வள்ளலார், வடலூரார், இராமலிங்க சுவாமிகள், அருட்பெருஞ்சோதி, சமரச சுத்த சன்மார்க்க ஞானி, அருளாளர் என்ற பல பெயர்களால் இன்று அழைக்கப்படும் “வள்ளலார்” அக்டோபர் திங்கள் ஐந்தாம் நாள் 1823 ஆம் ஆண்டு (5.10.1823) இராமய்ய பிள்ளை - சின்னம்மை தம்பதிகளுக்கு கடைசி பிள்ளையாக பிறந்தார்.

பிள்ளைப் பருவம்

பிள்ளைப் பருவம் எய்தியதும், தமையனார் சபாபதி பிள்ளை தாமே கல்விப் பயிற்சியை வள்ளலாருக்கு தொடங்கினார். பின்னர் தமது ஆசிரியராகிய காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி கற்க அனுப்பினார்.

வள்ளலாரின் அறிவுத் தரத்தையும், பக்குவ நிலையையும், கந்த கோட்டம் சென்று கவிபாடித் துதித்ததையும் கண்ட மகாவித்துவான், இவ்விளைஞர் கல்லாதுணரவும், சொல்லாதுணர்த்தவும் வல்லவரென்று உணர்ந்து கற்பிப்பதைக் கைவிட்டார்.

வள்ளலார் தமது ஏழாவது வயதிலேயே அறிவிலே சிறந்து விளங்கினார். ஒன்பதாவது வயதிலேயே சிறந்த செய்யுட்களை இயற்றும் திறமை பெற்றிருந்தார். பன்னிரண்டாம் அகவையில் வள்ளலார் முறையான “அருளியல் வாழ்வைத் தொடங்கினார்.” திருவொற்றியூர் சென்று தியாகராஜப் பெருமானையும், வடிவுடையம்மையையும் வழிபட்டு வரத் தொடங்கினார்.vallalar 539வேலாயுத முதலியார் மாணவரானார்

1849 ஆம் ஆண்டில் தொழுவூர் வேலாயுத முதலியார், பெருமானாரின் மாணவர் ஆனார். அப்போது பெருமானாரது வயது இருபத்தாறு. வேலாயுத முதலியார்க்கு வயது பதினேழு. தொழுவூர் வேலாயுத முதலியார் சென்னையில் வாழ்ந்த சிறந்த ஒரு தமிழறிஞர். சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் பண்டிதராகப் பணியாற்றி வந்தார். வடமொழி, தமிழ்மொழி இரண்டிலும் வல்லவர். தேமாரி என பாமாரி பொழிந்து வந்த இராமலிங்க வள்ளலாரின் புகழை அவர் கேள்வியுற்றார். வள்ளலாரின் புலமையைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என எண்ணினார். அதற்காக கரடுமுரடான பண்டித நடையில் நூறு சிலேடைப் பாடல்களைத் தாமே இயற்றினார். அவற்றை எழுதிய சுவடியைக் கொண்டு வந்து, “இவை பழம் சுவடிகளில் கிடைத்தன; சங்கப் புலவர்களின் வாக்கு. இவற்றை நீங்கள் பார்வையிட வேண்டும்” என்று கூறி வள்ளல் பெருமானிடம் நீட்டினார். இப்பாடல்களைப் பற்றிக் கருத்தறிய வந்ததாகவும் கூறினார். வள்ளல் பெருமான் அச்சுவடியை வாங்கிப் பாடல்களைப் பார்வையிட்டார். புன்னகையோடு வேலாயுதனாரை நோக்கி,

“இவை சங்கப் புலவர்களின் பாடல்கள் அல்ல அவர்கள் பாடலில் இவ்வளவு குற்றங்கள் இரா; பொருளிலக்கணம் தேறாத, ஒரு கன்றுகுட்டி பாடியவை இவை” என்றார். அதைக் கேட்ட வேலாயுத முதலியார், அதிர்ச்சியடைந்தார். அவரது புலமைச் செருக்கு அடியோடு அழிந்தது. மாசுகள் நீங்கி மனம் தெளிவடைந்தது. பெருமானின் திருவடியில் அடியற்ற பனைமரம் போல வீழ்ந்து வணங்கினார். தமது பிழையைப் பொறுத்துத் தம்மை ஆட்கொள்ளுமாறு வேண்டினார்.

அடிகள் புன்னகையோடு “எழுந்திரு வேலாயுதம் நீ நமக்கு புதியவனல்லன்: பழமையானவன். நம்பிள்ளை நமக்கே கிடைத்தன” எனக் கூறி அவரை ஏற்றருளினார். அவருக்கு குமரவேள் உபாசனையையும் கூறியருளினார். அடிகளாரின் அருள் ஒளியில் ஆன்ம மலர்கள் நீங்கப் பெற்று அறிவு விளக்கம் பெற்றார் வேலாயுத முதலியார். அன்று முதல் அடிகளின் மாணவராக அமர்ந்து வட மொழியிலும், தமிழ் மொழியிலும் உள்ள இலக்கிய இலக்கண நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்தார். 'முதல் மாணவர்' என்ற சிறப்பையும் பெற்றார். அவருடைய அறிவு வளர்ச்சியைப் பாராட்டிய அடிகள் அவருக்கு “உபய கலாநிதி” என்ற சிறப்புப் பட்டம் அளித்துப் பாராட்டினார். தொழுவூர் வேலாயுத முதலியார் வள்ளலாரின் கூடவே இருந்து அவர்களது பாடல்களை அச்சில் பதிப்பித்து வெளி­யிட்டார். அதன் பின்னர், வீராசாமி முதலியார், பொன்னேரி சுந்தரம் பிள்ளை, சீனிவாச வரதாச்சாரியார், ஞான சுந்தரமையர், பண்டாரா ஆறுமுக ஐயர் போன்றவர்கள், வள்ளலாரின் முக்கிய மாணவராக விளங்கி கல்வி கற்றார்கள். இவர்கள் அனைவரிலும் 'வேலாயுதம்' அவர்களே அடிகளின் சிறந்த மாணவராக விளங்கினார்.

திருமணம்: 1850

திருமணப் பருவத்தை அடைந்து விட்ட பிள்ளையார் திருமணத்தை வெறுத்துத் தெய்வ மண வாழ்க்கையே விரும்பினார். சபாபதியையும் அவர் மனைவியாரையும் உலகப் பாசம் தூண்டியது. இராமலிங்கருக்கு எப்படியாவது ஒரு திருமணத்தைச் செய்து வைத்துவிட வேண்டும் என்று எண்ணினார். பிள்ளையாரை திருமணம் செய்து கொள்ளும்படி உடன் பிறந்தாரும் தாயாரும் வேண்டினர். ஒரு சிவயோகியாரைக் கொண்டு வற்புறுத்தினார். வள்ளலாரோ தமக்கு விருப்பமான ஆனந்த நடராசனது நினைவில் ஆழ்ந்து அனுபவிக்கும் இன்பத்தைத் தவிர வேறு இன்பம் ஏதும் வேண்டாமென மறுத்து வந்தார். உலகியல் இன்பங்களை நாட அவரது பற்றற்ற உள்ளம் மறுத்தது. உலக பாசங்களில் வள்ளலார் ஈடுபட விரும்பவில்லை. எக்காலமும் இறையுணர்வே மிகுந்து முற்றுத் துறந்த முனிவரைப் போலவே தியானத்திலும் நிட்டையிலும் காலத்தைக் கழித்தார். ஆயினும் உற்றார் உறவினர்களின் இடைவிடாத வற்புறுத்தலை அவரால் பொறுக்க முடியவில்லை. ஒரு நாள் அவர்களது தொல்லை தாங்காமல் திருமணத்திற்கு இசைவு தெரிவிப்பது போல அவர் தலையை அசைத்து விட்டார். அதன் விளைவு திருமணம் நிச்சயமாயிற்று.

இராமலிங்கத்தின் (வள்ளலாரின்) மூத்த சகோதரி உண்ணாமுலையம்மாளின் மகள் தனக்கோட்டி என்னும் மங்கை நல்லாளை இராமலிங்கத்திற்கு மணமுடித்து வைக்க திட்டமிட்டனர்; 1850ஆம் ஆண்டு இருபத்து ஏழாவது வயதில், வள்ளலார் தனக்கோட்டி அம்மையாரை மணம் புரிந்தார். பெருமானார் தொட்டுத் தாலி கட்டினார்களேயன்றி இல்லற வாழ்வில் ஈடுபட்டார்களல்லர். ஒருத்தியைக் கை தொடச் சார்ந்தேன்.... தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் என்பது பெருமானார் திருவாக்கு.

முதல் இரவு

திருமணம் முடிந்த பின் முதல் இரவு, பள்ளியறை­யிலே இராமலிங்கத்திற்கும் தனக்கோடிக்கும் அங்கு நிகழ்ந்தது காதல் விளையாட்டு இல்லை. கடவுள் வழிபாடு. முதல் இரவில் வள்ளலார் தனக்கோடி அம்மையாரிடம் திருவாசகம் நூல் கொடுத்துப் படிக்கச் சொல்லிவிட்டு வள்ளலார் வீட்டை விட்டு வெளியேறினார் என்ற கருத்து நிலவுகிறது. மனைவியோடு கலக்காமல் வாழ்ந்தார் என்றும் கூறப்படுகிறது. தனக்கோடியை வள்ளலார் தீண்டாததால், அவர் வேறு ஆடவருடன் சென்று விட்டார் என்ற கூற்றும் நிலவுகிறது. வள்ளலார் தமது பிரம்மச்சரிய ஒழுக்கத்தை கடைபிடித்ததால்தான் மேல் நிலை சென்றார் என்பது உண்மை. ஆதலால் மனைவியுடன் அவர் கலக்கவில்லை என்பது தெளிவாகிறது. தாலி கட்டி மணந்த மங்கையுடன் கூடி வாழாமல், வாழாவெட்டியாக தனக்கோடி அம்மையாரை ஆக்கினார் வள்ளலார் என்ற கருத்தும் உலாவியது.

வாலிபப் பருவத்தில் வள்ளலாரை ஏராளமான பெண்கள் மயக்க முற்பட்டனர். அதற்கெல்லாம் பணியாது பிரம்மச்சரியத்தில் உறுதியாக இருந்தார் வள்ளலார். இதனால் வள்ளலார் ஆண்மையற்றவர் என்று அவரை கேலி பேசினர் அந்தப் பெண்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாக முதல் இரவு முதல் எல்லா இரவுகளிலும் தனக்கோடி அம்மையாருக்கு திருவாசகம் படித்து விளக்கினார் வள்ளலார் என்றும் இதனால் வெறுப்படைந்த தனக்கோடி அம்மையார் வேறு ஆடவனுடன் சென்று விட்டார் என்றும் கூறப்படுகிறது, வள்ளலார் மீது பற்றுக் கொண்டவர்கள் இதைக் கேட்டு மனம் கொதிக்கின்றனர். ஆனால் தன் மனைவி தனக்கோடியுடன் இயல்பான இல்லறம் நடத்தினார் வள்ளலார் என்ற கருத்து இங்கு ஆய்வு செய்யப்படுகிறது.

மனைவியோடு இயல்பான வாழ்க்கை நடத்தினார் வள்ளலார்

1850இல் தனது 27வது வயதில் திருமணம் செய்து கொண்டார் வள்ளலார். தனது 35 வயதில் தான் துறவறம் கொண்டார். அதுவரை அவர் வீட்டில்தான் இருந்தார் என்பது உண்மை. 1858ஆம் ஆண்டில் தான் தனது 35 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். அதாவது திருமணம் நடைபெற்று எட்டு ஆண்டுகள் வீட்டில்தான் இருந்தார் வள்ளலார். திருமணத்தன்று இரவு மனைவி­யிடம் திருவாசகம் கொடுத்து வெளியேறினார் என்பதற்கு எந்தவிதச் சான்றும் இல்லை. மனைவியுடன் வாழவில்லை என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. சென்னையில் தங்கியிருந்த காலத்தில் மனைவியுடனும் மற்றவர்களுடனும் வாழ்ந்துள்ளார். உற்றார், உறவினர் இசைவோடு ஆன்மிக அருட்பயணம் மேற்கொண்டார் என்று தெரிகிறது.

அண்ணன், அண்ணி, அன்னையர், தமக்கை, மனைவி ஆகியவர்களுடன் உடன் உறைந்தே வள்ளலார் வாழ்ந்துள்ளார். அப்போதெல்லாம் மனைவி தனக்கோடி அம்மையார் கணவன் வள்ளலாருக்கு ஏதும் பணிவிடைகள் செய்திருக்க மாட்டார்களா? அதை வள்ளலார் ஏற்றிருக்க மாட்டாரா என்ன? இச்சூழ்நிலையைக் காணும் போது வள்ளலார் குடும்பத்தை விலக்கி வந்ததாகக் கூறுவது சரி­யில்லை, ஏற்க முடியாததாகும்.

மனைவியோடு இயல்பான இல்லறம் நடத்தியதைப் பற்றி வள்ளலார் குறிப்பிடுகிறார்.

“மீன்போலும் மாதர் விழியால் வலையப்பட்ட

மான்போலும் சோர்ந்து மடங்குகின்றேன்”

“வஞ்சம் தரும் காம வாழ்க்கையிடைச் சிக்கிய என்

நெஞ்சம் திருத்தி நிலைத்திலையே”

“போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன்”

“நேரிழையவர் புணர் முலை நெருக்கில்

நெருக்கிய மனத்தினேன்”

“தாவும் மான் எனக் குறித்துக் கொண்டோடத்

தையலார் முலைத்தடம் படுங்கடையேன்”

இல்லற வாழ்க்கையில் வள்ளலார் ஈடுபட்டார் என்பதற்கு இப்பாடல் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

வள்ளலார் தனக்கோடியுடன் வாழ்ந்தார் - ஆதாரம்

வள்ளலாரின் தாயார் சின்னம்மையார், திருமணம் செய்து வைத்ததும் தன் மகனுக்கு வாரிசு தோன்றவில்லையே என்று புலம்பிக் கொண்டிருந்தார். இதை நினைத்து கலக்கமுற்ற வள்ளலார் சிவபெருமானிடம் முறையிட்டார். அதற்கு சிவபெருமான்,

“எச்சம் பெறேல் மகனே என்று

என்னுள்ளுற்ற

அச்சந் தவிர்த்தவர் அம்பலத் திருக்கின்றார்”

அதாவது, குழந்தை பெற்றுக் கொள்ளாதே மகனே என்று கூறுகிறார். சிவபெருமானே வள்ளலாரைப் பார்த்து இப்படிக் கூற வேண்டிய காரணம் என்னவென்றால், பெண் குழந்தையானால் பாதுகாத்து வளர்த்து திருமணம் செய்து வைக்கும் வரையில் தந்தையின் கடமையாகும். ஆண் குழந்தை பிறந்தால் கல்வி கற்பித்து தொழில் செய்து வைக்கும் வரை கடமை உள்ளது. இறைத் தூதராக வந்த வள்ளலார் அந்த கடமையை செய்யாது குடும்ப வாழ்க்கையிலேயே காலம் கழிக்கக் கூடாது என்பதற்காகவே குழந்தை பெற்றுக் கொள்ளாதே என்று கூறுகிறார். இந்நிகழ்வு வள்ளலார் மனைவியோடு வாழவில்லை என்ற கூற்றுக்கு மாறாக இருக்கிறது.

குடும்ப வாழ்க்கையில் வள்ளலார் ஈடுபட்டார் என்பதற்கு வேறு ஒரு முக்கியமான ஆதாரம் உண்டு. குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட வள்ளலார், குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டே அருள் வாழ்க்கையையும் வாழ்கிறார். இருப்பினும் குடும்ப வாழ்க்கையில் இருந்து விடுபட இறைவனிடம் வேண்டுகிறார்.

“கலங்க விழ்ந்தார் மனம்போல்

சலிப்பது காண் குடும்ப

விலங்கு அவிழ்ந்தாலன்றி நில்லாது என் செய்வல்”

“பெரும் பேதையேன் சிறு வாழ்க்கைத்துயர்

என்னும் பேரலையில் துரும்பே என

அலைக்கின்றேன் புனை நின் துணைப் பாதமே”

என்று வேண்டுவதன் மூலம் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தது தெளிவாகிறது.

தனக்கோடி அம்மையார் மறைந்தார்

தனக்கோடி அம்மை இறந்து விட்டார். உடனே தாயார் சின்னம்மையார் வள்ளலாருக்கு மறுமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். மனைவி இறந்துவிட்ட பின்னர் குடும்ப விலங்கு அறுந்து விட்டது என்று இருந்த வள்ளலார், மறுமணம் செய்தியை கேட்டவுடன் கலங்கிநின்று, இறைவனிடம் சென்று குடும்ப விலங்கை அறுத்து தமக்கு விடுதலை கொடுக்குமாறு வேண்டுகிறார்.

“அவ்விலங்கு செழுஞ்சுடராய் அடியார் உள்ளத்து

அமர்ந்தருளும் சிவகுருவே அடியேன் இங்கே

இல்விலங்கு மடந்தை என்றே எந்தாய் அந்த

இருப்பு விலங்கினை ஒழித்தும் என்னே பின்னும்

அவ்விலங்கு பரத்தையர் தம் ஆசை என்னும்

அவ்விலங்கு பூண்டு அந்தோ மயங்குகின்றேன்

புல்விலங்கும் இது செய்யா ஒ ஒ

இந்தப் புலை நாயேன் பிழை பொறுக்கில் புதிதேயன்றோ”

என்று பாடி இருப்பது, வள்ளலாரின் நீண்ட கால குடும்ப வாழ்க்கைக்கு சான்றாகிறது.

முக்காடு போட்ட வள்ளலார்

வள்ளலாரின் மனைவி தனக்கோடியும், தாயார் சின்னம்மையாரும் 1858இல் ஒருவர் பின் ஒருவராக காலம் சென்று விட்டனர் என்று வள்ளலாரின் பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மனைவி தனக்கோடி அம்மையாருக்கு இறுதிக் கிரியை செய்து விட்டு தலையில் முக்காடு போட்டுக் கொண்டு வீடு வந்தார். அன்று முக்காடுப் போட்டதை அகத்துறவு பூண்டு, தமது நிரந்தர அடையாளமாக்கிக் கொண்டார் வள்ளலார்.

ஆண்கள் யாராவது தலையில் துண்டைப் போட்டிருப்பதை பார்த்தால், “பெண்டாட்டியை காவு கொடுத்தவன் போல் தலையில் துண்டைப் போட்டு இருக்காதே” என்று கூறும் வழக்கம் பழக்கத்தில் உள்ளது. அது போலவே, மனைவியை பறிகொடுத்த துக்கத்தில் முக்காட போட்ட வள்ளலார், தான் ஒளி ரூபமாய் மறையும் வரை அவ்வாறு முக்காடு போட்டுக் கொண்டார். அதுவே வள்ளலார் இராமலிங்க அடிகளின் அடையாளமாகி விட்டது.

தாயாரும் மனைவியும் இறந்து போனதற்காக மனம் வருந்திப் பாடும்,

“பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர்

பெருகிய பழக்க மிக்குடையோர்

மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து

மறைந்திட்ட தோறும் அப்பிரிவை

உற்றுநான் நினைக்கும் தோறும் உள்நடுங்கி

உடைந்தனன் உடைகின்றேன் எந்நாய்”

என்ற பாடலில் வள்ளலார் “துணைவர்” என்ற சொல்லால் மனைவி தனக்கோடியை குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மனைவி தனக்கோடி இறக்கும் வரை வள்ளலாரோடு வாழ்ந்தார் என்று அறியலாம்.

வள்ளலாரின் இல்லற வாழ¢க்கையின் அனுபவங்கள்

வள்ளலார் தன் மனைவியோடு இல்வாழ்க்கை வாழும் போது உருவான மிக முக்கிய சம்பவம், இங்கே குறிப்பிடலாம். தன் மனைவி பசியினால், பிணியினால் உடலும் உள்ளமும் வருந்தியதைப் பார்த்து பயந்து என் உள்ளம் பதைத்தது என்று சொல்லியுள்ளார். அப்போது தன் மனைவியின் நலம் காக்க பல செல்வந்தர்களிடம் சென்று வள்ளலார் பொருளுதவி வேண்டினார். இந்நிலையில் தன்னை வறிந்து பாடல்களைப் பாடியுள்ளார்.

“சென்று சென்று நல்காத செல்வர் தலைவாயிலிலே

நின்று நின்று வாடுகின்ற நெஞ்சமே” என்ற

பாடலில், “ஈயாத செல்வந்தர் வீடுகளுக்குச்

சென்று வாயிலில் நின்று வாடுகின்ற நெஞ்சமே”

என்று வருந்துகிறார்

“நிற்பது போன்று நிலைபடா உடலை

நேசம் வைத்து ஓம்புறும் பொருட்டாய்

பொற்பது தவிரும் புலையர்தன் மனைவியைப்

புந்திநொந்து அயர்ந்தழுது இளைத்தேன்”

என்ற பாடலில், நிலையானது போன்று தோன்றுகின்ற நிலையற்ற இந்த உடலின்மீது நேசம் வைத்துப் பொருளுதவி வேண்டி, இழிந்த குணமுடைய செல்வந்தர் வீடுகளுக்கு சென்று மனம் நொந்து அயர்ந்து கண்கலங்கி நின்று காலம் கழித்தேன் என்று வருந்தியுள்ளார் வள்ளலார்.

“நல்காத ஈனர் தம்பால் சென்று இரந்து  நவைப்படுதல்

மல்காத வண்ணம் அருள் செய்கண் டாய் வாகனனே!”

என்ற பாடலில் மயில் வாகனனே, ஈயாத ஈனரிடம் சென்று இரந்து இழிவு படாதவாறு அருள் புரிவாய் என்று தன் நிலையை மாற்ற வேண்டுகிறார் வள்ளலார்.

“உண்டால் குறைம் எனப்பசிக்கும்

உலுத்தர் அசுத்த முகத்தை எதிர்

கண்டால் நடுங்கி ஓதுங்காது

கடைகாத்து இரந்து கழிக்கின்றேன்

என்ற பாடலில், உண்டால் குறைந்து விடுமே என்று பசித்துக் கிடக்கும் உலோபிகளின் அசுத்த முகத்தைக் கண்டால் வெறுத்து ஒதுங்காது அவர்களிடம் இரந்து காத்திருந்து காலம் கழித்தேன் என்று தன் அவல நிலையை மனம் நொந்து விவரிக்கிறார் வள்ளலார்.

புன் புலைய வஞ்சகர்பால் சென்று அவர்களை வீணாக புகழ்ந்து பேசி, மனம் சோர்ந்து அவர்களுடைய பொருளுதவியால் வயிறு வளர்க்கின்றேன் என்று வறுமையில் வாடிய நிலையை கூறுகிறார். மனைவியோடு இல்வாழ்க்கை வாழவில்லை என்றால் செல்வந்தர் வீடுகளுக்குச் சென்று பொருளுதவிக்காக ஏன் காத்திருக்க வேண்டும்? எனவே மனைவிக்காக வீடுகளில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் என்றால், வள்ளலார் மனைவியோடு வாழ்ந்தார் என்பதை உணர்த்துகிறது.

வள்ளலார் இல்லறம் நடத்தியவர் சான்றுகள்

வள்ளலார் இல்லறம் நடத்தியவர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மேலும் சான்றாக அமைந்திருக்கின்றன இரத்தின முதலியாருக்கு வள்ளலார் எழுதிய இரண்டு கடிதங்கள். வள்ளலாரும் இரத்தின முதலியாரும் ஒருவர் மீது ஒருவர் மதிப்பும் அன்பும் நட்பும் கொண்டிருந்தனர். இரத்தின முதலியாரின் நலம் பற்றி வள்ளலார் அதிக ஆர்வம் காட்டினார்.

27.5.1860 ல் வள்ளலார் எழுதிய கடிதம்

“பரம சிவனிடத்தே மாறாது மத்தை வைத்துக் கொண்டு, புறந்தே ஆயிரம் பெண்களை விவாகம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொண்டாலும் அதனால் வருத்தப்பட, நம்மை சிவபெருமான் செய்விக்க மாட்டார். ஆதலால் மகிழ்ச்சியாக விவாகத்து சம்மதிக்கலாம். தாம், தடைசெய்ய வேண்டாம், எந்தக் காலத்தில் எந்த இடத்தில், எந்தவிதமாக, எந்த மட்டில் பொருந்தப் பொசிப்பிக்கின்றது? திருவருட் சக்தியாக இருந்தால் நமக்கென்ன சுதந்திரம் இருக்கின்றது. எல்லாம் திருவருட் சக்தி காரியமென்று அதைத் தியானித்திருக்க வேண்டும். உண்மை இது. இதைக் கொண்டு தெளிந்திருக்க வேண்டும் (திரு.பி பாலகிருஷ்ணப் பிள்ளை பதிப்பித்துள்ள திருவருட்பா, புத்தகம் 5 பக்கம் 32 - 3)

வள்ளலாரைப் போல் இறுக்கம் ரத்தின முதலியாரும் திருமணம் செய்து கொள்ள முதலில் சம்மதிக்கவில்லை. அதனால் அவருக்கு வள்ளலார் உபதேசம் செய்கிறார். இதன் மூலம் அறிந்து கொள்வது யாதெனில் வள்ளலார் தன் இல்லற வாழ்க்கையின் அனுபவங்களைக் கொண்டு இவ்வாறு உபதேசித்துள்ளார் என்பதாகும்.

வள்ளலார் தன் மனைவியோடு இல்லற வாழ்வில் ஈடுபடாமல் இருந்திருந்தால், இது போன்ற இல்லறத் தொடர்பான உபதேசங்களை சொல்ல முடியாது. எனவே வள்ளலார் இல்லறத்தில் ஈடுபட்டிருப்பார் என்பது தெளிவாகிறது. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் நபர் இல்லையே வள்ளலார்.

வள்ளலார் 10.6.1861 இறுக்கம் ரத்தின முதலியாருக்கு எழுதிய இரண்டாவது கடிதம்

27.5.1860இல் இறுக்கம் ரத்தின முதலியாருக்கு வள்ளலார் எழுதிய கடிதத்தில், அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உபதேசித்துள்ளார். மேலே குறிப்பிடப்பட்ட 10.6.1861இல் எழுதிய கடிதத்தில் எப்படி வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். மாதத்தில் இரண்டு முறை மட்டுமே உறவு கொள்ள வேண்டும். அதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறியிருப்பதன் மூலம் வள்ளலார், தனக்கோடியுடன் கலந்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும் உணவு உண்னுதல், உறவு கொள்ளுதல் இரண்டையும் அளவோடு செய்தல் வேண்டும் என்கிறார் வள்ளலார்.

வள்ளலாரின் திருவடி சேவகர் பா.கமலக்கண்ணன் வள்ளலார், மனைவியோடு சில ஆண்டுகள் குடும்பம் நடத்தினார் என்ற கருத்தை ஆய்வு செய்துள்ளார். இதனை சுருக்கமாக காண்போம்.

தனக்கோடியுடன் இயல்பான இல்லறம் நடத்தியதையும், வறுமையில் வாடியதையும் வள்ளலாரே தம் திருக்கரத்தால் திருவருட்பாவின் பல பாடல்களில் பதிவு செய்துள்ளார். அவருடைய வாழ்க்கையை அவரே கூறியிருப்பது தவறு என்று மற்றவர்கள் மறுத்துக் கூறுவது முறையாகாது. அவ்வாறு மறுத்துக் கூறுவதால், வாழாவெட்டியான அவர் மனைவி வேறு ஆடவனுடன் ஓடி விட்டார் என்ற பொய்யுரை உறுதிப்படுகிறதல்லவா? பத்தினியாகிய தனக்கோடி மீதும், ஞானியான வள்ளலார் மீதும் பழிச் சொல் சொல்லி வருகின்றனர் என்று ஆதங்கப்படுகிறார் கமலக்கண்ணன்.

வள்ளலார் தன் மனைவியோடு சில ஆண்டுகள் அன்போடு குடும்பம் நடத்தினார், வறுமை வாட்டியதால் குடும்ப விலங்கை அகற்றுமாறு இறைவனிடம் வேண்டினார். திருவருட்பாவின் முதல் திருமுறை தனக்கோடியுடன் குடும்பம் நடத்தியதற்கு திருவருட்பாவின் முதல் திருமுறையில் 50க்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன என்கிறார் திரு கமலக்கண்ணன். மனைவியோடு சில ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை நடத்தி, வறுமையில் வாடி மனம் வருந்தியதால் இந்த குடும்ப விலங்கு அவிழ வேண்டும் என்று இறைவனிடம் முறை­யிடுகிறார் வள்ளலார்.

“குறிகொண்ட வாழ்க்கைத் துயராம்

பெரிய கொடுங்கலிப்பேய்

முறி கொண்டு அலைக்க வழக்கோ?”

“பெண்ணால் மயங்கும் எளியேனை

ஆளப் பெருங்கருணை

அண்ணா நின் உள்ளம் இரங்காத வண்ணம்

அறிந்து கொண்டேன்”

“பீழை மேவும் இவ் வாழ்க்கையிலே

மனம் பேதுற்ற இவ்வேலையை நீ விடலாமோ?

அடிமைக்கு இரங்கு கண்டாய்”

“கலங் கவிழ்த்தார்

மனம் போல் சலிப்பது

காண்: குடும்ப விலங்கு

அவித்தாலன்றி நில்லாது;

என் செய்வல்”

மேலும், திருவருட்பா முதலாம் திருமுறையில் பதிகம் 7 வடிவுடை மாணிக்க மாலையில்

“பெரும் பேதையேன் சிறு வாழ்க்கைத்

துயர் என்னும் பேரலையில்

துரும்பே என அலைகின்றேன், புனைநின் துணைப்பதமே

என்று பாடியுள்ளார்.

அற்பமான வாழ்க்கைத் துயர் என்னும் பேரலை என்ற சொற்கள் வள்ளலார் மனைவியோடு நடத்திய இல்லற வாழ்க்கையையே குறிக்கிறது.

பதிகம் 6 திருவருண் முறையீட்டில்,

“மையிட்ட கண்ணியர் பொய்யிட்ட வாழ்வில் மதி மயங்கிக் கையிட்ட நானும் உன் மெய்விட்ட சீரருள் காண்குவனோ?” என்ற பாடலின் மூலம் நான் கரம் பற்றிய மையிட்ட கண்ணுடையாளின் வாழ்க்கையில் மயங்கிக் கிடக்கும் நான், உன் மெய்யான சீரருள் காண்குவனோ? என்கிறார் வள்ளலார். தனக்கோடியுடன் இயல்பான இல்லறத்தில் வாழ்ந்தார் என்பதற்கு இப்பாடல் ஒன்றே போதுமானது என்கிறார் கமலக்கண்ணன்.

பதிகம் 4, சிவநேச வெண்பாவில்,

“வன்செய் வேல்நேர் விழியார் மையலினேன், என் செய்வேன் நின்னருள் இன்றேல்” என்று பாடியுள்ளார் வள்ளலார்.

மாதேவா! வேலைப் போன்ற விழியுடைய பெண்ணிடம்

மயங்கியிருக்கின்றேன் நின்னருள் இல்லாவிடில்

நான் என்ன செய்வேன் என்கிறார் வள்ளலார்,

வேலைப்போன்ற விழியுடைய பெண் என்பது

மனைவியை யன்றிவேறு யாரை குறிக்கும்?

மேலும்,

“வஞ்சம் தரும் காம வாழ்க்கையில்யிடைச் சிக்கிய என்

நெஞ்சம் திருத்தி நிலைத்தில்லையே”

என்று பாடி, வஞ்சம் தரும் காம வாழ்க்கையில் சிக்கியிருக்கும் என் நெஞ்சத்தை திருத்தி தவத்தில் நிலைக்கச் செய்யவில்லை என்கிறார் வள்ளலார். “வஞ்சம் தரும் கால வாழ்க்கையில் சிக்கின்றேன்” என்பது அவருடைய மனைவியை இன்றி வேறு யாரை குறிக்க முடியும் என்ற வினாவை எழுப்புகிறார் கமலக்கண்ணன்.

பதிகம் 2, விண்ணப்பக் கலிவெண்பாவில்

“ஆற்றில் ஒருகாலும் அடங்கா சமுசாரச்

சேற்றில் ஒருகாலும் வைத்து தேய்கின்றேன்.”

என்று பாடி, அதாவது ஞானத்தில் ஒருகாலும், விலகி ஓட முடியாத சம்சாரச் சேற்றில் ஒருகாலும் தேய்கின்றேன் என்கிறார் வள்ளலார். விலகி ஓட முடியாத சமாரச் சேறு என்பது மனைவியோடு சேர்ந்து வாழும் வாழ்க்கையைக் குறிக்குமா? அல்லது அண்ணன் குடும்பத்தில் வாழ்ந்து வந்ததை குறிக்குமா? என்று வினா எழுப்புகிறார் கமலக்கண்ணன்.

மேலும், பதிகம் 5, மகாதேவமாலையில், வள்ளலார் தம் மனைவிடம் அன்பு கொண்டு சில ஆண்டுகள் வாழ்ந்ததை, ஆதாரமாக 7 பாடல்களில் எடுத்துக் கூறியுள்ளார் கமலக்கண்ணன்.

“அஞ்சுடைய வஞ்சியர் மால் அடைய வஞ்சம்

மின்னரசே பெண்ணமுதே என்று மாதர்

வெய்ய சிறுநீர்க் குழிக்குண் விழவே எண்ணி,”

“தையலார் மையலெனும் சலதி ஆழ்ந்து”

ஏவினைநேர் கண்மடவார் மையல் பேயால்

இடருழந்தும் சலிப்பின்றி என்னே இன்னும்”

“பெண்ணுடைய மயலாலே சுழல்கின்றேன்

என் பேதமையை என் புகல்வேன்”

மின்னிடையார் முடைச் சிறுநீர்க்குமுக்குண் அந்தோ

வீழ்ந்திடவோ தாழ்ந்திளைத்து விழிக்க வோதான்”

அருணைத்துக் கொளப் பெண்பேய் எங்கே? மேட்டுக்கு

அடைத்திட வெண்சோறு எங்கே?

ஆடை எங்கே?

என்று திரிந்து இளைந்தேனல்லால்”

இவ்வாறு திருவருட்பாவின் முதல் திருமுறையில் உள்ளதை சான்றாக வைத்து, வள்ளலார் தனக்கோடியுடன் வாழ்ந்தார் என்று கூறுகிறார் கமலக்கண்ணன்.

திருவருட்பா இரண்டாம் திருமுறை

திருவருட்பா இரண்டாம் திருமுறையில், வள்ளலார் தம் மனைவி தனக்கோடியுடன் சில ஆண்டுகள் இல்லறம் நடத்திய போது தாம் பட்ட துன்பங்களை எல்லாம் பாடல்களாக வடித்துள்ளார். “திருவருட்பா” இரண்டாம் திருமுறையில் மட்டும், 41 பதிகங்களில் 160 பாடல்களில் இல்லறத்தில் பட்ட துன்பங்களை பாடியிருப்பது நெஞ்சை உருக்குவதாக உள்ளது. இதன் மூலம் தனக்கோடியை வாழாவெட்டி ஆக்கினார் என்பது பொய்ப்பிரசாரம் என்கிறார் பா.கமலக்கண்ணன்.

பதிகம் எண் 6ல் உன் அருட்கடலில் நீராட நினைத்து, மனைவியின் மயக்கத்தில் கிடக்கும் எனக்கு அருள்புரிய நினைக்க வேண்டும்” என்று ஆண்டவனிடம் வேண்டுகிறார் வள்ளலார்.

"அபராதத் தாற்றாமை” தலைப்பில், “மனைவியின் அழகில் மயங்கும் மூடனானேன், எட்டிக்காய் போன்ற பாவியானேன், என்னை என்ன செய்தால் இது சரியாகுமோ எனக்குத் தெரியவில்லை” என்று பாடியுள்ளார்.

“திருவருள் வேட்கை” எனும் தலைப்பில், மனைவியின் மீதுள்ள மையல் வலையில் விழுந்து குடும்பத்திற்கு உரிய பொருளின்றி அலைந்தேன். ஆனாலும் உன் திருவடிகளையே போற்றுகின்றேனே, உன் மனம் இரங்காதோ என்று ஆண்டவனிடம் உருகுகிறார் வள்ளலார்.

“வார் நடையார் காணா வளர் ஒற்றி பின் அமுதே” என்ற பாடலில் வள்ளலார், நான் குடும்ப வாழ்வெனும் இருளில் இருந்து சிக்கியிருப்பதால் ஞான மார்க்கத்தில் சேர முடியவில்லை. அப்படி இருந்தும் உன் கோயிலுக்கு (திருஒற்றியூர்) நேரில் வந்து நின்று வாடுகின்றேன் என்கிறார் வள்ளலார்.

“அறிவரும் பெருமை” எனும் தலைப்பில் அழகிய மனைவியிடம் மயங்கி, குடும்பத்தில் உழன்று துன்புறும் என்னை நீ ஆட்கொள்ளும் நாள் எந்த நாள் என்றுரைப்பாய் என்று பாடியுள்ளார்.

“எழுத்தறியும் பெருமான் மாலை” எனும் தலைப்பில் மையிட்ட கண்ணுடைய மனைவியிடம் மயங்கி உழலச் செய்வாயோ அல்லது மன ஒருமையோடு நின் கழலை நினைத்து தவபுரியச் செய்வாயோ? இப்படியோ அப்படியோ என்று அறிய முடியவில்லை, ஐயோ, உன் சித்தம் எப்படியோ என்கிறார் வள்ளலார்.

“திருச்சாதனைத் தெய்வத்திறம் எனும் தலைப்பில் அழகிய மனைவியோடு வாழ்வதிலும், வீண் பேச்சுப் பேசி வாதிடுவதால் தோன்றும் களிப்பதிலும், காலம் கழிக்கின்ற கடையேன். என்னை விஷம் கொடுத்துக் கொன்றாலும் வாளால் வெட்டினும், தீயால் சுட்டிடனும் அல்லது வேறு என்ன செய்தாலும் போதாதே" என்று கலங்கி நிற்கிறார் கருணை வள்ளலார்.

“ஆடலமுதப்பத்து” என்னும் தலைப்பில் உள்ள வள்ளலாரின் பாடலில், சிவபெருமானே, திருஒற்றியூரில் உறையும் அய்யனே, தில்லை அம்பலத்தில் ஜீவனை இயக்குகின்ற அமுதே, நி எனக்கு ஞானோபதேசம் செய்ததால், நான் உனக்கு மகனானேன் என்று சிவனிடம் பேசும் வள்ளலார் “உலகியல் வாழ்வில் மனைவியிடம் மயங்கி உள்ளம் கலங்குகின்றேன். வேறு எவற்றிலும் பற்று இல்லாமல் இருக்கின்றேன்” என்கிறார் வள்ளலார்.

மேலும் ஒற்றியூரில் உறையும் இறைவா, அம்பலமாகிய நெற்றி நடுநிலையில் ஜீவனை இயக்குகின்ற அமுதமே, இப்பாவியேனின் நெஞ்சம் என்வசம் நில்லாது ஓடி மனைவி மீதுள்ள மையலில் உழல்வதால், உன்னைச் சேவிக்காத என் பிழையைப் பொறுத்துக் கொள்வது உன் கடனாகும். நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்கிறார் வள்ளலார்.

“மூட நெஞ்சம் என் சொல்லைக் கேளாமல், மனைவியின் மேலுள்ள மோகத்தில் மூழ்குகின்றது. அதைத் தேடினேன்; அது என் வசம் இல்லை. உன்னுடைய திருவருட்கடலின் ஒரு துளி அதன் மீதுபட்டால், நான் விரும்பும் நன்மையை அது பெற்று விடும். அதனால் நானும் உய்வேன். அந்த திருவருள் துளியை நல்குவாயாக, சிவபெருமானே என்று வேண்டுகிறார் வள்ளலார்.

“தில்லை ஓங்கி சிவானந்தத்தேனே” என்ற பாடலில், வேலேந்திய முருகப் பெருமானைத் தோற்றுவித்த வள்ளலே, என்று வாழ்த்துவோருடைய துயரம் தீர்க்கும் திருஒற்றியூர்ப் பெருமானே, தில்லையில் ஓங்கிய சிவானந்தத் தேனே சுருங்கிய நெஞ்சால், வள்ளலாகிய நின் மலர்த்தாளை மறந்து, வஞ்சகமான குடும்ப வாழ்க்கையை மதித்தேன், அழகிய மனைவியிடத்தில் உருகி சுழல்கின்ற நான், நின் அருள்சுகம் பெறுவேனோ? என்று வள்ளலார் ஏங்குகிறார்.

“திருவார் வயித்த நாதா அமரர் சிகாமணியே” எனும் பாடலில் உருவாயும், அரூபமாயும் சிவலிங்க வடிவ ஜீவ ஜோதியாயும் பரம் பொருளாயும் விளங்கும் வயித்திய நாதா, அமரர் சிகாமணியே, அழகிய மனைவியின் மீதுள்ள ஆசைக் கடலில் விழுகின்ற வஞ்சக நெஞ்சத்தால் அஞ்சி உழலும் அடியேனின் பிணியை நீக்குவாய் என்று வள்ளலார் வேண்டுகிறார்.

மேலும், நின் திருவடிகளிடம் அன்பு வைக்காது, அழகிய மனைவியின் மீது மையல் கொண்டு அலைகின்ற பேதைக்கு அருள் புரிவாய் என்று மனம் உருகி வேண்டுகிறார் வள்ளலார். மேலும், வள்ளலார் தம் மனைவியுடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார் என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ள திருவருட்பா இரண்டாம் திருமுறையில் உள்ள வேறு சில பாடல்களின் தொகுப்பை, திருவருட்பா ஆய்வாளர் பா.கமலக்கண்ணன் விளக்கியுள்ளார், அவற்றின் சுருக்கம் சிலவற்றை கீழே காண்போம்.

“அடிமைத்திறத் தலைசல்” எனும் தலைப்பில் ஒப்பார் இல்லாத ஒற்றியூர் அப்பா, உனை மறந்தேன், மனைவியின் மீதுள்ள மயக்கத்தில் விழுந்து உழல்கின்றேன் என்கிறார் வள்ளலார்.

“அவத்தொழில் கலைசல்” எனும் தலைப்பில் ஒற்றியூர் உறையும் உத்தமத் தேவனே, பேய்க் கணங்கள் நிறைந்த சுடுகாட்டில், தீயை ஏந்தி ஆடுகின்ற கடவுளே, கடவுளார்க்கு இறைவனே, மனைவியின் மையலில் மயங்கி எலும்பை கவ்வி உழலும் நாய் போன்று வாழும் எனக்கு நின் அருள் கிட்டும் சுகமும் உண்டாகுமோ? என்கிறார் வள்ளலார்.

“ஞானப்பழமே, கருணைக்கடலே, என் கண்ணே, ஒற்றிக் காவலனே,” மனைவி மீதுள்ள காம வேட்கையால் துன்பம் பிறப்பதற்குக் காரணமான குடும்ப வாழ்வில் வீழ்ந்து இளைத்தேன். இனி என்ன ஆகுமோ? எளியேன் என்ன செய்வேன்? நீ என்னை ஏற்றருள்வாய், என்று கடவுளிடம் வேண்டுகிறார் வள்ளலார்.

“மன்மதனை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே, முத்திக்கு ஆதாரமானவே, நாளைக்கு வரக் கூடியதை நான் அறியேன்.” மனைவி மீதுள்ள மோகத்தால் அலைவுறுகின்றேன். தீமையை நீக்கி நின் திருவடியைக் கூடும் வண்ணம் செய்வாயாக. என இறைவனிடம் வேண்டுகிறார் வள்ளலார்.

என் அரசே, என் மனம் காட்டும் வழியில் சென்று மனைவியோடு காம வாழ்க்கையில் மதிமயங்கி விழுந்தேன். அதிலிருந்து எழுவதற்கு முயல்கின்றேன். நீயன்றி என்னைத் தூக்கி எடுப்பார் எவருமில்லை என்கிறார் வள்ளலார்.

இயல்பான இல்லற வாழ்க்கை நடத்தினார் என்பதற்கு ஆதாரமாக, திருவருட்பா இரண்டாம் திருமுறையில் அமைந்துள்ள மேலும் சில பாடல்களின் விளக்கத்தை சுருக்கமாகக் காணலாம்.

ஊருக்குப் புறத்தேயுள்ள சுடுகாட்டில் இருப்பவரே, திருஒற்றியூர் உடையீர், என் மனம் என்னை உறங்குவது எழுவது, உண்பது, உடுப்பது மனைவியோடு மகிழ்ந்திருப்பது ஆகிய செயல்களில் ஆழ்த்தி சோம்பலுறச் செய்கிறது. இருப்பினும், அடியேன் நீதியுடைய நின் திருவடிகளே அடைக்கலம் என்று அடைந்தேன்; என் வாட்டம் போக்கி ஆட்கொள்ள நினையாது பொய் வேஷக்காரன் என்று ஒதுக்கினால், நான் போகும் வழி யாது? என்று இறைவனிடம் கூறுகிறார் வள்ளலார்.

சிவபெருமானே! அறிவின் பேரின்பமே, ஒற்றியூரம்பனே, போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே, மலரும், மணமும் போன்று நின்ற உன்னைக் கண்டு கொண்டிலேன், மனைவியோடு காம வாழ்வில் சிந்தை நொந்து அயர்கின்றனன்; சிறியருள் சிறியவனாகி நான் என்ன செய்வேன்? எந்த நல்வழியால் நான் உன்னை அடைவேன். ஏதும் தெரியவில்லையே, ஐயோ, நாட்கள் கழிகின்றனவே, என்று சிவபெருமானிடம் முறையிடுகிறார் வள்ளலார்.

அருட்கரும்பே, அன்பனே, நெற்றி நடுநிலை­யிலுள்ள சிவலிங்க வடிவ ஜீவஜோதியே, அரிய அமுதே, திருவாலங் காட்டிலுள்ள அழகனே, ஒற்றித்தலத்தமர்ந்த மாணிக்கமே, எளியேன் மனைவியிடம் கொண்ட மையலால் உழல்கின்றேன். என்ன செய்வேன்? என்ன செய்வேன்? பொல்லாத ஆசையுடையவனாய் இருந்த என்னுடைய வாட்டத்தைக் கண்டும் கருணை புரிந்திலையே. தயவு இல்லாதவர் போல் இருக்கின்றாயே என்கிறார் வள்ளலார்.

கரும்பே, தேனே, ஒற்றியூர் அமுதே, கடவுளே, கருணைக் கடலே, முந்தின பிறப்புகளின் வினைப் பயனால் மனைவியோடு இல்வாழ்க்கையில் கிடந்து இளைத்தேன். ஐயோ, கொடியவனும் அறிவிலிகளிலும் இழிந்த அறிவி­லியுமாகிய நான், நின் திருவடிகளை அடையாமல் என் உயிர்க்கு உறுதியை வேறு எவ்வாறு அடைவதென்று அறியேனே என்று வள்ளலார் ஒற்றியூர் இறைவனிடம் முறையிடுகிறார்.

சத்திய சோதனை நூலான வள்ளலார் அருளிய “திருவருட்பா” வை வாழ்க்கை வரலாறு என்றுதான் சொல்லவேண்டும். தன் வாழ்க்கையை அப்படியே ஒளிவு மறைவு இல்லாமல் பதிவு செய்திருக்கிறார் வள்ளலார். திருமணம் செய்து கொண்டதும், சில ஆண்டுகள் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டதும் உண்மை என்பதற்கு அவரது பாடல்களே சான்றாக இருக்கின்றன. ஆனால், திருமண வாழ்க்கை குறித்து நேராக அவர் விளக்கி கூறாததால்தான் அவரது திருமண வாழ்க்கை குறித்து பல்வேறு விதமாக பேசப்படுகிறது. இயல்பான இல்லற வாழ்க்கை நடத்தினார் என்பதற்கு ஆதாரமாக, திருவருட்பா இரண்டாம் திருமுறையில் அமைந்துள்ள பாடல்களே சான்றாகும்.

வள்ளலார், குடும்பப் பெண்களைப் பழித்துப் பேசியவரல்ல. இல்வாழ்க்கையை வெறுத்து விடுமாறு பிறருக்கு உபதேசித்தவருமல்லர். சிவபக்தி காரணமாகத் திருமணம் செய்து கொள்ள மறுத்த தம் சீடர் ஒருவருக்கு அவர் எழுதிய கடிதத்தில், “சந்தோஷமாக விவாகத்துக்குச் சம்மதிக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். வள்ளலார் இல்வாழ்க்கையை துறந்த சந்நியாசத்தை ஆதரிக்காதவர்.

ஆண், பெண் சமத்துவமும் சுத்த சன்மார்க்கத்தின் குறிக்கோள்களுள் ஒன்று என விதி வகுத்தார். ஆண்-பெண் என்னும் பேதம் கூட நம்மில் எவருக்கும் தோன்றக் கூடாது என்கிறார் வள்ளலார்.

'பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி (அகவல் 703-74)

என்று அகவலில் குறிப்பிடுகிறார், மேலும், ஆண்-பெண் பால் வேற்றுமை உடலை பொருத்ததேயன்றி ஆன்மாவைப் பொறுத்ததன்று என்கிறார் வள்ளலார்.

“பெண்ணியல் மனமும் ஆண் இயல் அறிவும்

அண்ணுற வகுத்த அருட்பெரும் ஜோதி!

ஆண்-பெண் இருபாலரிடமும் பெண் தன்மையான இளகிய மனமும், ஆண் தன்மையான தெளிந்த உறுதியான அறிவும் ஒன்று பட்டிருக்கும்படி செய்த அருட்பெருஞ் ஜோதியே!

தனித்தனி வடிவனும் தக்க ஆண் பெண் செயல்

அனைத்துற வகுத்த அருட்பெரும் ஜோதி

ஒவ்வொரு ஆண் பெண்களிடமும் சிறந்த ஆண் தன்மைகள், பெண் தன்மைகள் அனைத்தும் அமைந்திடும்படி செய்த அருட்பெரும் ஜோதியே

இவ்வாறு, ஆண் பெண்கள் இருவரிடம், இது தன்மையான குணத்தாலும் உண்டென்று கூறுகிறார். இதனால் இருபாலாரும் சமத்துவமுடன் வாழத் தகுதியுடையவர்கள் என்பதே வள்ளலார் உள்ளம்.

பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தவர்களில் வள்ளலார் மிக முக்கிய முன்னோடியாகத் திகழ்ந்தார். தமது உரைநடை நூல்கள் மூலம் பெண் கல்வியை ஆதரித்துப் பேசியிருக்கிறார். ஆணையும் பெண்ணையும் சரிசமமாகவே கண்டார். வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமல்ல, மெய்யான கல்வி பெறவும் பெண்கள் தகுதி உடையவர்கள் என்பது வள்ளலாரின் முடிவான கருத்தாகும்.

இல்லறத்தார்க்கான பாலியல் ஒழுக்காறுகள்

இல்லறத்தார்க்கான பாலியல் ஒழுக்காறுகளைப் பற்றிய தனது உபதேசங்களை வள்ளலார் உரைநடைப் பகுதியில் குறிப்பிட்டுள்ளார். அதனை சுருக்கமாக காணலாம். பெண்களுடன் தேக சம்பந்தம் செய்ய வேண்டில், முன் ஒரு நாழிகை பரியந்தம் மனதைத் தேக சம்பந்தத்தில் வையாது வேறிடத்தில் வைத்து பின் சம்பந்தஞ் செய்வதற்குத் தொடங்கல் வேண்டும் என்கிறார் வள்ளலார். இரவில் தேக சம்பந்தம் 4 தினத்திற்கொரு ஒரு விசை செய்தல், அதிக பட்சம் 8 தினத்திற்கொரு விசை செய்தால் மத்திமபக்ஷம். 15 தினத்திற்கொரு விசை செய்தல் உத்தம பக்ஷம். படுக்கும்போது இடது கை பக்கமாகவே படுத்தல் வேண்டும். மிருதுவாகவே நித்திரை செய்து விழித்துக் கொள்ளல் வேண்டும். பாலியல் ஒழுக்காறுகளைப் பற்றி வள்ளலார் மிகத்தெளிவாக தனது உரைநடைப் பகுதியில் சுட்டிக் காட்டியுள்ளார்.

“நித்திய கரும விதி,” என்ற தன்னுடைய உரைநடைப் பகுதியில் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய அனைத்து வகையான செயல்பாடுகளையும் விளக்கி, காலை எழுந்தவுடன் செய்ய வேண்டிய பணிகள் முதல், இரவு படுக்கும் முன் செய்ய வேண்டிய பணிகள் வரைமுறைப்படுத்தி உள்ளார் வள்ளலார்.

வள்ளலாரின் சன்மார்க்கக் குறிப்புகளில், மிகவும் முக்கியமான பகுதி சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம். ஒழுக்கம் என்பது விதி அல்லது வாழ்வியல் அறம் என்பதாகப் பொருள் கொள்ளலாம்.

19-ஆம் நூற்றாண்டில் தம்மைச் சார்ந்த சன்மார்க்கிகளுக்கு ஒழுக்க விதிகளை வகுத்தார் வள்ளலார்.

குடும்ப வாழ்க்கையில் வள்ளலார் ஈடுபட்டதின் விளைவாக எழுந்ததுதான் அவரின் இல்லறவியல் உபதேசங்கள்.

தேர்வு நூற்பட்டியல்

1.           டாக்டர் ச.மெய்யப்பன், வள்ளலார் வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், 31. சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 4108, நவம்பர் 2010.

2.           ஊரன் அடிகள், புரட்சித்துறவி வள்ளலார், சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், மனை எண் 64, முருகேசன் சாலை, என்.எல்.சி ஆபிசர்ஸ் நகர், வடலூர், 607303, கடலூர் மாவட்டம்.

3.           மாசிலா. துரைசாமி, புதுமைப் புரட்சியாளர் வள்ளலார், மணிவாசகர் பதிப்பகம், 31 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108.

4.           ம.பொ.சிவஞானம், வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, பூம்புகார் பதிப்பகம், பிராட்வே, சென்னை 600 108.

5.           சாமி. சிதம்பரனார், வடலூரார் வாய்மொழி, சித்தக்கடல், யி.6 லா­யிட்ஸ் காலனி. அவ்வை சண்முகம் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14.

6.           ராஜ்கௌதமன், கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக... தமிழினி 63. நாச்சியம்மை நகர், சேலவாயல், சென்னை-15

7.           பழ.நெடுமாறன், வள்ளலார் மூட்டிய புரட்சி, ஐந்திணை வெளியிட்டகம், 4.ஏ./29. முகமதியர் தெரு, மந்தக்கரை, விழுப்புரம், 605 602.

8.           டாக்டர் மு.நீலகண்டன், வள்ளலாரின் சமூகச் சிந்தனைகள், கனிஷ்க புத்தக இல்லம், சென்னை 600 072.

9.           ப.சரவணன், நவீன நோக்கில் வள்ளலார். காலச்சுவடு, 669. கே.பி சாலை, நாகர் கோயில், 629 001.

10.         திரு அருட்பிரகாச வள்ளலார் வரலாறு, வெளியீடு திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம். வடலூர் தமிழ்நாடு.

11.         ப.சரவணன், அருட்பிரகாச வள்ளலார், விகடன் பிரசுரம் 757, அண்ணா சாலை சென்னை, 2.

12.         கதிரவன் கட்டுரை, வாழ வழி காட்டும் வள்ளலார், தின இதழ் பத்திரிக்கையில் வந்த கட்டுரைகள், நாள் மே 27, 28, 29, 30, 31, ஜூன் 1, 2, 3, 4, - 2015.

13.         திரு அருட்பிரகாச வள்ளலார் அருளிய திரு அருட்பா - உரை நடைப்பகுதி வெளியீடு திரு அருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர், 607 303.

- டாக்டர் மு.நீலகண்டன்

Pin It