தமிழ்ச் சூழலில் ஒரு படைப்பாளி வாழுங் காலத்திலேயே கொண்டாடப்படுதல், ஆளுமைத் திறனுக்கேற்ப கவனம் பெறுதல், அவரது படைப்புகள்  விமர்சன நோக்கோடு விவாதப்படுத்தப்படுதல் போன்ற அக்கறை சார்ந்த எதுவும் போதிய அளவில் நிகழ்த்தப் படுவதில்லை. பெரும்பாலான தமிழ்க்கலைஞர்கள் இறப்புக்குப் பின்பான நினைவஞ்சலிகளாலேயே போற்றப்படுவது காலங்களாகவே நிலவி வரும் தமிழ்ச் சூழலின் சாபக்கேடு. இந்நிலை கடந்து அவ்வப்போது படைப்பாளியைக் கவுரவிக்கும் சில அபூர்வமான காரியங்களும் நடப்பதுண்டு. அப்படியான அபூர்வங் களில் ஒன்றாகக் ‘கவிஞர் வைதீஸ்வரன் - தமிழ் இலக்கிய விரிவெளியில்Õ என்ற நூல் வரவைக் கூறலாம்.

லதா ராமகிருஷ்ணன் தொகுத்துள்ள இந்நூலை அநாமிகா ஆல்பபெட்ஸ் வெளியிட்டுள்ளது.

ஒரு படைப்பாளியை முழுமையாகப் புரிந்து கொள்ளும் வகையிலான வெளிப்பாட்டு அம்சமாகக் குறிப்பிட்ட சிலரைப் பற்றிய ஆவணப்படங்கள் வெளி வந்துள்ளன. அவ்வகையில் படைப்பாளி குறித்த வாசகர் கையேடாக (Reader’s Guide) இந்நூல் விளங்குகிறது. தமிழில் இதுபோல எல்லாப் படைப்பாளிகளுக்கும் தனித்தனியான கையேடுகள் கச்சிதமான பக்கஅளவில்  கொண்டுவரவேண்டிய தேவையிருக்கிறது. வாழ்நாள் முழுதும் எழுதிச் சேர்த்த ஒருவரது படைப்பாக்கங்கள் மொத்தமாகத் தொகுக்கப்பட்டு பெரும்பெரும் நூல்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றன (வாசிப்புச் சிரமங்களைப் பற்றியெல்லாம் தொகுப்பாளர்கள் கருத்தில் கொள்வதில்லை என்பது வேறு விஷயம்). பரவலாகச் சிதறிக்கிடக்கிற அவர்களது தனிப்பட்ட நோக்கங்கள், விருப்பங்கள், அபிலாஷைகள், சுயமதிப்பீடுகள், வாழ்வனுபவங்கள், அவர்களைப் பற்றிய மற்றவர்களது பார்வைகள், விமர்சனங்கள், படைப்பாளியின் முக்கியமான படைப்புப் பிரதிகள், பாராட்டுதல்கள், கவுரவித்தல்கள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றை அவ்வப்போது இதழ்களில் வாசிப்பதோடு முடிந்துவிடுகிறது. பிறகு மறக்கடிக்கப்பட்டுவிடுகிறது. வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட அவற்றையெல்லாம் தேடித் தொகுத்தளிப்பது ஒரு படைப்பாளியைப் பற்றிய முழுமையான புரிதலை வாசகனுக்குத் தரவல்லதாக அமையும். இப்படியான தொகுப்பைக் கண்ணுறும் போது ஒருவகையில் படைப்பாளியும் தன்னை  நிறைவாக உணரவியலும் என்பது நிதர்சனம். படைப்பாளி தன் கலையின் ஊடாகக் காலத்தைப் பின்னோக்கிப் பார்த்து உவகையடையும் தருணமது.

அவ்விதத்தில் மிகைப்படுத்தலில்லாமல் இந்நூலைச் செம்மையாகத் தொகுத்தளித்த லதா ராமகிருஷ்ணன் பாராட்டுக்குரியவராவர்.

கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய எளிய அறிமுகத் துடன் தொடங்கும் இந்நூல், அவரது கவிதைகளைப் பற்றிய சில எழுத்தாளர்களின் கட்டுரைகளோடு அவரது கவிதைகள், கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள், நினைவுக்குறிப்புகள், நேர்காணல், உரைகள், அவருக்குப் பிடித்தமான கவிஞர்களின் கவிதைகள் மற்றும் அவர் வரைந்த கோட்டோவியங்களோடு முழுமை பெறுகிறது.

வைதீஸ்வரன் எனும் படைப்பாளியை முன்பின் அறிந்திராத வாசகனும் இத்தொகுப்பை வாசித்து முடிக்கிறபோது அவரையும் அவரது படைப்பாக்கங் களையும் குறித்த தெளிவானதொரு சித்திரத்தைத் தனக்குள் வரைந்துகொள்ள இயலும். ஒரு எழுத்தாளரின் இருப்பை அவரது படைப்பாளுமையை, புரிதல்களை, படைப்புக் கோட்பாட்டை, விருப்பங்களை, ரசனையை எனப் பன்மையான தகவல்களை அறிந்துகொள்ளத் துணை செய்கிறது இத்தொகுப்பு நூல். தமிழில் தொடர்ந்து பல காலமாய் இயங்கிவரும் இன்னபிற படைப்பாளிகளுக்கும் ஆளுமையைப் பறைசாற்றும் இதுபோன்றதொரு முழுமையான முயற்சிகளுக்கு இந்நூற்தொகுப்பு சிறந்த முன்னோட்டமாக அமையும் என நம்பலாம். இறப்புக்குப் பின்பான புலம்பலாகவும் ஒப்பாரிகளாகவும் எழுத்தாளர்களைப் போற்றும் தமிழிலக்கியவாதிகளின் கவனப்பிசகான மனப்போக்கு மாற்றப்படவேண்டிய காலமிது.

இந்நூல் குறித்து தொகுப்பாசிரியர் லதா ராமகிருஷ்ணன், கூறியிருப்பது கவனிக்கத்தக்கது

‘கவிஞர் வைதீஸ்வரனுடைய கவித்துவத்தையும் படைப்பாளுமையையும் எடுத்துரைக்கும் கட்டுரைகள் சிலவும் மற்றும் வைதீஸ்வரனின் எழுத்தாக்கங்கள், ஓவியங்கள், அவருடைய நேர்காணல் ஆகியவை இடம் பெறும் இந்த நூல் அவருடைய இலக்கியப் பங்களிப்புக்குச் செய்யும் பதில் மரியாதையாய் வெளியிடுவதில் நான் மனநிறைவு கொள்கிறேன்Õ

பாரபட்சமற்றத் தன்மையோடு ஒரு படைப் பாளியின் முழுமையான அறிமுகத்தைச் செய்விக்கும் இந்நூல் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது சிறப்பு. நூலில் இடம் பெற்றுள்ள சில முக்கிய பகுதிகளைக் கவனிக்கலாம்.

நகுலன் 1995ல் “வைதீஸ்வரன் கவனிக்கப்பட வேண்டிய கவிஞர்Ó என்றெழுதியதிலிருந்து, சமீபத்தில் கவிஞர் சுகுமாரன் ‘Ôவைதீஸ்வரன் கவிதையை வாசிக்கா மலேயே புதிய தலைமுறைக் கவிஞன் ஒருவன் செயல்பட முடியும். அவரது கவிதைகளும் இன்று காலத்தின் முன் பழையனவாக மாறியிருக்கவும் கூடும். எனினும் இன்றைய கவிதை செயல்படும் நுண்ணுணர்வுத் தளத்தில் அவரது கவிதையாக்க அணுக்களும் இருக்கின்றன. இன்னும் இருக்கும்Ó என்று எழுதியிருப்பது உட்பட இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேர்காணலில், கவிதை, சிறுகதை, ஓவிய ஈடுபாடு குறித்த கேள்விக்கான  பதிலில் அவரது கலை மேதைமை வெளிப்படுகிறது.

“கலைகளை கட்டம் போட்டு நான் பார்ப்ப தில்லை. வல்லவனாகவும் தீர்மானித்துக்கொள்ள வில்லை. மூன்றுமே அவைகளில் ஈடுபடும்போது வாழ்க்கையின் மீதுள்ள உயிர்ப்பையும் சந்தோஷத் தையும் உணரச் செய்கிறது. கதையானாலும் கவிதையானாலும் ஓவியமானாலும் அதற்கென்று சில அடிப்படையான கட்டமைப்பும் கலை நுணுக்கங்களும் இருக்கின்றன. அதில் வேறுபாடு களை உய்த்துணர்ந்து படைக்க என்னால் எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.Ó

அவரது நான்கு சிறுகதைகள் இடம் பெற்றுள்ள இத்தொகுப்பில் அவரது மொழிபெயர்ப்பில் ஜப்பானிய எழுத்தாளர் அகுடாகாவாங்கின் கதையும் இடம் பெற்றுள்ளது.

நிழலாடும் நினைவுகள் என்ற பகுப்பில் அவரது தாயாரைப் பற்றிய நினைவுகளை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். கவிஞர் ஆத்மநாமைப் பற்றிய நினைவும் உயிரோட்டமாக அமைந்துள்ளது. திருலோக சீதாராம், எஸ்.வி.சகஸ்ரநாமம் ஆகியோரைப் பற்றிய நினைவுகள் அரிதான தகவல்களை உள்ளடக்கிய வகையில் முக்கிய மானவை. தமிழ் இலக்கியவெளி அவ்வளவாக அறிந்திராத படைப்பாளிகளைப் பற்றிய ‘கவிஞர் கோ.கண்ணனின் படைப்புலகம்Õ மற்றும் ‘சார்வாகன் கதைகள்Õ போன்ற கட்டுரைகள் தனித்துவமான படைப்பாளிகளை அடையாளப்படுத்தும் நோக்கில் தமிழ்ப்படைப்புலகம் இப்படைப்பாளிகளைக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்ட கட்டுரை களாகும்.

வைதீஸ்வரனின் கவிதானுபவங்களையும் கலைஞானத் தையும் உணர்ந்தறிந்து கொள்ள வகைசெய்யும் இந்நூலின் முழுமையான வாசிப்புக்குப் பின் மனம் நிறைவாக ஆழ்ந்தமைதி கொள்கிறது. ஒரு படைப் பாளிக்கு வாசகன் தனது ஆத்மார்த்தமான புரிதலின்

வழி உவந்தளிக்கும் நன்றியறிதலே அவ்வமைதி.

தமிழில் புதிய நன்முயற்சியாக அமையப்பெற்றுள்ள இத்தொகுப்பமைப்பைக் கருத்தில்கொண்டு வருங் காலங்களில் ஒவ்வொரு படைப்பாளிக்கும் இப்படியான வாசகக் கையேடுகள் வெளியாகவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையிலமைந்துள்ளது இந்நூல்.

வாசிப்பு குறித்து இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள வைதீஸ்வரன் கவிதையின் சில வரிகளோடு இக்கட்டுரையை நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

ஒரு நல்ல கவிதை வாசித்த  பின்

பறக்கத் தொடங்கும்

குஞ்சுப் பறவையின் சிறகுபோல

மனசு விம்மவேண்டும்

தூறல் விழுந்த மண்ணைப்போல்

உள் சிலிர்க்கவேண்டும்

பயப்பட்டதுபோல வாழ்க்கை

அவ்வளவு மோசமில்லையென்று

தெளிவு தெரியவேண்டும்

எதிர்ப்படும் சகமனிதனை

“நண்பாÓ என்றழைக்க

ஆவல் துளிர்க்கவேண்டும்

விம்மலும் பரவசமும் கலந்த

விந்துத்துடிப்பின் உச்சம்

நினைவெங்கும் ஆட்கொள்ளவேண்டும்

..............................

............................

............................

ஒரு நல்ல கவிதை வாசிக்கும்போது...

கவிஞர் வைதீஸ்வரன்

தமிழ் இலக்கிய விரிவெளியில்

லதா ராமகிருஷ்ணன்

வெளியீடு: அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்

தொடர்புக்கு : 044 - 24714196, 7845576241

விலை: ` 170/-

Pin It