sangeeta yogum 400கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நான் பெங்களூரில் வசித்து வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இசைக்கச்சேரிகள் நடைபெறும் ராமநவமி நாட்களையும் அனுமன் ஜெயந்தி நாட்களையும் இசையின்பத்தில் திளைக்கும் நாட்கள் என்றே சொல்லவேண்டும். சில இடங்களில் நுழைவுக்கட்டணம் வசூலிப்பார்கள். சில இடங்களில் இலவசமாகவே அனுமதிப்பார்கள். என்னால் எல்லாக் கச்சேரிகளுக்கும் செல்ல முடிந்த தில்லை. அலுவலகம் முடிந்து மாலை நேரங்களில் மட்டும் கலந்துகொண்டு கேட்பதுதான் வழக்கம்.

பாடல்களில் மயங்கியிருந்த தருணங்கள் எல்லாமே பொன்னான நேரங்கள். ஏதோ ஒரு கை வந்து நம்மை ஏந்திக்கொள்வதுபோல, ஏதோ ஒரு விரல் நீண்டு மென்மையாகத் தொட்டு வருடுவதுபோல, எங்கோ அந்தரத்தில் பறந்துசெல்வதுபோல, எங்கோ ஒரு கடலில் ஆழத்தை நோக்கி இறங்குவதுபோல ஒவ்வொரு கணத்திலும் அந்த அனுபவம் மாறிக் கொண்டே இருக்கும். சுருதி, சுரம், ராகம், தாளம் என எதுவுமே இன்றுவரை எனக்குத் தெரியாது.

ஆனால் பாடும் கலைஞர் ஒரு ராகத்தைத் தொட்டு ஆலாபனை செய்யும்போது மழைச்சாரலில் நனைந்ததுபோல இருக்கும். ஒரு சொல்லை விதவிதமாக ஏற்றி இறக்கி, குழைந்து நெளிந்து உச்சரிக்கும்போது உள்ளம் உருகிவிடும். கச்சேரியிலிருந்து திரும்பும்போது என் மனத்துடன் ஒட்டிக்கொண்டு வரும் அந்த இனிய அனுபவத்துக்காகவே மீண்டும் மீண்டும் கச்சேரிகளை நாடிச் சென்றுகொண்டே இருக்கிறேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தேன். கர்நாடகத்தில் வாழும் மிகச்சிறந்த இசைக்கலைஞர்கள் அனைவரும் அக்கச் சேரிகளில் கலந்துகொண்டு பாடுவார்கள். பெரும் பாலான பாடல்கள் கன்னடத்தில்தான் இருக்கும். கேட்கக் கேட்க மனம் உருகிக் கரைந்துவிடும். கலைஞர்கள் பட்டியலில் தமிழ்நாட்டுப் பாடகர்களின் பெயர்களும் இருக்கும். ஆனால் அவர்கள் தமிழில் பாடுவதில்லை.

பெரும்பாலும் தெலுங்குப் பாடல் களையும் ஒரு சில கன்னடப் பாடல்களையும் பாடுவார்கள். முடிவை நெருங்கும் சமயத்தில் ஒன்று அல்லது இரண்டு தமிழ்ப்பாடல்களைப் பாடி நிறைவு செய்வார்கள். அக்கணம் ஒருபுறம் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். மறுபுறம் ஏமாற்றத்தில் வெடித்துவிடுவது போல இருக்கும். தமிழ்நாட்டைவிட்டு வெளியே வந்து பாடுவதால் இப்படி ஒரு ஏற்பாட்டைப் பின்பற்று கிறார்கள் போலும் என நானாகவே தொடக்கத்தில் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படும் மார்கழி உற்சவப் பாடலரங்கத்தில் பாடப்படும் பாடல்களைக் கேட்ட பிறகு அந்த எண்ணம் தவறெனத் தோன்றியது. பெரும்பாலான கலைஞர்கள் தமிழில் பாடும் ஆற்றல் உள்ளவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், பத்துக்கு ஒன்று அல்லது இரண்டு தமிழில் பாடினால் போதும் என அவர்களாகவே ஒரு வரையறை வைத்திருக் கிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றியது.

ஒரு வேகத்தில்தான் தமிழில் பாடப்படும் பாடல் களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்று தோராய மாகக் கணக்கிடத் தொடங்கினேன். பிரபலமாகப் பாடக்கூடிய பாடல்களே நூற்றுக்கும் மேல் இருக்கும் என்று தோன்றியது. பாடத்தகுந்த பாடல்களைக் கொண்ட பட்டியல் அதைவிட ஆறேழு மடங்கு நீண்டதாக இருக்கக்கூடும் என்பதுதான் என் எண்ணம். முத்துத்தாண்டவர், ஊத்துக்காடு வேங்கட சுப்பையர், அருணாசலக்கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதியார், சுப்பிரமணி பாரதியார், நடன கோபால நாயக சுவாமிகள், வள்ளலார், பாரதிதாசன், பெ.தூரன்,

ராஜாஜி, பாபநாசம் சிவன், கவிகுஞ்சர பாரதி, கோடீஸ்வர ஐயர் என ஏராளமான கவிஞர்கள் தமிழில் பாடத் தகுந்த பாடல்களை எழுதியிருக்கிறார்கள். நாலாயிர திவ்வியப்பிரபந்தத்திலிருந்தும் திருவாசகத்தி லிருந்தும் எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் பாடல்களை எடுத்துக்கொள்ளலாம். எல்லாவற்றையும் சேர்த்து ஒரு பட்டியலை உருவாக்கினால், ஆயிரக் கணக்கில் பாடல்கள் தேறும். ஆயினும் ஒரு கச்சேரியில் பத்துக்கு ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் மட்டுமே தமிழில் பாடும் போக்கு வேதனையாக இருக்கிறது.

என் மனக்குறையை நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டபோது திடீரென அவர் “என்ன இது? எழுத்தாளர்களுக்கெல்லாம் இப்படிக் காலந்தோறும் கவலைப்படுவது ஒரு நோயாக வந்துபோகும் போலும்”என்று சொல்லிவிட்டுப் புன்னகைத்தார். ஒன்றும் புரியாமல் நான் அவரையே பார்த்தேன். “அந்தக் காலத்துல இப்படி வேதனைப்பட்டு வேதனைப்பட்டு கல்கி ஒரு புத்தகமே எழுதியிருக்காரு தெரியுமா?” என்று கேட்டார். தெரியாது என்று நான் உடனடியாக தலையசைத்தேன். அவர் எழுதிய சமூக, வரலாற்று நாவல்களையும் சிறுகதைகளையும் சிறையனுபவக் கட்டுரை நூலையும் தேடித்தேடிப் படித்த நான்

இந்தப் புத்தகத்தை எப்படித் தவறவிட்டேன் என்று குழம்பினேன். காந்தியைப்பற்றி அவர் எழுதிய ஒரு புத்தகத்தை நீண்ட காலமாகத் தேடித்தேடி அலைந்து, ஒருவழியாக சமீபத்தில்தான் அதைக் கண்டுபிடித்து படித்துமுடித்தேன். என் பட்டியலையும் கடந்து இன்னொரு புத்தகம் என்ற தகவல் விசித்திரமாக இருந்தது. அவராகவே தொடர்ந்து ‘சங்கீத யோகம்.’ அதுதான் அவர் எழுதிய புத்தகம். தமிழ்ல பாடறத கேட்பதையே பெரிய அதிருஷ்டம்ன்னு நெனச்சிருப் பார் போல. அதனால அப்படி ஒரு பேர வச்சிருக்காரு. எங்கனா கெடச்சா படிச்சி பாருங்க. நல்ல புத்தகம். “கச்சேரி பண்றவங்ககிட்ட தமிழ்ல பாடுங்க பாடுங்கன்னு கெஞ்சாத கொறயா கோரிக்கை வச்ச புத்தகம்”என்றார். ஆவல் உந்த அந்தப் புத்தகத்தைத் தேடத் தொடங் கினேன். ஆனால் அந்தப் புத்தகம் விற்பனைக்கு எங்கும் கிடைக்கவில்லை. ஆறேழு மாதங்கள் இடைவிடாமல் முயற்சி செய்தபிறகு போன வாரம்தான் நூலகத்தில் தேடிக் கண்டுபிடித்தேன்.

‘சங்கீத யோகம்’முதல் பதிப்பாக 1947-இல் வெளி வந்திருக்கிறது. சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணை பதிப்பகம் அதை நூலாக பிரசுரித்தது. பிறகு 1998-இல் வானதி பதிப்பகம் பிரசுரித்தது. எனக்குக் கிடைத்தது அந்தப் புத்தகம்தான். 1947-இல் வெளிவந்த நூல் என்றாலும் நூலில் உள்ள இருபத்தேழு கட்டுரைகள் முப்பதுகளில் தொடங்கி ஏறத்தாழ பதினேழு ஆண்டு கால இடைவெளியில் வெவ்வேறு சமயங்களில் எழுதப்பட்டவையாக உள்ளன. ஆனால் தொகுக்கப் பட்டிருக்கும் விதத்தில் தமிழிசை என்னும் மையச்சரடு அந்தப் புத்தகத்தில் ஓடிக்கொண்டே இருப்பதைப் பார்க்க முடிகிறது.

டி.கே.சி. வழியாக தமிழிசையின் மீதான நாட்டம் கொண்ட கல்கி தனக்கு அறிமுகமான ஒவ்வொரு இசைமேதைகளிடமும் தமிழில் பாடும்படி தூண்டிக் கொண்டே இருப்பதை ஒவ்வொரு கட்டுரையிலும் உணரமுடிகிறது. பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் தன் கோரிக்கையை முன்வைக்கிறார். ஒரு இடத்தில்கூட அவர் யாரையும் புண்படுத்தவில்லை. தெலுங்கில் பாடவேண்டாம் என்றும் சொல்லவில்லை. பெரும்பாலான பாடல்களை தமிழில் பாடுங்கள்

என்று மட்டுமே அவர் கேட்டுக்கொள்கிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக, அந்தச் சொற்கள் திரிக்கப்பட்டு, கல்கி தெலுங்கை வெறுத்து மொழிவிரோதத்தை வளர்க்க முயற்சி செய்கிறார் என்ற வதந்தி பரப்பப் பட்டுவிடுகிறது. தமிழிசைக்கான கோரிக்கையை முன்வைக்கும் நேரத்தைவிட, இந்த வதந்திக்கு பதில் சொல்லி மீள்வதற்கு அவர் அதிக நேரத்தையும் உழைப் பையும் செலவிட நேரிடுகிறது.

அவர் கோரிக்கையை செவி கொடுத்துக் கேட்கும் சூழலே அப்போதும் இருந்ததில்லை என்றே தோன்று கிறது. ஆயினும் மனம் சலிக்காமல் எழுதிக்கொண்டே இருக்கிறார் கல்கி. தன் மேடைப் பேச்சின் ஒரு பகுதியாக அல்லது கச்சேரி விமர்சனத்தின் ஒரு பகுதியாக அந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்தபடியே இருக்கிறார். தொடக்கத்தில் அவர் சந்திக்கும் இசைக் கலைஞர்கள் அனைவரும் ஏதேதோ சில்லறைக்காரணங் களைச் சொல்லி மறுத்துவிடுகிறார்கள். “மளமளவென்று நாலு தியாகராஜ கீர்த்தனைகளைப் பாடினால் கச்சேரி களைகட்டி உச்சத்துக்குப் போய்விடும். நாலு தமிழ்ப் பாட்டுகளைப் பாடினால் கச்சேரி இறங்கிவிடும்”என்று சொல்லி மழுப்பிவிடுகிறார்கள்.

கல்கி அவர்களுக் கெல்லாம் தக்க பதில்களைத் தொடர்ந்து சொன்ன படியே இருக்கிறார். தியாகராஜ கீர்த்தனைகளை கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தென்னாட்டு இசைக் கலைஞர்கள் அனைவரும் பரம்பரையாகப் பாடி வந்திருக் கிறார்கள். அவ்விதம் பாடிப்பாடி அந்தக் கீர்த்தனைகள் மெருகேற்றப்பட்டிருக்கின்றன. அந்தக் கீர்த்தனைகளில் தியாகராஜருக்குப் பிற்காலத்தில் தோன்றிய பலநூறு கலைஞர்களின் ஜீவசக்தியும் கலந்திருக்கிறது. இதே முறையில் தமிழ்ப்பாடல்களை நம் கலைஞர்கள் இடைவிடாமல் பாடினால், தமிழ்ப்பாடல்களுக்கும் மெருகேற்றிவிடலாம். இந்தச் செயலை யார் செய்வது, எப்படிச் செய்வது என்பதுதான் நம் முன்னால் உள்ள பெரிய சவால் என்று சொல்கிறார் கல்கி.

ஒரு தருணத்தில், ஸ்வாதித்திருநாள் கொண் டாட்டங்கள் தொடங்கிய விதத்தை எடுத்துக்காட்டாக கல்கி முன்வைக்கிறார். தொடக்கத்தில் அந்தக் கொண் டாட்டமே இல்லை. ஒரு கட்டத்தில் திருவிதாங்கூர் அரசர் ஸ்வாதித்திருநாள் கீர்த்தனங்கள் எங்கெங்கும் ஒலிக்கவேண்டும் என்கிற ஆவலுடன் செயல்பட்டார். காயகசிகாமணி முத்தையா பாகவதரையும் செம்மங்குடி சீனிவாசய்யரையும் அணுகி அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள். ஸ்ரீமுத்தையா பாகவதர் மெட்டு களைச் சரிப்படுத்தித் தந்தார். ஸ்வாதித்திருநாள் பெரிய சாகித்யகர்த்தா என அனைவரும் அறிந்துகொண்ட துடன் ஸ்வாதித்திருநாள் கொண்டாட்டம் நடக்கத் தொடங்கிவிட்டது. மேடைகளில் இளம்கலைஞர்கள் முதல் மூத்த கலைஞர்கள் வரை அவற்றைப் பாடிப்

பாடி பிரபலப்படுத்திவிட்டார்கள். வானொலி இன்னும் அதைப் பெரிய அளவுக்கு விரிவடையச் செய்து விட்டது. தமிழகத்துக்கு வெகு அருகில் உள்ள ஓரிடத்தில் சாத்தியமான ஒரு நடவடிக்கை ஏராளமான திறமையான கலைஞர்களைக் கொண்ட தமிழகத்தில் ஏன் சாத்தியப்படவில்லை என்று தன் ஆதங்கத்தை முன்வைக்கிறார். ஒரு பெரிய சங்கீத நிபுணரையும் ஒரு கச்சேரி வித்வானையும் மூன்று வருஷ காலத்துக்கு ஒன்றிணைந்து பணிபுரியும்படி வேண்டி, தமிழில் உள்ள சகல கீர்த்தனங்களையும் பாட்டுகளையும் ஆராய்ந்து அவற்றை கச்சேரி பாணிக்குச் சரிப்படுத்தி அமைக்கும் படி கேட்டுக்கொள்ளலாம் என்றொரு யோசனையையும் கல்கி முன்வைக்கிறார். அரியக்குடி ராமானுஜய்யங்கார், முசிறி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாசய்யர் போன்றவர்கள் மனது வைத்து இப்பாடல்களையே இடைவிடாமல் பாடிப்பாடிப் பிரபலப்படுத்தினால் மூன்று வருஷங்களுக்குள் தமிழ்க்கீர்த்தனங்களுக்கு இணையில்லை என்ற நிலையை உருவாக்கிவிடலாம் என அவர் நம்பிக்கையுடன் திட்டமிடுகிறார். அவர் விரும்பிய மாற்றம் குறைந்த அளவில் தொடக்கத்தில் உருவானாலும், அது நீடித்திருக்கவில்லை. முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகும்கூட கல்கியின் கனவு நிறை வேறவில்லை என்பது வருத்தம் தரும் உண்மை.

தமிழிசை இயக்கத்தின்மீது முன்வைக்கப்பட்ட முக்கியமான விமர்சனம் அது பிராமணரல்லாதோர் இயக்கம் என்பதாகும். அதற்குத் தெளிவான முறையில் தனியாகவே ஒரு கட்டுரையை எழுதி பதில் அளிக்கிறார் கல்கி. தமிழிசை இயக்கம் சாதிசார்ந்து பார்க்கப்பட வேண்டிய ஒரு இயக்கமல்ல, அது தமிழ்மக்களின் இயக்கம் என்று அழுத்தம் திருத்தமாக எழுதிச் செல்கிறார். தமிழும் இசையும் தமிழ்நாட்டில் தமிழ் பேசும் அனைவருக்கும் சொந்தமானதாகும். அதை சாதி சார்ந்து குறுக்கிவிடக்கூடாது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சாதி சமய வேற்றுமையின்றிப் பல மகான்கள் தமிழிசையை வளர்த்திருக்கும்போது, இன்றைக்கு

மட்டும் திடீரென தமிழிசையானது பிராமணரல்லா தோருடைய இயக்கமாகவோ உரிமையாகவோ எப்படி ஆகும்? அல்லது பிராமணருக்கு விரோதமான முயற்சியாகத்தான் எப்படி ஆகும்? என்று அவர் முன்வைத்த வாதம் அனைவரையும் யோசிக்கத் தூண்டியது. தமிழிசை இயக்கம் என்பது தமிழில் பாடவேண்டும் என்று கோருகிற இயக்கம்தானே தவிர, சாதியுணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கிற இயக்கமல்ல என்பதை கல்கி தெளிவாக்கினார்.

ராஜா சர் அண்ணாமலை செட்டியார் முதன் முதலாக சிதம்பரத்தில் இசைக்காக ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தார். தமிழிலே பாடவேண்டும் என்பதற்கு ஒரு இயக்கமா, அதற்கு ஒரு மாநாடா என்றெல்லாம் குரல்கள் ஒலித்தன. ஆனால் அதையெல்லாம் கடந்து, அந்த மாநாடு நடைபெற்றது. காலையிலும் மாலை யிலும் பட்டமளிப்பு மண்டபத்தில் இசைக்கச்சேரிகள் நடைபெற்றன. மூத்த கலைஞர்கள் கலந்துகொண்டு தமிழ்ப்பாடல்கள் பாடினார்கள். திருப்புகழ் மணி டி.எம்.கிருஷ்ணசாமி ஐயர், தண்டபானி தேசிகர் போன்றோர் பாடிய தமிழ்ப்பாடல்கள் பார்வை யாளர்களை மெய்ச்சிலிர்க்க வைத்தன. தமிழ்ப்பாடல் களை ஊன்றிக் கேட்பவர்கள் உண்டு என்பதை அந்தச் சிதம்பரம் மாநாடு மெய்ப்பித்தது. அதில் கலந்து கொண்ட கல்கி தன் அனுபவங்களை உயிர்த்துடிப்புடன் விவரித்து எழுதுகிறார்.

தமிழ்ப்பாடல்களை எப்படி வளர்ப்பது என்பதை விட, அதை எதிர்க்கிறவர்களின் அச்சத்தை எப்படி அகற்றுவது என்பதுதான் அதிக உழைப்பைக் கோருகிற விஷயமாக இருந்தது என்று குறிப்பிடுகிறார் கல்கி. அவர்களுக்கு விளக்கம் தரும் விதமாக எழுதப் பட்டிருக்கும் நீண்ட கட்டுரை மிகமுக்கியமானது. எதிர்ப்பாளர்கள் மனத்தில் எழும் அச்சத்துக்கான காரணங்களை பத்து கேள்விகளாக தொகுத்துக்கொண்டு, அவற்றுக்கு வரிசையாக தெளிவான பதில்களை எழுதி வைத்திருக்கிறார் கல்கி. அவை இன்றைக்கும் பொருத்த மானவை.

கர்நாடக சங்கீதம் என்பது எந்த நாட்டுக் குரியது, சங்கீதத்துக்கு வார்த்தை அவசியமா இல்லையா, கீர்த்தனங்களில் ராகபாவம் மட்டும்தான் அவசியமா, இருதய பாவத்துக்கும் இடமுண்டா, சங்கீதக்கலையின் பூரண ஆனந்தத்தை வேற்றுமொழிப் பாடல்கள்மூலம் அனுபவிக்கமுடியுமா, தெலுங்குதான் சங்கீதமொழியா, தமிழ் சங்கீதத்துக்கிசைந்த மொழி இல்லையா, தமிழ்ப் பாட்டுக் கிளர்ச்சியால் சங்கீதக்கலைக்கு ஆபத்து வந்து விடுமா, தமிழில் உயர்ந்த சங்கீதத்துக்கு உரிய சாகித்யங்கள் இல்லையா, தமிழில் நல்ல சாகித்யம் இருந்தால், அவை தானாகவே பிரகாசிக்காதா? தமிழ் சாகித்யங்களுக்கெல்லாம் எதற்காகப் பரிசு கொடுக்க வேண்டும், தியாகராஜ ஸ்வாமிகளுக்கு யார் பரிசு கொடுத்தார்கள்?, தமிழ்ப்பாட்டுக் கிளர்ச்சியால் தியாகராஜர், தீட்சிதர் கிருதிகளுக்கு ஆபத்து வருமா என்பவையே அக்கேள்விகள். கல்கியின் பதில்கள் ஒவ்வொன்றிலும் அவர் உள்ளத்தில் ஊறிக் கிடக்கும் தமிழ்வேட்கையை உணர்த்துபவையாக உள்ளன.

சிதம்பரம் மாநாட்டைத் தொடர்ந்து குமாரராஜா முத்தையா செட்டியாரின் முயற்சியால் தேவ கோட்டையில் ஒரு பெரிய மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் அதில் பங்கெடுத்துக்கொண்டார்கள். முதல்நாள் எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசைக்கச்சேரி. மூன்றரை மணிநேரம் நடைபெற்ற இக்கச்சேரியில் தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் தமிழ்ப்பாட்டுகளையே பாடினார் எம்.எஸ். அடுத்தடுத்த நாட்களில் மதுரை மணி, திருச்சி சகோதரர்கள், தண்டபானி தேசிகர், சரஸ்வதிபாய் அம்மாள் என பல முக்கியமான இசைக்கலைஞர்கள் தமிழில் பாடி மாநாட்டை வெற்றிகரமானதாக்கினர்.

கோகலே மண்டபத்தில் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் நிகழ்த்திய கச்சேரியைக் கேட்டு தன் மனம் உருகிக் கரைந்த விதத்தை ஒரு நீண்ட கட்டுரையாகவே எழுதியிருக்கிறார் கல்கி. தொடக்க காலத்தில் தமிழில் பாடும் திட்டத்துக்கு ராமானுஜ ஐயங்கார் அவ்வளவாக ஆதரவு அளித்ததில்லை. பேசிப்பேசித்தான் அவரைக் கரைக்க வேண்டியிருந்தது. பாதிக்குப் பாதி என்கிற அளவில் தான் தமிழில் பாடமுடியும் என்கிற நிபந்தனையுடன்தான் மேடையில் சென்று அமர்ந்தார் அவர். தமிழ்ப்பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பையும் பார்வையாளர்களின் உற்சாகத்தையும் கண்டு அவர் மனம் மாறி, பெரும்பாலும் தமிழ்ப்பாடல்களைப் பாடு வதை வழக்கமாக வைத்துக்கொண்டார்.

1944-இல் நடைபெற்ற மூன்று கச்சேரிகளைப் பற்றிய அனுபவத்தை கல்கி தனிக்கட்டுரையாகவே எழுதி யுள்ளார். ஜி.என்.பாலசுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்பு லட்சுமி, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோர் நிகழ்த்திய கச்சேரிகள் அவை. அவர்கள் பாடிய பாடல்களைப் பற்றியும் அவற்றின் இனிமையைப் பற்றியும் பரவசத் தோடு எழுதியிருக்கிறார். செம்மங்குடியார், மணி ஐயர், வைத்தியநாத பாகவதர் என பல கலைஞர்களின் ஆற்றலைப்பற்றியும் பல கட்டுரைகளில் தொடர்ந்து குறிப்பிட்டிருக்கிறார் கல்கி. இத்தனை ஆண்டுகள் கழித்து இவ்வரிகளைப் படிக்கும்போதும் அப்பாடல் வரிகள் நம் காதில் விழுந்து அந்த இனிமையை நமக்கும் வழங்குவதுபோல இருக்கிறது. அதற்குக் காரணம் இசையின் சக்தியா அல்லது கல்கியின் எழுத்துக்கு இருக்கும் சக்தியா என்று பிரித்துச் சொல்லமுடிய வில்லை.

பல மூத்த கலைஞர்கள் தமிழ்ப்பாடல்களைப் பாடத் தொடங்கியதைக் கேட்ட மனநிறைவில் ‘எதிர்ப்பு விழுந்துவிட்டது’என்றும் ‘முற்றுப்புள்ளி’என்றும் உற்சாகத்துடன் கட்டுரைகளை எழுதியிருக் கிறார் கல்கி. இந்தப் புத்தகத்தின் இறுதிக்கட்டுரைகளாக அவை உள்ளன. இது இசைமேடையில் கல்கி காலத்தில் பரவிய சிறிய வெளிச்சம் என்றே இப்போது தோன்றுகிறது. அந்த வெளிச்சம் முழு அளவில் பரவும் முன்பாக, எப்படி மங்கியது என்பது ஆய்வுக்குரியது. கல்கி அஞ்சியதுபோல, தமிழிசைக்கான நாட்டமும் விவாதமும் சாதிநாட்டமாகவும் விவாதமாகவும் திசைமாறி அந்த இயக்கம் தன் இலக்கை அடை யாமலேயே தேங்கிவிட்டிருக்கலாம். கல்கியின் காலத்தில் வாழ்ந்த ஆர்வலர்களைப்போல இசைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் பல ஆர்வலர்கள் மீண்டும் உருவாகி இடைவிடாமல் முயற்சி செய்தால் தமிழிசையை நிலைநிறுத்தி வைக்கமுடியும் என்று தோன்றுகிறது. அந்த நற்பேறு தமிழிசைக்குக் கிட்டும் என்று நம்பிக்கையை கல்கியின் நூல் அளிக்கிறது.

Pin It