இந்திய - தமிழகக் குடிமைச் சமூகத்தில் இன்றைய காலத்தின் நிகழ்வுப் போக்குகளைக் கூர்ந்து பார்த்துக் கவனிப்பவர் சிலர்; அவர்களுக்குள்ளும் மனச்சங்கடங்கள் ஏற்படுத்தும் அன்றாட நிகழ்ச்சிகளை வாசித்துச் சிந்திப்பவர்கள் வெகு சிலர்; சமூகத்தில் பல தளங்களும் ஏன் இவ்வாறு சிதைந்து அழிகின்றன என்று கேள்வி எழுப்பு வோர் மிகச் சிலர்; கேள்விகளை எழுப்பினாலும் சரியான காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காணும் முனைப்புடன் எழுத்தில் பதிவு செய்து சிற்றிதழ்கள், வார மாத இதழ்கள், நாளிதழ்கள் முதலிய பத்திரிகை ஊடகங்களில் பதிவு செய்து பொதுக் கருத்தை உருவாக்கி, வலுப்படுத்தும் ஊடகங்களில் பதிவு செய்து பொதுக் கருத்தை உருவாக்கி, வலுப்படுத்தும் உந்துதலுடன் எழுதுவோர் விரல்விட்டு எண்ணி விடக் கூடியவர்களே. இவ்வாறு, தீவிர சமூக மாற்றக் குறிக்கோளுடன் சிந்தனை - செயல் பாட்டுக் களத்தில் நிற்பவர் அ.இருதயராஜ். 

தொடர்ந்து ஒரு சமூகச் செயல்பாட்டாளனுக் குரிய உத்வேகத்துடன் தனது எழுதுகோலை ஆயுத மாகப் பயன்படுத்திச் சீர்கேடுகளைக் களைய 10க்கு மேல் நூல்களைப் படைத்த அ.இருதயராஜ் அவர் களது ‘சங்கடம்’ நூல் பத்தோடு ஒன்று பதினொன்று; அத்தோடு இதுவும் ஒன்று அல்ல! வாசகர்களது மனச்சான்றுகளை உசுப்பி உலுக்குகிற நிஜ நிகழ்வு களது கட்டுரைப் பதிவு. 

சமூகப் பிரச்சினைகள், அரசியல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஊடக எதார்த்தம், பாலியல் வன்கொடுமைகள் ஆகிய ஐந்து தலைப்புகளில் எழுதியுள்ளார். 12 முத்தான கட்டுரைகளுமே இன்றைய வாழ்வின் இளையோர் முதல் பெரியோர் வரை ஆட்சியாளர்கள் முதல் அரசு நிர்வாகத் தலை வர்கள் வரை இருபாலாரும் அக்கறை காட்டிக் கவனம் கொள்ள வேண்டிய விஷயங்கள். சரியான தீர்வுகள், மாற்றுகள் எவை என்று தெளிவாக முன்வைக்கின்ற முடிவுகளது அலசல்கள். 

இந்திய - தமிழக ஒற்றுமைக்குலைவை உண்டாக்கும். உருவமற்ற - அருவமான - ஆபத்து ஏற்படுத்தும் பயங்கரக் கருவி ‘வதந்தி’ திட்டமிட்டு சதி செய்து உள்நாட்டு மக்களிடையே ஓர் நொடிக்குள் பதற்றத்தை அது உண்டாக்கிவிடும். அசாமில் ஏற்பட்ட கலவரத்தில் முசுலீம்கள் தாக்கப்பட்டனர்’ என வதந்தி பரவியது. மிகச் சில மணி நேரங்களுள் சொந்த ஊர் திரும்பாவிட்டால் தாக்குதல் துவங்கும் என்று வதந்தி பரவியது. 

“மத்திய அரசு 48 மணி நேரம் கழித்தே அறிக்கை வெளியிடுகிறது; வதந்தியைக் குறுஞ்செய்தி பரப்பு தலுக்குத் தடைவிதிக்கிறது. 70 மணிநேரம் கழித்தே. அலை பேசி நிறுவனங்களுக்கு அறிக்கை வெளி யிடுகிறது... ஒரு ஐந்துவரிக் குறுஞ்செய்தி 50,000 மக்கள் கூட்டத்தை அகதிகள் போல மாற்றி விட்டது” பொய், புனைவு பரப்பிப் பீதி உருவாக்கும் குற்ற மனநிலையினரைக் குடிமைச் சமூகம் கண்டறியப் புலனாய்வுத் துறைக்கான சவால் இது. இளையதான முள்மரத்தை முளையிலேயே கிள்ளி எறியா விட்டால் கைகளைக் கிழித்துவிடும் என்று எதிர் கால எச்சரிக்கையாகிற கட்டுரை ‘வதந்தி’. 

‘சாதி நம்பிக்கை உள்ளவர்கள் முட்டாள்கள்’ என்றார் பெரியார்; ஆனால், உச்சநீதிமன்றத்தின் நீதி அரசர் மார்கண்டேயகட்சு, இந்திய அச்சுக் குழுமத் தலைவர்; அவர் இந்திய மக்களில் 90 சதவீதம் பேர் முட்டாள்கள் எனத் தெற்கு ஆசிய ஊடக ஆணையக் கருத்தில் குறிப்பிட்டார். லக்னோ இளைஞர் சிலர் உடனே, எதிர்ப்புக்குரல் எழுப்பினர்; அவர்கள் நீதி அரசரை நிர்ப்பந்தித்து மன்னிப்பு - வழக்கு’ எனக் கோரிக்கைகளை எழுப்பினர். 

‘இந்தியர்கள் அறிவைச் சரிவரப் பயன்படுத்து வதில்லை. தேர்தலில் சாதி - மதமே வாக்களிக்க இவர்கள் அளவுகோல்! இதனால் கொலைக் குற்ற வாளிகளும் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பின ராகும் நிலையும் இவர்களைக் காப்பாற்றும் முனைப் பான முயற்சிகளும் அன்றாட ஆபத்துக்கள்! என்கிற கருத்தில்தான் கூறிக் கொண்டு அறிவைப் பயன் படுத்தாதவர்கள் இந்தியர்கள் என்கிற கருத்தில்தான் கூறினேன் என்றார் மேமிகு கட்சு. “விஞ்ஞான உணர்வும், மூடநம்பிக்கை ஒழிப்புமனமுமே தேவை என்பதே என் கருத்து. எவரையும் புண்படுத்து வதோ, இழிவு செய்வதோ எனது நோக்கமல்ல” என்றார் நீதியரசர் கட்சு. அறியாமை நோயில் மயங்கித் திரியும் மக்களுக்குக் கட்சு தந்த கசப்பு மருந்து குணமாக்கும் நோக்குடையது என்கிறார் நூலாசிரியர். உண்மை கசக்கிறது என்பவர்கள் மனப்பாதிப்புத் தீர்ந்த வழியைக் காட்டுகிறார். 

இலவசங்களால் ‘திருவாளர் வெகுசனம்’ என்னும் பொதுமக்கள் எவற்றை இழக்கிறார்கள்? என்பதை இடதுசாரிச் சிந்தனைத் தலைவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். அரசியல் வாதிகள் ஆதாயக் கொண்டாட்டம், வெகுசன மக்கள் திண்டாட்டமாகக் காலப் போக்கின் நிலை எங்கெல்லாம் மாறும் என எச்சரிக்கிறது ‘ஏமாற்றும் இலவசம்’ மதக் காரணங்களைப் பகுத்தாய்ந்து வாசகரைச் சிந்திக்க வைக்கிறது. மறுக்க முடியாத வாதங்களை முன்மொழிகிறது. 

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு சின்ன மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்கப் போகிற எதார்த்தம். ‘வசதி உள்ளவர் மட்டும் வாழலாம்; மற்றவர் சாகலாம்” என்ற நிலை நோக்கித் தள்ளி விடும் என்று தக்க காரணங்களை முன்னிறுத்திப் புரிய வைக்கிறது ‘விஷம் கலந்த தேன்’ என்னும் தலைப்பிலான விவரக் கட்டுரை பாதிக்கப்படுகிற சிறுவணிகர் சார்பில் நின்று அறிவு பூர்வமாக உரத்து முழங்குகிறது. 

2006 முதல் கிழக்கு அண்டார்டிக்கா கடல் பனிப்பாறை உருகி வருகிறது. கரிக்காற்று அடர்த்தி அதிகமாகி வருகிறது. புவி வெப்பம் அதிகரித்து வருகிறது. கடல் மட்டம் உயர்ந்து ஆழிப்பேரலை ஆபத்துகள் அதிகரிக்கின்றன. இயற்கைக்கு எதிரான பயங்கரவாதத்தை உடனே தடுத்து நிறுத்தாவிடில் அழிவின் தொடக்கம் அருகே என்பது அறிவியல் பூர்வமான எதார்த்தம். 

‘ஊடக எதார்த்தம்’ தலைப்பிலான கட்டுரைகள், காட்சி ஊடகங்கள், எழுத்து ஊடகமான பத்திரி கைகள் ஆகியன பாதிக்கப்படுகிற மனிதர்களது உரிமைக்குரலாக ஒலிப்பது குறைந்து, மழுங்கி, மங்கி மறைந்து போகுமோ என்கிற கவலையை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக சிறுபான்மை யினரைப் பெரும்பான்மையர் ஒடுக்குகிற சமூகமாகக் குடிமைச் சமூகம் மாறி வருவது சமூகச் சங்கடமாகி வருகிறது முதலாளித்துவ சக்திகள் அடிமைப்படுத்தும் கருத்துக்களை உற்பத்தி செய்கிற அதிகாரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன என்கிறார் கிராம்சி.

காந்தியைக் கோட்சே சுட்டுக் கொன்ற வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதியரசர் ஜி.டி.கோஸ்லாவின் விவரமான ‘மகாத்மா படுகொலை’ நூலாகப் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்துள்ளது. ஆனால் பாஜக பெண் பிரமுகர் துணிச்சலாக அதற்கு எங்கே ஆதாரம் இருக்கிறது?” என்று கேட்பதையும், திராவிடக் கழகப் பிரமுகர் இருக்கிறது என்று மட்டுமே மறுப்பதுமான மன விளையாட்டைத் ‘தந்தி தொலைக்காட்சியில் காண நேர்ந்ததே சான்று. சொல்வன்மையால் பொய்யை உரத்துச் சொல்ல ஊடக விவாதம் உதவுகிறது. 

இலக்கமயமாக்க இன்றைய தலைமுறை சமூக வலைத்தளங்களில் தங்களது மன வக்கிர வக்கரிப்புகளை வக்கணையாகப் பதிவு செய்து வடிகால் தேடும் போக்கை இந்நூலாசிரியர்: ‘பல வீனமானசுயத்தை நிறைவு செய்வதில் பெறுகிற போலியான சந்தோசத்தின் தேக்கநிலை” என்று ஐயுறுகிறார். வலைத்தளத் தணிக்கை இல்லா மையின் கருத்து பயங்கரவாதம் வளருகிறது.

இவ்வாறே இன்று தொடரும் பாலியல் வன்முறைகள், குழந்தை மணங்கள், இந்தியர்களில் குற்றப் பரம்பரையாகிவரும் இளைஞர்களது ‘பிளவு பட்ட ஆளுமைகள், அவ்ஆளுமையின் கீறல்கள், அக்கீறல்கள் காட்டும் பண்பாட்டு வீழ்ச்சிகள், எது - எவருக்கு நடந்தாலும் அன்றாட நிகழ்வுகளது அருவுருவாக்கங்கள் என்று சுரணையற்றுப் போகிறோமா நாம்? சங்கடம் கேட்கிறது. 

மாற்றுச் சமூகத்துக்கான ஒரு தேடல்

.இருதயராஜ்

வெளியீடு: முகில் பதிப்பகம்

அய்டியாஸ் மையம்,

26, வாழைத் தோப்பு,

சிந்தாமணி சாலை, மதுரை - 625001

விலை: ரூ.50.00

Pin It