இந்தியாவில் ஆங்கிலேயரின் காலனியாதிக்க ஆட்சி நிலவிய காலகட்டத்தில் அச்சு இயந்திரத்தின் அறிமுகம், இருப்புப் பாதை அமைத்தல், அஞ்சல் துறை நிறுவுவதல் போன்ற செயல்பாடுகளால், பல்லாண்டுகளாகப் பழமையில் தோய்ந்திருந்த தமிழ்நாட்டு  மக்களின் அரசியல், சமூக வாழ்க்கையில்  மாற்றங்கள் ஏற்பட்டன. அன்றைய காலகட்டத்தில் வைதிக சநாதனத்தின் மேலாதிக்கத்தில் வருணக் கோட்பாடு செல்வாக்குடன் விளங்கிய  சூழலுக்கு எதிரான மாற்றுக் கருத்தியல் மெல்லப் பரவிக்கொண்டிருந்தது. கி.பி. 1857ஆம் ஆண்டு சென்னை நகரில் நிறுவப்பட்ட மெட்ராஸ் பல்கலைக்கழகம், தமிழர்களின் உயர்கல்வி கற்றலில் முக்கிய இடம் வகித்தது. திண்ணைப் பள்ளிகளுக்கு மாற்றாக நிறுவப்பட்ட ஆங்கிலேயக் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்ற தமிழர்கள், தமிழுடன் ஆங்கிலத்தையும் கற்றனர். சிலர் ஆங்கில இலக்கியப் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்தனர். ஆங்கிலத்தில் பிரசுரமான நாவல், நாடகம், சிறுகதைபோலத் தமிழில் வெளியாக வேண்டுமெனக் கருதியவர்கள் மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டனர். டேனியல் டிபோ எழுதிய இராபின்சன் குருசோ நாவல், அதே தலைப்பில் கி.பி. 1850இல் தமிழில் வெளியானது. ஆங்கில நாவல்களும் நாடகங்களும் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான சூழல், அதுவரை நிலவிய படைப்புகள் பற்றிய மரபான மனநிலையில் மாற்றத்தை உருவாக்கியது. ஒப்பீட்டளவில் செய்யுளைவிட உரைநடையில் வெளியான நாவல்கள், வாசிக்க எளிமையாக இருந்தமையினால், வாசகப் பரப்பு விரிவடைந்தது. ஆங்கிலக் கல்வி பயின்ற மாணவர்கள் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த ஆங்கில நாவல் வாசிப்புப் பழக்கம்தான் பின்னர் தமிழில் நாவல் எழுதிட சிலருக்குத் தூண்டுகோலாக விளங்கியது. ஆங்கில நாவல்களைப்போலத் தமிழிலும் நாவல் எழுத வேண்டுமெனக் கருதிய மாயவரம் வேதநாயகம் பிள்ளையின் முயற்சி, கி.பி. 1879ஆம் ஆண்டு பிரதாப முதலியார் சரித்திரம்  நாவலாக வெளிப்பட்டது. தமிழில் வெளியான முதல் நாவல் என்று கொண்டாடப்படுகிற பிரதாப முதலியார் சரித்திரம் தனித்துவமானது. ஐரோப்பிய மொழிகளில் இருக்கிற உரைநடை இலக்கியத்தைப் போன்று தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில்  வெளியானால்தான், இந்திய நாட்டில் மாற்றம் ஏற்படும் என்ற கருத்தினை வேதநாயகம் பிள்ளை தனது நாவலில் ஞானாம்பாள் கதைமாந்தரின் வழியாகப் பதிவாக்கியிருப்பது தற்செயலானது அல்ல.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலமான்ய உற்பத்தி முறை மெல்லச் சிதலமடைந்த சூழலில் செய்யுள் வடிவிலான காப்பியமும் புராணமும் செல்வாக்கிழந்தன. உரைநடை வடிவிலான நாவல்களைத் தமிழில் ஓரளவு கல்வியறிவு பெற்றிருந்தோரும் ஆர்வத்துடன் வாசித்தனர். 1940களில் குடும்பப் பெண்கள் நாவல்களை வாசிப்பது ஒழுக்கக்கேடானது என்ற பொதுப்புத்தி நிலவியது தனிக்கதை.  அன்றையக் காலகட்டத்தில் நாவலாசிரியர்கள்  பத்திரிகைகளில் தொடர்கதைகளாக அதிக எண்ணிக்கையில்  நாவல்களை எழுதினர்.

அறுபதுகள் தொடங்கித் திறனாய்வாளர்கள் நாவல்களை விமர்சித்தும் அறிமுகப்படுத்தியும் எழுதிய விமர்சனக்  கட்டுரைகள் பத்திரிகைகளில் பிரசுரமாயின. எழுபதுகள் காலகட்டத்தில் பல்கலைக்கழகங்களில் ஆய்வாளர்கள் கல்விப்புலம் சார்ந்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டபோது, நாவல் இலக்கிய வகைமை சமகாலத்துடன் தொடர்புடையதாகியது. நாவல்களை முன்வைத்து முனைவர் பட்ட ஆய்வேடுகள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதுதல் பெருகியுள்ள சூழலில் நாவலைப் பற்றி இதுவரை நடைபெற்ற ஆய்வுகளைப் பற்றிய அவதானிப்பையும் இனிமேல் எதிகாலத்தில் நாவலைப் பற்றி மேற்கொள்ள வேண்டிய ஆய்வுக் களங்களையும் கண்டறிய வேண்டியுள்ளது. குறிப்பாக, தமிழாய்வில் நாவலை முன்வைத்து நடைபெறுகின்ற பிற மொழி நாவல்களுடன் தமிழ் நாவல்களை ஒப்பீடு செய்கின்ற ஒப்பிலக்கிய ஆய்வு, பல்துறைகள் ஒருங்கிணைந்த ஆய்வு, கோட்பாட்டுரீதியிலான ஆய்வு போன்றவற்றின் தேவையைக் கண்டறிந்திட வேண்டியுள்ளது. அதேவேளையில், சிறுபத்திரிகை மரபு சார்ந்து உருவாகியுள்ள நாவல் திறனாய்வுப் போக்குகளையும் கருத்தில்கொள்வது அவசியமாகும்.

தமிழில் இதுவரை ஏறக்குறைய 7,000 முனைவர் பட்ட ஆய்வுகள் நடைபெற்றிருக்க வாய்ப்புண்டு என்று தோன்றுகின்றது.  ஒப்பீட்டளவில் நாவல் பற்றிய ஆய்வுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். எழுபதுகளில் மதுரை பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் முதுகலைப் பாடத்தில் தற்கால இலக்கியம் தாளில் பத்து நாவல்கள் பாடமாக இடம் பெற்றிருந்தது, நாவல் ஆய்வில் முக்கியமான திருப்புமுனை. மரபிலக்கியத்தை ஆய்வு செய்வதுதான் உயர்வானது என்ற மனநிலையில் மாற்றமேற்பட்டு எழுபதுகளின் இறுதியில் நாவல், சிறுகதை போன்ற புனைவிலக்கியப் படைப்புகளின் பக்கம் ஆய்வாளர்களின் கவனம் திரும்பியது இன்றைய தலைமுறையினர்  அறியாதது.

பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்திற்காக நடைபெற்ற முனைவர் பட்ட ஆய்வுகளைத் தொகுத்து ஆராய்ந்திடும்போது பின்வரும் போக்குகள் முக்கிய இடம் வகிப்பதை அறிய முடிகிறது. அவை.:

* ஒட்டுமொத்தமாக, தமிழ்ப் புதினங்களில் கிராமிய வாழ்க்கை / சமூக ஒடுக்குமுறை / உடல் மொழி / கருத்தாடல்  நெறி / வர்க்கப் போராட்டம் / அற மதிப்புகள் போன்ற தலைப்புகளில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.

* ஒரு நாவலாசிரியர் எழுதிய நாவல்களைத் தொகுத்து ஆராய்தல்

*  சமூக நாவல்கள், கிராமிய நாவல்கள், தலித் நாவல்கள், வரலாற்று நாவல்கள், மகளிர் நாவல்கள் போன்றவற்றின் பின்புலத்தில் வெளியான நாவல்களை ஆராய்தல்

* குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியான நாவல்களைப் பற்றிய திறனாய்வு. (எ-கா) எண்பதுகள் காலகட்டம், விடுதலைக்கு முந்தைய நாவல்கள், விடுதலைக்குப் பிந்தைய நாவல்கள், சமகாலத் தமிழ் நாவல்கள்

* குறிப்பிட்ட நிலவெளியில் வெளியான நாவல்களைத் தொகுத்து ஆராய்தல். (எ-கா) கன்னியாகுமரி மாவட்டம்

* இனவரைவியல் நோக்கில் குறிப்பிட்ட வட்டாரத்தில் வெளியான நாவல்கள் பற்றிய  ஆய்வுகள்(எ-கா) கரிசல் வட்டாரம், கொங்கு வட்டாரம்.

* வரலாற்று நாவல்கள் பற்றிய ஆய்வுகள்

* அறிவியல் நாவல்கள் பற்றிய ஆய்வுகள்

* அரசியல் இயக்கப் பின்புலத்திலான நாவல்கள் (எ-கா) திராவிட இயக்கம், பொதுவுடைமை  இயக்கம்

* தத்துவம் சார்ந்த நாவல்கள் (எ-கா) காந்தியத் தத்துவம்.

நாவல்கள் பற்றிய முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புகளைத் தொகுத்து, வகுத்து ஆராய்ந்தபோது பொதுவாக ஆய்வாளர்கள்,  ஆய்வு மேற்கொண்டிருக்கிற நாவல்கள் பற்றிய ஆழமான தேடுதலை முன்வைத்திடாமல் பொத்தாம்பொதுவாகச் சொற்களைக் கையாளுதல் பெரிதும் இடம்பெற்றுள்ளதை அறிய முடிகிறது.  ஆய்வுத் தலைப்புகளில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான சொற்கள் ஆய்வுக்கு எந்தவகையில் பொருத்தம் என்ற கேள்வி தோன்றுகிறது. நாவல்கள் ஆய்வில் திறனாய்வைக் குறித்திடப் பயன்பட்டுள்ள சொற்கள் பின்வருமாறு: ஓர் ஆய்வு, ஒரு பார்வை,  ஒரு திறனாய்வு, சமுதாயம், சமுதாயச் சிக்கல்கள்,   சமுதாய மாற்றம், சமூகம், சமூகச் சிக்கல்கள், சமூக நடப்பியல், வாழ்வியல் சிக்கல்கள், மக்கள் வாழ்வியல், விளிம்புநிலையினரின் சிக்கல்கள்,  பெண்ணியச் சிந்தனை, பெண் சித்திரிப்பு, பாத்திரப் படைப்பு, மனிதநேய நோக்கு, மனித விடுதலை, மனிதநேய நோக்கு, மனிதநேயம், மனித உறவுகள், மனித மதிப்புகள், பன்முகக் கூறுகள், சமூகச் சிக்கல்கள், பாலியல் சிக்கல்கள்,  பாலியல் பார்வை, மண்ணின் மணம், குடும்ப வாழ்க்கை, குடும்பச் சிக்கல்கள், அவலம், பிறழ்வுநிலை வெளிப்பாடுகள், உளவியல்,  எதிர்மறை வாழ்வியல், வாழ்வியல் நெறிகள், வாழ்வியல் கூறுகள், நனவோடை உத்தி, மொழிநடை, தொன்மம், புதின இலக்கியத் திறன், ஆளுமை…  அட்டவணை இன்னும் நீளும். ஒரு குறிப்பிட்ட நாவலாசிரியருடைய நாவல்களில் படைப்பாளுமை, கருத்தாடல் நெறி, அற மதிப்புகள் போன்று  வரையறையறுத்துச் செய்யப்படுகின்ற ஆய்வுகள் மேலோட்டமாக உள்ளன; முழுமையடையவில்லை.

ஆய்வுத் தலைப்பினை முன்வைத்துக் காத்திரமான ஆய்வினை மேற்கொள்ள வேண்டிய சூழலில் பொத்தாம் பொதுவாக ஏதேனும் ஒரு தலைப்பில் நாவல்களை ஆராய்ந்திடும் போக்கு ஏற்புடையதல்ல. ஆய்வுச் சிக்கல் எதுவும் இல்லாதபோது ஆய்வுத் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் தெளிவான பார்வை இல்லாத நிலை நிலவுகிறது. பெரும்பாலான ஆய்வுகளில் கருதுகோள் எதுவும் இல்லை. ஒரு குறிப்பிட்ட ஆய்வில் இதுவரை முன்னர் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் காரணமாக முன்னர் வெளியாகியுள்ள ஆய்வு முன்னோடியாக விளங்கிடும் நூல்கள், ஆய்வுக் கட்டுரைகளைப் பற்றிய தொகுப்பு இல்லாத நிலை,  சரியல்ல.  போதுமான சான்றாதாரங்கள் இல்லாமல் செய்யப்படுகின்ற ஆய்வுகளில் எந்தவகையான ஆய்வு அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பது என்ற  குழப்பம் நிலவுகிறது. ஏற்கெனவே உள்ள கோட்பாடுகளையோ கொள்கைகளையோ ஆய்வில் பயன்படுத்தாத போக்கு, சரியல்ல. தருக்க அடிப்படையில் நாவலில் விவாதிக்கப்படுகின்ற கதையாடலை விவாதிக்கின்ற தன்மைக்கு ஆய்வேடுகளில் முன்னுரிமை இல்லை. வெறுமனே நாவலின் கதையை விவரிப்பதோடு பெரும்பாலான ஆய்வுகள் முடங்கியுள்ளன. ஆய்வாளர் தான் தேர்ந்தெடுத்த நாவல்களைப் பற்றிய ஆய்வுத் தலைப்பு தொடர்பான தகவல்களைத் திரட்டி, தொகுத்து, வகுத்து, விமர்சித்துக் கண்டறிந்த காத்திரமான ஆய்வு முடிவுகள் அழுத்தமாக இல்லை. அதேவேளையில், சில ஆய்வாளர்கள் நாவல்களை முன்வைத்துச் செய்துள்ள முனைவர் பட்ட ஆய்வுகள் காத்திரமாக இருப்பதை இங்குப் பதிவு செய்திட விழைகிறேன். புத்தகமாக வெளியாகியுள்ள சில நாவல் ஆய்வுகள், புதிய போக்குகளை அறிமுகம் செய்வதுடன் ஆய்வாளரின் கடுமையான உழைப்புக்குச் சான்றாகவும்  விளங்குகின்றன.

நாவல் ஆய்வில் இதுவரையில் நடைபெற்றுள்ள முனைவர் பட்ட ஆய்வுகளைத் தொகுத்து ஆராய்ந்திடும்போது  கண்டறிந்திட்ட  முதன்மைப் பிரச்சினை பின்வருமாறு:    ஒரு நாவலாசிரியர் எழுதிய நாவல்களை முன்வைத்து ஓர் ஆய்வு அல்லது பன்முக ஆய்வு என்று  பல ஆய்வாளர்கள் முனைவர் பட்டத்திற்காக முனைந்திருப்பதால், ஒரே காலகட்டத்தில் ஒரே தலைப்பில் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில்  ஆய்வுகள் நடைபெறுகின்றன. இந்த ஆய்வுப் போக்குகள் சரியல்ல. பல்வேறு பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறைகளில் நடைபெற்ற / நடைபெற்றுக்கொண்டிருக்கிற முனைவர் பட்ட ஆய்வுகளை இணையத்தின் மூலம்  கட்டுப்படுத்திட வேண்டும். அப்பொழுதுதான் ஒரே பொருண்மையிலான ஆய்வு மீண்டும் மீண்டும் நடைபெறாமல் தடுத்திட இயலும்.

நாவல் ஆய்வில் சில முரண்கள்: நாவல் திறனாய்வில் பொதுவாக இடம்பெறுகின்ற முரண்களை அறிந்திட வேண்டியது அவசியம். ஆய்வேடு எழுதுதலில் மேற்கோள்களைப் பொருத்தமாகப் பயன்படுத்துதல் அடிப்படையானது.  நாவல் ஆய்வில் தமிழிலும் ஆங்கிலத்திலும்  இதுவரை நாவலைப் பற்றித் திறனாய்வாளர்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ள கருத்துகளை மேற்கோள்களாக, தொடர்பில்லாமல் தரும் போக்கு பெரிதும் நிலவுகிறது. எடுத்துக்காட்டாக, நாவலின் கதைமாந்தர்களைப் பற்றிய பல மேற்கோள்களைச் சிலர் ஆய்வில் குறிப்பிடுகின்றனர். நாவல்களில் கதைமாந்தர் படைப்பைப் பற்றிய ஆய்வுகளில் சமூகவியல், உளவியல் போன்ற கோட்பாடுகளைப் பின்பற்றிடாமல், கதைமாந்தரைப் பற்றி மேலைநாட்டுத் திறனாய்வாளர்களான ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், இ.எம். பாஸ்டர், ரெனிவல்லாக், மாத்யூ அர்னால்டு போன்றோரின் கருத்துகளை எவ்விதமான விமர்சனமும் இன்றி அப்படியே குறிப்பிடுவது பொருத்தமன்று.

பெரும்பாலான ஆய்வுகள், நாவலாசிரியர்கள் எழுதிய நாவல்களின் விளக்கங்களாக விளக்கவியல் ஆய்வு என்ற நிலையில் சுருங்கியுள்ளன. பொதுவாக, நாவலாசிரியரின் நாவல்களை நலம் பாராட்டுதல்தான் ஆய்வில் நிகழ்கின்றது. முன்னர் செய்த ஆய்வேட்டினை நகலெடுத்து அதே ஃபார்முலாவில் மீண்டும் ஓர் ஆய்வேடு அதே அச்சில் வார்த்தெடுக்கிற பணி, இன்று ஆய்வாகச்  சிலரால் முன்வைக்கப்படுகிறது. நாவலாசிரியரின் சமூக அக்கறை, இலக்கியப் புலமை, தனித்தன்மை, நாவல்களின் சிறப்புகள் போன்றவற்றை மதிப்பீடு செய்து நாவல்கள் மூலம் கண்டறிந்திட்ட  மெய்மைகளையோ கோட்பாடுகளையோ  ஆய்வுகள் முன்வைத்திடாத சூழல் நிலவுகிறது.                   

ஆய்வாளரின் ஆய்வுச் செயல்பாடுகள்

நாவலைப் பற்றிய ஆய்வில் ஈடுபடுகின்ற ஆய்வாளர் இதுவரை நாவல் இலக்கிய வகைமையின் தோற்றம், வரலாறு, உள்ளடக்க ஆய்வு, உத்திகள் ஆய்வு பற்றி திறனாய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ள பின்வரும் புத்தகங்களை வாசிக்க வேண்டியது அவசியம். க.கைலாசபதி, - தமிழ் நாவல் இலக்கியம், சமூக நாவல்கள் - இரா. தண்டாயுதம், நாவலும் வாழ்க்கையும் - கா.சிவத்தம்பி, நாவல் வளம் - இரா.தண்டாயுதம், தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் - கி.வா.ஜகந்நாதன், தமிழ் நாவல்: நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்- பெ.கோ.சுந்தரராசன் & சோ.சிவபாதசுந்தரம், தமிழ் நாவல் சமூக நாவல்கள் - தா.வே.வீராச்சாமி, முதல் ஐந்து தமிழ் நாவல்கள் வாசித்திருக்கிறீர்களா? - க.நா.சு., தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் - கி.வா.ஜகந்நாதன், நாவல் இலக்கியம் - மா.இராமலிங்கம்... தொடக்ககால நாவல் பற்றிய திறனாய்வு நூல்கள் தொடங்கி, இன்றுவரையிலும்  வெளியாகியுள்ள நாவல் பற்றிய விமர்சன நூல்கள் ஆய்வின்  செல்நெறியைத் தீர்மானிக்க உதவும். பல்கலைக்கழக நூலகங்களிலுள்ள முனைவர் பட்ட ஆய்வேடுகளையும், பல்கலைக்கழக மான்யக் குழுவின் இணையத் தளத்தில் வெளியாகியுள்ள ஆய்வேடுகளையும் வாசிப்பதன்மூலம் ஆய்வாளர், ஏற்கெனவே நடைபெற்றுள்ள நாவல் ஆய்வுப் பரப்பை அறிந்திட முடியும். அதேவேளையில், அச்சு ஊடகத்தில் பிரசுரமாகியுள்ள ஆய்விதழ்கள், மின்னணு இதழ்கள் போன்றவற்றில் பிரசுரமாகியுள்ள நாவல் பற்றிய கட்டுரைகளும் நாவல் ஆய்வுக் களங்களைக் கண்டறிந்திட வழிவகுத்திடும். நாவல் என்ற வடிவம்தான் இரண்டாயிரமாண்டுத் தமிழிலக்கிய   வரலாற்றில் சமகால இலக்கியம் என்ற புரிதலுடன் நாவல்களை அணுகிட வேண்டும். ஆய்வுத் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் நாவல் ஆய்வுக் களங்கள் பற்றிய விரிவான தேடல்தான், ஆய்வாளரின் தேடுதலைத் துரிதப்படுத்தும்.

தமிழில் வெளியாகியுள்ள பல்லாயிரக்கணக்கான நாவல்களைத் தொகுத்திடும்போது மக்களின் பொழுதுபோக்குக்காக வாரப் பத்திரிகைகளிலும் மாத வெளியீடாகவும் பிரசுரமாகியுள்ள மேலோட்டமான நாவல்களைக் கருத்தில்கொள்ள  வேண்டியதில்லை. 1930கள் தொடங்கி  வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே.ஆர்.ரெங்கராஜூ, ஆரணி குப்புச்சாமி முதலி, வை.மு.கோதைநாயகி போன்றோர் தொடர்கதைகளாக எழுதி நூற்றுக்கணக்கில் பிரசுரமான நாவல்களை இலக்கியரீதியில் ஆய்வாளர்கள் பெரிதும் ஆய்விற்குட்படுத்துவதில்லை. அன்றைய காலகட்டம் தமிழ் நாவல் உலகின் இருண்ட காலம் என்று நிகழ்ந்துள்ள ஆய்வு, கவனத்திற்குரியது. அந்த வரிசையில் இன்றைக்குத் தமிழில் நூற்றுக்கணக்கில் நாவல்கள் எழுதியுள்ள ரமணிச்சந்திரன், ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார் போன்ற  நாவலாசிரியர்கள் உள்ளனர். அவை வெகுஜனரீதியில் உருவாக்கப்பட்ட மலினமான ரசனைக்குத் தீனி போடும் வகையில் எழுதப்பட்டவை. என்றாலும், குறிப்பிட்ட வெகுஜன நாவலாசிரியரின் நாவல்கள் எப்படி பரந்துபட்ட நிலையில் மக்களை ஈர்த்தன என்று ஆய்வு செய்ய இடமுண்டு. பொதுவாக, கல்விப்புலம் சார்ந்த நிலையில் தமிழ்ச் சமூகத்தில் ஏதோவொரு நிலையில் தாக்கம் அல்லது செல்வாக்கு செலுத்திடும் நாவல்கள்தான் பெரிதும் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன.

தமிழில் இதுவரை வெளியாகியுள்ள நாவல்களைப் பின்வரும் தலைப்புகளில் அணுகி ஆராய்ந்திட வாய்ப்புள்ளது. நாவல்களை வகைமாதிரியாக இங்குத் தரப்பட்டுள்ள பின்வரும் தலைப்புகளின் அடிப்படையில் பகுத்தால், இன்னும் நுணுக்கமாகப் பகுக்கலாம். இந்தத் தலைப்புகள் ஆய்வுக் களங்களின் வீச்சை அறிந்திட உதவும்.      

தமிழ் நாவல் தோற்றப் பின்புலம்

முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்

தொடக்ககாலத் தமிழ் நாவல்களின் போக்குகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல்கள்

துப்பறியும், மர்ம நாவல்கள்

வரலாற்று நாவல்கள்

நடப்பியல் நாவல்கள்

அரசியல் நாவல்கள்

காந்தியத் தத்துவமும் நாவல்களும்

விடுதலைப் போராட்ட நாவல்கள்

மார்க்சியத் தத்துவமும் நாவல்களும்

சோசலிச  யதார்த்தவாத நாவல்கள்

வர்க்கப் போராட்ட நாவல்கள்

திராவிட இயக்கத்தினரின் நாவல்கள்

நவீனத்துவ நாவல்கள்

பின்நவீனத்துவ நாவல்கள்

பெண் படைப்பாளர்களின் நாவல்கள்

பெண்ணியம் சார்பு நாவல்கள்

பட்டியல் இனத்தினரும் நாவல்களும்

சூழலியலும் நாவல்களும்

வட்டார வழக்கு நாவல்கள்

இனவரைவியல் நாவல்கள்

அறிவியல் நாவல்கள்

தத்துவ நாவல்கள்

சிறுபான்மையினர் நாவல்கள்

கிறிஸ்தவ நாவலாசிரியர்களின் நாவல்கள்

இஸ்லாமிய நாவலாசிரியர்களின் நாவல்கள்

திருநங்கையரின் நாவல்கள்

ஒப்பியல் நோக்கில் நாவல்கள்

வரலாற்றை மீட்டுருவாக்கும் நாவல்கள்

உலகமயமாக்கலும் நாவல்களும்

புலம்பெயர்ந்தோர் நாவல்கள்

மலேசியா தமிழ் நாவல்கள்

ஈழத் தமிழ் நாவல்கள்

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட நாவல்கள்

புதிய கோட்பாடுகளின் பின்புலத்திலான நாவல்கள்

இருபத்தோராம் நூற்றாண்டு நாவல்கள்

கடந்த 150 ஆண்டுகளாக வெளியாகியுள்ள தமிழ் நாவல்களின் விரிந்த பரப்பையும் பன்முகப் போக்குகளையும் அறிந்தால்தான் ஆய்வாளர் ஆய்வுக்களத்தைக் கண்டறிந்திட முடியும்.

ஆய்வுக் களங்களைத் தேர்ந்தெடுப்பதில் பின்வரும் வழிமுறைகள் அவசியமானவை. அவை:

பரந்துபட்ட நிலையில் தமிழ் நாவல்களில் நுகர்பொருள் பண்பாடு அல்லது நகரிய வாழ்க்கை என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டியதில்லை. மாற்றாக, குறிப்பிட்ட நாவலாசிரியரின் நாவல்களில் நகரிய வாழ்க்கை என்று தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம். (எ-கா) இந்திரா பார்த்தசாரதி நாவல்களில் நகரிய வாழ்க்கை, விநாயக முருகன்  நாவல்களில் நகரமயமாதலின் விளைவுகள்.

வரலாற்று நாவல்களில் சோழர் வரலாறு என்ற  ஆய்வுத் தலைப்பைவிட  பொன்னியின் செல்வன் நாவல் சித்திரிக்கும் சோழர் வரலாறு என்று ஆய்வின் எல்லையை வரையறுத்திடும்போது ஆய்வு முழுமையடையும்.(எ-கா) காவல் கோட்டம் நாவலில் நாயக்கர் கால அரசியல் செயல்பாடுகள்

தமிழ் நாவலையும் பிற மொழி நாவலையும் ஒப்பிட்டு ஆராய்ந்திடும்போது இரு நாவல்களின் கதையாடல்கள் ஒத்திசைந்து இருக்க வேண்டியது அவசியம். (எ.கா) அறிவழகனின் கழிசடை -  சாந்தா தத்தின் இருட்டின் மனிதர்கள்:ஒப்பாய்வு; வண்ணநிலவனின் கடல் புரத்தில் - தகழி சிவசங்கரனின் செம்மீன்: நெய்தல் நில வாழ்க்கை.

வரலாற்றை மீட்டுருவாக்கி எழுதப்படுகிற நாவல்களை வரலாற்றுத் தகவல்களின் பின்புலத்தில் ஆராய்தல். ( எ.கா) பிரபஞ்சன் எழுதிய மானுடம் வெல்லும், வானம் வசப்படும் நாவல்களில் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பின் தாக்கம்.

ஒட்டுமொத்தமாக, குறிப்பிட்ட பிரிவினருடைய நாவல்களைத் தேர்ந்தெடுத்து ஏதோவொரு பின்புலத்தில் ஆய்வு செய்தல் முழுமையடையாது. (எ.கா.) மகளிர் நாவல்களில் கூட்டுக் குடும்பச் சிதைவு என்ற ஆய்வுத் தலைப்பைவிட சு.தமிழ்ச்செல்வி நாவல்களில் கூட்டுக் குடும்பச் சிதைவு தலைப்பு என்னும் ஏற்புடையது.

கோட்பாட்டுப் பின்புலத்தில் ஆய்வு மேற்கொள்ளும்போது தமிழ் நாவல்கள் மொத்தத்தையும் பொதுமைப்படுத்தல் கூடாது. (எ.கா.) தமிழ் நாவல்களில் வர்க்கப் போராட்டம் என்ற ஆய்வுத் தலைப்பைவிட கு.சின்னப்ப பாரதியின் நாவல்களில் வர்க்கப் போராட்டம்  என்னும் தலைப்பு பொருத்தமானது.

உலகம் அணுக்களால் ஆனது என்று அறிவியல் விளக்குகிறது. மாற்றாக, உலகம் கதைகளால் ஆனது என்ற விளக்கம், நாவல் சமூகத்தில் வகிக்கிற இடத்தைப் பதிவாக்கியுள்ளது நாவல் என்பது ஒருவகையில் சமகாலத்தின் குரலாகவும் கடந்த காலத்தின் மீதான விசாரணயாகவும்  எதிர்காலம் பற்றிய வழிகாட்டுதலாகவும் இருக்கிறது. காத்திரமான நாவல் என்பது வெறுமனே பொழுதுபோக்கிற்கான படைப்பு அல்ல என்ற புரிதலுடன் ஆய்வாளர்கள் நாவலை அணுகிட வேண்டியது அவசியம். நாவல் ஆய்வில் ஈடுபடுகின்ற ஆய்வாளர் நாவலை எப்படி அணுகுவது என்பது முக்கியமான கேள்வி. ஒவ்வொரு நாவலும் வாசிப்பின் மூலம் வாசகரை மாறுபட்ட உலகினுக்கு இட்டுச் செல்கின்றது. நாவலின் கதையாடலை முன்வைத்து   ஒவ்வொருவரும் உருவாக்கிடும் பிரதிகள் நாவலின் பன்முகத்தன்மைக்கு அடையாளமாகும். சரி, இருக்கட்டும், ஆய்வாளர் எவ்வாறு நாவல்களை அணுகி வாசிப்பது என்ற கேள்வி தோன்றுகின்றது. ஒரு நாவலை வாசிக்கிற ஆய்வாளர் நாவல் எழுதப்பட்ட காலகட்டம், நாவலாசிரியரின் நோக்கம், நாவலில் இடம் பெறும் காலம், நாவல் விவரிக்கிற சமூகப் பின்புலம் போன்றவற்றைக் கவனத்தில்கொள்ள  வேண்டும்.  நாவலின் சமூகப் பங்களிப்பும் சமூகத்தில் நாவல் ஏற்படுத்தியுள்ள தாக்கமும் திறனாய்வில் கணிசமாக ஆதிக்கம் செலுத்துகின்றன. நாவலின் கதைக்களன், கதைப்பின்னல், கதை மாந்தர்கள் படைப்பு, நாவலாசிரியர் கையாண்டுள்ள மொழி, மொழி நடை, போன்றவை அடுத்தநிலையில் முக்கியமானவை. நாவலாசிரியரின் கதைசொல்லலும், கதையாடலில் பயன்பட்டுள்ள உத்திகளும் நாவலைப் பற்றிய புரிதலில் சிறப்பிடம் பெறுகின்றன. ஒரு நாவலைப்  பற்றிய விமர்சனமும் இன்னொரு நாவலைப் பற்றிய விமர்சனமும் நாவல்களின் கருத்தியல்களைப் பொருத்து மாறுபடுகின்றன. எனவே ஒவ்வொரு நாவலுக்குமான தனிப்பட்ட ஆய்வு முறையியலை உருவாக்கிட வேண்டும்.

நாவல் ஆய்வில் அடிப்படையாகப் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் பின்வருமாறு:

சமூகவியல் அணுகுமுறை:  சமூகவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் நாவல் எழுதப்பட்ட சமூகப் பின்புலம், நாவல் சித்திரிக்கிற சமுதாயப் பிர்ச்சினைகள், நாவல் சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் போன்றன ஆய்வில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இனவரைவியல் அணுகுமுறை: நாட்டார் வழக்காற்றியல், இனவரைவியல், மானிடவியல் தன்மைகளுக்கு முன்னுரிமை தந்து  வட்டாரப் பின்புலத்திலான நாவல்களை அணுகி ஆராய்தல்.

பாலின  அணுகுமுறை: பால் அடிப்படையில் ஒடுக்கப்படும் பெண்களின் சமூக நிலை, பால் ஒடுக்குமுறை, பால் சமத்துவமின்மை, பெண்களின் பாலியல் வேட்கை போன்றவற்றை முன்னிலைப்படுத்திப் பெண் நாவலாசிரியர்கள் எழுதிய நாவல்களை ஆய்வுசெய்தல்.

சாதிய ஒடுக்குமுறை: வைதிக சநாதனம் கட்டமைத்த வருணக் கோட்பாடும் சாதிய உருவாக்கமும், சாதியரீதியில் ஒடுக்குமுறை, சாதிய இழிவில் இருந்து வெளியேறியவர்களின் குரல்கள், ஆதிக்க சாதியினரின்  சாதிய அடக்குமுறைகள், பட்டியல் இனத்தார்களுக்குள் நிலவிடும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை போன்றவை சாதியப் பின்புலத்திலான நாவல்கள் ஆய்வில் முக்கியமானவை.

இலக்கிய அணுகுமுறை: நாவல்களின் இலக்கியத் தன்மைகள், நாவலாசிரியரின் மொழி ஆளுகை, மொழி நடை,  இலக்கியத்தரம் பற்றிய ஆய்வுகள்

வரலாற்று நாவல்கள்: கடந்த காலத்தில் பயணித்து வரலாற்றுப் பதிவுகளை முன்வைத்து எழுதப்படுகின்ற நாவல்கள் வரலாற்றைப் பற்றிய புதிய பேச்சுகளை உருவாக்குகின்றன. வரலாறும் புனைவும் ஒத்திசைந்து எழுதப்படுகின்ற  வரலாற்று நாவல்களைப் பற்றிய ஆய்வுகள்

கோட்பாடுகளின் பயன்பாடு: இயக்கங்களும் கோட்பாடுகளும் நாவல் புனைவில் முக்கிய இடம் வகிக்கின்றன. சமகாலத்தின் வாழ்க்கையையும் அரசியலையும் கேள்விக்குள்ளாக்கிடும் நாவல்களின் ஆக்கத்தில் பின்புலமாக விளங்கிடும் கோட்பாடுகளை முன்வைத்திடும் ஆய்வுகள்.

 ஆய்வுக் களங்கள்

இயல், இசை, நாடகம் என்று போற்றப்பட்ட தமிழின் பரப்பு, அறுபதுகளில் தனிநாயகம் அடிகளாரின் ‘தமிழ் கல்ச்சர்’ ஆய்விதழ் வெளியீட்டினுக்குப் பின்னர் பல்துறை சார்ந்த ஆய்வாக மாறியது. அடிகளார், இலக்கியம், இலக்கணம் என்று தமிழிலக்கியப் பரப்பினுக்குள் சுருங்கியிருந்த ஆய்வுப் போக்கினைத் ‘தமிழாய்வு’ என்ற புதிய தளத்திற்குள் விரிவுபடுத்தினார். பண்பாடு, ஒப்பிலக்கியம், மொழியியல், கல்வி, இறையியல், புவியியல், மொழியியல், மெய்யியல், நாட்டுப்புறவியல், கவின் கலைகள், வரலாறு, தொல்லியல், சுவடியியல் என்று பல்துறை சார்ந்ததாகத் தமிழாய்வு மாறியுள்ளது. இன்று தகவல் தொடர்பு, மேலாண்மை, ஊடகவியல், இதழியல் சமூகவியல், உளவியல், அரசியல், மானிடவியல் போன்ற பல்வேறு துறைகளைச்  சார்ந்து தமிழாய்வு விரிவடைந்துள்ளது. எனவே, நாவல் ஆய்வு பல்துறை சார்ந்த ஆய்வாக விரிந்திட வாய்ப்புண்டு.

அச்சு ஊடகத்தில் இருந்து   இணையவெளியில் தமிழ் நாவல்கள் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன. உலகமெங்கிலும் இருந்து தமிழ் நாவல்கள் மின்னணு ஊடகத்தில் வெளியாகின்றன. மின் இதழ்களில் நாவல்களை நாடு கடந்து அயல் நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் ஆர்வத்துடன் வாசிக்கின்றனர். மின்னணு  ஊடகம் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரசுரமாகும் ஆய்விதழ்கள்,  நாவல்களைப் பற்றிய காத்திரமான ஆய்வுக் கட்டுரைகளை உலகமெங்கும் கொண்டு சேர்க்கின்றன. இத்தகு சூழலில் ஆங்கிலம் உள்ளிட்ட உலக மொழிகளில் நடைபெறும் ஆய்வுகளை இணையத்தின் வழியாக அறிந்து தமிழாய்வின் தரத்தை உயர்த்திட வேண்டியுள்ளது.

தமிழ்ப் புனைகதை மரபு, கடந்த ஐம்பதாண்டுகளில் பல்வேறு புதிய போக்குகளை ஏற்றுக்கொண்டு, பாய்ச்சலாக மாற்றமடைந்துள்ளது. இலக்கியம் சார்ந்த மேலைக்கோட்பாடுகளைப் படைப்பாக்கத்தில் கையாளுவது வலுவடைந்துள்ளது. மரபு வழிப்பட்ட கதைசொல்லிகளின் ஆக்கங்களுடன் நவீனமான ஆக்கங்களும் இணைந்து தமிழ் நாவலின் பரப்பு வீச்சாகப் பரவியுள்ளது. மொழியின் அதிகபட்ச சாத்தியங்களுடன் கதைசொல்லுதல், வாசிப்பின் வழியே கிளர்த்தும் அனுபவங்கள் ஆழமான கருத்தியல் பின்புலமுடையன. 1970களில் 'சோதனை முயற்சி" என்ற நிலையில் அறிமுகமான நாவல் முயற்சிகள், அடுத்த பத்தாண்டுகளில் கோட்பாட்டு நிலையில் புதிய வடிவமெடுத்துள்ளன.எல்லாவற்றுக்கும் மேலைநாடுகளைச் சார்ந்திருக்கும் பின்காலனிய நாட்டினுக்கே உரிய நிலையில் நவீனத் தமிழிலக்கியவாதிகளும் மேலைக் கோட்பாடுகளைத் தமிழுக்கு இறக்குமதி செய்யும் நிலை தொடர்கின்றது. எனினும், காலப்போக்கில் தமிழ் மரபினுக்கேற்ற கதைசொல்லலையும் மேலைக் கோட்பாட்டினையும் ஒருங்கிணைத்துப் புதியவகைப்பட்ட படைப்புகளைப் படைத்திடுமாறு சூழல் மாறியுள்ளது. நாவலாசிரியர் எம்.ஜி.சுரேஷ் கியூபிச நாவல், தன்பெருக்கி நாவல், தோற்றநிலை மெய்மை நாவல், பல குரல்களின் நாவல், வகைமை மீறும் நாவல் என்று தன்னுடைய நாவல்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். பின் நவீனத்துவ நாவல்கள், வரலாற்றை மீட்டுருவாக்கும் நாவல்கள், டாக்குமெண்டரி நாவல், கொலாஜ் நாவல், மிகை நடப்பியல் நாவல் என விரிந்திடும் புதிய கோட்பாடுகளின் பின்புலத்தில் நவீனத் தமிழ் நாவல் உலகம் விரிந்துள்ளது.     நாவல்களை ஆய்வு செய்திட  பல்வேறு திறனாய்வுக் கொள்கைகள் பயன்படுகின்றன. அவை: அறிவியல் நெறி, வகை நெறியியல், வரலாற்றியல், சமுதாயவியல், மொழியியல், பின் காலனியம்.

இலக்கிய இயக்கங்கள் அடிப்படையில்  நாவல்களை அணுகிட பின்வரும் கோட்பாடுகள் முதன்மையானவை. அவை: அமைப்பியல், பின் அமைப்பியல், நவீனத்துவம், பின்நவீனத்துவம்,  நடப்பியல், பெண்ணியம், அறவியல், தலித்தியம், மார்க்சியம், பெரியாரியம், திராவிடம், உளவியல், செவ்வியல், புனைவியல், இருத்தலியல், இயற்கையியல், குறியீட்டியல், படிமவியல், தொன்மவியல், குறிக்கோளியல், அழகியல்.

தமிழ் நாவல் பரப்பு இன்று விரிவடைந்துள்ள  சூழலில் பல்வேறு போக்குகளின் அடிப்படையில்  விமர்சிக்க வேண்டியுள்ளது. நாவல் என்ற இலக்கியப் பிரதியைச் சமூகம், அரசியல், வரலாறு, பண்பாடு போன்றவற்றின் பின்புலத்தில் பொருத்தி விமர்சிக்க வேண்டும். அப்பொழுதான் நாவலின் இடத்தை மதிப்பிட முடியும். வரலாற்றை மீட்டுருவாக்கிடும் நாவல்கள், உலகமயமாக்கலும் நாவல்களும்,  புலம் பெயர்ந்தோர் ஆகிய போக்குகளை முன்வைத்து நாவல்களைப் பற்றிய  அறிமுகக் கட்டுரைகளும் நாவல்களும் இங்குத் தரப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் நாவல் ஆய்வில் ஈடுபடவிருக்கின்ற ஆய்வாளர்கள் எத்தகைய நாவல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதை அறிந்து நாவலைப் பற்றிய பேச்சுகளை உருவாக்கிடுவதற்குச் சான்றுகளாகப் பின்வரும் கட்டுரைகள் நிச்சயம் உதவும்.

வரலாற்றை மீட்டுருவாக்கிடும் நாவல்கள்: பொதுவாக ஒரு வரலாறு என்று துல்லியமாகச் சொல்லிட இயலாது; பல்வேறு வரலாறுகள் இருக்கின்றன என்று பின் நவீனத்துவம் கட்டமைத்த வரலாற்றுப் பார்வை கவனத்திற்குரியது. இதுவரை சொல்லப்பட்ட வரலாற்றின் பின்னர் பொதிந்திருக்கிற மதம், சாதி, பாலியல் பேதம், பொருளியல் ஏற்றத்தாழ்வு குறித்து ஆராய்ந்திடும்போது, அதிகாரம் எவ்வாறெல்லாம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பிரதிகளை நுணுக்கமாக ஆராய்ந்தால் பெரும்பான்மையான மக்கள்மீது, ஆட்சியாளர்கள் எப்படியெல்லாம் அதிகாரம் செலுத்தினர் என்பதன் வெளிப்பாடுதான் வரலாறு. காற்றில் அடையாளமற்று மிதக்கிற விளிம்புநிலையினரின் வலிகள், அவமானங்கள், இறப்புகள் குறித்த பதிவுகள், வரலாற்றில் மிகவும் குறைவு. மன்னர்கள் பற்றிய சம்பவங்கள், விவரிப்புகள்தான் வரலாறு என்ற நம்பிக்கை, பாடப்புத்தகங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.   மன்னர்கள் பற்றிய அரசியல் தகவல்கள்தான் வரலாறு என்ற பார்வையில் இருந்து மாறுபட்ட நாவலாசிரியர்கள், கடந்த அறுநூறு ஆண்டுகளில் பதிவான ஆவணங்களில் இருந்து திரட்டிய தகவல்களின் பின்புலத்தில் சாமானியர்களை முன்வைத்து நாவல்களை எழுதிடும் முயற்சிகள், தனித்துவமானவை. ஆங்கிலேயரின் காலனியாதிக்கக் காலகட்டத்திய அரசியல் ஆவணங்கள், இயேசு சபைப் பாதிரியார்களின் கடிதங்கள், ஆங்கிலேய இராணுவ அதிகாரிகள் எழுதிய நினைவுக் குறிப்புகள், கெஜட்டியர்கள், மானுவல்கள் போன்ற சமூக ஆவணங்களில் இடம்பெற்றுள்ள வரலாற்றுத் தகவல்கள், நாவலாக்கத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளையில், வரலாற்றை மீட்டுருவாக்கிட முயலுகிற நாவல்களில் வரலாறு எவ்வளவு? படைப்பாளரின் சொந்தச் சரக்கு எவ்வளவு? போன்ற கேள்விகள் தோன்றுகின்றன. வரலாற்றை மீட்டுருவாக்கிடும் நாவல்களுக்கும் வரலாற்று நாவல்களுக்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் உள்ளன.

வரலாற்றை மீட்டுருவாக்கிடும் நாவல்கள் (எ-கா)  பிரபஞ்சன் – மானுடம் வெல்லும், வானம் வசப்படும், சு.வெங்கடேசன் – காவல் கோட்டம், பூமணி – அஞ்ஞாடி,  நாகரத்தினம் கிருஷ்ணா – கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, மு.ராஜேந்திரன் - 1801, சாரு நிவேதிதா -  நான்தான் ஔரங்கஸேப், புலியூர் முருகேசன் – ஆலம்கீர் ஔரங்கசீப், ஜெயமோகன் - வெள்ளை யானை

உலகமயமாக்கலும் நாவல்களும்:    உன்னதமான தொழில்நுட்பம், உயரிய தகவல்தொடர்பு, விரைவான போக்குவரத்து என வெளிப்படையாக முன்னிலைப்படுத்தப்படுகிற உலகமயமாக்கல் புதிய பண்பாட்டுப் போக்குகளை அறிமுகம் செய்கிறது. அது, பொருளாதாரம் மட்டுமின்றி இலக்கியம், பண்பாடு, இயற்கை என அனைத்துத் தளங்களிலும் ஆளுகை செலுத்த முயலுகிறது. உலக மக்களை ஒற்றைக்கூரையின் கீழ் கொண்டுவர முயலுகிற உலகமயமாக்கல், நுகர்பொருள் பண்பாட்டினை வலியுறுத்துகிறது. பொருளை வாங்கு, பயன்படுத்து, ரசனையை மாற்று, தூக்கியெறி, புதிய பொருளை வாங்கு என்ற எண்ணத்தை உருவாக்கிட நுகர்பொருள் பண்பாடு முயலுகிறது. எல்லாவற்றையும்  சந்தைப்படுத்தும் ஒற்றைத்தன்மைப் போக்கு, ஊடகங்கள்மூலம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.  கார்ப்பரேட்டுகளுக்குச் சார்பாக உருவாக்கப்படும் புதிய பண்பாட்டுத் தளங்களினால், இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமான தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் சிதைவடைய நேரிடும். பழமையானது நடப்பினுக்குப் பொருத்தமற்றது, தேவையற்றது என உருவாக்கப்படுகிற கருத்தியல்கள், தனித்துவத்தை அழிக்கும் வல்லமையுடையன. காட்சி ஊடகங்கள் வம்புப் பேச்சுகளையும் கேளிக்கைகளையும் மட்டும் முன்னிலைப்படுத்தி, அரசியலற்ற தன்மையை உருவாக்குகின்றன. தனிமனிதனின் சுயமான சிந்தனைக்கு மாற்றாகத் தொலைக்காட்சி மூலம் கார்ப்பரேட்டுகள் உருவாக்கிடும் சிந்தனையை ஏற்கும் உடல்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன்களின் திரைகளில் மூழ்குவதுடன் 24 மணிநேர Breaking News காண்கிறவர்களின் அசலான சுயசிந்தனை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. உணவு, உடை, இருப்பிடம், ஆன்லைன் வணிகம் என எல்லாவற்றிலும் ஒருவனின் பிரக்ஞையிலிருந்து மொழி பற்றிய உணர்வை அகற்றிவிட்டால், பின்னர் கார்ப்பரேட்டுகளுக்குச் சாதமான உடல்களை உருவாக்குவது எளிதாகிவிடும். குறிப்பாக, பெண்ணுடல்கள் முழுக்கப் போகப்பொருளாகிடும் வகையில் சந்தைக்கானவையாக மாற்றப்படும்.இதுவரை சமூகம் பல்லாண்டுகளாக உருவாக்கி வைத்திருக்கும் விழுமியங்களை அழிப்பதன்மூலம் எல்லாம் சந்தைக்கானவையாக மாற்றமடையும். சுருங்கச்சொன்னால், உலகமயமாக்கல் என்ற பதாகையின் பின்னால் அமெரிக்கமயம் ஆளுகை செலுத்தும். உடலால் தமிழனாகவும் மனதினால் அமெரிக்கனாகவும் வாழ்கின்ற உடல்களைத் தயாரிப்பதற்கு இலக்கியமும் பயன்படுத்தப்படுகிறது என்பது கசப்பான உண்மை.

உலகமயமாக்கல் என்ற சொல்லின் பின்னர் புதைந்திருக்கிற அரசியல் பற்றிய ஓர்மையுடன் செயல்படுகிற தமிழ்ப் படைப்பாளர்களின் நாவல்கள் கவனத்திற்குரியன. இலக்கியம் என்பது உன்னதமானது; அரசியலுக்கு அப்பாற்பட்டது; மனதின் ஆழத்தைச் சித்திரிப்பது; எவ்விதமான பிரச்சாரத்திற்கும் இடம் அளிக்காதது; தூய பளிங்கு போன்ற கருத்துகள் ஆளுகை செலுத்துகிற நவீனத் தமிழிலக்கியச் சூழலில் இளம் நாவலாசிரியர்கள் மாறுபட்டுச் செயல்படுகின்றனர். புனைவிலக்கியத் தளத்தில் வாழ்க்கையைப் பதிவாக்கிட முயலுகிற நவீனப் படைப்பாளிகள் குடும்பம், கிராமம், காதல் எனக் குறுகிய வட்டத்திலிருந்து விலகித் தமிழரின் வாழ்க்கை இன்று எதிர்கொண்டுள்ள சவால்களைப் படைப்பாக்கிட முயலுகின்றனர். ஒவ்வொரு செயலுக்கும் பின்னர் அரசியல் பொதிந்துள்ளதை அவதானிக்கிற இன்றைய நாவலாசிரியர்களின் நாவல்கள் சமூக விமர்சனமாக வெளிப்பட்டுள்ளன. இன்று தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் படைப்பாக்கும்போது, உலகமயமாக்கல் பற்றிப் பதிவாக்குவது தவிர்க்கவியலாதது.

 உலகமயமாக்கலும் நாவல்களும்: (எ-கா) சரவணன் சந்திரன் – ஐந்து முதலைகளின் கதை, விநாயக முருகன் – ராஜீவ் காந்தி சாலை,
ஆர்.வெங்கடேஷ் – இடைவேளை, லக்ஷ்மி சரவணக் குமார் – உப்பு நாய்கள், எம்.கோபாலகிருஷணன் - மணல் கடிகை, செல்லமுத்து குப்புசாமி - இரவல் காதலி, நட்சத்திரவாசிகள் – கார்த்திக்  பாலசுப்பிரமணியன்

புலம்பெயர்ந்தோர் நாவல்கள்: பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்  சொந்த மண்ணில் நாயைவிடக் கேவலமாக நடத்தப்படுவதைவிட, கங்காணிகளின் பேச்சுகளை நம்பி, தமிழ்நாட்டில்  இருந்து ஏதோவொரு நாட்டுக்குக் கப்பலேறிய தமிழர்கள், அங்கே கடினமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். காடுகளை அழித்தல், காப்பி, தேயிலை, ரப்பர் எஸ்டேட் உருவாக்குதல், சாலைகள் போடுதல், கட்டடங்கள் கட்டுதல் போன்ற வேலைகளில் அடிமைகளைப் போல நடத்தப்பட்டனர்.  ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் உலகமெங்கும் கூலிகளாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்கள், இன்றளவும் காற்றில் மிதக்கின்றன. இந்தியாவில் வாழ்ந்த பல்வேறு மொழிகள் பேசுகிறவர்களில் தமிழர்கள் கூட்டம்கூட்டமாகக் கிளம்பிக் கூலி வேலைக்குப் போனதற்குக் காரணம் வெறுமனே வறுமை மட்டுமல்ல; சாதிய இழிவின் அடையாளத்தைத் தொலைதூரப் பிரதேசத்திற்குச் செல்வதன்மூலம் மறந்துவிடலாம் என்ற நம்பிக்கையும் முக்கியக் காரணம்.  தமிழகத்தில் நடைபெற்ற புலம்பெயர்வுகளைப் பிரிட்டிஷ், பிரெஞ்சுக் காலனியாதிக்க காலப் புலம்பெயர்வு, நாட்டு விடுதலைக்குப் பின்னர் புலம்பெயர்வு  என இரண்டாகப் பகுத்து ஆராய வேண்டும்.

புலம்பெயர்தல் என்பது தாயகத்தை மறுவிளக்கம் செய்ய அடிப்படையாக விளங்குகிறது. ஒவ்வொருவருக்குள்ளும் இயல்பாகப் பொதிந்துள்ள இழந்தது குறித்த ஏக்கம், புலம்பெயரும் இடத்தில் ஒப்பீட்டு மனநிலையை உருவாக்குகிறது. நடப்பில் தான் வாழநேர்ந்திடும் சமுதாயத்துடனும் பண்பாட்டுச்சூழலுடனும் ஒருவருக்குள்ள உறவுக்கூறுகளை ஆராய்வதன் மூலம் கடந்த காலத்தினுக்கும் நிகழ்காலத்தினுக்குமிடையே தொடர்பு ஏற்படுகிறது. ஒப்பீடு மூலம் எல்லாவற்றிலும் பூர்வீக நாடு, புகலிட நாடு என்ற முரணில் பண்பாட்டு வேறுபாடுகளை அடையாளப்படுத்துதல் நடைபெறுகிறது. புலம்பெயர்தல் சூழலில் புகலிட நாட்டில் எதிர்கொண்ட புதிய பழக்கவழக்கங்கள் ஒவ்வொருக்குள்ளும் அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பொதுவாக, புலம்பெயர்ந்த நாட்டுச்சூழல் ஒத்துப்போகாத மனநிலையும், பூர்விகநாடு குறித்த ஏக்க மனநிலையும் புலம்பெயர்ந்தோரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குடும்ப உறவுகள், பாலுறவு, ஆண்-பெண் உறவு, தட்பவெப்பநிலை, மொழி, உணவு போன்றவற்றில் ஏற்படும் புதிய அனுபவங்கள் அன்றாட வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்துகின்றன. புகலிடத்தில் சுய அடையாளம் என்பது தாய்நாட்டைச் சார்ந்திருக்கும் நிலையில், அடையாளச் சிக்கல் தோன்றுகிறது. புலம்பெயர்ந்தோர் குடும்பத்தினரைப் பிரிந்து அயல்நாட்டில் அனுபவிக்கிற தனிமையும்,  புலம்பெயர்ந்தோரின் நெருங்கிய உறவினர் பிரிவினால் வருந்துகிற  துயரமும் முடிவற்றவை .

புலம்பெயர்ந்த நாட்டின் அரசியல், மொழி, சமூக வாழ்க்கைமுறை, அரசியல் சூழல் காரணமாகப் புலம்பெயர்ந்தோர்  இரண்டாமிடம் பெறுகின்றனர். பூர்வீகமான நிலத்தைப் பிரிந்த ஏக்கத்திலிருந்து விடுபடவும்,  மொழி வழிச்    சிறுபான்மையினராக அடையாளப்படுத்தப்படும் சூழலில் தாய்மொழியைப் பேணிடவும், பண்பாட்டுக் கூறுகளை அமல்படுத்தவும் இலக்கியப் படைப்புகள் அடிப்படையானவை. புலம்பெயர்ந்தோர் தமது அனுபவங்களைப் பதிவாக்கிடுதல், புலம்பெயர்ந்தோர் பற்றிய தகவல்களைத் தொகுத்து எழுதுதல் எனப் புலம்பெயர்ந்தோர் பற்றிய படைப்புகளைப் பகுக்கலாம். புலம்பெயர்ந்த தமிழர்களின் பெருங்கதையாடலை விவரிக்க ஒப்பீட்டளவில் நாவல் வடிவம் பொருத்தமானது. ஒருகாலகட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களைத் தேர்ந்தெடுத்துப் புனைவுடன் விவரிக்கும் மொழியானது வாசிப்பில் நெருக்கத்தைத் தருகிறது. புலம்பெயர்ந்த இடத்திற்கு வளமான வாழ்க்கை  என்ற கனவுடன் சென்ற தமிழர்கள் சாதி, கோயில், சடங்குகள் எனப் பழமையைப் போற்றினர். வைதிக  சநாதன சமயம் புலம்பெயர்ந்த இடத்திலும் ஆதிக்கம் செலுத்தியது வரலாற்றின் விநோதம்தான்.

தமிழர்களின் புலம்பெயர்தலைப் பொருத்தவரையில் கடந்த இரு நூற்றாண்டுகளுக்கும் கூடுதலான காலகட்டத்தில் காலனிய ஆட்சியில் புலம்பெயர்ந்தவர்கள் ஒருபிரிவில் அடங்குகின்றனர். ஈழத் தமிழர் இன விடுதலைப் போராட்டத்தினால் இலங்கைத் தீவில் நிலவிய அரசியல்  நெருக்கடி காரணமாகப் புலம்பெயர்ந்தவர்கள் இன்னொரு பிரிவில் அடங்குவர். இந்திய விடுதலைக்குப் பின்னர் வெளிநாடுகளில் வேலை தேடிப் புலம்பெயர்ந்தவர்கள் கணிசமானவர்கள். இந்திய நிலப்பரப்பிற்குள் தொழில், பணி காரணமாக வாழவேண்டிய சூழலில் மொழிரீதியில் அந்நியமான மனநிலை ஏற்படுகிறது. இதுவும் ஒருவகையில் புலம்பெயர்தல்தான்.

புலம்பெயர்ந்தோர் நாவல்கள் (எ-கா) ப.சிங்காரம் – கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி, மீரான் மைதீன் - அஜ்னபி, சண்முகம் – சயாம் மரண ரயில், கரன் கார்க்கி - மரப் பாலம், பிரியா விஜயராகவன் – அற்றவைகளால் நிரம்பியவள், தமிழ் மகன் – வன சாட்சி, மாத்தளை சோமு – கண்டிச் சீமை, சபராளி அய்யுபு - சாரா

எதிர்காலத்தில் நாவல் ஆய்வுகள் காத்திரமான ஆய்வுக்களத்தில் இயங்கிட  பின்வரும் செயல்பாடுகள் அவசியமானவை:

  • தமிழ் நாவல்களில் கிராம வாழ்க்கை போன்ற பொதுவான தலைப்புகளைத் தவிர்த்தல்.
  • சரியான ஆய்வுத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தல்
  • ஆய்வுச் சிக்கலைத் தீர்மானித்தல்
  • ஆய்வுக்கருதுகோளை முறையாகத் திட்டமிடல்
  • ஆய்வுக்கேற்ற கோட்பாடுகளைக் கண்டறிதல்
  • ஆய்வுக்கான முதன்மைச் சான்றுகளையும் துணைமைச் சான்றுகளையும் சேகரித்தல்
  • முன்னோடியாக ஆய்விதழ்களில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோள்களாகக் காட்டுதல்.
  • ஆய்வு எழுதுதலில் சரியான இலக்கியக் கொள்கையைப் பயன்படுத்துதல்
  • கோட்பாடுகளைப் பொருத்தி ஆய்வு மேற்கொள்ளுதல்; ஆய்வு எழுதுதல்
  • சமூகப் பின்புலத்தில் நாவல் ஆய்வு பெறுமிடத்தைக் கண்டறிதல்
  • ஆய்வு மூலமான நாவல்களின் கதையாடல்களில் பொதிந்திருக்கிற அரசியலையும் சமூகத்தையும் அறிதல்
  • தமிழாய்வு தமிழ்ச் சமூகத்துடனும் தமிழர் பண்பாட்டுடனும் தொடர்புடையது என்ற ஓர்மையுடன் ஆய்வில் ஈடுபடுதல்
  • இரண்டாயிரமாண்டுத் தமிழிலக்கிய தொடர்ச்சியாக விளங்குகின்ற சமகாலத் தமிழரின் வாழ்க்கை பற்றிய பதிவுகளாக நாவல்கள் விளங்குகின்றன என்ற புரிதல் அவசியம்.

- ந.முருகேச பாண்டியன்