தமிழகத்தின் கல்விப் புலத்திற்கு அதிகமாய் அறிமுகமான இஸ்லாமிய இலக்கியம் சீறாப்புராணம் மட்டுமே.சீறாவிற்கு முன்னரே காப்பியவகைப்பட்ட இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் உருவாகிவிட்டன. இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களைத் தனது அயராத ஆழ்ந்த இலக்கியப் பணியின் ஊடாகத் தமிழ்மக்களுக்கு வெளிப்படுத்திக் காட்டியவர்களில் முதன்மையானவர் இலங்கை முஸ்லிம் தமிழறிஞரான மறைந்த முனைவர். முகம்மது உவைஸ் என்பதை இங்கே ஞாபகப்படுத்த வேண்டும். 

தமிழுக்குக் கிடைத்த முதன்மையான தமிழ்முஸ்லிம் இலக்கிய நூலின் பெயர் பல்சந்தமாலை. இதன் காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டு. இந்நூல் வச்சிரநாட்டு வகுதா புரியில் (காயற்பட்டணம்) அரசு புரிந்த அஞ்சுவண்ணத் தவர் மரபினனாகிய ஒரு முகமதிய மன்னனைக் குறித்துப் பாடப் பெற்றது என்பதான குறிப்பை நாம் கவனிக்கலாம். 

தமிழில் தோன்றிய முதன்மைக் காவியநூலான கனகாபிஷேகமாலைக் காவியம் கி.பி.1648-இல் கனக விராயரால் (செய்கு நெயினார்கான்) படைத்தளிக்கப் பட்டது. கர்பலா களம் கண்ட இமாம் ஹசைனின் வரலாற்றை மையமாகக் கொண்ட இக்காப்பியம் 35 படலங்களையும், 2792 பாடல்களையும் கொண்டுள்ளது.

இந்தவரிசையில் கி.பி.1703-இல் எழுதப்பட்ட இலக்கியம்தான் உமறுப் புலவர் படைத்தளித்த சீறாப்புராணம் என்னும் காப்பியம். நூற்றுக்கணக்கான ஞான இலக்கியங்களைப் போல அல்லாமல் மிகக் குறைந்த அளவிலேயே காவியங்கள், சிற்றிலக்கியங்களை இஸ்லாமியப் புலவர்கள் எழுதி உள்ளனர்.

சீறாப் புராணம் மூன்று காண்டங்களையும்,92 படலங்களையும் 5027 பாடல்களையும் கொண்டுள்ளது. இக்காப்பியத்தின் முக்கியத்துவமே அரபுலகில் தோன்றிய நபிகள் நாயகத்தின் வரலாற்றைத் தமிழ்ச் சூழலில் தமிழ் மக்களுக்குப் புரிந்துகொள்ளும்படி படைத்தளிக்கப்பட்ட பாங்கே ஆகும். 

நபிகளாரின் வரலாறு எழுதப்பட்டுள்ளதா? 

உமறு சீறாவில் நபிகளாரின் முழுமை வாழ்வைச் சித்திரிக்கவில்லை என்பதுதான் உண்மை. நபிகளாரின் நபித்துவத்துக்கு முன்பும் பின்புமான வாழ்க்கை திருமறைக் குரானிலும் சொல்லப்படவில்லை என்பது மற்றுமொரு உண்மை.நபி ஆதம்,நபி இபுராகீம்,நபி யூனூஸ்,நபி மூஸா,நபி ஈஸா எனப் பல நபிமார்களின் வாழ்வுச் சம்பவங்கள் குரானில் இடம் பெற்றுள்ளது. ஆனால் நபிகளாரின் வாழ்வுச் சம்பவங்கள் குரானில் இந்த அளவுக்கு இடம்பெற்றதாகத் தெரியவில்லை. நபிகள் நாயகத்தின் பெயரான முகம்மது என்பதும் ஓரிரு இடங்களில் புகழப்பட்டவர் என்ற அர்த்தத்தில் மட்டுமே இடம்பெற்றிருப்பது தெரிகிறது. 

ஸஹீஹ் ஸித்தா எனப்படும் புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபுதாவூது, நஸயீ, இப்னுமாஜா ஹதீஸ்கிரந்தங் களிலும்கூட நபித்துவத்திற்கு முன்பும் பின்புமான நபிகளாரின் வாழ்வு, கால அடிப்படையில் இல்லை. நபிகள் நாயகத்தின் பிறப்பு பற்றிய விவரங்கள் எந்த ஆண்டு, எந்த மாதம், எந்த தேதி என்பது குறித்தும் தகவல் குறிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஹதீஸ்களின் அறிவிப்பாளர்களின் வழியாக நபித்து வத்திற்குப் பிறகான நபிகளாரின் சொல்லும் செயலுமான வாழ்வுச் சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதுவும் பற்பல சந்தர்ப்பங்களில் நடைபெற்ற சம்பவங்களாக நபி களாரின் மறைவுக்குப் பிறகு இருநூறு ஆண்டுகள் கழித்து வாய்மொழிவரலாறுகளிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன. இதில் மவ்ழூவு - கற்பனை என்பதாகக் கருதப்பட்ட பல நூற்றுக்கணக்கான ஹதீஸ்கள் அன்றைய ஹதீஸ் தொகுப்பாளர்களின் கண்ணோட்ட முறையியல் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

இச்சூழலில் அரபுசமூக வரலாற்று எழுத்தியலில் நபிகளாரின் வாழ்வு பற்றிய பல முக்கிய நூல்கள் எழுதப் பட்டுள்ளன. இவற்றின் வழியேதான் தமிழ்ச் சூழலில் நபிகளாரின் வாழ்வையும் வரலாற்றையும் நம்மால் அறிய முடிந்தது. 

நபிகளாரின் வாழ்வு குறித்து உர்வா இப்ன் அல் சுபைர்(713), வகாப் இப்ன் முனப்பி(737)இப்ன் ஷிஹாப் அல் ஸ§க்ரி(737) மூஸா இப்ன் உக்பா உள்ளிட்ட அரபு நூல்கள் மிகவும் பழமைவாய்ந்த வரலாறுகளாகும். 

இன்றும் அரபு சமூக வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற முதன்மையாகக் கருதப்படும் நபிகளாரின் வாழ்வு பற்றிய வரலாற்றை எழுதியவர் முகமது இபின் இஸ்ஹாக் (Biography of the Prophet) என்றே அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இஸ்ஹாக் கி.பி.767-இல் மறைகிறார். முகமது இபின் இஸ்ஹாக்கை தொடர்ந்து எழுதப்பட்ட நபிகளாரின் வாழ்வியல் வரலாறு இப்னு ஹிஸாம், அல்தப்ரி ஆகிய அறிஞர்களாலும் எழுதப்பட்டது. இவை அனைத்தும் அரபுமொழியில் எழுதப்பட்ட நபிகளின் வரலாறுகள். மார்டின்லிங்ஸ் ஆங்கில மொழியில் எழுதிய Muhummed and His Life based on the earliest sources மிகச் சிறந்த நூலாகவும் கருதப் படுகிறது. 

வரலாறும் காவியமும் 

வரலாற்றிற்கும் காவியத்திற்கும் வேறுபாடு தெரியாத வகாபிய விமர்சகர் சிலர் சீறாவின் மீது தாக்குதல் தொடுக்கின்றனர். குரான் ஹதீஸ் மட்டும் போதும் என்று கூறும்போது ஏழாம் நூற்றாண்டில் அரபுச் சூழலில் தோன்றிய நபிகள் நாயகத்தின் ஆதாரபூர்வமான வாழ்வின் வரலாற்றுக்கு எங்கும் செல்லமுடியாது. தனிநபர் வரலாற்றிற்கும் காவியத்திற்கும் வேறுபாடு உண்டு. தனிநபர் வரலாறு காலகட்டவாரியாக வரிசைக் கிரமத்தில்(chronological order) ஒருவர் வாழ்வின் பிறப்பு முதல் இறப்புவரை சமூகப் பின்னணியோடு அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்வதாகும். 

வரலாற்றுக் காவியம் என்பது தேர்வு செய்யப்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகளிலிருந்து ஒரு படைப்பிலக்கியத்தை உருவாக்குவதாகும். இதில் எந்த மையப் பொருளை வாசகனிடம் சொல்ல விரும்புகிறோமோ அதை வெளிப் படுத்துவது என்பதாகும். தமிழ் இலக்கியப் பரப்பில் நபிகளாரின் வாழ்வியல் வெற்றிடமாக இருந்த பதினேழாம் நூற்றாண்டில் உமறுப்புலவர் தனது வாசிப்பு, அனுபவம், அடிப்படையில் சீறாக்காவியத்தைப் படைக்கிறார். இது தான் வரலாற்றையும் காவியத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் முறை. 

உமறுப்புலவர் நபிகளாரின் முழுமை வாழ்வைச் சித்திரிக்கவில்லை. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்லலாம். சீறாவில் நபிகள் நாயகம் - கதிஜாநாயகி திருமணப் படலத்தை மட்டுமே படைத்துள்ளார். அரபு சமூக அரசியல் சூழல் நிர்ப்பந்தங்களால் நபிகளார் செய்து கொண்ட இதர பத்து திருமணங்கள் பற்றிய படலங்கள் எதுவும் சீறாவில் இல்லை... நபிகளாரின் மகள் பாத்திமா நாயகியின் திருமணப்படலம் இடம்பெற்றிருக்கிறது.

சீறாவில் மிக முக்கியமாக இடம்பெற்றுள்ள போர்ப் படலங்கள் பத்துப் போர்/உஹதுப் போர் மட்டும்தான். அகழ்போர், முரய்சியூ, தாத்துல்கரத் உள்ளிட்ட நபிகளார் பங்கேற்ற பதினேழு போர்கள்(கஸவாத்) படைத்தளபதிகளைக் கலந்துகொள்ளச் செய்த போர்கள் முப்பத்தெட்டு(ஸரிய்யா) பற்றிய குறிப்புகளும் இல்லை. 

எனவே உமறுப் புலவர் நபிகளாரின் வாழ்விலிருந்து எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்று எண்ணினாரோ அவரது வாசிப்பின் அடிப்படையில் எந்தெந்த நிகழ்வுகள் முக்கியமாகப்பட்டதோ அதைமட்டுமே அவர் சீறா காவியமாக மறுபடைப்பாக்கம் செய்கிறார்

கொலைப் பாவங்களை அழித்த கருணை 

சீறாவில் உமறுப் புலவர் நபிகள் நாயகத்தின் பிறப்பைக் கவித்துவ அழகோடு படிமப்படுத்துகிறார். தமிழின் அழகியல் கூறுகளான உவமைகளும், உருவகங் களும் இப்பாடல்வரிகளில் பின்னிப் பிணைந்திருக் கின்றன. இயற்கைச் சித்திரங்களின் வழியாக முஸ்லிம் கலாச்சாரத்தின் முத்திரையை விளங்க வைக்கும் முயற்சிக்கு உமறுவின் புலமை கை கொடுத்திருக்கிறது.

நபி அவதாரப் படலத்தின் பாடல் ஒன்றில் (92) உமறு இந்த இலக்கிய உத்தியைக் கையாளுகிறார்.நபி அவர்கள் எவ்வாறாக இருப்பதற்குப் பிறந்தார்கள்? 

சூரிய வெப்பத்தில் துயருற்ற மக்களுக்குப் படரும் மர நிழலாகக் குளிர்ந்தார்கள். கொலைப் பாவ நோய்க்கு அருமருந்தாய் அண்ணலார் ஆகினார்கள்/தீன்மார்க்கப் பயிர் செழிப்பதற்கு மழையாய்ப் பொழிந்தார்கள்/குறைஷி மக்களுக்கு ஒரு திலகம் போல் திகழ்ந்தார்கள். மாநில மக்களுக்கு ஒளியைப் பரப்பும் மணிவிளக்காகப் பிறந்தார்கள். 

இயற்கை சார்ந்த படிமமான சூரிய வெப்பம், துன்பத்தின் குறியீடாகவும், படரும் மரநிழல் அமைதி, இன்பத்தின் வடிவமாகவும் மாறுகிறது. விவசாயப் பின்புலப் படிமம் ஒன்றையும் தமிழகச் சமூகப் பின்னணியில் உமறு பயன்படுத்துகிறார். இங்குப் பயிர் என்பது தீன் மார்க்கப் பயிராகவும், அப்பயிர் செழித்து வளர்வதற்குப் பெய்யும் மழையாகவும் உருவகங்கள் உருவாகி உள்ளன. 

குறைஷி குலமக்களுக்குத் திலகமாகத் திகழ்ந்த நபிகளார் உலகமக்களின் இருள் நீக்கும் விளக்காகவும் மாறுகிறார். எது இருள்..? அறியாமையை/வறுமையை/அடிமைத்தனத்தைத் கொண்ட இருளை விலக்கி விடுதலையை, அறிவை, ஒளியாகப் பரப்பும் மணி விளக்காக ஒளிர்வதே இங்குப் புலப்படுகிறது. 

உமறு இயற்கைப் படிமங்களினோடு நபிகளாரின் அரபுச் சமூக வரலாற்றையும் மிகத் துல்லியமாக உள் அர்த்தமாய் உருமாற்றுகிறார். அந்த வரி ஈனம் நிறைந்த கொலைப்பாவ நோய்க்கு அருமருந்தாய் அண்ணலார் உதித்தார்கள் என்பதுதான். 

நபிகளாரின் பிறப்புக்கு முந்தைய ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட அரபுச் சமூக வரலாறு பெண் குழந்தைக் கொலைகளால் நலிவுற்று இருந்தது. பிறந்த பெண்குழந்தைகளை அலங்கரித்து தந்தையர் அதற்காக வெட்டப்பட்ட குழிகளுக்குள் புதைத்தனர். அந்த பதூயின் பழங்குடிச் சமூகத்தில் கடினமான பாலைவாழ்வுச் சூழலில் உணவு தேடுவதற்கும், குலங்களுக்கிடையே நடைபெற்ற போர்களுக்கும் பாதுகாப்பிற்கும் மகன்கள் தேவைப்பட்டார்கள். மகள்கள் சுமைகளாகவே கருதப் பட்டார்கள். 

ஏன் மகள்கள் கொல்லப்பட்டார்கள்..? இனக்குழுப் போர்களின் போது பெண்கள் எதிரிகளின் கரங்களில் சிக்கி இழிவு பட்டுவிடக் கூடாது, பொருத்தமற்ற அல்லது எவரும் அக்குடும்பத்தின் மருமகளாக ஆகிவிடக் கூடாது என்பதற்காகவும் பெண்குழந்தைகள் கொல்லப் பட்டார்கள். குழந்தைகளைக் கடவுளின் திருப்திக்காகவும் பலியிட்டனர்.இவை தவிர வாழ்வின் அடிப்படைத் தேவையான உணவின்மையும், வறுமையும் பெண் குழந்தைகளைக் கொலை செய்யத்தூண்டின. முறையற்ற உறவில் பிறந்த குழந்தைகள், அநாதையாகத் தாயை இழந்த குழந்தைகள், ஊனமாகவும், நோய்த்தாக்குதல் களுடனும் உள்ள குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

இத்தகையதான பெண்குழந்தைகள் கொலைசெய்து வாழ்ந்த மக்களிடையே நபிகள் நாயகம் பெண் குழந்தை களை நேசிக்கக் கற்றுக் கொடுத்தார். பெண்குழந்தை பிறப் பதை ஒரு நல்ல செய்தியாக அறிவித்துக் கொண்டாடினார். பெண் குழந்தைகளை வெறுக்காதீர்கள், நானும் பெண் குழந்தைகளுக்குத் தந்தைதான் என்று பிரகடனம் செய்தார். 

இந்த நீண்ட வரலாற்றுப் பின்னணியை உள்ளடக்கிய உமறுவின் பாடல் வரிதான் நபிகள் நாயகம் கொலைப் பாவ நோய்க்கு அருமருந்தாய்த் திகழ்ந்தார்கள் என்பதாகும். 

இனி உமறுவின் பாடல் வரிகள்..

பானுவின் கதிரால் இடருறுங் காலம்

 படர் தரு தருநிழல் எனலாய்

ஈனமுங் கொலையும் விளைத்திடும்

 பவ நோய் இடர் தவிர்த்திடும் அருமருந்தாய்த்

தீனெனும் பயிருக்கோர் செழுமழை

 எனலாய்க் குறைஷியர் திலதமே எனலாய்

மானிலந் தனக்கோர் மணிவிளக் கெனலாய்

 முகம்மது நபி பிறந்தனரே

(நபியவதாரப் படலம் 92) 

சீறாவின் அழகியலும் யூசுப் நபியின் மீதான மையலும் 

மனித இயல்பு காதல், மையல், காமம், உணர்ச்சிகள் சார்ந்தது. அன்பு, கருணை, வீரம், துக்கம், கோபம், மனித உணர்ச்சிகளைப் போன்று இலக்கியங்களிலும், புனிதப் பிரதிகளிலும் இது தவிர்க்க முடியாமல் இடம் பெற்று விடுகிறது. 

இருவித வாழ்வு நெறியைப் புறம்/அகம் என்றும் பிரித்துப் பார்க்கலாம். சங்க காலத்தில் வீரம்,போர் சார்ந்த வாழ்வியலைப் பேசுவது புறநானூறு என்றழைக்கப்படுகிறது. தலைவன் தலைவி காதல், ஊடல், காமம், களவு குறித்து அகநானூறு பேசுகிறது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, சங்க இலக் கியங்கள் இவை குறித்துப் பேசுகின்றன.

திருக்குறளிலும் கூட அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனக் காதலும் பாடுபொருளாக அமைந் துள்ளது. பக்தி இயக்க காலத்தில் பெண்ணின் மீதான காதல் இறைக்காதலாக உருமாற்றம் அடைகிறது. 

தமிழ் மரபில் ஐவகை நிலங்களைப்பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். இவைகள் திணைகள் என்று குறிக்கப் படுகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளோடு பொருந்தாக் காதலைப் பேசுகிற பெருந்திணை, ஒருதலைக் காமத்தைப்பற்றிப் பேசுகிற கைக்கிளை என ஏழுதிணைகளாக இவை அமையப் பெற்றுள்ளன. 

அரபுச் சூழலான பாலைத்திணையில் நிகழ்ந்த நபிகள் நாயகத்தின் வாழ்வை விவசாய மண்சார்ந்த மருதத்திணை தமிழர் வாழ்வில் இடப் பெயர்வு செய்த மிகப் பெரிய அற்புதத்தை உமறுப் புலவர் சீறாவில் செய்துள்ளார். காப்பிய மரபுக்கெனப் பயன்படுத்தப்பட்ட அனைத்து இலக்கிய உத்திகளையும் அழகியலோடு உமறு பேசுகிறார். இதில் கைக்கிளை என்கிற ஒரு தலைக் காமமும் உள்ளடங்கும். 

இஸ்லாமிய நெறியில் நின்று அதே சமயம் தமிழ் இலக்கிய காப்பிய மரபிலும் நின்று உமறு பேசிய மையல் சார்ந்த மொழி வகாபிய விமர்சகர்கள் கூறுவது போல இஸ்லாமிய மரபுக்கு எதிரானது அல்ல.

பாத்திமா திருமணப் படலத்தின் 220 பாடல்களில் 151வது பாடலில் பெதும்பையையும், 156-இல் பாங்கி யரையும், 159-இல் பேரிளம் பெண்ணையும்,160-இல் பூவையையும் குறித்துப் பேசும்போது, நுண்ணிடையீர், மைத்தடங் கண்ணுளானார், பூங்கொடி வருந்தி,கோங்கிள முலையின் செம்பொற் கொடியென, குலிகமார் செப்பின் வாய்ந்த கொங்க கடதும்ப வந்து, கரும்பெனும் மொழியாளாசை என்பதான சொல்லாடல்கள் இடம் பெறுகின்றன. மணவாளனான அலியவர்களின் மீது மையல் கொண்ட பெண்ணின் உணர்ச்சிகளாகவே இடம் பெறுகின்றன.

இந்த வரிகளில் சிறுதுளியும் ஆபாசமில்லை. தேவையற்ற இடத்தில், தேவையற்ற முறையில் பாலியலைப் பேசுவது தான் ஆபாசம். சீறாவில் இடம், சூழல்,நோக்கம் சார்ந்து மட்டுமே இச்சொற்கள் இடம் பெறுகின்றன.அதுவும் 1700களின் காலகாட்ட மொழிஅமைப்பில் 5075 பாடல்களில் பத்துக்கும் குறைவான இடங்களில் பயன் படுத்தப்பட்ட இச்சொற்களை வகாபிகள் ஆபாச குப்பை என்பது முறையான அணுகல் முறையல்ல. 

உமறுப் புலவரின் எழுத்தியல் முறை குரானிய அறநெறிக்கு எதிரானது அல்ல என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் அழகிய ஆணுடலின் மீது பெண் மையல் கொள்ளுதல் என்னும் ஒருதலைக் காமத்தை (கைக்கிளை) குரானில் இடம் பெறும் யூசுப்நபியின் சரித்திரம் சொல்லித் தருகிறது. இன்றைய பெண்ணிய சிந்தனையாளர்கள் பெண்ணுடல்/ ஆணுடல் குறித்து மாற்றுச் சிந்தனையை வைக்கிறார்கள் என்பது வேறு விசயம்.

எகிப்திய மன்னன் (அஜீஸ்) தன் மனைவியிடம் தான் விலை கொடுத்து வாங்கிய யூசுபுவை கண்ணிய மான முறையில் வைத்துக் கொள்ளக் கூறுகிறார்.ஒருநாள் அந்தப் பெண் யூசுபை அடையத் திட்டமிட்டு வாசல் கதவுகளை அடைத்துவிட்டுப் புணர்ச்சிக்கு அழைக் கிறாள். இது இழிசெயலென யூசுபு மறுக்கிறார். 

யூசுபு முன் ஓட அவள் பின்புறமாக சட்டையைப் பிடித்து இழுக்க அது கிழிந்துவிட்டது. வாசலில் அவளுடைய கணவர் வந்துவிடுகிறார். தன்னிடம் யூசுபு தவறாக நடக்க முயன்றார் என மனைவி கூறுகிறாள். இல்லை உங்களின் மனைவிதான் என்னைத் தவறான நடத்தைக்கு அழைத்தார் என யூசுபு கூறுகிறார். பின்பக்க சட்டை கிழிந்ததை வைத்து மன்னன் தன் மனைவியை ‘நீதான் குற்றம் செய்திருக்கிறாய்’ என்று கூறுகிறார். (குரான் அத்தியாயம் 12: 21-29) 

எகிப்திய மன்னனின் மனைவி, தன்னிடம் அடிமை யாக இருந்த இளைஞரிடம் தகாத முறையில் நடக்க முயன்றாள். யூசுப் மீதான உடலியல் தாபம் அவளை தவறிழைக்கச் செய்துவிட்டது எனப் பேசிய நகரவாழ் பெண்களின் வாயை மூட எகிப்திய மன்னனின் மனைவி தனது மண்டபத்திற்கு அழைக்கிறாள். சாய்விருக்கைகள் கொண்ட மண்டபத்தில் அப்பெண்களை அழைத்து பழங்களைக் கொடுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு கத்தியைக் கொடுக்கிறாள். அச்சமயம் யூசுபு நபியை மண்டபத்தில் நடக்கவிட்டபோது அப்பெண்கள் யூசுப் அழகில் மதி மயங்கிப் பழங்களுக்குப் பதிலாகத் தங்களது விரல்களை நறுக்கிவிட்டார்கள்.

 ஹாஷ லில்லாஹ் - அல்லாஹ் தூய்மையானவன். இவர் மனிதரே அல்ல, சிறப்புக்குரிய வானவர் என்பதாக அப்பெண்கள் அதிசயித்து நிற்கின்றனர். எகிப்திய மன்னரின் மனைவி கூறுகிறாள் பார்த்தீர்களா. எவர் விஷயத்தில் என்னை நீங்கள் பழித்தீர்களோ அவர் இவர்தான். சந்தேகமில்லாமல் நான்தான் இவரை என் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினேன். ஆனால் இவர் தப்பிவிட்டார்.(குரான் அத்தியாயம் 12: 30-34 வசனங்களின் சாராம்சம்)

யூசுப் நபியின் அழகில் மயங்கி, தாபம் கொண்ட எகிப்திய மனைவியின் பாலியல் உணர்ச்சிகளை, அந் நகரப் பெண்களின் ஒருதலைக் காமத்தை கதையாடல் வடிவத்தில் குரான் சொல்லிக் காட்டுவதை வகாபிய விமர்சகர்கள் தவறு என்று சொல்வார்களா? பிறகெந்த அளவுகோலால் பாலியல் அரசியலை நாம் மதிப்பிடுவது? இலக்கியப் பிரதிகளில், புனிதப் பிரதிகளில் இடம் பெறும் பாலியல் அரசியலை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து இன்னும் கூட நாம் விரிவாகப் பேசவேண்டும்.

Pin It