"நிலத்தை உரிமையாக்கிக் கொள்ளுதல்" என்னும் செயல், சொத்துடைமை சமூகத்தின் அடிப்படை ஆகும். பொதுவெளியைக் குறிப்பிட்ட தனிநபர்களுக்குரிய வெளியாக மாற்றுவது என்பது இயற்கையை மனிதர்கள் அபகரிக்கத் தொடங்கியதைக் காட்டுவது. பிரித்தானியர்கள் வருகைக்குப் பிறகு, அரச மரபில் இருந்த நிலவுடைமையின் தன்மைகள் பல்வேறு புதிய தன்மைகளை உள்வாங்கு வதாக அமைந்தன.

ஐரோப்பாவில் நிலம் எவ்வகையில், ஆளும் சக்திகளால் நிர்வாகம் செய்யப்பட்டதோ, அந்தத் தன்மையை, புதிதாகத் தங்களால் அபகரிக்கப்பட்ட நிலத்தில் நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். இதனை முதன்முதலில் வங்காளத்தில் பிரித்தானியர்கள் தொடங்கினர். பின்னர் பிரித்தானிய, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் நீட்டித்தனர். பிரித்தானியர் காலத் தொண்டை மண்டலம் அல்லது செங்கற்பட்டு பகுதியில், நிலம் தொடர்பான நிகழ்வுகள் குறித்து அறிவதற்கான மூன்று ஆவணங்களின் அடிப்படையில், விரிவான உரையாடலை முன்னெடுப்பது இங்கு நோக்கம்.அந்த ஆவணங்கள் பின்வருமாறு.

  •  1818 இல் எப்.டபிள்யூ.எல்லீஸ் என்னும் பிரித் தானிய அதிகாரியால் உருவாக்கப்பட்ட "மிராசு - உரிமை"குறித்த17கேள்விகளுக்கான பதில்களும் அவை தொடர்பான இரண்டு இணைப்புகளும் என்னும் ஆவணம். (Replies to seventeen questions, proposed by the government of Fort .st.George, relative to Mirasi Right" with two appendices elucidatory of the subject , by F.W.Eills, Collector of Madrsa .Printed at the Government Gazette office Madras A.D .1818) 
  •  1860 - 70களில் மேற்குறித்த "பதினேழு கேள்வி களுக்கான பதிலாக" அமையும் மிராசு உரிமை என்னும் ஆவணத்திற்கு மறுப்பாகவும், செங்கற் பட்டு மாவட்ட வன்னியர்களின் நிலப்பறிப்புக்கு எதிராகவும் 'மிராசு பாத்தியதை" எனும் பெயரில் அத்திப்பாக்கம் அ.வெங்கடாசல நாயகர், ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாக்கிய ஆவணம். "பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாயிருக்கிற விவாதம்" என்பது அதன் பெயர்.
  •  1892இல் செங்கற்பட்டு மாவட்ட அதிகாரியாக இருந்த திரமென்ஹீர் என்பவர் உருவாக்கிய "செங்கல்பட்டுப் பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள்" அரசு துணை எண் (வருவாய்த்துறை) 1010/1892.

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று ஆவணங்களும், செங்கற்பட்டு பகுதியில் இருந்த நிலங்களோடு, அங்கு வாழ்ந்த மக்கள் எவ்வகையில் உறவுகொண்டிருந்தார்கள் என்பது தொடர்பானவை. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி அதிகாரம், படிப்படியாக மகாராணியாரின் அதி காரம் என்னும் 1799 - 1858 காலப் பகுதியில் செயல் பட்ட நிலஉறவுகள் ஆகியவற்றை இந்த ஆவணங்களைக் கொண்டு புரிந்துகொள்ள இயலும். இன்றைய நிலஉறவு களைப் புரிந்துகொள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டில் செயல்பட்ட நிலஉறவுகள் தொடர்பான நடவடிக்கைகள் உதவும் என்று நம்பலாம். அக்கண்ணோட்டத்தில் தான் இந்த உரையாடல் மேற்கொள்ளப்படுகின்றது.

இடைப்பிறவரலாக, இந்த உரையாடல் ஏன் உருவானது? என்பது குறித்த விவரத்தையும் பதிவுசெய்வது அவசியம். "அத்திப்பாக்கம் அ.வெங்கடசலனார் ஆக்கங்கள்: ஒடுக்கப்பட்டோரின் நிலப்பறிப்பு மற்றும் இந்துமத சடங்குசார் சுரண்டல் குறித்த ஆக்கங்கள்" என்னும் திரட்டு நூலின் ஒரு பகுதியாக அமையும் "பாயக் காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாயிருக்கிற விவாதம்"என்னும் ஆவணத்தைப் புரிந்துகொள்ளும் தேடலின் பகுதியாகவே இந்த உரையாடல் அமைகிறது. வெங்கடாசலனார் ஆக்கங்களைப் புரிந்துகொள்ள, அத்துறை தொடர்பான சமகால ஆவணங்கள் குறித்த கவன ஈர்ப்பு இங்கு நோக்கமாக அமைகிறது.

தென்னிந்திய நிலப்பகுதியில், நிலத்தைப் பயன் படுத்துவது சார்ந்து வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையான தன்மைகள் இருந்ததை அறிய முடிகிறது. பிற்காலச் சோழர் காலத்திற்குப் பின்பு, விசயநகர மன்னர்கள், மொகலாய மன்னர்கள், மராட்டியர்கள் மற்றும் பிரித்தானிய ஆட்சியாளர்கள் காலத்தில் நில உரிமை என்பதற்கும் ஆட்சி அதிகாரம் என்பதற்கும் நெருங்கிய உறவு இருந்தது. நில உறவு சார்ந்து மிராசு தார்கள், ஜமீன்தார்கள் உருவானார்கள். மிராசு என்னும் சொல் நிலஉரிமையைக் குறிப்பது. நிலம் சார்ந்த அதிகாரச் செயல்பாடே மிராசு அல்லது மிராசுதார் என்று அழைக்கப்பட்டது. நிலஉறவு தொடர்பான சொற்களில் 'மிராசு' என்பதே மிகப்பழைய சொல் லாட்சி. காணியாட்சி என்னும் நிலஉரிமைக்கு மாற்றுச் சொல்லாக

"மிராசு" பயன்படுத்தப்பட்டது. பிரித்தானியர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன், காணியாட்சி யான "மிராசு உரிமை" பற்றிய ஆய்வில் அவர்கள் ஈடுபட்டனர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள நிலங்கள் மிராசு முறையில் பேணப்படுவதை அறிந்தனர். பிரித்தானி யர்கள் உருவாக்கிய வருவாய்த்துறை மிராசு பற்றிப் புரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஆவணம்தான், "பதினேழு கேள்விகளுக்கான பதிலாக" அமையும் ஆவணம்.

16.12.1812 இல் பிரித்தானிய வருவாய்த்துறை நிர்வாக இயக்குநர்கள் அளித்த கடிதத்திற்குப் பதிலாக 2.8.1814 இல் கொடுக்கப்பட்ட அறிக்கைதான் "பதினேழு கேள்விகளும் பதிலும்" ஆகும். 1818இல் இந்த ஆவணம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனை உருவாக்கியவர் பொம்ம கொண்ட சங்கர சாஸ்திரி என்னும் பி.சங்கரய்யா. இவர் புனித ஜார்ஜ்கோட்டைக் கல்லூரியின் தலைமை ஆங்கில ஆசிரியர். எல்லீஸ் கேட்டுக் கொண்டதன் பேரில், தெலுங்கு பார்ப்பனரான சங்கரய்யா இந்த ஆவணத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆவணத்தின் முதல் கேள்வி, மிராசு என்பதன் வரை யறை தருகிறது. அப்பகுதி வருமாறு: மிராசு என்னும் காணியாட்சி எவ்வகையில் உருவானது என்பது கேள்வி.  அதற்கான பதில்,

"இந்தத் தொண்டை மண்டலம் ஏற்படுத்தின காலத்தில் உழவடையைக் குறித்துக் காணியாட்சி என்கிற மிராசு குடிகளுக்கு ஏற்படுத்தினதாயும் அது முதலவர்களுக்கந்த மிராசு அனாதியாய் நடந்து கொண்டு வருகிறதாயும் பெரியவர்கள் சொல்லு கிறார்கள். இப்பேர்பட்ட மிராசில்லாதவன் அந்த மிராசு நிலங்களைக் குத்தகைக் கொடுத்த போதைக்கு மிராசுதாரவனைக் கொண்டு சாகுபடி செய்விக்கிறதேயல்லாமற் பாயக்காரிகளைக் கொண்டு சாகுபடி செய்விக்கிறதில்லை. ஆனால் மிராசுதாரனுக்குச் சாகுபடி செய்கிறதுக்கு சக்தியில்லாமற் போனால் - அப்போது அந்த ஊரிலிருக்கிற உட்குடிகளைக் கொண்டாவது புறக்குடிகளைக் கொண்டாவது சாகுபடி செய்கிற வழக்கமுண்டு. (குறிப்பு: புள்ளி இட்டு, சமகால புழக்கத்தில் உள்ள எழுத்துமுறையில் இப்பகுதி பெயர்த்து எழுதப்பட்டுள்ளது. மூலத்தில் புள்ளி இருக்காது.)

இப்பகுதி மூலம் மிராசு என்பது அனாதிகாலமாக நடைமுறையில் இருந்து வருவதாகப் பதிவாகியுள்ளது. அரசர்கள் காலத்தில் பார்ப்பனர்கள் "பிரம்ம தேயம்" எனும் பெயரில் நிலங்களைத் தானமாகப் பெற்றார்கள். இதன்மூலம் குறிப்பிட்ட ஊர் அவர்களின் உரிமை யாக்கப்பட்டது. மேலும் வெள்ளாளர்கள் நிலத்துக்கு உரிமை உடையவர்களாக இருந்தனர். இவ்வகையில் பெற்ற நிலஉரிமை பின்னர் மிராசு என்று அழைக்கப் பட்டது. இவர்கள் மிராசுதார்கள் ஆனார்கள். இவர் களுடைய இவ்வகையான உரிமை பிரித்தானியர்கள் காலத்தில் தொடருவதா? அல்லது கீழ்மட்டத்தில் நில உரிமை இல்லாதிருப்போர், ஆனால் அந்த நிலத்தில் உழைப்போர் நிலஉரிமை பெறுவதா? எனும் விவாதம் உருவாகும் சூழலில்தான், சங்கரய்யா அவர்களால் உருவாக்கப்பட்ட ஆவணம், மிராசுதார்களுக்கு நிலஉரிமை தொடர்வதற்கு வழிகாணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த மேற்கோள் பகுதியில் உள்ள பாயக் காரி, உட்குடி, புறக்குடி என்னும் சொற்கள் நிலத்தோடு உறவுடையவர்களைக் குறிப்பதாகும். பாய்க்காரி என்பதை பாயக்காரி என்றும், அது இந்துஸ்தானி சொல்லாகவும் வின்சுலோ அகராதி குறிப்பிடுகிறது. நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துச் சாகுபடி செய்பவர் என்பது வின்சுலோவின் விளக்கம் ஆகும். பிற இடங்களிலிருந்து வந்து குடியேறுபவர் என்றும் குறிப்பு உள்ளது. உட்குடி என்பது குறிப்பிட்ட கிராமத்தில் வசிப்பவர்; புறக்குடி என்பவர் அக்கிராமத்திற்கு  வந்து குடியேறியவர் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. இச்சொற்கள் அனைத்தும் மிராசு பாக்கியதை இல்லாதவர் களைக் குறிப்பதாகும். இவர்கள் நிலத்தில் உழைத்து உற்பத்தி செய்பவர்கள். ஆனால், அந்த நிலம் அவர் களுக்கு உரிமை உடையது இல்லை. வெறும் குத்தகைக் காரர்களே. மிராசுதார் நினைத்த மாத்திரத்தில் அவர்களை வெளியேற்றலாம்.

மேற்குறித்த "பதினேழு கேள்வி - பதில்" என்னும் ஆவணம், மேற்குறித்த வகையில் நிலஉறவு தொடர்பான பதிவுகளை விரிவாகப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். காலம்காலமாக நிலத்துக்கு உரிமை உடையவர் ஒருவர்; அதில் உழைப்பவர் பிறிதொருவர். உழைப்பவருக்கு உரிமை இல்லை என்பதே ஆவணத்தின் சாரம். இந்த ஆவணத்தை நடைமுறைப்படுத்த எல்லீஸ் முயன்றார். இந்த ஆவணத்தில் வெள்ளாளருக்கு அடிமையாகச் சில குடிகள் இருந்தது குறித்த பதிவும் இடம்பெற்றுள்ளது. எத்தனை உழுகிற குடிகளுண்டு? என்ற ஒன்பதாவது கேள்விக்குப் பதிலாகப் பின்வரும் பகுதி அமைந்துள்ளது.

"....... அந்த கிராமங்கள் வேளாளருடையதாயும் அகமுடையருடைய தாயுமிருந்தால் அவர்களுக்கு அடிமைகளிருக்கிறதுண்டு. அந்த அடிமைகளுக்கு உழுகிற ஏர் - ஒன்றுக்கு - ஒரு ஆள் விழுக்காடு வைத்துக் கொண்டு சாகுபடி செய்துகொண்டு வருவார்கள். அடிமைகள் குறைச்சலாயிருந்தாற் படியாளை வைத்துக் கொள்ளுவார்கள். பிராமணாளிருக்கிற அக்கிராரங்களாயிருந்தாற் படியாள்கள் விசேஷமாயும் அடிமைகள் கொஞ்ச மாயுஞ் சில கிராமங்களிலேயேயில்லாமலு மிப்படியிருக்கும்" (குறிப்பு: புள்ளி இட்டு எழுதப்பட்டுள்ளது. மூலத்தில் புள்ளி இருக்காது)

இந்தப் பகுதி மூலம் வேளாளர் மற்றும் அக முடையர்களுக்கு அடிமைகள் இருந்ததை அறிகிறோம். அடிமைகள் இல்லாதபோது படியாள் வைத்துக் கொண்டனர். பார்ப்பனர்கள் படியாள், அடிமைகள் ஆகியோரை வைத்திருந்தது குறித்து அறிகிறோம். சங்கரய்யாவின் இந்த ஆவணத்தின் மூலம், வேளாள,  அகமுடைய, பார்ப்பன ஆதிக்க சாதிகள் எவ்வகையில் அடிமை மற்றும் படியாள் வைத்திருந்தனர் என்று அறியமுடிகிறது. நிலவுடைமை சமூகத்தின் அடிமை முறை குறித்து அறிய முடிகிறது. இந்த ஆவணத்தின் இணைப்பு 25இல், 16ஆம் நூற்றாண்டு வாக்கில் பறையர்கள், வெள்ளாளருக்கு, தங்களுடைய தங்கை, தன் மகள் மற்றும் பேத்தி ஆகிய மூவரையும் அடிமையாக விற்றது தொடர்பான குறிப்பு உள்ளது. இதே குறிப்பு வெள்ளாளரின் பெருமை பேசும் 'வருண சிந்தாமணி' எனும் நூலில் வேளாளருக்குப் பறையர் எழுதிக் கொடுத்த சாசனம் என்று பதிவாகியுள்ளது. அப்பகுதி வருமாறு:

"................ 1512க்கு மேற் செல்லா நின்ற விளம்பி வார அற்பிசி மீ 52 செயல்கொண்ட சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவள நாட்டுப் புழல்கோட்டத்து எழும்பூர் நாட்டில் தண்டையார் பேட்டை யிலிருக்குங் கொட்டி பெரியான் மகன் பெரிய திம்மன் சின்ன திம்மன் உள்ளிட்டாரும் அடிமை விலைப் பிரமாணம் பண்ணிக்கொடுத்தபடி எங்களுடன் பிறந்தபெண் வெள்ளச்சியையும், அவன் மகள் பெரியாளையும் மேற்படியாள் மகள் சோலைக்கிளியையும் ஆக, இந்த 3 பேரையும் கொத்தடிமையாகக் கொள்ளு வாருளரோ வென்று முற்கூற, இம்மொழிகேட்டு இதற்கு எதிர்மொழி கொடுத்தோன், இம்மண்டலத்து இக்கோட்டத்து இந்நாட்டில் வல்லூரிலிருக்கும் வேளாளரில் வாண்டராய உலகநாதமுதலியார் மகனான ஒற்றியப்ப முதலியார் விலை கூறித்தரில் நானே கொள்வே னென்று பிற்கூற.... இந்த மூன்று பேரையும் விற்று விலைப் பிரமாணம் பண்ணிக் கொடுத்தோம்....... இவை பெரியதிம்மன் சின்ன திம்மன் உள்ளிட்டார் கைநாட்டு. (வருணசிந்தா மணி : திராவிட காண்டம். பக் 451-52)

சங்கரய்யா உருவாக்கிய ஆவணத்தின் மூலம் மிராசு உரிமை என்பது எவ்வகையில் நிலவுடைமை சமூக அமைப் போடு நெருங்கிய தொடர்புடையது என்பதை அறிய முடிகிறது. எல்லீஸ் அறிவுறுத்தலின்படி சங்கரய்யா பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கிய இவ்வாவணம் பிற்காலச் சோழர் காலத்திற்குப் பிற்பட்ட சமூகத்தில் நிலஉறவுகள் நடைமுறையில் (கி.பி.13-18 நூற்றாண்டுகள்) இருந்தமை குறித்துப் புரிந்துகொள்ள உதவுகிறது. இதனை நடைமுறைப் படுத்தும் செயல்பாடுகளுக்கு எதிராகவே அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் செயல்பட்டார். அதுவே 'பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டா யிருக்கிற விவாதம்' என்பதாக அமைகிறது. அந்த ஆவணம் தொடர்பான விவரங்கள் குறித்தும் உரை யாடுதல் தேவையாகும். வெங்கடாசல நாயகர், இந்த ஆவணத்தை உருவாக்கியது குறித்துப் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

"............ 1861 ஆம் வருஷம் எஸ்டேட் இண்டியா செக்ரெட்டரி அவர்களுக்கும் எழுதிய அனேகங்களில் சுருக்கிக் கடைசியாகச் சீமையில் பார்லிமெண்டில் ஒரு கூட்டத்தாரான வெகுஜன உபகாரத்துக்கு ஏற்பட்டிருக்கிற ஈஸ்டு இந்தியா அசோசியேஷன் சபையாருக்கு 1871ஆம் வருடம் ஜூன் மாதம் 28இல் நான் அச்சுப் போட்டு அப்பீல் பண்ணிக்கொண்ட இங்கிலீஷ் புத்தகத்துச் சரியான தமிழ் அச்சுப் போட்ட விலையுயர்ந்த இந்த தமிழ்ப்புத்தகங்களைப் பிரபல்லியஞ் செய் தேன்.... நீங்கள் சாகுபடி பண்ணுகிற வைராக்கிய முண்டாகி ஒவ்வொரு கிராமத்திலேயுமிருக்கிற குடிகளெல்லாம் ஒரு வழியாயிருந்து காரியங்களை எந்தவிதத்திலாவது சாதிக்கிறதுக்கும்..... (பாயிரம்)

இவ்வகையில் தொடர்ந்து 14 வருடங்கள், மிராசு தார்களுக்கெதிராகத் தான் போராடி வருவதாகவும், மிராசு உரிமை என்று எல்லீஸ் - சங்கரய்யா ஆவணம் கூறுவது உண்மைக்கு மாறானது என்றும் இவர் வாதிடுகிறார்.  நிலங்கள் அனைத்தும் சர்க்கார் மேற்பார்வையில் இருக்கவேண்டும்; நிலங்களில் தனித்தனிப் பிரிவு இல்லாமல் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும்; பட்டா இல்லாதவர்களை அப்புறப்படுத்தாமல் அவர் களுக்கு பட்டா வழங்க வேண்டுமென்றும், முறையாகத் தீர்வை கட்டாத மிராசுகளிடமிருந்து நிலங்களை எடுத்து பாயக்காரி, உட்குடி, புறக்குடிகளிடம் கொடுக்க வேண்டும் ஆகிய பிற கோரிக்கைகளை முன்வைத்து வெங்கடாசலனார் இந்த ஆவணத்தை உருவாக்கி யுள்ளார். மிராசுதார்கள் நிலத்தைக் கையகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக அவரது ஆவணம் பின்வருமாறு பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம்.

"........ பாரம்பரியமாக வாசஞ் செய்வதினால் நிலபாத்திய முண்டெண்று இங்கிலாண்டு தேசத்தில் குடித்தனக்காரர்களுக்கு எவ்வளவு பாத்தியமில்லையோ அவ்வளவு இந்தியாவில் நிலங்களைக் கைவசப்படுத்திக் கொண்டிருக் கிறவர்களுக்கும் பாத்தியமில்லையென்று கவர்ன் மெண்டாரால் தீர்மானிக்கப்பட்டது. ஆகையால் கிராமத்தின் மிராசுயென்கிறது பரம்பரையாய் குடியிருப்பதனால் பாத்தியப்பட்ட தென்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் கவர்ன் மெண்டாரே நிலத்தின் முக்கியமான சுதந்திர கர்த்தாக்களாயிருக்கிறார்கள்..... (பத்தி: 6)

எனவே, அரசாங்கமே நிலவுரிமையைப் பெற்றிருக்க வேண்டும். நிலத்தில் குடிகள் உழுதொழில் செய்து தீர்வை செலுத்த வேண்டும். இம்முறைக்கு மாறாக மிராசு களுக்கு நிலவுரிமை என்பதும் அவர்களுக்குத் தீர்வை என்பதும் ஏற்புடையது அன்று என்பதே வெங்கடாசலனார் வாதமாக இருக்கிறது. மிராசுதார்களுக்கு நிலத்தில் எவ்வளவு பாத்தியமுண்டோ அவ்வளவு பாத்தியம் பாயக் காரிகளுக்கும் உண்டென்று தாம் நிரூபிக்கப் போவதாகவும் கூறுகிறார். (பத்தி, 12) இவ்வகையில் பாயக்காரிகளின் நிலவுரிமைக்கான ஆவணமாக வெங்கடாசலனார் ஆவணம் அமைந்துள்ளது.

தமது பந்துக்களாக வன்னியர்களைக் கருதி, அவர்களில் பள்ளிகள் எனப்படும் வன்னியர்கள் பார்ப்பனர்களுக்கு அடிமையாகச் செயல்பட்டார்கள் என்ற கூற்றையும் மறுக்கின்றார்.

"பள்ளிகள் பிராமணாளுடைய ஊழியக்காரர்களாயிருந்தாகளென்று கலெக்டர் பிளேசுதுரை சொல்லுகிறார். இதற்கு மிகுந்த பெரிய பொய் கிடையாது.... (பத்தி. 17)

ஆனால் வெள்ளாளர் பெருமை பேசும் வருண சிந்தாமணி நூல், பார்ப்பனர்களுக்குப் பள்ளிகள் அடிமை களாயிருந்தது தொடர்பான பின்வரும் செய்தியைப் பதிவுசெய்திருப்பதைக் காண்கிறோம்.

"............. 1668 வரைக்கு மேற்செல்லா நின்ற பிரபவ... ஆனி மீ 14உ சனிவார நாள் துதிகை திருவோண நட்சத்திரமுங் கூடின சுபதினத்தில் தொண்டமண்டலத்தைச் சேர்ந்த செஞ்சி ராஜ்யம் வழுதிலம்பட்டுக் காவடிக்கு வடக்கு வக்கரைக்குத் தெற்கு..... நோட்டப்பட்டிலிருக்கும் பாரிவாக்கம் மாரியப்ப முதலியாரவர்களுக்கு கருக்களாம் பாக்கத்திலிருக்கும் பள்ளிகளில், சின்னப்பயல் என்பெண்சாதி சேவி நாங்களிருவருந் நிறைய சாசன முறிகொடுத்தபடி......... இந்த வராகன் ஒன்றும், நாங்கள் பற்றிக்கொண்டு எங்கள் மகள் குழந்தையைக் கிறையமாகக் கொடுத்த படியினாலே... அநுபவித்துக் கொள்ளக் கடவீராகவும்....... சாசனமுறி கொடுத்தோம். (வருணசிந்தாமணி:453)

இவ்வகையில் பறையரின மக்களைப் போலவே பள்ளி இன மக்களும் அடிமைகளாக விற்கப்பட்டிருப் பதைக் காண்கிறோம். இதனை வெங்கடாசலனார் மறுத்து எழுதுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக இவரது குரல் இருப்பதைக் காண்கிறோம். அதன் வெளிப்பாடே இந்த ஆவணம். மிராசுதார்களுக்கு எதிரான அவரது குரல் பின்வருமாறு பதிவாகியுள்ளது.

"....... 1859ஆம் வருஷத்தில் பாயக்காரிகளுடைய வசத்திலிருக்கப்பட்ட கைபற்று நிலங்கள் அவர்கள் வசத்திலேயே இருக்க வேண்டுமென்று கவர்ன் மெண்டார் ஒரு கட்டளையிட்டார்கள். மிராசு தாரர் என்ன ஆட்சேபனைகள் சொன்ன போதிலும் பாயக்காரிகள் தங்களுடைய நிலங்களை அனாதி காலமாய் சாகுபடி செய்து கொண்டு வருகிற படியால் அந்த நிலங்களை அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று மிராசுதாரர்கள் ஏன் ஆட்சேபிக்கிறார்கள். அனேக வருஷ காலமாய் கரம்பாய் விடப்பட்டிருக்கிற நிலங்களைக் குறித்து அவர்களேன் முன்வருகிறார்கள்... (பத்தி.97)

தமது ஆவணத்தின் மூலம் வெங்கடாசலனார் முன் வைக்கும் செய்திகளைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

  •  சாதாரண குடிமக்களாகிய பாயக்காரிகள் எனப்படும் நிலத்துச் சொந்தக்காரர்களே உழவுத் தொழிலில் ஈடுபட வேண்டும். அவர்களுக்கே நிலவுரிமை வழங்க வேண்டும்.
  •  பாரம்பரியமாகப் பயன்படுத்தினார்கள் என்பதினால், மிராசுதாரர்கள் நிலத்தின் மீது உரிமை கொண்டாட முடியாது.
  •  எல்லீஸ் மற்றும் சங்கரய்யா ஆவணம் உண்மைக்குப் புறம்பானது.
  •  பிரித்தானிய நிர்வாகத்தினர் சிலர் நிலஉறவுகளைப்பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் செயல்படுகின்றனர்.
  •  வன்னியர்களுக்குரிய மன்னவேடு கிராமங்களை வெள்ளாளர்களும் பார்ப்பனர்களும் தந்திரமாகப் பறித்துக் கொண்டுள்ளார்கள்.
  •  பிரித்தானிய காலனிய அரசு, சமூக நிலைமைகளைச் சரியாகப் புரிந்து உழுகுடிகளுக்கே நிலத்தை உரிமையாக்கி அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இக்கோரிக்கைகள் சார்ந்த மிராசு பாத்தியதை என்னும் இவ்வாவணத்தை உருவாக்கியது மட்டுமின்றி 1883-85 காலச் சூழலில், குடிகளுக்கு ஏற்பட்ட துயரம் குறித்து "தத்துவ விவேசினி" இதழிலும் தொடர்ந்து எழுதினார். அப்பகுதிகள் இத்திரட்டில் இடம் பெற்றுள்ளன. அதிலும் இவ்வாவணத்தில் காணப்படும் செய்திகளைப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம்.

மேற்குறித்த இவ்விரு ஆவணங்களைப் போலவே திரமென்ஹீர் அவர்களின் "செங்கற்பட்டுப் பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள்" என்னும் ஆவணமும் முக்கியத்துவம் மிக்கது. நிலவுரிமை அற்ற பறையரின மக்கள் வாழ்க்கை எவ்வகையில் அமைந்திருக்கின்றது என்பது தொடர்பான அரிய பதிவாக அந்த ஆவணம் உள்ளது.செங்கற்பட்டு மாவட்டத்தில் நிலவுரிமை உருப்பெற்றிருக்கும் தன்மை குறித்து திரமென்ஹீர் செய்துள்ள பதிவு வருமாறு:

"விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலைபற்றி ஒரு மீள்பார்வை செய்வது நலம் பயக்கும். இவ் வமைப்பில் முதலிடம் பெறுவோர் பொதுவாகப் பிராமணர் அல்லது வெள்ளாளர்கள் ஆவார்கள். இவர்களே எல்லா நிலங்களையும் அல்லது மிக நல்ல நிலங்களைச் சொந்தமாக்கிக் கொண்ட வர்கள். அதற்கடுத்தபடியாக மிராசுதாரல்லாத பட்டாதாரர்கள், அதற்கடுத்தாற்போல் துணைக் குத்தகைக்காரர்கள். இவ்விருவகையினரும் பிராமணர், வெள்ளாளரைவிடத் தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள். இவ்வமைப்பின் கடைசிக் கோடியிலிருப்பவர்கள் பறையர்கள். இவர்களில் மிகச்சிலரே துணைக் குத்தகைக் காரர்கள், பெரும்பாலானோர்  வேளாண்மைக் கூலித் தொழிலாளர்களே யாவர் (திரமென்ஹீர் பத்தி.19:மொழியாக்கம் ஆ.சுந்தரம், 2009)

இவ்வகையில் சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்த பறையரின மக்கள் நிலத்தோடு கொண்டிருந்த உறவை அறியமுடிகிறது. இம்மக்கள் புறம்போக்கு நிலங்களைக் கையகப்படுத்திக் கொள்வதற்கும் இயலாத நிலையை மிராசுதார்கள் செய்வர். எனவே காலம் காலமாகக் குறிப் பிட்ட ஆதிக்க சாதியினருக்கு மட்டுமே நிலம் உரிமை யுடையதாக இருந்ததை அறியமுடிகிறது.
நிலமற்ற பறையரின மக்களுக்கு,அடிமைமுறை ஒழிக்கப்பட்டுச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், மறைமுக அடிமைமுறை நடைமுறையில் இருந்தது. முறி ஓலை எழுதிக்கொடுப்பதை வழக்கமாக ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டிருந்தனர்.

"படியாள் முறை" என்பதன் மூலம் அடிமைப்படுத்தப் பட்டார்கள். தந்தை வாங்கிய கடனுக்காக, அக்குடும்பம் தொடர்ந்து காலம் காலமாக அடிமையாகப் பண்ணையாருக்கு உழைக்க வேண்டும். "அடமானம்" வைத்துக் கொள்ளும் முறையாக அது செயல்பட்டது. மிராசுதாரர்களிடம் இவர்கள் செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள் மூலம் வாழ்நாள் முழுவதும் அடிமையாக வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். தாங்கள் அடிமையாக வாழுகிறோம் என்ற உணர்வற்றவர் களாகவே அந்த மக்கள் வாழ்ந்தனர். இத்தன்மையை மிராசுதாரர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.

பறையர்கள் மீது கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமை அவர்கள் எவ்விதம் உரிமை அற்றவர்களாக வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. பறச்சேரி பகுதிகளுக்கு அரசு அலுவலர்கள் செல்வதில்லை. இதன் மூலம் அவர்களைப் பற்றிய குறிப்புகள் என்பவை அரசாங்கப் பதிவேடுகளில் வெறும் ஊகங்களாகவே பதிவு செய்யப்பட்டன. அவர்கள் வாழும் இடம் அவர் களுக்கு உரிமை இல்லாது இருந்தது. மிராசுதாரர்கள் தங்களுடைய நிலத்தை இன்னொருவருக்கு விற்பனை செய்யும்போது பறச்சேரியையும் சேர்த்து எழுதிக் கொடுத்திருப்பதை ஆவணங்களில் காண முடிகிறது. வழக்குமன்றம் செயல்படுவது குறித்தோ, அதில் தாங்கள் வழக்கு தொடுக்க இயலும் என்பது குறித்தோ எவ் விதமான அடிப்படைப் புரிதலும் பறையரின மக்களுக்கு இல்லை. இவர்கள் வழக்குப் பதிவு செய்யாமல் இருக்கும் முறையைப் பண்பாட்டு ரீதியாகவே மிராசுதார்கள் நடைமுறைப்படுத்தினார்கள். இவ்வகையில் நிலம், வீடு என்ற எவ்வித அடிப்படைச் சொத்தும் இல்லாதவர் களாகவே பறையர் மக்கள் வாழ்ந்ததைக் காணமுடிகிறது.

சொத்து அற்ற மனநிலையில், குடிபெயர்தல் என்பதை இம்மக்கள் இயல்பாகவே மேற்கொண்டனர். தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிரித்தானி யர்கள் புதிதாக உருவாக்கிய தோட்டத் தொழிலுக்கு இம்மக்களை அழைத்துச் செல்லும் முறை உருவானது. அடிப்படைச் சொத்தற்ற மனநிலை மற்றும் தீண்டாமைக் கொடுமை ஆகியவற்றைக் கொண்டிருந்த மக்கள் குடி பெயர்தல் என்பதை உளவியல் ரீதியாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டனர். கூலி - ஒப்பந்த அடிமைகளாக, இரப்பர் தோட்டங்கள் தேயிலை - காபி தோட்டங்கள் என்று இலங்கை, மலேசியா, பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடு களுக்கும் பல்வேறு தீவுகளுக்கும் அழைத்துச் செல்லப் பட்டனர். ஒப்பந்தக் கூலிகளாகக் குடிபெயர்ந்தோரில் 95 விழுக்காடு பறையரின மக்களே என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம்.

திரமென்ஹீர் ஆவணத்தின்படி, செங்கற்பட்டு பறையரின மக்கள் நிலமற்ற கூலித் தொழிலாளர்களாக வாழ்வதும், அதன் விளைவாகக் குடிபெயர்வதும், நடை முறையில் இருந்ததை அறிகிறோம். இம்மக்களுக்கு நிலங்களைப் பட்டா போட்டுத் தரவேண்டும் என்று அவரது கோரிக்கையாக இருந்தது. இந்தப் பின்புலத்தில் ஒடுக்கப்பட்டோருக்கான நில ஒதுக்கீடு (Depressed class land) என்பதும் பிரித்தானிய ஆட்சியாளர்களால் செய்யப்பட்டது. இது பஞ்சமி நிலம் என்று இன்று அழைக்கப்படுகிறது. இவ்விதம் ஒதுக்கப்பட்டவற்றையும் அவர்கள் தொடர்ந்து அநுபவிக்கவில்லை என்பதும் வரலாறு. அந்த நிலங்களும் பிற்காலங்களில் மிராசு தாரர்களாலும் அரசு அதிகாரிகளாலும் பறிக்கப் பட்டதை அறிகிறோம்.

மேற்குறித்த மூன்று ஆவணங்களும் ஒரு குறிப் பிட்ட பகுதியில் இருந்த நிலஉறவு தொடர்பான தன்மை களை வெளிப்படுத்துகின்றன. இவற்றின் மூலம் பெறக் கூடிய கருத்துநிலைகளைப் பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்ள முடியும். 

  • பிரித்தானியர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டதும், நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த ஆய்வில் ஈடுபடத் தொடங்கினர். நிலம் யாருக்கு  உரிமை என்பதை வரையறை செய்வதின் மூலம், வருவாய் எப்படிப் பெறமுடியும்? என்பதை விவாதத்திற்கு உட் படுத்தினர். இதன் விளைவாகவே காலம் காலமாக நடைமுறையில் இருந்து வந்த "மிராசு" எனும் நில உரிமை குறித்த ஆவணத்தை உருவாக்கினர். இந்த ஆவணம், வெள்ளாளர், அகமுடையர், பார்ப்பனர் என்னும் ஆதிக்க சாதியினருக்கே நிலம் உரிமை உடையது. அவர்களே மிராசு உரிமை பெற்ற அல்லது நிலஉரிமை பெற்ற மிராசுதாரர்கள் என்ற முடிவுக்கு வந்தனர்.  மிராசு மரபோடு தொடர் புடைய ரயத்துவாரி, ஜெமீன்தாரி ஆகிய பிற தொடர்பான விவாதங்களும் உருவாயின. பிரித்தானிய அதிகாரிகள் நிலஉறவு குறித்த பல் வேறு கருத்துநிலைகளை முன்வைத்தனர். "பதினேழு கேள்விகளுக்கான பதில்" எனும் சங்கரய்யா உதவியுடன் எல்லீஸ் தயாரித்த ஆவணம் மேற்குறித்தப் பல்வேறு உரையாடல் களுக்கு வழிவகுக்கும் போக்கில் அமைந்திருப் பதைக் காண்கிறோம்.
  • அத்திப்பாக்கம் அ.வெங்கடசலனார் உருவாக்கிய "மிராசு பாக்கியதை" குறித்து உரையாடும் "மிராசு தார்களுக்கும் பாயக்காரிகளுக்கும் உண்டா யிருக்கிற விவாதம்" எனும் ஆவணம், மேற்குறித்த சங்கரய்யா எல்லீஸ் ஆவணத்தை மறுதலிக்கிறது. "பாயக்காரிகள்" எனப்படும் நிலத்தில் உழுதொழில் செய்யும் உழுகுடிகளுக்கே நிலம் உரியது என்னும் விவாதத்தை முன்வைக்கிறார். "பாயக் காரிகள்" என்பவர்கள் வன்னியர் அல்லது பள்ளிகள் என்னும் சாதியைச் சேர்ந்த மக்கள் என்றும் வரை யறை செய்கிறார்கள். அவர்களுக்குரிய நிலம் பார்ப்பார் மற்றும் வெள்ளாளர் ஆதிக்கத்தில் இருப் பதாகக் கருதுகிறார். இந்த நிலங்களை ஆளும் அரசாங்கமே எடுத்துக்கொண்டு, பாயக்காரிகள் உழுதொழில் செய்ய அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் அரசாங்கத்திற்கு மிகுதியான தீர்வை  வருவாய் கிடைக்கும் என்கிறார்.
  •  அரசாங்கத்திடம் முறையிடுவதன் மூலம் ஏழை வன்னிய மக்களுக்கு உரிய நிலம் கிடைக்கும் என்று நம்புகிறார். காலம் காலமாக அந்த நிலங்கள் அவர்களுக்கே உரியது என்கிறார். பள்ளிகள் என்போர் ஒடுக்கப்பட்ட அடிமைகளாக வாழ்ந்தனர் என்பதை மறுக்கிறார். அரச பரம்பரையினராக வன்னிய சாதியை மேல் நிலை ஆக்க மன நிலையில், இவர் உரையாடுவதைக் காண முடிகிறது. ஒடுக்கப்பட்ட வன்னிய மக்களுக்கான போராளியாக இவர் செயல்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
  • "செங்கற்பட்டு பறையரினம் பற்றிய குறிப்புகள்" எனும் திரமென்ஹீர் ஆவணம், அம்மக்கள் நிலவுரிமை அற்றவர்களாக எப்படி ஆக்கப்படு கிறார்கள் என்பதை பொருளாதார - பண்பாட்டுக் கண்ணோட்டத்தில் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். நிலத்தில் வாழும், அந்நிலத்தில் உழைக்கும் அந்த மக்களுக்கே நிலம் உரிமை எனும் விவாதத்தை முன்வைக்கிறார். மேற்குறித்த இரு ஆவணங்களிலும் விரிவாகப் பேசப்படாத மக்களைப் பற்றி இவர் விரிவாகப் பேசுகிறார். புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பறையரின மக்களின் விடுதலைக்கான பதிவுகளை இந்த ஆவணத்தின் மூலம் பெறமுடிகிறது.

மூன்று ஆவணங்களையும் வாசித்ததின் ஊடாக ஒரு குறிப்பிட்ட பகுதி வாழ் மக்கள், அவர்களது நில உறவு, குறிப்பாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர் களிடையே இருந்த நிலஉறவு குறித்த உரையாடலை மேலே முன்வைத்துள்ளேன். இந்த நிலஉறவு இன்று மாற்றம் பெற்றிருப்பதன் தன்மைகளை இதன் தொடர்ச்சியாக உரையாடலுக்கு உட்படுத்த வேண்டும். ஆதிக்கச் சாதியிடம் இருந்த நிலம், ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் இன்று கை மாறியுள்ளதா? என்ற வினாவை முன்னிருத்த வேண்டும். இதன் மூலம் செங்கற்பட்டு பகுதி நில உறவுத் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள நிலஉறவுத் தன்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கான உரையாடலாகவே இவ்வாவணங்கள் குறித்த உரையாடல் அமைகிறது.

ஆதாரங்கள்

 Ellis.F.W Replies to seventeen questions proposed by the Government of Fort.St.George relative to ‘Mirsi Right” with two appendices, Elucidatory of the subject printed at the Govt Gazette office Madras A.D.1818 (Digitized by Google)இந்த ஆவணத்தை கொடுத்துதவிய ஆய்வாளர் ர.குமார் அவர்களுக்கு நன்றி.

வெங்கடாசல நாயகர், அ., பாயக்காரிகளுக்கும் மிராசு தாரர்களுக்கும் உண்டாயிருக்கிற விவாதம், 1872 (பதிப்பு:க.ரத்னம், ஐந்திணைப் பதிப்பகம், 2000)

திரமென்ஹீர், செங்கல்பட்டு பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள், அரசு துணை எண் (வருவாய்த்துறை) 1010, 1892 (பஞ்சமி நிலஉரிமை: தமிழில் ஆ.சுந்தரம், தொகுப்பு. வே.அலெக்ஸ், எழுத்து, 2009)

துணை ஆதாரங்கள்

ஆரோக்கிய மணிராஜ், ச.,முருகேசன்,ப., பஞ்சமி நில மீட்பு - சட்டநடைமுறைக் கையேடு, அனித்ரா அறக்கட்டளை, சித்தூர், 2006.

கனகசபைப்பிள்ளை, கூடலூர்., வருணசிந்தாமணி, 1925. (இரண்டாம் பதிப்பு)

காளிமுத்து, ஏ.கே., தமிழகத்தில் காலனியமும் வேளாண் குடிகளும் (1801 - 1947)ஒரு சமூகப் பொருளியல் பார்வை. பாரதி புத்தகாலயம், 2012

ஜெயராஜ் வார்க்கீஸ், தமிழ்நாட்டில் ஜமீன்தாரி முறை, தமிழில் யூசுப் ராஜா, பாவை பப்ளிகேஷன்ஸ், 2010

Bandopadhyay Arun The Agrarian Economy of Tamilnadu, (1820 - 1855) K.P.Bagchi company, Calcutta (Dept.of.History, Uni.Of. Calcutta Monograph 4) 1992

Dutt, Romeshchunder, The Economic History of India(Two Volumes) Publication Division, Govt of India, Fifth reprint 2006

Irsehick Euqene, Dialogue and history constructing South India 1795-1895 University of California Press, London - 1994

Olcott Henry. S. The poor pariah, Theosophical Society, 1902

Raju, Sarada Economic conditions of Madras Presidency 1800-1850 University of Madras - 1941

Yanagisawa, Haruka A century of change caste and irrigated Lands in Tamilnadu 1860s-1970s, Monohar,1996

Pin It