என்னங்கடா கூத்து இது? என்று சர்வ சாதாரணமாக கேலித் தொனியில் பேசிப் பழகிய நமக்குக் கூத்தைப் பற்றி என்ன தெரியும் என்று யாரேனும் கை சூண்டிக் காட்டினால் வரும் பதில் என்னவாக இருக்கும் நமக்கே தெரியும். இப்படி ஒரு கலையின் அடையாளத்தை வரலாற்றில் இருட்டடிப்பு செய்வதற்கு என்ன காரணம் என்பதை அடிக்கோடிட்டுத் தொகுக்கப்பட்ட நூல் தெருக்கூத்துக்கலைஞர்கள் களஞ்சியம். ‘கலை என்பது அழகியல் வெளிப்பாடு அல்லது உணர்வு வெளிப்பாடு’ என்று காலங்காலமாகக் கூறப்படும் வரையறைகளைத் தாண்டி சமூகத்தோடு இயங்கிக்கொண்டிருக்கும் வாழ்வியற் கூறாகக் கலை விளங்குகிறது.

எனவே அவற்றை வளர்த்தெடுப்பதற்கான கல்வி முறைகளும் வாழ்முறைப் பயிற்சிகளும் அவசியமான ஒன்று என்பது ஒருபுறமிருக்க, அதற்கு முன்பாக எம்மாதிரியான கலைகளைத் தமது அடையாளமாகக் கொள்வது என்கிற சிக்கல் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. செவ்வியல் தன்மை கொண்ட கலைகளையே ஒரு சமூகம் தனது அடையாளமாக அங்கீகரிக்கிறது. அந்த வகையில் தமிழர்களின் நிகழ்த்துகலை என்கிற அடை யாளத்தை பரதநாட்டியமே பெறுகின்றது. இத்தகைய அடையாளத்திற்கான அடிப்படைத் தகுதி எதுவாக உள்ளது என்று காணும்போது அது தமிழ்ச் சமூக வரலாற்றின் கருப்புப் பக்கங்களையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தெருக்கூத்துக் கலை தமிழர்களின் மரபுக் கலையாகக் கற்பிக்கப்படுவதில்லை. ஏன்? என்கிற கேள்விக்கு விடை யளிக்கின்றது ‘தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம்’. இந்நூல் கோ.பழனி மற்றும் சி.முத்துக்கந்தன் ஆகியோரால் தொகுக்கப்பட்டது. இதில் 106 தெருக்கூத்துக் கலைஞர் களின் நேர்காணல் இடம்பெற்றுள்ளது. இவர்களைப் பற்றிய வாழ்க்கைக்குறிப்பும் தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாக வினைப்படும் கலைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள் கலைஞர் களே. நிகழ்த்துக் களம் தாண்டி இவர்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. இதனை ஒரு வகையில் நுகர்வுக்கலாச்சாரப் பண்பின் வெளிப்பாடாகப் புரிந்து கொள்ளலாம். இந்நூல் அவர்களின் ஆடுகளம் தாண்டி அவர்களைத் தேடியுள்ளது.

தெருக்கூத்துக் கலை வரலாற்றை எழுதுவதற்கு உதவும் ஆவணமாக இந்நூல் பயன்படவேண்டும் என்கிற நோக்கத்தில் இது தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூலினுள் உள்ள தகவல்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்

·           கலைஞர்களின் பெயர், வயது, இருப்பிடம், தொழில், கூத்து அனுபவ காலம், ஊதியம் முதலிய அடிப்படைத் தகவல்கள்

·           கலைஞர்களின் சாதி

·           தெருக்கூத்துப் பாணி குறித்த தகவல்கள்

·           கூத்துப் பிரதி

·           சாதியச் சிக்கல்/சமூகச் சிக்கல்

·           கூத்துக் கலைச்சொற்கள்

·           கூத்தின் பரிணாம வளர்ச்சி/வீழ்ச்சி

இந்நூலில் சில கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப் பட்டுள்ளன. அவ்வாறு கேட்கப்பட்ட ஒரு கேள்வி கூத்து எந்தச் சமூகத்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டது? என்பது. இதற்குப் பெரும்பாலான கலைஞர்கள் வண்ணார் சமூகத் தவர்கள் என்று பதிலளிக்கின்றனர். சிலர் ஆதிதிராவிடர் என்றும் குறவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். என்றாலும் வண்ணார் சமூகத்தவர் என்று அச்சமூகத்தைச் சாராத வர்களும் குறிப்பிட்டிருப்பதால் நாம் அதையே சரியானதாக ஊகிக்க முடிகிறது.

தெருக்கூத்து சாதி அரசியல் காரணமாக சரியான அங்கீகாரத்தைப் பெற வில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது (பக்கம்:9) என்று தொகுப்பாளர் குறிப்பிடுவது நூலை வாசிக்கும் போது ஏற்படுத்தக் கூடிய ஒரு அனுபவமாக உள்ளது. விடிந்தால் கூலியாக இருந்தாலும் இரவு முழுதும் ராஜாவாக இருக்கலாம் என்கிற திருப்தியே தொடர்ந்து கூத்தில் நடிக்கத் தூண்டுகிறது என்று கூறும் கலைஞரின் குரல் சமூக ஒடுக்குதலுக்கான எதிர்வினையாக அதற் குரிய களமாகக் கூத்தை நான் பயன்படுத்திக் கொள் கிறேன் என்கிற தொனியாக அதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

குறிப்பிட்ட சமூகத்திற்குள் குறுகிவிடாமல் கூத்து அனைத்து மக்களுக்கும்(தமிழர்) பொதுவான ஒரு மரபுக்கலையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதையே தொகுப்பாளரின் கூற்று சுட்டுகின்றது. ஆனால் இக்கலை யாருக்குரியது என்று தேடும் முயற்சி இதனை மீண்டும் குறுகிய வட்டத்திற்குள் அடைப்பதற்கும் வழியமைத்து விடக்கூடும். சில கலைஞர்கள் இது யாரால் தோற்று விக்கப்பட்டாலும் கலை அனைத்து மக்களுக்கும் பொது வானது என்று கூறும் பதில் சிறிது ஆறுதலாக உள்ளது.

தெருக்கூத்தில் கட்டியக்காரனின் முக்கியத்துவம் குறித்துப் பலரும் பேசியுள்ளனர். கட்டியக்காரனாக நடிப்பதற்கு மிகுந்த திறமை வேண்டும் என்றும் அவனுக் குரிய பண்புகள் என்ன என்பதும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று கட்டியக்காரன் கொச்சை வார்த்தை பேசக்கூடியவனாகவும் சினிமா பாடல்களைக் கொண்டு ஒப்பேத்துபவனாகவும் உள்ளான் என்று சிலர் குறிப்பிடு கின்றனர்.

இதனைத் தெருக்கூத்தின் வளர்ச்சியாக யாரும் சுட்டவில்லை. மாறாக ஊடகத்தின் காரணமாக ஏற்பட்ட சீரழிவாகக் குறிப்பிடுகின்றனர். விரும்பி ஏற்கும் கதாபாத்திரங்கள் என்ன என்கிற கேள்விக்குப் பெரும் பாலும் ‘மெயின்ரோல்'தான் என்று குறிப்பிட்டுள்ளனர். சிலர் பெண்வேடத்தை விரும்பி நடித்துள்ளனர். கூத்தில் பெண்களுக்கான பங்கு குறித்துப் பேசப்பட்டுள்ளது.

பெண்கள் பெரும்பாலும் நடிப்பதில்லை என்றாலும் சில பெண்கலைஞர்கள் கூத்தாடியுள்ளனர். இவர்களும் குறிப்பிட்ட சில சாதியராகவே உள்ளனர். பெண் கலைஞர் களுக்குத் தக்க பாதுகாப்பு இல்லாமை காரணமாக இவர்கள் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை என்று குறிப்பிடுகின்றனர். பெண்வேடமிட்டு ஆடும் ஆண் கலைஞர்களும் சிக்கலுக்குள்ளாவதைப் பதிவு செய் துள்ளனர். கூத்துப் பிரதி உருவாக்கத்தில் பெண்கள் இருந்திருப்பதை அறிய முடிகிறது.

தெருக்கூத்தில் வடக்கத்திப்பாணி, தெற்கத்திப் பாணி, மேற்கத்தி பாணி என்று மூவகைப்பாணி உள்ளது. இதற்குரிய தனித்துவம் என்ன என்பது விளக்கப் பட்டுள்ளது. அவை ஆடை, அலங்காரம், இசைக்கருவி, அடவுகள் முதலியவற்றில் வேறுபடுகின்றது. ஒரு பாணிக் கூத்தர்கள் மற்றொரு பாணியைப் பார்ப்பதும் இல்லை என்றும் பார்வையாளர்களிடத்தும் இத்தகைய பண்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்குத் தங்களது கலையின் தனித்துவத்தைப் பேண வேண்டும் என்கிற எண்ணமே காரணம். ஒரு வகையில் அந்தத் தனித்துவமே அவர்களது அடையாளமாக உள்ளது.

இவற்றில் எது முந்தையது, எதைத் தொடர்ந்து எது வந்தது என்கிற விவாதங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இறுதியில் தெற்கத்திப்பாணியையே பழமரபு சார்ந்ததாகத் தொகுப்பாளர் குறிப்பிட்டுள்ளார். தெருக்கூத்து, கட்டைக்கூத்து ஆகிய இரண்டில் எது சரியான சொல் அல்லது எது பழைய சொல் என்கிற விவாதமும் நூலினுள் உள்ளது. கட்டைக்கூத்து என்று கூறுவதற்கான காரணம் என்ன என்றும் தொகுப்புரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

கூத்துப்பிரதி உருவாக்கம் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. யார் உருவாக்குகின்றனர் என்றும் அவை எவ்வாறு தலைமுறை கடந்து பாதுகாக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளனர். பாரதப் பிரசங்கத் திலும் தலைமுறை தாண்டி எவ்வாறு பிரதி பேணப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். பெரும்பாலும் இவை வாய்மொழியாகவே கடந்து வந்துள்ளன. பின்பு புத்தகங்களாக அச்சாக்கப்பட்டு விற்பனை செய்யப் பட்டும் உள்ளன.

பெரும்பாலான கலைஞர்களின் ஆதங்கம் தனக்குப் பின் இந்தக் கலையை யார் தொடர்வது என்பது. தன்னுடைய வாரிசுகள் இதனை விரும்பாமல் பிற தொழிலில் ஈடுபடுவதும், தானே தனது வாரிசுகளை வேறு தொழிலில் ஈடுபடுத்துவதும் நிகழ்ந்துள்ளது. நிரந்தர வருவாய் தரும் தொழிலாகக் கூத்து இருப்பதில்லை என்பதே இதற்குக் காரணம். என்றாலும் வருடத்திற்கு சராசரி 100 நாட்கள் கூத்தாடுவது அனைவரிடத்தும் வழக்கமாக இருந்துள்ளது.

தெருக்கூத்தில் இசை குறித்த விரிவான தகவல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இசைக் கருவிகள். ஆடை அலங்காரம் குறித்து மிகுந்த கலைச்சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன. வண்ணங்கள் பயன்பாடு குறித்தும் தொழில் நுட்பங்கள் குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

சாதி சார்ந்த கூத்துகள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் அவ்வாறு தனித்தனி சாதியினருக்கென்று கூத்துகள் இல்லை என்றும் பின்னாளில் வன்னிய புராணத்தை வன்னியர்கள், செல்லியம்மன் கதையை ஆதிதிராவிடர்கள் என்று சாதி சார்ந்த கூத்துகள் நடத்தப்படுகின்றன என்றும் குறிப் பிட்டுள்ளனர். மதம் சார்ந்த கூத்துகளில் கிறித்தவ மதம் சார்ந்தும் கூத்துகள் நடத்தப்படுவது பதிவு செய்யப் பட்டுள்ளது. இஸ்லாமிய மதம் சார்ந்த கலைஞர் தன்னுடைய மதத்தைத் தாண்டிக் கூத்தில் நடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சாதி, மதம் கடந்தும் அதை ஒட்டியும் கூத்துக்கள் நடத்தப்படுகின்றன. கூத்துகளில் சாதி என்பதைப்போலக் கூத்தர்களிடத்தும் சாதிவேறுபாடு இருந்துள்ளது. கூத்து நிகழ்த்தச் செல்லும் இடங்களிலும் இப்பாகுபாடு இருந்துள்ளது.

தெருக்கூத்தின் இன்றைய மாற்றங்கள் குறித்துப் பேசும்போது இன்று இடைத்தரகுகள் பெருகி விட்டதாகக் குறிப்பிடுகின்றனர். முன்பு நேரில் வந்து தாம்பூலம் கொடுத்துக் கூத்திற்கு அழைப்பார்கள் என்றும் இன்று ஏஜன்டுகள் மூலம் நாங்கள் தேடிச்செல்கிறோம் என்றும் குறிப்பிடுகின்றனர். இதற்குக் குழுக்கள் பெருகி விட்டது ஒரு காரணம் என்கின்றனர்.

கூத்துக் கலைஞர்களிடம் குடிப்பழக்கமும் பெண் சகவாசமும் இருக்கும் என்கிறார்களே என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதில் கூத்து என்கிற சொல்லை எடுத்துவிட்டு வேறு எந்தச் சொல்லைப் போட்டாலும் இக்கேள்வி பொருத்தமாகத்தான் இருக்கும். குடிப் பழக்கம், பெண் சகவாசம் குறித்த இந்தக் கேள்வியின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. கலைஞர் களுக்கும் கலைக்கும் சமூகத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கும் வகையில் செய்திகள் அமைந்த இந்நூலில் இக் கேள்வி அவசியம் தானா என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது. இதற்குக் குடிப்பழக்கம் உடல் அலுப்பு காரணமாக ஏற்படுத்திக்கொண்டது என்றும் பெண் சகவாசம் தங்கள் நடிப்பில் மயங்கும் பெண்கள் மூலம் கிடைப்பது என்றும் பதிலளிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான கலைஞர்கள் தங்களுடைய கலையை/திறமையை அரசு அங்கீகரிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளனர். முறையாக விருதுகள் வழங்கப் படுவதில்லை என்றும் மக்களே எங்களைப் புரிந்து கொண்டு கௌரவிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதே போன்று ஊடகங்களும் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும், இளைஞர்களின் ஆதரவும் தேவை என்று குறிப்பிட்டுள்ளனர். இளைஞர்கள் திருவிழாக் களுக்கு ரெக்கார்ட் டான்ஸையே புக் செய்கிறார்கள். இன்று அவர்களின் தொகை கூடுதலாகிவிட்டதால் மீண்டும் தெருக்கூத்தை நாடி வருகின்றனர் என்று கிண்டலடித்தும் கூறியுள்ளனர். மரபு சார்ந்த பாரம் பரியக் கலை எத்தகைய மதிப்பீட்டைப் பெற்றுள்ளது என்பதை விளக்கும் வகையில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

நூல் முழுவதும் வாசித்துப் பெறப்பட்ட தகவல் களின்படி சாதி அடிப்படையில் தெருக்கூத்துக் கலை ஞர்கள், வாத்தியார்கள் சுட்டும் பிற கூத்தர் சாதிகள், பெண் கலைஞர்கள், பிரதி ஆசிரியர்கள், பிரதிகள், வாத்தியார்கள், சமகாலத்தில் நிகழ்த்தப்படும் கூத்துகள், சாதி சார்ந்த கூத்துகள், அணிகலன்கள், வண்ணங்கள், இசைக்கருவிகள் ஆகியவை இணைப்பாகக் கொடுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு நேர்காணலின் முடிவில் கூத்துத் தொடர்புடைய அலங்காரம், அணிகலன் முதலிய வரைபடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பெயர்கள் அல்லது அவை பற்றிய சிறு குறிப்பு கொடுத் திருந்தால் கூத்து குறித்து அறியாதவர்களுக்குப் பயனுடையதாக இருந்திருக்கும். கலை வரலாற்றைப் பெரும்பாலும் ஆய்வாளர்களே எழுதுவது வழக்கம். இங்குத் தங்கள் கலை வரலாற்றைக் கலைஞர்களே எழுதிக் கொள்வதாக இந்நூல் அமைந்துள்ளது.

தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம்

தொகுப்பு: கோ.பழனி, சி.முத்துக்கந்தன்

வெளியீடு: போதிவனம்

இராயப்பேட்டை, சென்னை - 600 014

விலை: ` 250/-

Pin It