“மலரும் சருகும்” நாவல் வழி தமிழ் இலக்கிய உலகிற்குப் பரவலான அறிமுகத்தைப் பெற்ற டி.செல்வராஜ், நெல்லை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள தென்கலம் என்னும் சிற்றூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.  அதனை ஒட்டியுள்ள மாவடி கிராமத்தில் டேனியல் - ஞானம்மாள் தம்பதியினருக்கு 14. 1. 1938 அன்று மகனாகப் பிறந்தவர்.  ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த டி.செல்வராஜின் மூதாதையர்கள், தேவிகுளம், மூணாறு தேயிலைத் தோட்டங்களில் கங்காணி களாக இருந்தனர்.  திருவிதாங்கூர், கொச்சி சமஸ் தான அரசு பள்ளிகளில் கல்வி பயின்று, நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் (1959) பி.ஏ.  பொருளா தாரம் பயின்றார்.  சென்னைச் சட்டக்கல்லூரியில் (1962) இளநிலை சட்டம் பயின்றார்.  கல்லூரியில் படிக்கின்ற காலகட்டங்களில் இடதுசாரி அரசியல் இயக்கத்தோடு தொடர்புகொண்டார். 

Thole_450தோழர் ப.ஜீவானந்தத்திற்கு நெருக்கமாக இருந்த டி.செல்வராஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழான ‘ஜனசக்தி’யில் சில காலம் பணியாற்றினார்.  அந்த இதழில் அவரது முதல் சிறுகதை வெளிவந்தது.  அதனைத் தொடர்ந்து சாந்தி, சரஸ்வதி, தேசாபி மானி (இலங்கை), பிரசண்டவிகடன், நீதி, சிகரம், தாமரை, செம்மலர், தீபம் ஆகிய இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன.  ‘இடதுசாரி இயக்கச் சார்புடைய இளம் தமிழ்ச் சிறுகதை எழுத் தாளர்களுள் குறிப்பிடத்தக்கவராகத் திகழ்ந்தார்.  பாட்டாளி மக்களின், குறிப்பாக, பள்ளர் சமூகத்தைச் சார்ந்த விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை யினைத் திறம்படத் தமது கதைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்’ என்று செக் நாட்டுத் தமிழறிஞர் கமில்சுவலபில் தனது ‘தமிழிலக்கிய வரலாறு’ நூலில் குறிப்பிட்டுள்ளார் (1973).

நோன்பு (1960) டி.செல்வராஜின் முதல் சிறுகதைத் தொகுப்பாகும்.  டி.செல்வராஜ் கதைகள் என்னும் இரண்டாவது தொகுப்பு (1994) கிறித்துவ இலக்கியச் சங்கம் வாயிலாக வெளிவந்தது.  நிழல் யுத்தம் (1995) அவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப் பாகும்.  டி.செல்வராஜ் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு கதைகளை எழுதியுள்ளார்.  சிறுகதைகள் மட்டு மின்றி நாடகங்களையும், ஓரங்க நாடகங்களையும் எழுதியுள்ளார்.  இவரது யுகசங்கமம் (1968), பாட்டு முடியும் முன்னே ஆகிய இரண்டு நாடகங்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இடது சாரி இயக்க மேடைகளில் அரங்கேற்றம் செய்யப் பட்டன.  என்.என். கண்ணப்பா, டி.கே. பாலச்சந்தர்  உள்ளிட்ட புகழ்பெற்ற நாடகக் கலைஞர்கள் அவற்றில் நடித்துள்ளனர். 

தமிழில் தொழிலாளர் (நெசவாளர்) வாழ்க்கையினை முதன்முதலில் படம் பிடித்துக்காட்டிய நாவல், தொ.மு.சி ரகுநாதனின் பஞ்சும் பசியும் (1953) ஆகும்.  தமிழில் வெளிவந்த முதல் சோஷலிச எதார்த்தவாத நாவல் இதுவாகும்.  இதனை அடியொற்றி நிலத்தொழிலாளர்களின் போராட்ட வாழ்க்கையினைச் சித்திரித்துக் காட்டிய நாவல் டி.செல்வராஜின் மலரும் சருகும் (1967) என்பதனைக் கைலாசபதி உட்பட பல திறனாய் வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். 

இந்நாவல் நெல்லை மாவட்டத்தில் இந்திய விடுதலைக்குப் பின் நடைபெற்ற ‘கள்ளமரக்கால்’ ஒழிப்புப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நிலத்தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியைக் காட்டியுள்ளது.  இதன் பின்னர் தேவிகுளம், பீர்மேடு, மூணாற்றில் வாழும் காப்பி, தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்னல்களையும் போராட்டத்தினால் ஏற்பட்ட மாற்றங்களையும் தேநீர் (1976) நாவல் வாயிலாக டி.செல்வராஜ் எடுத்துக்காட்டியுள்ளார்.  விடுதலைக்குப்பின் நடுத்தரவர்க்கத்தினரின் அகப்புற வாழ்வில் ஏற்பட்ட சிதைவுகளை, மாற்றங்களை எடுத்துக்காட்டும் வகையில் டி.செல்வராஜின் மூலதனம் (1982) வெளிவந்தது.  வழக்கறிஞராகப் பணியாற்றிய டி.செல்வராஜின் நீதிமன்ற வாழ்க்கை அனுபவத்தை வெளிப்படுத்தும் வகையில் அக்னி குண்டம் (1980) நாவல் எழுதப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திண்டுக்கல் நகரத்திலுள்ள தோல் தொழிற்சாலைத் தொழிலாளர் களின் வாழ்க்கையினை எடுத்துக்காட்டும் விதமாக ‘தோல்’ (2010) நாவல் வெளிவந்துள்ளது.  இதற்கு முன்னர் எழுதப்பட்ட போலிச்சாமியாரான மெய்ஞ் ஞானச்சித்தர் சுவாமிகள் என்கிற கருப்புத்துரையின் மெய்க்கீர்த்தியை விளக்கும் விதத்தில் பொய்க் கால் குதிரை (2011) என்னும் நாவல் அதற்கு அடுத்த ஆண்டில் வெளிவந்தது.  சிறுகதை, நாவல், நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்களைத் தாண்டி சாமி.  சிதம்பரனார், ப.ஜீவானந்தம் ஆகியோரின் வாழ்க்கைச் சரிதங்களை நூல்களாக எழுதியுள்ளார். 

இவை சாகித்திய அகாதெமியின் வெளியீடுகளாக வெளி வந்துள்ளன.  தோழர் டி.செல்வராஜ் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் ஆகிய இடதுசாரி இலக்கிய இயக்கங்களோடு இணைந்து செயல்பட்டவர்.  இவரது யுகசங்கமம் நாடகமும், தோல் நாவலும் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றவை.  தோல் நாவல் அண்மையில் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றுள்ளது.

‘தோல்’நாவல், திண்டுக்கல் நகரத்திலுள்ள தோல் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் போராட்ட வாழ்க்கையினையும் அப்போராட்டத் திற்கு உறுதுணையாக இருந்த இடதுசாரி இயக்கத் தலைவர்களின் தலைமறைவு வாழ்க்கையினையும் எடுத்துரைக்கின்றது.  காலனியாதிக்கக் காலத்தில் இந்தியாவில் தோல் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன.  வட இந்தியாவில் ஜலந்தர், தில்லி, ஆக்ரா, மும்பை, கோலாப்பூர் ஆகிய வட இந்திய நகரங்களிலும், வாணியம்பாடி, ஆம்பூர், இராணிப்பேட்டை, அம்பத்தூர், சென்னை ஆகிய தென்னிந்திய நகரங் களிலும் ஏற்படுத்தப்பட்டன.  தோலை ஊறவைத்தல், முடி நீக்குதல், தரம்பிரித்தல், வெண்மையாக்குதல் (Bleech), பதப்படுத்துதல் போன்ற பல்வேறு நிலைகளில் தோல் தயாரிக்கப்படுகின்றது.  தோல் தொழிற் சாலைகள் தொடங்கப்பட்ட காலங்களில் சுண்ணாம்புக் குழிகளில் நனைய வைத்து, கடுக்காய், பட்டை குழிகளில் ஊறப்போட்டுத் தயாரிக்கப்பட்டன.  தற்போது நவீன முறையில் குரோமியம் தோல் தொழிற்சாலைகள் உருவாகிவிட்டன.  ஆயின் ‘தோல்’ நாவல் மரபான தோல் தொழிற்சாலைகளில் வேலை பார்த்த தொழிலாளர்களின் இன்னல்களைச் சித்திரிக்கின்றது. 

சுண்ணாம்புக் குழிகளில் இறங்கி வேலை பார்ப்பதால் கைகால்கள் அழுகியும் மயிர் நீக்குவதன் மூலம் தோல் தூசிகளின் மாசுகளுக்கு ஆட்பட்டு இளைப்பு நோய்க்குப் பலியாகியும் மாண்டுபோன, முதலாளிகளின் ‘முறி’ அடிமைகளாக இருந்த தொழிலாளர்களின் எழுச்சிமிக்க போராட்ட வாழ்வை நாவலின் முற்பகுதி சித்திரிக் கின்றது.

சின்னக்கிளி என்ற பச்சிளம் பெண்ணைத் தோல் தொழிற்சாலையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய தொழிற்சாலை முதலாளியின் மைத்துனன் முஸ்தபா மீரான் பாயை, தோல் ஷாப்பில் வேலை பார்த்த ஆசீர்வாதச் சாம்பான் மகன் ஓசேப்பு தூக்கி எறிவதிலிருந்து நாவல் தொடங்குகின்றது.  அதன் பின்னர் தனது பிறந்த மண்ணான பாண்டிச்சேரிக்கு இரயில் வண்டியில் தப்பிக்க முயன்ற போது அவன் தோல்ஷாப் அடியாள் கழுவத் தேவனால் பிடிக்கப்பட்டு கல்தூணில் கட்டப்பட்டு சவுக்கடிக்கு ஆளாகிறான்.  அப்போது பாதிரியார் இருதயசாமி இடையிட்டு அவனைக் காப்பாற்றுகிறார்.  அதனைத் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் விடுதலைக்கான சங்கம் உருவாக்கப்படுகிறது.  சங்கத்தின் வழியாகப் போராட்டம் பல இன்னல் களுக்கிடையில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.  நாவலின் இறுதியில் தொழிலாளர்கள் தங்களது அடிப்படை உரிமைகளைப் பெறுகின்றனர்.

தோல் நாவல் ஒரு சோஷலிஸ எதார்த்தவாத நாவலாகப் புனைவாக்கம் செய்யப்பட்டுள்ளது.  ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள், வர்க்க உணர்வு பெற்றுச் சங்கத்தின்வழி ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவது நாவலின் மையக்கருத்தாக அமை கின்றது.  தோல் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்ட பாண்டிச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட பறையர் இனத்தவர்களும் நகரத் துப்புரவுத் தொழிலாளர் களான அருந்ததியர்களும் ஒன்றிணைந்து போராட்டத் தினை முன்னெடுக்கின்றனர்.  தலித்துகள் தங்களது சாதிய அடையாளங்களை மறந்து வர்க்க உணர்வு பெறுகின்றனர்.  தலித்துகளின் அவலங்களை, அவமானங்களை, வேதனைகளைச் சொல்வதைவிட அவற்றிலிருந்து விழிப்புணர்வு பெற்று மீண்டெழு கின்ற வெற்றிகரமான வாழ்வே நாவலில் விரித் துரைக்கப்பட்டுள்ளது.  சீக்கியமத இயக்கமான ‘கால்சாவை’ ஒன்றுபடுத்திய குருகோவிந்தர் ‘சிட்டுக் குருவிகளை வல்லூறுகளாக்குவேன்’ என்று கூறி யதைப் போல இந்நாவலில் வரும் ஒடுக்கப்பட்ட மக்கள் பெருவலிமையுடன் இடதுசாரி இயக்கத் தலைவர்களால் கிளர்ந்தெழச் செய்யப்படுகின்றனர். 

தோல்ஷாப் தொழிலாளியான ஓசேப்பு முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியான முஸ்தபா மீரானைத் தூக்கி எறிவது போல், அருந்ததியர்இனத் துப்புரவுத் தொழிலாளி சுப்பவாடன், ஈட்டிக்காரனும் அருந்த தியர் இனப் பெண்களைப் பாலியல் பண்டமாகப் பாவிக்கின்றவனுமான கழுவத்தேவனை நாவலின் இரண்டாம் பாகத்தில் தூக்கி வீசி எறிகின்றான்.  நாவலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கிடையே உள்ள சமூக முரண்கள் (பறையர், சக்கிலியர்) காட்டப் படுவதுடன் பறையர் இனத்திற்குள்ளான உள் முரண்களும் (தங்கப்பறையன் ஒ வெட்டிப்பறையன்) சித்திரிக்கப்பட்டுள்ளன.  அதேபோன்று கிறித்தவ மதத்திற்குள்ளும் சாதிய முரண் இருப்பதையும் (வன்னியக் கிறித்தவர் ஒ தலித் கிறித்தவர்) பஞ்சம் பட்டி ‘டவுசர் சர்ச்’ வழி காட்டுகிறார். 

‘வகை மாதிரி யான சூழல்களில் வகைமாதிரியான கதை மாந்தர் களைப் படைத்துக் காட்டுவதுதான் எதார்த்த வாதம்’ (Typicalcharacter in typical situations) என்னும் ஏங்கல்சின் கூற்றிற்கேற்ப, தோல் தொழில் நகரமான திண்டுக்கல் சமூக வெளியின் பகுதி களான பேகம்பூர், தோமையார்புரம், சவேரியார் பாளையம், இராஜக்காபட்டி, நந்தவனப்பட்டி, பஞ்சம்பட்டி என்னும் இடங்கள் நாவலின் கதைக் களங்களாகின்றன.  ஓசேப்பு, சுப்பவாடன், இருதய சாமி; பொதுவுடைமை இயக்கத் தலைவர்களான வேலாயுதம், சங்கரன்; உழைக்கும் பெண்களான மாடத்தி, சிட்டம்மாள்; தோல்ஷாப் முதலாளி களான சுந்தரம் ஐயர், அசன் இராவுத்தர் ஆகிய அனைத்துப் பாத்திரங்களும் குறிப்பிட்ட சமூகப் பிரிவின் வர்க்க நலனைப் பிரதிபலிக்கும் வகை மாதிரிப் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். 

மக்ஸிம் கோர்க்கியின் தாய், தகழியின் தோட்டியின் மைந்தன் ஆகிய நாவல்களைப் போன்று தோல் நாவலிலும் வகை மாதிரிப் பாத்திரப் பண்பு சிறந் திருக்கின்றது.  ‘தோல்’ நாவலில் வரும் பாத்திரங்கள் யாவும் கோர்க்கி குறிப்பிடும் ‘ஆன்மாவின் புத்துயிர்ப்புப்’ பெற்ற பாத்திரங்களாக அமை கின்றன.  ‘தனிமனிதன் தனது விதியை மக்களுடைய விதியோடு இணைத்து அவர்களுடைய விடுதலை, மகிழ்ச்சி ஆகியவற்றுக்கான போராட்டத்தில் சேரும் போது புத்துயிர் பெறுகிறான்’ என்று கோர்க்கி குறிப்பிடுவார்.  ‘தாய்’ நாவலில் வரும் தொழிற்சங்கத் தலைவன் பாவெலும் அவனது தாய் நீலவ்னாவும் புத்துயிர்ப்புப் பெற்ற ஆன்மாக்கள்.  தாய் நாவலின் இறுதியில் ஆளும் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகளால் நீலவ்னா எட்டி உதைத்துத் தள்ளப் படும்போது ‘புத்துயிர்க்கப்பட்ட ஆன்மாவைக் கொல்ல முடியாது’ என்று சொல்லுவாள்.  அதே போலத் தோல் நாவலில் வரும் ஓசேப்பும், சுப்ப வாடனும், மாடத்தியும், வேலாயுதமும், இருதய சாமியும் புத்துயிர்க்கப்பட்ட ஆன்மாக்களாகத் திகழ்கின்றனர். 

இத்துடன் சமூகத்தை மாற்றும் போராட்டக் குணம்மிக்க பாத்திரங்களாக விளங்கு கின்றனர்.  காமுகன் முஸ்தபா மீரானைத் தன் தொடைக்குள் வைத்து அழுத்தித் திணறடித்த மாடத்தியும், முஸ்தபாவினைக் கல்லைத்தூக்கிப் போட்டுக்கொன்ற சிட்டம்மாளும், தோல் தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைசென்று, சிறைக்குள் அடக்குமுறையினை எதிர்த்துப் போராடி மரித்த அக்னிஸ்மேரி, ஓசேப்பின் வளர்ப்புத்தாய் தாயம்மாள், அவனது காதலியான அருக்காணி உட்பட அனைத்துப் பெண் பாத்திரங்களும் வீரம் செறிந்த போராட்டப் பண்புகொண்ட பாத்திரங் களாகவே படைக்கப்பட்டுள்ளன.

தோல்ஷாப் தொழிலாளர்களின் போராட்டத் திற்குப் பின்புலமாக இருக்கும் இடதுசாரி இயக்கத் தலைவர்களின் தலைமறைவுக் காலத் தியாக வரலாற்றினை நாவலின் பின்பகுதி விவரிக்கின்றது.  இடதுசாரி இயக்கத்தலைவர்களின் தலைமறைவுக் கால வாழ்க்கையைப்பற்றி மலையாளக் கவிதை யிலும், புனைகதையிலும், சுயசரிதையிலும் ஏராள மான இலக்கியப் பதிவுகள் உண்டு. 

ஆனால் தமிழில் ‘தோல்’ நாவலே முதல் இலக்கியப் பதிவாக அமைந்துள்ளது.  தொழிற்சங்கம் அமைத்துப் போராடு வதிலுள்ள அனுபவங்களை விட இன்னல்களை விவரிக்கும் இப்பகுதியில் சங்கரன், வேலாயுதம், கந்தசாமி, பிரதர் தங்கசாமி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களாக வருகின்றனர்.  இராமாயணத்தைப் பற்றி விமர்சன நூல் எழுதிய வக்கீல் சுந்தரேச ஐயரின் மகனான சங்கரன் தொழிற்சங்கத்தைக் கட்டமைப்பதில் பின்புலமாகச் செயல்படுகின்றார். 

உயர்சாதியான பிராமணச் சமுதாயத்தைச் சார்ந்த சங்கரன் தனது பூணூலை அறுத்தெறிந்து சேரி மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் கொடுத்த தோலில் ஒட்டியிருக்கும் கொழுப்பையும், குச்சிக் கிழங்கையும் உண்கிறார்.  தான் பிறந்த உயர் வர்க்கத்திலிருந்து விலகி ‘வர்க்கநீக்கம்’  பெற்று உழைக்கும் வர்க்கத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்;  பாலியல் வன்முறைக்கு உள்ளாகி இறந்துபோன சின்னக்கிளியின் பிணத்தை உயர்சாதியினர் தங்கள் தெருவழியாகத் தூக்கிச் செல்ல மறுக்கும்போது சப்கலெக்டர் வாட்சன் துரையுடன் இணைந்து அப்பிணத்தைத் தன் தோளில் தூக்கிச் செல்கிறார்.  இவரைப் போன்று சுருட்டுக் கம்பெனித் தொழிலாளர்களை ஒன்றிணைத்த தோழர் வேலாயுதம் தோல் தொழிற்சாலைத் தொழி லாளர்களின் போராட்டத்தில் களமிறங்கி, காவல் துறையினரின் அடி உதைக்கு ஆளாகி, பற்கள் உடை பட்டுத் தெருவில் நாய்போல் சங்கிலியால் இழுத்துச் செல்லப்படுகின்றார். 

1948 - 1953 காலகட்டத்தைய (தலைமறைவுக்காலம்) இடதுசாரி இயக்கத்தின் இரத்தம் தோய்ந்த வரலாறு இந்நாவலில் உயிர்ப் புடன் சித்திரிக்கப்பட்டுள்ளது.  நாவலில் வரும் வெள்ளைத்துரையும், தேவசகாயமும் அன்றைய அடக்குமுறை சார்ந்த காவல்துறை அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகளாக நாவலில் காட்டப் படுகின்றனர்.  சட்டத்தை மதிக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நேர்மையான நீதிபதியாக தேவயிரக்கம் காட்டப்படுகின்றார். ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிய அடையாளங்களை மறந்து ஒரே வர்க்கமாகத் திகழ்வதைப் போல் தோல்ஷாப் முதலாளிகளான சுந்தரம் ஐயர், வரதராஜ நாயுடு, அசன் ராவுத்தர் ஆகியோர் தங்கள் சாதிமத அடை யாளங்களை மறந்து ஒரேவர்க்கமாகச் செயல்படு கின்றனர்.  இரண்டாம் உலகப்போர், போர்க்காலப் பஞ்சம், அரிசிப் பதுக்கல், இந்திய விடுதலை, அதனைத் துக்க நாளாகக் கொண்டாடும் சுயமரியாதை இயக்கம் (எண்ணெய்க் கடை வீரபத்திரநாடார்) ஆகிய சமகாலச் சமூக நிகழ்வுகளும் நாவலின் பிற்பகுதியில் தெளிவாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. 

1930-60 காலகட்ட திண்டுக்கல் நகர வரலாறு, தமிழகச் சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்றுடனும், உலக வரலாற்றுடனும் நாவலில் இணைந்து செல் கிறது.  எனவே தோல் தொழிற்சாலை தொழிலாளர் களின் வாழ்க்கை நிகழ்வுகள் தனியாகச் சித்திரிக்கப் படாமல் ஒட்டுமொத்தச் சமூக இயங்கியல் பார் வையில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.  தொழிற்சங்கப் போராட்டத்தின் விளைவால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, ஊக்கத்தொகை ஆகியவற்றைப் பலனாகப் பெறுகின்றனர்.  இடதுசாரி இயக்கத் தலைவர்களாக நாவலில் சித்திரிக்கப்படும் சங்கரன், மதன கோபால், கந்தசாமி ஆகியோர் முறையே தமிழக இடதுசாரி இயக்கத் தலைவர்களான தோழர் ஏ. பாலசுப்பிரமணியம், தோழர் மதனகோபால், தோழர் மணலி கந்தசாமி ஆகியோரின் வார்ப்புக்களாக அமைந்துள்ளனர். 

தோழர் ஏ. பாலசுப்பிரமணியத்தின் தந்தையும் பெரியாருடன் தொடர்பு வைத்திருந்த இராமாயண விமர்சன நூலை எழுதியவருமான வழக்கறிஞர் அமிர்தலிங்கய்யர்தான், நாவலில் சங்கரனின் தந்தையாக வழக்கறிஞர் சுந்தரேச ஐயராக வார்க்கப்பட்டுள்ளார்.  திண்டுக்கல்லில் தோல் தொழிலாளர் சங்கத்தைக் கட்டியமைக்க உறுதுணையாக நின்ற தோழர் எஸ்.ஏ. தங்கராஜ் இந்த நாவலில் வரும் ஓசேப்பு, பிரதர் தங்கசாமி முதலான பல பாத்திரங்களில் ஊடாடி நிற்கிறார்.  ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1952ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிலும் 1963ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர் தலிலும் நின்று வெற்றிபெறுவதோடு நாவல் நிறை வடைகிறது.  நாவலின் இறுதியில் உயர்வர்க்கத்தைச் சார்ந்த கணேச ஐயரின் நகர சபைத் தலைவர் பதவி யினை அடித்தட்டு வர்க்கத்தைச் சார்ந்த முறியடிமை யாக இருந்த ஆசீர்வாதச் சாம்பான் மகன் ஓசேப்பு கைப்பற்றுகிறான்.  தோழர் வேலாயுதம் சட்ட சபைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகின்றார்.  சமூக அரசியல் அதிகாரம் கைமாறு வதையும் அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் அமர் வதையும் நாவல் காட்டுகின்றது.  ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் வெற்றிக்குக் காரணமான தொழிற்சங்கத்தின் உருவாக்கத்தில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் உறுப்பினர் நரசிம்ம பாரதி, கிறிஸ்துவப் பாதிரியார் இருதயசாமி, பிரதர் தங்கசாமி, முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த சவுகத் அலி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சங்கரன் ஆகிய அனைத்து அரசியல் தரப்பினரும் பங்கேற்கின்றனர். 

இடதுசாரி இயக்கம் என்பது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு பரந்த இடது முன்னணியாகக் காட்சியளிக்கிறது.  இத்தகைய விரிந்துபரந்த இடது முன்னணியே முற்போக்குப் பண்பாட்டு இயக்கத்தின் இன்றைய தேவையென வரலாற்றறிஞர் கே.என். பணிக்கர் சுட்டுகிறார்.  “புரட்சி எல்லாரும் உற்சாகத்தோடு நடத்தவேண்டிய ஒரு விழாவன்றோ” என்று மலையாளக் கவிஞர் குஞ்சுண்ணி கூறியதைப் போன்று நாவலில் புரட்சி சகல தரப்பினராலும் உற்சாகத்துடன் வரவேற்கப்படுகின்றது.  பரேடு மைதானத்தில் தொழிற்சங்கக் கொடியை சங்கரன் ஏற்றுகிறபோது, தோழர் வேலாயுதம் முஷ்டியை உயர்த்தி, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என முழக்க மிடுகிறார்.

கணேசய்யர் ‘போலோ மகாத்மா காந்திக்கு ஜே’ என்று முழங்குகிறார்.  பேராயர் முழந்தாளிட்டு ‘ஆமென்’ சொல்கிறார்.  நரசிம்ம பாரதி ‘பறையருக்கு மிங்குதீயர்’ என்ற பாரதி பாடலை உரக்கப்பாடுகிறார்.  புரட்சிக் கொடி யேற்றும் போதும், உரிமைக்காக ஊர்வலம் போகும் போதும் மக்களுக்கு சாதி, மதம் ஒருபோதும் தடையாக இருக்கவில்லை.  தொழிற்சங்கம் அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் மட்டும் கவனம் செலுத்தாது சமூக மாற்றத்திலும் அக்கறை செலுத்தும் அமைப் பாகத் திகழ்கிறது. 

நாவலாசிரியர் நாவலில் இடம் பெறும் பல்வேறு சமூக வர்க்கப் பிரிவினரை அவரவர் நியாயங்களோடு படம்பிடித்துக் காட்டி யுள்ளார்.  ஒரு குறிப்பிட்ட பிரிவின் நியாயத்தை ஓங்கி ஒலிக்காது பல குரல்களையும் அவற்றின் நியாயங்களையும் நாவலில் சமமாகச் சித்திரித் துள்ளார்.  நாவலின் மொழி மக்களின் உணர்ச்சி களையும், ஆவேசங்களையும் வெளிப்படுத்தும் எதார்த்த நடையில் வட்டார வழக்குகளை உள்ளடக்கி அமைந்துள்ளது.  சமூக அரசியல் வரலாற்றைப் பதிவுசெய்து ஆவண நாவலாகத் திகழும் இந் நாவல், சோஷலிஸ எதார்த்தவாதப் புனைவாக அமைந்துள்ளது.  21ஆம் நூற்றாண்டில் எதார்த்த வாதம் வீறுடன் மறு எழுச்சி பெற்றமைக்கு இந் நாவல் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.

துணைநூற் பட்டியல்
1. கே.என். பணிக்கர், இந்தியாவில் முற்போக்குப் பண்பாட்டு இயக்கம், தமிழில் பா.ஆனந்தகுமார், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, ஜூன்-2012.

நாவல்கள்:
1. டி.செல்வராஜ் ‘மலரும் சருகும்’, மல்லிகைப் பதிப்பகம், சென்னை, மு.ப- 1967, சித்திரை நிலவு, மதுரை, 3ஆம் பதிப்பு, செப்- 2003.

2. டி.செல்வராஜ் ‘தேநீர்’, கவிதா, சென்னை, மு.ப-1976, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2ஆம் பதிப்பு- 2008.

3. டி.செல்வராஜ் ‘அக்னிகுண்டம்’, கிறித்தவ இலக்கிய சங்கம், சென்னை, மு.ப- 1985.

4. டி.செல்வராஜ், ‘மூலதனம்’, பூக்கூடை பதிப்பகம், சென்னை, மு.ப- 1982.

5. டி.செல்வராஜ், ‘தோல்’, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மு.ப- 2010.

6. டி. செல்வராஜ், ‘பொய்க்கால் குதிரை’, இமயப் பதிப்பகம், நாகப்பட்டினம், மு.ப- 2011.

கதைகள்:
1. டி.செல்வராஜ், ‘நோன்பு’ மு.ப- 1960,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.  2ஆம் பதிப்பு, ஆகஸ்ட்- 2005.

2. டி.செல்வராஜ், ‘டி.செல்வராஜ் கதைகள்’, கிறித்தவ இலக்கிய சங்கம், சென்னை, மு.ப- 1994.

3. டி.செல்வராஜ், ‘நிழல் யுத்தம்’, நர்மதா, சென்னை, மு.ப- 1995.

நாடகம்:
1. டி.செல்வராஜ், ‘யுகசங்கமம்’, மல்லிகை, சென்னை, மு.ப- 1979.

Pin It