மனித சரித்திரத்தில் மிகவும் களங்கமான பகுதி இந்த ‘மனித அடிமை’ முறை தான். இதன் சரித்திரம் அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆரம்பமாகிறது. எகிப்தின் பிரமாண்டமான பிரமிடுகள் உருவானது இந்த அடிமைகளின் கை வண்ணத்தில்தான். அன்றைக்குச் சில ஆயிரங்களாக இருந்த அடிமைகளின் எண்ணிக்கை ஐரோப்பியர்கள் இந்த வியாபாரத்தில் இருந்தபோது ஜெட் வேகத்தில் அதிகரித்தது. 

14 ஆம் நூற்றாண்டில், கொலம்பஸ் போன்ற வர்கள் உலகில் புதிது புதிதாகப் பல நாடுகளை கண்டுபிடித்தார்கள். அங்குக் கண்டறியப்பட்ட தங்கச் சுரங்கங்கள், வெள்ளிச் சுரங்கங்களால் கவரப்பட்ட ஸ்பெயின், போர்ச்சுகள், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் முண்டியடித்துக் கொண்டு ஓடின. சுரங்க வேலை கடினமானது. இதற்கு மாடுகளைப் போல் உழைக்க மனிதர்கள் தேவைப்பட்டார்கள். அப்போது இவர்கள் பார்வை ஒட்டு மொத்தமாக திரும்பிய இடம் ஆப்பிரிக்கா.

ஒரு பாட்டில் விஸ்கிக்காகவும், ஒரு சட்டைத் துணிக்காகவும் தன் சொந்த இனமக்களை ஆப்பிரிக்கா வியாபாரிகள் அடிமைகளாக அனுப்பிவைத்தனர். 

19 ஆம் நூற்றாண்டில்தான், வில்லியம் வில்பர் போர்ஸ் என்பவர் அடிமைத்தனத்தை ஒழிக்க 40 வருடம் தீவிரமாகப் போராடினார். அதன் விளை வாக 1833 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஒரு சட்டம் இயற்றியது. அடிமைகளின் பிரச்சினையை பிரதான மாகக் கொண்டு ‘ரிபப்ளிக்கன்’ என்ற கட்சி அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. அடிமை களை ஒழித்துவிட்டால் நாட்டின் பொருளா தாரமே தரைமட்டமாகிவிடும் என்று ஐரோப்பிய நாடுகளைப் போலவே அமெரிக்காவும் பயந்தது. அடிமைத்தனத்தை ஒரேடியாக ஒழிப்பதற்குப் பதில் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்கலாம் என்று ஆபிரகாம் லிங்கன் முடிவு செய்தார். இறுதியில், காலம் கட்டாயப்படுத்தியதால் 1865-இல் அமெரிக் காவில் அடிமைகளுக்கு விடுதலை கிடைத்தது.1

ஆதி பொதுவுடைமைச் சமூகத்தில் போரில் பிடிபட்ட கைதிகளைப் போர்க்களத்தில் கொன்று வந்தனர். உற்பத்தி முறை வளர்ச்சியுற்ற போது போர்க்கைதிகளைக் கொல்வதற்குப் பதிலாக அவர்களை உற்பத்தியில் ஈடுபடச் செய்தார்கள். 

வேதகால இந்தியாவில் ‘தாஸர்’ என்ற சொல் அடிமையைக் குறித்தது. தமிழில் அடிமைகளை அமிஞ்சி, அடிமை, அடியான், மூப்படியான், படியான், பண்ணையாள், குடிப்பறையன், கொத் தடிமை என மக்கள் அழைத்தனர். 

மக்களிடையே பலர் முக்கியமாக, விவசாயத் தொழில் செய்த கூலியாட்கள் அடிமை வாழ்வே வாழ்ந்தனர். மனிதர்களையே சொத்துக்களாகப் பாவித்து அவர்களைத் தங்கள் விருப்பப்படி விற்கவும், வாங்கவும் செய்யும் முறை வழக்கில் இருந்தது. சோழர் காலத்தில் அடிமைகளிலும் பலவகையினர் இருந்தனர்.2

கிரேக்க, ரோமானிய அடிமைகள், ஐரோப்பிய பண்ணை அடிமைகள், அமெரிக்க நீக்ரோ அடி மைகள், இந்தியாவிலும் தமிழ்நாட்டிலிருந்தும் வெள்ளையர்களால் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் என அடிமைகளின் எண்ணிக்கை மிக நீண்டது.

தமிழ்நாட்டின் வரலாற்றில் ‘மனிதர்கள் அடிமைகளாக’ விற்பனை செய்யப்படுவதும், ‘மனிதனை நரபலி’ இடுவதும் தொன்றுதொட்டு நடைபெற்று வந்த நிகழ்ச்சிகள்தான் பெரும்பாலும். அதிலும் குறிப்பாக நரபலி இடப்பட்டவர்கள் பெரும்பாலும் தீண்டப்படாதவர்களாகவும், அடி மையாக விற்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பெண் களாகவும் இருந்தனர். பெண்கள் விபசாரத்திற் காகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இப்பெண்கள் தாசிகளாகவும், வேலைக்காரியாகவும் காலம் முழுவதும் அடிமை யாகவே இருந்து தம்மை விலைக்கு வாங்கியவரி டத்தில் ஆயுள் முழுதும் வேலை செய்து மடிந்தனர்.3

நாஞ்சில் நாட்டில் அடிமை முறை இருந்த தற்கான நேரடிச் சான்றுகள் முதலியார் ஆவணங் களில் உள்ளன.

இந்திய வரலாற்றில் சிந்து சமவெளி நாகரிக காலத்திலிருந்தே அடிமை முறை பற்றிய செய்திகள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. பரசுராமர் மழுவை எறிந்த இடத்தில் பிராமணர்கள் குடியேறினர் என்றும், அவர்களுக்கு அடிமைத்தொழில் செய்ய சூத்திரர்கள் வந்தனர் என்றும் வழங்கும் கதையி லிருந்தே கேரளத்தில் அடிமை வரலாற்றைத் தொடங்குகின்றனர் (Adoor K.K. Ramachandran: 1986. P. 12) 

ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் புலையர், வேடர் போன்ற சாதியினரே அடிமைகளாக இருந் தனர். இவர்கள் விவசாய வேலைக்காக அடிமை யாக்கப்பட்டனர். 16 ஆம் நூற்றாண்டுக்குப் பிற் பட்ட காலத்தில் விவசாயத் தொழில் செய்ய அடிமைகளை வாங்குவது என்ற நிலை உருவானது (Adoor K.K. Ramachandran: 1986. P. 16).

தென் கேரளத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் செல்வாக்குப் பரவ ஆரம்பித்த போதும், திருவிதாங்கூர் அரசர்கள் பத்மநாப தாசர்களாக இருந்தபோதும், பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனியின் தாசர்களாக இருந்தபோதும் அடிமைமுறை இருக்கத்தான் செய்தது. சட்டரீதியான அங்கீகாரம் பெற்றிருந்த அடிமை முறையினைப் பாதுகாக்கும் பணியினைக் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் செய்து வந்தார்கள். அடிமை முறையை அகற்றுவது விவசாய உற்பத்தியைப் பாதிக்கும் என்று அவர்கள் கருதினார்கள். (ஆ. சிவசுப்பிரமணியம் 2005. ப. 72) 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கோட்டாற்றில் மாட்டுச்சந்தை கொண்டுவர வேண்டும் என்று சிலர் முயற்சி செய்துவந்த போது அதை செண்பகராமன் பிள்ளை என்பவர் எதிர்த் திருக்கிறார். வேறு சிலரும் மாட்டுச் சந்தை வேண்டாம் என்றனர். இந்த எதிர்ப்பிற்கு முக்கிய காரணம், மாடுகளை வேலை வாங்கிப் பராமரிக்கும் செலவைவிட அடிமையைப் பராமரிப்பது எளிது என்பது தான்! 

அடிமையை விற்பவர் அவரது ஊரில் உள்ள மன்றில், அடிமையை நிறுத்தி அவரின் பெயரைச் சொல்லி ‘இந்த அடிமையை விலைக்குக் கொள்ளு வோர் உளரோ. கொள்ளுவோர் உளரோ’ என்று கூவுவார். வாங்குகின்றவர் ‘கொள்ளுவோம் கொள்ளு வோம்’ என்று இசைந்து பேசி வாங்குவர். அப் போதே அடிமையின் விலை நிச்சயிக்கப்படும். (1827, 1832, 1798, ஆவணங்கள்). 

ஸ்ரீதனப் பிரமாணம், ஒற்றிப்பிரமாணம், பாட்டம் பிரமாணம், கடன் பிரமாணம் போன்று அடிமை விலைப் பிரமாணம் கருதப்பட்டது. இது அன்றைய அரசின் ஒப்புதலுடன் நடந்தது. அடிமைப் பிரமாணம் பதிவு செய்வதற்குரிய பணத்தை அரசு நிர்வாகம் பெற்றுக்கொண்டது. 

தென் திருவிதாங்கூரில் அடிமை முறை இருந்த போது, இந்தியாவில் வேறு மாநிலங்களிலும் அடிமை முறை இருந்தது. அடிமைமுறைக்கு எதிராகக் குரல் ஒலிக்கத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அடிமைத் தடைச் சட்டம் வந்தது. 1845ஆம் ஆண்டு சட்டப்படி கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களில் அடிமை முறை ஒழிந்தது. ஆனால் திருவிதாங்கூரில் அது தொடர்ந்தது. 

தென் திருவிதாங்கூரில் அடிமை முறைக்கு எதிராக மீட், மால்ட், ஆக்ஸ் போன்ற சமயப் பணியாளர்கள் தொடர்ந்து போராடினார்கள். இவர்களின் முயற்சிக்கு 1853இல் வெற்றி கிடைத்தது. திருவிதாங்கூர் அரசரான உத்திரம் திருநாள், சென்னை அரசின் அறிவுரைப்படி 18.06.1853இல் ஓர் அறிக்கையை வெளியிட்டார். இதன்படி எல்லா அடிமைகளும் விடுதலை செய்யப்பட்டனர். அடிமை வரி நிறுத்தப்பட்டது. அரசாங்க அலுவலர்கள் அடிமையை வாங்கவோ, விற்கவோ கூடாது. அடிமை தொடர்பான எந்தவித கைமாற்றங்கள் கொடுக்கல் வாங்கல் பதிவுகள் செய்யக்கூடாது, என்ற நிலை உருவானது.

தென் திருவிதாங்கூரில் அடிமை விடுதலைக்குப் பிறகு பலர் கிறித்துவ சமயத்திற்கு மாறினார்கள்.4 

தமிழகத்தில் அடிமைகள் மீது கொடூர தாக்கு தல்கள் நடந்துள்ளது. அடிமைகளை, பண்ணை யாளர்கள் வீடுகளின் முகப்பில் எப்பொழுதும் தொங்கிக் கொண்டிருக்கும் திரிக்கைவால் சவுக்கை எடுத்து மயக்கம் வரும் அளவிற்கு அடிப்பார்கள். மயங்கிக் கீழே விழுந்த பிறகும் அவர்கள் விடுவதில்லை. மாட்டுச் சாணத்தைக் கரைத்து மாட்டுக்கு மருந்து புகட்டும் மூங்கில் கொட்டத்தில் நிரப்பிச் சாணிப் பாலைப் பருகிடச் செய்வார்கள். சவுக்கடியால் உடம்பில் கசிந்து வழியும் செங்குருதியும் அதனால் ஏற்படும் வேதனைகள் சாணிப்பாலைப் பருகுவது தவிர வேறு வழியில்லாமல் செய்துவிடும். அப்படியே அவன் மறுத்தாலும் மீண்டும் சவுக்கடி விழும். இது மட்டுமா?

கொக்குப் பிடிக்கும் தண்டனையும் அந்த மனிதாபிமானிகள் மண்ணின் மைந்தர்களுக்குக் கொடுக்கத் தவறுவதில்லை. கொக்கு பிடிப்பது என்றால், ஒரு காலைத் தூக்கிக்கொண்டு சுடு மணலில் நெடுநேரம் நிற்க வேண்டும்.

கால்களுக்குக் கிட்டிப்போடும் தண்டனையும் அளித்தார்கள். ரத்த நாளங்கள் விண்விண் என்று தெறிக்க வலிபொறுக்க மாட்டாமல் மரம் வெட்டிச் சாய்ந்தது போல் கீழே விழும் காட்சியைக் கண்டு அந்த நிலப்பிரபுக்கள் வாய்விட்டுச் சிரிப்பார்கள் இன்னும் எத்தனை கொடுமைகள்? ஒரு மரக் கிளையில் அந்த உழைக்கும் மகனைத் தொங்கச் செய்து தரையில் கத்தாழை முள்ளையும், எழுத் தாணியையும் கீழே பரப்பிவைப்பார்கள். தொங்கு கின்ற அந்த மனிதன் வலி பொறுக்கமாட்டாமல் கையைவிட்டால் கீழே பரப்பியுள்ள முள்ளாலும் எழுத்தாணியாலும் குத்தப்படுவான். இவை மட்டும் தானா?

உழைக்கும் வர்க்கத்தை உருவாக்கிவிடும் பெண்ணினத்தைப் பண்ணையடிமைகளான தாழ்த்தப்பட்ட குலத்தின் தாயை எவ்வளவு மோச மாக நடத்தினார்கள்? எத்தகைய கொடுமையான தண்டனை அளித்தாhர்கள் என்பதைச் சொல் வதற்கே வெட்கமாக இருக்கிறது. அந்தத் தாயின் மார்பகத்தைக் கிட்டியால் முறுக்கி கசக்கிப் பிழிந்து ரத்தச் சேறாக்கி வேதனையில் அலறித் துடிக்கச் செய்யும் அலங்கோலத்தைக் கண்டு ரசித் தார்கள். (தமிழகத்தில் அடிமை முறை பேராசிரியர். அ. சிவசுப்பிரமணியன்)5.

வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்கள் விளை நிலங்களில் பணி செய்யும் கொத்தடிமைகளாகவும், பண்ணை அடிமைகளாகவும் ஆக்கப்பட்டனர். இவர்களுக்கு நிலங்களை ஒட்டியே குடியிருப்புகள் வழங்கப்பட்டன. நிலம் வைத்துக்கொள்ளவோ, பொருளீட்டவோ இவர்களுக்கு உரிமைகள் மறுக்கப் பட்டன. இவர்கள் குடிசைகளைத் தவிர வேறு வகையான வீடுகள் கட்டிக்கொள்வதற்கும் தடைகள் விதிக்கப்பட்டன. மேலுக்கு ஆடை அணியவும், காலுக்குச் செருப்பு அணியவும் இம்மக்களுக்கு உரிமை இல்லை.6

சோழர் ஆட்சி ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுக் காலம் நடைபெற்றது (கி.பி.850-1250). சோழர் காலத்தில் மக்களில் பலர் அடிமை வாழ்வு வாழ்ந்து வந்துள்ளனர். மனிதர்களையே சொத்துக்களாகப் பாவித்த அரசர்கள் தங்கள் விருப்பப்படியே அடிமை களை விற்கவும், வாங்கவும் செய்யும் முறை நிலவி யதற்குத் தக்க கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. எந்த நிலம் விற்பனை செய்யப்படுகிறதோ அந்த நிலத்தில் வேலை செய்யும் பண்ணை அடிமை களும் சேர்த்தே விற்கப்பட்டனர்.7 

சங்க காலத்தில் இழிவாகக் கருதப்பட்ட கலைஞன், சோழர் காலத்தில் பண்ணையடிமை களாகவும், கொத்தடிமைகளாகவும் மாற்றம் பெற்றுள்ளனர்.8

1891இல் செங்கல்பட்டு மாவட்டத்தில் அடிமைகள் நிலத்தோடு பிணைக்கப்படாமல் தனி நபரின் உரிமையாகக் கருதப்பட்டனர். இவர்களை விற்கவும் வாங்கவும் செய்துள்ளனர்.9

1861 பிப்ரவரி 19ஆம் நாள் அடிமை முறை ஒழிப்பு பிரகடனப்படுத்தப்பட்டது10 என்றாலும் அநேக இடங்களில் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது.

மிக அண்மையில் திருப்பூரில் 8 கொத்தடிமைத் தொழிலாளர்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 கொத்தடிமைத் தொழிலாளர்களும்,11 திருச்செங் கோடு வட்டம் காணங்காடு பகுதியிலிருந்து 7 கொத்தடிமைத் தொழிலாளர்களும்,12 திருப்பூர் மாவட்டம் கருவலூரை அடுத்த கானூர் கிராமத்தி லிருந்து 23 (உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த) தொழிலாளர்களும்,13 மீட்கப்பட்டதாக தினந் தோறும் செய்தி வருகிறது. இதைவிட கொடுமை என்னவென்றால் கிருஷ்ணகிரி ஒன்றியம் கே.ஆர்.பி அணையின் மேற்பகுதியில் பி.கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த (இருளர் இன) மக்களே தமது பிள்ளைகளை ஆடுமாடுகளை மேய்க்க திருவண்ணாமலை மாவட்டப் பண்ணையாளர் களுக்கு (ஒரு ஆண்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு) கொத்தடிமைகளாக விற்பனை செய் திருக்கும் கொடுமை நடந்தேறியுள்ளது.14

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் திருவள்ளூர், ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் மொத்தம் 10 ஆயிரம் பேர் கொத்தடிமைகளாகப் பணியாற்றுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. ரூ.50 ஆயிரம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் பின்னர் சம்பளமே இல்லாமல் வாங்கிய தொகையைக் கழித்துக் கொள்ளவே பணியாற்றினர். இவ்வாறு இருந்தவர் களில் 83 பேர் தப்பியோடினர். ஆயிரத்துக்கும் அதிகமான இருளர் இன மக்களையே ரைஸ் மில் நிர்வாகத்தினர் ஏமாற்றிக் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தி வந்தனர். ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் 110 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.15 

மிக அண்மையில் கொத்தடிமை முறை குறித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு 162 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. இதில் உலகம் முழுவதும் சுமார் 3 கோடி பேர் கொத்தடிமைகளாக வாழ்வது தெரியவந்துள்ளது. இதில் 72 சதவீதம் பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். 3. 78 சதவீதம் பேர் அமெரிக்கர்கள். 

ஆசியாவில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும், ஆப்பிரிக்காவில் மரிட்டானியா, நைஜீரியா ஆகிய நாடுகளிலும் கொத்தடிமைக் கொடுமை அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடு களில் அடிமைத்தனம் மிக மிகக் குறைவாக உள்ளது என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.16 கொத் தடிமை முறை என்றுதான் மாறும்?

அடிக்குறிப்புகள் 

1.         தினத்தந்தி 12.12.2012. பக்கம். 2.

2.         தமிழியல் பெண்ணியம்- ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம்

3.         பொற்காலங்களும், இருண்ட காலங்களும்- பொ.வேல்சாமி

4.         முதலியார் ஆவணங்கள்- அ.கா.பெருமாள்.

5.         பொற்காலங்களும், இருண்ட காலங்களும்- பொ.வேல்சாமி

6.         சமூக நீதி.பேராசிரியர்கள். முனைவர். க. நெடுஞ்செழியன், முனைவர் இரா. சக்குபாய்.

7.         பறை.தமிழர் கலை வரலாற்றின் முகம். டாக்டர். மு. வளர்மதி.

8.         சாதி-வறுமை- அரசு: ஆ.ஏகாம்பரம்.

9.         தீண்டாமையைத் தீயிடு. டாக்டர் பேரா சிரியர். ப. சீனிவாசன்.

10.       தலித் பெண்ணிய அழகியல்-அரங்க மல்லிகா.

11.       தினகரன் 21.09.2013. பக்கம். 12.

12.       தி இந்து 22.09.2013. பக்கம். 5; தினத்தந்தி 22.09.2013. பக்கம். 10.

13.       தி இந்து 21.09.2013. பக்கம். 7.

14.       காலைக்கதிர் 19.09.2013. பக்கம். 2 (கிருட்டிணகிரி மாவட்டச் செய்தி பக்கத்திலிருந்து)

15.       தினகரன் 21.09.2013. பக்கம் 12.

16.       தி இந்து 18.10.2013. (ஐ.ஏ.என்.எஸ்.) பக்கம் 14.

Pin It