‘கொல்லைப் புளியங்காய் குளத்து மீன் கவிச்சியைப் போக்கும்’ என்றொரு பழமொழி இருக்கின்றது. ஒன்றற்கு ஒன்று அல்லது ஒருவர்க்கு ஒருவர் உதவியாய் இருப்பதைத்தான் இந்தப் பழமொழி வெளிப்படுத்துகின்றது. கால்நடை இனத்தைச் சார்ந்த மாடுகளும் பறவை இனத்தைச் சார்ந்த கொக்குகளும் ஓர் இணக்கத்துடன் வாழ்வதைக் கொல்லை, வயற்காட்டுப் பக்கங்களில் காணலாம். மாடுகள் மேய்ந்துகொண்டு போகும்போது புழு, பூச்சிகள் வெளிப்படும். அவற்றைக் கொக்குகள் பிடித்து இரையாக்கிக் கொள்ளும்.

புலி, சிங்கம் போன்றவை பயங்கரமாக ஊனுண் ணிகளாகச் சித்திரிக்கப் பெறுகின்றன. பசிக்கும் போது ஏதாவது ஒரு விலங்கைப் பற்றித் தின்று விட்டுப் போகும். எஞ்சிக் கிடப்பவை மற்றைய பறவைகள், விலங்குகளுக்குத் தீனியாகும். மனிதர் களைப் போல அவை பல தலைமுறைகளுக்குச் சேர்த்து வைப்பதில்லை. ஒருவன் இவ்வாறு குறுக்கு வழியில் சேர்த்து வைப்பது அவன் சந்ததிகளுக்கு ஆகின்றதோ இல்லையோ, ஆனால் கால் வயிற்றுக் கஞ்சிக்காக ஏங்கித் தவிக்கும் பல பேரின் வயிற்றில் அடிக்கின்றான் என்பது மட்டும் கண்கூடான உண்மை.

தாங்களே உழுது பயிரிட்டு அல்லது வேறு தொழில் செய்து வாழ்வோருக்கு வருத்தமும் தெரியும்; பிறரின் வறுமையும் புரியும். குடியானவர்கள் அவர் களைச் சார்ந்து வாழ்பவர்களுக்கிடையே உள்ள இணக்கத்தைப் பண்ணை, பண்ணைத் தொழிலாளர் களுக்கிடையே காணமுடியாது.

விடுதலைக்குப் பிறகு மக்களிடம், குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தினரிடம் விழிப்புணர்வு ஏற் பட்டிருந்தாலும் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது என்று சொல்லிவிட முடியாது. ஒருவேளை, இரு வேளை வயிற்றுப்பாட்டுக்கே இந்திய மக்கள் தொகையில் முக்கால்வாசிப் பேர் திண்டாடுவதாகப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்கார ஆகிக் கொண்டிருக் கின்றார்கள். வாங்கும் சக்தியை இழந்து, பெரு வாரியான மக்கள் மேலும் மேலும் வறுமைக்கு ஆட்படுகிறார்கள். அடிப்படைத் தேவைக்கான பொருள்களின் விலை, வானை முட்ட வளர்ந்து கொண்டே போகின்றது.

இப்படிப்பட்ட சமனற்ற வாழ்க்கை நிலை காலங்காலமாகவே காணப் பெறுகின்றது. பெரும் பான்மையான உழைக்கும் மக்கள் விதியை நினைத்து, வெந்ததைத் தின்று, வேளை வரும்போது போய்ச் சேரலாம் என்பதையே தாரக மந்திரமாகக் கொண் டிருந்தார்கள். கிணற்றுத் தவளையாக வாழ்ந்த வாழ்க்கையில் இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையை அறிய முடியாமலே காலம் கழிந்தது, வாழும் சூழலும் ஒரு காரணம்.

உழைக்கும் மக்களைச் சுரண்டக் கூடியவர் களுக்குள் சாதி, மத பேதமே இல்லை; எல்லோரும் ஒன்றாகிவிடுகின்றார்கள். வடிவம் மாறுகின்றதே தவிர, சுரண்டல் என்பது மன்னராட்சி காலத்தி லிருந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. அதைத் தட்டிக் கேட்பவர்கள் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் திருடர்களாகவும் சித்திரிக்கப் பெறுகின்றார்கள்.

சுரண்டலுக்கும் சாதிய வெறிக்கும் வன்கொடுமைக்கும் உள்ளாகும் உழைக்கும் வர்க்கத்தினரைப் பற்றிய படைப்புகள் நிறையவே வந்துகொண்டிருக் கின்றன. தமிழ் இலக்கியங்கள் ஒரு நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவை. பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்னும் சங்க இலக்கியங்கள் போர், காதலைப் பற்றிப் பேசுபவையாக இருந்தாலும் ஒரு சமுதாயப் பின்னணி அவற்றுள் இழைந்தோடுவதைக் காண முடிகின்றது. இக்கால இலக்கியங்களைத் தவிர மற்றைய கால இலக்கியங்களில் சங்க இலக் கியங்களில் காணப்படுவதைப் போன்று ஒரு பரந்த சமுதாயச் சூழலைக் காண முடியவில்லை. குறை வான வட்டத்துக்குள்ளேயே அவை சுழல்கின்றன. இக்கால இலக்கியங்கள் அவை நாடு, மொழி, இனம் என்னும் வேறுபாடில்லாமல் ஒரு பரந்த உலகத்தை நம்முள் பதிவு செய்கின்றன.

இந்த வகையில் 2010 ஆம் ஆண்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பெற்ற டி.செல்வ ராஜ் அவர்களின் தோல் என்னும் புதினத்தைச் சொல்லலாம். முற்போக்கிலக்கியப் படைப்பாளரான டி.செல்வராஜ் இதற்கு முன் பல புதினங்களைத் தமிழ்கூறு நல்லுலகிற்கு வழங்கியுள்ளார். மலரும் சருகும், தேநீர், மூலதனம், அக்னி குண்டம், நிழல் யுத்தம் போன்ற புதினங்களையும் படைத்துள்ளார்.

தோல் தமிழக அரசின் 2011ஆம் ஆண்டு சிறந்த புதினத்திற்கான விருது, 2012 ஆம் ஆண்டிற் கான சாகித்திய அகாதெமி விருது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களைப் பெற்றுள்ளது. முற் போக்கு எழுத்தாளர் டி.செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களைக் கூற வேண்டும்.

1950களில் சிறுவனாக இருக்கும்போது ஆல விதை போன்ற ஒரு கரு மனதிற்குள் விழுந்தது. 1990களில்தான் பருவங் கட்டியது. அதன் மூலத்தைத் தேடி ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளில் அலைந்தபோது அங்குப் பல விருட்சங்களைக் காண முடிந்தது. நஞ்சை கொஞ்சி விளையாடும் அந்தப் பகுதியில் வாழ்ந்த, வாழும் வாழ்கின்ற பண்ணைத் தொழிலாளர்களின் வறண்ட வாழ்க்கையைக் கேள்விப்பட்டபோதும் பார்த்த போதும் இது கீழத் தஞ்சையா அல்லது கீழான தஞ்சையா? என்னும் எண்ணமே முதன்முதலில் பட்டது.

கீழை, மேலை என எல்லா நாடுகளிலும் அடிமைகள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் கீழத் தஞ்சையைப் போலப் பண்ணைத் தொழிலாளர்கள் வேறு எந்த நாட்டிலும் கொடுமையை அனுபவித்த தில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்தக் காலத்திலேயே மலத்தைப் புகட்டுகின்றார்கள். சிறுநீரைக் குடிக்க வைக்கின்றார்கள். அந்தக் காலத்தில் குட்டிச் சிற்றரசர்களாக வாழ்ந்த பண்ணையார் களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

இவ்வளவிற்கும் கீழத் தஞ்சையிலுள்ள பண்ணைத் தொழிலாளர்கள் ஏறக்குறைய அனைவருமே இந்துக்கள்தான்; நந்தனாரின் வழித் தோன்றல்கள் தான். காந்தியடிகளின் மொழிப்படி ஹரிஜனங்கள் தான். ஒரு மதத்திற்குள் சாதியின் ஆகக்கூடிய இறுக்கமும் ஏற்றத்தாழ்வும் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

முள்ளுப் பத்தைகளுக்கிடையே மருந்துச்செடி முளைத்திருப்பது போலப் பள்ளிக்கூடங்கள் சில ஆங் காங்கே காணப்பட்டன. பண்ணைத் தொழிலாளர் களின் பிள்ளைகளைப் பண்ணையார்கள் பள்ளிக் கூடம் போவது போலக் கனவு கூடக் காண விட மாட்டார்கள். பிறகு எங்கே படிப்பது? வயிற்றுப் பாட்டைத் தவிர, அவர்கள் வேறு எதையும் எண்ண முடியாத வகையில் அவர்களுக்கான கட்டமைப்பு இருந்தது. கொடுக்கும் கூலியைக் கூட வாங்கிய கடனுக்கு வட்டியாகப் பறித்துக்கொள்வார்கள்.

கரும்புத் தோட்டத்திலே வாடியவர்களுக்காகக் கலங்கியவர் பாரதியார். ஏழ்மையிலும் அறியாமை யிலும் உழன்றவர்களைப் பற்றியெல்லாம் பாடியிருக் கின்றார். ‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ என்று நல்ல வேளையாக இறந்த காலத்தை எண்ணித்தான் பாடி யிருப்பார்; கீழத்தஞ்சையைச் சுற்றிப் பார்த்திருந்தால் இப்படிப் பாடவே யோசித்திருப்பார்.

1917இல் அக்டோபர்ப் புரட்சி ருஷியாவில் ஏற்பட்ட பிறகே மார்க்சிய சித்தாந்தங்கள் உலகெங் கிலும் பரவலாயின. நாகப்பட்டினத்தில் இரயில்வே தொழிற்சங்கம் ஏற்பட்டது. கீழத் தஞ்சையில் விவசாயச் சங்கம் தோன்றியது. உழைக்கும் வர்க்கத் தினரிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. இதற்கு அடிப்படைக் காரணம், “மனிதன் தன்னை ஒத்த உழைப்பாளிகளாக ஒன்று சேரும்போது - ஒரு வர்க்கமாக - சமூகத்தை மாற்றியமைக்கும் வர்க்கப் போராட்டங்களில் ஈடுபடுகின்றான். வர்க்கப் போராட்டம் என்பது சமூகச் சூழல்களைப் புனரமைக்கும் ஒரு தீவிர நடவடிக்கை” என்னும் ந.முத்துமோகன் அவர்களின் கூற்று இங்கு நினைக்கத் தக்கது. (இயங்கியல் பொருள்முதல்வாதம் - ஓர் அறிமுகம். ப.9).

காங்கிரஸ், நாட்டின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. சாதிய ஒடுக்கு முறையில் விடுபட்டு, பொருளாதாரத்தில் உழைக்கும் வர்க்கம் தன்னிறைவு கண்டால்தான் உண்மையான விடுதலையை அடைந்ததாகும் என்று பொதுவுடைமை வாதிகள் எண்ணினார்கள். அதற்கான செயற் பாட்டிலும் இறங்கினார்கள்.

அந்நிய அரசு, பொதுவுடைமைவாதிகளை எந்த அளவுக்கு நசுக்கி ஒடுக்கியதோ அதில் எள்ளள விலும் குறைவில்லாமல் காங்கிரஸ் அரசும் செய்தது. விடுதலைக்கு முன் வேறு வேறு கட்சியில் இருந்து கொண்டு, நாட்டுக்கு விடுதலை வேண்டாம் என்றவர் களின் பண்ணைகளையும் தொழில்களையும் காக்க வேண்டுமல்லவா?

அன்றிலிருந்து இன்று வரை பொதுவாக ஆளும் காங்கிரஸ் கட்சியும் பிற ஆளும் கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு வேலையைச் செய்கின்றன. நாட்டின் இயற்கை வளங்களைத் தனியார்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கின்றார்கள். சில்லறை வர்த்தகம் செய்ய வெளி நாட்டினரைப் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற் கின்றார்கள். நுகர்வோரும் சாகுபடியாளர்களும் பயன்பெறுவார்களாம். எத்தனை காலம்தான் இப்படிப் பல கோடி மக்களுக்குக் காது குத்துவார்கள் என்று தெரியவில்லை. பசுமைப்புரட்சியைக் கொண்டு வந்தால் இந்தியாவின் பஞ்சமே தீரும் என்றார்கள். வந்தது பசுமைப் புரட்சி. உற்பத்திச் செலவு அதி கரித்ததால் சாகுபடியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குத் தள்ளப்பட்டார்கள். இர சாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்தை ஏற்றுக் கொண்ட பயிர்கள் அவற்றின் நஞ்சை விளை பொருட்கள் வழியாக நுகர்வோருக்குக் கொடுக் கின்றன. சர்க்கரைநோய், புற்றுநோய், இதய நோய், புதுப்புது நோய்கள் என நோயில்லாத இந்தியரைப் பார்க்க முடியாத அளவிற்குப் பசுமைப் புரட்சியின் பங்களிப்பு இருக்கின்றது. தண்ணீர் இன்றி வாடும் பயிரைப் பார்க்க மனமில்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். வந்தாரை வாழவைத்த தஞ்சையில் வாழ்ந்தவர்கள் பிழைப்புத் தேடி இடம்பெயர்கின்றார்கள். இந்த லட்சணத்தில் இரண்டாவது பசுமைப்புரட்சி வேண்டும்.

பண்ணைத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர் வை ஊட்டத் தலைமறைவாக வாழ்ந்து கொண்டு பாடுபட்ட தோழர்கள் பலர் தங்கள் இன்னுயிரை ஈந்து தியாகி ஆனார்கள்.

களஆய்வு, வரலாற்றுக் குறிப்புகள், பொது வுடைமைக் கோட்பாடுகள் போன்றவற்றை அடிப் படையாகக் கொண்டு வாட்டாக்குடி இரணியன், சாம்பவானோடைச் சிவராமன், மலைப்பாம்பு மனிதர்கள், பொதுவுடைமைப் போராளி ஏ.எம். கோபு போன்ற புதினங்களும் சிவப்பு நாளங்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பும் இக்கட்டுரை யாளரால் எழுதப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட மனப் பதிவுகளோடு டி.செல்வ ராஜ் அவர்களின் தோல் புதினத்தைப் படித்துப் பார்க்கும்போது பண்ணைத் தொழிலாளர் வாழ்க்கை நிலைக்கும் தோல் பதனிடு தொழிற்சாலைகளில் வேலை செய்வோர், நகரைச் சுத்தி செய்வோர் வாழ்க்கை நிலைக்கும் நிறைய ஒற்றுமைகள் காணப் பெறுகின்றன.

“சகல செல்வத்தினுடைய தோற்றுவாயும் உழைப்பே என அரசியல் பொருளியல்வாதிகள் அறைந்து கூறுகின்றனர். உண்மையிலேயே அது தான் தோற்றுவாய்- இயற்கைக்கு அடுத்தபடியாக, அதற்கு இயற்கை மூலாதாரமாக வழங்கும் பொருளை அது செல்வமாக மாற்றுகிறது” (உழைப்பின் பாத்திரம், ப.2) எங்கல்ஸ் குறிப்பிடுவதைப் போன்று உழைப்பே மனித இனத்தின் வளர்ச்சிக்குத் தோற்று வாயாக இருந்துள்ளது. இன்றும் மக்களைத் தவிர மற்றைய உயிரினங்கள் தங்கள் உணவைத் தாமே தான் தேடிப் பெறுகின்றன. பகுத்தறிவு பெற்ற மனித இனத்தில் மட்டுமே வலுத்தவன் வாழவும் இளைத்தவன் வீழவும் முடிகின்றது.

பண்ணைத் தொழில் என்பது வழிவழியாக வந்துகொண்டிருக்கின்றது. தோல் பதனிடு தொழில் மரபு சார்ந்து சிறு அளவில் நடைபெற்றாலும் அது ஒரு தொழில் நிறுவனம் ஆனது - அந்நியர் ஆட்சிக் காலத்தில்தான். ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகள் இருந்தபோது சாதிமத வேறுபாடில்லாமல் அத் தொழிலைச் செய்து முதலாளி - தொழிலதிபர் ஆனார்கள்.

கீழத்தஞ்சையில் பண்ணையார்கள் எல்லாச் சாதி, மதங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளார்கள். இதே போன்றுதான் தோல் பதனிடு தொழிற்சாலை முதலாளிகளும் இருக்கின்றார்கள். ஹாஜியார் அஸன் ராவுத்தர், வேத சிரோன்மணி, சுந்தரம் ஐயர், வரதராஜுலு நாயுடு எனப் பெயர்களைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

மனிதக் கழிவை மனிதனே அகற்ற வழிவகை செய்தவர்களை வரலாறு சபித்துக் கொண்டே இருக்கும். எவ்வளவு கொடுமையான ஒரு செயல்! மனிதக் கழிவுகளை அள்ளுபவர்கள் நேரடியாகச் சொர்க்கத்திற்கே போவார்களாம். இது வட நாட்டு இந்துத்வா அரசியல் தலைவர் ஒருவரின் பிடிப்பு. சனாதன தர்மத்தைக் கடைப்பிடித்துக் கோயில் குளங்களைச் சுற்றி மந்திரங்களை முணு முணுத்து, ஆண்டவனை நித்தம் வேண்டி ஏன் அவர்கள் சொர்க்கம் புக வேண்டும்! அவர்களும் மனிதக் கழிவை அள்ளும் தொழிலைச் செய்து சொர்க்கத்தை அடையலாமே! மனிதக் கழிவை அள்ளும் மக்களின் மன நிலையைத் தோல் புதின ஆசிரியர் டி.செல்வராஜ் ஒரு கதைமாந்தர் வழியாகப் பின்காணுமாறு எழுதுகின்றார். “ஒரே பாவா. இந்த உத்தோகம் பெத்த கலெக்டர் உத்யோவம் பாரு. மசிரு வேலை, போனாப் போவுது. ஊருப்பய பேண்ட பீய அல்லாம் அள்ளிச் சுமக்கிற உத்யோகம்” (தோல். ப. 373)

ஒட்டு மொத்தமாக உழைக்கும் வர்க்கத்தின் நிலையைப் பார்க்கும்போது ஓயா உழைப்பு; கால் வயிற்றுக்குக் கூடக் காணாத கஞ்சி. கீழத் தஞ்சைப் பண்ணைத் தொழிலாளர்கள் படும் பாடு எல்லாத் தொழிலாளர் வர்க்கத்தினருக்கும் பொருந்தும்.

கதிரோன் தோன்றினான்

கவலை கொண்டு ஏங்கினோம்

உணவோ நீராகாரம்

உடையோ கோமணம்

உழைக்கும் வர்க்கத்தினர் இழப்பதற்கு அடிமைத் தளையைவிட வேறொன்றுமில்லை என்னும் காரல் மார்க்சின் கூற்றுக்கு ஏற்பத்தான் அவர்களின் வாழ்க்கை நிலையே இருக்கின்றது. அதனால்தான் பல்வேறு சங்கங்கள் உருவாகும்போது அவற்றில் இணைந்தார்கள்.

கீழத் தஞ்சையில் பண்ணைத் தொழிலாளர் களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பி.சீனிவாச ராவ் ஒரு மாமனிதராக உருவெடுத்து வருகின்றார். பண்ணைத் தொழிலாளர்களோடு ஒன்றி அவர் களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றார். ஊர்ந்து செல்லும் அட்டையின் மீது ஏதாவது பட்டால் உடனே அது தன்னைச் சுருட்டிக் கொள்ளும். அது போலத்தான் அந்த மக்களின் வாழ்க்கை நிலையும் இருந்தது. பண்ணைத் தொழிலாளர்களைப் பண்ணை யார்களும் அவர்களுடைய கார்வாரிகளும் ‘அட்டைப் பயலுவ’ என்றுதான் குறிப்பிடுவார்கள்.

புறம்போக்கு நிலங்களையும் கோயில் நிலங் களையும் வளைத்துப் போட்டுக்கொண்டு சுகபோக மாக வாழும் பண்ணையார்களுக்கு அடியாட்கள் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள். பண்ணை யாளர்களிடம் பெறும் சொற்பக் கூலிக்காகப் பண்ணைத் தொழிலாளர்களைப் படாதபாடு படுத்துவார்கள். ஒரு பண்ணைத் தொழிலாளி நிமிர்ந்து பார்த்தான் அல்லது ஏதாவது ஒரு தவறைச் செய்துவிட்டான் என்றால், பயங்கரமான தண்டனைகளைக் கொடுப்பார்கள். சாட்டையால் அடிப்பார்கள்; சாணிப்பால் கொடுப்பார்கள்; ஆரக்காலில் கட்டி வைத்துச் சூடுபோடுவார்கள். கீழ்ப்பாய்ச்சிப் போடுவார்கள், அவன் பெண் டாட்டியின் சிறுநீரைக் குடிக்கச் செய்வார்கள். மானுட சமுதாயமே வெட்கித் தலை குனிய வேண்டும்! நாடு விடுதலை பெறுவதற்கு முன்னும், பெற்ற பின்பும் இந்தக் கொடுமைகள் எல்லாம் நிகழ்ந்தன. இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் முடிவு கட்டப் பாட்டாளி மக்களுக்கு ஒரு விடி வெள்ளியாக வந்தவரே பி.சீனிவாசராவ்.

ரிஷிமூலம் நதிமூலம் தெரியாது என்பார்கள். கர்நாடகப் பகுதிகளில் தோன்றிச் சோழ நாட்டை வளப்படுத்தியது காவிரி. ஆலயங்களும் மடங் களும் பண்ணைகளும் ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல லெட்சம் ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டுக் கொண்டன. ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் வளர்த்துக்கொண்டு சிறு எண்ணிக்கையிலுள்ள மேட்டுக் குடிகள் மட்டும் சுகபோகமாக வாழ்ந்தார்கள். காவிரியைப் போற்றி னார்கள்; வணங்கினார்கள்.

‘சோழநாடு சோறுடைத்து’ என்னும் பெரு மையை உலகுக்குப் பறைசாற்றினார்கள். உலகமும் மதிப்போடு பார்த்தது. இது ஒரு பக்க உண்மை தான். இன்னொரு பக்கத்தை உலகிற்குக் காட்ட வில்லை; பழம் பெருமைகளைக் கூறியே மறைத்து விட்டார்கள். அப்பகுதியில் செழித்து வளர்ந்த பக்தியும் கலைகளும் மனுநீதிகளும் உழைக்கும் மக்களை அப்படியே சேற்றில் அமுக்கிக் கீழத் தஞ்சைக்கு உரமாக்கிக் கொண்டன.

இப்படிப்பட்ட சூழலில் கீழத் தஞ்சைக்கு வந்து மக்களோடு மக்களாக வாழ்ந்து பண்ணைத் தொழி லாளர்களுக்கும் அவர்களை ஆட்டிப் படைத்த கார்வாரிகளுக்கும் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்னும் விழிப்புணர்வை ஊட்டியவர் பி.சீனிவாச ராவ். சாதி வேறுபாடுகளை உதறித் தள்ளிவிட்டுப் பல பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்களும் பண்ணைத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையைப் புரட்டிப் போடப் பாடுபட்டார்கள்.

இவ்வளவு புரட்சியைச் செய்வதற்கு இங்குத் தோன்றிய அற இலக்கியங்களோ பக்தி இலக்கியங் களோ கைகொடுக்கவில்லை. காரல்மார்க்சின் பொது வுடைமைச் சித்தாந்தமே புதிய பாதை போட்டுக் கொடுத்தது. காரல்மார்க்ஸ், “உழைக்கும் மனிதர் களின் விடுதலைக்காகவும் நல்வாழ்வுக்குமான போராட்டத்திற்கும் சுரண்டல்காரர்களுக்கும் அவர் களுடைய கையாட்களுக்கும் எதிரான போராட்டத் திற்கும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணம் செய்தார்.” ( மார்க்ஸ் என்பவர், ப. 16)

விவசாயச் சங்கம், பொதுவுடைமைக் கட்சி என்பவை பாட்டாளி மக்களை வழி நடத்தின. பண்ணையார்கள் ‘துண்டைக் காணும், துணியைக் காணும்’ என்று அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு காணாமல் போய் விட்டார்கள்.

இன்று பதவி ஆசையாலும் இலவசங்களாலும் தோழர்கள் எல்லோரும் பல கட்சிகளின் தொண் டர்கள் ஆகிவிட்டார்கள். எங்கிருந்தாலும் அவர்கள் பி.சீனிவாசராவ் அவர்களையும் பொதுவுடைமைக் கட்சியையும் அவர்களுக்காக இன்னுயிர் நீத்த தியாகி களையும் ஒருகணம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் மறந்தாலும் வரலாறு பறைசாற்றிக் கொண் டிருக்கும்.

தோல் பதனிடு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் நகர சுத்தித் தொழிலாளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தோல் புதினத்தில் சுந்தரேச அய்யர் மகன் வழக் குரைஞர் சங்கரன் வருகின்றார். இவர் இதற்குமுன் மார்க்சிய சித்தாந்தத்தை அறிந்தவர் அல்லர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் தந்தை வழக்குரைஞர். மதுரை வைத்தியநாதய்யரின் தொடர் பால் திண்டுக்கல் போய் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபடுகின்றார்.

நிலப்பிரபுத்துவக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்; காந்தியச் சிந்தையால் ஈர்க்கப்பெற்றவர்கள். தாழ்த்தப் பட்ட மாணவர்களின் மேம்பாட்டுக்காக நிலங்களை ஒதுக்கிப் பள்ளிக்கூடம் நடத்துகின்றார்கள். இவரின் பெரிய தகப்பனார் பரமசிவம் உயர்நீதிமன்ற நீதிபதி. இப்படிப்பட்ட பின்புலம் உள்ள சங்கரன் தான் உழைக்கும் வர்க்க மக்களின் முன்னேற்றத் திற்காகப் பாடுபடுகின்றார். சனாதன தர்மங்களி லிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஒரு முற் போக்கான இளைஞர்.

பரம்பரையாக அடிமைச் சமுதாயத்தில் வாழ்ந்து வந்தவர்களின் பரம்பரையைச் சார்ந்தவர், வாழ்க் கையில் சிறிய அளவிலோ அல்லது பேரளவிலோ முன்னேற்றம் அடைந்தவுடன் சனாதன தர்மத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். பரம் பரையாகச் சனாதன தர்மத்தில் உழன்ற குடும்பத்தில் பிறந்த சங்கரன் பூணூலை அறுத்தெறிந்துவிட்டு உழைக்கும் வர்க்கத்தினரோடு ஒன்றிணைந்து அவர் களுக்காகப் பாடுபடுவது காரல்மார்க்சின் பொது வுடைமைச் சித்தாந்தத்திற்குக் கிடைத்த வெற்றி யாகும்.

பி.சீனிவாசராவைப் போன்றே சங்கரனும் உழைக்கும் மக்களுக்காக அவர்களோடு இரண்டறக் கலந்து விடுகின்றார். கீழத் தஞ்சையிலும் திண்டுக் கல்லிலும் நடைபெறும் போராட்டங்கள் விடு தலைக்கு முன்னும் பின்னும் என அந்நியர் ஆட்சி யிலும் நம்மவர் ஆட்சியிலும் நடைபெறுகின்றன. அந்நியரின் ஆட்சியை நம்மவர்கள் பொற்கால மாக்கி விட்டார்கள். சட்டி மாற்றுவதைப்போல ஆட்சி மாறியதே தவிர, வாழ வழிகேட்ட உழைக்கும் வர்க்கத்தினரைச் சித்திரவதை செய்து சின்னா பின்னமாக்கிக் கொன்று குவித்து விட்டார்கள்.

களப்பால் குப்பு என்னும் இளைஞர் 1948-இல் திருச்சி சிறைச்சாலையிலேயே மர்மமான முறையில் இறந்தார். வாட்டாக்குடி இரணியன், சாம்பவா னோடைச் சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் போன்றோர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப் பட்டார்கள். இன்னும் பலர் கொல்லப்பட்டார்கள்.

சோழநாட்டின் நெற்களஞ்சியமாகிய கீழத் தஞ்சை நீண்ட பரப்பினை உடையது. பாதிப்பும் அந்த அளவிற்கு இருந்தது. விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பது போலத் தோல் புதினத்தில் வரும் தொழி லாளர்களும் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகின்றார்கள்.

காவல்துறையினர் தொழிலாளர்களைப் பிடிப் பதாகக் கூறிக்கொண்டு அவர்கள் வாழும் இடங் களை இடித்துத் தள்ளுகின்றார்கள். பண்ட பாத்திரங் களை நொறுக்குகின்றார்கள். கீழத் தஞ்சையில் போராட்டம் நடந்தபோதும் பல தோழர்களின் வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன.

தொழிற்சங்கத் தலைவர் சங்கரனுடன் உற்ற துணையாக இருந்து தொழிலாளர்களை வழி நடத்தும் ஆசிரியர் இருதயசாமி, வேலாயுதம், சகோதரர் தங்கசாமி போன்றோர் தோல் புதினத்தில் நினைவில் நிற்கும் கதை மாந்தர்கள் ஆவர்.

சாதி, மதம், தீட்டு என்பவற்றில் ஆளும் வர்க்கத் தினர் சில வழிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர். ஆண் தொழிலாளர்களிடம்தான் சாதி, தீட்டு போன்றவற்றைக் கடைப்பிடிக்கின்றார்கள். பெண் களிடம் அந்த நேரத்திற்கு மட்டும் இவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கின்றார்கள். ஒரு பாட்டே இருக்கின்றது.

காட்டுல மேட்டுல எங்களக் கண்டா

காலப் புடிப்பீங்க ஆண்டே

வீட்டுல வாசலுல எங்களக் கண்டா

வெரட்டுவீங்க ஆண்டே

ஒரு பண்ணைத் தொழிலாளிக்குக் கல்யாணம் நடந்தால் முதலிரவு பண்ணையாரோடுதான் நடை பெற வேண்டும். இப்படிப்பட்ட ஒரு வழக்கம் காலங் காலமாகவே இருந்துள்ளது. பொதுவுடைமைப் போராளி ஏ.எம்.கோபு அவர்கள் தம்முடைய வாலிபப் பருவத்தில் தோழர்களுடன் சேர்ந்து கொண்டு மகாலிங்க ஐயர் என்பவர்க்கு மரண தண்டனை வழங்கியது வரலாற்றில் பதிவான செய்தியாகும்.

தோல் பதனிடு தொழிற்சாலையில் வேலை செய்யும் சின்னக்கிளி என்னும் பெண் முஸ்தபா மீரானின் பாலியல் வன்கொடுமையால் இறந்து போகின்றாள். நகர சுத்தி செய்யும் பெண்களும் அவர்களின் கண்காணிப்பாளர்களால் தொல்லைக் குள்ளாகின்றார்கள்.

கீழத்தஞ்சையில் பண்ணைத் தொழிலாளர் களுக்குக் கொடுமையான தண்டனைகள் கொடுத்த தைப் போன்றே தோல் பதனிடு நிறுவனங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கும் முதலாளிகள் கொடுத்தார்கள். “தோல் ஷாப்பின் பிரதான வாசலை ஒட்டி நடப்பட்டிருக்கும் கல் தூணில் ஓசேப்பு கௌபீனத்தோடு முழு நிர்வாணமாகக் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கிறான். தோல் ஷாப்பு உடைமையாளர்களின் ஏவல் நாயான கடுவன், கையில் உடும்புத் தோலால் பின்னப்பட்ட சாட்டை வாரினால் சரமாரியாக ஓசேப்பின் உடம்பில் தன் பலத்தையெல்லாம் கூட்டி அடித்துக் கொண்டிருக்கிறான். ஓசேப்பின் உடல் முழுவதும் சாட்டை வாரினால் ஏற்பட்ட காயங்கள், தோல் பிய்ந்து உதிரம் சொட்டிக் கொண்டிருக்கிறது.” (தோல். ப. 76) எவ்வளவு பயங்கரமான நிகழ்வு; படிப்போரின் நெஞ்சில் படிமமாகப் பதிகின்றது.

கீழத் தஞ்சைப் பண்ணைத் தொழிலாளர் போராட்டத்திலும் சரி, தோல் புதினத்தில் நடை பெறும் போராட்டங்களிலும் சரி, காவல்துறை யினரின் காட்டுத் தர்பார் சொல்லில் அடங்காதவை. அரசாங்கம் எள் என்றால் அவர்கள் எண்ணெயாகத் தான் கொடுத்துள்ளார்கள்.

கீழத் தஞ்சைப் பண்ணைத் தொழிலாளர் போராட்டங்களில் பலரைச் சுட்டுக்கொல்ல மூல காரணமாக இருந்தவர் துணை காவல்துறைக் கண் காணிப்பாளராக இருந்த சுப்பையா பிள்ளை என் பவரைக் குறிப்பிடுவார்கள். தோல் புதினத்தில் வரும் வெள்ளைத்துரை, தேவசகாயம், தீச்சட்டிக் கோவிந்தன் போன்றவர்கள் மனிதத்தன்மை அற்றவர் களாகவே காணப்படுகின்றார்கள். தோல் பதனிடு நிறுவன முதலாளிகளின் அடிவருடிகளாகச் செயல் படுகின்றார்கள்.

பண்ணைத் தொழிலாளர்களுக்கு முன்னோடி யாக இருந்த களப்பால் குப்பு திருச்சி சிறையில் மர்மமான முறையில் இறந்ததைப் போன்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருபத்தைந்து வயதுப் பெண் அக்னீஸ்மேரி என்பவளும் மர்மமான முறையில் இறந்து போகின்றாள்.

கீழத்தஞ்சைப் போராட்டங்களிலும் பல எட்டப்பன்கள் தென்படுகின்றார்கள். சாம்பவா னோடைச் சிவராமனைக் காட்டிக் கொடுத்தவர் நாட்டுச்சாலை மஞ்சுவேளார். வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் இருவரையும் காட்டிக் கொடுத்தவர் வடசேரி பட்டாமணியம் சாம்பமூர்த்தி. இவர்களைப் போன்றே தோல் புதினத்திலும் சில எட்டப்பன்கள் உலா வரு கின்றார்கள். கழுவத் தேவன், மிக்கேல்சாமி போன்ற வர்கள் ஆளும் வர்க்கம் தூக்கிப் போடும் எலும்புத் துண்டுக்காக அலைபவர்கள். இறுதியில் இவர் களின் எதிர்பார்ப்பு இலவு காத்த கிளிதான்.

பொதுவுடைமைச் சித்தாந்தத்தைப் பாட்டாளி மக்களிடம் பரப்பியவரில் பலர் களப்பலி ஆனாலும் உழைக்கும் வர்க்கத்தினரிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் பெற்றார்கள். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்னும் பாரதியின் கனவு மெய்யானது.

ராதநரசிம்மபுரம் வெங்கடேசன், மணலி கந்தசாமி போன்றோர் கீழத் தஞ்சைப் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள். பிறகு பலருக்குச் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

தோல் புதினத்தில் வரும் வேலாயுதம் தேர்தலில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினர் ஆகின்றார். எல்லாவற்றுக்கும் மேலாக ஓசேப்பு என்னும் தோல் பதனிடு தொழிற்சாலைத் தொழிலாளி நகரசபைத் தலைவர் ஆவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். உண்மை யாக உழைக்கும் தொழிற்சங்க வாதிக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகும்.

தோல் புதினத்தில் ஓசேப்பு - அருக்காணி, சங்கரன் - வடிவாம்பாள் போன்றோரின் காதல் நிகழ்வுகள் ஆங்காங்கே இழையோடுகின்றன. அவை யெல்லாம் மரத்தை மறைத்தது மாமதயானை; மரத்தில் மறைந்தது மாமதயானை என்னும் நிலையை அடைந்து விடுகின்றன. தோல் பதனிடு தொழி லாளர்கள், நகர சுத்தித் தொழிலாளர்கள் படும் இன்னல்களையும் அவர்களைப் பாடாய்ப்படுத்தும் முதலாளிகள், கண்காணிப்பாளர்களையும் புதினம் முழுவதும் காண முடிகின்றது. வட்டிக்குக் கொடுத்து வாங்குபவர்களும் தங்கள் கை வரிசையைக் காட்டு கின்றார்கள்.

பல்வேறு வகையான தொழில்கள் மண்சார்ந்தும், தொழிற்சாலைகள் சார்ந்தும் நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன. அளவில் கூடக் குறைய இருக்கலாம்; ஆனால் பிரச்சினைகள் இல்லாத தொழிலே இல்லை. முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காகத் தொழி லாளர் வர்க்கம் ஆளும் வர்க்கத்தின் ஆசியுடன் நசுக்கி ஒடுக்கப்பட்டதையே வரலாற்றில் காண முடிகின்றது.

மலைப் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டங்கள், கடல் சார்ந்த தொழில்கள், சாகுபடி, நெசவு எனத் தொழில்கள் வேறுபடுகின்றனவே தவிர உழைக்கும் வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பெரும் பாலும் ஒன்று போலவே இருக்கின்றன. மண்ணுக்கு ஏற்பவே குளவிக் கூடுகளின் நிறங்கள்!

Pin It