‘சே’வின் 90ஆவது பிறந்தநாள் நினைவுகூரல்

ஹய்டி சாந்தா மரியா, சே குவேரா குறித்த தனது உருக்கமான குறிப்பில், சேயின் மரணத்தின் போது பிடல் காஸ்ட்ரோ அவர்மீது பொழிந்த புகழாரங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அவர், 1967 அக்டோபர் மாதம் 18ம் திகதி காஸ்ட்ரோ நிகழ்த்திய உரையையே இங்குக் குறிப்பிடுகிறார் என நினைக்கின்றேன். ‘கலைஞன்’ என்ற தலைப்பில் அவர் அதிக கவனம் செலுத்துகிறார்.

Che Guevara 450சேகுவேரா, கெரில்லா போர் முறையில் ஓர் வல்லுனர் என்ற வகையில், ‘கெரில்லா போர் முறையின் கலைஞன் என காஸ்ட்ரோ இந்த வார்த்தையைப் பிரயோகித்திருப்பார் என நான் நினைக்கிறேன். ஆனால், ஹய்டி இந்த அர்த்தத்தை மேலும் விஸ்தரித்து, “சேகுவேராவின் மிகச்சிறந்த படைப்பு அவரேயாகும்” என்ற வகையில் எடுத்துக் கூறுகிறார். அவர் தன்னளவில் முழு நிறைவான ஒரு புது மனிதனாக இருந்தார்; தனது ஆளுமையின் மீது செயற்பட்டு வந்தார்; இதுவே, அவரது கலைப்படைப்பாகும். சேகுவேரா தானே ஒரு கலைஞனாக இருந்தார்.

இந்த இடத்திலிருந்தே நாம் ஆரம்பிக்கிறோம். எந்த முக்கியமான ஒரு கலைப்படைப்பும் பல்வேறு வகைப்பட்ட உட்கிடக்கைகளை தன்னகத்தே கொண்டதாக இருந்து வருகின்றது. இந்த உட்கிடக்கைகள் கால ஓட்டத்தில் மேலும் விரிவடைந்து வருகின்றன.

ஒரு கவிதையிலிருந்து அல்லது ஓர் ஒவியத்திலிருந்து இப்பொழுது நாம் பெற்றுக்கொள்ளும் பொருள், இன்றிலிருந்து பல வருடங்களின் பின்னர் நாம் பெற்றுக்கொள்ளும் பொருளிலிருந்தும் வேறுபட்டதாக இருக்கும். சேக்ஸ்பியரின் நாடகங்கள் குறித்தும் இது கூறப்பட்டுள்ளது. அதே போல சேகுவேரா என்ற கலைப்படைப்பு 1960களில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டபொழுது எத்தகைய பொருளை வழங்கியதோ, எத்தகைய முக்கியத்துவத்தைக் கொண்டிருந்ததோ அதே பொருளையும், முக்கியத்துவத்தையும் இன்று வாழும் எமக்கு அது தரவில்லை.

மாறாக, ஒரு வேறுபட்ட பொருளையும் வேறுபட்ட முக்கியத்துவத்தையும் அது இன்று எமக்குத் தருகிறது. ஆனால், இந்தப் புதிய உட்கிடக்கைகள் மறைந்துள்ள பரிமாணங்கள் மற்றும் ஆழங்கள் என்பன, ஆரம்ப மனப்பதிவினையும் நினைவினையும் எந்த வகை யிலும் மங்கச் செய்துவிடவில்லை என்பதனையும் இங்குக் கூறவேண்டியுள்ளது. இந்தப் புதிய நோக்கு, மிகச் சக்திவாய்ந்த முறையில் எந்த அம்சத்தைக் கண்டதோ அதனை மேலும் மேலுயர்த்துவதற்கே உதவி வருகின்றது. தொகுப்பு மற்றும் மீள் தொகுப்பு என்பவற்றைக் கொண்ட இந்த நிகழ்வுப் போக்கு இன்னும் முடிந்துவிடவில்லை.

ஒவ்வொரு தலைமுறையும் சேகுவேராவின் முக்கியத்துவத்தையும், பொருளையும் கண்டு கொள்ளும்; மீள மீளக் கண்டுகொள்ளும். மாற்றமடையும் ஆற்றல் கொண்ட, வளரும் திறன் கொண்ட எந்த ஒரு பொருளும் வாழ்ந்து வருகிறது; அதேபோல, சுயமாக உருவாகிய சேகுவேராவும் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருவார்.

சேகுவேரா, 1960களிலும் 1970களின் தொடக்கத்திலும் எமக்கு எவ்விதம் தோற்றமளித்தார்? புரட்சிவாதத்தினதும் அதி தீவிரவாதத்தினதும் குறியீடொன்றாக அவர் இருந்தார்; பிடல் காஸ்ட்ரோ குறிப்பிட்டது போல, வீரம் செறிந்த ஒரு கெரில்லா போராளியாக அவர் இருந்தார். ஆயுதப் போராட்டத்தை நம்பி, அதைச் செயற்படுத்திவரும் ஒரு மனிதனாக, அதிதீவிர வடிவிலான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு போராளியாக, வியட்நாமுக்காக மாபெரும் தியாகத்தை செய்த ஒரு மாமனிதராக அவரை அன்று கண்டோம்.

தூய்மையான கோட்பாடுகளையும் இலட்சியங்களையும் கொண்டவராக பொலிவியாவில் மீண்டும் ஒருமுறை புதிதாக கெரில்லா போரினை துவக்கி வைப்பதற்காக, தான் பெற்றிருந்த அனைத்தையும் துறந்துவிட்டுவந்த தியாக சீலராக அவரை நோக்கினோம். சேகுவேரா மிக முக்கியமான புரட்சி வீரராவார். இந்த வீரத்துவம், கெரில்லாப் போராளி என்ற இரு அம்சங்களையும் இணைத்தே பிடல் காஸ்ட்ரோ சேகுவேராவை உருவாக்கினார். அதுதான் சேகுவேரா; அந்த நாட்களில் அவர் அவ்விதமாகத்தான் தோற்றமளித்தார். வேறு எவரையும்விட சேகுவேராவை மட்டும் நாம் எமக்கு மிக நெருக்கமானவராக உணர்ந்தது ஏன்? இதற்குக் காரணம் அவர் எமது சமகாலத்தவராக இருந்ததுவும் அவரது எளிமையும் ஆகுமென நான் கூறுவேன்.

சேகுவேரா செய்ததுபோல வேறு எந்த மாபெரும் புரட்சிவாதியும் தனது அனுபவத்தினை சொற்களால் தீட்டவில்லை. கியூபாவின் புரட்சிப் போரின் நிகழ்வுகளில் இருந்து தொடங்கி அவர் இவற்றை எழுதினார். இந்த வகையில் நோக்கும்பொழுது, 1952ல் கவிஞர் ரொபேர்டோ றெடாமார் எடுத்துக் காட்டிய ‘ஊடுருவிச் செல்லும் நெருக்க உணர்வு’ என்ற சொற்பிரயோகம் மிகச் சரியானதாகும். விசேஷமாக, சேகுவேரா இன்றைய யுகத்துக்குரிய ஒரு மனிதராக விளங்கினார்.

லெனினைப் போன்ற புரட்சிவாதிகள் வழிமுறை மற்றும் அணுகுமுறை என்பவற்றைப் பொருத்தவரையில் இன்றும்கூட பெருமளவுக்குப் பொருந்தக் கூடியவர்களாக இருந்து வருகிறார்கள். லெனினைப் பொருத்தவரையில் அவரது அறிவுசார் சாதனை பிரமிப்பூட்டுவதாக உள்ளது. ஏனெனில், அவர் குறிப்பிட்ட ஒரு மட்டத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு வகையைச் சேர்ந்த மேதையாக விளங்கினார். எவரும் முழுமையாகப் பின்பற்றக்கூடிய ஒரு மாதிரி உருவாக அவரைக் கருதமுடியுமென்று கூறுவதற்கில்லை.

ஆனால், சேகுவேரா வித்தியாச மானவராக இருந்தார். ஓமார் கபேஸாஸ் ‘மலையிலிருந்து தீ’ என்ற தனது நூலில், தம்மைப் பயிற்றுவித்தவர், சார்டினிஸ்டாஸ் படையணியின் குறிப்பிட்ட அந்தப் பிரிவினரை பலவந்தப்படுத்தி நடாத்திய மிகக் கடுமையான அணிவகுப்புக்களைப் பற்றி குறிப்பிடுகிறார். இந்த இளைஞர்கள் ஒரு சந்தர்ப்பத்தில், தம்மைப் பயிற்றுவிப்பவரான “டெவோ” என்பவருக்கு எதிராகக் கலகம் செய்தனர். நிலைமை இவ்விதமாக மோசமடைந்து கொண்டு வந்த நிலையில், ஒவ்வொருவரும் கைகளில் ஆயுதமேந்தி இருந்தமையினால் மிக மோசமான பின்விளைவுகளை எடுத்துவரக்கூடிய வன்செயல் வெடித்திருக்க முடியும்.

அந்த சந்தர்ப்பத்தில்தான் சார்டினிஸ்டாஸ் வீரரொருவர் இந்த இளைஞர்களுக்கு ‘புதிய மனிதன்’ குறித்து நினைவுபடுத்துகிறார்: “இங்கே சோஷலிஸமும் கம்யூனிஸமும் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் புதிய மனிதன் உருவாக்கப்பட வேண்டியவனாக உள்ளானா? இல்லை; புதிய மனிதன் மேலே அந்த மலைச்சரிவில் உங்களுக்காகக் காத்திருக்கிறான்.” இந்த உருவம் சேகுவேராவைக் குறிப்பதாக நான் நினைக்கிறேன்.

புதிய மனிதன் மலைச்சரிவில் காத்துக் கொண்டிருந்தான். அவனைச் சென்றடைவது சாத்தியமில்லாவிட்டாலும் கூட அவனைப் பின்தொடர்ந்து செல்வதாவது சாத்தியமானதாகும். இந்த விதத்திலேயே சார்டினிஸ்டா இயக்கம், 1967ல் பிடல் காஸ்ட்ரோவின் உரையில் இருந்த “சேகுவேராவைப் போல இருங்கள்” என்ற தலைப்பு வாசகத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. “லெனினைப்போல இருங்கள்; அல்லது மாவோவைப்போல் இருங்கள்” போன்ற வாசகங்கள் இதே அளவுக்குத் தாக்கம் கொண்டவையாக இருக்குமென்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், அவர்கள் குறித்து மிக அதிகமாக எதுவும் எமக்குத் தெரியாது. ஒருவேளை, ஒருவரின் சொந்த அனுபவங்களையும் மனப்பாங்குகளையும் எழுத்தில் வடிப்பது ‘செய்யக்கூடாத ஒரு செயல்’ என்று கருதப்பட்ட வித்தியாசமான கலாச்சாரங்களை அல்லது வித்தியாசமான கால கட்டங்களைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருந்திருக்க முடியும்.

ஆனால், சேகுவேரா எம்மைப்போல இருந்தார்; எம்மைப்போல இருக்கவில்லை என்பதனை எம்மால் நம்பமுடியும். பைபிளில் கூறப்படுவதுபோல, ‘யேசுபிரான் வேறு எவரையும்போல ஒரு மனிதராக இருந்தார்’ என்ற அர்த்தத்தில் சேகுவேராவை இங்கு குறிப்பிட முடியாது. சேகுவேராவின் எழுத்துக்களும், கடிதங்களும் எம்மால் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய எம்முடன் சேர்த்து இனங்கண்டு கொள்ளக்கூடிய ஒரு நெருக்கமான உணர்வினை எமக்குத் தந்தன. ஏனைய புரட்சிவாதி களின் மன உணர்வுகள், அவர்களுடைய பாரிய அளவிலான அரசியல் எழுத்துக்களினாலும் பரந்த வீச்சிலான நடவடிக்கைகளினாலும் மூடுண்டு இருந்தமையினால் அவர்களிடமிருந்த இந்த உணர்வினை நாம் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், சேகுவேராவைப் பொருத்தவரையில், அனைத்துமே ஒரு மானிட அம்சத்தைக் கொண்டிருந்தன “புரட்சிகர போரொன்றின் நிகழ்வுகள்” என்ற நூலின் பாத்திரங்களுடனும் சூழ்நிலைகளுடனும் நீங்கள் எளிதில் ஒன்றித்துவிட முடியும். இதற்கு முன்னர் எவரும் எம்முடன் பேசியிராத ஒரு விதத்தில் சேகுவேரா எம்முடன் பேசியுள்ளார்.

ஆனால், பாய்ச்சலும் பெருமாற்றமும் பொலிவியாவுடன் தொடங்கின. ஏbனில், அங்கு மேற்கொண்ட ஒரு தனி நடவடிக்கையினால் சேகுவேரா எம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு மனிதராக மாற்றமடைந்தார். மூன்று கண்டங்களையும் சேர்ந்த மக்களுக்கு விடுத்த செய்தியில், தனது ஆரம்பகால எழுத்துகளுக்கூடாக எமது நண்பராகவும் மூத்த சகோதரராகவும் இருந்த சே, அதிக அளவுக்கு வித்தியாசமான ஒரு இடத்தி லிருந்து எம்முடன் பேசுகிறார். தர ரீதியான அர்ப்பணிப்பு குறித்த வேறுபட்ட பரிமாணம் ஒன்றிலிருந்து அவர் உரையாடுகிறார். மீண்டும் அவரது தினக்குறிப்பேட்டை வாசிக்கும்பொழுது தலைசிறந்த ஒரு மானிடராக அவரைக் காண்கிறோம். பொலிவியாவில் அவர் கடவுளுக்கு மிக நெருக்க மாக இருந்த சந்தர்ப்பத்தில், தனது உன்னதமான மானிட அம்சத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

பொலிவியா குறித்து ஏற்கெனவே பல விடயங்கள் கூறப்பட்டுவிட்டன. குழுக்கள் சார்ந்தோரும், சித்தாந்தவாதிகளும் திரிபுவாதிகளும் இதனை, இந்த மனிதரின் குணாம்சத்துக்கு இயல்பான சாகசச் செயல் ஒன்று மட்டுமே எனக்கூறி நிராகரித்துள்ளனர். ஆனால், வீரம் செறிந்த வியட்னாம் போராட்டத்துடன் தோழமை உணர்வை வெளிப்படுத்திக் காட்டிய அதிக உன்னத அடையாளமாக இதனை நாம் நோக்குகிறோம். மேலும், பொலிவியா இன்னொரு விடயத்தையும் கொண்டிருந்தது என நான் நினைக்கிறேன். அதாவது, பொலிவியா, சேகுவேரா தனக்காக வைத்துக் கொண்ட பரீட்சிப்பொன்றாக இருந்தது.

தனது எழுத்துக்களுக்குப் பின்னர், புதிய மானுடன் குறித்த தனது தரிசனத்தின் பின்னர், சர்வதேசவாதம் மற்றும் ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பவற்றின் பின்னர் அவர் இந்தப் பரீட்சையைச் சந்திக்க வேண்டியிருந்தது. சேவைப் பொருத்தவரையில், இது அவசியமாகவும் இருந்தது. மேலும், சேகுவேரா தன்னைத்தான் தரிசித்துக் கொள்வதற்காகவே பொலிவியாவிற்குச் சென்றார். தனது நடைமுறைகளில் இருந்து உருவாகியிருந்த கோட்பாட்டினை மீண்டும் ஒரு முறை நடைமுறைக்கு எடுத்துவந்த பாய்ச்சல் பொலிவியாவிலேயே இடம்பெற்றது. உண்மையான கோட்பாடு - நடைமுறையில் சிக்கல் எதுவுமின்றி மென்மையாக ஒருபோதும் மாற்றம் காண்பதில்லை. கோட்பாடும் யதார்த்தமும் ஒன்றுடன் ஒன்று மோதுவதுடன், இந்த மோதலின் அதிர்வு தவிர்க்க முடியாததாகும். கோட்பாட்டினதும் நடைமுறையினதும் இயங்கியல் ரீதியான ஐக்கியம் எப்பொழுதும் வன்முறையுடன் கூடிய ஒரு ஐக்கியமாகவே இருந்து வருகின்றது.

பொலிவிய நாட்குறிப்பில் எமது நண்பரும் மூத்த சகோதரருமான சே குவேராவை மீண்டும் ஒருமுறை நாங்கள் சந்திக்கின்றோம். புதிய சோஷலிஸ மனிதன். இன்னமும். அதே உணர்ச்சிகளையும் வேதனைகளையும், பலவீனமான கணங்களையும் கொண்டு ஒரு மனிதனாக இருந்து வருகின்றான் என்பதை அவருடைய நாட்குறிப்பு எமக்குக் காட்டுகிறது. இந்தவகையில், அவர் வெகு தொலைவில் - பொலிவியாவில் எம்மால் எளிதில் சென்று அடைந்து விட முடியாத இடத்தில் இருந்து வந்த போதிலும், எம்மால் அவரை எளிதில் அணுக முடிகிறது. வேதனை, போராட்டம், பின்வாங்குதல், எதிரில் தெரியும் ஆபத்து என்பவற்றை வரிசைப்படுத்திக்காட்டும் அவருடைய இந்தக் குறிப்புக்கள், புதிய சோஷலிஸ மனிதன் எத்தகைய மனிதனாக இருந்தபோதிலும் சர்வியாபகமான மனிதனாக மட்டும் அவன் இருக்கவில்லை என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. அவருடைய சித்தாந்தமும் பிரக்ஞையும் மாயாஜாலம் காட்டும் தாயத்தொன்றாக இருக்கவில்லை. புதிய சோஷலிஸ மனிதன் ஏனைய மனிதர்களைப் போலவே மரணிக்கக்கூடியவன் ஆவான். ஆனால், அவன் வித்தியாசமானவன். இந்த மனித ஆளுமை குறித்த இயங்கியலையே அவருடைய இறுதிக் குறிப்புகளில் நாம் காண்கின்றோம். ஆஸ்த்மாவினால் துன்பப்பட்டு, துரதிர்ஷ்டங்கள், பிழையான கணிப்புகள், துரோகங்கள், விரக்திகள் என்பவற்றினால் அலைக்கழிக்கப்பட்டு, இந்தப் பயணம் எந்தத் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதனை நன்கு உணர்ந்த நிலையில், யூரோ பள்ளத்தாக்கின் ஓரிடத்தில் ஒரு கணத்தில், தமக்கு எதிரிலுள்ள சாய்வில் தமக்கு முன்னால் சோஷலிஸ மனிதனின் தரிசனத்தை சேகுவேரா கண்டுகொண்டிருக்க முடியும்.

நன்றி: ‘பொருளியல் நோக்கு’ காலாண்டிதழ், இலங்கை.

Pin It