சிங்கப்பூரில் தமிழ்மொழியின் இருப்பையும் சிறப்பையும் நிலை நாட்டுவதற்கு அங்குள்ள தமிழ் அமைப்புகளும் தமிழர்களும் பன்முக முயற்சிகளை மேற்கொள்கின்றனர். சிங்கப்பூர் அரசும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்குத் தோள் கொடுத்து ஊக்கப்படுத்துகிறது. உடன் நிற்கிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதங்களில் சிங்கப்பூர் அரசின் ஆதரவுடன் அங்கு தமிழ்மொழி விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தமிழ்மொழி விழா நிகழ்வுகளில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தேன். ஏப்ரல் 18ஆம் தேதி சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்று 23ஆம் தேதி அதிகாலை ஈரோடு வந்து சேர்ந்தேன். 19ஆம் தேதி காலையில் சென்றடைந்த பின்னர் அன்று மாலையே முதல் முக்கிய நிகழ்வில் பங்கேற்றேன். அது அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க சிங்கப்பூர் கிளை சார்பில் நடைபெற்ற தமிழ்மொழி விழா. சிங்கப்பூரில் முக்கிய தமிழ் விழாக்கள் நடைபெறுகிற மிகவும் விசாலமான உமறுப்புலவர் அரங்கில் நடைபெற்றது.tamil mozhi vizhaஅண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சிங்கப்பூரில் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் நல்ல வேலைகளிலும், சிலர் சுயமாகத் தொழில் செய்து கொண்டும் உள்ளனர். 1998லேயே அவர்களுக்கான தனி அமைப்பைத் தொடங்கி தொடர்ந்து முறையாக இயங்கி வருகின்றனர். சிங்கப்பூரின் தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்க் குடும்ப மாணவர்களின் தமிழ் மற்றும் தனித்திறன்கள் மேம்பாட்டுக்காகவும், ஒட்டுமொத்த சிங்கப்பூர் தமிழ் மக்களிடையே தமிழ் இலக்கியத்தையும், தமிழ்ச் சிந்தனையையும் வளர்க்கும் எண்ணத்தோடும் சிங்கப்பூர் அரசின் அமைப்பாகிய வளர்தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தால் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

வளர்தமிழ் இயக்கம் என்ற அமைப்பை சிங்கப்பூர் அரசு 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. தற்போதைய குடியரசுத் தலைவராக விளங்கும் இலங்கைத் தமிழர் தர்மன் சண்முகரத்னம், மேனாள் துணைப் பிரதமர் பேராசிரியர் ச. ஜயக்குமார், முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் பாலாஜி சதாசிவன், எஸ். ஈஸ்வரன், கா. சண்முகம் உள்ளிட்ட முக்கிய அரசியல் மற்றும் கல்வி சார்ந்த ஆளுமைகள் வளர்தமிழ் இயக்கத்தின் மதியுரைஞர்களாக இருந்துள்ளனர்.

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் அனைத்துத் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகளும் இந்நிகழ்வில் பங்கேற்று நிகழ்வைச் சிறப்பித்தனர். முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் பெ. மூர்த்தி நிகழ்வுக்குத் தலைமை வகித்தார். 90 வயது நிரம்பிய சிங்கப்பூரின் மூத்த தமிழறிஞரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மற்றும் பேராசிரியரும் இவ்வமைப்பின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் சுப. திண்ணப்பன் அவர்கள் எனக்கு முன்பாக சுமார் 15 நிமிடங்கள் தனது வயது மற்றும் உடல் நிலையையும் பொருட்படுத்தாது மேடையில் நின்றவாறு பேசினார்.

அவரையடுத்து 'ஈடுபாட்டுடன் பாடுவோம்' என்ற தலைப்பில் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினேன். 'ஈடுபாடு ' என்பது வளர்தமிழ் இயக்கம் இந்த ஆண்டின் தமிழ்மொழி விழாவிற்குத் தந்த பொதுத் தலைப்பு. அச்சொல்லை உள்ளடக்கி அமைப்புகள் அவரவருக்குப் பிடித்த தலைப்பை வைத்துக் கொள்ளலாம். அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தலைப்பு.

தமிழ் மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று மேடையில் சொற்பொழிவுக்கு முன்னதாக நடத்திய தமிழ் மற்றும் அறிவியல் சார்ந்த நிகழ்வு அர்த்த அடர்த்தியுடனும் கலைநயத்துடனும் காணப்பட்டது. கல்வி நிலையங்களிலும் பொதுவாகவும் நிலவும் ஆங்கிலச் சூழலுக்கும் மீறி தமிழ்க் குடும்ப மாணவர்கள் தமிழில் சிறப்புடன் விளங்குவதற்கு அங்கு செயல்பட்டு வரும் தமிழ் அமைப்புகளின் இத்தகைய சிறப்பு முயற்சிகளே பிரதானக் காரணமாக விளங்குகின்றன.

ஏற்பாடும், நடந்த விதமும், திரளான மக்கள் பங்கெடுப்பும் நிகழ்ச்சியை உயிர்ப்புடன் இருக்கச் செய்தன. தமிழ்மொழி விழாவின் சிறப்பு வருகையாளர்களாக சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர்கள் இரா. தினகரன், முகமது இர்சாத் ஆகியோரும், சிங்கப்பூர் அரசு வளர்தமிழ் இயக்கத் தலைவர் நசீர்கனி, தமிழ் வளர்ச்சிக்குழு இயக்குநர் சிவகுமார் விஸ்வநாதன், சிங்கப்பூர் கட்டடக் கட்டுமான வாரிய ஆணையர் தனபால் காளியண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். முன்வரிசையில் அமர்ந்திருந்த இவர்கள் அனைவரும் பரிசளிக்கும் நிகழ்வுக்காக மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

நிகழ்ச்சி முடிந்த இரண்டாம் நாள் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகளும் முக்கிய உறுப்பினர்களும் அடங்கிய கூட்டமொன்றை தனி அரங்கில் ஏற்பாடு செய்து அதற்கு எம்மை அழைத்திருந்தனர். அக்கூட்டத்தில் நடைபெற்று முடிந்த நிகழ்வு பற்றியும் அங்கு நிகழ்த்தப்பட்ட எமது உரை பற்றியும் ஏறத்தாழ அனைவருமே கருத்துத் தெரிவித்தனர். அக்கூட்டத்திலும் உரை நிகழ்த்தப் பணித்தனர். அங்கு எமது முக்கால் மணிநேர உரைக்குப் பிறகு பலர் கேள்விகள் கேட்டனர். 'ஸ்டாலின்' என்ற பெயர் வரக் காரணம் என்னவோ? என்பதிலிருந்து விதவிதமான கேள்விகள் கேட்கப்பட்டன. தங்களது மகிழ்வையும் நன்றியையும் தெரிவிக்கும் விதத்தில் விருந்துடன் முடிந்தது அந்நிகழ்வு.

ஏப்ரல் 20ஆம் தேதி 'சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம்' அமைப்பின் சார்பில் சிங்கப்பூர் தேசிய நூலக அரங்கில் மாலை 6 மணிக்கு 'பாரதிதாசன் விழா' நடைபெற்றது. இலக்கியக் களம் அமைப்பு 2004ஆம் ஆண்டு தமிழாசிரியர் முனைவர் இரத்தின வேங்கடேசன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டிலிருந்து 'பாரதிதாசன் விழா'வை இவ்வமைப்பு ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வருகிறது. 2013இல் இவ்வமைப்பால் நடத்தப்பட்ட முதல் பாரதிதாசன் விழாவில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். இலக்கியக் களம் அமைப்பின் தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன் நடத்திய அவ்விழாவினை கவிஞர் இறை. மதியழகன் உடனிருந்து ஒருங்கிணைத்திருந்தார். சிங்கப்பூரில் பாரதி விழா, பாரதிதாசன் விழா, திருக்குறள் விழா, பட்டுக்கோட்டையார் விழா, கம்பன் விழா, கண்ணதாசன் விழா என்று நடத்துவர். ஒரு விழாவை ஓர் அமைப்பு நடத்தினால் இன்னோர் அமைப்பு அதை நடத்துவதில்லை. அது அவர்களுக்குள் பின்பற்றப்பட்டுவரும் எழுதப்படாத ஒப்பந்தம். அந்த அடிப்படையில் பாரதிதாசன் விழாவை நடத்துகிற பொறுப்பை இலக்கியக் களம் ஏற்று நடத்தி வருகிறது.

நான் சிங்கப்பூரில் பங்கேற்ற முதல் நிகழ்வு 2013இல் 'சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம்' நடத்திய பாரதிதாசன் விழாதான். அப்பயணத்தின் போதே சிங்கப்பூரின் முக்கிய தமிழ் ஆளுமை நா. ஆண்டியப்பன் அவர்களின் தலைமையில் இயங்கிய கீர்த்திமிக்க அமைப்பான சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் நான் பங்கேற்கும் விதமாக சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வொன்று மற்றொரு நாளில் தனித்துவத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கலந்துரையாடலில் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் அனைத்துத் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். அந்நிகழ்வில் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எமது ‘விடுதலை வேள்வியில் தமிழகம் ’நூல் பற்றியும் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ குறித்தும் ‘ ஈரோடு புத்தகத் திருவிழா’ மற்றும் அதிலுள்ள ‘உலகத்தமிழர் படைப்பரங்கம்’ பற்றியும் மிகவும் விரிவாகப் பேசினேன். உரை முடிந்ததும் கலந்து கொண்டவர்களில் பலர் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தேன். இந்த முதல் பயணத்தின் போதே நேதாஜி சிங்கப்பூரில் கால் பதித்த வரலாற்றுத் தடங்களையும் சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ அவர்களின் அரசியல் வரலாற்றையும் அறிந்து கொள்ளும் விதத்தில் எனது பயணத் திட்டத்தை வடிவமைத்திருந்தேன். சின்னச் சின்ன நிகழ்வுகளில் பங்கேற்பது, பல முக்கியத் தமிழ் ஆளுமைகளைச் சந்திப்பது, சிங்கப்பூரின் வரலாறு, பொருளாதார வளர்ச்சி, பன்முகத்தன்மை, அரசியல், ஆட்சிமுறை ஆகியவற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்தினேன். இதற்காக நான் சந்தித்த அனைவருமே முழு ஈடுபாட்டுடன் ஒத்துழைத்தனர்; உதவினர்.

சிங்கப்பூரைப் பற்றி சில நூல்களை ஏற்கெனவே வாசித்திருந்தாலும், ஏழு நாட்கள் நேரில் பார்த்தலும் படித்தலும் அந்நாட்டைப் பற்றியான ஒரு புரிதலை ஏற்படுத்தின. அப்பயணத்தின் போதே மலேசியவுக்குச் எழுத்தாளர் சை. பீர்முகமது அவர்களின் அழைப்பின் பேரில் மலேசியா சென்றிருந்தேன். அங்கு போய்ச் சேர்ந்தவுடன் அவரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு நான் எதிர்பாராதது. அடுத்த நாள் அத்தனை தமிழ் இதழ்களிலும் எமது வருகை குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த கருத்துகளைப் பற்றியும் விரிவான செய்திகள் வெளிவந்திருந்தன.

இரண்டாம் நாள் மாலை மலேசியாவிலுள்ள துன் சம்பந்தம் நிலைய அரங்கில் நடைபெற்ற சிறப்புமிகு இலக்கியக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினேன். பின்னர் சிங்கப்பூருக்குத் திரும்பி வந்து உடன் இந்தியாவுக்குத் திரும்பினேன். அதன் பிறகு நான்கரை மாதங்களில் சிங்கப்பூர் மக்கள் கவிஞர் மன்றத்தின் சார்பில் 2014 மே 1 ஆம் தேதி சிங்கப்பூரில் திறந்தவெளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட அலங்கார அரங்கில் நடைபெற்ற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விழாவில் பங்கேற்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் ' பாட்டெழுதி எமைக் கவர்ந்த பாட்டாளி ' என்ற தலைப்பில் மிக நீண்ட உரை நிகழ்த்தும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றது.

மே 4ஆம் தேதி 'சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்' நடத்திய 'கதைக்களம்' நிகழ்வில் பங்கேற்று ‘கதை கதையாம் காரணமாம்’ எனும் தலைப்பில் ஒரு தனி உரை நிகழ்த்தினேன். தமிழ்க் கதைகளின் தோற்றம் வளர்ச்சி, சிறுகதை, நாவல், தமிழ்ப் படைப்பாளிகளின் அணுகுமுறை உள்ளிட்ட பல தமிழ்க் கதையம்சங்களை விளக்கிப் பேசினேன். முழுமையான இலக்கிய உரை. அதன் பிறகு ஓராண்டாவதற்கு முன்பு 2015 ஏப்ரலில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா. ஆண்டியப்பன் அவர்களின் அழைப்பின் பேரில் சிங்கப்பூருக்குச் சென்று எழுத்தாளர் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிற முத்தாய்ப்பான முத்தமிழ் விழாவில் பங்கேற்று உரையாற்றினேன். சிங்கப்பூரில் நடைபெறுகிற மிக முக்கிய தமிழ் விழா அது. ஏப்ரல் 11இல் உமறுப்புலவர் அரங்கில் நடைபெற்றது.

அடுத்த நாள் ஏப்ரல் 12 ஆம் தேதி 'சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம்' சார்பில் ‘2015 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வொன்றை அரிதின் முயன்று ஏற்பாடு செய்திருந்தனர். ஈரோடு புத்தகத் திருவிழாவின் நோக்கம், சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆழமாக எடுத்துரைக்கக் கேட்டுக் கொண்டதோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் இதர செயல்பாடுகள் பற்றியும் விரித்துரைக்க வேண்டினர். அவ்வாறே செய்தேன். என்னுடைய உரைக்குப் பின்னர் பல ஆரோக்கியமான கேள்விகளைக் கேட்டு வந்திருந்தோர் தெளிவடைந்தனர்.

2013இல் ஒரு சொற்பொழிவாளனாக மட்டுமே முதல் முறையாக சிங்கப்பூருக்கு அழைக்கப்பட்டிருந்தேன். என்னுடைய உரைகள், ' விடுதலை வேள்வியில் தமிழகம் ' உள்ளிட்ட என்னுடைய பல நூல்கள் என்று அடுத்தடுத்துச் சென்ற சிங்கப்பூர் ஆர்வலர்கள் - புத்தகத் திருவிழா பற்றியும், அங்குள்ள உலகத் தமிழர் படைப்பரங்கம் குறித்தும் தன்னார்வத்துடன் தெரிந்து கொண்டனர். நான் எந்த இடத்திலும் யாரொருவரிடமும் பேரவை பற்றிச் சொல்லி இவ்வாறான கூட்டங்கள் ஏற்பாடு செய்யச் சொல்லவும் இல்லை. அது குறித்து நான் எனக்குள் கூட எண்ணிப் பார்க்கவுமில்லை. அவர்களே படிப்படியாக அறிந்து கொண்டும், சிலர் ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு நேரடியாக வந்து பார்த்து கிடைத்த அனுபவத்தின் விளைவாகவும், இணையதளம் மூலமாகக் கிடைத்த தகவல்களைக் கொண்டும், கேள்விப்பட்டும் தன்னெழுச்சியாக செய்யப்பட்ட ஏற்பாடுகளே இவையனைத்தும்.

2015இல் சிங்கப்பூர் முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ்.ஆர். நாதன் அவர்களை நேரடியாக அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடும் வாய்ப்பை நா.ஆண்டியப்பன் ஏற்படுத்திக் கொடுத்தார். அச்சந்திப்பு எனது பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கியது. அவரைச் சந்திக்கும் முன்பே 'உழைப்பின் உயர்வு' என்ற 678 பக்கங்களைக் கொண்ட அவரின் சுயசரிதை நூலை வாசித்திருந்தேன். அதனால் ஏற்பட்ட ஈர்ப்பே அவரைச் சந்திக்கத் தூண்டியது எனலாம்.

2016 செப்டம்பர் 17, 18, 24, 25 ஆகிய 4 நாட்கள் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் நாற்பதாம் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடந்தது. தொடக்கநாள் உரையாற்றுவதற்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன். அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்க வேண்டுமென்றும் நிறைவு நாளில் நடைபெறவுள்ள முத்தாய்ப்பான சிறப்பு நிகழ்விலும் விருந்திலும் கலந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டதால், அந்த முறை சுமார் 10 நாட்களுக்கும் மேல் சிங்கப்பூரில் இருக்கும் நிலை ஏற்பட்டது.

பல்கலைக்கழகங்கள், வரலாற்றுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், பசுமைப் பிரதேசங்கள், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்ட நிலையங்கள், கடல் பகுதியை நிரப்பி அவற்றின் மேல் பல மாடிக் கட்டடங்கள் எழுப்பப்பட்ட அதிசயங்கள், துறைமுகம், நாடாளுமன்றம் நடக்கும் முறை, லீ குவான் யூ வரலாற்றுச் சிறப்புக் கண்காட்சி, பதினாறு அடுக்குகளுக்கும் மேல் உள்ள மிக பிரம்மாண்டமான சிங்கப்பூர் தேசிய நூலகம் என்று சிங்கப்பூரின் அச்சாணியாகவுள்ள கேந்திரமான பகுதிகளைப் பார்க்கவும் அதிக நேரம் ஒதுக்கி அவற்றைப் பற்றி பிறரிடம் ஆழ்ந்து விவாதிக்கவும் வாய்ப்புகள் அமைந்தன.

2013இல் முதன்முறையாக அழைத்த ‘சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம்’ அமைப்பின் தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன் அவர்கள்தான் இந்த ஆண்டு 2026இல் அதே பாரதிதாசன் விழாவுக்கு என்னை அழைத்திருந்தார். சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் இரா. தினகரன் பரிசுகள் வழங்கி உரையாற்றினார். 'பாவேந்தரின் கனவு' என்ற தலைப்பில் சுமார் ஒன்றரை மணி நேரம் நீண்ட உரை நிகழ்த்தினேன். நிகழ்வே அதற்கேற்ற விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அன்று திங்கள்கிழமை. வேலை நாள். வழக்கமாக அத்தகைய நாட்களில் அங்கு யாரும் கூட்டம் நடத்துவதில்லை. ஆனால், துணிந்து ஏற்பாடு செய்திருந்தனர். ‘ சுழலும் சொல்லரங்கம்’ என்பதுதான் இவர்களின் வழக்கமான நிகழ்வு முறை. ஐந்து, ஆறு பேருக்கு அதில் பேச வாய்ப்பு. அதையும் தவிர்த்து ஒரு நீண்ட உரைக்கான நிகழ்வு என்பதுபோல் இந்தமுறை மாற்றி ஏற்பாடு செய்திருந்தனர். இத்தனைக்கும் மீறி கூட்டம் கண்ணியம் மிக்க கனவான்களால் நிரம்பியிருந்தது. குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். கலை நிகழ்ச்சி போன்று ஈர்ப்புமிக்க துணை நிகழ்வுகளும் அன்று இல்லை. நூலக அலுவல் நேரம் இரவு ஒன்பது மணி வரை மட்டுமே. நூலகம் பூட்டப்படும் நேரமும் கூட்டம் முடிந்த நேரமும் ஒன்று. இறுதிவரை கூட்டம் கட்டொழுங்கோடும் கவனக் குவியலோடும் காட்சியளித்தது.

இந்த முறை சிங்கப்பூர் சென்றடைந்தவுடன், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதி அறைக்குச் செல்வதற்கு முன்பே மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த சிங்கப்பூரின் சிறப்புமிக்க மூத்த தமிழ் ஆளுமைகளில் ஒருவரும் எனக்கு மிக அணுக்கமான நண்பருமான புதுமைத் தேனீ மா. அன்பழகன் அவர்களைப் பார்க்க மருத்துவமனைக்கு விரைந்தோம். அன்பின் உருவமான அவர் நினைவிழந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலை எமக்கு கலக்கத்தை உருவாக்கியது. அவரின் நிலை குறித்து அறிந்த பின்னர் சிறிது நேரம் அங்கு செய்வதறியாது நின்றிருந்தோம்.

அன்பழகன் சிறந்த எழுத்தாளர்; கவிஞர். முப்பதுக்கும் மேற்பட்ட தரமான நூல்களை எழுதியவர். சிங்கப்பூருக்கும் ஈரோட்டுக்கும் இடையில் பாலம் அமைக்கத்தக்க அளவில் மக்கள் சிந்தனைப் பேரவையின் நிகழ்வுகளில் பங்கேற்ற சிங்கப்பூர்த் தமிழ் ஆளுமைகளில் முக்கியமானவர். வயது 83. அடுத்த நாள் மறுபடியும் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தோம். புறப்படும் நாள் அதிகாலையில் அன்பழகன் மறைந்து விட்ட துயரச் செய்தி கிடைத்தது. இறுதி அஞ்சலி செலுத்தப்படுவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினோம். வெகு நேரம் அங்கேயே இருந்துவிட்டு நேராக விமான நிலையம் புறப்பட்டுச் சென்றோம். இந்த முறை தமிழறிஞர் சுப. திண்ணப்பம் அவர்களை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்து நீண்டநேரம் அவருடன் உரையாடினோம். நா. ஆண்டியப்பன் அவர்கள் 'வாமனத் தீவு' என்ற சிங்கப்பூர் வரலாற்று நூலை எழுதி வெளியிட்டுள்ளார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் சு. முத்துமாணிக்கம், 'மக்கள் மனம்' இதழாசிரியர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற நிர்வாகி வீ. கலைச்செல்வம் ஆகியோரை அறைக்கு அழைத்து வந்து அருகிலிருந்த விடுதியில் ஒரு விருந்து ஏற்பாடு செய்து தனது நூலையும் வழங்கியதோடு அங்கு ஒரு சிறு கலந்துரையாடல் நடைபெறுவதற்கும் வழிவகை செய்திருந்தார் நா. ஆண்டியப்பன்.

பேராசிரியர் அ. வீரமணி சிறப்புமிக்க ஆய்வறிஞர். பன்முக ஆளுமை மிக்கவர். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்தபோது அங்கு தமிழ்ப் பேரவையைத் தொடங்கியவர். சிங்கப்பூரில் தமிழ் மற்றும் தமிழர் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு செய்துள்ள இவரின் சமீபத்திய சாதனை ‘சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர்’ என்ற அரிய நூலின் தொகுப்பாசிரியராக விளங்குவதாகும். சிங்கப்பூரில் பல துறைகளில் முத்திரை பதித்த இருநூறு பேரின் வரலாற்றுச் சுருக்கத்தை ஆவணப்படுத்தி இரண்டு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரை முதல்முறையாக தனித்த ஏற்பாடுகளுடன் சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடினோம். அதேபோன்று வளர்தமிழ் இயக்கத்தின் மேனாள் தலைவர் இரா. ராஜாராம் அவர்களிடம் நீண்டநேரம் உரையாடல்களை மேற்கொண்டோம். தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு. ஹரிகிருஷ்ணன், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார், இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் முகமது பிலால் உள்ளிட்ட பல தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகளை நிகழ்ச்சிகளில் சந்தித்தோம்.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆண்டுதோறும் மக்கள் சிந்தனைப் பேரவையால் வழங்கப்பட்டு வரும் ‘அறிவியல் மேதை ஜி.டி. நாயுடு விருது’க்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையை வழங்கி வரும் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளைத் தலைவர் எம்.ஏ. முஸ்தபா அவர்களையும் ‘சிராங்கூன் டைம்ஸ்’ இதழாசிரியர் ஷாநவாஸ் அவர்களையும் சந்தித்து உரையாடினோம். கவிஞர் தியாக ரமேஷ், மலையரசி சீனிவாசன், முத்தழகு மெய்யப்பன், க. நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் எம்மைச் சந்தித்து அவர்கள் எழுதிய நூல்களை வழங்கினர்.

எனது உரையில் ஆர்.எஸ். ஜேக்கப் எழுதிய ‘வாத்தியார்’, ‘மரண வாயில்’ ஆகிய இரண்டு நூல்களையும், செக்கோஸ்லேவேகியா புரட்சியாளர் ஜூலியஸ் பூசிக் எழுதிய ‘தூக்கு மேடைக் குறிப்புகள்’ என்ற நூலையும் மேற்கோள் காட்டியும், வலுவாக அறிமுகப்படுத்தியும் பேசியிருந்தேன். பாரதிதாசனின் படைப்புகளைப் பற்றி வெளிவந்துள்ள பல ஆய்வு நூல்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தேன்.

இந்த முறை சிங்கப்பூர் பயணம் உரைகள், உரையாடல்கள், புத்தகங்கள், சந்திப்புகள், நூலகம், அணுக்கமான ஆளுமைக்கு அஞ்சலி என்று நிகழ்வுகளும் நினைவுகளுமாக அமைந்திருந்தது.

- த.ஸ்டாலின் குணசேகரன், நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத் தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.