புகழ்பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்து மாணவர் பெருமன்றத்தின் வழி கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினராகி ஸ்தாபனக் கட்டுமானத்தின் மூலம் மார்க்சியம் கற்றுத் தேர்ந்து, எண்ணற்ற ஆய்வு மாணவர்களின் வரலாற்றாய்வேடுகளைச் செப்பனிட்டு, ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்தி, முறைப்படுத்திய இந்திய வரலாற்றுப் பேராசிரியர் இர்பான் ஹபீப் அவர்கள், இந்து-முஸ்லிம் மதவாத-வகுப்புவாதத்திற்கு எதிராக 70-க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் பத்து நூல்கள் எழுதியும் மற்றும் பொறுப்பாசிரியராகவும், இந்திய வரலாற்றாய்வுக் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

மார்க்சிய வரலாற்று வரைவியல் மற்றும் சோசலிசக் கட்டுமான கொள்கை கோட்பாடுகளை தீர்க்கமாக ஆய்வு செய்திருக்கிறார்.

irfan habeeb

“முகலாய இந்தியாவில் விவசாய முறை”, “இந்திய வரலாற்றை விளக்குதல்”, “1857 எழுச்சி”, “பகத்சிங்: விடுதலைப் போரில் புரட்சி இயக்கம்”, “இந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள்: ஒரு மார்க்சிய அணுகுமுறையை நோக்கி” மற்றும் பேரா.எஸ்.மித்தலுடன் இணைந்து, பகத்சிங்கின் நவஜவான் பாரதசபை பற்றிய அறிமுகத் துடன் “விடுதலைப் பாதையில் இந்தியா” போன்ற நூல்கள் புகழ்பெற்றவை.

“நவஜவான் பாரத் சபா, இந்துஸ்தான் குடியரசு சங்கம், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் ஆகிய புரட்சிகர இயக்கங்களின் வருகை இந்திய விடுதலைப் போருக்கு பண்புரீதியான ஒரு மாற்றத்தைக் கொடுத்தன. பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் முயற்சியால் இந்துஸ்தான் குடியரசு சங்கம் ஒரு மேம்படுத்தப்பட்ட சோஷலிச மற்றும் சர்வதேச கண்ணோட்டத்தை ஏற்றுக் கொண்டு 1928ம் ஆண்டு தேசிய புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றில் ஒரு திசைகாட்டி நிலையைப் பெற்றது.”

“நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி உயிரைத் தியாகம் செய்த இந்தப் புரட்சியாளர்கள் வெறுமனே சாகச மனோபாவம் கொண்டவர்கள் அல்ல; அதை விட முக்கியமாக சுதந்திர இந்தியாவை மதச்சார்பற்ற, சோஷலிச மற்றும் சமத்துவ சமுதாயமாக மாற்ற வேண்டும் என்கிற புரட்சிகர லட்சியம் கொண் டிருந்தனர். பகத்சிங்கும் அவரது சகாக்களும் தூக்கிலிடப் பட்டதால் நாம் வெறும் தனிநபர்களை, அவர்கள் எவ்வளவு மதிப்புமிக்கவர்கள் என்றபோதும், அவர்களை மட்டும் இழக்கவில்லை; சுதந்திர இந்தியாவை நிர்வகிப்பதற்கான ஒரு மாற்றுத் திட்டத்தை நாம் இழந்துவிட்டோம்.” என்று பேராசிரியர் இர்பான் ஹபீப் குறிப்பிடுகிறார்.

• இர்பான் ஹபீப் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு - “Essays In Indian History: Towards a Marxist Perception” என்ற நூலாக வெளியிடப் பட்டது. பேரா. இரா. சிசுபாலன் அவர்களின் தமிழாக்கத்தில் “இந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள்: ஒரு மார்க்சிய அணுகுமுறையை நோக்கி” என்ற நூலை புகழ்பெற்ற ழிசிஙிபி நிறுவனம் வெளியிட்டது. மொழியாக்கம் செய் பவர்களும் உரையாசிரியர்களும் தத்துவவாதிகளே.

முதல் கட்டுரை “மார்க்சிய வரலாற்று வரைவியல் குறித்த பிரச்சினைகள்” மற்ற 9 கட்டுரைகளும் இந்தி யாவைக் குறித்த ஆய்வுக் கட்டுரைகளாகும். அவற்றின் தலைப்புகளே அவற்றின் முக்கியத்துவத்தை விளக்கக் கூடியவை. 2) இந்தியாவைப் பற்றிய மார்க்சின் பார்வை, 3) ஆங்கிலேயர் வருகைக்கு முந்திய இந்தியாவில் நிலவுடைமையின் சமூகரீதியான வினியோகம்: ஒரு வரலாற்று ஆய்வு. 4) இந்திய வரலாற்றில் விவசாயிகள், 5) இந்திய வரலாற்றில் சாதி, 6) முகலாயர் கால இந்தியப் பொருளாதாரத்தில் முதலாளித்துவ வளர்ச்சிக்கான வாய்ப்புகள், 7) முகலாய இந்தியாவில் வர்க்கப் போராட்ட வடிவங்கள், 8) காலனியத்துக்கு முந்திய மற்றும் காலனிய இந்தி யாவில் மூலதனத் திரட்சி, 9) இந்தியப் பொருளாதாரம் காலனியமயமாதல், 10) காலனியப் பொருளாதாரம் குறித்த ஒரு ஆய்வு.

இந்தக் கட்டுரைகள் தன்னளவிலேயே மார்க்சியக் கண்ணோட்டத்துடன் அமைந்ததாக ஆகாது என்றும், இது மார்க்சியக் கண்ணோட்டத்தை வளர்த்தெடுப்பதை நோக்கிய ஒரு முயற்சியே என்று ஹபீப் இந்த உபதலைப்பு குறித்து விளக்குகின்றார்.

இந்திய வரலாறு குறித்த மார்க்சிய கண்ணோட்டம் என்பதே சுதந்திரத்திற்குப் பிந்தைய ஒரு வளர்ச்சிப் போக்காகும்; இந்த உண்மையைக் கருத்தில் கொண்டால், இந்தப் பிரிவின் கீழ் தன்னுடைய சகாக்களின் ஆய்வு முடிவுகள் அனைத்தையும், தன்னுடைய சுயேச்சையான ஆய்வு முடிவுகளுடன் ஒன்றாகச் சேர்த்து, மார்க்சிய தத்துவார்த்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஒரு முறையான இந்திய வரலாற்றைக் கொண்டுவர முயற்சித்திருப்பதற்காகவும், தன்னுடைய படைப்பு மார்க்சிய அணுகுமுறையை அடைந்து விட்டது அல்லது அத்தகைய அணுகுமுறையை அதன் முழுமையில் பிரயோகிக்கப்பட்டுவிட்டது என்பதை விடவும், அத்தகைய அணுகுமுறையை நோக்கிய ஒரு முயற்சி மட்டுமே என்றும் ஆசிரியர் முன்னுரையில் சொல்கிறார்.

• “விளிம்பு நிலை ஜனங்கள் குறித்த ஆய்வாளரெவரும் (SUBALTERN STUDIES) அவர்களுடைய இழிந்த நிலையை, துன்பங்களைச் தத்ரூபமாகச் சித்தரிப்பதில் சந்தோஷம் கொள்கின்றனரே தவிர உண்மையான மானுட விடுதலைக்கான சோசலிச சமுதாய உணர்வு அவர்களிடமில்லை.”

“சமீபத்திய பிரெஞ்சு புதிய வரலாற்றுவாதம், சபால்டர்னிடி மற்றும் பின் நவீனத்துவ தத்துவவாதிகள் கையாளும் சொல்லாடல்களெதுவும் புரியவில்லை; கடினமாக இருக்கிறது. மார்க்சியம் அவற்றை அவசியம் புறந்தள்ள வேண்டுமா? அல்லது அவற்றிலிருந்து ஏதேனும் புதிய அறிவும் விஷயங்களும், ஆய்வு முறைகளும் கிரகித்துக் கொள்ளமுடியுமா? என்றெனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் அவர்கள் சிந்திக்கும் தளமே வேறு; வேறு ஏதோ கேட்கிறார்கள், பேசுகிறார்கள். நாம் வைக்கும் மானுட விடுதலைக்கான மனிதவாதக் கொள்கை-கோட்பாடுகளுக்குள் அவர்களது இடம் பெறவேயில்லை. அவர்களிடம் .சோசலிச பார்வை இல்லை; கூடவே சோசலிசத்தை எதிர்ப்பவரும் அவர்களே.” (-) முன்னுரையில் ஹபீப்

‘மார்க்சிய வரலாற்றியலின் பிரச்சினைகள்’ என்கின்ற முதல் கட்டுரை, இந்திய வரலாறு குறித்த மார்க்சிய அணுகுமுறையின் தத்துவார்த்த கருத்துக்கள் பலவற்றை விவாதிக்க ஆசிரியர் பயன்படுத்திக் கொண்டுள்ளார். தேச விடுதலை இயக்க விஷயத்தில் மார்க்சிய அணுகு முறையின் சாரம் குறித்தும் விவாதிக்கின்றார்.

ஆர்.பி.தத்தின் ‘இன்றைய இந்தியா’ மற்றும் ‘இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாறு’ ஆகிய நு£ல்களை மேற்கோள் காட்டும் ஆசிரியர், தேச விடுதலை இயக்கம் என்பது நிலப்பிரபுக்கள் மற்றும் மன்னர்களைத் தவிர்த்து விவசாயிகள், குட்டி முதலாளிகள், முதலாளிகள், தொழிலாளி வர்க்கம் என இந்திய மக்களின் அனைத்து வர்க்கங்களையும் உள்ளடக்கிய ஒரு ஐக்கிய முன்னணி என்று இப்போது பொதுவாகக் கருதப்படுவதாகக் கூறுகின்றார். பிரதானமான தேசிய இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸ் எல்லா நேரங்களிலும் ஐக்கிய முன்னணியைப் பிரதிபலிக்கவில்லை; 1930களின் பிற்பகுதியில் அது அந்த நிலைப்பாட்டிற்கு நெருக்கமாக வந்தபோதும்.

தேசிய இயக்கத்தின்போது இடதுசாரிகளின் சாதனைகளைக் குறைவாக மதிப்பிடும் மற்றொரு சிறந்த வரலாற்று அறிஞரான பிபின் சந்திராவிடமிருந்து ஹபீப் தன்னைத் தனியே வேறுபடுத்தி, “விவசாயிகள் இயக்கம் மற்றும் தொழிற்சங்கம் ஆகியவற்றை உண்டாக்கியது பிரதானமாக கம்யூனிஸ்டுகள் மற்றும் அவர்களது நேச சக்திகளின் கைங்கரியம், அதை மறக்கலாகாது” என்கிறார்.

அவர் பொதுவான ஒரு எச்சரிக்கையை விடுக் கின்றார்: ‘தேசிய இயக்கத்தை (அது எப்போதுமே காங்கிரசைவிடப் பெரிதாக இருந்தது) நாம் ஒரு பொது மரபாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். அதில் தனிநபர்கள் வகித்த பாத்திரம் குறித்த அனைத்து மதிப்பீடுகளும் அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடினார்கள் என்கிற புரிதலால் பக்குவப்படுத்தப் பட்டதாக இருக்க வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான முக்கியப் பிரச்சனை யாக இந்திய மக்களின் வறுமையையும், அதன் ஒழிப்பையும் முன்னிறுத்தியபோது தாதாபாய் நௌரோஜி கோடிக்கணக்கான மக்களுக்காகப் பேசினார். காந்திஜி அந்த கோடிக்கணக்கான மக்களைத் திரட்டினார்; அந்த திரட்டலின் வடிவம் ஒரு வரம்பிற்கு உட்பட்டதாக இருந்தபோதும். இவை இந்திய மக்களின் நலனுக்காக ஆற்றப்பட்ட மறக்க முடியாத சேவை களாகும். இவற்றை மாயையாகவோ அல்லது முக்கியத் துவமற்றவையாகவோ கருதும் முயற்சிகளுக்கு எதிராக மார்க்சிஸ்டுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... இன்று, தேசிய இயக்கத்தின் சாதகமான அம்சங்களான, மதச்சார்பின்மை, பெண்ணுரிமைகள், தேச ஒற்றுமை, பத்திரிக்கை சுதந்திரம், பாராளுமன்ற ஜனநாயகம் போன்ற முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களுக்கு குறிப்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும். ஜனநாயகம் மற்றும் சோஷலிசம் ஆகியவற்றின் நலன்களை முன் னெடுத்துச் செல்வதற்காக அனைத்து வர்க்கங்களையும் இணைக்கக் கூடிய ஒரு மக்கள் முன்னணியின் துவக்கப் புள்ளிகளாக இவை அமையலாம். அத்தகைய ஒரு முன்னணி நமது தேசிய இயக்கத்திற்குத் தகுதியான தொரு வாரிசாக இருக்கும்.’

• வரலாற்றை மறுகட்டமைப்பதில் மார்க்சிஸ்டுகள் எடுக்க வேண்டிய அணுகுமுறை குறித்து சில முக்கிய மான கருத்துக்களையும் இந்நூல் வைக்கின்றது. ‘ஒடுக்கப் பட்ட மக்களின் கலகங்கள் குறித்த வரலாற்றை இருட்டடிப்பிலிருந்து மீட்பது மட்டுமல்ல, அந்த கலகங்களின் வர்க்க இயல்பு குறித்தும், தங்களது உண்மையான வர்க்கச் சார்பு குறித்து அதில் பங்கேற்ற மக்கள் எந்த அளவிற்கு அறிந்திருந்தார்கள் என்பது குறித்து ஆராய்வதும் முக்கியமாகும். ஏனெனில், தாங்கள் செய்வது வர்க்கப் போராட்டம் என்பது தெரியாமலேயே அதில் பங்கேற்பவர்களால் வர்க்கப் போராட்டம் நடத்தப்படலாம். துர்பாக்கியமாக, பெரும்பாலான எழுச்சிகள் குறித்து ஆளும் வர்க்கச் சார்புடைய அதன் எதிரிகளே எழுதியுள்ளதால், கலகக்காரர்கள் உண்மையில் என்ன நினைத்தார்கள் என்பது பற்றி அறிந்து கொள்ள பெரும்பாலும் நமக்கு வழியில்லை. அப்படி இருந்தபோதும், 17ம் நூற்றாண்டில் இந்திய விவசாயிகளின் எழுச்சிகளில் இருந்த வர்க்க உணர்வை விடவும், சீன விவசாயிகளின் எழுச்சி அல்லது 1881ம் ஆண்டு இங்கிலாந்து விவசாயிகளின் எழுச்சிகளில் கூடுதலான வர்க்க உணர்வு இருந்தது என்பதை நாம் தெரிந்து கொள்கின்றோம். இந்தப் பின்தங்கிய நிலைக்கான காரணங்களை, சாதி அமைப்பு அவற்றில் ஒன்றாக இருப்பதற்கான சாத்தியத்தை, ஆராய வேண்டும். இன்று அவற்றில் நாம் கற்க வேண்டிய பாடங்கள் இருக்கக் கூடும்.’

‘இந்தியா பற்றிய மார்க்சின் பார்வை’ என்பது இரண்டாவது கட்டுரையின் தலைப்பு. ஒரு அமெரிக்கப் பத்திரிக்கைக்காக 1853ம் ஆண்டு மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள், 1857 கலகம் குறித்த மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் படைப்புகள் மட்டுமின்றி, மூலதனம் நூலிலும், எண்ணற்ற கடிதங்களிலும், குறிப்புகளிலும் மார்க்ஸ் இந்தியா பற்றி கூறியிருக்கும் கருத்துக்களையும் அந்தக் கட்டுரை ஆராய்கின்றது. இன்று அவை நமக்கு மதிப்பு மிக்கவை; ஆனால், இந்தியா குறித்த இறுதி உண்மைகளாக இருப்பதால் அல்ல.

இந்திய வரலாற்று உண்மைகள் குறித்த தமக்குக் கிடைத்த தகவல்களினடிப்படையில், பல கருத்துக்கள் மாற்றமடைந்திருக்கின்றன. அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட முக்கிய பொருள் உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சியாகும். அந்த நிகழ்முறையை விவரித்து, ஆராயும்போது, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்த முதலாளித்துவத்திற்கு முந்தைய வளர்ச்சிப் போக்குகள் குறித்தும் அவர் ஆராய வேண்டியிருந்தது. அவ்வாறு செய்யும்போது, ஆய்விற்குப் பின்னர் பல அனுமானங் களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இது இந்தியா விற்கு மட்டும் பொருந்துவதல்ல, சுமார் நாற்பது ஆண்டு களுக்கும் மேலாக நீடித்த தங்களுடைய தத்துவார்த்தப் பணியின் போக்கில், ஆய்வாளர்கள் முடிவுகளில் மாற்றம் கண்டனர் அல்லது அதற்குப் பதிலாகச் சரியான முடிவை வைத்தனர்.

குறிப்பாக, ஆசிய பாணி உற்பத்தி முறை குறித்து மார்க்ஸ் உருவாக்கியிருந்த கருதுகோள்களுக்கு இது நேர்ந்தது. ஆசிய பாணி உற்பத்தி முறை குறித்த மார்க்சின் கருத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்த பின்னர், குறிப்பிட்ட ஒரு சமயத்தில் மார்க்ஸ் கைகொண்டு, விரிவான ஆய்விற்குப் பின்னர் கைவிட்ட அனுமானங்களில் ஆசியபாணி உற்பத்தி முறையும் ஒன்று என்கிற முடிவிற்கு ஹபீப் வருகின்றார். இது ஏன் நிகழ்ந்தது?

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்சும் ஏங்கெல்சும் வகுத்தளித்த, ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்திலிருந்து வர்க்க சமுதாயம் முதலில் அடிமைச் சமுதாயமாகவும், பின்னர் அதிலிருந்து நிலவுடமைச் சமுதாயமாகவும், கடைசியாக முதலாளித்துவ சமுதாய மாகவும் வளர்ச்சி அடைந்தது என்கின்ற சூத்திரம், இந்தியா, சீனா மற்றும் இதர ஆசிய சமுதாயங்களுக்குப் பொருந்தாது. அதைத் தொடர்ந்து அவரும் ஏங்கெல்சும் மேற்கொண்ட ஆய்வுகள் பல்வேறு ஆசிய நாடுகளில் பல்வேறு சமுதாய அமைப்புகள் இருந்தன என்பதைக் காட்டின. ஒவ்வொரு ஆசிய நாட்டிலும் இருந்த ஸ்தூலமான நிலைமைகளும், வளர்ச்சிப் போக்குகளும் ஆராயப்பட வேண்டியிருந்தது. எனவே, ஒரு காலத்தில் மார்க்ஸ் கையாண்ட ‘ஆசிய பாணி சமுதாயம்’ என்பது கைவிடப்பட்டது.

இந்திய மார்க்சியர்களுக்கு இது ஒரு முக்கியமான பாடமாகும். ஏனெனில், நான் உள்பட நம்மில் பலர், ஆசியபாணி சமுதாயம் என்கின்ற மார்க்சின் கருதுகோள் தான் இந்திய சமுதாயத்தையும், அதன் வரலாற்றையும் புரிந்து கொள்வதற்கான திறவுகோல் என்பதை எங்களது சில எழுத்துக்களுக்கு அடிப்படையாகக் கொண்டிருந் தோம். இந்தியாவிற்கு ஆசிய பாணி சமுதாயம் என்கிற கருதுகோளைப் பிரயோகிப்பது அல்ல பிரச்சனை என்பதையும், இந்தியாவின் வரலாறு, பொருளாதாரம், அரசியல், சமூகவியல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஸ்தூலமாக ஆராய வேண்டும் என்பதையும் பின்னர் தெரிந்து கொண்டோம். ஸ்டாலின் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடத்த்தப்பட்ட கூட்டு விவாதத்தில், இந்திய மார்க்சியர்கள் ரஷ்ய அல்லது சீன அல்லது வேறு எந்த முன்மாதிரியையும் பின்பற்ற முயற்சிக்கக் கூடாது என்றும், இந்திய மாதிரியை உருவாக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொல்லப்பட்டது. அரசியல் அரங்கிற்காகச் சொல்லப்பட்ட இந்த அறிவுரை இந்திய வரலாறு பற்றிய கல்விசார் ஆய்விற்கும் அதே அளவு பொருந்தும்.

மனிதகுல வரலாறு என்பது வர்க்கப் போராட்டங் களின் வரலாறே என்கின்ற மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் ஆகியோரின் வரையறுப்பு இந்தியாவிற்குப் பொருந்தாது என்பது போல, வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு காலம் வரையிலான இந்திய சமுதாயம் மாற்றத்திற்கு உள்ளாகவே இல்லை என்று கருத்தும் தவறு என்பதை சுட்டிக் காட்டுகிறார். முகலாயர் காலத்து இந்தியாவின் சமூகப் பொருளாதர, அரசியல் நிலைமைகள் குறித்த தன்னுடைய சொந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் நின்று, பண்டைய இந்தியா குறித்த தன்னுடைய சகாக்களின் ஆராய்ச்சி களைச் சார்ந்து, மிகப் புராதன காலத்திலிருந்தே இந்தியா மாறிக்கொண்டே இருக்கின்றது என்றும், ஒன்றல்லா மற்றொரு வடிவத்தில் வர்க்கப் போராட்டம் மற்ற எந்த நாட்டையும் போலவே இந்தியாவிலும் நடந்து கொண்டிருக்கின்றது.

‘இந்திய வரலாற்றில் விவசாயி’, ‘இந்திய வரலாற்றில் சாதி’, ‘முகலாயர் கால இந்தியாவில் வர்க்கப் போராட்ட வடிவங்கள்’ ஆகிய தலைப்புள்ள கட்டுரைகள், ஐரோப்பிய சமுதாயங்கள் போலவே இந்திய சமுதாயமும் மரிக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகின்றன. இந்தப் போராட்டங்கள் வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை.

‘பிரிட்டிஷாருக்கு முந்தைய இந்தியாவில் நிலச் சொத்துடமையின் சமூக விநியோகம்: ஒரு வரலாற்றுப் பார்வை’ மற்றும் ‘முகாலய இந்தியப் பொருளாதாரத்தில் முதலாளித்துவ வளர்ச்சிக்கான உள்ளுறை ஆற்றல்கள்’ என்கின்ற வேறு இரண்டு கட்டுரைகள், சிந்துசமவெளி நாகரீகத்திலிருந்து முகலாய ஆட்சியின் முடிவு வரை, இந்திய சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த மாற்றங் களின் ஸ்தூலமான அடிப்படையை விளக்குகின்றன. இந்தத் தொகுப்பில் ஒன்றாகச் சேர்த்துக் கொடுக்கப் பட்டுள்ள இந்தக் கட்டுரைகள், இந்திய வரலாற்றை இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து ஆராய விரும்புவோருக்கு தெளிவைத் தரும்.

* * *

பேரா. கே.என்.பணிக்கர் அவர்கள், 25 முன்னணி வரலாற்றாசிரியர்கள், அரசியல்ஆய்வாளர்கள், பன்னாட்டுப் பொருளாதார பேராசிரியர்களின். கட்டுரைத் தொகுப்பை, “வரலாற்றை உருவாக்குதல் : இர்பான் ஹபீப் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள்” ((The Making of History: Essays presented to Irfan Habib)) என்ற தலைப்பில் நூலாக 2000-ல் வெளியிட்டார். மார்க்சிய ஆய்வுத்தளங்களின் வீச்சை உணர்த்துவதாக இந்நூல் அமைந்துள்ளது. கோட்பாடும் வரலாறும்-அரசியல் பொருளாதாரமும் இணைந்து, சந்திக்கும் புள்ளிகளாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. நான்காம் பகுதியில் பதினான்காவதாக இடம் பெற்றிருக்கும், பேரா.அய்ஜாஸ் அகமதுவின் “வரலாற்றில் பின் நவீனத்துவம்” என்ற கட்டுரை சில முக்கியமான கொள்கை - கோட்பாடுகளைச் சுட்டிக் காட்டுகிறது; புதிய வரலாற்றுவாதம் மற்றும் பின் நவீனத்துவம் குறித்த விளக்கம் இர்பான்ஹபீப் அவர்களால் முன்வைக்கப்படுகிறது.

• 1995-ம் ஆண்டு வெளியான “இந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள்: ஒரு மார்க்சிய அணுகுமுறையை நோக்கி” என்ற நூலின் முன்னுரையில் இர்பான்ஹபீப் அவர்கள் ‘சபால்டர்னிடி, ‘புதிய வரலாற்றுவாதம்’, ‘பின் நவீனத்துவம்’ போன்ற நவீன சிந்தனைப் போக்குகள் குறித்து சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் இக்கட்டுரை அமைந் துள்ளது.

• ரானாஜித் குஹாவின் ‘விவசாயி போராட்டங் களின் அடிப்படை அம்சங்கள்’ என்ற நூலைப் படித்தோ மானால் வேளாண் சமூகத்தின் ‘விவசாயி’க்கும் மற்ற வேளாண் தொழிலாளருக்கும் உள்ள மையம்-விளிம்பு என்று குழப்பத்தைச் சுட்டிக்காட்டி போராட்ட முறையே தவறு என்று முடித்திருப்பார். ‘சபால்டர்னிடி’க்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

• ‘மனிதகுலத்திற்கு சோசலிசம் தேவைப்படுகிறது’ என்பதில் மார்க்சியர்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாடு-வைராக்கியம்-அசைக்கமுடியாத நம்பிக்கையைக் கண்டு எரிச்சலுற்ற பின் நவீனத்துவவாதிகள். அதை உடைக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். பிரெஞ்சு பின்நவீனத்துவவாதி பூக்கோவின் பிரபலமான வரிகள் :

“சில அதிகார அமைப்புகளுக்குட்பட்டுதான் எல்லா அறிவும் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிகார அமைப்புகளை மீறி எந்த அறிவும் பெறப்படுவதில்லை. சமூக மேலாதிக்கம் செய்யும் அதிகார அமைப்புகளே அறிவு உற்பத்தியையும் அறிவுப் பரவலையும் மேலாதிக்கம் செய்கின்றன.”

‘ஒவ்வொரு சமூக உறவுகளிடையேயும் அதிகாரம் நிலவுகிறது. எங்கும் அதிகாரம் எதிலும் அதிகாரம் வியாபித்திருக்கிறது. அரசியல் பொருளாதாரம்’ மற்றும் ‘அரசு’ ஆகிய இரட்டைத் தளங்களி லிருந்து மட்டும் அதிகாரத்தின் வரலாற்றை கட்டமைக்க முடியாது-வரலாற்றை எழுதிவிட முடியாது. அதேபோல்தான் ‘அரசியல் பொருளா தாரம்’ மற்றும் ‘அரசு’ மாற்றத் துக்காக மட்டும் அதிகாரத்தை எதிர்க்கும் சக்திகளை திரட்ட முடியாது. எதிர்ப்புக்கும் அதிகாரத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது. எதிர்க்கும் சக்திகளே வேறொரு அதிகார மையமாகிவிடும். எதிர்ப்புக் கொள்கை-கோட்பாடுகளை வேறுவேறு தளங்களிலிருந்தும் திரட்டவேண்டும்.” (ப-442)

‘அதிகாரம்’ என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொண்டுள்ளோம்? யாருடைய அதிகாரம்? இப்போ திருக்கும் அதிகார அமைப்புகளில் என்ன மாற்றம் வேண்டி போராடுகிறோம்? ‘முதலாளித்துவம்’-‘வர்க்கம்’-‘முதலாளித்துவ அரசு’ என்று நாம் நேரடியாக சுறுக்கிப் புரிந்துகொண்டிருக்கின்ற அதிகாரத்தின் ஒற்றைப் பரிமாண கருத்தாக்கங்களையும் தாண்டி சுறுக்கிப் பார்க்கமுடியாத இன்னும் அதிகாரத்தின் பரவல்கள் இருக்கின்றன. அவற்றையும் நாம் ஆராயவேண்டி யுள்ளது.

இதுவரைக்குமுள்ள நமது வரலாற்றாசிரியர்கள், அரசியல் பொருளாதாரம் மற்றும் ‘அரசு’ என்ற இரட்டை கோட்பாட்டுத் தளங்களிருந்து சான்றாதாரங் களைத் திரட்டி வரலாற்றைக் கணித்து கட்டமைத் திருக்கிறார்கள். பல்வேறு வரலாற்று வரைவியலாளர்கள் சொல்லாடல்கள் மற்றும் பகுப்பாய்வு முறைகளில் வேறுபடுவது மட்டுமல்ல, மனிதகுலம் குறித்த தொலை நோக்குப் பார்வையிலேயே வேறுபடுகிறார்கள்.

மார்க்சிய வரலாற்று வரைவியல் கொள்கை-கோட்பாடுகளில் ‘அரசியல் பொருளாதாரம்’ மற்றும் ‘அரசு-உருவாக்கம்’ இவற்றின் நிலைப்பாடு விரிந்து வேறுவேறு அடிப்படை அலகுகளை/தளங்களை முறைகளையும் நாம் ஆராயவேண்டியுள்ளது; இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. மனிதவாதம் பேசுகிறவர்கள் எந்த அரசியல் சித்தாந்தத்தில் நின்று பேசுகிறார்கள் என்று பார்த்தோமானால் அதில்தான் வரலாற்றாய்வாளர்களின் மாறுபட்ட நோக்கம் புலப்பட்டு விடும். சோசலிசத்தை மறுக்கும் வரலாற்றாய் வாளர்களை நாம் இனங்காணமுடியும்.

‘மனிதகுலத்திற்கு சோசலிசம் தேவை’ என்கிற உணர்வு இன்றைக்கு உலகெங்கும் சர்வதேச வரலாற்றாய் வாளர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

Pin It