மலர், பூ என எப்படிச் சொன்னாலும் மனித மனதில் உற்சாகம் கொப்பளிக்கிறது. பாதை யோரத்தில் பூத்திருக்கும் நெருஞ்சிப் பூக்கள் முதலாகப் பெயர் தெரியாத காட்டுப் பூக்கள் வரை எல்லாமே அழகுதான். ஈரம் ததும்புகின்ற பூக்கள், அழகிய வண்ணத்தில் ஒளிர்ந்திடும் பூக்கள், இனிய மணம் வீசும் பூக்கள்... பூக்களில் தான் எத்தனை வகைகள்? பூக்களை நேசிக்காத மனிதர்கள் புவியினில் இருக்கச் சாத்தியமுண்டா? தெரியவில்லை. கவர்ச்சியான தோற்றத்தில் நாகலிங்கப்பூ, நறுமணம் கமழும் செண்பகப்பூ, இளம்பெண்ணின் கைவிரல்கள் போன்ற காந்தன் மலர், மரக்கிளையில் மஞ்சள் வண்ணத்தில் சரம் சரமாகத் தொங்கும் சரக் கொன்றைப் பூ, தொட்டியில் ஒற்றையாகப் பூத்திருக்கும் ரோஜா... நம்மைச் சுற்றிலும் தான் எத்தனை விதமான பூக்கள்? தமிழர் வாழ்க்கையில் பூக்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் ஆழ்ந்த பரிசீலனைக்குரியது. பரந்துபட்ட நிலவெளியைப் பூக்களின் பெயரால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பூக்களின் பெயரால் அடை யாளப்படுத்திய பண்டைத் தமிழரின் ஆழ்மனத்தினுள் பூக்கள் தொன்மங்களாக உறைந்திருந்தன. குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 பூக்களைப் பற்றி விவரிப்பது வெறுமனே தகவல் அல்ல. பூக்கள் மீதான தமிழரின் காதல் என்றுதான் அதைக் கருத வேண்டும்.

தமிழரின் வாழ்க்கையில் மலர்கள் எல்லாக் காலகட்டங்களிலும் நடைபெறும் சிறப்பு நிகழ்வு களில் முதன்மையிடம் வகிக்கின்றன. குழந்தை பிறப்பு முதலாக இறப்பு வரை எல்லா நிலைகளிலும் பூக்கள் இல்லாமல் எதுவுமில்லை. தாயின் வயிற்றில் குழந்தை கருவானதும், ஏழாவது மாதம் நடை பெறும் வளைகாப்பு நிகழ்ச்சியில் பெண்ணின் தலையிலிருந்து தொங்கும் சடையைப் பூக்களால் அலங்கரிக்கப்படுகிறது. மேலும் அவளது கழுத்தில் மாலையை அணிவித்து, கைகளில் வளையல் அணி விக்கும் சடங்கு நடைபெறுகின்றது.

குழந்தை பிறந்து சில மாதங்களில் தலை முடியை மழிக்கும் சடங்கில், கழுத்தில் மலர் மாலை அணிவிப்பது முக்கியமான சடங்கு. ஒரு வயதுக் குழந்தையின் தலைமுடியைச் சின்னக் குடுமியாக்கி, அதில் பூச்சரத்தை வளையமாக வைத்தால்தான் சில தாய்மார்களுக்குத் திருப்தி. பெண் வயதுக்கு வந்தவுடன் செய்யப்படும் சடங்கு களில், தாய் மாமா அவளுக்கு மலர் மாலை சூடுகின்றார். அந்தச் சிறுமியின் தலைமுடியை நீளமான சவுரி முடியை இணைத்துப் பின்னி, அதில் தாழை மலரின் மடல்களை அழகாக வைத்துத் தைப்பதுடன், அந்த அலங்காரம் ஆள் உயரக் கண்ணாடியில் தெரியுமாறு நிழற்படம் எடுத்து வீட்டில் தொங்கவிடுவது எண்பதுகளில் கூட நிலவியது.

இளம்பெண் பருவமடைவதனைப் ‘பூப் படைதல்’ என்ற சொல்லால் குறிப்பது கிராமிய வழக்கு. பூப்புனித நீராட்டு விழா என்ற பெயரில் அழைப்பிதழ் அச்சடித்து, ஊரைக் கூட்டி விருந்து போட்டு விமரிசையாகக் கொண்டாடுவது மதுரைப் பக்கத்துக் கிராமங்களில் இன்றும் நடைபெறு கின்றது.

பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் ‘பூ வைத்தல்’ சடங்கு குறிப்பிடத்தக்கது. பெண் பிடித்துவிட்டது, அவளை விரைவில் மணமகளாக ஏற்றுக் கொள் கின்றோம் என்று உறுதியளிக்கும் வகையில் பையனின் தாயார், சகோதரிகள் அப்பெண்ணின் தலையில் பூவைச் சூடுவது, ஒருவகையில் ஆரவாரம் அற்றது. தங்கள் குடும்பத்திற்கு மணமகளாக வரவிருக்கும் இளம் பெண்ணின் தலையில் பூவைச் சூடுதல் மூலம் தங்களுடைய உரிமையை உறுதி செய்துகொள்வது இன்றும் வழக்கினிலுள்ளது.

திருமண நாளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மலர் மாலைகள் அணிவித்துக் கையில் பூச்செண்டுகள் தரப்படுகின்றன. மணமேடையில் உற்றார் உறவினர் முன்னிலையில், திருமணம் என்ற உறவு எங்களுக்குள் ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் மாப்பிள்ளையும் பெண்ணும் பரஸ்பரம் மாலைகளை மூன்று தடவைகள் மாற்றிக் கொள்கின்றனர். திருமண நாளில் மணப்பெண்ணுக்குத் தலைமுடி தெரியாத அளவுக்கு பூச்சரத்தைச் சூடுவதன் மூலம், அந்தப் பெண்ணின் மனதில் குதூகலத்தை ஏற்றுகின்றனர்.

தமிழகத்தில் குடும்பப் பெண் அல்லது சுமங்கலி எனப்படுபவளின் அடையாளமாக மஞ்சள், குங்குமம், வளையல் போன்றவற்றுள் பூக்களும் குறிக்கப் பெறுகின்றன. பெண் தலையில் பூவைச் சூடுவதற்கும் குடும்பப் பெண்ணுக்குமான உறவு ஆய்விற்குரியது. பண்டைக் காலத்தில் இளம் பெண்கள் பூச்சூடும் வழக்கம் இல்லாமல் இருந்திருக்கவேண்டும். ஏதோ ஒரு காலகட்டத்தில் திருமணமான பெண் எனக் குறிப்பதற்குப் பூவானது குறியீடாக மாற்றப்பட்டு இருக்கலாம். இன்று நெற்றியின் உச்சி வகிட்டினில் குங்குமத்தை இட்டுக் கொள்வது, பெங்காலி, கன்னடப் பெண்களிடமிருந்து 90களுக்குப் பின்னர் தான் தமிழகத்திற்குப் பரவியுள்ளது. திருமணம் ஆன பெண் என்பதைக் காட்ட தாலியுடன் வேறு சில பொருட்களைப் பயன்படுத்துவதைப் புனித

மாகக் கட்டமைப்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கணவன் இறந்தவுடன் பெண் பூச் சூடக்கூடாது என்ற தடையானது, முன்னொரு காலத்தில் திருமணம் ஆன பெண்கள்தான் பூச் சூடினர் என்று கருத இடமளிக்கின்றது. இத்தகைய தடை இன்று தேவையற்றது. ஒரு வயதுப் பெண் குழந்தையின் தலைமுடியிலும் பூவைச் சூடும்போது, இடையில் கணவனாக வந்த ஆண் இறந்தவுடன், அவள் காலம் முழுக்கத் தடை விதிப்பது தவறு. மெல்லிய இயல்பும் நளினமும் மிக்க பெண்ணைப் பூவை எனப் பெயரிட்டு அழைக்கும் தமிழகத்தில், ‘குடும்பம்’ என்ற நிறுவனத்தை முன்னிறுத்திப் பெண் மீது அதிகாரம் செலுத்துவது பொருத்தமன்று.

பெண் தலையில் பூவைச் சூடித் தன்னை அலங்கரித்துக் கொள்வது, ஒருவகையில் பெண் உடலை ஆணுக்கான போகப் பொருள் / காட்சிப் பொருளாக்குவது எனக் கருதி, பூவைப் புறக் கணிக்கும் பெண்ணியவாதிகள் தமிழகத்தில் உள்ளனர். இந்துப் பெண் என்று சநாதனவாதிகள் உருவாக்கி யிருக்கும் பெண் பற்றிய பிம்பத்தில் ‘பூச்சூடுதல்’ முக்கிய இடம் வகிக்கின்றது. எனவே சுயமான முடிவெடுத்துத் தன்னிச்சையுடன் செயல்படும் பெண்களின் ‘பூச்சூடல்’ பற்றிய கருத்துகள் நுண் அரசியல் சார்ந்தவை.

காலங்காலமாகப் பெண்கள் தலையில் அலங் காரமாகப் பூக்களைச் சூடிக் கொள்கின்றனர் என்ற நம்பிக்கை சரியானது அல்ல. போன நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத்தில் ஆண்கள் நீளமான கூந்தலை வளர்த்து அள்ளிக் கொண்டையாகச் செருகியிருந்தனர். அக்கொண்டையில் ஆண்கள் பூக்களைச் சூடிக் கொண்டனர். போருக்குக் கிளம்பிச் சென்ற வீரர்கள், தலையில் மலர்களைச் சூடியிருந்தனர் என்பது பண்டை இலக்கியம் தரும் தகவல். பெண்கள் பெரும்பாலும் தாலியில் தான் பூவைச் சூடியிருந்தனர். அறுபதுகள் காலகட்டத்தில் நகர்ப்புறப் பெண்கள் தலையில் பூச்சரத்தைச் சூடி அழகு பார்த்ததுடன், அக்காட்சியை நிழற்படமாக எடுத்து வீட்டுச் சுவரில் மாட்டியிருந்தனர். கிராமத்து ஆண்களில் சிலர் காது மடல்களில் ஒற்றைப் பூவினைச் செருகியிருந்தனர். நாகரிகம் அறியாமல், இன்னும் பூவைச் செருகியிருக்கும் பட்டிக்காட்டான் என்பதைக் குறிக்கும் வகையில், ‘என்ன காதுல பூ வைக்கப் பார்க்கிறே?... நான் என்ன காதுல பூ வச்சிருக்கேனா?” போன்ற மரபுத் தொடர்கள் சமூகப் பழக்கவழக்கம் மாறி வருவதைக் காட்டு கின்றன. புனுகு, சந்தனம், அத்தர் போன்ற வாசனைப் பொருட்களுடன் மருக்கொழுந்து, செண்பகப்பூ, மல்லிகைப்பூ போன்ற பூக்களைக் காதில் செருகிக் கொண்டு ஆண்கள் திரிந்தது அந்தக் கால மோஸ்தர்.

இன்று மல்லிகைப் பூச் சரத்தை நீளமாகத் தலையில் தொங்கவிட்டுக் கொள்வது பெண்களிடம் பெருவழக்காக உள்ளது. சுடிதார் அணிந்திருக்கும் பதின் பருவப் பெண்கள் கூட தலையில் மல்லிகைச் சரத்துடன் கல்லூரி / அலுவலகம் போகின்றனர். அறுபதுகளில் சாமந்திப்பூ, மருக்கொழுந்து, கனகாம்பரம், மரிக்கொழுந்து போன்ற பூக்களைப் பெண்கள் பெரிதும் பயன்படுத்தினர். மல்லிகைப் பூக்களின் பயன்பாடு மிகக் குறைவு. மஞ்சள் சாமந்திப் பூக்களை நெருக்கமாக வைத்துக் கட்டப்பட்ட சரத்தினை, மடித்துக் கட்டப்பட்ட இரட்டைச் சடைகளுக்கு மேல், பின்னந்தலையில் வளைவாக வைத்தவாறு வலம் வரும் சிறுமிகளும் வளரிளம் பெண்களும் நிரம்ப இருந்தனர். மல்லிகைப் பூவும் கனகாம்பரமும் கலந்து தொடுக்கப்பட்ட சரம் ‘திரும்பிப் பார்’ எனக் குறிப்பிடப்பட்டது. வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் கட்டாயம் தலையில் மல்லிகைப் பூச்சரம் அல்லது ஏதாவது பூவைச்சூட வேண்டுமென்று எழுபதுகளில்தான் பரவலானது. தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும், கணவனின் ஆயுள் நீடித்திருக்க வேண்டும் என்ற விருப்பங் களுடன் புனிதப் போர்வையில் பூவும் சேர்ந்தது விநோதம்தான்.

‘மல்லிகை எந்தன் மன்னன் மயங்கும் பொன்னான மலர்’ என்று ஆணைக் கவர்ந்திடும் சாதனமாக உருமாற்றியதில் காட்சி ஊடகங்களின் பங்கு கணிசமானது. அழகிய தோற்றத்தினுக்கு ஆதாரமான பூ எனப் பெண்ணின் அழகை வெளிக் காட்டப் பயன்பட்டது, நாளடைவில் வாசனை மூலம் கணவன் அல்லது காதலனை ஈர்ப்பதாக உரு மாறியது. ஆண் தனக்கு விருப்பமான பெண்ணுக்குப் பூ வாங்கித் தருதல் என்பது குறியீட்டுத் தன்மை யுடையது. பெண் மீதான தனது விருப்பத்தினை நாசுக்காக வெளிப்படுத்தப் பூக்கள் பயன்பட்டன. நெருங்கிய ஆண் உறவினர், கணவன், காதலன் போன்றோரைத் தவிரப் பிற ஆடவர்கள் வாங்கித் தரும் பூவைத் தலையில் சூடப் பெண்களுக்குத் தயக்கம் இன்றும் உள்ளது.

ரோஜாப் பூ பாரசீகத்திலிருந்து தமிழகம் வந்தது. அது தனது தோற்றம் காரணமாகத் தமிழர் இடையே பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளது. காதலின் அடையாளமாக ஒற்றை ரோஜாப் பூ முன்னிறுத்தப்பட்டதில் திரைப்படத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இளைஞன் தான் நேசிக்கும் பெண்ணை நோக்கி ஒற்றை ரோஜாப் பூவை நீட்டி, ‘ஐலவ்யூ’ எனச் சொல்வதும் அதைக் கேட்டவுடன் வெட்கத் துடன் மகிழ்வடைந்த இளம்பெண் அப்பூவை வாங்கித் தலைமுடியில் செருகுவதும், புனைவின் உச்சம். யதார்த்தத்தில் அப்படியான காட்சி நடை பெறச் சாத்தியம் மிகக்குறைவு. அதிலும் ஆண், தான் விரும்பிய பெண்ணின் தலையில் மல்லிகைச் சரத்தைச் சூடும் போது, திரையில் காட்டப்படும் பெண்ணின் முகத்தில் வெளிப்படுவது, புணர்ச்சிப் பரவசத்தின் உச்சம்.

மல்லிகை, பிச்சி, முல்லை போன்ற பூக்களைப் பெண்கள் இன்று விருப்பத்துடன் தலையில் சூடுகின்றனர். சின்ன ஊர்களில் கூடப் பூக்கடைகள் உள்ளன. அறுபதுகளில் கிராமப்புறங்களில் பூ விற்பனை மிகக் குறைவு. பெரிய கோவில்களைச் சார்ந்து இருக்கும் கடைகளில் தான் பூக்கள் விற்பனை ஆயின. ‘பண்டாரம்’ என்ற சாதியினர் தான் பூக்கட்டி விற்பனை செய்தனர். மலர் மாலைகள் தவிரப் பல்வேறு மலர்கள், துளசி, பச்சை போன்ற வற்றைத் தொடுத்துக் கதம்பம் என்ற மலர்ச் சரம் கோவில்களில் பயன்பட்டன. வீடுகளில், வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் வீட்டு மாடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சாமி உருவப் படங்களுக்கும், மறைந்த மூதாதைகளின் நிழற்படங்களுக்கும் கதம்பம் அணிவிக்கப்பட்டது. பொதுவாகப் பூக்களை நூறு, இருநூறு என்ற எண்ணிக்கையில் விற்ற போது, கதம்பம் மட்டும் முழக்கணக்கில் அளக்கப் பட்டது.

கிராமப்புறத்தில் ஆற்றங்கரையோரம் தாழை மரப் புதர்களின் உச்சியில் மலர்ந்து வெளியெங்கும் மணத்தைப் பரப்பும் தாழம் பூவின் வாசம் நெடி யடிக்கும்; சிலருக்குத் தலைவலியை வரவழைக்கும். தாழம்பூவை அப்படியே தலையில் வைக்கக்கூடாது. ஏனெனில் அதற்குள் இருக்கும் பூ நாகம் தீண்டினால் மரணம் நிச்சயம் என்று பலரும் நம்பினர். தாழம் பூவிற்குள் நாகம் இருக்க வாய்ப்பில்லை; மண்டிக் கிடக்கும் தாழம் புதரில் நிச்சயம் நாகம் இருக்க வாய்ப்புண்டு. தாழம் பூவைப் பிடுங்கப் போய், கவனமில்லாமல் பாம்பினால் சிலர் தீண்டப்பட்டு இருக்கலாம். எனவே எச்சரிக்கைக்காகக் கிராமத்தில் அப்படிச் சொல்லி வைத்தனர். தாழம் பூ மடல் களைத் துணிமணிகள் வைத்திருக்கும் ‘டிரங்க்’ பெட்டியில் போட்டு மூடி வைத்தால், ஒரு மாத மானாலும் உடைகள் மணமணக்கும். தாழம் பூவின் மடல்களை அழகிய வடிவில் கத்தரித்து, பதின்பருவப் பெண்ணின் நீண்ட சடையில் வைத்துத் தைத்து அலங்கரிப்பதில் சில பெண்கள் திறமை சாலிகளாக இருந்தனர். இயற்கையில் மலரும் மலரினைத் தம்மை அழகுபடுத்திக் கொள்ளப் பெண்கள் பயன்படுத்திய முறை தனித்துவமானது.

அமானுட ஆற்றல்களை வழிபட நினைத்த வர்கள், மலரினைப் பயன்படுத்தியது சமய ரீதியில் முக்கியமானது. தெருவோரக் கோவில் தொடங்கிப் பெரிய கோவில் வரை, கடவுளை வழிபடப் பூக்கள் அவசியம். ‘பூசை’ என்ற சொல்லே ‘பூ செய்’ என்பதிலிருந்து வந்ததுதான். சாமி சிலைகளுக்கு மலர் மாலைகள் அணிவித்தும் பூக்களால் அலங் கரித்து வழிபடுவதும் வழக்கில் உள்ளது. பெரிய கோவில்களில் நந்தவனங்கள் இருந்தன. அங்கு மலர்ச் செடிகள் வளர்க்கப்பட்டன. அச்செடிகளி லிருந்து பூக்களைக் கொய்து மலர் மாலைகள் இறை வழிபாட்டினுக்காகத் தொடுக்கப்பட்டன. பூக்களால் முழுக்க அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் உற்சவமூர்த்தி, தெருக்களில் உலாவாக இன்றும் வருகின்றார்.

நாட்டார் தெய்வங்கள் அல்லது துடியான தெய்வங்களுக்குப் ‘பலி’ தருவதற்காகக் கொண்டு வரப்படும் ஆடு, எருமை போன்றவற்றின் கழுத்தில் மலர் மாலை சூடி அழைத்து வந்து, தலையைத் துண்டிப்பது மரபாக உள்ளது. துடியான தெய்வம் உறைந்துள்ளதாகக் கருதப்படும் புளியமரம், வேப்ப மரம் போன்ற மரங்களிலும் மலர் மாலைகள் தொங்கவிடப்பட்டன.

பேய் அல்லது முனி வாழும் மரத்தினில் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் மலர் மாலையைத் தொங்கவிடுவதன் மூலம், அவற்றைச் சாந்தப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இன்று கூட உள்ளது.

மரணமடைந்தவரின் சடலத்திற்குமலர் மாலை சூடுவதுடன், அந்த உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திட மலர் மாலை, மலர் வளையம் வைத்தல் என்பது பன்னெடுங்கால வழக்கு. பிணத்தைத் தூக்கிச் செல்லும் பாடையினை மலர்களால் அலங்கரிப்பது, இறந்தவருக்குச் செய்யப்படும் மரியாதையுடன் தொடர்புடையது. புதைகுழியில் மலர்களைத் தூவுதல், இறந்தவரின் நிழற்பட போட்டாவின் மீது மாலை சூடுவது போன்றன, அவரைக் கடவுளைப் போன்று மக்கள் கருதுவதன் வெளிப்பாடு.

தமிழ்ச் சமூகத்தில் யாரையாவது வரவேற்று மரியாதை செய்யவேண்டுமானால் மலர் மாலைகள் அவசியம். அரசியல் வாதிகள், மடாதிபதிகள் போன்றோரை வரவேற்கக் கையில் மலர் மாலை வேண்டும். தெருமுனைகளில் நடைபெறும் கூட்டங் களில், பேச்சாளரைக் கௌரவிக்க ‘மலர் மாலை மாணிக்க மாலையாக’ அணிவிக்கப்படுகின்றது. கிராமத்துக் கோவிலில் பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பத்தின் வாரிசுகளுக்கு மாலை வழங்குவது தன்மானம் சம்பந்தப்பட்டது. கோவில் பூசாரியால் திருவிழாவின் போது தரப்படும் மாலை சமூக அந்தஸ்தாக வடிவெடுக்கின்றது.

தமிழரின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு உடைய மலர்களைப் பயன்படுத்துவதில் மத ரீதியில் பேதம் இல்லை. இஸ்லாமியர்களுக்கும் மல்லிகைப் பூக்களுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. தர்காகளில் அடங்கியுள்ள சூபிகளின் சமாதிகள் மேல் பச்சை வண்ணத் துணிக்கு மேல் மல்லிகைச் சரங்கள் போர்த்தப்படுகின்றன. திருமண நாளில் மணமகனின் முகத்தை மலர்ச்சரத்தால் மறைப்பது இன்னும் வழக்கினில் உள்ளது. இறந்த வரின் சடலத்தைத் தூக்கிச் செல்லப் பயன்படுத்தப் படும் மரப்பெட்டியின் மீது மலர்ச்சரங்கள் தொங்க விடப்பட்டிருக்கும். மல்லிகை மலரிலிருந்து தயாரிக்கப்படும் அத்தர் எனப்படும் வாசனை திரவிய விற்பனை பெரிதும் இஸ்லாமியர்களிடம் தான் முன்னர் இருந்தது. இஸ்லாமியப் பெண்கள் தலையில் மல்லிகைப் பூக்களைச் சூடுவதில் பெரிதும் ஆர்வமுடையவர்கள். பொதுவாக இஸ்லாமியர் களுடைய வாழ்க்கை மலர்களுடன் நெருக்கமான தொடர்புடையது.

தமிழகக் கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கப் பிரிவினர் இந்து சமயத்தவரைப் போலவே மலர் களுக்கு முக்கியத்துவம் தரக்கூடியவர்கள். தலையில் பூக்களைச் சூடுதல் மோசமானது என்று வெறுத்து ஒதுக்கும் பெந்தகோஸ் பிரிவு கிறிஸ்தவர்களும் தமிழர்கள் தான். கிறிஸ்தவ மறையான விவிலியத்தில் மலருக்கு எதிரான கருத்து உள்ளதா என அறிய வேண்டியுள்ளது.

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் பூக்களை வைத்து இயற்றப்பட்டுள்ள பாடல்களை மட்டும் தொகுத்தால் அவை நூற்றுக்கணக்கில் விரியும். காலந்தோறும் கவிஞர்களின் கற்பனைக்கும் பூக்களுக்குமான உறவு மிக நெருக்கமானது.

பூ என்றால் மல்லிகை, பிச்சி போன்ற சிறியவை என்றும் மலர் என்றால் தாமரை போன்ற பெரியவை என்றும் எங்கோ படித்ததாக நினைவு.

இயற்கையின் ஓர் அம்சமான தாவரத்தின் இனப்பெருக்கத்தினுக்கு அடிப்படையாக விளங்கும் பூக்கள் மகரந்தச் சேர்க்கை மூலம் இயற்கைச் சுழற்சியைச் சாத்தியப்படுத்துகின்றன. காய், கனி, விதை மட்டுமல்ல தேன் தருவதும் மலர் தானே. கல்யாண முருங்கை மரத்தின் சிவந்த நிறமுடைய பெரிய மலரில் காகம் தேனைக் குடிக்கும் என்பது வியப்பூட்டும் செய்தி.

அதுவா? இதுவா? என்று இரட்டை மன நிலையில் குழம்பிக் கொண்டு, எந்தத் தீர்வுக்கும் வரவியலாமல் தவிக்கும்போது கிராமத்தினர் முடி வெடுக்கப் பூக்கள் பயன்படுகின்றன. வெள்ளைப் பூவையும் வண்ணப் பூவையும் தனித்தனியாக ஒரே மாதிரி இலையில் கட்டிப் பொட்டலமாக்கி கோவில் வாசலில் போட்டு, குழந்தையின் மூலம் ஒரு பொட்டலத்தை எடுக்கச் சொல்வார்கள். அப்பொட்டலத்தில் தான் மனதில் நினைத்த பூ இருந்துவிட்டால் போதும், உடன் செயலில் இறங்கிவிடுவார்கள். பூவைத் தேர்ந்தெடுத்தல் என்பது திடீரென அதியற்புத ஆற்றலின் வெளிப்பாடாக உருமாறுவது பூனையின் வால் திடீரென உரசி விட்டுப் போவது போலத்தான்.

Pin It