“தலைவன் வீட்டு முற்றத்தில் நிற்கிறான். அவன் போர்க்களத்தில் திரிவதனைக் காணமுடியாது”1 என்ற பொருள்பட அமைந்த இருவரிப் பாடலை அண்மையில் படிக்க நேர்ந்தது. அந்த இருவரிப் பாடல் ஏமச்சந்திரர் எழுதிய அபபிரம்சா இலக்கண நூலில் இடம் பெற்றுள்ளது. அபபிரம்சா மொழி தற்கால வடஇந்தியா அல்லது இந்தோ-ஆரிய மொழிகளுக்குத் தாய். பிராகிருத மொழி வம்சாவளியைச் சார்ந்தது.

இப்பாடலை ஏமச்சந்திரர் எழுதவில்லை. ஏற்கனவே வழக்கிலிருந்த பாடலைத் தம் இலக்கண சூத்திரத்திற்கு மேற்கோளாகத் தந்துள்ளார். ஒரு தலைவியின் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது. தலைவன் எப்போதும் போர்க்களத்தில்தான் தோன்றுவான். ஆனால் இன்று வீட்டு முற்றத்தில் நிற்கிறான் என்பது இப்பாடலின் வெளிப்படையான பொருள். தலைவியின் தாயோ அல்லது தோழியோ தலைவியிடம் உன் தலைவன் (நாதன்) எங்கே? என்று கேட்பதாகவும் அதற்குத் தலைவி பதில் சொல்வதாகவும் இப்பாடலுக்குச் சூழலை எளிதாகக் கற்பனை செய்து கொள்ளலாம். கேட்டவள் யார்? அவள் எங்கே நின்றுகொண்டு கேட்டாள்? என்பன போன்ற வினாக்களுக்கு இப்பாடலில் பதில் இல்லை.

தலைவனுக்கும் தலைவிக்குமான உறவு எத்தன்மைத்து என்ற கேள்விக்கும் பாடலில் விடையில்லை. அவனைப் போர்க்களத்தில் மட்டும்தான் பொதுவாகக் காண முடியும். இன்று வீட்டின் முற்றத்தில் நிற்கிறான் என்று கூறுவதாக மட்டுமே பொருள் அமைந்துள்ளது. எப்பொழுதும் போரில் ஈடுபடும் வீரப்பண்பு இதன்வழி அறிந்துகொள்ள முடிகிறது.

இப்பாடலோடு ஒப்பிட்டுக் கருதத்தக்க ஒரு பாடல் புறநானூற்றில் காணப்படுகின்றது. ஆனால் புறநானூற்றுப் பாடலின் கருத்து சற்றுத் தலைகீழாக மாறி வந்துள்ளது. ‘என் மகன் வீட்டின்முன் இல்லை. எங்கிருக்கிறானோ? யான் அறியேன். போர்க்களத்தில் தோன்றுவான்’ என்ற பொருள்பட அப்பாடல் அமைந்துள்ளது. அது தாயின் கூற்றாக வந்துள்ளது. காவற் பெண்டு என்ற புலவர் எழுதியிருக்கிறார். பாடல் பொருள் பின்வருமாறு

“சிறிய குடிசையின்கண் உள்ள அழகிய தூணைப் பிடித்துக் கொண்டு உன் மகன் எங்கே என்று கேட்பீராயின் என் மகன் எங்கே இருக்கிறான் என்பதை யான் அறியேன். புலி தங்கி வெளியே புறப்பட்டுப்போன கற்குகை போல அவனைப் பெற்ற வயிறு இதோ இருக்கிறது. அவன் போர்க்களத்தின்கண்ணே திரிவான். (அவனைக் காணவேண்டுமாயின் அங்கே சென்று காண்க.)

சிற்றில் நற்றூண்பற்றி நின்மகன்

யாண்டுளனோ என வினவுதி யென்மகன்

யாண்டுளனாயினும் அறியேன் ஓரும்

புலிசேர்ந்து போகிற கல்லளை போல

ஈன்ற வயிறோ விதுவோ

தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே  (புறம். 86)

‘நின்மகன் யாண்டுளன்’ என்று வினா தொடுப்பது போலவும், ‘என்மகன் யாண்டுளனாயினும் அறியேன்’ என்று தாய் பதில் அளிப்பது போலவும் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. கேள்வி கேட்கிற பெண் சிறிய குடிசையின் தூணைப் பற்றியவாறு கேட்பதும், தாய் குடிசையின் உள்ளே இருந்து பதில் கூறுவதும் பாடலில் இடம்பெறுகின்றது. உரையாடலும், உரையாடல் நிகழ்ந்த இடமும் தெளிவாக இடம்பெறுகிறது. இதற்கு மேலும் ஒருபடி மேலே போய் தாய் தான் பெற்றெடுத்த வயிற்றை நினைத்துக் கொள்கிறாள். கற்குகையில் தங்கி வெளியே புறப்பட்டுப் போன புலியைப் போல என் வயிற்றிலே தங்கியிருந்து வெளியே போனான். அவ்வயிறு இதோ இருக்கிறது. அவன் போர்க்களத்தில் தோன்றுவான் என்று தாய் கூறுகிறாள்.

தன் மகனால் பெருமைப்பட நேர்ந்தபோதும் அன்றிச் சிறுமைப்பட நேர்ந்தபோதும் தான் பெற்ற வயிற்றை நினைத்துக் கொள்வாள் தாய். பத்து மாதம் சுமந்து இன்னல்கள் பல தாங்கி ஈன்றெடுத்த தன் மகனுக்கும் தமக்குமான உறவு காலப்போக்கில் மறந்து விடக்கூடியதன்று. சாகும் வரையில் நினைந்து நினைந்து தொடர்ந்து வருவது அந்நினைவு. பெத்த வயிறு பற்றிக் கொண்டு எரிகிறது என்பது ஊர்ப்புறங்களில் காணப் படும் வழக்காறு. தான் பிறந்த குடும்பத்தின் நற் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் ஒரு பிள்ளையை நோக்கிப் பெத்த வயிறு பத்திக் கொண்டு எரிகிறது என்று ஒரு தாய் ஏசலாம். பெருமைமிக்க மகனால்

தாயின் வயிற்றுக்கும் பெருமை ஏற்படுகிறது. இராமன் பிறந்ததால் கோசலையின் வயிறு புகழ்பெற்றது என்று கம்பர் கூறுவார். ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் என்று வள்ளுவர் கூறுவதையும் கவனிக்கலாம். போர்க் களத்தையே விரும்பி ஏற்றுக்கொண்ட தன் மகனை நினைந்து அவனைப் பெற்றெடுத்த வயிற்றையும் எண்ணி மகிழ்ச்சி அடைகிறாள்.

புறநானூற்றுப் பாடல் வாகைத் திணையில் அடங்கும். எத்தொழிலைச் செய்வோரும் தத்தம் தொழிலில் மிகுந்த ஈடுபாட்டுடன் வெற்றிபெறும் வகையில் செய்வதே வாகையாகும். உயிரைத் துச்சமென மதித்துப் புகழைப் பெறுவதற்குப் போரில் ஈடுபடுதல் வாகைத் திணையின் ஒரு துறையாகும். வாகைத் திணையும், ஏறாண் முல்லையும் புறநானூற்றுக்கும் அபபிரம்சா பாடலுக்கும் பொருந்துவதாகவே உள்ளது.

புறநானூற்றுப் பாடல் கவிதையாக்கத்தில் சிறப்பு பெறுகின்றது. வினா தொடுப்பது போலவும் அதற்குத் தாய் பதிலிறுப்பதைப் போலவும் உரையாடல் இடம் பெற்று கவிதை சிறப்படைகிறது. புலிசேர்ந்து போகிய கல்லளை என்ற உவமை கவிதைக்கு மேலும் மெரு கூட்டுகின்றது. இந்த அமைப்பை அபபிரம்சா பாடலில் காணமுடியவில்லை. அது ஒரு எளிமையான இருவரிப் பாடல். உரிப்பொருள் மட்டும் இடம்பெற்ற பாடல். மற்ற புனைவுகள் இதில் காணப்படவில்லை. இவ்விரு பாடல்களையும் நோக்கும்போது சங்க காலப் பாடல்கள் அதற்கு முந்திய எளியவகைப் பாடல்களிலிருந்து தோற்றம் பெற்றிருக்கக்கூடும் என்ற ஐயம் இயற்கை யாகத் தோன்றுகிறது. அத்தகைய மூலப் பாடல்களை எவ்வாறு கண்டடைவது?

1. “As my lover stands in the courtyard, he does not wander on the battlefield” (Translation Dr.Vaidya)

Pin It