Ahalya artஅஹல்யா என்பதற்குக் கலப்பையால் உழப்படாத நிலம் என்னும் பொருள் உண்டு. இவளைக் கன்னி நிலம் செழிப்புடையவள் என்று காட்டுவதற்கு இப்படிக் கூறியிருக்கலாம். தாகூர் இவளை நித்திய கன்னி என்பார். மகாபாரதம் ஒரு இடத்தில் அகல்யா, சீதை, திரௌபதை, தாரை, மண்டோதரி ஆகியோரைப் பஞ்ச கன்னியராகக் கூறும்.

பத்மபுராணம், ஸ்காந்தம் போன்ற பிற்காலப் புராணங்கள் அகலிகையைப் பதிவிரதை என்று கூறுவதாக இராமாநுஜர் கூறுகிறார். (அஹல்யா. சிறு பிரசுரம் திருச்சி 1942 ப.11) இவரே அகல்யா இந்திரனிடம் தன் உண்மையான உடலை இழக்கவில்லை; மாய உடம்பையே இழந்தாள் எனப் பத்மபுராணம் கூறுவதாய் மேற்கோள் காட்டுகிறார் (மேற்படி ப.12) கம்பன் ‘மாசறு கற்பின் மிக்க அணங்கு’ என்கிறான்.

ராமாயணம், மகாபாரதம் என்னும் இரண்டு காவியங்களும் புராணங்களும் அகல்யாவின் கதையைக் கூறுகின்றன. வான்மீகம், ரகுவம்சம், கம்பராமாயணம், தொரவே ராமாயணம் (கன்னடம்) எழுத்தச்சனின் ராமாயணம் (மலையாளம்) துளசி ராமாயணம் (இந்தி) தெலுங்கு ராமாயணம் ஆகியனவும் அகலிகையின் கதையைக் கூறுகின்றன.

அகலிகை பற்றிக் கூறாத ராமாயணங்களும் புராணங்களும் உள்ளன என்கிறார் க.அ. மணவாளன் (இராமகதையும் இராமாயணங்களும் 2005 தென்னக ஆய்வுமையம் சென்னை ப, 146) தசரத ஜாதகம். கன்னட பம்பராமாயணம், பவுத்த ராமாயணம், ஜைன ராமாயணம் விமல சூரியின் பௌமசா¤தம், வாசு தேவஹிண்டி, குணபத்திரா¤ன் உத்திர புராணம் என்னும் நூல்களில் அகலிகை பற்றி செய்திகள் இல்லை என்கிறார் மணவாளன்.

கம்பன் கூறும் அகலிகை கதையைப் பார்ப்போம்.

கம்பன் பாலகாண்டத்தில் அகலிகை படலத்தில் அகலிகை கதையை 17 பாடல்களில் கூறுகிறான். விசுவாமித்திரர் நடத்திய யாகத்தைத் தடை செய்த தாடகையை இராம லக்குவர் வதம் செய்தனர். இதன் பின்னர் விசுவாமித்திரன் இராமனுக்கு சீதையை மணம் செய்விப்பதற்காக விதேச நாட்டின் தலைநகர் மிதிலைக்குச் செல்லுகிறார்.

நகரின் கோட்டைக்கு வெளியே மூவரும் கல்மேட்டைக் காண்கின்றனர். இராமனின் கால் மேட்டில் பட்டதும் அதிலிருந்து ஒரு பெண் தோன்றுகிறாள். இராமன் திகைக்கிறான். விசுவாமித்திரன் சுருக்கமாக ‘இவள் கவுதமன¤ன் மனைவி. அகலிகை. இந்திரன் இவளுக்கு தீங்கு செய்ததால் சாபம் பெற்றவள்’ என்கிறார். இராமன் இவளது வரலாறு என்ன என்று கேட்டான். அவர் சொல்கிறார்.

‘இந்திரனுக்கு அகலிகை மீது ஆசை. அவளை அடைய விரும்பினான். ஒருநாள் முனிவர் ஆசிரமத்திலிருந்து வெளியேறும்படி சூழ்ச்சி செய்து காட்டுக்கு அனுப்புகிறான். கவுதமரின் உருவத்துடன் சென்று அவளைப் புணர்ந்தான். அகலிகை ஒரு கட்டத்தில் தன்னைக் கூடுபவன் இந்திரன் என உணர்ந்தாலும் தடுக்கவில்லை. அப்போது கவுதமன் வந்தார். இந்திரன் பூனையாக மாறி அங்கிருந்து அகன்றான்.

கவுதமர் அகலிகையைப் பார்த்து விலைமகள் போல் நடந்தாய். கல்லாய் போ என்றார். இந்திரா உன் உடலில் 1000 பெண்குறி தோன்றட்டும் என்றார். அகலிகை முனிவரை வணங்கி சாபவிமோசனம் கேட்டாள். கவுதமர் ‘இராமனின் பாதம்பட்டு உயிர் பெறுவாய்' என்றார். தேவர்கள் இந்திரனுக்குச் சாப விமோசனம் கேட்டனர். முனிவர் "அவனது உடலில் குறிகள் 1000 கண்களாகட்டும்" என்றார்." இந்த கதைகளை விசுவாமித்திரர் சொன்னதும் இராமன் கவுதமரிடம் நெஞ்சில் பிழையில்லாத இவளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

கம்பன் கூறும் அகலிகை சாபவிமோசன நிகழ்ச்சி மிதிலை நகர் கோட்டையின் வெளிப்புறம் நடந்தது. இராமன் அகலிகைக்கு விமோசனம் கொடுத்தாலும் அவளை அன்னையே என அழைக்கிறான். அகலிகையின் கதையைக் கம்பன் நாடகத்தன்மையுடன் காட்டுகிறான். இந்திரனுக்கு உடன்பட்டே அகலிகை இருந்தாள் என்ற தொனி கம்பனிடம் உண்டு.

இராமாயண ஆய்வாளர்கள் அகலிகையின் கதையை வான்மீகிதான் முதலில் கூறுகிறான் என்கின்றன. தாடகையின் வதைக்குப் பின் இராம லட்சுமணர் விசுவாமித்திரர் ஆகிய மூவரும் விசாலை என்ற நகரின் அரசன் சுமதியின் விருந்தினராகச் செல்கின்றனர். இந்த நகரத்திற்கு ஒரு வரலாறு உண்டு. அசுரர்களின் தாய் திதியின் கர்ப்பத்தை இந்திரன் சிதைத்த இடமே இந்த விசாலை நகரம். இங்கிருந்துதான் அகலிகைக்கு சாப விமோசனம் கொடுக்க இராமன் போகிறான்.

அகலிகை இந்திரனை விரும்பியே வரவேற்றதாக வான்மீகி கூறுகிறார். (பாலகாண்டம்) இன்னொரு இடத்தில் அவள் குற்றமள்ளவள் என்கிறார், (உத்திர காண்டம்) தன்னை இந்திரன் தேடிவந்தான் என்ற கர்வம் அகலிகைக¢கு இருந்தது என்பது வான்மீகம்.

துளசியின் ராமாயணத்தில் விசுவாமித்திரன் இராமனிடம் அகலிகையின் கதையைச் சொன்ன பிறகுதான் அகலிகை சாபவிமோசன நிகழ்ச்சி நடக்கிறது. அகலிகை இராமனைத் துதிக்கும் நிகழ்ச்சியில் இராவணனின் பகைவனான இராமனே என அழைக்கிறாள். இந்திரன் குற்றவாளி என்பதே துளசியின் முடிவு.

தெலுங்கு மொழியில் அமைந்த ரங்கநாத ராமாயணம். பாஸ்கர ராமாயணம். மெல்ல ராமாயணம். மகாபாரதம் (எர்ரன்னா) ஆகியவற்றில் அகலிகை தெரிந்தே தவறு செய்வதாகக் குறிக்கப்படுகிறது. கன்னட. மலையாள ராமாயணங்களிலும் அகலிகை கதை வான்மீகியைப் பின்பற்றியே வருகிறது. கி£¤த்திகவாசனின் வங்காளி ராமாயணத்தில் இந்திரன் தன் சுய உருவத்திலேயே அகலிகையைச் சந்தித்து மயக்குகிறான். என்றாலும் அகலிகையின் பேரில் இந்த ராமாயணம் குற்றம் சாட்டவில்லை.

தெலுங்கு ராமாயணங்களில் தென்புல வழக்காற்றில் பேசப்படும் அகலிகை எப்படியோ நுழைந்திருக்கிறாள். இவற்றில் இந்திரன் சேவலாக மாறிக் கூடிய கதை வருகிறது. ரங்கநாத ராமாயணத்தில் அகலிகை இந்திரனை விரும்பியே புணருகிறாள் என வருகிறது.

பாஸ்கர ராமாயணத்தில் இந்திரன் கவுதமராக வேடம் புனைந்து அகலிகையிடம் செல்லுகிறான். அகலிகை இந்திரனே அவன் எனத் தெரிந்தும் இணங்குகிறாள், புணர்ச்சி முடிந்ததும் உன்னைப் பாதுகாத்துக்கொள் என்கிறான்.

மஞ்சரி சேமேந்திரர் எழுதிய காஷ்மீர ராமாயணத்தில் வரும் அகலிகையின் கதை வான்மீகியிலிருந்து வேறுபட்டது. மகாபாரதம் உத்யோக பர்வதத்தில் அகலிகை கதை சிறிய அளவில் வருகிறது. இந்திரன் கவுதமனாகவும் அந்தணனாகவும் மாறி மாறி அகலிகையை புணருவதாக வருகிறது. இதில் அகலிகையின்மேல் குற்றம் இல்லை எனக் காட்டப்படுகிறாள். அதனால் அவளுக்குச் சாபம் கிடையாது.

அகலிகையைப் பிரம்மாவே படைத்தார். ஒரு விதத்தில் அவளுக்கு அவர் தந்தையுமாவார். அகலிகையை கவுதமரும் இந்திரனும் விரும்புகின்றனர். யாருக்கு அவள் என்ற கேள்வி வந்தது- இருவருக்கும் போட்டி வைத்து யார் அதில் வெற்றி பெறுகிறார்களோ அவருக்கே அகலிகை என பிரம்மா கூறுகிறார். இந்தக் கன்னியா சுல்கம் போட்டிக்கு நிபந்தனையும் விதிக்கிறார்.

கடலில் அதிக நேரம் யார் மூழ்கி இருக்கிறார்களோ அவர்களுக்கே அகலிகை என்பது நிபந்தனை. இந்திரனும் கவுதமரும் கடலில் மூழ்குகின்றனர். கவுதமன் தன் யோக பழக்கம் காரணமாக நெடுநேரம் மூழ்கி இருக்கிறான். இந்திரனால் முடியவில்லை.

உடனே அகலிகை கவுதமனுக்கு என்கிறார் பிரம்மா. இந்திரன் இது சரியான போட்டியல்ல அவர் யோகி அதனால் சாதித்துவிட்டார் என்கிறார். அடுத்து இரண்டாம் போட்டியைச் சொன்னார் பிரம்மா.

இரண்டு முகங்கள் கொண்ட பசுவை யார் முதலில் பார்த்து வலம் வருகிறார்களோ அவருக்கு அகலிகை என்றார். இருவரும் போட்டிக்கு இறங்கினர். இந்திரன் தன் வாகனத்திலேறி அப்படி ஒரு பசுவை தேடிப்போனான். கவுதமர் நாரதரிடம் யோசனை கேட்டார். அவர் மாட்டுப் பண்ணையில் சூல்முதிர்ந்து ஈனும் பசுவைத் தேடிப் போவீர் என்றார்.

கவுதமர் அப்படி ஒரு பசுவை எளிதில் கண்டுபிடித்தார். கரு உயிர்க்கும் நிலையில் பார்த்தார். பசுவின் முகம். பின்பகுதியில் குட்டியின் முகம் இரண்டையும் ஒரே நேரத்தில் அதிகாலையில் பார்த்து வலம் வந்தார். பிரம்மாவிடம் தான் கண்ட செய்தியைச் சொல்லி அகலிகையைத் தானம் வாங்கிக் கொண்டார். இந்திரன் வஞ்சினத்துடன் இந்த அகலிகையை ஒரு நாள் பெண்டாள வேண்டும் எனச் சொல்லிக் கொண்டான்.

கவுதமர் சப்தரிஷிகளில் ஒருவர். ஜனக மன்னனின் புரோகிதர் என்பதை மறந்து இந்திரன் அகலிகையை அடைய சூழ்ச்சி செய்தது பற்றிய செய்திகள் வாய்மொழி மரபில் உண்டு. கவுதமன் இந்திர பதவிக்குப் போட்டியிட எண்ணி அசுவமேத யாகம் செய்ய மனனர்களிடம் உதவி கேட்டான். இந்திரன் இதைத் தடுத்தால் மட்டுமே தான் பதவியைத் தக்கவைக்க முடியும் என உணர்ந்து கவுதமரைப் பழிவாங்கப் போனான். அப்போது அகலிகையைப் புணர்ந்தான் என்பது ஒரு கதை.

ஞானவாஷிஷ்டத்தில் இந்திரன் அகலிகை சாயலுடைய ஒரு கதை வருகிறது. மூலநூல் 32000 சுலோகங்கள் கொண்டது. இதைக் காஷ்மீர் பண்டிதர் சுருக்கி 6000 சுலோகங்களாக லகுவாசிட்டம் என்னும் பெயா¤ல் ஒரு நூலைத் தந்தார். இதற்குத் தமிழ் மொழிபெயர்ப்பு உண்டு. (1893) இதில் பல கதைகள் உள்ளன.

இந்நூல் ஆறு பிரகரணங்களை உடையது. அகலிகை கதை உற்பத்தி பிரகரணத்தில் வருகிறது. ‘மனமே உற்பத்திக்குக் காரணம் மனம் இல்லை என்றால் உற்பத்தி இல்லை. உலகில் எல்லாமே மனத்தால் படைக்கப்பட்டவை. உலக பந்தம், விடுதலை எல்லாம் கூட மனத்தின் காரணமாக நிகழ்பவை’ என்னும் தத்துவத்தைக் கூற யோகாவாஷிஷ்டம் ஒரு கதையைக் கூறுகிறது.

மகத நாட்டின் அரசன் இந்திரத்துய்மன். இவனது மனைவி அகலிகை. இவள் பேரழகி. இவளுக்கு ஒரு காதலன் உண்டு. அவன் பெயர் இந்திரன். அரசனுக்கு இது தெரிந்தது.

இருவருக்கும் தண்டனை கொடுக்கிறான் ஆனால் அவர்களின் உடலை அது பாதிக்கவில்லை. அரசனுக்கு அதிசயமாக இருந்தது. அப்போது அரசனின் குலகுரு ‘அரசே மனம் ஒரு பொருளில் பற்றுதல் வைத்துவிட்டால் அவர்களின் உடலுக்கு அழிவு செய்ய முடியாது’ என்றான்.

அரசன் அவர்களை ‘என்ன செய்வது" என்று கேட்டான். குரு ‘நாடு கடத்திவிடு' என்றார். அரசனும் அப்படியே செய்தான். இந்தக் கதையை எடுத்தாளுகின்றவர்கள் தேவலோக இந்திரனுக்கு அகலிகையிடம் இருந்த காதல் இப்படியாக இருந்ததால் விளைவை யோசிக்கவில்லை என்கின்றனர்.

அகலிகை கதையின் பல்வகை மாற்றங்களுக்கு நாட்டார் மரபு காரணமாகயிருந்திருக்கிறது. செவ்வியல் மரபில் உள்ள காவிய புராணங்களுக்கு அகலிகை வாய்மொழி மரபு உதவியிருக்கிறது. நடு இரவில் ஆசிரமத்திலிருந்து கவுதமரை வெளியேற்ற இந்திரன் தந்திரம் செய்தான். சேவலாகக் கூவினான். ஆசிரமக் கூரையின் மேல் சேவலாக அமர்ந்து கொண்டான். கவுதமர் மறைந்ததும், அவரது உருவத்தில் ஆசிரமம் போனான். இப்படி ஒரு கதை உண்டு. இந்தக் கதை கம்பன், வான்மீகியிடம் இல்லை.

தென் மாவட்டங்களில் கிடைத்துள்ள அயோத்தி இராமாயணம், இராமசாமி கதைப்பாங்கு (ஏடு) என்னும் இரண்டு கதைப்பாடல்களிலும் அகலிகை கதை வருகிறது. இராமன் லட்சுமணன் விசுவாமித்திரர் மூவரும் தாடகை வதம் முடிந்து காட்டுவழி போகும்போது சிதைந்த ஒரு ஆஸ்ரமத்தைக் கண்டனர்.

இராமன் ஆஸ்ரமத்தினுள் நுழைந்ததும் கருங்கல் சிற்பம் ஒன்றைப் பார்த்தான். அதன் மேல் படிந்திருந்த தூசியைத் தட்டிவிடுகிறான். உடனே அந்தக் கல் பெண்ணாக மாறுகிறது. இதை நாட்டார் பாடல் ஆசிரியன்,

கானகத்துக் குடிசையைத்தான்
கண்டவனும் உள் நுழைந்தான்
கல்லாலே பெண் உருவம்
கண்டதுமே அதிசயித்தான்
புழுதிதான் துடைத்தானே
கைத்துணீயாலே அடித்தானே
கல்லுருவம் காரிகையாய்
கண்ணிமைத்து நின்றதுவாம்

என்கிறார். இது எழுத்து வடிவிலான கதைப் பாடல்.

அகலிகை சாபவிமோசனம் பெற்று உயிருள்ள பெண்ணாக நிற்கிறாள். இராமனைப் பார்த்து அய்யா பசி என்கிறாள். இராமன் லட்சுமணனைப் பார்த்து கண்ணசைக்கிறான். அவன் காட்டிற்குள் சென்று தொன்னையில் பழம் கொண்டு வருகிறான். இதை,

பல நாள் பசித்திருந்து பரிதவித்த பாவியானேன்
ரகுநாதன் தாள் வணங்கி தெண்டனிட்டேன் பசிக்குதென்று
தொன்னையிலே அமுதெடுத்து பவிசாகத் தான்கொடுத்தான்

என்கிறார் நாட்டார் கவிஞன்.

தெலுங்கைத் தாய் மொழியாக உடைய கம்மவர்களில் ஒரு பிரிவினர் இராமாயண ஓவிய ஏட்டை வைத்துக் கதை சொல்லுவர். நூல்போட்டுப் பார்த்தல் என்ற இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. ஏடுகளின் இடையே நூலைப் போடும்போது இராமன் அகலிகை விமோசனப் படம் வந்தால் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை. அதோடு அகலிகைக்கு இராமன் பழம் கொடுப்பது போன்ற படமும் உண்டு.

இந்தக் கதை நிகழ்வு ஆந்திரா வழி தமிழகத்தில் பரவியிருக்கலாம். தோல்பாவைக் கூத்து கலைநிகழ்ச்சியில் கூட அகலிகைக்கு இராமன் பசியாறப் பழம் கொடுப்பது போன்ற காட்சி உண்டு.

தோல் பாவைக் கூத்தில் முதல்நாள் நிகழ்ச்சியில் (பாலகாண்டம்) 19ஆம் காட்சியில் அகலிகை கதை வருகிறது. விசுவாமித்திரர் கதை முழுவதும் சொல்லுகிறார்.

அகலிகையை கருங்கல்லாக ஏன் சபித்தார் கவுதமர் என இராமன் கேட்கிறான். விசுவாமித்திரர் ‘ஒரு கணவனும் மனைவியும் மாறி மாறி உடல் கூறுகளை பரிட்சாந்தங்களை அறிவர். ஆனால் ரிஷிபத்தினி அந்த உணர்வு இல்லாததால் சாபம் பெற்றாள்’ என்கிறார்.

இந்தச் சமயம் பின்னணிக் குரல் கேட்கிறது. ‘கவுதமரிஷி உள்ளத்தால் தூய்மை ஆனவள் அவள் மீது களங்கம் கற்பிக்க வேண்டாம்’

இந்த நிகழ்ச்சியுடன், முதல்நாள் கூத்து முடியும்.

கம்மவரின் இந்த ஜோதிடக் கதை மரபில், இராமன் சீதையுடன் காட்டிற்குச் செல்லும்போது அகலிகையைக் கண்டான் என்ற மாற்றமுடைய நிகழ்ச்சி உண்டு. இதே நிகழ்ச்சி ஆனந்த ராமாயணத்திலும் காஷ்மீர ராமாயணத்திலும் உண்டு. இங்கு வேறுபட்ட வடிவங்கள் வழங்குகிறது. இவற்றில் இந்திரனின் உடலில் பெண்குறி பெற்ற சாபம் முக்கியமானது.

கவுதமர் அதர¢மம் செய்த இந்திரனைப் பார்த்து ‘உன் உடலில் மாதர்க்குரிய குறிகள் ஆயிரம் உண்டாகுக’ என்று சாபம் கொடுப்பதாக கம்பன் கூறுகிறான். இந்து புராணங்களில் இப்படிப் பெண்குறி தோன்றுமாறு சாபம் கொடுத்ததான கதை வேறு இல்லை. ஒன்றுக்கு ஆசைப்பட்டு ஆயிரம் கிடைத்தது என்ற திருப்தி இதில் அடையமுடியாது. இந்திரன் தன் உடலை இந்திராணியிடம் காட்ட முடியாது. ஒருவகையில் இது ஒரு தண்டனையும் கூட.

தொரவே ராமாயணத்திலும் இந்திரன் பெண்குறி பெற்ற சாபம் வருகிறது. அதோடு அவள் ஆண்மையை இழக்கட்டும் என்ற சாபம் பெற்ற நிகழ்ச்சியும் வருகிறது. துளசி வரலாற்றில் இந்திரன் சாபம் பெற்ற கதை இல்லை. ஆனால் சாபவிமோசனம் பெற்றதான செய்தி உள்ளது. இந்திரனை ஆயிரம் கண்ணோன் எனச் சிலப்பதிகார உரையாசிரியர் கூறுகிறார். இக்காலத்தில் இது வாய்மொழி மரபிலும் பேசப்பட்டிருக்கலாம்.

க.அ.மணவாளன், இந்திரன் பெண்குறி பெற்றதான சாபத்தைக் கம்பனிடமிருந்தே பிற்பட்ட ராமாயணக்காரர்கள் எடுத்திருக்க வேண்டும் என்கிறார் (ப,152) இவருக்கு எப்படி இத்தொன்மம் கிடைத்தது. மணிமேகலையில் இது வருகிறது. (கதை 18 வரி 88 - 91)

ஞானசம்பந்தரும் இந்திரனின் கோவிலைக் கண்ணார் கோவில் என்கிறார். இதனால் சங்ககால முடிவிலேயே இந்திரன் பெண்குறி சாபம் தொன்மம் வழங்கியதென்றும், அதையே கம்பன் எடுத்துக்கொண்டான் என்றும் ஊகிக்கலாம்.

காஷ்மீர் வட்டார வழக்கில் இந்திரன் அகலிகையின் பெண்குறிக்குள் சென்றதான கதை வருகிறது. (V.R.Ragavan 1989 The Ramayana Tradition in Asia Sahitya - Akademy P.42).

ஆசிரமத்தில் இந்திரனைப் பார்த்து விட்டார் கவுதமர். அப்போது இந்திரன் தப்ப வழியில்லை; ஆடையில்லாமல் கிடக்கும் அகலிகையைப் பார்த்தான். வண்டாக மாறி அவளது குறிக்குள் சென்றுவிட்டான். இதைப் பார்த்த கவுதமர் அவன் உடலில் பெண்குறி தோன்றட்டும் எனச் சாபம் கொடுத்தாராம். இது காஷ்மீர் வாய்மொழிக்கதை.

வான்மீகி இந்திரன் பெற்ற சாபத்தை வேறுவிதமாகச் சொல்லுகிறார். கவுதமர் ‘இந்திரனே நீ உன் இரண்டு விருட்சங்களை இழப்பாய் ஆண்மையில்லாமல் ஆவாய்’ எனச் சாபங் கொடுக்கிறார். தேவர்கள் வேண்டியதால் ‘ஆட்டின் விருட்சங்களை வெட்டிப் பொருத்தினால் ஆண்மை பெறுவான்’ எனச் சாபவிமோசனம் கொடுக்கிறார்.

வான்மீகியின் உத்திரகாண்டத்தில் சாபவிமோசனம் வேறுவிதமாக வருகிறது. ‘மனிதர்கள் செய்யும் பாவத்தின் பாதிப்பு இந்திரனைச் சேரும்; இந்திர பதவி நிலையாக இருக்காது’ என்கிறார் வான்மீகி. இதற்கு சாபவிமோசனமும் கொடுக்கிறார்.

அகலிகை பெற்ற சாபத்திற்கும் சாப விமோசனத்திற்கும் வேறு வேறு வடிவங்கள் உண்டு. அகலிகையைக் ‘கல்லாகப் போ’ எனச் சாபமிடுவதும். இராமனால் சாபவிமோசனம் பெறுவாய் எனக் கூறுவதுமான செய்தி கம்பனிடம் மட்டுமல்ல ரகுவம்சம், இலங்கை ஜானகி ஹரன்(குமாரதாசர்) ராமாயணங்களிலும் உண்டு. காற்றையே உண்டு முழு உடலுடன் கிடக்கவும் கற்சிலையாக மாறவும் சாபமிட்ட கதை உண்டு.

தமிழில் அகலிகை கதையை முழுதாகச் சொல்லுகின்ற சிறு இலக்கியம் அகலிகை வெண்பா ஒன்றுதான். எழுதியவர் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார். (1857 - 1946) இவரது அகலிகை வெண்பா (1926) மூன்று காண்டங்களும் 282 வெண்பாக்களும் உடையது. முதலியார் கம்பன் வான்மீகி கூறிய கதைகளை மட்டுமல்ல சுந்தரேசரர் என்ற கதாகாலட்சேபக்காரர் சொன்ன செய்திகளையும் இக்காவியத்தில் பயன்படுத்தியதாக இரண்டாம் பதிப்பில் கூறுகிறார்.

அகலிகையின் சாப விமோசனம் தமிழகக் கோவில்களில் ஓவியங்களாக உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், கும்பகோணம் இராமசாமி கோவில், இராமநாதபுரம் அரண்மனை ஆசியவற்றில் உள்ள ஓவியங்கள் சுவரோவியங்கள்.

சுசீந்திரம் கோவில் கோபுரத்தில் இரண்டாம் மாடியில் மேற்கு பார்த்த கிழக்கு சுவரில் அகலிகை ஓவியம் உள்ளது.

அகலிகை, விசுவாமித்திரர், இராம லட்சுமணர் உருவங்கள்; இங்கு அகலிகை முழு உருவ கற்சிலையாக - மெல்லிய சேலை - அசைவில்லாத தோற்றமுடையவளாக நிற்கிறாள். இராமன் அகலிகைக்கு தொன்னையில் பழம் கொடுக்கும் இன்னொரு காட்சி; இதில் உயிருள்ள அகலிகை.

இந்த சுவரோவியங்கள் வாய்மொழி மரபில் உள்ள கதை நிகழ்வு.

கும்பகோணம் ராமசாமி கோவிலில் உள்ள சுவரோவியத்தில் அகலிகை இராமனைப் பார்த்து இரண்டு கைகளால் வணங்குவதாகக் காட்டப்பட்டுள்ளது.

‘அகலிகை’ தமிழ்ப் பெண்போல் சேலை உடுத்தியிருக்கிறாள். ராமன் ஆயுதபாணியாய் இருக்கிறான். சாபவிமோசன நிகழ்ச்சியில் கவுதமரும் இருக்கிறார்.

இராமநாதபுரம் அரண்மனை ஓவியத்தில் அகலிகை, இராமனின் கால்களில் விழுந்து வணங்குவதாக உள்ளது.

விசுவாமித்திரர், கவுதமர், இராமன் மூவரும் அவளை ஆசிர்வதிக்கின்றனர் வான்மீகியில் இராமனே, விமோசனம் பெற்ற அகலிகையை வணங்குகிறான். கம்பன், அன்னையே என ராமன் அகலிகையை அழைப்பதாகச் சொல்லுகிறான். பாஸ்கர ராமாயணத்தில் (தெலுங்கு) ராமலட்சுமணர் அகலிகை காலில் விழுகின்றனர்.

- அ.கா.பெருமாள்

Pin It