மொழிபெயர்ப்பு என்பது தமிழர்களுக்குப் புதிதல்ல; அது அவர்களுடைய பழைய கலைகளுள் ஒன்று. தமிழில் மொழிபெயர்ப்புச் சிந்தனை தொல்காப்பியர் காலந்தொட்டுக் காணப்படுகின்றது. மொழிபெயர்ப்பைத் தொல்காப்பியர் ‘அதர்ப்பட யாத்தல்' என்கிறார். அக்காலத்தில் மொழிபெயர்ப்பானது இந்தியத் துணைக் கண்டத்தின் தொன்மையான இலக்கிய வளமிக்க மொழிகளாகிய தமிழ், பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகியவற்றுக்கிடையே அமைந்திருந்தது. பிற இந்திய மொழிகள் இலக்கிய வளம் பெற்ற பின்னர் அம்மொழிகளில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் நடந்தேறின.
கி.பி.பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவின் பெரும்பகுதி, ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்குள் வந்தபோது தமிழகத்தில் ஆங்கிலக் கல்வியும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஐரோப்பாவிலிருந்து தம் சமயத்தைப் பரப்புவதற்காகத் தமிழகத்துக்கு வந்த ஐரோப்பியர்கள் தமிழைக் கற்றனர். தமிழ் இலக்கியங்கள்பால் ஆர்வம் கொண்டனர். இதன் பின்னர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்ற இரு தரப்பினர்களும் தமிழிலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குறிப்பாக, சங்க இலக்கியம், திருக்குறள், பக்தி இலக்கியங்கள் ஆகியன மொழிபெயர்க்கப்பட்டன.
அன்று தொடங்கி இன்று வரை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், பிறமொழியாளர்கள் என்னும் இருதரப்பினர்களும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். இது புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. பாக்களின் அடிவரையறைகள் 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன. புறநானூற்றின் பாடல்கள் சங்க காலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைக்கின்றன. அதனால் புறநானூற்றின் கவிச்சுவையைக் கருதி ஏ.கே இராமானுஜம், ஜி.யு. போப், பேரா.பொன்னையா, ஜார்ஜ் எல். ஹார்ட், மாதவ மேனன் போன்ற அறிஞர்கள் எல்லாம் புறநானூற்றை ஆர்வமுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். இவற்றுள் ஜார்ஜ் எல். ஹார்ட் மாதவ மேனன், அகிய இருவடைய மொழிபெயர்ப்புகள் மட்டும் இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
புறநானூற்றில் அதியமான் நெடுமான் அஞ்சி பற்றி,
"களம்புகல் ஓம்புமின் தெவ்வீர்; போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே' (புறம் 87)
எனும் பாடலை இருவருடைய மொழிபெயர்ப்புகளின் வழி கீழ்க்காணும் பட்டியல் வழி ஒப்பிட்டுக் காட்டப்படுகிறது.
|
புறநானூறு 87 (பாடல் மூலம்) |
ஜார்ஜ் எல். ஹார்ட் (மொழிபெயர்ப்பு) |
மாதவ மேனன் (மொழிபெயர்ப்பு) |
|
களம்புகல் ஓம்புமின் தெவ்வீர் போர் எதிர்ந்து |
You our enemies! Think twice before you come on to the field |
Beware our enemies, before you enter the battlefield against us! |
|
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல் |
We have a warrior among us who will go against you in battle |
We have an extraordinary hero with us. |
|
எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் அன்னோனே |
He is like a wheel fashioned with great care over a month by a craftsman who creates eight chariots a day |
He is like a wheel over which an (Expert) carpenter, who can turn out eight chariots a day. Has taken a month to perfect. |
இப்பாடல் தும்பைத் திணையிலும், தானை மறத்துறையிலும் பாடப்பட்ட பாடலாகும். மேலும் இப்பாடலைப் பாடிய புலவர், பாடப்பட்ட அரசன், பாடல் எழுந்த சூழல் குறித்த செய்திகளை எல்லாம் ஜார்ஜ் எல். ஹார்ட், மாதவ் மேனன் ஆகிய இருவருமே தங்களுடைய மொழிபெயர்ப்புகளில் சிறுகுறிப்பாக நல்கியுள்ளனர்.
ஜார்ஜ் எல். ஹார்ட் மொழிபெயர்ப்பில் இப்பாடலுக்கு என்று தனியாகத் தலைப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
மாதவ மேனன் தம்முடைய மொழிபெயர்ப்பில் பாடலில் அமைந்த சிறந்த தொடரைத் தலைப்பாக்கியுள்ளார். மேலும் இப்பாடலை 'Our Hero' என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.
"களம்புகல் ஓம்புமின் தெவ்வீர் போர் எதிர்ந்து' என்பதன் பொருள் பகைவர்களைப் பகைப்புலத்தில் நேரடியாகச் சந்தித்து அவர்களுக்கு நேரடியாக விடும் எச்சரிக்கையாக இருக்கிறது. ஜார்ஜ் எல்.ஹார்ட் You, our enemies! Think twice before you come on to the field என்றும், மாதவமேனன் - Beware, our enemies before you enter the battlefield against us என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.
இப்பாடல் அடியைப் பொருத்தவரை ஜார்ஜ் எல். ஹார்ட், மாதவ மேனன் இருவருமே தங்களது மொழிபெயர்ப்பில் அதியமான் நெடுமான் அஞ்சியின் வீரத்தைப் பற்றிய செய்தியை மூலமொழியில் உள்ளதைப் போன்று பெறுமொழியிலும் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளனர் என்றே கூற வேண்டும். ஏனென்றால், ஜார்ஜ் எல். ஹார்ட் இப்பாடல் அடியின் மொழிபெயர்ப்பில் Think Twice' என்கின்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். அதன் பொருள் எதிரிகளைப் பார்த்து, 'ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து விட்டுப் படைக்களத்திற்கு வாருங்கள்' என்பதாக ஜார்ஜ் எல்.ஹார்ட், மொழிபெயர்த்துள்ளார். மாதவ மேனன் தம்முடைய மொழிபெயர்ப்பில் 'Beware' என்ற சொல்லைக் கொண்டுதான் தொடரையே தொடங்குகிறார். அதாவது, எதிரிகளைப் பார்த்து எச்சரிக்கை செய்யும் விதமாக மாதவ மேனனின் மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது. அந்த வகையில், இருவருமே மூலமொழியில் உள்ள பாடல் அடியின் செய்தியைப் பெறுமொழியில் பொருள் வேற்றுமை கொள்ளாமல் மொழிபெயர்த்துள்ளனர்.
'எம்முளும் உளன் ஒரு பொருநன்' என்பதை ஜார்ஜ் எல். ஹார்ட் - We have a warrior among us who will go against you in battle என்றும், மாதவ மேனன் - We have an extraordinary hero with us என்றும் மொழிபெயர்த்துள்ளனர். இதில் மூலமொழியில் உள்ள பாடல் அடியின் பொருளானது எங்களிடமும் ஓர் ஒப்பற்ற மாவீரன் இருக்கிறான் என்பதாகும். ஜார்ஜ் எல். ஹார்ட் தம்முடைய மொழிபெயர்ப்பில் ஓர் ஒப்பற்ற மாவீரன் என்பதற்கு 'Warrior' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். மாதவ மேனன் தம்முடைய மொழிபெயர்ப்பில் 'Extraordinary hero' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.
இப்பாடல் அடியைப் பொருத்தவரை ஜார்ஜ் எல். ஹார்ட், மாதவ மேனன் எனும் இருவருமே மூலமொழியில் உள்ள சொல்லுக்கு இணையான சொல்லைப் பெறுமொழியிலும் வழங்கி இருக்கிறார்கள். இதுபோன்ற மொழிபெயர்ப்புகள் இருவரின் மொழிபெயர்ப்பு நுட்பத்தையும் அனுபவத்தையுமே காட்டுகின்றன.
"வைகல் எண் தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த காலன் னோனே' என அறிமுகம் செய்யும் ஒளவையாரின் இந்தத் தொடரில் அழகிய இலக்கிய நுட்பங்கள் இருக்கின்றன.
ஒரு நாளைக்கு எட்டுத் தேர்களைச் செய்யக் கூடிய தச்சன் சாதாரணமானவனாக இருக்க முடியுமா? அவன் கைவினை முற்றிய கலைஞனாகத் தானே இருக்க முடியும் என்பதை, ஜார்ஜ் எல். ஹார்ட் He is like a wheel fashioned with great care over a month by a craftsman who creates eight chariots a day என்றும், மாதவமேனன் - He is like a wheel over which an (Expert) carpenter, who can turn out eight chariots a day. Has taken a month to perfect என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.
இருவருமே தங்களுடைய மொழிபெயர்ப்பில் மூலமொழியில் ஔவை உணர்த்திய செய்தியை அதே தன்மையில் பொருள் வேற்றுமை இல்லாமல் பெறுமொழியிலும் உணர்த்தி இருப்பது ஜார்ஜ் எல் ஹார்ட், மாதவமேனன் ஆகியோர் இருவருமே இருமொழிகளிலும் திட்பநுட்பம் வாய்ந்தவர்கள்; என்பதைக் காட்டுகின்றது.
வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல்? என்னறி யலன் கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறார்அர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே;
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!
(புறம். 206)
|
புறநானூறு 206 (பாடல் மூலம்) |
ஜார்ஜ் எல். ஹார்ட் (மொழிபெயர்ப்பு) |
மாதவ மேனன் (மொழிபெயர்ப்பு) |
|
வாயி லோயே! வாயி லோயே! |
You who are the gate keeper! |
O you guard at the gate |
|
வள்ளியோர் செவிமுதல் வயங்கு மொழி வித்தித்தாம் உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க்கு அடையா வாயி லோயே! |
Gate keeper who never closes the gate against those who come here in need, leading this life of pleading to sow shining words in the ears of the generous and so to gain what they wish for with their strong urges and anguished concern for dignity |
We are people who are capable of sowing glowing words in the ears of the liberal minded, and reaping what we want we strive after excellence! And we support ourselves on what we get as gifts you who will not shut the gates against such as we are |
|
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி தன் அறியலன்கொல்? என்னறி யலன் கொல்? |
Does the lord netuman anchi whose horses are swift not know himself or not know me? |
Does not netuman anchi owner of swift horses, know who he is? And does he not know who I am? |
|
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென வறுந்தலை உலகமும் அன்றே! அதனால் காவினெம்! கலனே; சுருக்கினெம் கலப்பை; |
This is no empty world and all the wise and famous men are not dead. And so we will swing our ornaments. On to our shoulder's and pack up our instruments in their cases |
This world is not impoverished head by the death of all well know and famous people so, I shall pack up all our pots and pans and bundle up our odds and ends |
|
மரங்கொல் தச்சன் வைகல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து அற்றே; |
Like the children of a carpenter who cuts trees, their hand skilled at wielding the ax when they roam the deep forest |
We are like the children of a carpenter who have axes in their skilled hands and are in the jungle |
|
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே! |
Whether we go this way or whether we go that way, we will have rice |
Wherever we go we shall be able to get the rice - food of that region |
இப்பாடல் 'பாடாண்திணையிலும், பரிசில்துறையிலும் பாடப்பட்ட பாடலாகும். மேலும் இப்பாடலைப் பாடிய புலவர், பாடப்பட்ட அரசன், பாடல் எழுந்த சூழல் குறித்த செய்திகளை எல்லாம் ஜார்ஜ் எல்.ஹார்ட், மாதவ மேனன் இருவருமே தங்களுடைய மொழிபெயர்ப்புகளில் சிறுகுறிப்பாக நல்கியுள்ளனர்.
ஜார்ஜ் எல்.ஹார்ட் மொழிபெயர்ப்பில் இப்பாடலுக்கு என்று தனியாகத் தலைப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
மாதவ மேனன் மொழிபெயர்ப்பில் பாடலில் அமைந்த சிறந்த தொடரைத் தலைப்பாக்கியுள்ளார். மேலும் 'Wherever we go, we get fed' என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.
'வாயி லோயே! வாயி லோயே! என்பதை ஜார்ஜ் எல். ஹார்ட் - You who are the gate keeper! You who are the gate keeper! என்றும், மாதவ மேனன் - O you guard at the gate என்றும் மொழிபெயர்த்துள்ளனர். இதில் மூலமொழியில் உள்ள பாடல் அடியின் பொருளானது வாயிலோயே! வாயிலோயே! என விளித்து வாயிற்காப்பாளனிடம் ஒளவையார் பேசுவது அவரின் கோபாவேசத்தையும் அவரின் அழுத்தம் திருத்தமான பேச்சையும் வெளிப்படுத்துகிறது என்பதாகப் பாடல் அடியின் பொருள் அமைந்துள்ளது. இதனை ஜார்ஜ் எல். ஹார்ட், மாதவ மேனன் இருவருமே தங்களுடைய மொழிபெயர்ப்பில் பொருள் வேற்றுமை கொள்ளாமல் மொழிபெயர்த்துள்ளனர். இருமொழி வாசகர்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம் எளிய ஆங்கிலத்திலே மொழிபெயர்த்துள்ளனர்.
வள்ளியோர் செவிமுதல் வயங்கு மொழி வித்தித்தாம் உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க்கு அடையா வாயிலோயே! என்பதை ஜார்ஜ் எல். ஹார்ட் - Gate keeper who never closes the gate against those who come here in need, leading this life of pleading to sow shining word in the ears of the generous and so to gain what they wish for with their strong urges and anguished concern for dignity என்றும், மாதவ மேனன் - We are people who are capable of sowing glowing words in the ears of the liberal minded, and reaping what we strive after excellence; and we support ourselves on what we get as gifts you who will not shut the gates against such as we are என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.
இதில் ஒளவையார், 'பரிசில் நாடி வருபவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர்; அவர்கள் சொல்லேருழவர்கள். அவர்கள் தங்கள் சொற்களாகிய விதைகளை வள்ளல்களின் செவிகளாகிய நிலத்தில் விதைத்துப் பரிசுகளாகிய நெல்லை விளைவித்து, தாங்கள் நினைத்த பரிசிலைப் பெறக் கூடியவர்கள்', எனும் கருத்தினை அழகாக வெளிப்படுத்துகிறார். இதுவே மூலமொழியில் உள்ள பாடல் அடியின் பொருளாக அமைந்துள்ளது. இப்பாடல் அடியின் மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை, ஜார்ஜ் எல்.ஹார்ட்டின் மொழிபெயர்ப்பில் அமைந்துள்ள செறிவும் சுவையும், மாதவ மேனனின் மொழிபெயர்ப்பில் காணப்படவில்லை என்பது இருமொழிபெயர்ப்புகளையும் ஒப்புநோக்கும் போது புலனாகிறது.
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி தன் அறியலன் கொல்? என்னறி யலன் கொல்? என்பதை ஜார்ஜ் எல்.ஹார்ட் - Does the lord netuman anchi whose horses are swift not know me? என்றும், மாதவ மேனன் - Does not netuman anchi owner of swift horses, know who he is? And does he not know who I am? என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.
மூலமொழியில் உள்ள பாடல் அடியின் பொருளானது விரைந்து குதிரையைச் செலுத்தும் அதியமான் நெடுமான் அஞ்சி தன்னுடைய தரத்தை அறியாதவனா? இல்லை, என்னுடைய தரத்தை அறியாதவனா? என்பதாக அமைந்துள்ளது.
இதை ஜார்ஜ் எல். ஹார்ட், மாதவ மேனன் ஆகிய இருவருமே தங்களுடைய மொழிபெயர்ப்பில் வினா தொடுக்கும் விதமாகவே மொழிபெயர்த்திருப்பதை அறியும்போது மூலமொழியில் உள்ள பாடல் அடியின் செய்தியைப் பெறுமொழியில் நன்கு உணர்ந்து மொழிபெயர்த்துள்ளனர் என்பது புலனாகிறது.
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென வறுந்தலை உலகமும் அன்றே; அதனால் காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை என்பதை ஜார்ஜ் எல். ஹார்ட் - This is no empty world and all the wise and famous men are not dead and so we will swing our ornaments on to our shoulders and pack up our instruments in their cases என்றும், மாதவ மேனன் This world is not impoverished by the death of all well-known and famous people so, I shall pack up our pots and pans and bundle up our odds and ends என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.
இதில் மூலமொழியில் உள்ள பாடல் அடியின் பொருளானது, 'அறிவும் திறமும் புகழும் உடைய வேள்பாரி முதலிய வள்ளல்கள் இறந்து போனதால் இவ்வுலகம் முற்றும் முழுவதுமாக இல்லாமல் போய்விடவில்லை. ஆகவே நாங்கள் எங்களுடைய இசைக் கருவிகளை வைத்திருக்கும் பைகளை எடுத்துக் கொண்டு மூட்டை முடிச்சுகளோடு வெளியேறுகிறோம்' என்பதாக அமைந்துள்ளது.
இப்பாடல் அடியின் மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை ஜார்ஜ் எல். ஹார்ட், மாதவ மேனன் ஆகிய இருவருமே தங்களுடைய மொழிபெயர்ப்பில் மூலமொழியில் ஒளவையார் எந்தத் தன்மையில் பாடல் அடியின் செய்தியை உணர்த்துகிறாரோ அதேபோல் பெறுமொழியிலும் ஒளவை உணர்த்திய செய்தியைப் பொருள் குன்றாமல் மொழிபெயர்த்திருப்பது பாராட்டிற்குரியதாகும்.
மரங்கொல் தச்சன் வைகல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து அற்றே என்பதை ஜார்ஜ் எல்.ஹார்ட் Like the children of a carpenter who cuts, trees, their hand skilled at wielding the axes when they roam the deep forest என்றும், மாதவ மேனன் We are like the children of a carpenter who have axes in their skilled hands and are in the jungle என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.
இதில் மூலமொழியில் உள்ள பாடல் அடியின் பொருளானது தச்சனின் கைத்தொழில் வல்ல பிள்ளைகள் காட்டுக்குச் சென்றால் மரங்கள் கிடைக்காமல் போகுமா என்பதைப் பெறுமொழியில் மிகவும் சுருக்கமாக எளிதில் புரியும் வண்ணம் மொழிபெயர்த்துள்ளனர்.
எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே! என்பதை ஜார்ஜ் எல். ஹார்ட் Wheather we go this way or wheather we go that way, we will have rice என்றும், மாதவ மேனன் Wherever we go we shall able to get the rice food of that region என்றும் மொழிபெயர்த்துள்ளனர். இப்பாடல் அடியின் பொருளானது, 'நாங்கள் எந்தத் திசையில் சென்றாலும் அங்கு சோறு கிடைக்காமலா போகும்? சோறொன்றே யான் வேண்டுவது என நினைத்து எனக்கு விடை தராமல் காலந்தாழ்த்துவது மதிப்புடையதன்று' எனும் பொருள்பட ஒளவையார் வாயிற் காப்பாளனிடம் பேசுகிறார் என்பதாக அமைந்துள்ளது. இப்பாடல் அடியின் மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை ஜார்ஜ் எல். ஹார்ட், மாதவ மேனன் இருவருமே தங்களுடைய மொழிபெயர்ப்பில் எளிய ஆங்கிலத்திலே தொடரை அமைத்து மொழிபெயர்த்திருப்பது மூலமொழியில் உள்ள செறிவும் சுவையும் பெறுமொழியிலும் பிரதிபலிக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது.
ஜார்ஜ் எல். ஹார்ட் மொழிபெயர்ப்பில் இப்பாடலுக்குக் கீழ் எவ்வித அடிக்குறிப்பினையும் நல்கவில்லை.
மாதவ மேனன் மொழிபெயர்ப்பில் இப்பாடலுக்குக் கீழ் பின்வரும் அடிக்குறிப்பினைத் தந்துள்ளார் (The note of defiance is in the simile of the young carpenters out with axes in the forest. Like them, the bards are also skilled as crafts men with their compositions, and have been additionally well - trained and equipped. The young carpenters are in the wide jungle, where they cut what trees they please for their livelihood. Similarly, they are welcome, and are sure to be rewarded. So they are not bothered about the anchi's gateman.)
முடிவுரை
சங்க இலக்கியத்தின் நயங்களை மொழி பெயர்க்கவியலாது என்று பல மொழிபெயர்ப்பு அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் அதையும் தாண்டி புறநானூற்று மொழிபெயர்ப்பைத் தங்களால் இயன்ற அளவிற்குப் பாடலின் நயங்களை ஜார்ஜ் எல். ஹார்ட், மாதவ மேனன் போன்ற சங்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்ப்புகளின் வாயிலாக இருமொழி வாசகர்களும் பயன் அடையும் வண்ணம் மொழிபெயர்த்துள்ளனர். அதிலும், மாதவ மேனனின் மொழிபெயர்ப்புகள் அடிக்குறிப்பின் துணையோடு விளக்கமாக அமைந்துள்ளன.
இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருமொழிப் புலமையுடன் இருமொழிகளின் கட்டமைப்பு விதிகள், சொல்லாக்க, வடிவமைவுகள், ஒலிமரபுகள், நாகரிகப் பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றைப் பற்றிய அறிவும் இன்றியமையாததாகின்றது. மேலும் ஜார்ஜ் எல்.ஹார்ட், மாதவ மேனன் போன்ற இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் பரந்துபட்ட வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டவர்களாகவும், விடாமுயற்சி உடையவர்களாகவும், அகராதி, கலைக்களஞ்சியங்கள் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவும் இருந்த காரணத்தினால் தான், அவர்களால் இவ்வாறு சிறந்த முறையில் புறநானூற்றை மொழிபெயர்க்க முடிந்துள்ளது.
சங்க இலக்கியப் பாடல்களை மொழிபெயர்க்குங்கால் மொழிபெயர்ப்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு முறையினைக் கையாண்டிருப்பினும், திணைக் குறிப்புடன் கூடிய மொழிபெயர்ப்புகள் வாசகர்களுக்குத் தெளிவினைத் தருவனவாக அமைந்துள்ளமையைக் காணமுடிகிறது. அந்த வகையில், இருவருமே தங்களின் மொழிபெயர்ப்பில் திணைக்குறிப்புடன் கூடிய மொழிபெயர்ப்பைத்தான் வழங்கி இருக்கின்றனர். அதே போல் கருப்பொருட்களை ஜார்ஜ் எல். ஹார்ட், மாதவ மேனன் இருவருமே தங்களின் மொழிபெயர்ப்பில் பொருள் தெளிவிற்காக ஒலிபெயர்ப்பு செய்துள்ளனர்.
ஜார்ஜ் எல். ஹார்ட் தம் மொழிபெயர்ப்பில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 'சங்க இலக்கியச் செய்யுட்களனைத்திலும் பாடலாசிரியரின் பெயர், பாடலுக்கான சூழல் ஆகியவற்றை விளக்குகின்ற சிறிய தொடர் காணப்படுகின்றது. இத்தொடர்கள் தேவைக்கு அதிகமான செய்திகளைத் தருவதாகவும் பாடலின் மீது தேவையற்ற வரையறைகளைத் திணிப்பதாகவும் அமைந்துள்ளன. அதனால்தான், புறநானூற்றைப் பொருத்த அளவில் அனைத்துச் செய்திகளையும் குறிப்புகளையும் முழுமையாகத் தந்துள்ளேன்' என்று குறிப்பிடுகின்றார். ஜார்ஜ் எல். ஹார்ட் புறநானூற்றை மொழிபெயர்க்கையில் பாடலின் சிறந்த தொடர் என்று குறிப்பிட்டு, பாடலுக்கு என்று தனியாக எந்தத் தலைப்பையும் வழங்கவில்லை. மேலும், பாடலின் மொழிபெயர்ப்பிற்குப் பின் பாடிய புலவர் மற்றும் பாடல் குறித்த சிறுகுறிப்பினை நல்கியுள்ளார்.
மாதவ மேனன் அவர்கள் புறநானூற்றை மொழிபெயர்க்கையில் பாடலின் சிறந்த தொடரைத் தலைப்பாக்கியுள்ளார். சான்றாக, களம்புகல் ஓம்புமின் என்ற பாடலை 'Our Hero' என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் பாடலின் மொழிபெயர்ப்பிற்கு முன் பாடிய புலவர் மற்றும் பாடல் குறித்த சிறுகுறிப்பினை நல்கியுள்ளார்.
ஜார்ஜ் எல்.ஹார்ட் மொழிபெயர்ப்பில் மூலமொழியில் உள்ள பாடலைப் பொருள் தெளிவிற்காக எந்த விதமான எழுத்துப் பெயர்ப்பும் செய்யவில்லை. ஆனால், மாதவ மேனன், மொழிபெயர்ப்பில் மூலமொழியில் உள்ள பாடலைப் பொருள் தெளிவிற்காக எழுத்துப் பெயர்ப்பு செய்துள்ளார். சான்றாக,
Kalam pukal ompumin tevvir por etirntu Emmulum ulan oru porunan vaikal Enter ceyyum taccan Tinkal valitta kal annone என்று ஒலிபெயர்ப்பு செய்துள்ளார்.
இதுபோன்ற ஒலிபெயர்ப்புகள் பிறமொழி வாசகர்களுக்கு மிகவும் பயன்தரும் வகையில் உள்ளன என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அவ்வகையில், புறநானூற்றுப் பாடலை ஜார்ஜ் எல். ஹார்ட், மாதவ மேனன் ஆகிய இருவருமே தங்களுடைய மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு முறையினைக் கையாண்டிருப்பினும், மூலமொழியில் உள்ள செய்தியைத் திறம்பட எளிய ஆங்கிலத்தில் சிறப்பாக மொழிபெயர்த்திருப்பதை அறியும்போது, அவர்கள் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பில் எந்த அளவிற்கு ஆழங்கால்பட்டவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
துணைநூற் பட்டியல்
1. George L. Hart, The Poems of Ancient Tamil, 1995, University of California Press.
2. T. Madhava Menon, The Purananuru (Tamil Sangam Classic), 2011, International School of Dravidian Linguistics, Thiruvananthapuram, India.
3. உ.அலிபாவா, சங்கம் வளர்த்த தமிழ், வளர்தமிழ்ப் பதிப்பகம், 21 (13/1) முதல் தளம், செய்யது சாகிப் தெரு, காஜா நகர் - 620 020.
4. சேதுமணி மணியன், மொழிபெயர்ப்பியல் கோட்பாடுகளும் உத்திகளும், செண்பகம் வெளியீடு, மதுரை.
5. செ.அகிலாண்டேஸ்வரி, சங்க இலக்கிய மொழிபெயர்ப்புகள், 2013, பார்த்திபன் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி - 620 021.
- முனைவர் அ.முகம்மது அசாருதீன், கௌரவ விரிவுரையாளர், தமிழியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 620 024