yuvan swangசீனப் பயணி யுவான் சுவாங் கி.பி.629ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். கி.பி.645ஆம் ஆண்டு திரும்பிச் சென்றார். பதினாறாண்டுக்காலம் இந்தியாவின் பல பகுதிகளுக்குத் தொடர் பயணங்களை மேற்கொண்டுள்ளார். தமிழகத்திற்கும் வந்துள்ளார். தமிழகப் பகுதிகளில் ‘மதநம்பிக்கையுள்ள ஒரு சிலர் இருக்கிறார்கள்’ என்றும் ‘சிலர் சமய மறுப்பாளர்களாக இருந்தனர்' என்றும் இன்னும் இதுபோன்ற பல நுட்பமான செய்திகளையும் தகவல்களையும் தனது பயணக் குறிப்பில் அடர்த்தியாகப் பதிவு செய்துள்ளார்.

இவருடைய இந்தியப் பயணத்திற்கான பின்புல வரலாறு சுவாரஸ்யமானது. இளம் வயதிலேயே யுவான் சுவாங் தனது மூத்த சகோதரருடன் அங்கிருந்த பௌத்த மடாலயங்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்தக் காலகட்டத்தில் அங்கு பௌத்த மதம் புதுமையானதொரு சமயமாக மக்களால் பார்க்கப்பட்டது. தனது சகோதரரோடு அங்கிருந்த பல மடாலயங்களுக்குச் சென்றார். பல நேரங்களில் மடாலயங்களிலேயே தங்கினார். குறுகிய காலத்தில் பௌத்த சமயத்தின் மீதான அவரது ஈடுபாடு அதிகரித்தது. பௌத்த சமயத்தின் புனித நூல்களைக் கற்றார்; அச்சமயம் சார்ந்த உரைகளையும் உரையாடல்களையும் ஊன்றிக் கவனிக்கலானார். இவரும் பேசத் தொடங்கி அவரது இருபதாவது வயதிலேயே பௌத்தத் துறவியாகப் பிரமாணம் பெற்றார். தனது சமய ஞானத்தையும் பேச்சாற்றலையும் வளர்த்துக் கொண்டார்.

மிக விரைவிலேயே கல்வி அறிவில், சமயஞானத்தில் சிறந்த – திறம்படப் பேசக்கூடிய இளம் துறவியாக பரவலான அங்கீகாரம் பெற்றார்.

நாள் ஆக ஆக இவரது வேகம் அதிகரித்தது. தேடல் வேட்கையோடு பரிணாமம் பெற்றது. பௌத்த நூல்களை மூல மொழியிலேயே படிக்க வேண்டு மென்ற சிந்தனையும் புத்தர் போதனைகளிலுள்ள ஆழ அகலங்களை, உட் பொருளை பௌத்தம் பிறந்த மண்ணின் மைந்தர்களாக விளங்கும் சமயச் சான்றோர்களிடம் கற்றுத் தெளிய வேண்டுமென்ற தாகமும் உருவெடுத்தது.

தேவையான முன் தயாரிப்புகளைச் செய்துகொண்டு கி.பி.629ஆம் ஆண்டு தனது பயணத்தை வெளிப்படுத்தாமல் இந்தியாவுக்குப் புறப்பட்டார். பதினாறு ஆண்டுகள் இந்தியாவில் அவர் பயணித்தவை, பார்த்தவை, படித்தவை, கேட்டவை ஏராளம்.

கி.பி.645இல் யுவான் சுவாங் சீனா திரும்பிச் சென்று. தனது சான்-யான் நகரை அடைந்தார். மாமன்னர் தாங்-தாய்-சங் தலைமையில் வரலாறு காணாத வரவேற்பு யுவான் சுவாங்கிற்கு அளிக்கப்பட்டது. அதுவரை எந்த ஒரு பௌத்தத் துறவிக்கும் அந்தளவுக்கான எழுச்சியுடன் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டதில்லை.

யுவான்-சுவாங் சீனாவுக்கு இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்றது 657 நூல்களையும் சில சிறிய அழகிய புத்தர் சிலைகளையும்தான். அவற்றுள் பெரும்பாலானவை பௌத்த சமய நூல்கள். இவர் கொண்டுசென்ற ஓலைச் சுவடிகளான நூல்கள் உரிய மரியாதையுடன் இருபது குதிரைகளின் மீது அலங்காரத்துடன் வைக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான மக்களால் மகிழ்வுடன் வரவேற்கப்பட்டன.

மன்னரின் நண்பரானார் யுவான் சுவாங். மன்னர் யுவானிடம் தனது புனிதப்பயண அனுபவங்களை முழுமையாகப் பதிவு செய்யும் விதத்தில் ஒரு நூல் எழுத வேண்டினார்; எழுதி முடித்தார் யுவான். அந்நூல் நம் நாட்டு வரலாற்று ஆவணங்களில் ஒன்றானது.

யுவான் சுவாங் தலைமையில் ஒரு அறிஞர் குழு அமைத்து அவர் இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற நூல்கள் அனைத்தையும் மொழிபெயர்க்க அரசாணை பிறப்பித்தார் மன்னர். அதற்கான உதவிகள் அனைத்தையும் செய்தார் மன்னர். நூல்கள் மொழி மாற்றம் பெற்றன.

அவை சமயப் புத்தகங்கள் மட்டுமல்ல, இந்திய வரலாறு, கல்வி, பண்பாடு, மருத்துவம், நாகரிகம், மக்களின் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல்வகை உண்மைகளைப் பறைசாற்றிய புதையல்கள்.

யுவான் சுவாங்கால் இந்திய அறிவுச் செல்வங்கள் அள்ளிச் செல்லப்பட்டு 1380 ஆண்டுகளாகின்றன.

ஆம்… அவை சீனாவுக்குப் புத்தொளி பாய்ச்சிய இந்தியப் புத்தகங்கள்.

அரிய நூல்கள் உருவான வரலாற்றை அறிந்து கொள்வோர்க்கு அவற்றை வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும் என்பதில் சந்தேகமில்லை.

-  உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.