிரித்தானிய யூதர், தாய் மத்திய அய்ரோப்பாவைச் சேர்ந்தவர். அவர்கள் அலெக்ஸாண்ட்ரியாவில் (Alexandria) இருந்தபோது ஹாப்ஸ்பாம் பிறந்தார். பள்ளிக்கல்வியினை வியன்னாவிலும், பெர்லினிலும் தொடர்ந்து இங்கிலாந்திலும் முடித்தார். அப்போது, யூதர்கள் ஜெர்மனியில் வாழ்வது சிக்கலாக இருந்தது. பெர்லினில் வாழ்ந்தபோது நாஜிகளின் பாசிசத் தன்மையினை அறிந்திருந்தார். நாஜிகள், யூதர்களுக்கு எதிரான கொள்கைகளை மட்டுமன்று குடிமக்களின் உரிமைகளையும் மறுத்தனர்.

ஒரு கம்யூனிசவாதியாக நாஜிகளுக்கு எதிரான மாற்று, சோசலிசத்தில் இருப்பதாக உணர்ந்தார். வாழ்க்கை நெடுக இக்கொள்கையில் உறுதியாக இருந்தார். 1956 இல் கிரேட்-பிரிட்டனின் கம்யூனினிஸ்ட் கட்சியிலிருந்து விலகியபோது விமர்சிக்கப்பட்டார். அப்போதுதான் சோவியத் ஒன்றியம் ஹங்கேரியில் போராட்டத்தினை ஒடுக்கியது. ஆய்வு உதவித்தொகையுடன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது இளம் வரலாற்று ஆசிரியர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் மார்க்கியத்தினை ஆய்வதில் முனைப்புடன் இருந்தனர். அவர்கள், புதிய சமூக-பொருளாதார வரலாற்றினை வரலாற்று ஆர்வலர்க்கு அறிமுகப்படுத்தினர். அரசியல்-ராஜதந்திர வரலாற்றிலிருந்து விலகியிருந்தனர். அவர்கள், தம்மை பிரிட்டிஷ் வரலாற்றுக்குழு என்று அழைத்துக் கொண்டனர். இதில் Christopher Hill, Rodney Hilton, Gorge Rude, E.P.Thompson, Raphael Samuel என்று பலரும் இடம்பெற்றிருந்தனர். இக்குழு பிரிட்டிஷ் வரலாற்றை பகுப்பாய்வு செய்து அதனை தலைகீழாக மாற்றிற்று. வர்க்க உணர்வு, சொத்து உறவுகள், சமய நம்பிக்கை, சமய அறிவு, படிப்பு, அவை சமூகத்தில் இயங்கும்முறை போன்றவற்றை ஆய்ந்தனர். இந்த ஆய்வுமுறை புதிய உருபெற்றது. ஹாப்ஸ்பாம் ஆர்வமிக்க ஆய்வுக்குழுவில் இணைந்தார். அக்குழு, புதிய புதிய கருத்துகளை ஆய்ந்து எடுத்தது. அவர்கள் தம்மை Apostles என்று கருதிக் கொண்டனர். தங்களை Ludwig Wittgenstein, Betrand Russell, J.M.Keynes, E.M.Foster போன்றோருடன் இணைத்தனர். அதேநேரத்தில் கேம்ப்பிரிட்ஜ்ஜில் இன்னோர் அறிவுக்குழு உருவானது. Anthony Bluntம் இன்னும் பிறரும் சோவியத் உளவாளிகள் என்று கருதப்பட்டனர். பிரிடிஷ் வரலாற்று ஆசிரியர் மிகவும் சுதந்திரமாக இயங்குகிறார்கள் என்று சோவியத் யூனியன் கருதியது.

ஒரு புதிய வரலாறு

1952இல் பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வுக்குழு Past and Present என்ற ஆய்விதழைத் தொடங்கினர். நவீனத்துவ வரலாற்று ஆசிரியர்கள் இவ்விதழைத் தங்கள் கருத்துகளை வெளியிடுவதற்கு பயன்படுத்தினர். இவ்விதழ் பரந்த வாசிப்புத்தளத்தினைப் பெற்றது. இவ்விதழ் மார்க்சியம் பற்றி எழுந்த பலவகையான கருத்துகளுக்கும் இடமளித்தது. அது தொடர்பான பகுப்பாய்விற்கும், மறுசிந்தனைக்கும் இடம் தந்தது. இப்பார்வை, வரலாற்றினை பிற சமூக-அறிவியல்களுடன் இணைத்தது. அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் புதியவகை சிந்தனையுடன் வரலாற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இவ்விதழைத் தொடங்கியவர்கள் அனைவருமே உடனைடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அங்கு, தவிர்க்கவியலாமல் சில முரண்பாடுகள் எழுந்தன. அதாவது, வரலாறு என்பது கடந்த காலத்தினை பெருமளவில் விவரிப்பதா? அல்லது விளக்குவதா? அல்லது பின்நவீனத்துவம் உருவாக்கிய மாற்றத்தினை வரலாற்றோடு சேர்த்து எழுதுவதா? என்பது. ஹாப்ஸ்பாமின் இந்த விமர்சனத்திற்கு இவ்விதழின் குழுவினர் கேள்வி கேட்கவுமில்லை; விளக்கவுமில்லை. இதுவே, அவரின் அடிப்படை வரலாற்று ஆய்வுமுறையாக அமைந்தது. அந்த ஆய்விதழ் பல விவாதத்தினை உருவாக்கியது. அவர்கள், வரலாற்றில் ஒப்பாய்வு செய்து கட்டுரைகளை வெளியிட்டனர். அய்ரோப்பா அல்லாத நாடுகளின் வரலாற்றையும் ஆய்வு செய்தனர். நான் முனைவர் பட்டத்து ஆய்வினை முடித்தவுடன் அவ்விதழில் அய்ரோப்பா பற்றி என் கட்டுரையொன்று வெளியானது.

இவ்விதழின் வரலாற்றுக் குழுவினரும், பிற அறிஞர்களான Richard Dobb, Keith Thomas போன்றோரும் தில்லி பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் சமூக-பொருளியல் வரலாற்றினை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளித்தனர். அவர்கள் ஒவ்வொருவராக 1960 களிலும் 1970களிலும் இந்தியாவிற்கு உரையாற்றுவதற்கு வந்தனர். விவாதத்திலும் கலந்து கொண்டனர். அது வரலாற்றினை புதிதாக மாற்றி எழுதும் மையமாக இடம்பெற்றது. அந்தக் காலத்தில்தான் இந்திய வரலாறு குறிப்பாக நவீனகாலத்திற்கு முந்தைய இந்தியா மெல்ல மெல்ல இந்தியவியல் என்ற இறுக்கத்திலிருந்து விலகி சமூக-அறிவியல் என்ற பாடமாக மாறியது.

தொடக்கத்திலிருந்து ஹாப்ஸ்பாமின் வெளியீடுகளை படித்து அறிந்தவர்கள் அவரை நவீன அய்ரோப்பாவின் மிகச்சிறந்த வரலாற்று ஆசிரியர் என்பதனை அறிவர். இது, ஒரு மார்க்சிய வரலாற்று ஆசிரியருக்குக் கிடைத்த பெருவெற்றி. இதனை சரிவரப் புரிந்துகொள்ளாதவர்கள் மார்க்சியம் என்ன சாதித்தது என்பதனை அறியாமல் நிராகரிக்க முயல்கின்றனர். புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் மார்க்சியர்கள் பணியமர்த்தப்படும்போது சில சிக்கல்கள் எழும். USA விலிருந்து McCarthyism போன்றவையாலும் பனிப்போரினாலும் இதுபோன்ற விளைவுகள் எழும். ஹாப்ஸ்பாம் Birkback College பணியமர்த்தப்பட்டார். அங்கேயே கடைசிவரை பணியாற்றினார். அது பல்துறை கலந்த (inter-disciplinary) ஆய்விற்கு உகந்த மையமாக இருந்தது. இப்போக்கு பிரித்தானிய கல்வியாளர்களுக்கு புதிய வரவு. அங்கு பணிபுரிந்த J.D.Burnell போன்ற மார்க்சியவாதிகளின் கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டன. JBS Haldane, L.Hogben, Joseph Needham போன்றவர்கள் அங்கு அடிக்கடி கூடினர்.

அறிவின் உழைப்பு

ஹாப்ஸ்பாம் ஒரு நவீன காலத்தின் வரலாற்று ஆசிரியராக பல நூல்களை எழுதினார். அவற்றுள் சில: The Age of Revolution (1789-1848), The Age of Capital 91848-1875), The Age of Empire (1875-1914), The Age of Extremes (1914-1991), Primitive Rebels, Bandits, On History, Nations and Nationalism, Interesting Times: A Twentieth Century Life, How to Change the World, Fractured Times. Uncommon People: Resistance, Rebellion and Jazz.

அந்நூல்கள் வெவ்வேறு கருத்தியல் குழுக்களைத் தாண்டி சமூகத்தின் கட்டமைப்புகளை ஆழமாக விளக்குகிறது என்றும் வரலாற்று மாற்றங்களின் இயல்புகளை விளக்குகிறது என்றும் உணரப்பட்டன. அது அரசியல் குறைபாடாக (political weakness) காணப்படவில்லை. இதுபோன்ற வரலாற்று ஆய்வில் ஆசியாவின் வரலாற்று நிகழ்வுகள் குறைவாகவே பேசப்பட்டன. USSRஇல் ஸ்டாலினிச நடவடிக்கைகளை பூசி மெழுகினர் என்று மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டாப்பட்டார்; சீனத்தினை ஏற்கவில்லை என்றும் சொல்லப்பட்டார். ஆனால், அக்காலத்தில் தம் கட்டுரைகளில் ஸ்டாலினிசத்தினை வெகுவாக விமர்சித்தார். மேலே சொல்லப்பட்ட நூல்கள் தவிர இன்னும் சில நூல்களை எழுதினார்.

தொடக்கத்தில் இடைநிலை சமூகம் (Fabien society) பற்றி ஆய்வு செய்தவர் அடுத்து கூலிகளின் இயக்கங்களை ஆய்ந்தனர் (Labours’ Turning Point, 1948). அடுத்து புதிய வரலாற்று சான்றுகளைத் தேடினர். வாய்மொழித் தரவுளையும் ஆவணக்காப்பகங்களில் கிடைத்த தரவுகளையும் சான்றாகக்கொண்டு வேளாண்குடிகளின் போராட்டம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். சிசிலி, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற இடங்களில் நிகழ்ந்த வேளாண்குடிகளின் போராட்டங்களும் இவ்வாறு ஆராயப்பட்டன. இதனடிப்படையில், இரு நூல்கள் வெளியிடப்பட்டு உலக அளவில் வரவேற்பினை பெற்றன (Primitive Rebels, 1959;Bandi ts,1969). இவ்வாய்வுகள் ஊரகப்புறங்களில் இரகசியமாக செயற்பட்ட இயக்கங்கள் பற்றிய ஆய்வுகளைத் தூண்டியது. பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றது. இதுபோன்ற இரகசியமான இயக்கங்கள் உலகின் பல பாகங்களில் முதலாளித்துவம் தலையெடுத்தபோது அதற்கான எதிர்ப்பியக்கமாக உருப்பெற்றது என்று ஹாப்ஸ்பாம் வாதிட்டார். இதுபோன்ற இயக்கங்கள் வரலாற்றின் தொடக்க காலத்திலும் செயற்பட்டன. சமூகக் கொள்ளையர் என்ற கருத்தியல் இன்றைய இந்திய வரலாற்றாசிரியர்களிடத்தில் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் வாய்மொழி இலக்கியங்கள் அணுகப்படும்போது புதுமாதிரியான தரவுகள் கிடைக்கின்றன.

18 ஆம் நூற்றாண்டின் வரலாற்றிற்கு இது பெரிதும் பொருந்தும். இது போன்ற இயக்கங்கள் இன்றைக்கும் மக்கள் நடமாட்டமில்லாத தொலைதூரங்களில் இயங்குகின்றன. Terence Renga என்பவருடன் இணைந்து 1982 இல் The Invention of Tradition என்ற தலைப்பில் பல அறிஞர்களின் கட்டுரைகளைத் தொகுத்து ஒருநூலினை வெளியிட்டார். அந்நூலின், நீண்ட முன்னுரையில் மரபு என்பது சமூக அடையாளம் என்று வாதிட்டார். என்றபோதும், மரபுகள் மாறிக்கொண்டே வந்தன என்பதும் அறியப்பட்டது. இன்றைய அரசியல் இயக்கங்கள் பழைய மரபுகளில் இருந்து தம் இருப்புக்களுக்கான அடையாளத்திற்கு அறிந்தேற்பினைப் பெறத் துடிக்கின்றன. இப்பார்வை Max Weber இன் கருத்தோடு ஒத்துப்போகிறது. காலத்தேவைக்கு ஏற்ப இந்த அறிந்தேற்பின் வடிவம் மாறும். பண்டைய காலத்தில் இருந்தே இம்மரபு தொடர்வதாக கருதிக் கொள்ளப்படும். இன்றைக்கு சில வரலாற்றாசிரியர்கள் மரபுகள் தாமே உருவானவை என்றும் மாறாமல் தொடர்வது என்றும் வாதிடுகின்றனர். அவை எப்படி? ஏன்? எழுந்தன என்பது பற்றியும் விளக்குகின்றன. அவர்களே அம்மரபுகளை உருவாக்குகின்றனர். ஆனால், அவற்றின் நோக்கமென்ன? இந்நூல், மரபு பற்றிய விவாதத்தினை கூர்மையாக்குகிறது.

அரசியல் வரலாற்றாசிரியர்

ஹாப்ஸ்பாமின் பல கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 1997 இல் On Historyஎன்ற நூலாக வெளியிடப்பட்டது. ஒரு சில கட்டுரைகள் விரிவாகவும் மிக ஆழமாகவும் அமைந்தன. பெருமளவில் தாக்கத்தினை ஏற்படுத்தின. Nations and Nationalism என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் தேசியமும் வரலாறும் என்ற கருத்து பிரதானமானது. அதன் சாரம் நல்ல உரையாடலுக்கு இட்டுச் சென்றது. தேசியவாதிகளுக்கு அல்லது இனவாதிகளுக்கு அல்லது அடிப்படைவாத கருத்தியலாளர்களுக்கு வரலாறு ஒரு வாகான பொருளாக அமைகிறது. பாப்பிச்செடிகள் ஹெராயின் போதைப்பொருள் செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதைப் போன்று. மேற்சொல்லப்பட்ட கருத்தியல்களுக்கு கடந்தகாலம் என்பது முக்கியமான பொருளாக உள்ளது. அதற்குச் சாதகமாக கடந்தகாலம் இல்லையாயின் இவர்கள் தமக்குச் சாதகமான கடந்த காலத்தினை உருவாக்குகின்றனர். இவ்வுருவாக்கத்திற்குச் சான்றாக Mortimer Wheeler எழுதிய Five Thousand Years of Pakistan என்ற நூலினை அடையாளம் காட்டுகின்றனர். 5000 ஆண்டுகளைவிட 46 என்ற எண் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும். இதற்கு இன்னொரு சான்று Babri Masjid மீதான வாதம். 2004 இல் New York கொலம்பிய பல்கலையில் Babri Masjid பற்றி தெளிவாக உரையாற்றினார். புனைவு சமூக நினைவாக (social memories) உரிமை கொண்டாடப்படுகிறது. புனைவு, என்ன நிகழ்ந்ததோ அதற்காக கட்டமைக்கப்படவில்லை; நிகழாத ஒன்றிற்கு கட்டமைக்கப்படுகிறது.

தேசியம் வரலாற்றாசிரியர்களை அரசியல் நடிகர்களாக மாற்றுகிறது என்கிறார். புனைவுகளுக்கு எதிரான கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை கேட்பவர் மிகச்சிலரே. இங்கு இதுபோன்ற விவாதம் வழிந்தோடி பாடநூல்களில் கருத்துமோதலை உருவாக்குகிறது. இப்போக்கு தற்போது பிற பாடநூல்களிலும் பிரதிபலிக்கிறது. தேசியம், பண்பாட்டு அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கும் இட்டுச்சென்றது; தேசிய அடையாளம் (identity nationalism) என்ற கருத்தினையும் உருவாக்கியது. இது ஒரு குறிப்பிட்ட ஒரு சமூகத்தின்/ஜாதியின் அடையாளத்தையும் உருவாக்கியது. இதனால், இதுபோன்ற அடையாள அரசியல் வரலாற்றுப் பிழையில் முடியும்; தவறாகும், தவிர்க்கப்பட வேண்டியதாகும். இதுபோன்ற வாதங்களில் மெய்மைக்கும், பொய்மைக்கும் இடையிலான சண்டையில் உரிய சான்றுகளின் வலிமையை உறுதி செய்யவேண்டும். இங்கு வரலாற்றாசிரியர் புனைவின் பொய்யினை உரிப்பவராக (myth slayer) இருக்க வேண்டும். பிரமாண்டத்திற்குள் வரலாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்று ஆசிரியர்களுக்கு முக்கியமானது. குறிப்பாக எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது சந்தேகப்படும் ஆசிரியர்களுக்கு.

இதற்குமுன்பு வரலாற்றாசிரியர்கள் மார்க்சுக்கு என்ன கடன் பட்டுள்ளார்கள் என்ற கட்டுரையில் Ranke விற்கு பின்பு நூறாண்டுகளில் வரலாற்றியல் மாறியது என்றார். அம்மாற்றங்களை Arnold Momigliano என்பார் சற்று அழுத்தமாக சொன்னார் என்று ஹாப்ஸ்பாம் குறிப்பிடுகிறார். அந்த மாற்றங்கள் சமூக-பொருளியல் வரலாற்றினை நோக்கியது என்றும் சமூக சக்திகள் (social force) என்பது மாற்றத்தின் வெளிப்பாடு, வர்க்க உணர்வின் வெளிப்பாடு என்றும் அறியப்பட்டது. வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பது பொருளியலாளர் மட்டுமே நிர்ணயிப்பது என்போரை ஹாப்ஸ்பாம் கடிந்தார் (historical materialism as economic determinism). இது தூய்மையான மார்க்சியமன்று என்றார். Historical materialism த்தில் இவர் சில கூறுகளை முன்வைத்தார். அவை: தொழில்நுட்பக்கருவிகள், அடித்தளம்-மேற்கட்டுமானம் பற்றிய நம்பிக்கை, வர்க்கப் போராட்டம், தவிர்க்க முடியாத வரலாற்றுச் சம்பவங்கள் போன்றவை.

2011இல் வரலாற்று வரைவியல், பொதுகருத்தியல் தொடர்பான கட்டுரைகளை How to Change the World: Marx and Marxism 1840-2011 1840-2011 என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். இதில் மற்றோர் நூலிற்கான (Pre-Capitalistic Economics) முன்னுரையும் இடம் பெற்றது. இக்கட்டுரைகள் உற்பத்தி முறை பற்றிய என் புரிதல்களை தெளிவாக்கின. வரலாற்று வளர்ச்சியின் சகாப்தங்களில் உற்பத்தி முறை பற்றிய மார்க்சின் ஆய்வுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பேசினார் இல்லை. பல இடங்களில் மார்க்சும் ஏங்கல்சும் உற்பத்திமுறை பற்றிய விவாதங்களை மறுபரிசீலனை செய்தனர், தெளிவாக்கினர். சமூகத்தின் வெவ்வேறு வளையத்திற்குள் இருக்கும் மக்கள்கூட்டம் வெவ்வேறு வேகத்தில் ஒரே ஏணியில் படிப்படியாக ஏறினர் என்று மார்க்சும் ஏங்கல்சும் சொல்லவில்லை.

ஹாப்ஸ்பாம் Asiatic Mode of Production என்ற கருத்தினை நிராகரிக்கிறார். இவ்விவாதத்தில் Karl Agustus Wittfogel கருத்தினை குறிப்பிடுகிறார். சீனத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பற்றியும் Asiatic Mode of Production பற்றியும் கருத்தினை குறிப்பிடுகிறார். இதனை சோவியத்துக்கள் விலக்கியும் சேர்த்தும் தம் ஆய்வுகளில் பதித்தனர் என்றும் கூறுகிறார். ஒருகட்டத்தில் E.M.Sankaran Namboodiripad, D.D.Kosambi பற்றியும் பேசுகிறார். Japan முதல் USA வரையிலான நிலமானிய முறை, முதலாளித்துவ முறைக்கு மாறிவந்தது பற்றி நிகழ்ந்த புகழ்பெற்ற வாதம் பற்றி நிறைய பேசுகிறார். அவரின் கூற்றுப்படி வரலாற்றுப் பொருள்வாதம் என்பது உற்பத்திமுறை அடுத்தடுத்து மாறிவருவதுதான். ஆனால், அது முன்கூட்டியே நிர்மாணிக்கப் பட்டதன்று. அது, எப்படிப்பட்டதாக இருந்தாலும் சான்றுகளில் உறுதி செய்யப்பட வேண்டும். வெவ்வேறு உற்பத்திமுறை பற்றி இலகுவாக வாதிடுகையில் சில மார்க்சியர்கள் நவீனகாலத்திற்கு முந்தைய சமூகத்தினை ஆய்ந்தனர். அவர்களுள் Emmanual Terray, Geoffrey-de-ste-Cox போன்றோர் தொடக்கத்திலிருந்தே சமூகம் பற்றி ஆய்ந்தனர்.

ஹாப்ஸ்பாம் எடுத்த நிலை

ஹாப்ஸ்பாமின் அறிவினைத் தூண்டும் கட்டுரைத் தொகுப்புகளில் 1800 முதல் 2000 வரை அய்ரோப்பாவில் மார்க்சிய தாக்கம் பற்றியவை. அவற்றுள் மிகவும் ஆர்வம் தரக் கூடிய ஒன்று பாசிசத்திற்கு எதிரான கட்டுரை. அதில் புலம்பெயர்ந்த அறிவுஜீவிகளின் தாக்கம் பற்றியும் இடதுசாரிகள் பெருகியது பற்றியதுமாகும். இப்போக்கு அய்ரோப்பாவின் பண்பாட்டிற்கும் சிந்தனைக்கும் புதிய போக்கினைத் தந்தது. அதேநேரத்தில் இடதுசாரிகள் புறக்கணிக்கப்பட்டது பற்றியும் பேசுகிறார். ஆனால், இக்கருத்து மென்மையான குரலில் ஒலிக்கிறது. யதார்த்த சோசலிசம் சோவியத் யூனியனில் இல்லையெனினும் அதனை அந்நாடு கொண்டாடுகிறது என்றும் கூறினார். சோவியத் ஏற்கவில்லையெனினும் ஜாஸ் பண்பாடு உருவானது என்றார். ஹாப்ஸ்பாமின் பண்பாடு பற்றிய புரிதல் சோவியத்துக்களின் விளக்கத்திற்கு நேர் மாறானது. அவர் இந்தியாவில் கிடைத்த சிறு சிறு ஓவியங்களை (அதனை 1950 களில் கிடைத்த விலைக்கு வெவ்வேறு சந்தைகளில் வாங்கி) சேகரித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் அவற்றினை விலைப் பட்டியல் காரணமாக வாங்க இயலவில்லை என்று வருந்தினார். கண்காட்சிகளில் மட்டுமே காணமுடிந்தது என்றார்.

பிரிட்டனில் மாணவராயிருந்தபோது ஜாஸ் இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். Francis Newton என்ற புனைபெயரில் New Statesman என்ற பத்திரிகைக்கு ஜாஸ் இசை பற்றி விமர்சனக் கட்டுரைகள் எழுதினார்.

இருபதாம் நூற்றாண்டின் மார்க்சியம் அதற்கு முந்தைய காலகட்டத்திலிருந்து வேறுபட்டது. பாசிசத்திற்கு எதிரான பார்வை கொண்டது என்பதனை இங்கு குறிப்பிடவேண்டும் 1960களில் இருந்து மார்க்சியர்கள் பெருமளவில் சந்தைப்படுத்தப்பட்ட மார்க்சியத்தோடு தொடர்பு கொண்டிருந்தனர். அடிப்படையில் மார்க்சிய பகுப்பாய்வினை மறுசிந்தனைக்கு உட்படுத்தவேண்டிய தேவை இருந்தது. அது எப்போது சாத்தியப்படும் என்றால் படிமமாக்கப்பட்ட பழமைவாத மார்க்சியம் சோவியத்யூனியனில் உடைபடும்போது. அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிவியல்பூர்வமான கருத்துகளை புறந்தள்ளாதபோது. இதுபோன்ற கருத்தியல் பின்னணியில் 1963இல் இலண்டனில் Dialectics of Liberation Conference என்ற தலைப்பில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் அறிஞர்கள் ஒருவருக்கொருவர் பேசினர். பலவகை கருத்துகளுக்கான வாய்ப்புகள் சாத்தியமே. இப்போக்கினை ஹாப்ஸ்பாம் முக்கிய முதலாளிய நாடுகளில் ஏற்பட்ட அதிர்வலை என்கிறார். ஆனால், இதுபோன்ற முயற்சிகள் முதலாளியத்தினையும் பாசிசத்தினையும் ஓரளவிற்குதான் பாதிக்கும். பல/கூட்டு கருத்துகள் ஓரளவிற்கு வரலாற்றுநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தின. இவரின் வாழ்க்கை நினைவலைகள் 2000இல் Interesting Times என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. இத்தலைப்பு பழைய சீனத்து சொலவடையில் இருந்து பெறப்பட்டது என்று கூறினார். நீங்கள் ஒருவரை சபிக்க வேண்டுமெனில் ஆர்வத்துடன், அவர் வாழ வேண்டும் என்று வாழ்த்துங்கள் என்பது அச்சொலவடை. இந்நூல் ஹாப்ஸ்பாமை வரலாற்றாய்வாளர், மார்க்சியவாதி என்ற நிலையிலிருநது வேறுவழிக்குத் திருப்பியது. அதாவது அவர் British Labour Party இன் Neil Kinnock என்பவருக்கும் Brazil இன் Lulu-da-Silava என்பவருக்கும் அறிவுரை வழங்கினார். அது, சில தாக்கங்களை ஏற்படுத்தியது. பல இடங்களில் இருந்தும் சிந்தனையாளர்கள் நட்பு வட்டாரத்தில் இணைந்தனர். அவரின் வீட்டிற்கு விருந்தாளியாக செல்பவர்கள் ஆச்சர்யமடைவர்.

கிரேட் பிரிட்டனின் கம்யூனிச கட்சி அவருடைய கருத்துகளையும் அவரையும் விலக்கி வைத்தது. அவருடைய சிந்தனை இத்தாலிய கம்யூனிஸிட் கட்சியால் தூண்டப்பட்டிருந்தது. எனவே, அவர் அய்ரோப்பியத்தின் கம்யூனிசவாதியானார். தேவையான நேரங்களில் வெவ்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீதான மாற்றுக்கருத்தினை வரலாற்று எழுத்துகளில் முன்வைக்கும்போது ஹாப்ஸ்பாம் தயங்கியதில்லை. இதனாலேயே அவருடைய வரலாற்று ஆய்வு சிறப்பாக அமைந்தது. தாம் Communist Party of Great Britain இல் இயங்கியது பற்றி கூறுகையில் அது ஸ்டாலினிசத்தினை முன்மொழிவதன்று. October Revolution சத்திய பிரமாணங்களை உயர்த்திப் பிடிப்பதாகும் என்றார். ஆனால், அது ஒரு நிறவேறா கனவு. 2009 இல் சோசலிசம் தோற்றது என்றும் முதலாளித்துவம் திவாலானது என்றும் கூறினார். அடுத்து என்ன என்ற கேள்வியினையும் முன்வைத்தார். இறுதியாக அவருடைய வரலாற்று எழுத்துகள் உலகினை மாற்றவில்லை. ஆனால், அவை இவ்வுலகினைப் புரிந்து கொள்ள உதவும்.

Source: Economic and Political Weekly,Vol.46.Nov.11,2012

மொழிபெயர்ப்பாளர்கள்: கி.இரா. சங்கரன், தகைசால் பேராசிரியர், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறை &

இரா.ஆனந்தகுமார், தகைசால் துணை விரிவுரையாளர், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

Pin It