வாழ்க்கைக் குறிப்பு

திரு. சிலுவைமுத்து திருமதி செல்லம்மாள் இணையரின் நான்காவது மகனாக 1958ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் நாள் வீரவநல்லூரில், (திருநெல்வேலி மாவட்டம்) எஸ். ஜெயசீலஸ்டீபன் பிறந்தார். தொன்போஸ்கோ பள்ளியில் படித்து இலயோலாக் கல்லூரியில் புகுமுகவகுப்பு பயின்று இளங்கலை (வரலாறு) முதுகலை (வரலாறு) உஸ்மானிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பின்னர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 1993ம் ஆண்டு வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றார். கீழ்த்திசை நாடுகளுக்கான பிரெஞ்சு நிறுவனத்தில், பாரீசு / புதுச்சேரி ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து (1995-1999) டாட்டா நடுவண் ஆவணக் காப்பக முதுநிலை ஆலோசகராய் பணியாற்றி (2000-2001) விசுவபாரதி பல்கலைக்கழகத்தில் கடல்சார் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றி துறைத் தலைவராகவும் (2001-2013) செயலாற்றினார். இந்திய ஐரோப்பியவியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநராகப் (2013-2023) பணிபுரிந்து 2023, ஜூன் மாதம் பணி நிறைவு செய்தார்.jayasheela stephenகடல்சார் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருந்த நீங்கள் அத்துறை குறித்து விளக்கமாகக் கூறுங்களேன்?

கடல்சார் வரலாறு ஆராய்ச்சியாளர்களால் தொடக்ககாலத்தில் பன்னாட்டு வணிகம் குறித்து மட்டுமே எழுதப்பட்டது. நாளடைவில் அது விரிவடைந்து ஏற்றுமதி, இறக்குமதி, வணிகர்கள், இலாபம் தொடர்பாக மட்டுமல்லாமல் மனித சமூகங்களிடையே நடந்த கருத்துப் பரிமாற்றங்கள், மக்கள் புலம்பெயர்தல், தாவரவியல், வேதியியல், மருத்துவம், புவியியல், வானியல் மற்றும் இதர அறிவியல் வளர்ச்சி, மேம்பாடு குறித்து எழுதப்படுகிறது. தொழில்நுட்பம் மூலம் உலகில் ஏற்பட்ட மாற்றங்களும் கடல்சார் வரலாற்றில் அடங்கும். இந்தியாவின் அப்போதைய கடல்சார் பகுதிகளான காம்பே (குஜராத்) மலபார், சோழமண்டலம் வங்காளம், தமிழக கடற்கரையின் முத்துக்குளித்துறை, சோழமண்டலம் கடற்கரை ஆகியவைகளைப் பற்றி ஐரோப்பியர் வருகைக்குப்பின் நிகழ்ந்த வரலாறு தொடர்பாக மட்டும் என்னால் எழுதப்படுகிறது. இந்தியப் பல்கலைக்கழகங்களில் குறிப்பாக விசுவபாரதி, தில்லி, புதுச்சேரியில் ஆராய்ச்சி நடந்தது. தற்போது மேலும் சில பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

தாங்கள் எழுதியுள்ள கடல்சார் வரலாற்று நூல்கள் வழி தங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் எத்தகையது?

நான் எழுதிய கடல்சார் வரலாற்று நூல்கள் வழியே பெற்ற அனுபவங்கள் ஏராளம். இதனையே சிறு நூலாக வெளியிட நண்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தப் பணி பாஞ்சாலி சபதத்தில் பாரதி எழுதிய முன்னுரையில் குறிப்பிட்ட வரிகள் “காரியம் மிகப் பெரியது; என் திறமை சிறிது” போன்றது. போர்ச்சுக்கீசிய மொழியை முதலில் கற்க வேண்டும், பின்பு பதினாறாம் நூற்றாண்டு போர்ச்சுக்கீசிய தாள் மற்றும் தோல் சுவடிகளைப் படிக்க கற்றுக் கொண்டு அதனை சரியாக எழுதவேண்டும். இதன் பின்னர் மொழிபெயர்க்க (ஆங்கிலத்தில்/தமிழில்) வேண்டும். இதன் பின்பு எங்கு எந்த இயலில் உபயோகிக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும். இது அனைத்தையும் விட போர்ச்சுக்கல் நாடு செல்ல ஆராய்ச்சி நிதி எப்படி, எந்த ஆவணக்காப்பத்தில், எந்த நூலகத்தில் நமக்கு வேண்டிய முதன்மை சான்றுகள் உள்ளன என அறியவேண்டும். ஆவணக்காப்பகத்தில் ஒரு நாள் முழுவதும் ஆராய்ச்சி செய்து ஒரு தகவலும் கிடைக்காமல் மிகவும் வருந்தியது உண்டு. சில நேரங்களில் மலைமலையாக ஆவணங்கள் கிடைக்கும்போது போதிய நேரம் பணி செய்ய இயலாமையும் ஏற்பட்டுள்ளது. பென்சில் (கரிக்கோல்) மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் நோட்டுப்புத்தகத்திலோ தாளிலோ அழுத்தி எழுதவேண்டும். மைப் பேனா கொண்டு எழுத அனுமதியில்லை என்பதால் மிகவும் சிரமம். ஆவணங்களை நகல் எடுக்கத் தேவையான பணம் இல்லாமல் சிரமப்பட்டதும் உண்டு. இவைகள் எல்லாம் ஆவணங்களை சேகரிக்கும் போது ஏற்படுபவை.

இதற்கு அடுத்தபடியாக நூல்களை எழுதும் அனுபவமே தனி. எழுதி எழுதி வைத்து முடிக்க முடியாமல், மனநிறைவு என்பது ஏற்படாமல் மேலும் மேலும் ஆவணங்களைத் தேடி இறுதியில் நூல் எழுதி முடிப்பது ஒரு அனுபவம். இன்னும் சில நூல்கள் எழுத பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி முடிக்க முடியாமல் உள்ளன. முதன்மை ஆதாரங்கள் பல ஐரோப்பிய மொழிகளில் (போர்ச்சுக்கீஸ், ஸ்பானிஷ், பிரெஞ்சு, டச்சு, டேனிஷ், ஜெர்மன்) கிடைப்பதால் அவைகளை உபயோகிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்தியாவில் ஆங்கிலத்தை உபயோகித்து ஆங்கிலேயக் காலனிய கால வரலாற்றை பலர் எளிதாக எழுதி விட்டனர். இது ஒரு சார் வரலாறு என்றே குறிப்பிட வேண்டும். முழுமையான வரலாறு பல்பரிமாண வரலாற்றுக் கோணத்தில் எழுதவேண்டும். நான் தமிழக கடல்சார் வரலாற்றை நுண்ணோக்கி வரலாற்றுக் கோணத்திலும் (Telescopic
History) 16ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரையிலும் எழுதி வருகிறேன். ஐரோப்பியக் கிழக்கிந்திய குழும ஆவணங்களையும், கத்தோலிக்க மற்றும் பிராட்டஸ்டண்ட் மதகுருமார்களின் ஆவணங்களையும் பயன்படுத்தும்போது ஒரு உண்மை வரலாறு கிடைக்கிறது.

காலனிய காலத் தமிழகத்தின் ஏற்றுமதி இறக்குமதி பற்றி விரிவாகக் கூற முடியுமா?

தமிழகத்திலிருந்து அரிசி மற்றும் பலவகையான துணிமணிகள் பொதுவாக ஏற்றுமதி செய்யப்பட்டன. ஐரோப்பியர்கள் தங்களுக்கு தேவைப்பட்ட அனைத்து பொருட்களையும் ஏற்றுமதி செய்தனர். மதுரை நாயக்கரிடமிருந்து வெடியுப்பு வாங்கி தூத்துக்குடிக்குக் கொண்டு சென்று கோவாவிற்கு அனுப்பி கப்பல்களில் லிஸ்பன் சென்றடைந்தது. மெக்சிகோவில் கிடைத்த வெள்ளி மணிலாவிற்கு கொண்டுவரப்பட்டு, சோழமண்டலக்கடற்கரை வந்தடைந்தது. அந்தக் காலத்தில் வெள்ளிக்கு பெரும் தட்டுப்பாடு இருந்தது. டச்சுக்காரர்கள் ஜப்பானின் நாகசாகித் துறைமுகத்திலிருந்து வெள்ளியை நாகப்பட்டணத்துக்கு கொண்டுவந்து வெள்ளி நாணயங்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு துணிவியாபாரத்தைப் பெருக்கினர். ஐரோப்பியர்கள் குதிரை, யானை இறக்குமதி செய்தனர். இராணுவ செயல்பாடுகளுக்கு இவை உதவின. முத்து, வைரம் போன்ற விலைமதிப்பான கற்களையும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். ஐரோப்பாவிலிருந்து மது வகைகளை இறக்குமதி செய்தனர். இவைகளைப் பற்றி விரிவாக தனித்தனியே நூல்களை எழுதியுள்ளேன்.

காலனிய காலத் தமிழக பொருளாதாரம் எப்படி இருந்தது?

காலனிய காலத் தமிழகப் பொருளாதாரம் காலத்துக்குக் காலம் ஏற்றமும் இறக்கமும் கண்டது. ஒரே சீரான வளர்ச்சி பெறவில்லை. இதற்குக் காரணம் ஐரோப்பியர்களின் வணிகத் தலையீடும் நிலவிய அரசியல் சூழ்நிலையும் தான். பிரெஞ்சு-ஆங்கிலேயர், கர்நாடகப் போர்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. போதாக்குறையாக ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்கள் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்தன. தமிழக வணிகர்களை சுரண்டும் நடைமுறை வளர ஆரம்பித்தது. ஐரோப்பிய குழும வணிகத்தின் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட பல வணிகக் குடும்பங்கள் பாதிப்பை சந்தித்தன. இது தொடர்பாக துணி வணிகம் பற்றிய நூலில் நெசவாளர்கள் சந்தித்த இன்னல்களையும் குறிப்பிட்டுள்ளேன்.

தமிழகத்தில் நிலவிய அடிமை வணிகம் பற்றி கூறுங்களேன்...

தமிழகத்திலிருந்து அடிமைகள் உலகமெங்கும் அனுப்பப்பட்ட வரலாற்று ஆவணங்களைக் காண நேரிட்டபோது என் மனம் பதைபதைத்தது. வட அமெரிக்காவிற்கு தூத்துக்குடியிலிருந்து மதன் என்ற அடிமை சென்றது. மணிலாவிற்கும், மெக்சிகோவிற்கும் பசிபிக் கடல் மார்க்கத்தில் சென்ற தமிழக அடிமைகள், ஐரோப்பாவிற்கு கொண்டு சென்ற அடிமைகள், செல்லும் வழியில் கேப்டவுனில் விற்கப்பட்டு ஆப்பிரிக்காவில் பணிபுரிய நேரிட்டது. இலங்கைக்கு அனுப்பப்பட்டது எல்லாம் தமிழ் நாட்டை காலனியாக அடிமைப்படுத்துவதற்கு முன்பு மக்களை அடிமைப்படுத்தியதன் தொடக்கமாகக் காணலாம். நாயக்க மன்னர்கள் கடுமையாக அடிமை வணிகத்தைத் தடைசெய்தபோதும் இரகசியமாக நடந்தது கவனிக்கப்படத்தக்கது. கடன், பஞ்சம், வறட்சி, வேலையின்மை ஆகியவைகளைக் காரணமாகக் காண முடிகிறது. இதுவரை அறியப்படாத இந்த வரலாற்றை எழுத மிகவும் சிரமப்பட்டேன்.

அடிமைகள் தமிழகத்திலிருந்து கொச்சி, கோவா ஆகிய இடங்களுக்கு போர்ச்சுக்சீசியர்களால் கொண்டுவரப்பட்டனர். டச்சுக்காரர்கள் தான் பெருமளவில் அடிமைகள் வணிகத்தை மேற்கொண்டனர். இவர்கள் ஜகார்த்தா, அச்சே, பாண்டன், சிரியான் (மியான்மர்) கொழும்பு, மெலாகா ஆகிய ஆசிய துறைமுகங்களுக்கும் ஏற்றுமதி செய்தனர். பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியிலிருந்தும் காரைக்காலில் இருந்தும் மொரீசியசு, ரீயூனியன் தீவுக்கும் ஏற்றுமதி செய்தனர். ஆங்கிலேயர்கள் சென்னையிலிருந்து தென் அட்லாண்டிக் தீவான ஹெலானாவுக்கும் சுமத்திராவிலுள்ள பெங்கலுவுக்கும் அடிமைகளை அனுப்பினர். தரங்கம்பாடியிலிருந்து டேனீஷ்காரர்கள் கடாரம் அச்சே கேப்டவுன் ஆகிய இடங்களுக்கு அடிமைகளை அனுப்பினார்கள். ஆண்கள், பெண்கள், சிறார்கள், சிறுமிகள், குழந்தைகள் உட்பட அனுப்பியது ஓர் அவலம். இவர்கள் நடத்தப்பட்ட விதம், இழைக்கப்பட்ட கொடுமைகள், ஓடிப்போதல், தண்டனை வழங்கப்பட்டமை விவரங்களை படம்பிடித்துக் காட்டி சமூக வரலாற்றை எழுதியுள்ளேன்.

தமிழில் அச்சுக்கலை தொடக்கமும் வளர்ச்சியும் போர்ச்சுக்கீசியர் ஆட்சியிலும் டேனிஷ் ஆட்சியிலும் எவ்வாறு இருந்தன?

சேசுசபை பாதிரியார்கள் தமிழகத்தில் அச்சுக்கலையை அறிமுகப்படுத்தி தமிழ் நூல்களை 1578, 1579, 1580, 1586, 1677, 1678, 1679 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்டனர். இவை அப்போதைய ஓலைச்சுவடிகள் எழுதப்பட்ட முறையில் அச்சாயின. குறில், நெடில் வேற்றுமை காணப்படவில்லை. மெய் எழுத்துகளுக்குப் புள்ளி இல்லை. இந்த நூல்கள் அனைத்தும் மதம் மாறிய கிறித்துவர் பயன்பாட்டுக்கும் போர்ச்சுக்கீசிய பாதிரியார்களின் உபயோகத்திற்கும் மட்டுமே. தரங்கம்பாடி பிராட்டஸ்டன்ட் மதகுருக்கள் அச்சுக்கூடம் நிறுவி 1712 முதல் 1799 வரை தமிழ் நூல்களை அச்சிட்டனர். இவர்கள் தமிழில் வேதாகமத்தை பலமுறை அச்சிட்டார்கள். கிறித்தவப் பாடல்கள் ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்து 1713 முதல் 1756 வரை அச்சிட்டனர். பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு பாடப்புத்தகங்கள் பல அச்சிடப்பட்டன. தமிழில் நாட்காட்டி (காலண்டர்) அச்சிடப்பட்டதும் ஆவணங்கள் மூலம் அறிகிறோம். பல கிறித்தவ நூல்கள், செபப்புத்தகம் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் தமிழில் அச்சிடப்பட்டு மதப்பரப்பும் செயல்களில் ஈடுபட்டது தெளிவாகிறது.

jayasheela stephen at canada

(கனடா நாட்டில் மாண்ட்ரீயல் நகரில் பேராசிரியர் இதாகி சுசுகியுடன்)

இராமநாதபுர மன்னர் விஜயரகுநாத சேதுபதி(எ) கட்டைய தேவர் தரங்கம்பாடி மதகுருமார்களை தொடர்பு கொண்டு 1730 ஆம் ஆண்டு தமிழில் இராமாயணத்தை அச்சிட வேண்டுகோள் விடுத்து தேவையான பொருள் உதவி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மதகுருமார்கள் தங்களால் அச்சிட இயலாது என தெரிவித்துள்ள ஆவணங்களில் பதிவாகி உள்ளது ஒரு சுவாரஸ்யமான செய்தி. தமிழர்களுக்கு அச்சுக்கலையும் அதன் தொழில்நுட்பமும் தெரியவில்லை என அறிகிறோம். இதுவுமின்றி எனது நூலில் சென்னை, நாகர்கோவில், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் அச்சான நூல்களைப் பற்றி விளக்கியுள்ளேன். தமிழில் அச்சுக்கலை பரவி ஹாலே, ஹாம்பர்க், டிரெஸ்டன், எர்லாஞ்சன், இலண்டன், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வெளியான தமிழ் நூல்கள் பற்றிய செய்திகளும் உள்ளன. பிரெஞ்சிய காலனி புதுச்சேரியில் மிஷன் அச்சக வரலாற்றை எழுதி வெளியான தமிழ் நூல்கள் பற்ற¤ தனியே ஒரு நூல் உள்ளது. தேம்பாவணி மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டு முறையே 1851, 1852,1853ஆம் ஆண்டுகளில் புதுச்சேரியில் வெளியானது பலருக்கும் தெரியாது. அச்சுக் கூடங்கள் மூலம் தமிழ் வளர்ந்தது. குறிப்பாக உரைநடையில் ஐரோப்பிய மத குருமார்கள் எழுதிய நூல்கள் வெளியானது அறியப்படாத ஒன்று. நிறைய நூல்களின் முதல் பக்கம் (அட்டைப் படம்) ஆகியவைகளை ஆவணக்காப்பகங்கள், நூலகங்கள் அனுமதி பெற்று அச்சிடப்பட்டது வெளியான 3 நூல்களின் சிறப்பு ஆகும்.

காலனிய காலத் தமிழகத்தில் கல்வியின் நிலை எவ்வாறிருந்தது?

காலனியக் கால தமிழகத்தின் கல்வி நிலை மிகவும் மோசமாக பின்னடைந்து இருந்தது. ஏற்கனவே கல்வி என்பது தமிழகத்தில் செய்யுள் மற்றும் சிறிது கணக்குப் பயிற்சி மட்டுமே. வடமொழியில் எல்லாத் துறைகளிலும் பாடங்கள் இல்லை. பிராமணர்கள் அவர்களுக்குத் தேவைப்பட்ட துறைகளை வைத்து அறிவு கொண்டனர். அறிவியல், உரைநடை இலக்கியம் ஆகியவைகளை ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தினர். மதம் மாறிய கிறித்தவர்கள் மட்டுமே மதகுருமார்கள் நடத்திய தமிழ் வழிப் பள்ளிகளில் சேர்ந்தனர் மற்றும் பயின்றனர். சைவர், வைணவர்களுக்கு பள்ளி இல்லை. பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டவை பயன்பாட்டிற்கு வந்தன. மேற்கத்திய கணிதம், புவியியல், இயற்கை, அறிவியல், வரலாறு, ஐரோப்பிய மொழிகள் கற்பிக்கப்பட்டன. வகுப்புகளின் நேரம், பாடத்திட்டம், உணவு இடைவேளை ஆகியவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு திண்ணைப் பள்ளிக்கூடங்களிலிருந்து வேறுபட்டு செயலாற்றின. புதுச்சேரியில் காலனிய அரசாங்கம் இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் பள்ளியை நிறுவியது. வேளாளர், யாதவர், பறையர் சாதியாருக்கு என தனித்தனி தமிழ்வழிப் பள்ளிகள் நிறுவியது மட்டுமின்றி பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி சிறுமியர் பள்ளி நிறுவியது சிறப்பாகும்.

ஆங்கிலேயர்கள் ஆங்கில வழிப் பள்ளிகளை நிறுவினர். அச்சிடப்பட்ட நூல்கள் பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டன. ஆனால் பள்ளிகளில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவு. ஒட்டுமொத்த மாவட்டங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப இல்லை என மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கைகளில் காண்கிறோம். போர்ச்சுக்கீசிய வழிப் பள்ளிகள், ஆங்கில வழிப் பள்ளிகள், பிரெஞ்சு மொழி வழிப் பள்ளிகளை காலனிய அரசாங்கம் ஊக்குவித்து தங்கும் இடங்களுடன் பள்ளி, அனாதைப் பள்ளிகள், போன்றவைகளைத் தொடங்கி ஐரோப்பிய அலுவலர் குழந்தைகளும் கலப்பின மக்களின் பிள்ளைகளும் படிக்க ஆர்வம் காட்டப்பட்டது. இறுதியாக கலை, அறிவியல், சட்டம், மருத்துவம், தொழில்நுட்ப பள்ளிகள் தொடங்கப்பட்டாலும் இவை அனைத்தும் ஐரோப்பியர்கள் மற்றும் ஐரோப்பிய தமிழ் கலப்பின மக்கள் (Anglo-indian, Franco-indian) பயன்பாட்டுக்கே. காலனிய காலத்தில் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியே இல்லை என்று ஆவணங்கள் மூலம் எண்பிக்க முடிகிறது.

சோழ மண்டலக் கடல்சார் ஆய்வுகள் தங்களுக்கு உணர்த்தியவை யாது?

சோழ மண்டலம் என்ற புவியியல் பகுதியில் வாழ்ந்த மக்கள் உழவு, நெசவு, வணிகம் ஆகியவற்றில் சிறந்து இருந்தனர் என்று ஐரோப்பியர்கள் அறிந்ததே. நீண்ட கால வரலாறு என்பது தற்போது பல அறிஞர்களால் பயன்படுத்தப்படும் சொல். இதுவுமின்றி உலகளாவிய வரலாறு என பார்க்கும்போது, இந்த சோழ மண்டல கடற்கரை மற்றும் உள்நாட்டுப் பகுதி, அனைத்து ஐரோப்பிய கிழக்கிந்திய கம்பெனிகள் (குழுமங்கள்) தங்கி வணிகம் புரிந்து கோட்டை கொத்தளங்களைக் கட்டி, அனைத்து உலகப் பகுதிகளையும் இணைத்து உலகமயமாக்கலில் ஈடுபடுத்தியதே சிறப்பு. ஆனால் தமிழர்கள் அதிகமாக ஈடுபடாமல் ஐரோப்பியர்களுக்கு இணையாக செயல்படாதது காலனிய வளர்ச்சிக்கு நம்மைத் தள்ளிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

ஆய்வு நோக்கிற்காக பல மொழிகளைக் கற்றவர் நீங்கள். அந்த அனுபவத்தைப் பற்றிக் கூறுங்கள்.

ஐரோப்பிய மொழிகளைக் கற்பது சுலபம். எழுத்துக்கள் எல்லாம் ரோமானிய வகையே. தென் இந்தியாவில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) எழுத்துக்களை முதலில் கற்பதற்கே நாளாகும். பிரெஞ்சு மொழியில் ஒன்று தான் எழுதுவதும் உச்சரிப்பதும் வேறுபாடு உள்ளது. போர்ச்சுக்கீசியம் கற்றால், ஸ்பானிஷ், இத்தாலியன் கற்பது எளிது. டச்சு மொழி கற்றால் ஜெர்மன், டேனிஷ் கற்பது சுலபம். மொழிகளைக் கற்பதில் ஓர் ஆர்வம் வேண்டும்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதி வரும் நீங்கள் தமிழ் வாசகப் பரப்பு குறித்து ஏதும் கூற முடியுமா? தமிழ் வாசகர்களின் எதிர்வினை எவ்வாறு இருப்பதாக உணர்கிறீர்கள்?

தமிழ் வாசகப்பரப்பு விரிவடைந்து வருவது மிக மகிழ்ச்சி. ஆங்கில நூல்களுக்கு இணையாக வர வேண்டும். தமிழ் வாசகர்கள் என்.சி.பி.எச் மூலம் எனது நூல்கள் தமிழில் வந்தது பற்றி வியப்பாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதுவரை அறியப்படாத வரலாறு ஏன் என்ற வினாவை எழுப்பினார்கள். இந்த வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்த என்.சி.பி.எச் நிறுவனத்தாருக்கு எனது மனமார்ந்த நன்றி.

இன்றைய நிலையில் கடல்சார் ஆய்வுத்துறையில் புதிதாக இணைபவர்களின் நிலை எந்தளவு உள்ளது என்பது குறித்தும் இதன் எதிர்காலம் குறித்தும் கூறமுடியுமா?

கடல்சார் ஆய்வுத்துறையில் இணைவதற்கு அதிக நபர்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில், காலனிய ஆட்சி வரலாறு, 16ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை மிக விரிவாக எழுதப்பட வேண்டிய அவசியம் உள்ளது. பல்கலைக்கழக வரலாற்றுத் துறைகள் இதனை முன் எடுத்து செயல்பட வேண்டும்.

வரலாறு தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்ட நீங்கள் தமிழ்ச் சுவடிகளை பதிப்பது எப்படி?

ஐரோப்பாவில் உள்ள நூலகங்களில் தமிழ்ச்சுவடிகளை காண நேரிட்டபோது காகிதச் சுவடிகளை பதிப்பிக்க ஆவல் ஏற்பட்டது. கல்வெட்டுக்களை படிக்கும் பயிற்சி எனக்கு இருந்ததினால் காகிதச் சுவடிகளை படிப்பது எளிதானது. தேசிய நூலகம் பாரீசில் புதுச்சேரி ஆனந்த ரங்கப்பிள்ளை வழித் தோன்றல்கள் எழுதிய நாட்குறிப்புகளைப் பார்த்தபோது ஆவணங்களைத் திரட்டினேன். முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பை (1794-1796) முதலில் வெளியிட்டேன். பின்னர் அரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பு (1760-1768) மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இந்த ஆவணங்கள் வரலாறு எழுத உதவும் என்பதால் கவனத்தை செலுத்தினேன். போர்ச்சுகீசு- தமிழ் அகராதி சுவடி லிஸ்பன், கோவா, ரோம், பாரிசு ஆகிய இடங்களில் கிடைக்கப் பெறுகிறது. எனவே அன்றாடம் சிறிது சிறிதாக சுவடியைப் பார்த்து எழுதி தட்டச்சு செய்து பின்னர் சரிபார்த்து நூலாக வெளி­யிட்டேன். இதுவுமின்றி வீரமாமுனிவர் திருக்குறளை இலத்தீனில் வெளியிட்டார் என்பது அறிந்த செய்தியாக இருந்தாலும் முழுமையான நூல் வெளிவரவில்லை. எனவே பாரீசு மற்றும் இலண்டனிலுள்ள காகிதச்சுவடிகளைப் பார்த்து 1733ஆம் ஆண்டு அவர் எழுதி முடித்த திருக்குறள் இலத்தீன் மொழியாக்க நூல் வெளியிடப்பட்டது. ஓராண்டு காலம் இலத்தீன் மொழியை நான் கற்றது உதவிகரமாக இருந்தது. ஓர் நீண்ட ஆய்வுரை வழங்கியுள்ளேன். இதில் அவர் எழுதிய பல நூல்களில் திருக்குறளை மேற்கோள் காட்டியது விளக்கப்பட்டுள்ளது. அந்தணர், அனிச்சம், மூதேவி, குன்றிமணி, கவரி (மண்) போன்ற தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீனில் இணையான சொற்கள் இல்லாததால் அப்படியே அவர் பயன்படுத்தியுள்ளார். இவரது இலத்தீன் திருக்குறளே பிற்காலத்தில் ஆங்கிலத்திலும், ஜெர்மனிலும் மொழிபெயர்க்க தூண்டுகோலாக அமைந்தது.

மொழிபெயர்ப்பு மூலம் தமிழ் பரவலாக பரவியது பற்றிக் கூற முடியுமா?

ஐரோப்பிய பாதிரியார்கள் போர்ச்சுக்கீஸ் மற்றும் இலத்தீன் மொழியில் உள்ள செய்திகளை தமிழாக்கம் செய்தனர். வெளியான நூல்களை தமிழ் உரைநடையில் எழுதினார்கள். இவைகளும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவையே. சீகன்பால்கு ஒரு வரியில் எழுதப்பட்ட நீதிவெண்பா, உலகநீதி, கொன்றைவேந்தன் ஆகியவைகளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து தனது பயிற்சி­யினைத் தொடங்கினார். பின்னர் வேதாகமத்தை மொழிபெயர்த்தார் என்பது தெரிகிறது. தெருந்த வாசகம், அரிச்சந்திரன் கதை, பஞ்சதந்திர கதை தமிழிலிருந்து டேனிஷ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்த சுவடிகள் கோபன்ஹேகனில் உள்ளது. இவ்வாறு மொழிபெயர்ப்பு செய்த காலத்தில் தமிழ் உரைநடையின் வளர்ச்சி, நடை மற்றும் அச்சாகத்தின் தாக்கம் பற்றி “தமிழ் இலக்கியப் பயணம் ஐரோப்பியர்களின் மொழிபெயர்ப்புகளின் வழியே” என்ற நூலில் விளக்கப்பட்டுள்ளது.

- பேராசிரியர் எஸ்.ஜெயசீலஸ்டீபன்

நேர்காணல்: ஜி.சரவணன்

Pin It