up violenceபாஜக ஆளும் மாநிலங்கள், ஆள நினைக்கும் மாநிலங்கள் எப்போதுமே கலவரங்களுக்கும் கொலைகளுக்கும் பெயர் போனவை. கலவரங்கள் மூலமாகவே அனைத்தையும் தீர்த்துவிடலாம் என்னும் சித்தாந்த அடிப்படைவாதம் கொண்டது பார்ப்பனிய ஆர் எஸ் எஸ் கும்பல்.

ஒன்றா இரண்டா இவர்களுடையக் கலவரங்களும் கொலைகளும்? சென்ற வாரம் உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி விவசாயிகள் போராட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஷ்ராவின் கார் புகுந்து நான்கு விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பேசுபொருளாக இருக்கிறது.

மத்திய இணை அமைச்சரின் மகன் இன்னும் கைது செய்யப்படாமல் பாதுகாக்கப்படும் நிலையில் அந்த காரின் ஓட்டுநர்தான் பலியாகியிருக்கிறார். பத்திரிக்கையாளர் ஒருவரும் பலியாகியிருக்கிறார். அப்பாவி மக்களுக்குள் மோதலை ஏற்படுத்தி, ஆதாயத்தை பாஜகவும் ஆர்எஸ்எஸ் அனுபவிக்கிறது.

சிலர் இது இரண்டு தரப்புக்கும் இடையில் நடந்த கலவரம் என்றும் இதற்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் பாஜக தலைவர்களுள் ஒருவரான ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, இதில் சம்பந்தப்பட்ட காருக்குச் சொந்தக்காரரான பாஜகவைச் சேர்ந்தவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவருடைய ட்வீட்டில் இந்த சம்பவம் பற்றி "shake one's soul" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த ஒருவரே இப்படி நடுங்க வைக்கக்கூடிய ஒரு கொலை குற்றமாக இந்த லகிம்பூர் கெரி சம்பவம் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். உடனே அவரும் அவருடைய தாயாரான மேனகா காந்தியும் பா.ஜ.கவின் தேசிசயச் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து(suo motu) இந்த வழக்கை விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றமே இவ்வளவு வெகுண்டெழுந்து கேள்விகளைத் தொடுப்பது அவ்வளவு எளிதில் நடந்து விடாது. அந்த அளவிற்கு மோசமான நிகழ்வாக இந்த லக்கிம்பூர் கேரி நிகழ்வு அமைந்திருக்கிறது.

மேலும் உச்சநீதிமன்றம், ஏன் சம்பந்தப்பட்ட மத்திய இணையமைச்சர் என் மகன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கேள்வி கேட்டிருக்கிறது. அதற்கு, அவருக்குச் சம்மன் அனுப்பி இருப்பதாக உத்தரப்பிரதேச அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. எங்காவது செக்சன் 302 போடப்பட்ட ஒருவருக்குச் சம்மன் கொடுத்து பார்த்ததுண்டா என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. ஆஷிஷ் மிஸ்ராவை காவல்துறையின் கஸ்டடியில் எடுக்க ஏன் மறுக்கிறீர்கள் என்றும் இப்படித்தான் மற்ற வழக்குகளில் கொலை குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நடத்தி இருக்கிறீர்களா என்றும் கேட்டுள்ளது.

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு சம்மன் கொடுக்கும் அரசு, ஒரு பண மோசடி வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சுவர் ஏறி குதித்து கைது செய்ததையும் நாம் பார்த்தோம்.

ஓராண்டிற்கு மேலாகத் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை எப்படியாவது சீர்குலைத்து விடவேண்டும் என்பதற்காகப் பல்வேறு முயற்சிகளில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றமே விவசாயிகளை அவர்களுடையப் போராட்டத்திற்காகக் கண்டித்தது. அப்படிப்பட்ட உச்சநீதிமன்றமே இன்று உத்தரப்பிரதேச அரசைக் கண்டித்துள்ளது.

ஒரு நாட்டின் அடிப்படை ஆதாரமான விவசாயத்தை அளிப்பதில் பாஜக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. ஏழை எளிய உழைக்கும் மக்களை வாட்டி வதைக்கிறது. இப்படிப்பட்ட நிகழ்வுகள் உலகின் வேறு எந்த பகுதியிலாவது நடப்பதாக நாம் கேள்விப்படுகிறோமா?

போராட்டக்காரர்களைக் கொலை செய்துவிட்டால் போராட்டம் முடிந்து விடுமா? பயத்தை ஏற்படுத்தி, இனி போராட வருபவர்களைத் தடுக்க முடியுமா?

நியாயம் கிடைக்கும் வரை மக்கள் போராட்டம் முடியாது!

ஆனால் இவர்கள் போடும் ஆட்டம் விரைவில் முடிந்து விடும்.

- மா.உதயகுமார்

Pin It