bharathidasanதமிழ்ச் சமூகத்தில் செயல்பட்ட இரு முக்கியமான ஆளுமைகள் தோழர் ம.சிங்காரவேலர் (1860 -1946) மற்றும் கவிஞர் பாரதிதாசன் (1891 - 1964). இவர்களது சிந்தனை மரபுகளை ஒப்பிட்டுக் காணும் முயற்சியைத் தோழர் பா.வீரமணி செய்துள்ளார்.

இவ்விருவரும் தங்களது சமூக ஊடாட்டங்களை 1920 -1964 காலச்சூழலில் நிகழ்த்தினர். தோழர் சிங்காரவேலர் 1920 - 1946 காலங்களிலும், கவிஞர் பாரதிதாசன் 1920 - 1964 காலச் சூழலிலும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். இவர்களது சிந்தனைகள் வெளிப்பட்ட காலங்களின் தமிழ்ச் சமூக அசைவியக்கம் எவ்வகையில் இருந்தது என்பது குறித்தும் அறிந்து கொள்ளும் தேவையுண்டு. சமூக அசைவியக்கத்தைப் புரிந்துகொள்ள சில அடிப்படைகளைத் தொகுத்துக் கொள்ள முடியும். அவை பின்வருமாறு அமைகின்றன.

அச்சு ஊடகம் தமிழ்ச் சமூகத்தில் நிலைபேறு கொண்ட காலம் இதுவாகும். ஆளுமைகள் தங்களது சிந்தனைப் போக்குகளை அச்சு ஊடகம் வழி பதிவு செய்யும் வாய்ப்பு உருப்பெற்றது. இதனால் இவ்விருவரது ஆக்கங்கள் அனைத்தும் அச்சு வழி படிக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இதன் மூலம் இம்மனிதர்கள் குறித்து ஆதாரப்பூர்வமாக உரையாடும் நல்வாய்ப்பு கிட்டியுள்ளது. கால ஒழுங்கில் இவர்களது ஆக்கங்கள் மூலம், இவர்களது சிந்தனைப் போக்குகளைக் கண்டறிய இயலும்.

தமிழ்க் கவிதை உருவாக்க மரபில் இதற்கு முன் இருந்த போக்குகள் படிப்படியாக மாற்றம் பெற்றன. பாரதியின் கவிதையாக்கம் ஒரு புள்ளியாக அமைந்தது. இதன் அடுத்த மரபாகப் பாரதிதாசன் கவிதைகள் உருவான காலமிது. தமிழ்க் கவிதை புதிய பாடுபொருட்களை உள்வாங்கிய காலமும் ஆகும்.

-தமிழ்ச் சமுகத்தில் சுயமரியாதை இயக்கம் எனும் தனித்த அறிவியக்க மரபு இக்காலத்தில் உருப்பெற்றது. நம்பிக்கை சார்ந்து செயல்பட்ட சமூக அசைவியக்கம் என்பது பகுத்தறிவு சார்ந்து செயல்படும் புதிய சூழல் உருவானது. ‘கடவுள்’ போன்ற மூடநம்பிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. புதிய பண்பாட்டு விழுமியங்கள் முன்னெடுக்கப்பட்டன.

-உலகம் தழுவிய அளவில் உருவான இயங்கியல் தத்துவம் தமிழ்ச்சூழலில் அறிமுகமானது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கிய இயங்கியல் தத்துவம், தமிழ் மரபில் உள்வாங்கப்படும் நிகழ்வுகள் உருவாயின. இத்தத்துவ மரபை முன்னெடுக்கும் இடதுசாரி சிந்தனை மரபுகள் தமிழ்ச் சூழலின் அசைவியக்கங்களில் ஒன்றாக வடிவம் பெற்றது.

தமிழ்ச் சமூகத்தில் அச்சு ஊடகம், புதிய கவிதை மரபு, சுயமரியாதை இயக்கம், இடதுசாரி இயக்கம் ஆகிய சமூக அசைவியக்கங்களை அடிப்படையாகக் கொண்டுதான் சிங்காரவேலர், பாரதிதாசன் ஆகிய ஆளுமைகளை இனம் காண முடியும். இதனைப் புரிந்து கொள்வதற்கு இவ்விருவரது ஆக்கங்கள் இக்காலச் சூழலில் வெளிவந்த விவரணங்களை அறிவது அவசியமாகும். அவை வருமாறு: தோழர் சிங்காரவேலரின் ஆக்கங்களைப் பின்காணும் வகையில் ஆவணப்படுத்தலாம்.

- சுயராஜ்யம் யாருக்கு? 1931 - இல் இந்நூல் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. ‘சுயமரியாதைச் சுடர் - 1’ எனும் வரிசையில் இந்நூல் வெளியிடப்பட்டது. பிரித்தானியக் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெறுவது தொடர்பான உரையாடல் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. 32 கட்டுரைகள் அடங்கிய இரு பாகத்திலும் அன்றைய இந்திய அரசியல் குறித்த உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.

-பொதுவுடைமை விளக்கம் 1974 -இல் இந்நூல் அச்சு வடிவம் பெற்றது. 16 கட்டுரைகள் அடங்கிய இந்நூல், தோழர்கள் கே.முருகேசன், ஸி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர்களால் தொகுக்கப்பட்டு வெளிவந்தது. இதில் பொதுவுடைமை விளக்கம் எனும் பகுதி 1924 - 1928 காலங்களிலும் பொதுவுடைமை குறித்த விளக்கம் தரும் இன்னொரு பகுதி 1931-32 காலங்களிலும் எழுதப்பட்டதாகத் தொகுப்பாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழில் பொதுவுடைமை என்பது குறித்த விளக்கத்தை முதன்முதலில் எழுதிய கட்டுரைகள் இவை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

-கடவுளும் பிரபஞ்சமும் எனும் நூல்

1932-இல் குடியரசு பதிப்பகம் வெளியிட்டது. எட்டு அத்தியாயங்களும் இரண்டு அனுபந்தங்களும் கொண்டது இந்நூல். இந்நூலின் பின்அட்டையில் ஆசிரியரால் எழுதி இனிவரும் நூல்கள்; வெளியிட்டிருக்கும் நூல்கள் என ஒரு பட்டியல் உள்ளது. ‘மனிதனும் பிரபஞ்சமும்’, நாம் செய்ய வேண்டிய வேலை என்ன?, ‘பிரபஞ்சம் விளக்கம்’, ‘உயிர் நூல்’, ‘பூமி நூல்’, ‘புத்தமத விளக்கம்’, ‘சுயமரியாதை என்றால் என்ன?’, ‘பொதுவுடைமை விளக்கம்’ ஆகியவை இனி வர வேண்டிய நூல்களின் பட்டியல்.

வெளியிட்டிருக்கும் நூல்களாக ‘Interpretation of Science’ சுயராஜ்யம் யாருக்கு?; ‘தொழிலாளரும் உலக நெருக்கடியும்’, ‘கடவுளும் பிரபஞ்சமும்’, எனப் பட்டியல் உள்ளது. 1934 -இல் குடியரசு பதிப்பகம் ‘விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்’ எனும் நூலை வெளியிட்டுள்ளது இவ்விரண்டையும் இணைத்து ‘விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும்’ எனும் தலைப்பில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டு, இப்போது விற்பனை செய்து வருகிறது.

தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் எனும் நூல், தோழர்கள் கே.முருகேசன், ஸி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோரால் தொகுக்கப்பட்டு 1975 -இல் வெளிவந்தது. இவை 1935 -இல் ‘புது உலகம்’ இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் ஆகும். மார்க்சிய இயங்கியல் குறித்த உரையாடல்களாக இக்கட்டுரைகள் உள்ளன. 17 கட்டுரைகளை இத்தொகுதியில் காணமுடிகிறது.

அரசியல் நிலைமை (மே -1935 -ஏப்ரல் -1936) 29 கட்டுரைகள் இடம்பெற்றுள்ள இந்நூல், ‘புதுஉலகம்’ இதழிலிருந்து மேற்குறிப்பிட்ட தோழர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. ம.சிங்காரவேலரின் சொற்பொழிவுகள் எனும் தொகுப்பு நூல் 1974 - இல் வெளியிடப்பட்டது. நான்கு சொற்பொழிவுகளை உள்ளடக்கியது இந்நூல் 1931 - 1934 காலங்களில் பேசியவை. இதனையும் மேற்குறித்த தோழர்கள் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

மேற்குறித்த ஆக்கங்கள் மூலம் தோழர் சிங்காரவேலரின் சிந்தனைப் போக்கை அறிந்து கொள்ள முடியும். இவைகளையும், இவற்றில் இடம்பெறாத வேறு பல ஆக்கங்களையும் இணைத்து ம.சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் எனும் தலைப்பில் பா வீரமணி மற்றும் முத்து குணசேகரன் ஆகியோர் தொகுத்து மூன்று தொகுதிகளாக 2006 -இல் வெளியிட்டுள்ளனர். இந்த ஆக்கங்களில் இடம்பெற்றிருக்கும் செய்திகளுக்கும், தமிழ்ச் சமூக அசைவியக்கத்திற்கும் உள்ள தொடர்பை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்தப் புரிதலோடு பாரதிதாசன் ஆக்கங்களைப் படிக்க வேண்டும். இந்தக் காலங்களில் (1930 -1950) வெளிவந்த பாரதிதாசன் ஆக்கங்களில் பின் கண்டவற்றைப் பதிவு செய்ய முடியும்.

1930 - ஆம் ஆண்டில் வெளிவந்த பின்கண்டவை. கதர் இராட்டினப் பாட்டு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், சிறுவர் சிறுமியர் தேசிய கீதம், தொண்டர் நடைப் பாட்டு, தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு ஆகியவை.

-1931 -இல் வெளிவந்த சுயமரியாதைச் சுடர், கடவுள் மறுப்பு, சாதி மத எதிர்ப்பு, சுயமரியாதை இயக்க ஆதரவு ஆகியவற்றை இச்சிறு நூலில் காணமுடிகிறது. ‘புதுவை முரசு’ இதழ்க் குழு மூலம் நோயேல் என்பவர் வெளியிட்டார்.

-1937 -இல் ‘புரட்சிக்கவி’ வெளிவந்தது. பில்கணீய கதை தழுவி எழுதப்பட்ட இந்த ஆக்கம், சுயமரியாதை இயக்கம் குறித்துப் பேசும் படைப்பாகும். -1938 -இல் வெளிவந்த பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி, பாரதிதாசன் தமிழ் உலகின் கவனத்திற்குரிய கவிஞராக அறிய உதவியது. இத்தொகுதியில் உள்ள பாடல்களை உயிர்ப் பாடல்கள் என்கிறார் வ.ரா. பல தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகுதியாக இது வந்தது.

-1930 -களில் குடிஅரசு இதழ், புதுவை முரசு இதழ், மணிக்கொடி இதழ் ஆகியவற்றில் வெளிவந்த பாரதிதாசன் பாடல்கள், இவ்விதழ்கள் சார்ந்த அரசியல் கருத்து நிலையோடு அமைந்தவை. -புதுவை முரசு இதழில் அக்காலத்தில் பாரதிதாசன் எழுதிய கட்டுரைகள், அவரது கருத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

-இரணியன் அல்லது இணையற்ற வீரன் (1939), குடும்பவிளக்கு (பல பகுதிகள்), தமிழியக்கம் (1945), இந்தி எதிர்ப்புப் பாட்டு (1948), திராவிடர் திருப்பாடல்கள் (1948), பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி (1949) ஆகியவை வெளிவந்துள்ளன.

குயில் இதழில் இக்காலங்களில் பாரதிதாசன் எழுதிய பல்வேறு கட்டுரைகளும் அவரைப் புரிந்து கொள்ள உதவும்.

1930 - 1950 இடைப்பட்ட பாரதிதாசனின் கருத்து நிலை குறித்து அறிவதற்கான தரவுகளாக மேற்குறித்த ஆக்கங்கள் அமைகின்றன. இவற்றில் காணப்படும் கருத்துக்களைத் தோழர் சிங்காரவேலர், 1920 - 1946 இடைப்பட்ட காலங்களில் வெளிப்படுத்திய கருத்துக்களோடு இணைத்துக் காணுதல் வேண்டும். இந்த பின்புலத்தில்தான் தோழர் பா.வீரமணியின் நூலைப் புரிந்து கொள்ளவேண்டும். இந்த அடிப்படையில் தோழர் ம.சிங்காரவேலர், கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் வெளிப்படுத்திய கருத்துக்களைப் பின்கண்டவாறு தொகுத்துக் கொள்ள இயலும்.

-மனித சமூகத்தின் முரண்பாடுகளை இவ்விருவரும் எந்தெந்தக் கோணங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். அவை தமிழ்ச் சமூகத்தின் அசைவியக்கத்தோடு எந்தெந்த வகையில் உறவுடையதாக அமைகிறது என்பது குறித்த உரையாடலை மேற்கொள்ள இயலும்.

-ஐரோப்பியப் புத்தொளி மரபின் மூலம், உருவான அறிவியல் கருத்துக்களை, இவ்விருவரின் ஆக்கங்களில் இடம்பெற்றிருக்கும் முறை குறித்தும் பேச முடியும். காலனியத்தின் மூலம் பல்வேறு அறிவியல் கருத்துக்கள், பொதுவெளிக்கு வந்தன. அதனை உள்வாங்கி இவ்வறிஞர்கள் செயல்பட்டிருக்கும் பாங்கு குறித்து அறிய முடிகிறது. அவற்றையும் நாம் உரையாடலுக்கு உட்படுத்தலாம்.

-சமயம் உள்ளிட்ட மூட நம்பிக்கைகள் சார்ந்த கருத்துக்களை இவ்விருவரும் தமது ஆக்கங்களில் எதிர்கொண்டுள்ளனர். மிக விரிவாகவே இவ்வகையான செய்திகளை இருவரும் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். அவை குறித்தும் விவாதிக்க முடியும்.

-ஜனநாயகம், சுயமரியாதை ஆகிய சமூக விழுமியங்கள் குறித்து இருவரும் விரிவாகப் பேசியுள்ளனர். அன்றைய தமிழ்ச் சமூகத்தின் முதன்மையான அசைவியக்கங்களாக மேற்குறித்தவை இருந்தன. பல பரிணாமங்களில் இக்கருத்துநிலைகளை இருவரும் வெளிப்படுத்தியுள்ளனர். அவற்றின் தன்மைகள் குறித்தும் பேச முடியும்.

இந்நூலில் உள்ள பல கட்டுரைகளில் சமூகத்தின் முரண்பாடுகள் குறித்து விரிவான பதிவுகள் இடம் பெற்றுள்ளதைக் காண்கிறோம். ம.சிங்காரவேலர், காலனி ஆதிக்கம் நம்மை எவ்வாறு சுரண்டுகிறது, அதிலிருந்து விடுதலை பெற்று எவ்வாறு சுயராஜ்யத்தை அமைப்பது என்பது குறித்துப் பேசியுள்ளார்.

காந்தியார் காணும் சுயராஜ்யம் எனும் மரபிலிருந்து இவர் வேறுபட்டிருப்பதைக் காணலாம். ‘சுயராஜ்யம் யாருக்கு’ என்ற நூலில், சுதேசிக்கு உதவியின்மை, கிராமவாசிகளின் நிலைமை, குடியானவர் உணவும் உடையும், வறுமைக்குக் காரணம், நிலத்தீர்வை அதிகம், மதங்களின் கொடுமை, ஜாதி வித்தியாசக் கொடுமை, சமூக வாழ்க்கையின் கொடுமை, பெண்களின் நிலைமை, பொதுக்கல்வி இன்மை, தொழிலாளர் நிலைமை, தேசிய காங்கிரசின் சுயராஜ்ய நோக்கம், சுயமரியாதை இயக்கம், முகமதியர் பிரச்சினை, சமதர்மம் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார். இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் முரண்பாடுகளை அவர் எவ்விதம் வெளிப்படுத்துகிறார் என்பதைக் காணலாம். தமிழ்ச் சூழலில் உருவான புதிய தொழிலாளர் இயக்கம், அவர்களுக்கான

‘மே நாள்’ கொண்டாட்டம் ஆகியவற்றை இவர்தான் முதன்முதலில் தொடங்குகிறார். மார்க்சிய தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் நேரடியாக களம் இறங்குகிறார். இவ்வாறு சமூக முரண்பாடுகளின் அனைத்துப் பரிமாணங்களையும் தமது எழுத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

கவிஞர் பாரதிதாசனும் தமது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் சிங்காரவேலர் வெளிப்படுத்தியுள்ள சமூக முரண்பாடுகளைத் தமது ஆக்கங்களில் வெளிப்படுத்துகிறார். 1930 -இல் வெளிவந்த ‘தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு’ எனும் கவிதைத் தொகுதியில் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு, ஆலய உரிமை, நியாயமற்ற மறியல், சகோதரத்துவம் ஆகியவை குறித்துப் பேசுகிறார். 1931 -இல் வெளிவந்த ‘சுயமரியாதைச் சுடர்’ என்ற குறுநூலிலும் சமூக முரண்பாடுகளை வெளிப்படுத்துகிறார். 1938 -இல் வெளிவந்த பாரதிதாசன் முதல் கவிதைத்தொகுதியில் புத்துலகாம் பொதுவுடைமை, புரட்டு முதலாளியம், ஓடப்பர், உயரப்பர், ஒப்பப்பர், ஏழை தொழிலாளி எனும் முரண் ஒழிப்பு, உடல் உழைப்பில்லாதவர் சுரண்டல் ஆகிய பல்வேறு சமூக முரண்பாடுகளைப் பேசுவதைக் காண்கிறோம்.

தோழர் பா.வீரமணி அவர்கள், இந்த நூலில் மேற்குறித்த சமூக முரண்பாடுகளை இருவரும் எந்தெந்த பாங்கில் வெளிப்படுத்தியுள்ளனர் என்பதை மிக விரிவாகப் பதிவு செய்துள்ளார். மார்க்சியக் கருத்துநிலை சார்ந்த சிங்காரவேலரும், சுயமரியாதை கருத்து நிலையுடைய பாவேந்தரும் ஒரு புள்ளியில் சந்திப்பதைப் பதிவு செய்துள்ளார்.

பதினான்காம் நூற்றாண்டு முதல், ஐரோப்பியப் பின்புலத்தில் புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டன. இதனால் புத்தொளி மரபு உருவானது. இதுவரை பேசப்பட்ட கருத்து நிலைகள் பல மறு பரிசீலனைக்குட்பட்டது. பூமியின் இயக்கம் குறித்த கருத்துநிலை இவ்வகையில் முக்கியமானது. புதிய கண்டுபிடிப்புகளின் அறிமுகம் நமக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிடைத்தது. இவ்வகையான புதிய கண்டுபிடிப்புகளால், சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இதில் கடவுள் என்ற கருத்துரை முதன்மையாக உரையாடலுக்கு வந்தது. இதனைத் தமிழ்ச் சூழலில், தமது எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தியவர் சிங்காரவேலர். சமூகப் பொருளாதாரம் சார்ந்த அறிவியல், நடைமுறை வாழ்க்கை சார்ந்த அறிவியல் ஆகியவற்றை விரிவாகப் பேசினார் சிங்காரவேலர். அவரது அறிவியல் நோக்கு தனித்தன்மையுடன் வெளிப்பட்டது. இதற்கென ‘புது உலகம்’ எனும் இதழையும் நடத்தினார்.

சிங்காரவேலர் மேற்குறித்த அணுகுமுறையைப் பாரதிதாசன் கொண்டாடினார். ‘புது உலகம்’ இதழ் வருகையை , ‘வெல்லு தமிழ்ப் புது உலகம்’ ‘புலனடைந்த மாசையெல்லாம் அது துடைக்கும்’ என்றெல்லாம் பாராட்டினார். தமது படைப்புகளில் புதிய அறிவியல் சிந்தனைகளை வெளிப்படுத்தத் தொடங்கினார். ‘அறிவியல் எங்கும் புகும்’, ‘அறியாமை இருள் நடுங்கும்’, ‘மதம் அழியும்’, ‘பகுத்தறிவு உயரும்’ எனும் கண்ணோட்டத்தில் எண்ணற்ற கவிதைகளை எழுதினார். தமது பார்வை, பகுத்தறிவு சார்ந்த அறிவியல் கண்ணோட்டம் என்று தெளிவுபடுத்தினார். இவ்வகையில் தமிழ்க் கவிதையில் அறிவியல் கண்ணோட்டத்தைக் கொண்டு வந்ததில் பாவேந்தருக்கு முதன்மையான இடமுண்டு.

தோழர் பா. வீரமணி அவர்கள், இருவருடைய மேற்குறித்த கருத்துக்களைப் பல கூறுகளில் இந்நூலில் வெளிப்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது. இடதுசாரி இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் ஒரே கண்ணோட்டத்தில் செயல்பட்ட இருவேறு அமைப்புகள் என்பதை இவ்விருவரது கருத்துக்களை ஒப்பிட்டுக் காட்டியதன் மூலம் வீரமணி இந்நூலில் செழுமை சேர்த்திருக்கிறார். தமிழ்ச் சமூக அசைவியக்கத்தில் மேற்குறித்த இரு இயக்கங்களும் இணைந்து செயல்பட்ட தொடக்கக் காலத்தின் அடையாளங்களாகச் சிங்காரவேலரும் பாவேந்தரும் செயல்பட்டிருப்பதை வீரமணி இந்நூல் வழி வெளிப்படுத்தியுள்ளார்.

நம் சமூகத்தின் மிகப் பெரும் நோய்க்கூறாகச் செயல்படுவது சமயம் ஆகும். இதன் மூலம் மூடநம்பிக்கைகள், சாதியம், மனித வெறுப்புகள் ஆகியவை நடைமுறை வாழ்வில் பல்வேறு அவலங்களை உருவாக்கிக் கொண்டு இருப்பதை நாம் உணரமுடியும். இவற்றை, சிங்காரவேலரும் பாவேந்தரும் எதிர்கொண்ட வரலாறு பல பரிமாணங்களைக் கொண்டதாகும். சிங்காரவேலர் குடிஅரசு இதழில் இப்பொருள் தொடர்பாகத் தொடர்ந்து எழுதினார்.

‘விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்’ எனும் தலைப்பில் தொடர் எழுதினார். இப்போது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தினர் மேற்குறித்த கட்டுரைகளை நூல் வடிவில் விற்பனை செய்து வருகின்றனர்.1932 -இல் வெளியிட்ட ‘கடவுளும் பிரபஞ்சமும்’ எனும் நூலில் பகுத்தறிவுச் சங்கத்தைச் சேர்ந்தவராகிய ‘கோகன்’ என்ற பெரியார், மத அனுகூலமாக எழுதிய சில விஞ்ஞான நிபுணர்களைக் கண்டித்து எழுதியுள்ளார்.

இந்த நூலில் மதங்களுக்கு விஞ்ஞான விசாரணையின்படி ஆதரவு கிடைக்க வழியில்லை என்று பொதுவாகக் காட்டியுள்ளாறேயழிய, விஞ்ஞான விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட உறுதியான விஷயங்களைக் கொண்டு மதங்களுக்கு ஆதாரச் சொல்லாகிய கடவுளை விசாரிக்கப் புகுந்தாரில்லை (நூன்முகம் 1932) என்று கூறுகிறார்.

ஆனால், சிங்காரவேலர் மதத்திற்கும் கடவுளுக்கும் உள்ள ஒப்பீட்டை விரிவாகப் பேசியுள்ளார். இவரைப்போலவே பாரதிதாசனும் கடவுள் மறுப்பை விரிவாகப் பதிவு செய்துள்ளார். தமிழ்க் கவிதை மரபில் கடவுள் மறுப்பை விரிவாகப் பதிவு செய்துள்ளார். இவ்வகையில் இவ்விருவரும் உடன்பாடான கருத்து நிலையில் செயல்பட்டதைக் காண்கிறோம்.

தோழர் வீரமணி அவர்கள் “சிங்காரவேலரின் சிந்தனையும் தொண்டும்”(2009), “சிங்காரவேலரின் சிந்தனைகள்”(2012), “சிங்காரவேலரின் பன்னோக்குப்பார்வை” (2014), “சிங்காரவேலரும் பிற சிந்தனையாளர்களும்”(2016) மற்றும் சில நூல்களையும் சிங்காரவேலர் குறித்து எழுதியுள்ளார்.

அந்த வரிசையில் இந்த நூலும் அடங்கும். தமது வாழ்நாட் பணியாகச் சிங்காரவேலர் குறித்த ஆய்வை இவர் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வு மூலம் சிங்காரவேலர் குறித்த பல பரிணாமங்களைத் தமிழ்ச் சமூகம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பின்புலத்தில் சிங்காரவேலரையும், பாரதிதாசனையும் இணைத்துக் காணும் இந்நூல், தமிழ்ச் சமூகத்திற்கு அரிய கொடை. தோழர் பா.வீரமணி அவர்களுக்கு எனது அன்பான வணக்கங்களையும் நன்றியையும் உரித்தாக்குகிறேன்.

 (புலவர் பா.வீரமணி எழுதிய ‘சிங்காரவேலரும் பாவேந்தரும் - ஓர் ஒப்பீடு’ என்னும் நூலுக்கான அணிந்துரை)

- வீ.அரசு

Pin It