நிலமும் பொழுதும் முதன்மையானவை என்று கண்டறிந்த சங்கத் தமிழர் மரபின் தொடர்ச்சியாக ஒவ்வொருவரின் நினைவுகளும் அவரவர் பிறந்து வளர்ந்த மண்ணுடன் ஒத்திசைந்துள்ளன. முடிவற்ற நினைவுகளில் ததும்பிடும் கடந்த காலம் நிலத்தின் வழியாகப் பதிவாகியுள்ள சொற்கள் முடிவற்றவை. பிறந்த மண் பற்றிய, சொந்த ஊர் பற்றிய நினைவுகள் ஒருபோதும் எழுதித் தீராதவை. விமர்சகர் ந.முருகேசபாண்டியன் தான் பிறந்து வளர்ந்த மதுரை நகரைப் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு, மதுரை மாநகரின் வெளியில்: அறிந்ததும் அறியாததும்’ என்று புத்தகமாகியுள்ளது. மதுரை மாநகரின் அறுபதாண்டு காலச் சாட்சியமாகத் தன்னை உணர்ந்திடும் முருகேசபாண்டியன் தனக்கும் நகருக்குமான ஈரம் ததும்பிடும் உறவை அழுத்தமாகச் சித்திரித்துள்ளார். இரண்டாயிரமாண்டு வரலாற்றில் இன்றளவும் தொன்மையான எச்சங்களுடன் நிலைத்திருக்கும் மதுரை நகரின் சமகாலம் பற்றிய பதிவுகளுக்கு முன்னுரிமை தந்து எழுதப்பட்டுள்ள நூல், சுவராசியமான மொழியில் பல்வேறு தகவல்களுடன் விரிந்துள்ளது.
சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சி, பரிபாடல் முதலாக மதுரை நகரை முன்வைத்து எழுதப்பட்ட இலக்கியப் பிரதிகள் காலந்தோறும் தொடர்கின்றன. எனினும் கி.பி. 1868 ஆம் ஆண்டு ஜெ.எச். நெல்சன் என்ற ஆங்கிலேயர் எழுதிய, மதுரையின் அரசியல் வரலாறு’ நூல் தனித்துவமானது. மதுரை நகரை முன்வைத்துப் பலரும் எழுதியுள்ள நூல்களில் இருந்து மாறுபட்ட நிலையில் அண்மைக் காலத்தில் வாழ்ந்த மதுரைக்காரர்களை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ள மதுரை மாநகர வெளியில்’ நூல், சமகாலத்திய நிகழ்வுகளைப் பதிவாக்கியுள்ளது. முருகேசபாண்டியன் கடந்த காலத்தில் மதுரை நகரில் எதிர்கொண்ட சம்பவங்கள், எதிர்காலத் தலைமுறையினருக்கு மதுரை இப்படியெல்லாம் இருந்தன என்று அறிந்திட உதவுகின்றன. அவை, இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்றுப் பதிவுகளாக மாறிவிடும்.
மதுரை மாநகர வெளியில் நூலை வாசித்தபோது கடந்த நாற்பதாண்டுகளில் நான் கடந்து வந்த வாழ்க்கையை எழுத்தில் கண்டறிந்த உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது. முருகேசபாண்டியன் விவரித்துள்ள காட்சிகளின் மொழி எனக்குள் உருவாக்கிய தாக்கத்தின் விளைவாக நூலில் இடம்பெற்றுள்ள சில சுவாரசியமான விஷயங்களைப் பற்றிய எனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளேன்.
தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று போற்றப்படுகிற மதுரையைப் பற்றிய குறிப்புகள் மதுரைக்காஞ்சி புறநானூறு பரிபாடல் சிறுபாணாற்றுப்படை, சிலப்பதிகாரம் போன்ற செவ்வியல் இலக்கியப் படைப்புகளில் இடம் பெற்றுள்ளன. தாலமி, பிளினி போன்ற ரோமானிய வரலாற்றாய்வாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ள மதுரை நகரம், இன்றும் இளமையுடன் விளங்குகிறது. இடைக்காலத்தில் இஸ்லாமியர்கள், தெலுங்கர்கள், மராட்டியர்கள் போன்றவர்களின் அதிகாரத்தில் பாண்டிய நாட்டில் தொடர்ந்து நடைபெற்ற போர்களாலும் பஞ்சத்தாலும் மடிந்த மக்களின் எண்ணிக்கைக்குக் கணக்கேது?
மதுரை நகரை ஆண்ட நாயக்க மன்னர்கள் வைணவக் கடவுள்களுக்கும் கோவில்களுக்கும் முன்னுரிமை தந்தாலும் மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர். நாயக்கர் ஆட்சியில் மதுரைத் தெருக்களுக்கு அமைந்த காரணப்பெயர்கள் அறிந்து கொள்ள சுவாரசியமாக உள்ளன. உதாரணமாகச் சில: ஓவியர்கள் வாழ்ந்த இடம் சித்திரக்காரத்தெரு இசைக் கலைஞர்கள் வாழ்ந்த இடம் நவபத் கானா தெரு. மஞ்சனம் அரைத்தவர்கள் இருந்த இடம் மஞ்சணக்காரத் தெரு என்று ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு காரணப்பெயர் இருக்கிறது.
நாவலாசிரியர் ப.சிங்காரம் அவர்கள் பேசிய பேச்சுகள்தான் மதுரை பற்றிய நூல் எழுதுவதற்கு அடிப்படை என்று குறிப்பிடுகின்ற முருகேச பாண்டியன், புயலிலே ஒரு தோணி நாவலில் இடம் பெற்றுள்ள மதுரை பற்றிய விவரிப்புகளைத் தொகுத்துத் தந்துள்ளார். மதுரைக் காஞ்சி நூல் விவரிக்கிற மதுரைக்கும் புயலிலே ஒரு தோணி நாவல் விவரிக்கின்ற மதுரைக்கும்தான் எவ்வளவு வேறுபாடுகள்? நாவலில் இடம் பெற்றுள்ள மதுரை நகர் பற்றிய விவரிப்புகளை 60களில் நேரில் கண்டதாக முருகேசபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
இசை, நாடகம், திரைப்படம் போன்ற கலைகள் மதுரையில் செழித்து வளர்ந்தது பற்றிய தகவல்கள் நூலில் பதிவாகியுள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கி வைத்த நாடகங்கள் இன்றும்கூட மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நடத்தப்படுகின்றன. பாரம்பரியமான நாடக நடிகையர், இசைக் கலைஞர்கள் நாடக நடிகர் சங்கத் தெருவை சுற்றிலும் வாழ்ந்து வருகின்றனர்.
திருவிழாக்களின் தலைநகரமான மதுரையில் இன்றும் சித்திரைத் திருவிழா, பிட்டுத் திருவிழா, தெப்பத் திருவிழா போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
மதுரை என்றதும் அடுத்த நினைவுக்கு வருவது உணவுதான். தூங்கா நகரில் இரவிலும் கிடைக்கும் உணவுகள் பற்றிய குறிப்புகள் மதுரைக்காஞ்சியில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் சோற்றை விற்பது நாயக்கர் காலத்தில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் எனத் தமிழறிஞர் தொ. பரமசிவம் கருதுகிறார். அறுபதுகளில் கிளப்புக் கடை அதன்பின்னர் பிராமனாள் காபி கிளப், சைவாள் காபி கிளப், உடுப்பி ஹோட்டல் எனத் தொடங்கி இப்பொழுது மதுரை நகரில் பிரபலமாக இருக்கும் சைவ அசைவ ஹோட்டல்கள் பற்றி ஆசிரியர் விரிவாக விளக்கியுள்ளார். முதன் முதலில் சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்தது அம்சவல்லி பவனில்தான். இவைதவிர வடை, பஜ்ஜி போன்ற சிறு தீனிகளின் சிற்றுண்டிகளின் நாயகியாய் மதுரை விளங்குகிறது. மதுரை முனியாண்டி விலாசை யாராலும் மறக்க முடியுமா? மதுரையில் பிரத்தியேக உணவுகளான கீரை அடை அப்பம், இட்லியும் விதவிதமான சட்னிகளும், சௌராஷ்டிரர்களின் பொங்கல், புளியோதரை, மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா, பருத்திப்பால் போன்ற உணவுகளை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். மதுரை தெருவோரக் கடைகள் பற்றியும் அதன் சிறப்பு உணவுகள் பற்றியும் ஆசிரியர் சுவையாக விளக்கியுள்ளார்.
மதுரை என்றால் பலருக்கும் நினைவில் தோன்றுவது திரைப்படங்கள்தான். திருவிழாக்களின் நகரம் மட்டுமல்ல திரையரங்குகளின் நகரமும் மதுரைதான். எல்லா திரைப்பட நடிகர் நடிகைகளுக்கு ரசிகர் மன்றங்கள் மதுரை நகரில் அதிகமாக இருக்கின்றன. 20ஆம் நூற்றாண்டில் மதுரைக்கு மின்சாரம் அறிமுகமானபோது பழமையான இம்பீரியல் தியேட்டரில் ஜெனரேட்டர் மூலம் படங்கள் திரையிடப்பட்டன என்று வாசிக்கும்போது ஆச்சரியமாக உள்ளது. சந்திரா டாக்கீஸில் நவாப் ராஜமாணிக்கம், டி.கே.எஸ் சகோதரர்கள், கண்ணையா நாடகக் குழுக்களின் நாடகங்கள் நடந்திருக்கின்றன. மதுரை தங்கம் தியேட்டர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர் எனப் பெருமை பெற்றது. காலவோட்டத்தில் நிறையத் தியேட்டர்கள் மால்களாகவும் காம்ப்ளக்ஸ்களாகவும் மண்டபங்களாகவும் மாறிவிட்டன. திரைப்பட போஸ்டர்கள் நகரத்துத் தெருக்களின் சுவர்கள் எங்கும் அலங்கரித்தது ஒரு காலம்.
மதுரையின் மற்றொரு மகத்தான அடையாளமாக விளங்கிடும் ஜல்லிக்கட்டு. விளையாட்டின் பன்முக அம்சங்களைச் சமகால அரசியலுடன் தொடர்புபடுத்தி முருகேசபாண்டியன் விவரித்திருப்பது, கவனத்திற்குரியது.
மதுரையில் உயர்கல்வியின் வளர்ச்சியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பணி, மகத்தானது. முருகேசபாண்டியன், பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்புப் பயின்ற 1978-80 காலகட்டத்தில் தன்னுடைய பேராசிரியர்களை முன்வைத்து விவரித்துள்ள கட்டுரை, ஒப்பீடு அற்றது. ஒரு மாணவரின் உருவாக்கத்தில் ஜாம்பவான்களான பேராசிரியர்களின் செயல்கள் எப்படியெல்லாம் இருந்தன என்று முருகேசபாண்டியன் தன்னை முன்வைத்து எழுதியுள்ள சம்பவங்கள், இன்று தொடர்ந்திடாமல், ஒருவகையில் வரலாற்றுப் பதிவாக மாறுவது வேதனையளிக்கிறது
மதுரை என்றதும் அடுத்த ஞாபகத்துக்கு வருவது அதன் மொழி. திரைப்படங்களிலும் மதுரைத் தமிழ் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. ஆசிரியர் மதுரை வட்டார மொழிச் சொற்களையும் அதற்கான பொருளையும் அழகாக விளக்கியுள்ளார். அவை மதுரை வட்டாரத் தமிழ் மொழியைத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ள மதுரை மண்ணின் மகத்தான கலைஞன் வடிவேலு பற்றிய கட்டுரை, வடிவேலு என்ற நடிகரின் ஆளுமை உருவாக்கத்தை நுணுக்கமாக ஆராய்ந்துள்ளது. எளிய குடும்பத்தில் பிறந்து, விளிம்பு நிலையில் உழன்று தமிழ்த் திரைத்துறையில் வரலாறு படைத்த சாதனையாளரான வடிவேலு அவர்களின் கடின உழைப்பும், சினிமாவுக்கான அர்ப்பணிப்பும் பிரமிப்பானவை
மொத்தத்தில் சங்கம் வளர்த்த மதுரை நகரில் தொடங்கி இயல் இசை நாடகம், திரைப்படங்கள் தியேட்டர்கள், உணவுகள், ஹோட்டல்கள், தெருக்கள் என முருகேசபாண்டியன் தான் சுற்றித்திரிந்த கண்டுணர்ந்த, வளர்ந்த மதுரை பற்றிய சிறப்பான தொகுப்பாகப் புத்தகத்தை எழுதியுள்ளார். நாம் அறிந்ததும், அறியாததுமான அரிய தகவல்களின் களஞ்சியமாகப் புத்தகம் விரிந்துள்ளது. ஆசிரியரின் நினைவாற்றலும் தேடலும் ஆர்வமும் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிவாகியுள்ளன. எதிர்காலத்தில் நமது சந்ததியினருக்கு மதுரையைப் புரிந்துகொள்ள உதவுகிற இந்நூல் ஒருவகையில் வரலாற்று ஆவணம். அதேவேளையில் மதுரை நகரின் சமகால நிகழ்வுகளையும் இடங்களையும் அறிந்திட இந்தப் புத்தகம் சிறந்த கையேடு; அரிய தகவல் சுரங்கம்.
(மதுரை மாநகர வெளியில் | ந.முருகேசபாண்டியன் | வெளியீடு: NCBH, விலை ரூ.230)
- கல்பனா ரத்தன்