காதைப் பிளக்கும் இசை ஒலிக்க, பெரும் கூட்டத்தோடும், பெரிதும் அழகிய பெண்களோடும் களிநடனம் புரிவோர் சிலர்; காவி உடையோடு கடும் ஓக இருக்கைகளை (யோகாசனம்) செய்த வண்ணம் காட்சியளித்துக் கொண்டு பெருவணிகம் செய்வோர் சிலர்; அமைச்சர் பெருமக்களையும், அரசியல் விளையாட்டுக்காரர்களையும், அளவிலாச் செல்வம் படைத்தோரையும் அருமந்த சீடர்களாகக் கொண்டவர்களாகச் சிலர்; தேர்தல் வெற்றிக்கும் பெரும்பணம் ஈட்டலுக்கும் ஆசி வழங்குவோராகச் சிலர்; இவ்வாறான அவதார புருசர்களைத்தான் நாட்டில் பெரு மதிப்போடு திகழ்வோர்களாக அன்றாடம் கண்டு வருகிறோம். மகரிஷி, சுவாமிகள், ஆதீனங்கள், பகவான்களையும் அவர்களது ஆரவாரமான நடவடிக்கைகளையும் -மலைத்துபோய் நிற்கும் வண்ணம் வழிபாட்டுச் சின்னங்களை நிறுவிக் கொண்டும், மாடமாளிகைகளை வாழ்விடங்களாகக் கட்டிக் கொண்டும், விலையுயர்ந்த தரைஊர்திகள், வானூர்திகள் எனப் பயண ஏற்பாடுகளைக் கொண்டவர்களாகவே அன்றாடம் கண்டு வருகிறோம், அறிந்து வருகிறோம்.

ஆனால், இந்தக் கோளாறுகளுக்கு முற்றிலும் மாறான ஒருவர் வாழ்ந்திருந்தார்; அவர் தன்னை வளர்ப்பது நோக்கம் என்று கருதுகிற இவர்களைப் போல் அல்லாமல் சமூகத்தைப் பற்றிச் சிந்திப்பவராக, மூடநம்பிக்கைகளில் - மூட பக்தியில் இருந்து விடுபட்டவர்களாகவும் பசிப்பிணி அற்றவர்களாகவும் மக்கள் இருக்க வேண்டும் என்ற பெரும் நோக்கம் கொண்டவராக இருந்தார் - இன்றைய புரட்டர்களைப் போல வேதம், புராணம், இதிகாசம் என மக்களை மதிமோசம் செய்யாமல், அவற்றை அம்பலப்படுத்தி மக்களை மீட்டவராக இருந்தார். அவர் தான் வள்ளலார். அவர் வாழ்ந்த காலகட்டம், வாழ்ந்த பகுதி ஆகியவற்றோடு பொருத்தி அவரை மதிப்பிட்டால் அந்த காலகட்டத்தின் அந்த நிலப்பகுதியின் மாமனிதர் அவரே ஆவார்.

துறவு வாழ்க்கைதான்; ஆனால் காவி உடையைத் தவிர்த்து வெள்ளுடையோடு வாழ்ந்தார். அவர் கோவிலை நிறுவிடவில்லை; ஞான சபையை நிறுவினார். அதிலும் விக்கிரகம், உருவம் என எதனையும் நிறுவவுமில்லை; உருவ வழிபாடு ஒழித்து ஒளி வழிபாட்டினை வலியுறுத்தினார்.

vallalarஅதுவும் “தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும். பித்தளை முதலியவற்றாற் செய்த குத்துவிளக்கு வேண்டாம். மேலேற்றுகின்ற குலோப் முதலிய விளக்குகள் வேண்டாம்” என்றார். வழிபாட்டுக்கான விளக்கினை ஏற்றவும்கூட நிரந்தரமாய் ஒருவரை நியமிக்காமல் தகுதியுள்ள ‘நம்மவர்கள்’ தேகசுத்தி கர்ணசுத்தி உடையவர்களாய் திருவாயிற் புறத்திலிருந்து விளக்கேற்றி, பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது 72 வயதுக்கு மேற்பட்ட பெரியர்க் கையில் கொடுத்தாவது உட்புறத்தில் வைக்கச் சொன்னார். அவர் சத்திரங்களை நிறுவிடவில்லை; தருமசாலையை நிறுவினார். அவர் விரதங்களைப் போதித்துப் பட்டினி கிடக்கச் சொல்லவில்லை; பசிப்பிணி அகற்றப் பணியாற்றினார். மற்ற மத வேடம் போடுவோர் போல ஆடம்பரங்களை விலக்கி....

கையுற வீசி நடப்பதை நாணி

கைகளைக் கட்டியே நடந்தேன்

மெய்யுறக் காட்ட வெருவி வெண்துகிலால்

மெய்யலாம் ஐயகோ மறைத்தேன்

என்று வாழ்ந்தார். தங்களைத் துறவிகளாகக் காட்டிக் கொள்ள மரத்தால் ஆன பாதக்குறடு அணிந்தோர் பலர்; ஆனால் இவரோ ஆற்காடு சோடு என்ற காலணிகளை அணிந்தவராகத்தான் வாழ்ந்தார்.

1866 ஆம் ஆண்டு மார்ச் திங்களில் இறுக்கம் இரத்தின முதலியார் என்பவர் வள்ளலாரின் சில திருவருட்பாக்களை வெளியிடுகிறபோது, வள்ளலாரின் பெயரை இராமலிங்க சுவாமிகள் என்று குறிப்பிட வேண்டிக் கடிதம் எழுதினார். அதற்கு மறுமொழி எழுதிய வள்ளலார், “இராமலிங்க சுவாமி என்று வழங்கி வைப்பது என் சம்மதம் அன்று; என்னை? ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில். இனி அங்ஙனம் வழங்காமை வேண்டும். ஜீவகாருண்ணியமும் சிவானுபவமும் அன்றி மற்றவைகளை மனதின்கண் மதியாதிருத்தல் வேண்டும்” என்று சிதம்பரம் இராமலிங்கம் என்ற பெயராலேயே தன்னை அறிவித்துக் கொண்டார்; கையொப்பம் இட்டார்.

அவர் பல நிறுவனங்களை நிறுவினார். 1865 ஆம் ஆண்டில் ‘சமரச வேத சன்மார்க்க சங்கம்’ என்ற ஒரு அமைப்பினையும், 23.5.1867இல் ‘சமரச வேத தர்மச் சாலை’ என்பதையும், 25.1.1872ல் ‘சத்திய ஞான சபை’யையும் நிறுவினார். ஆனால் அதன் பின்னர் 18.7.1872இல் ஓர் அறிவிப்பினைச் செய்தார்.

“இன்று தொடங்கி சபைக்கு ‘சமரச சுத்த சத்திய ஞான சபை’ என்றும், சாலைக்கு ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய தர்மச்சாலை’ என்றும், சங்கத்திற்கு ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்’ என்றும் திருப்பெயர் வழங்குதல் வேண்டும்” என்று அறிவித்தார்

சன்மார்க்க சங்கத்தின் பெயரிலிருந்து ‘வேத’ என்ற சொல்லை நீக்கிவிட்டு ‘சுத்த’ என்ற சொல்லைச் சேர்க்கிறார். அதற்கான காரணத்தைக் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

சமய மார்க்கங்களில் அடிமையாக பாவித்தல், புத்திரனாக பாவித்தல், சினேகிதனைப் போல் பாவித்தல், தன்னைப்போல பாவித்தல் என்று சொல்லப்படும் தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் எனும் சமய மத சன்மார்க்கங்களின் முடிவாக உள்ளது சன்மார்க்கம்.

வேதாந்த, சித்தாந்த, யோகாந்த, கலாந்த, போதாந்த, நாதாந்த என்ற ஆறு (ஜடாந்த) சமரசங்கள் ஆகியவற்றின் முடிவாகிய சன்மார்க்க சமரசம். அவற்றின் உச்சம் சுத்த சமரசம். இவற்றை ஒன்று சேர்த்ததால் வருவது சுத்த சமரச சன்மார்க்கம். இவற்றை கடை தலைப்பூட்டு (பூர்வோத்தர நியாயம்) என்ற இலக்கண வகையால் சமரச சுத்த சன்மார்க்கம் என ஆயிற்று என்று விளக்குகிறார்.

சமரசம் என்பது அனைத்து முடிவுகளின் முடிவைத் தொடக்கமாகக் கொண்ட நிறைவானக் கூட்டு என்று விளக்குகிறார். ‘சுத்த’ என்ற சொல் ஏன் வந்தது என்பதையும் எடுத்துக்காட்டுகளோடு விளக்குகிறார். “விந்து பரவிந்து இரண்டையும் மறுக்க சுத்த விந்து வந்ததைப் போலவும், சிவம் பரமசிவம் இரண்டையும் மறுக்க சுத்தசிவம் வந்தது போலவும், சன்மார்க்கம் சிவ சன்மார்க்கம் இரண்டையும் மறுப்பதே சுத்த சன்மார்க்கம்; தொடக்கத்தில் விளங்கிய சமய சன்மார்க்க, மத சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம்” என்கிறார்

ஆக சமயம் மதம், வேதாந்தம் சித்தாந்தம் யோகாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம் கலாந்தம் ஆகியவற்றின் நிறைவான நிலையே சமரச சுத்த சன்மார்க்கம் என தனது உபதேசக் குறிப்புகளில் விளக்குகிறார் வள்ளலார். சுருக்கமாக ‘மத சமயங்களையும், வேதாந்தம் சித்தாந்தம்’ என்ற கருத்துகளையும் மறுத்து எழுந்ததுதான் சமரச சுத்த சன்மார்க்கம் என்பதை உறுதியாக நிறுவுகிறார் வள்ளலார்.

வள்ளலாரின் இறுதிக் காலகட்டத்தில் 22.10.1873 அன்று (அவர் மறைந்தது 30.1.1874) காலை 8 மணிக்கு சித்தி வளாகத்தில் அவர் ஆற்றிய உரை ‘பேருபதேசம்’ என்ற பெயரால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் கூறுவதையும் பார்ப்போம்.

“நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனென்றால் அவைகளில் ஒன்றிலாவது குழூஉக் குறி யன்றி தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். அணு மாத்திரமேனும் தெரிவிக்காமல், பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும், வைகுண்டபதி என்றும், சத்தியலோகாதிபதி என்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலிவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லி யிருக்கிறார்கள். “தெய்வத்துக்கு கை கால் முதலியன இருக்குமா?” என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பவதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறி இருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்மசித்திகளை கற்பனைகளாக சொல்லி இருக்கிறார்கள்...........................

....சமயம் தவிர மதங்களில் உள்ள வேதாந்தி, சித்தாந்தி, என்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை அறியாது, சமயவாதிகள் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள்”. ........................ ............................ என்று கூறியவர் நகைகள் அணிவதைப் பற்றி,

“இப்படியே “காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் (கடவுள்), ஆணுக்குக் கடுக்கனிடுதலும், பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்கு சம்மதமானால் காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா?’ என்று விசாரித்துத் தெரிந்து கொள்கின்ற பட்சத்தில், காதில் கடுக்கனிடவும், மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா? - என்ற கேள்விகளை எழுப்புகிறார் வள்ளலார். இவற்றைப் படித்துணர்ந்தாலே வள்ளலாரின் கருத்து என்னவாக இருந்தது என்பதை நம்மால் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.

மேற்கூறியவாறு ‘பேருபதேசம்’ என்ற உரையில் அவர் குறிப்பிட்டதைப் போலவே ‘விண்ணப்பங்கள்’ என்ற தலைப்பில் சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம் / பெரு விண்ணப்பம் என்ற இரண்டு விண்ணப்பங்களை எழுதி வைத்துள்ளார்

அவற்றில் ‘சிறு விண்ணப்பம்’ என்பதன் நிறைவுப் பகுதியில் “எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனதில் பற்றாதவண்ணம் அருள் செய்ய வேண்டும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருள வேண்டும்” என மத, சமய, வருணாசிரம ஆசாரங்கள் மக்களுக்கு எவ்வளவு கேடு விளைவிப்பவை என்றுணர்ந்து எச்சரிக்கை செய்கிறார்.

இவை மட்டுமின்றி ‘பெரு விண்ணப்பத்’தில் வள்ளலார் தனது நாட்டுப் பற்றையும், மொழி பற்றையும் ஒருவாறாக பதிவு செய்திருக்கிறார்.

“சுத்த சன்மார்க்க இலட்சிய சத்திய ஞானக் கடவுளே! ஜீவர்களாற் கணித்தறியப்படாத பெரிய உலகின் கண்ணே, பேராசை, பெருங்கோபம், பெருமதம், பெருலோபம், பேரழுக்காறு, பேரகங்காரம், பெருவயிரம், பெருமடம், பெருமயக்கம் முதலிய பெருங்குற்றங்களே பெரும்பாலும் விளைவதற் குரிமையாகிய மற்றைய யிடங்களில் பிறப்பியாமல், குணங்களே பெரும்பாலும் விளைதற்குரிய இவ்விடத்தே உறுப்பிற் குறைவு படாத உயர்பிறப்பாகிய இம்மனிதப் பிறப்பில் என்னைப் பிறப்பித்தருளிய தேவரீரது பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!” என்று கூறி தமிழ் நாட்டில் தன்னைப் பிறப்பித்தற்காக நன்றி கூறிக் கொள்ளுகிறார்.

அதுபோலவே மொழி குறித்துக் கூறுகையில், “இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பிரயாசத்தையும், பெரும் மறைப்பையும், போது போக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசு உடையதாய்ப், பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய், சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றனிடத்தே மனம் பற்றச் செய்து அத்தென் மொழிகளாற் பல்வகை தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர்!” என்று தமிழ் மொழியின் மீது தனக்குப் பற்று ஏற்படச் செய்ததற்காகத் தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.

மற்றொரு வாய்ப்பில் “தமிழ்” எனும் சொல்லுக்கு இட்ட உரை’ எனும் உரையின் செய்தியும் வள்ளலாருக்கு இருந்த தமிழ் மொழி மீதான பற்றினை வெளிப்படுத்துவதாக உள்ளது. மொழிப் பற்று என்பது தனது மொழி என்ற காரணம் மட்டுமின்றி அதன் எளிமை, இனிமை, சிறப்பு எழுத்துகள் போன்ற காரணங்களாலும் அமைந்தது என்பதையும் இரண்டு இடங்களிலும் எடுத்துரைக்கிறார். அந்த பகுதியே இதுவாகும்.

“ஆரியம், மகாராட்டிரம், ஆந்திரம் என்ற பற்பல பாஜைகளை போலாகாமல், பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாயும், ஒலி இலேசாயும், கூட்டென்னுஞ் சந்தி அதிசுலபமாயும், எழுதவும், கவி செய்யவும் மிக நேர்மையாயும், அட்சர ஆரவாரம், சொல் ஆடம்பரம் முதலிய பெண்மை அலங்காரமின்றி எப்பாஜையின் சந்தசுகளையும் தன் பாஜையுள் அடக்கி ஆளுகையால் ஆண் தன்மையைப் பொருந்தியதுமான தன்பாஜைக்கே அமைவுற்ற ழ்,ற்,ன் என்னும் முடி நடு அடி சிறப்பியல் அக்கரங்களில் முடிநிலை இன்பானுபவ சுத்த மோனாதீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கை உண்மைத் தனி தலைமை பெருமைச் சிறப்பியல் ஒலியாம்.

இதன் கருத்து யாதெனில் தமிழ்ப் பாஜையே அதிசுலபமாகச் சுத்த சிவானுபூதியை கொடுக்கும் என்பதாம்.” ­“தமிழ்” என்னும் சொல்லுக்கு இட்ட உரை’ - ( இக்கட்டுரை வள்ளலார் சென்னையில் வாழ்ந்த காலத்தில் - 1858க்கு முன்னர் - சங்கராச்சரியாருடன் அளவளாவ நேரிட்டபோது அவர் சமஸ்கிருதமே “மாத்ரு பாஜை” எனக் கூறி சமஸ்கிருதத்தைச் சிறப்பித்துக் கூறியபோது, வள்ளலார் அப்படியாயின் “தமிழ் பித்ரு பாஜை” என்று மறுமொழி கூறியதாக ஒரு செய்தி உண்டு. அதன் தொடர்ச்சியாக வள்ளலார் ஆற்றிய உரையாக இது கருதப்படுகிறது.)

மேற்குறிப்பிடப்பட்ட ‘பெரு விண்ணப்பத்’தில், மேலும் “அச்சிறு பருவத்திற்றானே ‘ஜாதி ஆசாரம், ஆசிரம ஆசாரம் என்னும் பொய்யுலக ஆசாரத்தைப் பொய்யென்று அறிவித்து அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து, அப்பருவம் ஏறுந்தோறும் ஏறுந்தோறும் எனதறிவை விளக்கஞ் செய்து செய்து என்னை மேனிலையில் ஏற்றி ஏற்றி நிலைக்க வைத்தருளினீர்!” என்று குறிப்பிட்டுள்ளார். தனது அருட்பா பாடல்களிலும்,

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே 
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே 
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் 
அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே!
 
நால்வருணம் ஆச்சிரம ஆசாரம் முதலாம் 
நவின்ற கலை சரிதம் எல்லாம் பிள்ளை விளையாட்டே 
 
..................................... 
 
வேதநெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள் 
விளம்புநெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும் 
ஓதுகின்ற சூதனைத்தும் உள அனைத்தும் காட்டி 
உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே 
கலையுரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் 
கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக ...

போன்ற செய்திகள் விரவிக் கிடக்கின்றன.

தனது ‘பேருபதேசத்’திலும் “சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும், லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றி குழூஉக் குறியாக குறிக்கின்றதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச் சமய மதங்களிலும் அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக் கூடுமே யல்லது ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கை யுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்கு காலமில்லை. மேலும் இவைகளுக்கெல்லாம் சாட்சி நானே இருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்து சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும். அந்த லட்சியம் இப்போது எப்படி போய்விட்டது பார்த்தீர்களா! அப்படி லட்சியம் வைத்ததற்கு சாட்சி வேறே வேண்டியது இல்லை. நான் சொல்லியிருக்கிற திருவருட்பாவில் அடங்கி இருக்கிற ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவருடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாட்சி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் சொற்ப அறிவாக இருந்தது.”

இவ்வாறு வள்ளலாரின் சைவம் பற்றிய சிந்தனைகளிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் கண்ட, யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் போன்ற பிறப்பாலும், பின்பற்றுகிற சமயத்தாலும் சைவர்கள் என்று கூறப்படுபவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வள்ளலாரின் பாடல்களை ‘அருட்பா’ என்று சொல்லாகாது; அவை ‘போலி அருட்பா’ ‘மருட்பா’ என மறுத்தெழுதவும், நீதிமன்றத்துக்கே சென்று வழக்காடவும் செய்தது; ஏன், வள்ளலாரின் மனைவியைப் பற்றியும் எடுத்தெழுதவே கூசும் சொற்களால் எழுதவைத்தது. “கணக்கன் இராமலிங்கம் பிள்ளையை வள்ளலார் என்றும், அவர் பாடல்களை அருட்பா என்றும் ஒப்புவதா?” “இராமலிங்கம் பிள்ளை தம்முடைய சாதி கீழாய் இருத்தல் கொண்டே சாதி, குலம், சமயம், மதம் ஆகியவற்றை மறுக்கிறார்” என்றெல்லாம் மன நிலை பிறழ்ந்தவனுக்கு கள் ஊற்றியதைப் போல உளற வைத்தது.

இவை போல தனது அருட்பாவிலும், கட்டுரைகளிலும், உரைகளிலும் மதங்களை, வேதங்களை, வருணத்தை, ஆசிரமத்தை, சாதியை, கண்மூடி வழக்கங்களை எல்லாவற்றையும் அம்பலப்படுத்தி எழுதிய பாடல்கள் ஏராளம் ஏராளம்.

இந்தியத் துணைக் கண்டத்தில் இவ்வாறாக வேதங்களை, வேத மரபுகளை, வருணாசிரமப் பிரிவினையை, மூடநம்பிக்கைகளை அழித்தொழித்து ஒரு சமத்துவ அறிவார்ந்த சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்று முதன் முதலில் போதித்தவர் புத்தரே ஆவார், அப்படிப்பட்ட புத்தர் மறைவுக்குப் பின்னால் நடந்த மாற்றங்களை, திரிபுகளை நாம் அறிந்திருக்கிறோம். குறிப்பாக புத்தர் மரணத்துக்கு 8 ஆண்டுகளுக்கு முன் சதவானி மலைக்குகைக்கு முன்னால் கூடிய பேரவை, பல புதிய கருத்துக்களை முன்வைத்து திருத்தங்களை செய்து கொண்டது. ஆனால் அதன் பின்னர் பார்ப்பனர்கள் புத்த சங்கத்துக்குள் நுழையத் தொடங்கி விட்டார்கள்.

புத்தர் முடிவெய்தி நூறாண்டுகளுக்குப் பின்னர் வைசாலியில் இரண்டாம் பௌத்தப் பேரவை கூடியது. அதில் தங்கம் வெள்ளி போன்றவற்றைத் தானமாக பெறக் கூடாது என்று பிக்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த விதிகளில், தானமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்ற ஓரு திருத்தத்தைப் பார்ப்பனப் பிக்குக்கள் முன்மொழிந்திருக்கிறார்கள். ஆனால் அப்பேரவைக்கு தலைமை தாங்கிய ரேவதர் எனும் பிக்கு அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பார்ப்பனப் பிக்குகள் ‘வஜ்ஷியத் துறவிகள்’ என்ற பெயரால் தனியாக இயங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

தொடர்ச்சியாக 400 ஆண்டுகளில் பௌத்தம் ஏறத்தாழ 100 பிரிவுகளாகப் பிரிந்து விட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஆனால் 18 பிரிவுகளைப் பற்றித்தான் குறிப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்கள். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆந்திரத்திலிருந்து நாகார்சூனா என்ற பார்ப்பனப் புத்த பிக்கு முன்னணிக்கு வந்து ‘மகாயானம்’ என்ற ஓரு பிரிவினை உருவாக்கினார். அதில் ‘மாயா வாதம்’ என்ற ஒரு தத்துவத்தை முன்வைத்தார். அதனைத் தேவி சட்டோபாத்தியாய என்ற ஆய்வாளர், புத்தரின் ‘பொருளிய நாத்திகத்’திற்கு முற்றிலும் எதிரான தத்துவமாக எடுத்துரைக்கிறார். ஆனால் அந்த மகாயானப் பிரிவுதான் மற்ற புத்த மதப் பிரிவுகளை உள்வாங்கி பெரும் மதமாக எழுந்தது. அதற்குப் பின்னால் புத்தர் கடவுளாக்கப்பட்டதும், புத்த பிக்குகள் சொகுசு மாடிகளில் ஆடம்பரமாக வாழவும் பல்சுவை உணவுகளை உண்பவர்களாகவும் மாறிப்போனார்கள். அது சமயம் இந்தியா வந்த சீனப் பயணி பாஹியான் எழுதிய பயணக் குறிப்பில் ஒரு செய்தியைக் கூறுகிறார். பாடலிபுத்திரத்திலிருந்த அரசர், புத்த பிக்குகளைச் சந்தித்தால் அவர்களுடைய கைகளைத் தொட்டு தன் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வது வழக்கம். பவுத்தச் சங்கத்திலிருந்த பார்ப்பனப் புத்த பிக்குகள் அவ்வாறு கைகளைத் தொட்டு வணங்கிய அரசர் சென்ற பின்னால், தலை முதல் கால் வரை முழுமையாகக் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்று பதிவு செய்துள்ளார் பாஹியான்.

அவைபோன்ற திரிபுகள், வள்ளலார் காலத்திலேயே சன்மார்க்க சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ஆடூர் சபாபதி குருக்கள் என்பவரால் பிற்காலத்தில் செய்யப்பட்டது.

வள்ளலாரை ஆடூர் சபாபதி குருக்கள் சந்தித்தது 1869 ஆம் ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதத்தில் இருக்கலாம் என்று பதிவுகள் கூறுகின்றன. அவர் வள்ளலாரைச் சந்தித்தபோது “தனக்கு ஜாதி சமய முதலான பேதங்கள் இல்லை” என்று கூறி, தான் பிரதி தினமும் சபையிலிருந்த பெட்டிக்குத் தீபாராதனை செய்வதாய் விண்ணப்பித்துக் கொண்டார்; அப்படி இருந்தால் செய்யலாம் என்று வள்ளலார் அனுமதித்துள்ளார். அதுமுதல் அவர் தன் ஆசாரங்களை விட்டு, பூணூல் முதலியதை நிவர்த்தி செய்து, பிறகு தினமும் சாயந்திரம் பார்வதிபுரத்திலிருந்து வள்ளலார் இருப்பிடம் ஆகிய மேட்டுக்குப்பத்திற்குப் போய் தீபாராதனை செய்துவிட்டு உடனே தன் இருப்பிடத்திற்குப் போய்விடுவார் என்று தான் பதிவுகள் கூறுகின்றன.

வள்ளலார் இறுதியாக ஒர் அறையில் போய்த் திருக்காப்பிட்டுக் கொள்ளும் தருணத்தில் வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார் தன் ஜமீனுக்கு போயிருந்தபடியால் ஜமீன்தார் இன்னும் வரவில்லையா? என்று வினவி இருக்கிறார்கள். அதைக் கேட்டிருந்த குருக்கள் உடனே ஜமீனுக்குப் போய் வள்ளலார் சொல்லாத சில கற்பனையான வார்த்தைகளை அவருக்குச் சொல்லி வீண் தொந்தரவைக் கொடுத்து ஜமீன்தாரை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அதை வள்ளலார் அறிந்து அவரை நோக்கி ‘நூலெனிலோ கோல் சாயும்’ என்ற வாக்கியத்தைச் சொல்லி “பிராமணர்கள் தவிர மற்ற இதர ஜாதியாருக்கு இந்தத் துணிவு வராது” என்றார்களாம். இவருடைய சகவாசத்தினால் மேற்படி ஜமீன்தாருக்கு கேடுகள் நேரிடலாம் என எண்ணி இவரை உடனே ஊருக்கு போய் விடும்படி கட்டளையிட்டார்கள். சொற்களைக் கேட்டு நாணமுற்ற அவர் வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் வரையில் வெளியூர்களில் போய் சஞ்சாரம் செய்து கொண்டு இருந்து திருப்பூட்டு இட்டுக்கொண்ட மூன்றாம் நாள் சாலைக்கு வந்து சேர்ந்துள்ளார்.

அவ்வாறு சாலைக்கு வந்து சேர்ந்து 15 நாட்களுக்குள் வள்ளலாருடைய உத்தரவின் படி சில ஏழைகளைக் கைவிடாமல் காப்பாற்றிக் கொண்டிருந்த காரியஸ்தர் உடைய மனதையும் கெடுத்து, அதுவரை பாதுகாத்துக் கொண்டிருந்த ஏழைகளை முற்றும் கைவிடச் செய்து ஜமீன்தாருக்கு காரியஸ்தராக இருந்த கனகசபைப் பிள்ளை என்பவர் மூலமாக ஜமீன்தாரை தன் வசப்படுத்திக் கொண்டிருக்கிறார் குருக்கள்.

ஜமீன்தாரிடம் “நீங்கள் சமரச சன்மார்க்க மரபில் விழுந்து பாவியாய் விட்டீர்கள் என்று உங்களுடைய இனத்தார் நீக்கி வைத்திருக்கிறார்கள் அவர்களை எல்லாம் சரி செய்கிறேன்” என்று சொல்லி அந்த ஜமீனிலிருந்த ஓர் ஆலயத்திற்கு கும்பாபிஜேகம் செய்யத் தந்திரமாக அவரைத் தூண்டி, விரோதப்பட்டிருந்த அவருடைய உறவினர்களான குருக்கள்மாரை வரவழைத்து அந்த ஜமீன்தாரை வேண்டிய செலவுகள் செய்வித்து அந்த குருக்கள்மார்களுக்கு வேண்டிய பொருள் உதவியும் செய்வித்தார்.

மேலும் அந்த ஜமீன்தாருக்கு குழந்தை இல்லாமல் இருந்ததால், நவக்கிரக சாந்தி செய்தித்தால் சந்ததி உண்டாகும் என்று ஆசை காட்டி, ஜமீன்தார்வழியாகப் பணம் பெற்று வசப்படுத்த வேண்டிய குருக்கள்மாரை எல்லாம் வரவழைத்து அவர்களுக்கு வேண்டிய பொருள் உதவி செய்வித்துள்ளார். இப்படி பல தந்திரத்தால் தன்னை நீக்கி வைத்திருந்த குருமார்களை எல்லாம் வசப்படுத்தி ஜமீன்தாரால் வேண்டிய பொருள் உதவி பெற்று இராமேஸ்வரம் முதலான இடங்களுக்குப் போய் தான் சன்மார்க்கத்தில் நின்ற தோஜத்தை நிவர்த்தி செய்து கொண்டு வந்து, தன்னால் பலன் பெற்ற குருக்கள்மாரை வரவழைத்து அவர்கள் வழியாக ‘சிவாச்சாரியார்’ என்ற பட்டத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். தர்ம சாலையில் இருந்தவரை சபாபதி குருக்களாக இருந்தவர் வள்ளலார் மறைவுக்குப் பின்னர் சபாபதி சிவாச்சாரியார் ஆகிவிட்டார்.

வள்ளலார் அவர்களாலேயே “இன்று தொடக்கம் சபையை சமரச சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபை என்று வழங்க வேண்டும்” என்று கூறிய கட்டளைக்கு விரோதமாக ‘ஞானந்தவல்லி ஆனந்த நடராஜர் வீற்றிருக்கும் சபை’ என்று அடியோடு பெயரை மாற்றி அறிவித்துள்ளார். வள்ளலார் வழிகாட்டலுக்கு எதிராக அறைக்குள்ளே நிலை கண்ணாடியை நாட்டி அதற்குள் ஒர் அகண்டத்தை வைத்து, பித்தளை முதலியவற்றால் செய்த குத்து விளக்குகளாலும், மேலே ஏற்றுகின்ற குளோப்புகளாலும் அலங்காரம் செய்து திரையைத் தூக்கி இதுவரையில் யாரும் பாராத அற்புதமான தீபத்தைக் காட்ட ஆரம்பித்தார். அதோடு மட்டுமில்லாமல் அந்த ஒளி விளக்கைக் காட்டும்போது ஒரு பக்கம் ‘பரிசுத்தமான’ பிராமண கும்பல்கள் வேத கோஜம்; மற்றொரு பக்கம் தோத்திர கும்பல்களின் பெரும் கூச்சல்; ஒரு பக்கம் சுடலும் மத்தள ஓசை; ஒரு பக்கம் மணிகளின் ஓசை; ஒரு பக்கம் பிரம்ம தாளத்தின் ஓசை; ஒரு பக்கம் நகர் ஓசை; ஒரு பக்கம் கண்டாமணியின் ஓசை; ஒரு பக்கம் நாதஸ்வரத்தின் ஓசை; ஒரு பக்கம் பிடில் ஓசை; இந்த ஓசைகளால் பூமி அதிர்ச்சி கண்டு சபைக்குள் தூங்குகிற ஆண்டவரும் விழித்துக் கொள்வார் என்பதைப் போல நேர் விரோதமான செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார் என்று பதிவிட்டுள்ளார்கள் வள்ளலாரின் மெய்யன்பர்கள்.

தன் வீட்டின் முன் ஒரு பிள்ளையார் கோயில் கட்டி, காசியில் இருந்து கேட்ட வரத்தை தரும்படியான ஒரு பிள்ளையாரை வரவழைப்பதாகச் சொல்லி அதை மேற்படி கோவிலில் வைத்து கும்பாபிஜேகம் செய்து, பிரதி தினமும் மணியாட்டி பூஜை நைவேத்தியம் ஆகியவற்றையும் செய்து கொள்ளத் தொடங்கியுள்ளர். இதுவும் வள்ளலார் கொள்கைகளுக்கு விரோதமே. மேலும் சாலை நிலங்களுக்கு அருகாமையில் ஒரு பெருமாள் கோயிலும் கட்டி இருக்கிறார். இது மட்டும் இன்றி தைப்பூச காலத்தில் ஆலயங்களில் திருவிழா காட்சி நடத்துவது போல் மூன்று தினத்திற்கு முந்தியே துஜாவாரணக் கொடியை நாட்டி, பிராமணக் கும்பல்களை சேர்த்துக்கொண்டு ஒரு கலசத்தை நாட்டி, அதை மந்திர ஆவாஹனத்தால் உயிர்ப்பிப்பதாக மேற்படி பிராமணக் கும்பலால் வேத கோஜம் செய்து வள்ளலார் கொள்கை விரோதச் செயல்களிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளார். அவற்றோடு சபையில் ஓம குண்டத்தை வளர்த்து பிள்ளை இல்லாதவர்களுக்குப் பிள்ளை வரம் கொடுக்கவும் பேய் ஓட்டவும் ஆரம்பித்துள்ளார்.

வள்ளலார் தன் கனவில் வந்து சொன்னதாகச் சொல்லி சபையில் நடராஜர் சிலை வைக்கவும், கணபதிக்கும் சுப்பிரமணியருக்கும் பெருமாளுக்கும் கோயில் கட்டவும் செய்துள்ளார். ஜாதி சமய முதலான பேதங்கள் தனக்கில்லை என்று பூணூல் முதலானதும் அறுத்து விட்ட இவர் பழையபடி பூணூல், சிவாச்சாரியார் பட்டம் என்று வேடமிட்டுக்கொண்டு சபையில் சொர்ண வில்வமாலை சாத்தி, நடேசரை வைத்து, ஞானானந்தவல்லி அம்மையை நடேசருக்குக் கல்யாணம் செய்வித்து, கணபதியையும் சுப்பிரமணியரையும் பெருமாளையும் நிறுவியும் உள்ளார்

தான் வெளியிட்ட ஒரு விளம்பரத்தில் ‘ஞானானந்த வள்ளி சமேத ஆனந்த நடராஜப் பெருமானும் தனிப்பெரும் கருணாநாயகி சமேத அருட்பெருஞ் ஜோதீஸ்வரரும் வெள்ளியம்பல நாதர் பொன்னம்பலநாதரும் எழுந்தருளியிருக்கும் தேவஸ்தானம் ஆகிய ‘சத்திய ஞான சபை’ என்று விளம்பரமும் செய்யத் தொடங்கியுள்ளார்.

வேட்டவலம் ஜமீன்தார் இறந்த பின்னால் அவருடைய தம்பியைக் கொண்டு நிலங்கள் சொத்துக்கள் அனைத்தையும் தன் தலைமையில் டிரஸ்ட் ஒன்று உருவாக்கி எழுதி வாங்கிக் கொண்டும் விட்டார்.

சாதி மத பேதங்களை மறுத்த தர்ம சாலையில் “பிராமணர், சைவ வேளாளர் முதலானவர்கள் வந்தால் சுயபாகம் (தாங்களே சமையல்) செய்து உணவருந்துவதற்கு வசதி தேவை” என ஒரு தனிக் கட்டடம் கட்டுவிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

சில பத்தாண்டுகளுக்குப் பின்னால் வள்ளலார் வழியினர் மீண்டும் ஓரளவு எல்லா நிறுவனங்களையும் சபைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். அந்த சபாபதி சிவாச்சாரியாருக்குப் பின்னால் அவர் மகனும் மருமகனும் அர்ச்சகர்களாக வந்ததோடு, அவர்கள் காலத்திற்குப் பின்னால் அவருடைய மகனுக்குக் குழந்தை இல்லாததால் மருமகன் பிள்ளைகள் அர்ச்சகராகினர். இப்போது சில ஆண்டுகளுக்கு முன்னால் 2006, 2007ஆம் ஆண்டுகளில் விக்கிரக வழிபாட்டைத் தொடருவேன் என்று சொன்ன அவருடைய கொள்ளுப்பேரன் ஸ்ரீ சபாபதி ஒளி சிவாச்சாரியார் செயல்பாடுகளும் வள்ளலார் வழிவந்தோராலும், சமூக அக்கறை கொண்டோராலும், இயக்கங்களாலும், அறநிலையத் துறை, உயர்நீதிமன்றம் போன்றவற்றின் துணையோடும் முறியடிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், அந்த சபாபதி குருக்கள் செய்த குழப்பங்களால் உள் நுழைந்து விட்ட சமரச சுத்த சன்மார்க்க நெறிகளுக்கு எதிரான சிலவற்றை இன்றளவும் முற்றுமுழுதாக துடைத்தழிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாகத்தான் நடப்புகள் இருந்து வருகின்றன.

எந்த ஒரு புரட்சிகர சிந்தனை கொண்ட சிந்தனையாளர்களும் புது நெறியை ஆக்கித் தந்தாலும் காலப்போக்கில் நிறுவனமயமாகி, சிலர் ஆதிக்கத்தில் சிக்குண்டு, உருவாக்கிய சிந்தனையாளரின் சிந்தனைகளுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கிவிடுவது பல மதங்களில் நிகழ்வதைப் போலத்தான், புரட்சிகர ஆன்மீக சிந்தனையாளரான வடலூர் வள்ளலார் அவர்கள் உருவாக்கிய இந்தச் சன்மார்க்க நெறியிலும் நிகழ்ந்துவிட்டது பேரவலம்தான்.

சொத்துகளைக் கையகப்படுத்தத் துடிக்கும் மதவாதிகளும், வள்ளலார் வேடம் புனைந்து உள்நுழைய எத்தனிக்கிறார்கள். இந்த பிற்போக்குக் கசடுகளை நீக்குவதற்கு உண்மையான வள்ளலார் வழிவந்தவர்கள் இன்றளவும் பெரு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்குத் துணை நிற்க வேண்டியது வேத மரபு மறுப்பு சிந்தனை கொண்ட அனைவருக்கும் உள்ள கடமையாகும்.

வள்ளலாரின் நெறி பற்றி ஒழுகுவதற்குத் துணை நிற்போம்! அந்த மாமனிதரின் சிந்தனைகள் ஆன்மீக நம்பிக்கை உள்ளோரிடமும் வளர்வதற்குத் துணை நிற்போம்! தமிழ் மரபுகளுக்கு எதிராக நுழையத் துடித்துக் கொண்டிருக்கிற வேத, வர்ணாசிரம மதவாத இயக்கங்கள், கட்சிகள் துடிதுடித்துக் கொண்டிருக்கிற இந்த வேளையில் நாம் அனைவரும் இது குறித்து மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய தேவையும் எப்போதையும்விட இப்போது எழுந்துள்ளது.

Pin It